
பலவகை பூங்கொத்து
பம்மல் சம்பந்த முதலியார்
எனது சிறு விரல் மோதிரம்
(உண்மையான கதை)
ஆங்கிலத்தில் மாஸ்காட் (Mascat) என்று ஒரு பதம் உண்டு அதன் அர்த்தம் “ஒருவன் தனக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் தன் உயிர் நிலையைப்போல பாதுகாத்து வரும் ஒரு பொருள் என்பதாம். தமிழில் இதற்குச் சரியான பதம், எனக்குத் தெரிந்த வரையில் கிடையாது. ஆயினும் இதிகாசப் புராணக் கதைகள் சிலவற்றுள், சிலர் உயிர்நிலை இன்ன பொருள்களில் இருக்கின்றன எனவும் கருதி, அவைகளை அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகப் பாது காத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இவைகளை, அவர்களுடைய மாஸ்காட்டுகள் என்று ஒரு விதமாகக் கூறலாம்.
என்னுடைய மாஸ்காட் நான் எனது இடது கையில் சிறுவிரலில் அணிந்திருக்கும் ஒரு சிறு மோதிரமே, அது நாலு கோணமுள்ள நடு தட்டைப் பொன் மோதிரம். அதன் விலை சவரன் கூட இராது. ஆயினும் அதை உலகிலுள்ள எந்த விலையுயர்ந்த பொருளுடனும் மாற்றிக் கொள்ள இசையேன். அதற்குக் காரணம் இங்கு நான் எழுதியிருக்கும் கதையை நீங்கள் படித்துப் பார்ப்பீர்களாயின் தெரியும். நான் பல கதைகளை எழுதியிருக்கிறேன் என்பது என் நண்பர்கள் அறிந்த விஷயமே. ஆயினும் அக்கதைகளுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசமென்னவென்றால் இது உண்மையான கதையாம்!
இதை, என் தாயார், பன்னிரண்டாம் வயதில், எங்கள் வீட்டில் நடந்த ஒரு கல்யாண சந்தர்ப்பத்தில், எனக்குச் செய்து போட்டார்கள். அது முதல் இத்தனை வருடங்களாக அதை என் விரலைவிட்டு எடுக்காமல் அணிந்து வருகிறேன். ஆயினும் மூன்று முறை இது என் விரலிலிருந்து காணாமற் போயது- பிறகு அகப்பட்டது! அது தான் இதன் விசேஷம்.
இதை அணிய ஆரம்பித்து இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு, நான் மாகாணக் கலாசாலையில் (Presidency College) வாசித்துக் கொண்டிருந்த பொழுது, ஒருநாள் சாயங்காலம் அங்குள்ள பெரிய கிரிக்கெட் (Cricket) எனும் பந்தாடும் மைதானத்தில் பந்தாட்ட விளையாட்டாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று என் விரலில் இம் மோதிரம் இல்லாதிருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன்; உடனே, சாயங்காலம் இருட்டிப் போகும் வரையில் அம்மைதானம் முழுவதும் தேடிப் பார்த்தேன்.
அகப்படவில்லை. சரி போனது போனதுதான் என்று மன வருத்தத்துடன் வீடுபோய்ச் சேர்ந்தேன்; அன்று புதன்கிழமை; இரண்டொரு தினத்தில், கிட்டா தாயின் வெட்டென மற என்று படித்ததை கவனித்து, அதை மறந்தேன். ஆயினும் என் விரல் மோதிரம் காணாமற் போயிற்று என்பதை அறிந்த எனது பால்ய நண்பர் ஒருவர் வேடிக்கையாக “சம்பந்தம்” இனிமேல், வகுப்புப் பரீட்சைகளில் எதிலும் நீ முதலாவதாக இருக்க மாட்டாய்! என்று கூறினார்; அவர் கூறியது வேடிக்கையாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஆயினும் அச்சமயம் என் மனதில் மிகவும் உறுத்தியது.
காணாமற்போன ஒருவாரம் பொருத்து, மறு புதன் கிழமை தினம் அதே மைதானத்தில் நான் மறுபடியும் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த பொழுது, என் கண்ணில், புல் மத்தியில் ஏதோ “மின்மினு” என்று பட்டது. என்னவென்று குனிந்து அதை எடுத்துப் பார்த்த பொழுது; அது என் காணாமற் போன மோதிரமெனக் கண்டு, ஆச்சர்யமும் சந்தோஷமுமடைந்தேன். இதில் ஆச்சரியம் என்ன வென்றால் அந்த இடத்தில் அம்மோதிரம் ஒரு வாரமாக, பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் மற்றவர்களும் நடமாடிய போதிலும் வேறொருவர் கண்ணுக்கும் புலப்படாமற்போய், என் கண்ணில் மாத்திரம் ஒரு வாரம் பொறுத்துப் புலப்பட்டது: இது தெய்வாதீனம் என்று நினைக்கிறேன். இவ்வாறு அது காணாமற்போய் அகப்பட்டது முதல் அதன்மீது எனக்கிருந்த பிரேமை அதிகரித்தது என்று நான் என் நண்பர்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.
இரண்டாம் முறையும் காணாமற்போய் அகப்பட்டது நான் ராமேஸ்வர யாத்திரை செய்த போது. நான் என் குடும்பத்தாருடன் 1904-ம் வருஷம் ராமேஸ்வர யாத்திரை செய்தேன். அச்சமயம், நவபாஷாணம் எனும் இடத்தில், சமுத்திர ஸ்நானம் வேண்டுமென்று தெரிவித்தனர். சமுத்திரத்தில் மார் அளவுத தண்ணீரில், ஸ்நானம் செய்து விட்டு, கரையேறினேன். கரையேறியதும், என் சுண்டு விரலிலிருந்த அச்சிறு மோதிரம் இல்லா திருப்பதைக் கண்டேன். உடனே ஸ்தம்பித்து போயிற்றென்று சொன்னால் அது மிகையாகாது. அத்தனை பெரிய சமுத்திர ஜலத்தில் சுண்டைக் காய்க்கும் சிறிய ஒரு மோதிரத்தை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது? உடனே, முன்பு மைதானத்தில் காணாமற் போய் மறுபடியும் தெய்வாதீனத்தால் அகப்பட்ட விசித்திரம் எனக்கு ஞாபகம் வர, பரம்பொருளின் கருணை இருந்தால் எனக்குக் கிடைக்கும் என்று ஒருவாறு என் மனதைத் தேற்றிக்கொண்டு கரையேறினேன்.
கரையேறியதும், என் தலை மயிரை உலர்த்த ஆரம்பித்த போது, ஏதோ என் தலையில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மெல்ல எடுத்துப் பார்க்க, என் மோதிரத்தைக் கண்டேன் ! அது என் தலை ரோமத்தில் சிக்கிக் கொண்டிராவிட்டால் நான் அதை இழந்தவனே! இது தெய்வத்தின் கடாக்ஷம் என்று உறுதியாக நம்புகிறேன்; மற்றவர்கள் இதை நம்பாதிருக்கலாம்; நான் நம்புகிறேன்.
மூன்றாம்முறை காணாமற் போய்க் கிடைத்ததும் ஓர் விந்தையான சந்தர்ப்பமே. ஒருநாள் திருவல்லிக்கேணி பெரிய தெருவிலிருக்கும் ஒரு சினிமாக் கொட்டகைக்குப் போய், இரவில் வேடிக்கை பார்த்து விட்டு என் மோட்டார் வண்டியில் திரும்பி வந்துக் கொண்டிருக்கும் போது, என் கையை ஏனோ தடவ, என் சிறு விரல் மோதிரம் இல்லா திருப்பதைக் கண்டேன். உடனே மோட்டரை நிறுத்தி, கீழே இறங்கி, எல்லாம் தேடிப்பார்த்தேன். எனது நண்பர்களும் தேடினார்கள். மோதிரத்தைக் காணோம்!
அம்முறை நேரிட்ட சந்தர்ப்பத்தின் விசேஷம் என்னவென்றால், இம்முறை முன்னிரண்டு முறையைப் போல் பயமில்லை. அது தெய்வத்தின் சோதனையென்று எண்ணியவனாய், என் துயரத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு மோட்டார் காரில் ஏறிக்கொண்டு வீடுபோகப் புறப்பட்டேன். பாதிவழி வந்த பிறகு, அகஸ்மாத்தாய் என் கையால் காரின் பக்கத்தைத் தடவ, என் மோதிரம் அதன் துவாரமொன்றில் சிக்கியிருப்பதைக் கண்டு தெய்வாதீனம் என்று தெய்வத்தைப் போற்றியவாரே சந்தோஷத்துடன் அதை மெல்ல எடுத்து அணிந்துக் கொண்டேன்.
என் தாயார் எனக்குக் கொடுத்து, மூன்று முறை காணாமற் போய், எனக்கு மறுபடியும் சிக்கிய, இச்சிறு மோதிரத்தை நான் அதிகமாக மதிப்பது ஆச்சரிய மல்லவென்று இதை வாசிக்கும் நண்பர்கள் ஒப்புக் கொள்ளுவார்களென்று நீனைக்கிறேன்.
எனக்குப் பிரியமான இம் மோதிரத்தை, என்னால் கொடுக்கப் படும் சிறு ஆஸ்தியில், மிகவும் மதிப்புடைய பொருளாகப் பாவித்துக் காப்பாற்றிவரும்படி, என் குமாரனிடம் சொல்லியிருக்கின்றேன். நான் 1950-வது வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதி நான் சன்யாசம் வாங்கிக் கொண்ட பொழுது நான் அணிந்திருந்த மற்ற எல்லா ஆபரணங்களை கழற்றிய போதிலும் இந்த மோதிரத்தை மற்றிலும் கழற்ற வில்லை. ஏனெனில் அதை நான் பொன் மோதிரமாக பாவிக்கவில்லை, அதை என் தாயார் எனக்கருளிய ஆருயிராக பாவிக்கிறேன். இதை பரம்பொருளின் இச்சைப்படி என் தாய் தந்தையர் என்னை தாங்கள் பாதாரவிந்தம் சேர்த்துக் கொள்ளும் சமயம் வரும் பொழுது, என் உடலை காஷ்ட்டத்தில் வைத்து தகனம் செய்யு முன்பு தான் இதை கழற்ற வேண்டுமென்று என் குமாரனுக்கு சொல்லியிருக்கிறேன்.



