
வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்)
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
நண்பர் பாஸ்கரன்
(ஜி.ஸி. பட்டாபிராம்)
நண்பர் பாஸ்கரன் என்னுடைய நீண்ட நாளைய நண்பர், தமிழ் நாட்டில் எத்தனையோ கோயில்களுக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து போயிருக்கிறோம். நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு போயிருக்கிறோம். தமிழ்நாட்டில் இவர் போகாத கோயிலே கிடையாது. காரில் போக முடியாவிட்டால் ஜீப்பில் போவார். அதிலும் போகமுடியாவிட்டால் நடந்தே செல்வார். கோனேரி ராஜபுரம் நடராஜரைப் பற்றியும், ஆக்கூர் ஆயிரத்திலொருவரைப் பற்றியும், அனந்த மங்கலம் விஸ்வரூப அனுமனைப் பற்றியும், பெரும்பள்ளம் வீணாதர பிக்ஷாடனரைப் பற்றியும் இதுவரை யாருக்குத் தெரியும்? இவர் கட்டுரைகளைப் படித்து, அவ்வூர்கள் எங்கிருக்கின்றன என்று விசாரித்து, அந்த அற்புதமான விக்ரகங்களைப் பார்த்து பரவசப்பட்டார்கள் கலா ரசிகர்கள். தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றி அழகிய கட்டுரைகளை கல்கியில் தொடர்ந்து எழுதினார். இரண்டு மூன்று பக்கங்களுக்குள் கோயிலின் மகிமை, அக்கோயில் சிற்பங்களின் அழகு, அந்த ஊரைப் பற்றிய சில சாஸனங்கள் எல்லாவற்றையும் அழகாக விளக்கியிருக்கிறார். அவற்றைத் தொகுத்து, நான்கு புத்தகங்களாக, வேங்கடம் முதல் குமரி வரை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். அவை ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம். நாயன்மார்கள், ஆழ்வார்கள் இவர்களால் பாடப்பட்ட கோயில்களைப் போல், பாஸ்கரனால் எழுதப்பட்ட கோயில்கள் என்று ஒரு தொகுப்பே ஏற்படலாம், நண்பர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன், தமாஷாக, தென்னாட்டுத் தெய்வங்களெல்லாம் இவரது இல்லமாகிய சித்ர கூடத்தில் ‘க்யூ’ வரிசையில் நின்று தங்கள் கோயில்களைப் பற்றி எழுதும்படி வேண்டி நிற்கிறது என்று அடிக்கடி சொல்வார். சுந்தரர் கனவில் தோன்றி, தன்னைப் பாடும்படி சொன்ன தெய்வங்கள், பாஸ்கரன் வீட்டில் காத்துக் கிடக்க நேரிட்டது என்றால் அது பெறற்கரிய பேறு தானே?
நண்பருடைய இந்தக் கலையார்வத்தினால் தஞ்சையில் அவர் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய போது, அங்கு காட்டிலும், மேட்டிலும், குளத்திலும், குளக் கரையிலும் கேட்பாரற்றுக் கிடந்த சிலைகளுக்கு ஒரு யோகம் அடித்தது. அவற்றையெல்லாம் எடுத்து வந்து குறைந்த செலவில் அழகுபட அமைத்து, தஞ்சைக் கலைக் கூடத்தை சிருஷ்டித்து அதற்கு பிர்மா ஆனார். எனது நண்பர், ஓய்வு பெற்ற, புதைபொருள் இலாகா முதல்வர் திரு ராமச்சந்திரன், இதன் மதிப்பை (அப்போதைய மதிப்பு,.. இப்போது?) மூன்று கோடி ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார். மதிப்பாரற்றுக் கிடந்த சிலைகளுக்கு மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இவரே. ஆனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள இதனைச் சிருஷ்டிக்க இவர் செலவு செய்ததெல்லாம் சில ஆயிரம் ரூபாய்களே. ஒரு வேளை வியாபாரியாக இருந்தால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதித்திருப்பார்! தமிழ் நாடு முழுவதுமே இந்தப் பணிக்காக இவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது –
இப்படி, தமிழ் நாட்டில் இவர் செய்திருக்கிற தொண்டு ஏட்டில் அடங்காது. இவர் நல்ல தமிழ் அறிஞர். ஆனாலும் மற்ற தமிழ் அறிஞர்களைப் போல் அல்லாது இந்தியப் பண்பாடு ஒன்றே என்று நினைப்பவர், இந்தியாவின் ஒருமைப்பாட்டைத் தமிழர்களுக்கு விளக்குவதற்காகவே, தமது உடல் நிலையையும் பொருட்படுத்தாது, பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், இரு நண்பர்களுடன், இந்தியா முழுவதும் காரிலேயே சென்று இந்தியப் பண்பாட்டைக் கண்டார். வட நாட்டில், தில்லி, பம்பாய் முதலிய இடங்களில் வெகு அழகாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பல பேச்சுக்களில் விளக்கினார். வடநாட்டுக் கோயில்களையும், கலைகளையும் தமிழர்கள் எல்லோரும் அறிய வேண்டுமென்று, கல்கியில் “வேங்கடத்துக்கு அப்பால்” என்ற கட்டுரைத் தொடரை எழுதியிருக்கிறார்.
நண்பர் பாஸ்கரன், ரசிகமணி டி.கே.சி.யின் பிரதம சிஷ்யர், ஏன், இவரும் ஜட்ஜ் மகராஜனும் டி.கே.சியின் இரு வாரிசுகள் என்றே சொல்லலாம். அவர் செய்த தமிழ்ப்பணியை இருவருமே தொடர்ந்து செய்தார்கள். பாஸ்கரன் தனக்கென ஒரு பேசும் பாணியை உருவாக்கிக் கொண்டார். நடை வேறு, பாணி வேறு. ஆகையால் ரசிகமணியிடம் தொடர்பு கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு இவரது பேச்சுக்களை ரசிக்க முடிகிறது. இவரது பேச்சுக்களில் புதுமையைக் காண முடிகிறது. – இவர் ரசிகமணியின் நிழலாகத் தென்படுவதில்லை.
கம்பரைப் பற்றியோ, ஆழ்வார்கள், நாயன்மார்களைப் பற்றியோ, கலிங்கத்துப் பரணி, பாரதி, தேசிக விநாயகம் பிள்ளையைப் பற்றியோ அல்லது கலைகள், சிற்பங்கள் பற்றியோ இவர் பேசினால் பண்டிதர் முதல் பாமரர் வரை எல்லோரும் ரசிக்கிறார்கள், இவரது நடை, பண்டிதர்கள் நடையைப் போல் கடினமானதல்ல. தான் பேசுவது எல்லோருக்கும் புரிய வேண்டுமென்று நினைத்து வெகு அழகாகப் பேசுவார். எது பேசவேண்டும் என்றும், எப்படிப் பேசவேண்டும் என்றும் சிந்தித்துப் பேசுவார். ஆகையால் இவர் பேச்சுக்கள் எல்லோர் மனதையும் கவர்கிறது.
மார்கழி மாதம், திருப்பாவையைப் பற்றியும், திருவெம்பாவையைப் பற்றியும் தினமும் இவரது சொற்பொழிவுகள் தமிழ் நாடு முழுவதும் இருக்கும். வானொலியில் எத்தனை தரம் பேசியிருக்கிறோம் என்பது இவருக்கே நினைவிருக்காது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே, தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதையைப் பற்றியும், கலையைப் பற்றியும், கோயில்களைப் பற்றியும் பேசி இருக்கிறார். அந்த இருபத்தைந்து வருஷங்களில் இவர் போகாத கம்பர் விழாவே கிடையாது. பட்டி மண்டபம் நடக்கிறதென்றால் அதற்குத் தலைவர் இவர்தான். எங்கு தமிழ் விழா என்றாலும் இவரை முதலில் பார்க்கலாம். கலையைப் பற்றி தைரியமாக முதலில் தமிழில் எல்லோருக்கும் விளங்கும்படி எழுதியவர் இவரே.
இவ்வளவு சொல்கிறீர்களே, இவர் கலெக்டராக இருந்து பணி செய்ததைப் பற்றி எழுதவில்லையே என்று நினைக்க வேண்டாம். நேர்மையும், திறமையும், சாமர்த்தியமும் இல்லாவிட்டால், கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவாக ஆரம்பித்து, கலெக்டராக ஓய்வு பெற முடியாது. அப்பணியையும் செவ்வனே செய்து, ஆங்கில ஆட்சியில் இருந்த ஐ.ஏ.ஏஸ் கலெக்டர்களெல்லாம் மெச்சும்படி வேலை செய்திருக்கிறார். இவர் வேலூரில் கலெக்டராக இருந்த போது, தைரியமாக, ‘அன்றும் இன்றும்’ என்று ஒரு நாடகத்தை எழுதி, அதை அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராஜர் முன்னிலையில் நடித்து, அரங்கேற்றிக் காட்டி முதல்வரது பாராட்டையும் பெற்றிருக்கிறார் என்றால் அதிகம் சொல்வானேன்?



