பலவகை பூங்கொத்து
பம்மல் சம்பந்த முதலியார்

ஓர் ஆசிரியரின் கஷ்டங்கள்

(கட்டுக்கதை)

ஒருவன் தான் படும் கஷ்டங்களைத் தன் நண்பர்களுக்கு வாய் விட்டுத் தெரிவித்தால், அவைகளின் துயரம் பாதி ஆறுவான், என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு புதிய நாடகம் ரேடியோவிற்காக எழுதிக் கொடுப்பதாக ஒரு நண்பரிடம் வாக்கு கொடுத்தேன். அது முதல், தினம் அவர் அது பூர்த்தியாகி விட்டதா ? என்று கேட்க ஆரம்பித்தார். நான்கைந்து நாட்களாக, என் மூளையை நான் எவ்வளவு தான் கலக்கிய போதிலும், புதிய விஷயம் ஒன்றும் தோன்றவில்லை. என் புத்திக்கு! இன்று காலை எழுந்த பொழுது திடீரென்று ஒரு அற்புதமான விஷயம் என் புத்தியிற் பட்டது. அதை ஒரு சிறு நாடகமாக எழுதலாமென்று, ஆவலுடன், என் காலைக் கடனை விரைவில் முடித்துக் கொண்டு எழுத உட்கார்ந்தேன்.

என் வழக்கப்படி காகிதங்களை ஒழுங்காய் அடுக்கிக்கொண்டு — என் பென்சிலை சீவிக்கொண்டு – பிள்ளையார் சுழி போட்டவுடன்–டக் டக் ! என்று ஒரு பெரிய சப்தம் என் காதில் விழுந்தது. இது என்னடா என்று நான் எழுந்து ஜன்னல் வழியாக வீதியில் பார்த்தால், என் கண் எல்லாம் புகையினால் சூழப்பட் டது. என் வீட்டிற் கெதிராக ஒரு முனிசிபல் ஸ்டீம் ரோலர் (Steam roller) வர ஆரம்பித்தது! உடனே என் அறையெல்லாம் புகை நிரம்பிவிட்டது. அந்த ஸ்டீம் ரோலர் என் வீட்டிற்கப்புறம் கொஞ்சம் தூரம் போகிற வரையில் என் கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டிருந்தேன்.

பிறகு அப்புகையும் நீங்கி சப்தமும் குறைந்த பிறகு, என்னடா இது, பிள்ளையார் சுழி போட்டவுடன் இந்தத் தடை வந்ததே என்று கலங்கினவனாய், ஒருவாறு மனதைத் திடப்படுத்திக் கொண்டு, மறுபடியும் பென்சிலைக் கையிலெடுத்தேன். எடுத்தேனோ இல்லையோ, இரண்டு குழந்தைகளின் அழுகுரல் என் செவியிற் பட்டது. உடனே சிவராமன் எனும் என் பேரனும், சரோஜினி எனும் என் பேத்தியும் அழுதுகொண்டே, மெத்தைப்படி ஏறி என் அறைக்கு வந்தனர். நான் எதையும் பொறுப்பேன்.

குழந்தைகளின் அழுகுரலை மாத்திரம் எக் காரணத்தாலோ என்னால் பொறுக்கமுடியாது. ஆகவே எடுத்த பென்சிலை மறுபடியும் அதன் இருப்பிடம் வைத்து விட்டு, அவர்கள் அழுவதற்குக் காரணத்தை விசாரித்தேன்.-பின்வருமாறு,

“என்னாம்மா- சண்டே அது, சரோஜா !”

“தம்பி என்னெ அடிச்சான்!”

“ஏன்டா சிவராமா? அக்காளே அடிச்சே?”

“அக்காள் என்னெ கிள்ளனா'”

“நீ ஏம்மா அவனே கிள்ளனே ?”

“அவன் என்னே திட்டனா!”

”நீ ஏனடா அக்காளே திட்டனே ?’

“அக்காள் என்னே மொட்டெ இண்ணா ?”

இப்படி போய்க் கொண்டிருந்தால் வியாஜ்யம் முடியாதென்று, அத் துடன் நிறுத்திக்கொண்டு-“சரோஜி ! நீ தம்பியை மொட்டை இண்ணு சொல்லக்கூடாது. என்று தீர்மானம் சொல்லி அவர்களைக் கீழே அனுப்பினேன். பாதி படி இறங்கிப் போகுமுன் மறுபடி இரண்டு பெயரும் மெத்தைக்கு வந்தார்கள்.

சிவராமன், “அக்காள் என்னைத் திட்டுகிறாள்” என்று வியாஜ்யம் கொண்டுவந்தான்.

சரோஜி-“நான் திட்டவே இல்லே தாதா! என்னா திட்டனே இண்ணு கேளுங்கள்” என்றாள்.

“ஏண்டாப்பா? என்ன வென்று திட்டினாள் அக்காள் ?”

“சிவராமன் – திட்டனது எனக்கு கேக்கலே நண்ணா என்னமோ மொண மொண இண்ணு திட்டிகினு போனாள்” என்றான்.

அதன்பேரில், “சரோஜி: நீ மொண மொண இண்ணு சொல்லக் கூடாது” என்று சொல்லி சமாதானம் செய்து அனுப்பினேன்.

நான்கு படி இறங்கியதும் மறுபடி சிவராமன் என்னிடம் அழுது கொண்டு வந்தான். இப்பொழுது என்னடாப்பா சமாசாரம் என்று விசாரிக்க, “அக்காள், மனசுக்குள்ளேயே என்னே திட்டராள் !” என்றான். இந்த வியாஜ்யத்தை யார் தீர்மானம் பண்ணுவது ! நான் ஜட்ஜாக இருந்தபொழுது அநேக வியாஜ்யங்களில் உண்மையைக் கண்டுபிடித்ததாகப் புகழப்பட்டிருக்கிறேன். இந்த வியாஜ்யத்தின் உண்மையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை;

அதன்பேரில் அவர்களிருவரையும் கூப்பிட்டு, “இன்றைக்கெல்லாம் நீங்கள் சமாதானமாக இருந்தால் உங்களிருவருக்கும் உடையவர் உற்சவத்தில், தேர் தினம் நம்முடைய தெருவில் சாமி வரும்பொழுது, சடைபொம்மை வாங்கிக் கொடுக்கிறேன்” என்று சொல்லி கீழே அனுப்பினேன். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர்களிருவருக்கும் முக் கிய விளையாட்டு எப்பொழுதும் ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவதே!.

என்ன யோசித்துக்கொண்டிருந்தேன் இவர்கள் வருமுன் ஆர அந்தக் கதை எழுத அரம்பித்தேன்! என்று சொல்லி என் பென்சிலை மறுபடியும் எடுத்தவுடன் – என் வேலைக்காரன் சபாபதி வந்தான்.

அவனைப்பற்றி என் நண்பர்களுக்கு முன்பே தெரிந்திருக்கும்,

“அம்மா, கேட்டுக்கினு வரச் சொன்னாங்க!” என்றான்.

“என்னடா கேட்டுக்கொண்டு வரச் சொன்னார்கள்?”

“இன்னைக்கி, என்னா பதார்த்தம் போடரது இண்ணு?”

“அத்தெ முன்னெயே சொல்லி அழுவதற்கென்ன?”

“நீ தாம்பா என் முன்னே அத்தெ செய்யவேணும் இண்ணு சொன்னையே”

“சரிதான்! சரிதான்! நீ அதை செய்யவேண்டாம் – அவர்களுக்கு இஷ்டமான பதார்த்தம் போடச் சொல் இன்றைக்கி!- அடடே! எனக்கு ஏதாவது கீரைமாத்திரம் இருக்க வேண்டுமென்று சொல் போ!” என்று சொல்லி அவனை அனுப்பினேன்.

பிறகு நான் எழுத நினைத்த கதையை எப்படி ஆரம்பிப்பது என்று யோசிப்பதற்குள்-மறுபடி சபாபதி வந்தான்.

‘என்னடா ? மறுபடியும் ?’

“என்னா வாங்கி வர்ரது இண்ணு கேக்கச் சொன்னாங்க அம்மா’ “என்னடா, தொந்திரவா போச்சு? ஏதாவது எழவெடுத்த கீரை வாங்கி வா போ!”

“இப்பவே சொல்லிட்டேம்பா! அப்புறம் என் பேர்லே கோவிச்சிக்காதே. அப்பா ! கடையிலே நீ சொல்ர கீரே விக்காதப்பா ! ” இதைக் கேட்டவுடன் எனக்கு வந்த கோபத்தையும் சிரிப்பையும் அடக் கிக்கொண்டு, “சபாபதி, நீ நிரம்ப புத்திசாலி இன்றைக்கு உனக்கு இஷ்டமானதை வாங்கிக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி னேன்.

(பிறகு நான் விசாரித்ததில். அவன் பாகற்காயை வாங்கிக்கொண்டு வந்ததாகத் தெரிந்தது. ஏன் இப்படிச் செய்தாய் என்று! அவனைக் கேட்க எனக் கிஷ்டமானதை வாங்கிக் கொண்டுவரச் சொன்னையேப்பா. “எனக்கு கீரையே இஷ்டமில்லை, பாவக்காய்தான் இஷ்டம். அத்தொட்டு அதை வாங்கிக்கொண்டு வந்தேன்” என்றான். இந்த கஷ்டத்திற்கு என்ன செய்வது! எனக்கு பாகற்காய் என்றால் மிகவும் வெறுப்பு.)

அம்மட்டும் இந்த சங்கடம் ஒழிந்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு மறுபடியும் பென்சிலை எடுத்து ‘முதல் அங்கம்’ என்று எழுதுவதற்காக ‘முதல்’ என்று எழுதினேன்-அங்கம் என்று எழுதுவதற்கு முன், என் பழைய சிநேகிதராகிய சோமசுந்தர ஐயர் மெத்தைப்படி ஏறி வந்தார் !

அவர் என்னுடன் அநேக வருடங்களுக்கு முன் பள்ளிக் கூடத்தில் கீழ்வகுப்புகளில் ஒன்றாய்ப் படித்தவர். அவருடன் வார்த்தையாடாது எப்படி அனுப்பிவிடுகிறதென்று, கவலையுடன் ‘ வா-அப்பா -சோமசுந்தரம், என்ன சமாசாரம்?’ என்று கேட்டேன். அவர் சாவகாசமாய் உட்கார்ந்து கொண்டு “ஒன்றும் விசேஷமில்லை; சும்மா பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தேன் ” என்றார்.

பிறகு அவர் என்னுடைய யோக க்ஷேமத்தை யெல்லாம் விசாரித்தார் அதன் பேரில்நான் அவருடைய யோக க்ஷேமத்தை விசளிக்க வேண்டியதாயிற்று. பிறகு நான் “சோமசுந்தரம், நான் கொஞ்சம் அவசரமான வேலையிலிருக்கிறேன். இன்னொரு சமயம் வந்தால் சாவகாசமாய்ப் பேசலாம்” என்றேன். அதன் பேரில்: “அப்படியே ஆகட்டும்–இப்பொழுது அவசரமாக வந்த சமாசாரம் என்ன வென்றால் என்று ஆரம்பித்தார். அதன் மீது நான், ஏதாவது சொல்ல வேண்டு மென்றால் சீக்கிரம் சொல்லி முடியப்பா” என்றேன்.

“வேறொன்றுமில்லை-நான் வந்த விஷயம்- என் மருமகன் ஒருவன் இருக்கின்றான்.”

‘“ உனக்கு குழைந்தைகளே இல்லை யென்றாயே, மருமகன் எப்படி வந்தான் ?” என்றேன்.

“என் சொந்த மருமகன் அல்ல – என் – அண்ணன் – அதாவது பெரியப்பா பிள்ளையின் மருமகன்-“

“என்ன அவனைப்பற்றி?”

“வேறென்றுமில்லை-அவன் இரண்டு வருஷங்களாக S. S L. C. பரிட்சைக்குப் போய் பெயில் (fail) ஆயிருக்கிறான்-“

“அதற்கு-நான் என்ன செய்வது ?”

“அதற்காக ஒன்றும் செய்யச் சொல்லவில்லை. மதராஸ் பாங்கில் ஒரு குமாஸ்தா வேலை காலியாயிருக்கிறதாம். அதன் மானேஜர் மார்னிங்டன் துரைக்கு- நீ ஒரு சிபார்சு காகிதம் கொடுக்க வேணும் — அதற்காகத்தான் அவசரமாக வந்தேன்.

அந்த மார்னிங்டன் துரையை நான் பார்த்ததேயில்லையே ? அவரை எனக்குத் தெரியாதே; உன்னுடைய பெரியப்பா பிள்ளையின் மருமகனையும் தெரியாது-நான் எப்படி சிபாரிசு கடிதம் கொடுப்பது?”

” என்ன அப்பா, இத்தனை நாள் என்னைத் தெரிந்திருந்து ஒரு சிபாரிசு காகிதம் கொடுக்க பால்மாறுகிறாயே” என்றார்.

“சரி -இவரை அனுப்பிவிட வேறுவழியில்லை என்று ஒரு யுக்தி செய்தேன்- காகிதம் பேனாவை எடுத்து வைத்துக் கொண்டு, உன் னுடைய பந்துபேர் என்ன ?” என்றேன்.

“கலியாண சுந்தரம் ஐயர் ” என்றார்.

“ஒரு சமாசாரம் – நான் பொய் பேசமாட்டேன்–உனக்கு தெரியுமே இல்லையோ ?”

“ யார் உன்னை பொய் பேசும்படி கேட்டது?” என்று கேட்டார்.

“ஆனால் சரிதான்” என்று சொல்லி விட்டு–பின் வருமாறு கடிதம் விரைவில் எழுதிக் கொடுத்தேன்.

“மார்னிங்டன் துரை அவர்களுக்கு, ஐயா–உங்களை எனக்கு முன்பின் தெரியாது. உங்கள் பாங்கில் ஏதோ வேலை காலியா யிருக்கிறதாம். அதற்காக, என் பால்ய சிநேகிதர், தன் பந்து ஒருவனுக்கு (அவர் பெயர் கல்யாண சுந்தரம்) சிபாரிசு காகிதம் கொடுக்கும்படி கேட்கிறார். அந்த கல்யாண சுந்தரத்தை நான் பார்த்ததேயில்லை.

அவனுக்கு நீங்கள் காலியாயிருப்பதாகச் சொல்லப்பட்ட வேலையைக் கொடுப்பதானால் கொடுக்கலாம். இது சரியா யிருக்கிறதா பார்” என்று அவரிடம் காண்பித்தேன். அதைப் படித்துப் பார்த்து விட்டு கோபத்துடன் “என்ன இப்படி எழுதினையே !” என்றார். அதற்கு நான், “பொய் பேசாமல் !” வேறு நான் என்ன எழுதுவது சொல் என்று கேட்க, பதில் ஒன்றும் சொல்வதற்கில்லாமல் “நான் வந்த வேளை தவறு தவறு” என்று சொல்லிக் கொண்டே சரேலென்று இறங்கிப் போய் விட்டார்.

எனக்கும் அவர் கடைசியில் சொல்லி விட்டுப் போன வாக்கியம் சரியென்று தோன்றியது.

அப்புறம்,இனியாவது சாவகாசமாய்த் தடையின்றி எழுதலா மென்று தீர்மானித்து மேஜையின் பேரில் வைத்திருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தேன்.-அதில் “முதல்” -என்று எழுதியிருந்ததைக் கண்டேன். என்ன முதல்? என்று யோசித்துப் பார்த்தேன். புரியவில்லை என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது கீழே என் வேலையாள் சபாபதி, யாருடனோ உரத்த சப்தமாய்ச் சச்சர விட்டுக் கொண்டிருக்கும் கோஷ்டம் கேட்டது.

அதன் பேரில், ”யார்டா அது சபாபதி ?” என்று நான் கேட்க, “இல்லைங்கோ- யாரோ தந்தி ஆசிபீலிருந்து வந்திருக்கிறார், உங்களைப் பார்க்க வேணுமாம், ‘ஐயா, ஏதோ வேலையாயிருக்கிறார் அப்புறம் வா’-என்றால் கேட்க மாட்டேன் என்கிறார் ” என்றான். “அடடா ! தந்தி கொண்டு வந்தால் நீ தடுக்கலாமா — அனுப்பு மேலே என்றேன். உடனே அந்த தந்தி ஆபீசு பீயூன் மேலே வர-“என்ன தந்தி ?” என்று நான் வினவ, அதற்கு அவன் “தந்தி ஒன்றும் இன்றைக்கு வரவில்லைங்கோ– என் பிள்ளைக்கு வர்ர வாரம் கலியாணம், அதற்காக- கண்டுகொண்டு போகலாம் என்று வந்தேன் ” என்று பதில் உரைத்தான்.

இதற்கு – என் கோபத்தை சற்று அடக்கிக் கொண்டு, “எப்பொழுது கலியாணம்?” என்று கேட்டு, வருகிற வாரம் என்று அவன் சொல்ல, ஆனால் இன்னும் நான்கு தினம் கழித்து வா என்று சொல்லியனுப்பிவிட்டு, என் வேலைக்காரனைக் கூப்பிட்டு “இனிமேலே, யாராவது என்னைப் பார்க்க வந்தால், யார், எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்றெல்லாம் விசாரித்துக் கொண்டு, பிறகு என் உத்திரவின் பேரில்தான் மேலே விடவேண்டும்;- இல்லாவிட்டால் உன்னை டிஸ்மிஸ் பண்ணி விடுவேன் ?” என்று சொல்லியனுப்பினேன்,

இத்தனை கலவரத்தில் நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என்பதே எனக்கு மறந்துபோய்விட்டது. அதை ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக, என் வழக்கப்படி சற்று எழுந்து உலாவினேன். அப்படி உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, என் ஆள் சபாபதி மெத்தைக்கு வந்து, “என் பேர்லே கோவிச்சிக்காதைங்க. யாரோ ஒருத்தர், இத்தே உங்க கிட்டே கொடுக்கச் சொன்னாரு ” என்று ஒரு விசிடிங் கார்டை (Visiting card) என்னிடம் கொடுத்தான். அதில் R. G. Paul, I.C.S. என்று அச்சடித்திருந்தது.

உடனே நம்மைப் பார்ப்பதற்காக யாரோ பெரிய கலெக்டரோ, அல்லது கவர்மெண்ட் உத்தியோகஸ்தரோ வந்திருக்கிறார். அவரைப் பாராமலிருப்பது தவறு என்று எண்ணி, உடனே அவசரமாய்க் கீழே இறங்கிப் போய், என் வீட்டின் வாயிலண்டைப் பார்க்க, அங்கே ஒரு பெரிய மனிதரையும் காணோம்; கார் ஒன்றையும் காணோம். யாரோ-சுமார் 18 வயதுடைய பிள்ளையாண்டான், ஒரு குல்லாயணிந்தவன்–ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்தான். அதன் பேரில் கோபங்கொண்டு, சபாபதியை அழைத்து, ” யார் இந்த கார்டை உன்னிடம் கொடுத்தது ?’ என்று கேட்க, அவன், “இந்த ஐயா தான் கொடுத்தார்” என்று அந்த வாலிபனைக் காட்ட. “யாரப்பா நீ?” என்று அவனைக் கேட்க.- நான்தான் R.G.Paul, I.C.S.” என்றான். அதன் பேரில் ஒரு வேளை தவறாக எண்ணினோமோ என்னவோ என்று திடுக்கிட்டு, அவரை மெத்தைக்கு வரும்படி கூறி, மேலே அழைத்துச் சென் றேன். அப்புறம் அவரை உட்காரும்படி வேண்டி ‘உங்கள் பெயரை நான் கேட்டதில்லை.

நீங்கள் சென்னை ராஜதானியில் இருக்கிறீர்களா அல்லது’- என்று ஆரம்பித்தபோது, அவர் “நான் இங்கத்தியவன் தான் – என் முழுப் பெயர் ராஜகோபால் அதை சுருக்கி R. G. பால் என்று வைத்துக்கொண்டேன்” என்றார். ஒரு வேளை சீமைக்குப் போய் I. C. S. பாஸ் பண்ணியபோது பெயர் பெரிதாக இருக்கலாகா தென்று அப்படிச் செய்திருக்கலாமென்று ஊகித்து, “நீங்கள் பொழுது எந்த ஜில்லாவில் கலெக்டராக இருக்கிறீர்கள் ?” மெல்ல வினவினேன். அதற்கு அவர் தான் ஜில்லா கலெக்டரல்ல என்றும் பட்டணத்தில் கிறிஸ்தவ காலேஜில் படிப்பதாகவும் சொன்னார் – அதன்மீது எனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, “பிறகு – இந்த ஐ-சி-எஸ்-என்ன ?” என்று கேட்டேன். அதற்கு அப்பிள்ளையாண்டான். “என்னை மன்னிக்க வேண்டும் -I.C.S.என் றால் இன்டர் (Inter) கிளாஸ் (Class) ஸ்டுடென்ட்(Student)’ என்று தெரிவிக்க– எனக்கு வந்த கோபம் போய், பிள்ளையாண்டானுடைய குத்திர யுக்தியை வியந்து சிரித்து விட்டேன். பிறகு என்ன செய்வது ! “என்ன அப்பா! எதற்காக என்னைப் பார்க்க வந்தாய்?” என்று கேட்டேன்; அதற்கு “எனக்கு சினிமாவில் சேரவேண்டுமென்று ஆசையிருக்கிறது. அதற்காக நீங்கள் யாருக்காவது சிபாரிசு செய்ய வேண்டுகிறேன்” என்றான்.

அதன்மீது- “நீ எங்காவது இதுவரை யில் நடித்திருக்கிறாயா? உனக்குப் பாடத் தெரியுமா?” என்று கேட்க, இதுவரையில் நான் எங்கும் நடித்ததில்லை. எனக்குப் பாட வும் தெரியாது. ஆனாலும் எல்லாம் சீக்கிரம் கற்றுக்கொள்வேன் என்றான். ஆனால், “அதெல்லாம் கற்றுக்கொண்டு பிறகு வா; நான் சிபார்சு செய்வதைப்பற்றி அப்புறம் யோசிக்கிறேன்” என்று சமாதானம் சொல்லி யனுப்பினேன்.

பிறகு ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு இனிமேலாவது வேறு தடைகளில்லாமல் நான் இன்றைக்கு எழுத நிச்சயித்திருந்ததை எழுத வேண்டுமென்று தீர்மானித்து மேஜையின் பேரில் என் எதிரில் இருந்த காகிதத்தை எடுத்துப் பார்க்க அதில் ‘முதல்’ என்று எழுதியிருந்த தைக் கவனிக்க – நான் நாடகம் எழுதத் தீர்மானித்தது ஞாபகம் வந்தது. அதன் மீது முதல் அங்கம் என்று எழுதுவதற்காக ‘அ’ என்று எழுதியவுடன் – என் வீட்டு மெத்தையின் ஹாலின் பின்புறக் கதவின் வழியாக “அப்பேன்!” என்று ஒரு சப்தம் கேட்டது.

யார் இந்தப் பக்கமாக வருகிறது என்று ஆச்சரியப்பட்டவனாய்த் திரும்பிப் பார்க்க என் பெண்சாதி வர்க்கத்தில்–எனக்கு நெருங்கிய பந்துவாகிய ஒருவர் வந்து சேர்ந்தார். இவர் என்னிலும் மூத்தவர். பெரிய தொணு தொணுப்பு! இவர் இங்கு இச் சமயம் வந்து சேர்ந்தாரே என்று என் விதியை நொந்து கொண்டு – என் மன வருத்தத்தையும் அடக்கிக் கொண்டு–“வாருங்கள்! உட்காருங்கள் என்றேன். அவர் மெல்ல உட்கார்ந்து, அதென்ன அப்பேன்! உன் வேலைக் காரன் என்னை மேலே ‘விடமாட்டேன் என்றானே” என்றார்.

“இல்லை; தெரியாதவர்களை அனுப்ப வேண்டாம் என் உத்திர வில்லாமல் என்று உத்திரவு செய்திருந்தேன். அவன் உங்களை இன்னாரென்று தெரியாமல் ஆட்சேபித்திருக்க வேண்டும்” என்றேன். “அதுதான் நான் பின் கட்டு வழியாக வரவேண்டிய தாயிற்று மெத்தைக்கு” என்றார். ஓகோ சரிதான் என்று மனதில் நினைத்துக் கொண்டு “என்ன விசேஷம்” என்று கேட்க, ”ஒன்றும் விசேஷமில்லை’ என்று சொல்லிவிட்டு, தனக்கு 20 வருடங்களாக இருக்கும் கீல் வாயுவைப் பற்றி பேச ஆரம்பித்து, 5 நிமிஷம் விடாது அதன் கஷ்டங்களையெல்லாம் எனக்குத் தெரிவித்து, கடைசியில் தற்காலம் சுகமாக இருப்பதாகவும், எழுந்து நடக்க முடியும்படி சுவஸ்தமா யிருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த சுவஸ்தம் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து ஆயிருக்கலாகாதா என்று எண்ணிக்கொண்டு, “அப்புறம் என்ன சாமாசாரம்?” என்றேன். அதற்கு அவர் ”வேறொன்று மில்லை. நான் ஒரு புஸ்தகம் எழுதி அச்சிட்டு முடித்திருக்கிறேன். அதற்கு ஒரு முகவுரை எழுதித் தரவேண்டும், இப்பொழுது நாலு பக்கத்தில் நீ ஒரு முகவுரை எழுதிக் கொடுத்தால் அதையும் அச்சிட்டு அந்த புஸ்தகத்தை திங்கட் கிழமை வெளியிடலாமென்று இருக்கிறேன்” என்றார்.இதைக் கேட்டவுடன், நான்கு பக்கத்தில் முகவுரை எழுதுவதாவது! இதென்ன கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாயிருக்கிறதே! என்று ஆச்சரியப்பட்டவனாய் தற்சமயம் அவரை மெல்ல அனுப்பிவிடவேண்டும்.

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து, ‘என்ன புஸ்தகம்?’ என்றேன். அவர் ‘பாரதச் சுருக்கம்’ என்று பதில் உரைத்தார். அம்மட்டும் சுருக்கமா இருக்கிறதேயென்று சந்தோஷித்து, “புஸ்தகத்தை அனுப்புங்கள்;–பார்வையிட்டு எழுதி அனுப்புகிறேன்” என்றேன். அதைச் சொல்லி முடிப்பதன் முன், தன் பக்கத்தில் வைத்திருந்த ஒரு பெரிய மூட்டையை அவிழ்த்து, இதோ அதை கொண்டுவந்திருக்கிறேன் ” என்று கூறி, மேல் பயிண்டு மாத்திரம் செய்யாத ஒரு புத்தகத்தை என்னிடம் நீட்டினார். தெய்வமே!” என்று எண்ணிக்கொண்டு அதை வாங்கி அது எத்தனை பக்கங்கள் இருக்கின்றனவென்று கடைசி பக்கத்தைத் திருப்பிப் பார்க்க, 476 பக்கங்கள் இருந்தன.

உடனே அவர் முகவுரை நான்கு பக்கங்களில் வேண்டு மென்பதற்குக் காரணம் தெரிந்தது. சரியாக 60 பாரங்கள். (Forms) இருக்கவேண்டுமென்பது அவர் கருத்து போலும் !

பிறகு நான், “இந்தப் புஸ்தகத்தை என்னிடம் வைத்து விட்டுப் போங்கள், நான் இதை முற்றிலும் பார்வையிட்டு பிறகு முகவுரை எழுதித் தருகிறேன் ” என்றேன். அதற்கு அவர், முகவுரை தானே எழுதும்படி கேட்டேன் – அதற்கு புஸ்தகத்தை படித்துப் பார்க்க வேண்டுமோ ? நான் கடைசியில் அச்சிட்ட புஸ்தகத்திற்கு திவான் பஹதூர்…. செட்டியார் அவர்கள் புஸ்தகத்தைப் படிக்காமலே, முகவுரை எழுதிக் கொடுத்தாரே?” என்றார்.

அதைக் கேட்டவுடன் இப்படிப் பட்ட தமிழ் ஆசிரியர்களும் முகவுரை எழுதுபவர்களும் இருப்பதனால் தான், தமிழ் பாஷை இக்கதியிலிருக்கிற தென்று அடங்காக் கோபங் கொண்டவனாயினும், அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு, “ஆனால் அவரிடமே கொண்டு போய் இன்னொரு முகவுரை இதற்கும் எழுதிக் கொள்ளுகிறதுதானே ?” என்றேன்.

“அப்பேன்! நீ கோவித்துக் கொள்ளாதே. இதற்கு உன் முகவுரை தான் வேண்டுமென்று வந்தேன்” என்றார்.

அப்படியானால்; தயவு செய்து இரண்டு தினங்கள் கழித்து வாருங்கள், பிறகு சொல்லுகிறேன்” என்று சொல்ல, “சரி! நீ பிடிவாதக்காரன் – எனக்குத் தெரியுமே ! அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிக்கொண்டே கீழே இரங்கிப் போனார்.

அதன்பேரில் இனி நான் ஏதாவது புத்தகம் அச்சிட்டால் அதற்கு ஒருவரையும் முகவுரை எழுதக் கேட்க லாகாதென்று தீர்மானித்துவிட்டு எப்படியாவது நான் இன்று காலை எழுதத் தீர்மானித்ததை எழுதித்தான் முடிக்கவேண்டுமென்று நிச்சயம் செய்துகொண்டு, என் மெத்தைக்கு வரவேண்டிய இரண்டு வழியின் கதவுகளையும் உள்ளே தாளிட்டுக் கொண்டு, என் மேஜைக்கு எதிரில் வந்து உட்கார்ந்து, என் பென்சிலை எடுத்துக்கொண்டு, இந்த அவஸ்தையில் கீழே எப்படியோ விழுந்த நான் எழுத ஆரம்பித்த காகிதத்தையும் எடுத்துக் கொண்டு, அதில் நான் ஆரம்பித்திருந்ததைப் பார்க்க அதில் ‘முதல் – அ’ என்றிருக்கக் கண்டேன். இத்தனை இடைஞ்சல்களில் நான் என்ன எழுத எண்ணியிருந்தேன் என்பதே முற்றிலும் மறந்து போய் விட்டது. ‘முதல்-அ’ என்றால் முதல் அத்தியாயம் என்று எழுதயிருந்தேனா– அல்லது முதல் அங்கம் என்று எழுத இருந்தேனா என்று சந்தேகம் பிறந்தது. இந்தச் சமயம்.

என் மேஜையின் பேரில் இருக்கும் டெலிபோன் (Telephone) மணி யடிக்க, அதன் குழாயை எடுத்துக் கொண்டு, “யார் பேசுவது ?” என்று நான் கேட்க ரேடியோ ஆபீசு மேனேஜர், “நீங்கள் அனுப்புவதாகச் சொன்ன ரேடியோ நாடகம் எழுதி முடிந்ததா?” என்று கேட்டார். உடனே எனக்கு அடங்காச் சிரிப்பு வர. கலகல வென்று சிரித்தேன். கீழே இருந்து இதைக் கேட்ட என் மனைவி, கதவுகளைப் பூட்டிவிட்டு, தனியாக மெத்தையிலிருந்து கொண்டு சிரிக்கிறாரே என்று சந்தேகப்பட்டவளாய், அவசரமாய் ஓடிவந்து கதவை தபதப வென்று தட்ட, நான் கதவைத் திறந்து என்ன வென்று கேட்க, “இல்லை: தனியாக சிரித்துக் கொண் டிருக்கிறீர்களே! என்ன – சமாசாரம்? என்று கேட்கலாமென்று வந்தேன்” என்றாள். பிறகு நான் விசாரித்ததில், “எனக்கு ஏதாவது பயித்தியம் பிடித்து விட்டதோ என்னவோ” என்று சந்தேகப் பட்டதாக மெல்லத் தெரிவித்தாள்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று சமாதானம் சொல்லி நான் எழுத ஆரம்பித்தது முதல் எனக்கு நேரிட்ட இடையூறுகளை யெல்லாம் சொல்லிச் சிரித்தேன்; அதன் பேரில் அவள், தானும் சிரித்துவிட்டு, “இது விந்தையாய் இருக்கிறது. இதையே ஒரு வியாசமாக உங்கள் ரேடியோ நண்பருக்கு எழுதி யனுப்புங்களேன்” என்றாள். இது நல்ல யுக்திதான் என்று எண்ணி அப்படியே செய்தேன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *