பலவகை பூங்கொத்து
பம்மல் சம்பந்த முதலியார்

தாரக மந்திரம்

(என் தாயார் எனக்கு சொன்ன கட்டு கதை)


ஒரே ஒரு காட்டிலே ஒரு ரிஷி இருந்தார், அவருக்கு அநேக வருஷமாக ஒரு சிஷ்யர் பணிவிடை செய்து வந்தார், குரு சிஷ்யருக்கு எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். ஆனாலும் தாரக மந்திரம் அதாவது மோட்சத்தை கொடுக்கும் மந்திரம் மாத்திரம் சொல்லவில்லை, அந்த மந்திரத்தை சிஷ்யராக கேட்டு தெரிந்து கொள்ள கூடாது. குருவாக பார்த்து சந்தோஷப்பட்டு உபதேசம் செய்தால்தான் அது பலிக்கும், சிஷ்யர் பாவம் எப்போது குரு உபதேசம் செய்வாரோ என்று காத்திருந்தார். வெகு காலம் சென்று ஒரு நாள் குருவானவர், சிஷ்யரை அழைத்து “அப்பா, நான் மோட்சம் அடையும் காலம் நெருங்கி விட்டது, இன்றைக்கு உனக்கு நான் தாரக மந்திரம் உபதேசிக்கப் போகிறேன்.

சீக்கிரம் போய் அதோ இருக்கும் குளத்தில் குளித்துவிட்டு பரிசுத்தனாக வா” என்று சொன்னார் உடனே சிஷ்யர் விரைந்து போனார். அவர் திரும்பி வருமுன் குரு தன் பிராணன் போய்விடும் என்று அறிந்தவராய் தன் அருகில் இருந்த மணலை பரப்பி அதன் பேரில் அம் மந்திரத்தை எழுதிவிட்டு உயிர் நீத்தார், அச்சமயத்தில் அருகாமையில் போய்க் கொண்டிருந்த ஒரு தொம்பரவச்சி இதை பார்த்தவளாய்; தன் காதில் அணிந்திருந்த ஓலையைச் சீக்கிரம் எடுத்து மணலில் எழுதி இருந்த எழுத்துக்களை தன் நகத்தால் அப்படியே எழுதிக்கொண்டு ஓலையை காதில் அணிந்து கொண்டு மணலில் எழுதி இருந்ததை கையால் அழித்து விட்டாள்.

தூரத்தில் குளித்துக் கொண்டிருந்த சிஷ்யர் இதையெல்லாம் ஒருவாறு பார்த்திருந்து ஓடோடியும் வந்தார். இதற்குள்ளாக குரு எழுதியதை அழித்து விட்டதைக் கண்டார், மிகவும் துக்கப்பட்டார்; என்ன செய்வார் பாவம் ! பிறகு குருவின் உடலை தகனம் செய்து விட்டு அந்த தொம்பரவச்சி இருக்கும் இடத்தைத் தேடி சென்று அக்கூட்ட தலைவனிடம் தன்னையும் ஒரு வேலையாளாக சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினார், அக் கூட்டத்தில் இருந்து கொண்டு தொம்பரவச்சி சொன்ன வேலைகளை யெல்லாம் மிகவும் பணிவுடன் செய்து வந்தார் – அவளை திருப்தி செய்வதற்காக; இப்படி பல நாட்கள் கழிந்தன, தொம்பரவச்சியாக சந்தோஷப்பட்டு அவள் காதில் அணிந்த ஓலையில் எழுதி இருந்த மந்திரத்தை அவளாக சொல்வாள் என்று எதிர்பார்த்திருந்தார். அவள் சொல்லவே இல்லை, “ஏதாவது நல்ல சமயம் வருமா” என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் சிஷ்யர்.

பிறகு ஒரு நாள் திடீரென்று பக்கத்தில் இருந்த ஒரு அரசருடைய முக்கிய பட்டணத்தை போய் ‘தொம்பரவ கூட்டம்’ சேர்ந்தது, பிறகு தொம்பரத் தலைவன் அரசரிடம் போய், தன் வித்தைகளை யெல்லாம் காட்ட விரும்பினான் ; அரசரும் அதற்கு இசைந்து மறுநாள் அந்த வித்தைகளை பார்ப்பதாக ஒப்புக் கொண்டார் பிறகு மந்திரியை அழைத்து அக் கூட்டத்தார்க்கெல்லாம் அரண்மனையில் சாப்பாடு போடும்படி சொன்னார்.

அந்த அரசருடைய அரண்மனையில் ஒரு ஆராய்ச்சி மணிகட்டி இருந்தது, அந்த மணியின் பெருமை என்னவென்றால் அரண் மனைக்குள் மகான்கள் யாராவது சாப்பிட்டால் தானாக இவை கண கணவென்று அடிக்கும் அன்றைத் தினம் தொம்பர கூட்டம் சாப்பிடும் போது வழக்கம்போல் நாலைந்து தரம் அடிக்கும் மணி கால் நாழிகை விடாது கணகண வென்று அடித்தது, இதை கேட்டு ஆச்சர்யப்பட்டு அரசர் மந்திரியை அழைத்து “யாரோ ஒரு பெரிய மகான் வந்திருக்கிறார் போலிருக்கிறது, அது யாரென்று சீக்கிரம் தெரிந்துவா” என்று அனுப்பினார், மந்திரி அப்படியே அந்த பெரிய அரண்மனைக்குள் யார் யார் புதிதாக வந்தார்கள் என்று விசாரித்துக் கொண்டு வந்தான்.

அவர்களுள் ஒருவரும் மகானாக காணப்படவில்லை, கடைசியில் தொம்பரக் கூட்டம் இருக்கும் இடத்திற்கு போய் சேர்ந்தான். அவர்களை ஒவ்வொருவராய் பார்த்துக் கொண்டு வரும்போது நம்முடைய சிஷ்யரைக் கண்டவுடன் இவர் தொம்பரவனாக காணப்படவில்லை என்று சந்தேகப்பட்டு அவரிடம் போய் அவரை ஒரு புறமாக அழைத்துச் சென்று இரகசியமாய் “ஐயா, உங்கள் முகத்தைப் பார்த்தால் நீங்கள் இந்த தொம்பர கூட்டத்தை சேர்ந்தவர் அன்று என்று தெரிகிறது. உங்கள் முகத்தின் தேஜஸினால் நீங்கள் ஒரு மகானாக காணப்படுகிறீர். நீங்கள் இக் கூட்டத்தில் ஏன் வந்து சேர்ந்தீர் என்று எனக்கு தயவுசெய்து சொல்லவேண்டும் என்று கேட்டான்.

அதன்பேரில் அந்த சிஷ்யர் தன் சமாசாரத்தையெல்லாம் சவிஸ்தாரமாக கூறி நாளை தினம் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று காதில் எதோ இரகசிமாய் சொன்னார்; மந்திரியும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி விட்டு அரசரிடம் போய் எல்லாவற்றையும் தெரிவித்தான்.

மறுநாள் அரசர் காலை சிற்றுண்டி அருந்தி விட்டு தன் பரிவாரங்களுடன் உட்கார்ந்து கொண்டு தொம்பரவர்களை அழைத்து அவர்கள் விததையை எல்லாம் காட்டச் சொன்னார், அவர்களும் ஒவ்வொன்றாய் தங்கள் வித்தைகளை காட்டிக் கொண்டு வந்தார்கள், கடைசியில் தொம்பரவச்சி கெடை கட்டி அதன் மேலிருந்து ஆட ஆரம்பித்தாள். அவள் ஆடும்பொழுது கால், கை, கழுத்து, காது, மூக்கு முதலிய அவயவங்களில் பல வர்ணமான மணிகளால் ஆகிய ஆபரணங்களையும் காதில் ஓலையும் அணிந்திருந்தாள் கம்பத்தின் கீழ் இருந்த நமது சிஷ்யர் வெள்ளி, பொன்னால் ஆகிய ஆபரணங்களை அருகில் இருந்த மந்திரி கொடுக்க ஒவ்வொன்றாக மேலே எறிந்து கொண்டு வந்தார், தொம் பரவச்சி ஆடிக் கொண்டே ஒவ்வொன்றாய் பிடித்து, தான் அணிந்திருந்த அற்ப ஆபரணங்களை கழட்டிவிட்டு சிஷ்யர் எறிந்த விலையுயர்ந்த ஆபரணங்களை போட்டுக் கொண்டே கெடையில் மிகுந்த சாதுர்யமாக ஆடிக் கொண்டிருந்தாள்; கடைசியாக சிஷ்யர் ரத்தினங்கள் பதித்த கம்மலை எறிய அதை பார்த்தவுடன் மிகுந்த சந்தோஷப்பட்டு தன் காதில் இருந்த ஓலை சுருள்களை கீழே எறிந்து விட்டு ரத்தின கம்மல்களை போட்டுக் கொண்டாள்; கீழே இருந்த சிஷ்யர் அக் காதோலைகள் தரையில் விழாமல் கைகளால் பிடித்துக் கொண்டு உடனே அதில் ஒன்றை பிரித்து பார்த்து அவ்வோலையை கண்களில் ஒற்றிக் கொண்டு தொம்பரவச்சிக்கும் மந்திரிக்கும் அரசருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு சரேலென்று சந்நியாசிகள் செய்ய வேண்டிய பூபிரதட்சணத்திற்காக புறப்பட்டுவிட்டார்.

மந்திரியானவன் தான் அறிந்த விர்த்தாந்தத்தை யெல்லாம் அரசருக்கு தெரிவித்தான், அரசர் ஆச்சர்யப்பட்டு சந்தோஷப்பட்டார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *