
பலவகை பூங்கொத்து
பம்மல் சம்பந்த முதலியார்
குரு சிஷ்ய சம்வாதம்
(மானசீகம்)
1. சிஷ்யன் குருவை பார்த்து ஒரு முறை சுவாமி சிலர் தெய்வமே இல்லை யென்கிறார்களே, அவர்களுக்கு நாம் எப்படி புத்தி புகட்டுவது என்று கேட்டான் அதற்கு குருவானவர் அப்பா என் சிறு வயதில் இதைப் பற்றி நடந்த ஒரு சமாசாரத்தைச் சொல்கிறேன் கேள் ஒருமுறை ஒருவன் என்னிடம் வந்து” நான் உங்களுடன் ஒரு வாக்கு வாதம் செய்ய விரும்புகிறேன்: நான் தெய்வம் என்று ஒன்று இல்லை யென்று சொல்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? என்று கேட்டான். அதற்கு நான் ஐயா தெய்வம் என்று ஒன்று இல்லை என்கிறீர்களே, என்ன இல்லையென்கிறீர்கள். இன்று இல்லை என்று சொல்லுமுன் இல்லாதது என்ன, எப்படிப்பட்டது என்று தெரிய வேண்டாமா? ஆகவே, உங்கள் அபிப்பிராயத்தில் தெய்வம் என்பதற்கு என்ன அர்த்தம் ? இதை முதலில் தெரிந்துக் கொண்டால் பிறகு நாம் இதைப்பற்றி வாக்கு வாதம் செய்யலாம் என்று பதில் உரைத்தேன். உடனே அவன் கோபம் கொண்டு போய்விட்டான், நீயும் யாராவது உன்னைக் கேட்டால் இம்மாதிரி பதில் சொல்’ என்று பதில் கூறினார்.
2. சிஷ்யன் ஒரு நாள் குருவை பார்த்து “சுவாமி நான் ஒருவருக்கும் கெடுதி செய்வதில்லை, உங்கள் கட்டளைப்படி மற்றவர்கள் ஏன் எனக்கு கெடுதி செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு குருவானவர் இந்த கேள்விக்கு பதில் சொல்லுவதை விட நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன்–நீ யாருக்கு என்ன நன்மை செய்தாய்? அவர்கள் உனக்கு நன்மை செய்ய ? இதை யோசித்து பார்” என்று பதில் சொல்லி அனுப்பினார்,
3. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து சிஷ்யன் குருவண்டை போய் “சுவாமி கர்மா, கர்மா என்று சொல்கிறீர்களே, இந்த கர்மா முதலில் என்னமாக உண்டாயிற்று” என்று கேட்டான். அதற்கு அவர் “உன் கேள்விக்கு பதிலாக, நரன் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன்; அதற்கு பதில் உனக்கு தெரியுமாயின் உன் கேள்விக்கு பதிலும் தெரியும் உனக்கு ; அக்கேள்வி என்ன வென்றால் – மரம் இல்லாமல் விதையுண்டாகாது, விதையில்லாமல் மரம் உண்டாகாது, இரண்டில் எது முதலில் உண்டாயிற்று, யோசித்துப் பார் என்றார்.
4. கொஞ்ச நாள் பொறுத்து சிஷ்யன் குருவை அணுகி “சுவாமி நீங்கள் சொன்னபடியே அநேகருக்கு என்னால் இயன்ற அளவு உபகாரம் செய்து வருகிறேன், அப்படி இருந்தும் சிலர் எனக்கு அபகாரம் செய்கிறார்கள் இது என் என்று கேட்க குருவானவர் “அப்பா இந்த கேள்விக்குப் பதில் நம்முடைய ஹிந்து மதத்தில் தான் உளது. அப்படி உனக்கு ஏதாவது கெடுதி நேரிட்டால், அது பூர்வ ஜன்ம கர்மபலன் என்று எண்ணி, முன் ஜென்மத்தில் நாம் செய்த பாபம் இப்பொழுது இப்படி நேர்ந்தது -ஆகவே இத்துடன் அந்த பாபம் ஒழிந்தது, என்று நினைத்து சந்தோஷப்படு” என்றார்.
5. ஒரு நாள் குருவிற்கும் சிஷ்யனுக்கும் மனிதன் ஜீவ்ய காலத்தைப்பற்றி சம்பாஷணைவந்தபோது சிஷ்யன் குருவை நோக்கி ஸ்வாமி நீங்கள் இவ்வுலகில் எத்தனை காலம் உயிருடன் இருக்க விரும்புகிறீர்! என்று கேட்ட போது, அவர் அப்பா ! இவ்வுலகத்திற்கு நான் ஏதாவது தொண்டு செய்யும் சக்தி எனக்குள்ளளவும், உயிருடன் இருக்க விரும்புகிறேன். அச்சக்தி யெல்லாம் நீங்கின உடன் ஈஸ்வரன் என்னை அழைத்துக் கொள்வார்! என்று பதில் உரைத்தார்.
6. ஒரு வெள்ளிக்கிழமை குருவானவர் சிஷ்யனை ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு திரும்பினார். திரும்பி வீட்டிற்கு வரும் போது சிஷ்யன் குருவைப் பார்த்து ஸ்வாமி கோயிலுக்குள் இருந்த பொழுது உங்களுக்குத் தெரிந்தவர்கள் பலர் உங்களைக் கண்டு வணங்கினார்களே அவர்களிடம் ஒரு வார்த்தையும் நீங்கள் பேசவில்லையே, அதற்குக் காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு குருவானவர் அப்பா கோயிலுக்கு போனது சுவாமி தரிசினம் செய்யவா, அல்லது நமக்குத் தெரிந்தவர்களுடன் பேசவா, என்று பதில் உரைத்தார்.
7. “சுவாமி ஒருவன் இவ்வுலகில் நல்லவன் என்று பெயர் எடுப் பது மேலா? அல்லது கெட்டிக்காரன் என்று பெயர் எடுப்பது மேலா? என்று கேட்க, குருவானவர் தம்பி, இவ்வுலகில் ஒருவன் நல்லவன் என்று பெயர் எடுப்பதில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுப்பதே மேல் என்று விடை கொடுத்தார்.
8. சிஷ்யன் குருவுடன் ஒரு கலியாணத்துக்கு போய் திரும்பும் போது ஸ்வாமி அநேக பேர் கலியாணம் முதலிய சடங்குகளில் ஆசீர்வாதம் செய்கிறார்களே, “இதனால் ஏதாவது உண்மையில் பிரயோஜனம் உண்டா?” என்று கேட்டான் அதற்கு குருவானவர் “அப்பா ஆயிரம் பேர் ஒருவனை ஆசீர்வதித்தால். அவர்களுள் யாராவது ஒருவன் உத்தம புருஷனாய் இருந்தால், அவன் வாக்கு பலிக்குமல்லவா, அதற்காகத்தான் பல பெரியவர்களின் ஆசீர்வாதத்தை மனிதன் விரும்புவது ” என்று விடை பகர்ந்தார்,
9. ” இல்லறம் மேலா அல்லது துறவறம் மேலா” என்று ஒரு முறை சிஷ்யன் கேட்க குருவானவர் “அப்பா எந்த ஆஸ்ரமத்தில் இருந்த போதிலும் ஒருவன் அந்த ஆஸ்ரமத்தின் விதிப்படி நடந்து வருவாயின் அது மேலாகும் அதைக் கொண்டு முக்தி அடையலாம். திருவள்ளுவர் அறத்தாற்றில் இல்வாழ்க்கை ஆற்றில் புறத்தாற்றிற் போய் பெருவது எவன் என்று கூறி இருப்பதையும் நீ படித்திருக்கிறாய் அல்லவா என்று கூறிமுடித்தார்.
10. ஒரு நாள் சிஷ்யன் குருவிடம் போய் “ஸ்வாமி கோபத்தை அடக்க வேண்டும், என்று எனக்கு பலதரம் சொல்லியிருக்கிறீர்கள்; ஆயினும் என்னால் அதை அடக்க முடியவில்லையே, இதற்கு என்ன செய்வது நான் என்று கேட்டான். குருவானவர் அப்பா நான் இதற்கு ஒரு யுக்தி சொல்லிக் கொடுக்கிறேன், அதன்படி முயன்று பார் அதாவது, கோபம் வந்த உடனே, யாதும் உமது செயல் என்று ஏழு தரம் சொல்லிவிட்டு பிறகு அந்த கோபம் இருந்தால் உன் இஷ்டப்படிச் செய், நீ ராமாயணம் படிக்கிறாயே அதில் ஆஞ்சனேயர் கோபத்தால் இலங்கையை கொளுத்திய பிறகு, அடடா ! என்ன தப்பிதம் செய்தோம் இலங்கையை கொளுத்திய போதே சீதா தேவியையும் கொளுத்தி இருப்போமே!’ என்று வருந்துகிறார் அந்த கட்டத்தை மறுபடியும் படித்துப் பார் என்று உபதேசித்தார்.
11. ஒருநாள் சிஷ்யன் தன்குருவைப் பார்த்து – சுவாமி தங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், கேட்க எனக்கு உத்திரவு கொடுங்கள் என்றான் குருவானவர் “அப்பா என்ன வேண்டு மென்றாலும் நீ கேட்கலாம் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்கிறேன் இல்லா விட்டால் எனக்கு தெரியாது என்று சொல்லி விடுகிறேன், பயமில்லாமல் கேள் என்றார், அதன் பேரில் சிஷ்யன் “சுவாமி எல்லோரும் இந்துக்களாயிற்றே நீங்கள் மாதா கோவில்களை பார்க்கும் பொழுதும், மசூதிகளை பார்க்கும் பொழுதும், கையெடுத்து கும்பிடுகிறீர்களே, அது ஏன் அப்படி?” என்று கேட்டான். அதன் பேரில் குருவானவர் “அப்பா உன் கேள்விக்கு நான் பதில் சொல்லுகிறேன், அதன் முன் நான் உன்னை ஒரு கேள்வி கேட்பேன் நீ பதில் சொல் என்று சொல்லி, ‘சுவாமியானவர் எங்கே இருக்கிறார் சொல் என்று கேட்க, சிஷ்யன் பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்களே என்றான் குருவானர் ‘அதை நீ நம்புவதானால் அந்த பரம் பொருள் மாதா கோயில்களில் இல்லையோ மஹம்மதியர் தொழும் மசூதிகளில் இல்லையோ நீ சின்ன வயதின் போது ஒளவையார் கதை ஒன்றைக் கேட்டதில்லையா? ஒளவையார் ஒரு நாள் சுவாமி கோயிலுக்கு எதிரில் தன்கால்களை நீட்டிப் படுத்தார்களாம் அப்போது அங்கிருந்தவர் ‘என்ன அம்மா சுவாமியிருக்கிற இடத்துக்கு எதிரில் காலை நீட்டி படுக்கலாமா என்று கோபித்துக் கேட்டார்களாம், அதற்கு ஔவை ; ஐய்யா, கோபிக்காதீர்கள், சுவாமி இல்லாத இடத்தைக் காட்டுங்கள் அந்தப் பக்கம் என் காலை நீட்டிப் படுத்துக் கொள்கிறேன்” என்று பதில் சொன்னார்களாம். இப்பொழுது தெரிகிறதா நான் கூறியதின் அர்த்தம் என்று பதில் சொல்லி சிஷ்யனுக்கு புத்தி கற்பித்தார் குருவானவர்
12.ஒரு நாள் குருவும் சிஷ்யனும் இரயிலில் ஏறி காலை முதல் சாயங்காலம் வரையில் பிரயாணம் செய்து விட்டு ஒரு ஓட்டலுக்குப் போய் சாப்பிட உட்கார்ந்தார்கள், அப்பொழுது சிஷ்யன் சுவாமி இன்றைக்கு குளித்து பூஜை செய்யாமல் சாப்பிடுகிறோமே! இதற்கு என்ன செய்வது என்று கேட்டான் அதற்கு அவர் பின் வருமாறு விடை பகர்ந்தார், “அப்பா இரயில் இருக்கும்போதே ஸ்நானமும் பூஜையும் முடித்துக் கொண்டேன் – மானசீகமாய், நீ மஹாபாரதத்தில் படித்ததில்லையா ?– அந்த கதையை சொல்கிறேன்; அர்ஜுனன் தான் தான் பெரிய சிவபூஜை செய்கிறதாக கர்வம் கொண்டிருந்தான். அதை அடக்க வேண்டும் என்று கிருஷ்ணபகவான் அர்ஜுனனை அழைத்துக் கொண்டு கைலாயத்துக்கு போகும் வழியில் சிவகணங்கள் எல்லாம் பெரிய கூடைகளில் புஷ்பங்களை எடுத்துக் கொண்டு எதிரில் வருவதை பார்க்கச் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணன் அப்பூதங்களை இந்த புஷ்பங்கள் எல்லாம் ஏது என்று கேட்க அப்பூதங்கள் “என்ன ஸ்வாமி பூலோகத்தில் பீமன் என்ற ஒருவன் மானசீகமாக கூடை கூடையாய் புஷ்பங்களால் சிவ பெருமானைப் பூஜிக்கிறான் அப் புஷ்பங்களை தினமும் களைந்து விடுவதே எங்களுக்கு பெரிய கஷ்டமாய் போயிற்று’ என்று பதில் உரைத்தன, அர்ஜூனன் கர்வம் அடங்கிற்று, மானசீக பூஜை என்றால் இன்னதென்று தெரிந்துக் கொண்டான். இப்போது நீயும் தெரிந்துக் கொண்டாய் அல்லவா’ என்று கூறி முடித்தார்.
13. ஒரு முறை குருவும் சிஷ்யனும் சாயங்காலம் கோயிலுக்குப் போய் அங்கு நடக்கும் சாயங்கால தீபாராதனையை பார்த்துவிட்டு திரும்பினார்கள். வீட்டுக்கு போகிற வழியில் சிஷ்யன் குருவைப் பார்த்து “ஸ்வாமி, கடவுள்தானே நமக்கு எல்லாப் பொருள்களையும் கொடுக்கிறார், அவருக்கே அவர் கொடுக்கும் பொருள்களையே நைவேத்யம் செய்வதில் என்ன அர்த்தம்? என்று கேட்டான் குருவானவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை உடனே, கொஞ்சம் தூரம் வழியில் ஓர் மிட்டாய் கடையண்டை வரும்போது குரு சிஷ்யனை கொஞ்சம் மிட்டாய் வாங்கிக்கொண்டு வரும்படி சொன்னார்; சிஷ்யன் உங்களுக்கு என்ன மிட்டாய் வேண்டும்? என்று கேட்க குரு “எனக்கல்ல நான் மிட்டாய் சாப்பிடுவதில்லை, நீ வாங்கிக்கொண்டு வா! என்று ஆக்ஞாபிக்க சிஷ்யன் எட்டணாவுக்கு பூந்தி லட்டு வாங்கிக்கொண்டு வந்தான் சிஷ்யன் வீட்டிற்கு இருவரும் போனவுடன் குரு “அப்பா உன் பெரிய குழந்தையைக் கூப்பிட்டு அவனிடம் இந்த மிட்டாயைக் கொடுத்து குழந்தைகளை யெல்லாம் சாப்பிடச்சொல்” என்றார் சிஷ்யன் அப்படியே செய்ய அப்பெரிய குழந்தை தன் தம்பிக்கும் தங்கைக்கும் லட்டில் கொஞ்சம் கொடுத்துவிட்டு பெரியவரிடம் வந்து “தாத்தா நீங்கள் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா” என்று கேட்க குரு “எனக்கு வேண்டாம் அப்பா நீ கேட்டியே அதுவே போதும் எனக்கு” என்று சொன்னார், கடைசியில் அக்குழந்தை தன் தகப்பனாரிடம் போய் “அப்பா நீங்கள் கொஞ்சம் சாப்பிடுங்கள் மிகவும் நன்றாய் இருக்கிறது” என்று தகப்பன் கையில் கொடுக்க சிஷ்யன் அதை வாங்கி மிகவும் சந்தோஷத்துடன் புசித்தான். அப்பொழுது குருவானவர் “நீ கேட்ட கேள்விக்குப் பதில் இப்போது கிடைத்ததா” என்று சிஷ்யனைக் கேட்க சிஷ்யன் ஸ்வாமி பதிலும் கிடைத்தது புத்தியும் வந்தது என்று பதில் உரைத்தான்.
14. ஒருநாள் ஏதோ ஒரு கஷ்டத்துக்கு உட்பட்ட சிஷ்யனானவன் சுவாமி, கருணைக் கடவுள் மனிதனுக்கு ஏன் கஷ்டத்தை அடிக்கடி அனுப்புகிறார் ? என்று கேட்டான் அதற்கு குருவானவர் இதற்கு பதில் ஒரு விதத்தில் கூறுகிறேன். சந்தோஷமாய் இருக்கும் போது எத்தனை பேர் கடவுளைப் பற்றி நினைக்கிறார்கள் ? ஆயிரத்தில் ஒருவன் கூட இருக்க மாட்டான் அல்லவா? சாதாரண மனிதன் கஷ்டம் வந்தால் தானே கடவுளைப்பற்றி நினைக்கிறான். இதற்காக இருக்கலாம் ஒரு வேளை, நீ மஹாபாரதத்தில் குந்தி தேவியின் வாக்கியத்தை கேட்டதில்லையா? ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவர்களிட மிருந்து தன் ஊருக்கு போக விடை கேட்கும் போது ‘அத்தை, உனக்கு என்ன வேண்டும் சொல்’ என்றாராம், இதற்கு குந்தி ‘கிருஷ்ணா எனக்கு மேலும் மேலும் கஷ்டமே வர வேண்டும் ! என்றார்களாம்’ அதன் பேரில் கிருஷ்ணன் ‘என்ன அத்தை ! எல்லோரும் நன்மை வர வேண்டும் என்று கோருகிறார்களே, நீ மாத்திரம் இப்படி கேட் கின்றாயே என்று கேட்க ‘குந்தி’ கிருஷ்ணா மேலும் மேலும் கஷ்டங்கள் வந்தால் தான் உன்னை நான் அடிக்கடி நினைத்துக் கொண்டிருப்பேன்’ என்று பதில் தந்தார்களாம்.
15. ஒரு நாள் குருவானவர் சிஷ்யனைப் பார்த்து “அப்பா இனி நீ கல்யாணம் செய்து கொண்டு கிரகஸ்த ஆஸ்சிரமத்தை மேற் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட சிஷ்யன் வருத்தத்துடன் “என்ன ஸ்வாமி இத்தனை வருடங்களாக உங்களுடன் பழகி துறவறத்தின் தூய்மையை அறிந்த பிறகு என்னை இல்லறத்தை மேற் கொள்ளச் சொல்லுகிறீர்களே ” என்று கேட்டான். அதற்கு குருவானவர் “அப்பா அப்படி அல்ல நமது முன்னோர்கள் மிகுந்த புத்தி கூர்மையில் ஒருவன் இன்னின்ன வயதில் இன்னின்ன ஆஸ்ரமத்தை கைப்பற்றி ஒழுகவேண்டும்” என்று கூறியிருக்கிறார்கள் சிறு வயதில் ஒருவன் பிரம்மச்சாரி ஆஸ்ரமத்தில் கற்க வேண்டியவைகளை யெல்லாம் கற்றபின் தக்கப் பருவத்தில் கிரகஸ்த ஆஸ்ரமத்தை கைப்பற்ற வேண்டும் என்றும் அதன் பிறகு நடுவயதானவுடன் முதிர்வயதாரம்பத்தில் வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கடைசியில் என்னைப் போல் வயது முதிர்ந்தவுடன் சன்யாசத்தை அடைய வேண்டும் என்றும் விதித்திருக் கிறார்கள் என்று கூறி முடித்தார்.
16. சிஷ்யன் ஒரு நாள் குருவைப் பார்த்து “சுவாமி உலகத்திற் கெல்லாம் நம்மாலியன்ற அளவு உபகாரம் செய்ய வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறீர்களே – ஏழைகளாகிய நம்மால் உலகத்திற்கு என்ன உபகாரம் செய்ய முடியும் என்று கேட்டான். குருவானவர் அச்சமயம் அக்கேள்விக்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. மறுநாள் குருவான வர் சிஷ்யனை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் ஊருக்குப் பிரயாணம் போகும் படி நேரிட்டது அப்படி இருவருமாகப் போய்க் கொண்டிருக்கும் போது, வழியில் ஒருத்தி மாம்பழம் விற்கும் கூடையிலிருந்து ஒரு பழம் கீழே நழுவி விழுந்து விட்டது. தலை மீது கூடையை வைத்துக் கொண்டிருந்த அக்கிழவி குனிந்து அப்பழத்தை எடுக்க முடியாததால் இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். உடனே இதைக் கண்ட குருவானவர் அப்பழத்தை எடுத்து அவள் கூடையில் வைத்தார். வேகமாய்ப் போய்க் கொண்டிருந்த இவர்கள் கொஞ்ச தூரம் சென்றபின் சிஷ்யன் குருவைப் பார்த்து, “சுவாமி, நான் அதை செய்திருக்க வேண்டும், அப்பொழுது அது எனக்கு மனதில் தோன்றாமற் போச்சுது-ஆயினும் அக்கிழவி இதற்காக உமக்கு ஒரு நல்வார்த்தையாவது கூறியிருக்கலாகாதா ?” என்று கேட்டான். குருவானவர் அதற்கு அப்பா அவள் சொல்லாமற் போனால் போகிறது அவள் முகத்தை அச்சமயம் உற்று பார்த்தாயா என்று கேட்க, “பார்த்தேன் சுவாமி, சந்தோஷமாகத்தான் போனாள் என்றான். இன்னும் கொஞ்ச தூரம் போனபின், பாதையில் ஒரு புறம் சிறு பையன் அழுது கொண்டிருந்தான். அதைக் கண்ட தும் குருவானவர் அப்பா அப்பையன் ஏன் அழுகிறான் விசாரித்து வா, என்று அனுப்பினார் சிஷ்யன் போய் விசாரித்து விட்டுத் திரும்பி வந்து வேறொன்றுமில்லை சுவாமி, அப்பையன் கையில் வைத்திருந்த ஒரு பைசா எங்கோயோ விழுந்து விட்டது என்று அழுது கொண்டிருந்தான். நான் சுற்றி பார்த்து அங்கு ஒரு பொந்தில் விழுந்திருந்த அப்பைசாவை அவனிடம் கொடுத்துவிட்டு வந்தேன்” என்றான். குருவானவர் மிகவும் சந்தோஷம், நல்ல வேலை செய்தாய் அப்பையன் அதற்காக உனக்கு ஏதாவது வந்தனம் செய்தானா? என்று கேட்க, அவன் ஒன்றும் சொல்லவில்லை, அழுகையை நிறுத்தி விட்டு, ‘சிரித் துக்கொண்டு, ஓடிப்போய் விட்டான்.’ என்று சிஷ்யன் பதில் சொன்னான். அப்போது, குருவானவர் அப்பா நேற்று, இவ்வுலகத் தில் பணக்காரர்களும், உயர்ந்த பதவியிலிருப்பவர்களும் தான் உலகத் திற்கு உபகாரம் செய்ய முடியும். ஏழைகளாகிய நம்மால் என்ன செய்ய முடியும் என்று சந்தேகப் பட்டாயே அதற்கு பதில் இதுதான் என்றார்.
17. சுவாமி, உத்தம புருஷன் என்று நீங்கள் சில சமயங் களில் கூறியிருக்கிறீர்கள், அந்த உத்தம புருஷன் எப்படிப் பட்டவனாய் இருப்பான் என்று தயவு செய்து தெரிவிக்க வேண்டும் என்று ஒரு நாள் சிஷ்யன் கேட்க, குரு இவ்வாறு பதில் சொன்னார்; “உத்தம புருஷன் என்றால் நல் அறிவும், நற்குணமும், நன் நடக்கையும் நிறைந்தவனாய் இருக்கவேண்டும்; ஒரு உத்தம புருஷனை பல விதமாக வர்ணிக்கலாம். ஒரு உதாரணம் கூறுகிறேன் கேள் – பழங்காலத்து பெரியார் ஒருவர் மனிதர்களை மூன்று விதமாக பிரித்திருக்கிறார். (1) எவன் ஒருவன் மற்றவர்கள் கெட்டு தான் மாத்திரம் வாழ வேண்டு மென்று நினைக்கிறானோ அவன் அதமனாவன். (2) எவன் ஒருவன் மற்றவர்களும் வாழ வேண்டும் தானும் வாழ வேண்டும் என எண்ணுகிறானோ அவன் மத்தியமன். (3) எவன் ஒருவன் நமக்கு கேடு வந்தாலும் வரட்டும் மற்றவர்களாவது நன்றாக வாழட்டும் என்று எண்ணுகிறானோ அவன்தான் உத்தமன் நீ உத்தம புருஷனுடைய எல்லா குணங்களையும் அறிய வேண்டும் என்று விரும்பினால் வால்மீகி ராமாயணத்தை எடுத்து ஸ்ரீராமருடைய குணாதிசயங்களை நன்றாய் கவனிததுப் பார்” என்றார்.
18. சிஷ்யன் பெரியவனாகி, குருவின் ஆக்கினைப்படி கலியாணம் செய்து கொண்டு, இல்லறம் நடத்தலானான் அப்படி அவன் நடத்தும் காலத்தில் குருவானவர், அவர் வழக்கப்படி சிஷ்யன் பிறந்த நாளில், சிஷ்யன் வீட்டிற்கு உணவு கொள்ள வந்தார். வந்தவரை உபசரித்து போஜனம் கொள்ளும்படிச் செய்தவுடன், குருவானவர் சிஷ்யனை ஆசிர்வதித்துவிட்டு, விடைபெற்றுப் போகுமுன் அப்பா, உன் மனதில் ஏதாவது குறை இருந்தால் கேள் என்று கேட்க சிஷ்யன் “சுவாமி சென்ற வருஷம் சில மாதங்கள் ஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டு கஷ்டப் பட்டேன் அம்மாதிரி நான் இனி கஷ்டப்படாதிருக்கும்படி ஆசிர்வதியுங்கள் என்று சொன்னான். அதற்கு அவர் அப்பா, பரமாத்மா, உன் இஷ்டத்தை நிறைவேற்றுவாராக ! என்று ஆசிர்வாதம் செய்து விட்டுப் போய்விட்டார்.
மறுவருடம் சிஷ்யன் பிறந்ததினம் குரு வந்தபோது, அவன் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தபோது ‘சுவாமி, என்தேகம் சௌக்கிமாகத்தானிருக்கிறேன், உங்கள் ஆசீர்வாதத்தால் என்று பதில் உரைக்க அப்பா, உன் மனதில் இன்னும் ஏதோ குறை இருக்கிறது போல் தோன்றுகிறதே, அதையும் தெரிவி என்று கேட்டு-சிஷ்யன் சுவாமி, என் தங்கை ஒருத்தி வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறாள்: அவள் அசௌக்கியமாயிருக்கும்போது. என் மனதில் நிம்மதியில்லா திருக்கிறது ஆகவே, என் உற்றார் உறவினர் எல்லோரும் ஷேமமாயிருக்க வேண்டுமென்று, ஆசிர்வதியுங்கள்!’ என்று வேண்டினான், குரு பரமாத்மா உன் மனோபீஷ்டத்தை நிறைவேற்றுவாராக என்று சொல்லிப் போனார்.
மறுவருடம் வந்து குருவானவர் வழக்கப்படி சிஷ்யன் யோகட் சேமத்தை விசாரித்தபோது, சிஷ்யன் சுவாமி, எங்கள் தெருவில், வாந்தி பேதிகண்டு சிலர் மாண்டனர் அவர்களில் ஒருவர் என் நண்பர்- ஆகவே, என் தெருவிலும் அக்கம் பக்கங்களிலும் உள்ளவர்களும் சவுக்கியமாக இருக்க வேண்டுமென்று ஆசிர்வதியுங்கள்!’ என்று கேட்டுக் கொண்டான் முன்போலவே குருவானவரும் பரமாத்மாவின் அருளால் அங்கனமே ஆகும் என்று ஆசிர்வதித்துப் போனார்.
மறு வருடம் குருவானவர் சிஷ்யனைச் சந்தித்து, தன் வழக்கப்படி அவனது யோகட்சேமத்தை விசாரித்தபோது சிஷ்யன் “இவ்வருடம் எங்கள் ஊரில் பிளேக் வியாதி வந்திருக்கிறது அதனால் அதிகம் பேர் மாண்டார்கள்; எனக்கும் எந்த சமயம் என்னையும் என் சுற்றத்தாரையும் பீடிக்குமோ என்னும் பயம் அதிகமாயிருக்கிறது ஊரெங்கும் இந்த வியாதி நீங்கி, என் பயமும் நீங்க வேண்டுமென்று ஆசிர்வதியுங்கள் என்று கேட்டுக் கொண்டான் குருவும் பரமாத்மா அருளால் அவ்விதமே ஆகும்’ என்று ஆசிர்வதித்துப் போனார்.
மறு வருடம் வந்தபோது “சுவாமி என் வரைக்கும் க்ஷேமமாகத் தானிருக்கிறேன் ஆயினும் அதில் என்ன பிரயோஜனம் நமது தேசத்திலேயே பஞ்சம் வந்திருக்கிறது எத்தனை ஜனங்கள் உண்ண உணவின்றி பரிதபிக்கின்றனர்; அதைக்கண்டு என் மனம் சகிக்கவில்லை நமது இந்தியா தேசமுழுவதும் பஞ்சம் நீங்கி ஜனங்கள் சந்தோஷமாயிருக்க வேண்டுமென்று ஆசிர்வதியுங்கள்” என்று வேண்டிக்கொள்ள, அதன்படியே குருவும் ஆசிர்வதித்துப் போனார்.
மறுமுறை குருவானவர் வந்தபோது சிஷ்யன் அவரை அடியிற் கண்டவாறு பிரார்த்தித்தான் “சுவாமி, உலக யுத்தம் மறுபடியும் வரும் போலிருக்கிறது என்று பலர் சொல்லுகிறார்கள் அவ்வாறு வந்தால் உலகத்திலுள்ள எத்தனை கோடிஜனங்களுக்கு கஷ்டம்! ஆகவே, உலகமெங்கும் இந்த பயம் நீங்கி, உலகத்தோரெல்லாம் சந்தோஷமாயி ருந்தால்தான், நானும் சந்தோஷமாயிருக்க முடியும், ஆகவே உலகமெல்லாம் ஒரு குறையுமின்றி, சந்தோஷமாய் வாழ வேண்டுமென்று ஆசீர்வதியுங்கள் என்று கேட்டுக் கொண்டான். அப்பா அப்படித்தான் நானும் பிரார்த்திக்கிறேன் பரமேஸ்வரர் கருணையினால் உலக முழுவதும் க்ஷேமமாயிருக்குமாக! அப்பா! உனக்கு ஞானம் உதயமாகிவிட்டது இனி நான் உனக்கு உபதேசம் செய்ய வேண்டியதொன்று மில்லை! என்று குரு சொன்னார் “சிஷ்யன் ஸ்வாமி! அப்படிச் சொல்லக் கூடாது நீங்கள் அடிக்கடி வந்து எனக்கு புத்திமதி கூறி, ஆட்கொள்ள வேண்டும் என்று பணிந்து கேட்டுக் கொண்டான்.
முற்றிற்று
★ ★ ★



