பலவகை பூங்கொத்து
பம்மல் சம்பந்த முதலியார்

ஒரு பாட்டினால் வந்த உபத்திரவம்

(கட்டு கதை)


சில வருடங்களுக்கு முன்பு, எனக்கு ஒரு நாள், வடக்கேயிருந்த ஒரு நண்பரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது; அதில் மறுநாட் காலை, சென்னைக்கு பரோடா சமஸ்தான சங்கீத வித்வான் ஒருவர் வரப் போகிறதாகவும், அவர் வடக்கேயுள்ள இந்துஸ்தானி சங்கீதத்தில் மிகவும் பெயர் பெற்றவர் என்றும், தனக்கு மிகவும் ஆப்த நண்ப ரென்றும், அவர் ராமேச்வர யாத்திரைக்குப் போகும் வழியில் சென்னையில் ஒரு நாள் தங்கப் போவதாகவும் மறுநாட் காலையில் அவரை ரெயில் ஸ்டேஷனில் சந்தித்து, வரவேற்று, என் வீட்டிற்கழைத்துக் கொண்டு போய் உபசரித்து, அவர் கர்நாடக சங்கீதத்தைக் கேட்க மிகவும் ஆசைக் கொண்டிருப்பதால் அந்த தினத்திற்குள் எவ்வளவு நல்ல கர்நாடக சங்கீதம் கேட்க முடியுமோ, அவ்வளவும் கேட்கச் செய்ய வேண்டியது என் கடமை என்றும் எழுதியிருந்தது.

அவர் பெயர் வினாயகராவ் பான்ஸ்லே. அவர் இந்துஸ்தானி கவாய்களில் மிகச் சிறந்தவர் என்று நான் முன்பே கேள்விப்பட்டிருந் தேன், ஆகவே அவரை நேரில் பார்க்கும்படியான சர்ந்தப்பம் நேரிட்டதே என்று மிகவும் சந்தோஷப் பட்டேன். அன்றியும் இந்துஸ்தானி சங்கீதத்தைவிட, கர்நாடக சங்கீதம் மிகவும் உயர்ந்தது என்று எனக்கு அந்தரங்கத்தில் ஒரு அபிப்பிராயம் நெடுநாளாக உண்டு.

ஆகவே இந்த வடக்கத்திய சங்கீத வித்வானுக்கு நம்முடைய சங்கீதத்தின் பெருமையை எடுத்துக் காட்ட வேண்டும் எனும் எண்ணம் உதித்தது. ஆகவே மிகவும் மனக் கிளர்ச்சியுடன் மறுநாட் காலையில், அவரை சென்னை ரெயில் ஸ்டேஷனுக்குப் போய் வரவேற்று, மாலை மரியாதை யுடன் உபசரித்து, என் காரில் அவரை ஏற்றிக்கொண்டு என் வீட்டிற்குத் திரும்பினேன்; அன்றை தினம் பம்பாய் ரெயில் சென்னைக்கு வருவதற்கு இரண்டு மணி நேரம் காலதாமதமாயது.

நாங்கள் என் வீட்டிற்குப்போய் சேருவதற்காக வரதாமுத்தை யப்பன் தெருவில் வந்து கொண்டிருக்கும் பொழுது, மோட்டார் வண்டிக்காரன் வண்டியை திடீரென்று நிறுத்தினான் என்னவென்று வெளியில் தலை நீட்டிப் பார்த்த பொழுது, எதிரில் ஒரு பெரிய ஜனக்கூட்டம் வந்து கொண்டிருந்தது. திரும்பி வேறு வழியாகப் போகலாமா இல்லையா என்று நான் தீர்மானிப்பதற்கு முன்பாக, அந்த ஜனக்கூட்டத்தின் மத்தியில் எங்கள் கார் அகப்பட்டுக் கொண்டது. சரி இக்கூட்டம் போன பிறகு தான் வீடு போய்ச் சேர வேண்டுமென்று என் புதிய நண்பருக்குத் தெரிவித்தேன்.

உடனே அக்கூட்டத்தின் மத்தியினின்றும் மதுரமான சங்கீதம் உண்டாயிற்று. அக் கூட்டம். ஒரு செட்டியார் வீட்டுப் பிள்ளையை பள்ளிக்கூடத்தில் வைப்பதற்காக ஊர்வலம் வரும் ஊர்கோலமா யிருந்தது : அவர் சென்னையில் மிகவும் பிரபல நாதஸ்வரக்காரனாகிய மதுரை முத்து என்பவனை ஏற்படுத்தியிருந்தார், அவன் அச்சமயம் பிலஹரி ராகத்தில் ஒரு பாட்டை மிகவும் அழகாக வாசித்துக் கொண் டிருந்தான் : அதைக் கேட்டவுடன் எனது புதிய நண்பர் முகமலர்ந்து, வெகு சந்தோஷத்துடன் அப்பாட்டைக் கேட்டு, “நாம் வீட்டிற்கு சீக்கிரம் போகாதபடி இக்கூட்டம் நம்மைத் தடுத்தற்காக நான் வருத்தப் படவில்லை, அகஸ்மாத்தாய் இப்படிப்பட்ட நல்ல கர்நாடக சங்கீதம் கேட்கும் படியாக எனக்கு பாக்கியம் தெய்வாதீனமாகக் கிடைத்ததே” என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்.

உடனே அந்த நாதஸ்வரக்காரன், அப்பாட்டை நிறுத்தி விட்டு வேறொரு பாட்டை ஆரம்பித்தான். அந்தப் பாட்டு ஒரு சினிமா பாட்டு. அது சென்னையில் சினிமாவுக்குப் போகிறவர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு, பட்டணம் முழுவதும் மிகவும் பிரசித்தமாயிருந்தது. அது சல் சல் ஜவான் என்னும் முதல் பதங்களையுடைய ஒரு இந்துஸ்தானி பாட்டு.

அந்தப் பாட்டை மதுரை முத்து வாசிக்க ஆரமபித்தவுடன், எனது நண்பர் முகம் கோணினார். அவன் அப்பாட்டை வாசிக்க வாசிக்க, அவரது முகம் கோணுதல் அதிகமடைந்தது; இதற்கு என்ன காரணம் என்று அவரை மெல்ல வினவ, அவர் அடியில் வருமாறு பதில் உரைத்தார்.

“இந்தப் பாட்டை நான் கேட்கப் பிரியப்படவில்லை; அதற்குப் பல காரணங்கள் உண்டு. இது சாதாரணமாக வடக்கே நாடகத்தில் பாடும் படியான மெட்டு உடையது. இப்படிப்பட்ட பாட்டுகளை வடக் கத்திய கவாய்கள் கச்சேரிகளில் பாட மாட்டார்கள். தங்கள் அந்தஸ்திற்கு குறைவென்று மதிப்பார்கள். அன்றியும் வடக்கில் பாடுபவர்களே இதை ஒரே ராகத்தில் பாடாமல் பல ராகங்களைக் கலந்து பாடுகிறார்கள்; தாளக்கட்டிலும் அப்படியே. சாஹித்தியமும் சிறந்த தல்ல.

அப்படியிருக்க இந்த வாத்தியக்காரன் அப்பாட்டை வாசிப்பதில் ராக சுத்தமுமில்லை. தாள சுத்தமுமில்லை, சாஹித்தியத்தையும் கொலைசெய்து வாசிக்கிறான். நாம் சீக்கிரம் தங்கள் வீடுபோய்ச் சேரும் வழியை தயவு செய்துபாருங்கள்” என்றார். அதன்பேரில், என் வண்டிக்காரனிடம் சொல்லி, எப்படியாவது வண்டியைத் திருப்பிக் கொண்டு, பக்கத்து வீதி வழியாக வீடு போய்ச் சேரும்படி கட்டளையிட, அவன் ஜனநெருக்கத்தில் கஷ்டப்பட்டு அப்படியே செய்தான். அப்படிச் செய்தபொழுது அந்த “சல் சல் ஜவான்” சங்கீதம் காதில் விழாத தூரம் வரையில், எனது நண்பருடைய முகம்வாட்டம் நீங்க வில்லை.

என் வீடுபோய்ச் சேர்ந்தவுடன் என் அதிதியை, மேற்கட்டிற்கு அழைத்துக் கொண்டுபோய், அவரது காலைக் கடன்களை யொல்லாம் முடிக்கச் செய்து, அவருக்கு வடக்கே கிடைக்ககாத இட்லியையும் காப்பியையும் கொடுக்க, அவர் அதை மிகவும் சந்தோஷத்துடன் புசித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது மணி ஏறக்குறைய ஒன்பதாயிற்று.

உடனே கீழிருந்து ஹார்மோனியம் பெட்டி வாசிக்கும் சப்தம் கேட்டது. உடனே அவர், “இதென்ன வாத்தியம்?” என்று கேட்க நான் எனது இரண்டு பேத்திமார்களுக்கு பாட்டு வாத்தியார் பாட்டுக் கற்பிக்கிறார், என்று கூற, அவர் “மிகவும் சந்தோஷம். அயினும், இந்த ஆர் மோனியம் பெட்டி ச்ருதியை வைத்துக் கொள்வதைவிட்டு, நம்முடைய தேசத்து ச்ருதியாகிய தம்புராவை வைத்துக்கொண்டால், நல்லதல்லவா?’ என்று தெரிவித்தார் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் என் பேத்திகளாகிய கற்பகமும், லட்சுமியும், சரளி வரிசையை முடித்து ஒரு கீதமும் வர்ணமும் பாடக் கேட்டவராய் அவர் அவர்கள் குரலை மெச்சிக் கொண்டிருக்கும் பொழுதே, உடனே என் பேத்திமார்களுக்கு அவர்கள் பாட்டு உபாத்தியாயர் ‘சல் சல் ஜவான்’; என்னும் பாட்டைக் கற்பிக்க ஆரம்பித்தார், உடனே எனது புதிய நண்பர் முகம் கோணியது ஒருபுறமிருக்கட்டும், எனக்கே மிகவும் கோபம் பிறக்க, நான் உடனே கீழே போய், பாட்டு உபாத்தியாயரை இந்தப் பாட்டை இவர்களுக்கு உங்களை யார் கற்பிக்கச்சொன்னது?’ என்று கேட்க, அவர் பட்டணம் எல்லாம் எல்லோரும் பாடுகிறார்களே, ஆகவே குழந்தை களுக்கும் அப்பாட்டைக் கற்பிக்க வேண்டுமென்று அம்மா சொன்னார்கள்;” என்று பதில் உரைத்தார். ஆயினும் “அது வேண்டாம்; வேறு ஏதாவது கற்பியுங்கள்” என்று சொல்லிவிட்டு, மேலேவந்து எனது நண்பரிடம் நடந்த செய்தியைச் சொன்னேன்.

அப்போது அவர் “உங்கள் பாட்டுவாத்தியாருக்கு இந்துஸ்தானி பாஷை தெரியுமா?” என்று கேட்டதற்கு ‘அவருக்குத் தெரியாது” என்று நான் பதில் சொல்ல, அவர் இனிமேல் அவர் குழந்தைகளுக்கு ஏதாவது தெரியாத பாஷையில் பாட்டைக் கற்பிப்பதானால் அப்பதங்களை எப்படி உச்சரிப்பதென் றும். அவைகளின் அர்த்தமென்னவென்றும் கற்றுக்கொண்டே, பிறகு சொல்லிக் கொடுக்கும்படிச் செய்யுங்கள் தயவு செய்து என்று கூறினார் நானும் அவர் கூறியது சரியென்று ஒப்புக்கொண்டேன்.

பிறகு, அவரிடம் என் மேஜையின் மீதிருந்த இரண்டொரு ஆங்கில வர்த்தமானப் பத்திரிகைகளைக் கொடுத்து படித்துக் கொண்டிருக்கும்படிச் சொல்லிவிட்டு நான் எங்கள் எதிர் வீட்டுக்கு ஏதோ வேலையாய் போய் திரும்பி வந்தேன்.

அச்சமயம் என் வாயிற்படிக்கெதிரில் ஒரு ஏழைப் பண்டாரம் ஒத்தைத்தந்தி சுரைக் குடுக்கையைக் கையில் வைத்துக்கொண்டு, ராமலிங்க சுவாமிகள் பாடிய ஒரு பாட்டை பாட ஆரம்பித்தான் ; நான் மெத்தைக்குப் போக, எனது நண்பர் அந்தப் பிச்சைக்காரன் பாட்டையும், ராக சுத்தத்தையும் மெச்சி அவனுக்கு ஏதோ கொடுக்கப்போனார். நான் அதைத்தடுத்து ‘அவனுக்குக் கொடுக்கவேண்டியது என் கடமை’ என்று சொல்லி, அப்பிச்சைக்காரனுக்கு ஒரு அணா கொடுத்தேன். அவன் மிகவும் சந்தோஷப் பட்டவனாய் இன்னொரு பாட்டைப் பாட ஆரம்பித்தான்.

அந்த பாட்டு என்னவென்று நினைக்கிறீர்கள் ? சல்சல் ஜவான்! அந்தப் பாட்டைப் பாட ஆரம்பித்தவுடன் எனக்கு கோபத்தால் சிரிப்புவர், எனது நண்பரும் நகைத்துவிட்டார். இதைக் கண்ட அப்பிச்சைக்காரன், தான் பாடும் பாட்டை நாங்கள் மெச்சுவதாக எண்ணி அப்பாட்டை இன்னும் உரக்கப் பாட ஆரம்பித்தான். உடனே நான் அவனைத் தடுத்து ‘அப்பா அந்தப் பாட்டை பாடாமலிருப்பதற்காக உனக்கு 2 அணா கொடுக்கிறேன்’ என்று சொல்லி அப்படியே செய்து அவனை வந்த வழி அனுப்பிவிட்டேன்.

சுலபத்தில் இக்கஷ்டத்தினின்று நீங்கினோமே என்று சந்தோஷப் பட்டு, என் அதிதியை ஸ்நானம் செய்யச்சொல்லி பிறகு இருவருமாக போஜனம் கொண்டபின், மறுபடியும் மேல்மாடத்துக்குப் போய் இளைப்பாறச் செய்தேன். அங்கிருந்த என் ரேடியோ செட்டைக் கண்ட வுடன், எனது புதிய நண்பர் முகமலர்ந்து ‘உங்களுக்கு சங்கீதத்தில் இவ்வளவு பிரியம் இருக்கிறதென்று எனக்கு இதைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது’ என்று கூறி, அந்த ரேடியோவை முடுக்கும்படிக் கேட்டார். இதற்குள்ளாக ஒரு மணி ஆக அச்சமயம் திருச்சிராப் பள்ளியில் நல்ல சங்கீதம் கிடைக்கு மென்று எண்ணினவனாய் திருச்சி ரேடியோவுக்கு என் ரேடியோ பெட்டியை முடுக்கினேன்.

அன்றை தினம் ‘கதம்பம்’ என்றிருந்தது. அரைமணி சாவகாசம், கே.பி. சுந்தராம்பாள் பாட்டு. எஸ். ஜி. கிட்டப்பா பாட்டு முதலிய பாட்டுகளைக் கேட்டு என் நண்பர் மிகவும் ஆனந்தித்தார். “இப்படிப்பட்ட பாடகர்களுடைய பாடல்கள் கர்நாடகத்தி லிருக்கும் பொழுது, வடக்கத் திய நாடகப்பாட்டு….” என்று சொல்ல ஆரம்பித்தாரோ இல்லையோ, திருச்சிராப்பள்ளி ரேடியோவிலிருந்து “சல்சல் ஐவான்” பாட்டு ஆரம்பித்தது! அதன்பேரில் என் அதிதி ஒன்றும் கூறாததற்கு முன்பே, ரேடியோ பெட்டியின் விசையை மூடி பாட்டை நிறுத்தினேன், அவர் அதைக் கண்டு முதலில் புன்னகை செய்து பெருமூச்சு விட்டார்.

அதன் பிறகு “ரெயில் பிரயாணம் செய்த சிரமம் நீங்க, கொஞ்சம் சயனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறி, அப்படியே அவரைப் படுக்கச் செய்து, சாயங்காலம் நான்கு மணிக்கு எழுப்பினேன். பிறகு தேனீர் சாப்பிட்டுவிட்டு, ஓர் பிரபல சங்கீத சபையின் கச்சேரிக்கு 5 மணிக்கு அழைத்துச் சென்றேன்.

அச்சபையின் காரியதரிசிக்கு எனது புதிய நண்பர் இன்னாரெனத் தெரியப்படுத்தியவுடன் எங்களை, பாடிக் கொண்டிருந்த பிரபல சங்கீத வித்வான் அருகில் அழைத்துக் கொண்டுபோய் உட்காரவைத்தார். அச்சமயம் உள்ளூர் வித்வான் ‘மோகனா’ ராகத்தில் ஒரு பாட்டை பாடிக் கொண்டிருந்தார் வெகு அழகாக. எனது புதிய நண்பர், அவர், பாடியதை மிகவும் மெச்சி, இந்த ராகத்திற்கு கர்னாடகத்தில் என்ன பெயர் என்று கேட்க, நான் மோகனா என்று பதில் உரைத்தேன், ”இந்த ராகம் அழகியது, எங்கள் தேசத்தில் இதற்கு பூபாளி என்று பெயர்”, என்று கூறினார். உள்ளூர் வித்வான் பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி வினவ, நான் அதைத் தெரிவித்து “என் புதிய நண்பர் நீங்கள் பாடியதை மிகவும் மெச்சினார்” என்று சொல்லி, அவர் இன்னா ரென்றும் தெரிவித்தேன். அதை நான் சொல்லியதுதான் தாமதம், உடனே உள்ளூர் வித்வான், வடக்கிலிருந்து வந்தவரைக் கௌரவப் படுத்துவதாகவோ அல்லது தனக்கும் இந்துஸ்தானி சங்கீதம் தெரியும் என்று அவருக்கு அறியப்படுத்தவோ, உடனே ‘சல் சல் ஜவான்’ பாட்டைப் பாட ஆரம்பித்தார்.

உடனே என் புதிய நண்பர் முகம் மாறியதை பார்த்திருக்க வேண்டும்! வந்திருந்தவர்களில் யாராவது படம்பிடிக்கக் கற்றுக் கொண்டவர்களா யிருந்தால் உடனே. அவர் முகத்தை படம் பிடித்திருப்பார்கள். எனது புதிய நண்பர், நாடக மேடையில் நடித்திருப்பவரோ அல்லவோ எனக்குத் தெரியாது. ஆயினும் உடனே தன் கோணிய முகத்தை மாற்றிக் கொண்டு புன்னகை கொண்டவராய் ஏதோ தன் கடியாரத்தைப் பார்ப்பதுபோல் பார்த்து “முதலியார் சார்! நாம் வேறொரு இடத்திற்குப் போக நிச்சயித்திருப்பதை ஞாபகப்படுத்துகிறேன்” என்றார். ”அதைக் கேட்டதும் அவரது குறிப்பறிந்தவனாய், ”ஆம்; ஆம். நேரமாகிவிட்டது” என்று சொல்லி அவசரமாய், உள்ளூர் சங்கீத வித்வானிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு நாங்களிருவரும் சுச்சேரி சாலையினின்றும் வெளிக் கிளம்பினோம்.

இதை வாசிக்கும் நண்பர்கள் என்னை நம்பினாலும் நம்பட்டும் இல்லாவிட்டாலும் வேண்டாம், நாங்கள் இருவரும் என் காரில் ஏறி உட்கார்ந்ததும், எங்களிருவருக்கும் அடக்கக் கூடாதபடி சிரிப்பு வந்தது. பிறகு அங்கிருந்த எனது கண்பரை கடற்கரை ஓரம் அழைத் துச் சென்று, அவர் மனதைக் கொஞ்சம் குளிரச் செய்யலாமென்று எண்ணினவனாய், எனது (Chauffeur ) ஷாபரை மெரினாப்பக்கம் ஓட்டச் சொன்னேன். போகும் பொழுது வழியில் விக்டோரியா பப்ளிக் ஹாலைக் கடந்து செல்ல வேண்டி வந்தது. அக்கட்டடத்தைப் பார்த்து எனது புதிய நண்பர் இது என்ன வென்று கேட்க, இது விக்டோரியா பப்ளிக் ஹால் என்று பதில் சொன்னேன். அச் சமயம் உள்ளே ஒரே வெளிச்சமாயிருக்க அங்கு என்ன நடக்கிறதென்று கேட்ட கேள்விக்கு, அச்சமயம் உள்ளே வாலிய சபையார் எனது நாடகம் ஒன்றை அன்று நடித்துக் கொண்டிருப்தது எனக்கு ஞாபகம் வர, அதை அவருக்குத் தெரிவித்தேன். உடனே அவர் அதைத் தான் பார்க்கவேண்டு மென்று விருப்பமிருப்பதாகச் சொல்ல அவரை அழைத்துக் கொண்டு டவுன் ஹாலின் மெத்தைக்குப் போனேன்.

அந்த வாலிப சங்கத்தார் எங்களை மிகவும் சந்தோஷமாய் வரவேற்று முன்னால் உட்கார வைத்தார்கள். அப்பொழுது சுமார் 7-30-மணி இருக்கும் அரைமணி சாவகாசம் அவர் நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்து நாடகக் கதையின் போக்கை பற்றி ஏதோ புகழ்ந்து பேசினார், பாஷை தெரியாமலிருந்த போதிலும் கதையின் நடிப்பைக் கொண்டு அவர் கிரஹித்துக் கொண்டார் போலும் பிறகு ஓரு காட்சியில் கதா நாயகன் கதா நாயகியை ஒரு மலர்ச்சோலையில் சந்தித்து இருவரும் நிலவை வியந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது, கதா நாயகன் தனது காதலியை இச்சமயம், என் செவிகள் இன்பமடையும்படி உன் இனிய குரலினால் ஏதாவது பாடு” என்று வேண்டுகிறான்; உடனே கதாநாயகி சல் சல்- என்று பாட ஆரம்பித்தாள். அப்பாட்டின் மூன்றாவது பதம். அந்த நடிகையின் வாயினின்றும் வருமுன் தெய்வாதீனமாய் 8-மணி அடிக்கும் ஓசை கேட்டது.

உடனே இதுதான் சமயம் என்று “ஆஹா! 8-மணியாகிவிட்டது தாங்கள் வீட்டுக்குப்போய் சாப்பிட்டுவிட்டு ரெயில் ஏறி ராமேச்வரம் போக நேரமாய்விட்டது” என்று அவசரமாய்க் கூறி அவர் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு போகாத குறையாய் வெளியில் அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன். நான் திடீர் என்று எழுந்திருக்கவே, கதா நாயகியாக நடித்த நடிகனும், பக்க வாத்தியக்காரர்களும், பாட்டை திடீரென்று நிறுத்திவீட்டார்கள். எனது புதிய நண்பர், அந்தப் பாட்டு ஆரம்பிக்கப்பட்டதைக் கேட்டாரோ இல்லையோ, நான் என்ன காரணம் பற்றி அவரை திடீரென்று வெளியே அழைத்துக் கொண்டு வந்து விட்டேன் என்பதைத் தெரிந்துகொண்டாரோ என் னவோ, இன்றளவும் எனக்கு சந்தேகமாகத்தானிருக்கிறது.

சீக்கிரம் வீட்டிற்குப் போய் அவருக்கு போஜனம் அளித்து, பிறகு அவரை அன்றிரவு, எழும்பூர் ரெயில் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டுபோய் ரெயில் ஏற்றிவிட்டு வந்தபிறகுதான் அன்றிரவு தூங்கினேன். அன்று என் நித்திரையில் கூட அப்பாட்டைக் கேட்டேனோ என்னமோ நான் வாஸ்தவமாய்ச் சொல்லமுடியாது.

இரண்டு நாள் பொறுத்து எனது புதிய நண்பர் ராமேச்வரத்தி லிருந்து எனக்கு எழுதிய கடிதத்தில் நான் பட்டணத்தில் தன்னை வர வேற்றதற்காக வந்தனம் கூறிவிட்டு, கடைசியில் கர்நாடக சங்கீதத்தைப் பற்றி சில வரிகள் எழுதியிருந்தார். அதை மாத்திரம் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

“ஒவ்வொரு சங்கீத வித்வானும் தான் அறிந்த பாஷையில் பாடுவதுதான் தகுதி. இதர பாஷைப் பாட்டுக்களைப் பாட வேண்டுமென்று விருப்பயிருந்தால், அப் பாஷையைக் கற்று, பாடும் பாட்டுகளின் அர்த்தத்தை அறிந்த பிறகே பாடுதல் நல மென்று தோன்றுகிறது.’

எனது புதிய நண்பர் எனக்கு தெரிவித்த இந்த உண்மையை நான் நமது நாட்டு சங்கீத வித்வான்களுக்கும் சங்கீதப் பிரியர்களுக் கும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *