பலவகை பூங்கொத்து
பம்மல் சம்பந்த முதலியார்

தெய்வாதீனம்

(கட்டுக் கதை)


தெய்வாதீனம் என்று ஒன்றுண்டு என்று, இவ்வுலகில் யார் நம்பினாலும், நம்பாவிட்டாலும், மூன்று பெயர் அதை நம்புகிறார்கள் ;அம் மூன்று பெயர்களில், நான் ஒருவன், மற்ற இருவர் என் தாய் தந்தையர்கள். இதை நம்புவதற்காக இதை வாசிக்கும் நண்பர்கள் சிரிப்பதானால், எனக்கு ஆட்சேபனையில்லை. ஆயினும் அப்படிப்பட்டவர்களுக்கு, ஒரு வேண்டுகோள் இச்சிறுகதையை முற்றிலும் படித்து விட்டு பிறகு, தெய்வாதீனத்தில் அவர்களுக்கு நம்பிக்கையில்லாவிட் டால் அவர்கள் தாராளமாகச் சிரிக்கலாம்.

நான் பிறந்த ஊர் மதுரை ; என் தகப்பனார் மறவகுலத்தில் ஓர் தலைமை வாய்ந்தவர்; மாலிக்காபூர் என்னும் மகம்மதிய சேனாதிபதி தென் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து மதுரையைத் தாக்கிய போது, மதுரைக்கு அரணாயிருந்த மதிற் சுவரின் வட அலங்கத்தைக் காப்பதில் என் மூதாதைகளில் ஒருவர் தன் உயிரைக் கொடுத்ததாக, எங்கள் ஜாதியருக்குள் ஓர் கதை சொல்லப்படுகிறது; இது எவ்வளவு நிஜமோ எனக்குத் தெரியாது; ஆயினும் என் முன்னோர் களிடமிருந்து என் தகப்பனார், படைக்கஞ்சா, வீரம் பொருந்திய குணத்தையுடைய வராயிருந்தார் என்பதை அறிவேன்; அவர் இக்குணத்தினால் தன் இள வயதிலேயே, முதல் உலகயுத்தம் ஆரம்பமான போது ஆங்கிலேய ராணுவத்தைச் சேர்ந்தார். அதில் எதற்கும் அஞ்சா சுத்த வீரன் எனப்பெயர் பெற்று ஓர் யுத்தத்தில், விக்டோரியா கிராஸ் (Victoria Cross) என்னும் பதக்கத்தையும் பெற்றார் யுத்தம் முடிந்தவுடன், என் தாயாரின் வேண்டுகோளுக்கிணங்கி, நடுவயதிலேயே, உபகாரச் சம்பளம் வாங்கிக் கொண்டு, ராணுவத்தை விட்டு விலகினார்.

என் தகப்பனார், தாயார், நான், ஆகிய மூவரும், சுமாரான செல்வாக்கில் வாழ்ந்து வந்தோம். என் தகப்பனார், என்னை இளவயதிலேயே ராணுவத்தைச் சேரும்படி வற்புறுத்தினார், என்ன காரணத்தினாலேயோ அது எனக்குப் பிடிக்கவில்லை; நான் என் தாயாரிடம் சொல்லி அவர்களைக் கொண்டு என்னை கலாசாலையில் படிக்க, என் தகப்பனார் அனுமதிக்க உத்திரவு பெற்றேன்.

அப்படியே சென்னை மாகாணக் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது, இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமானது; அச் சமயம் நான் பி.ஏ. பரீட்சைக்கு வாசித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் நான் மதுரைக்கு வந்து சேர வேண்டுமென்று, என் தாயாரிட மிருந்து ஒரு தந்தி வந்தது. மனதில் அதிக வருத்தத்துடன், உடனே புறப்பட்டு, மதுரை போய்ச் சேர்ந்தேன். ஸ்டேஷனிலிருந்து எங்கள் வீட்டிற்கு விரைந்து சென்றேன். எங்கள் வீட்டில் இரண்டாம் கட்டில் என் தாயார், தான் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, அவர்கள் முகத்தைப் பார்த்தவுடன், பிரமாதம் ஒன்றும் நேரிடவில்லை என்று அறிந்தவனாய், கொஞ்சம் மனம் தேறி, “அப்பா என்னவாக இருக்கிறார்; அவர் சௌக்கியம் தானே? அவருக்கு உடம்பு ஒன்றுமில்லையே;” என்று உடனே கேட்டேன் அதற்கு அவர்கள் அவருக்கு உடம்பு ஒன்றும் அசௌக்கியமில்லை; நன்றாய்த்தான் இருக்கிறார், அதனால்தான் ஒரு கஷ்டம் வந்திருக்கிறது, என்று சாந்தமாய்க் கூறினார்கள்.

அதன் மீது கொஞ்சம் கோபத்துடன், அப்படியிருந்தால், என்னை இங்கு வரும்படி ஏன் தந்தி அனுப்பினீர்கள்! என்று கேட்டேன். என் தாயார் கொஞ்சம் தழதழத்து பதில் உரைத்தார்கள் ‘உலகயுத்தம் மறுபடியும் ஆரம்பித்து விட்டது, என்று உனக்குத் தெரியுமே – உன் தகப்பனார்-மறுபடியும் ராணுவத்தில் சேர்வதாக தீர்மானித்து விட்டார்- நான் எவ் வளவு மன்றாடியும் உன் தகப்பனார் குணம் தான் உனக்குத் தெரியுமே, அவர் ஒன்றைத் தீர்மானித்து விட்டால், அவரை அத்தீர்மானத்தினின்றும் மாற்ற ஒருவராலும் முடியாது என்று- இப்பொழுது அவர் சைனியத்திற்கு ஆட்களை சேர்க்கும் உத்யோகஸ்தரிடம் போய் உத்திரவுபெற போயிருக்கிறார்

ஒருவிதத்தில் இதைக் கேட்டு, மனத்தளர்ச்சி நீங்கினவனாய், அப்படியானால் இதற்காக என்னையேன் உடனே மதுரை வந்து சேரும்படி தந்தி அனுப்பினீர்கள்? அதிலும் என் பரீட்சை காலம் நெருங்கியிருக்கும் போது ” என்று வெறுப்புடன் கேட்டேன். அதற்கு என் தாயார் நயமாய், ‘அப்பா’ கோபித்துக் கொள்ளாதே அதற்காக நான் இந்த தர்ம சங்கடத்தில் வேறென்றும் செய்வதற்கில்லை நான் இதைப்பற்றி உன்னிடம் பேசி, உன்னிடமிருந்து ஒரு வரம் வாங்கவேண்டுமென்றே இதைச் செய்தேன்” என்று சொல்லி என் தோளின் மீது தன் கரத்தை வைத்து, ‘கண்ணே’ நான் கேட்கப் போகும் வரத்தைக் கொடுப்பதாக, எனக்கு வாக்கு கொடு” என்று கெஞ்சினார்கள்.

நான் உடனே அதற்கு அம்மா நான் இதுவரையில் நீங்கள் கேட்பதைச் செய்யாமற் போனேனா? நான் என்ன செய்யவேண்டும்! சொல்லுங்கள், உடனே செய்கிறேன்” என்று கூறினேன், உடனே அவர்கள் “நான் கேட்பதை நீ மறுக்க மாட்டாய் என்பதை நன்றாய் அறிந்தே, உன்னைத் தந்தி கொடுத்து இங்கு வரவழைத்தேன்- என்று கூறிவிட்டு, மெல்லிய குரலுடன்– நீயும் ராணுவத்தைச் சேர்ந்து சண்டைக்கு உன் தகப்பனாருடன் போய் வரவேண்டும்’ என்று கூறக் கேட்ட நான், பகற்காலத்தில் இடி விழுந்ததைப்போல் பிரமித்துப் போனேன் என்றால் மிகையாகாது !!

யுத்தம் என்றால் ஒன்றும் அறியாத நானா ராணுவத்தைச் சேர்வது! என் தகப்பனாருடைய கத்தியைக் கையால் தொடவும் அஞ்சும் நானா யுத்தம் செய்யப் போவது? என் சிறுவயதில் என் பாட்டனார் ஒருவர் “இந்தப் புலி குட்டியின் வயிற்றில் இந்த நரிகுட்டி எப்படி பிறந்தது !” என்று ஏளனம் செய்வார், அது எனக்கு ஞாபகம் வந்தது சிறிது பொறுத்து என் மனதைத் திடப்படுத்திக் கொண்டு என் தாயாரை “அம்மா! என்னை ஏன் ராணுவத்தில் சேரும்படி கேட்கிறீர்கள்?– ‘யுத்தத்தில் என் தகப்பனார் தன் உயிரை பலிகொடுக்க முயல்வது போதாதா? நானுமா அப்படிச் செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன் அதற்கு அவர்கள், தந்தையின் உயிரைக் காப்பதற்காக உன்னை ராணுவத்தில் சேரும்படி வேண்டுகிறேன். நீ அவருடன் போய் அவருக்கு ஒரு கெடுதியும் வராதபடி காத்து என்னிடம் கொண்டு வந்து சேர்க்கவேண்டும் என்றார்கள்.

தன் தாயார் இவ்வாறு வேண்டும்போது, அதை மறுக்க வல்ல பிள்ளை இவ்வுலகில் இருக்கிறானா ?- நான் அப்படியே செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டேன் “நீ ஒப்புக் கொள்வாய் என்று எனக்குத் தெரியும்” என்று சொல்லி என் நெற்றியில் எனக்கு ஒரு முத்தம் கொடுத்தார்கள். அச்சமயத்தில் திடீரென்று நாங்களிருக்குமிடம் என் தகப்பனார் வந்தார், நேராக நிமிர்ந்து நடந்துக்கொண்டு !

நான் வீட்டிலிருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டவராய், “அடே பையா! உன் கல்லூரியை விட்டு ஏன் இங்கு வந்து சேர்ந்தாய் இப்பொழுது?” என்று கேட்டார், அதற்கு பதிலாக உடனே என் தாயார், நான் வாயைத் திறக்குமுன், “அவன் தன் பாடங்களை யெல்லாம் விட்டு, உங்களுடன் சண்டைக்குப் போக வந்திருக்கிறான் ! ” என்று கூறிவிட்டார்கள் !

அதன்பேரில் என் தந்தை, என் முதுகின்பேரில் பலமாய்த் தட்டிக் கொடுத்து, உரத்த சப்தத்துடன் தெருவிலிருக்கும் பலர்களுக்கும் கேட்கும் படியாக, “சபாஷ்! அதுதான் சரி, எப்பொழுதாவது, உன் மனம் இவ்வாறு மாறும் என்று எனக்கு நன்றாய்த் தெரியும்! நீயும் ராணுவத்தைச் சேர்ந்து சிறந்த போர் வீரனாவாய் என்று நான் நம்பியிருந்தது நிஜமாயிற்று – மீனாட்சி சுந்தரேஸ்வரர் கருணையினால்! ஆதிகாலத்தில் மதுரையில் வடக்கு அலங்கத்தைக் காப்பதில் தன் உயிரைக் கொடுத்த நமது முப்பாட்டனாருடைய ரத்தம் உன் உடம்பில் பாய்கிறது என்று சந்தோஷப்படுகிறேன். வீரபாண்டியன் வம்சத்திலுதித்த பையன் வீரனாயிருக்காமற் போகான்!” என்று கூறி,– “வா என்னுடன் உடனே !” என்று என்னை கையும் பிடியுமாய், ராணுவத்திற்கு ஆட்கள் சேகரிக்கும் உத்யோக ஆபிஸ்க்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டார்.

நான் பேசாது அவருடன் போனேன் வேறென்ன செய்யக் கூடும் நான் சொல்லுங்கள்! அந்த உத்யோகஸ்தர் மிகவும் நல்ல சுபாவமுடையவர், அவர் உடனே என்னை நன்றாய்ப் பரிசோதித்துப் பார்த்து நான் ராணுவத்தில் சேரலாமென்று சொல்லிவிட்டு, “ஆனால், தம்பி, நீ மூன்று மாதம் இங்கே பயிற்சியடைய வேண்டும்” என்று சொல்லி, அதற்கு எப்பொழுது ஆரம்பிக்க போகிறாய் என்று கேட்டார், நான் பதில் கூறுமுன் என் தகப்பனார்.

இவன் இன்றைக்கே உடனே ஆரம்பிப்பான்!” என்று கூறிவிட்டு அறையைவிட்டு போய் விட்டார். இச்சமயம் அந்த உத்யோகஸ்தர் என் மனதில் ஏதோ கவலையிருப்பதைக் கண்டு “தம்பி, உன் மனதில் ஏதோ இருக்கிறது ஒன்றும் ஒளியாமல் என்னிடம் சொல், பயப்படாதே, நான் முயற்சி செய்து என்னாலியன்ற அளவு அதைத் தவிர்க்கிறேன்” என்று சாந்தமாய்க் கூறவே நான் தைரியப்பட்டு “ஐயா, உம்மை நான் வேண்டிக் கொள்வது ஒன்று இருக்கிறது, அதாவது இங்கு என் பயிற்சி முடிந்தவுடன், என்னை என் தகப்பனாருடைய ரெஜிமென்டிலேயே (Regiment) அவருடன் சேர்த்து விடுகிறீர்களா? என்று சொல்லி, அதற்குக் காரணத்தையும் நான் அவருக்குத் தெரிவித்தேன் அவர் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டவராய் “அப்பா, அப்படியே செய்கிறேன்” என்று வாக்கு கொடுத்தார். அன்றியும் கடவுள் கிருபையால், உன் தாயாரின் கட்டளையையும் நிரைவேற்றுவாயாக!” என்று ஆசிர்வதித்தார்.

இரண்டு மாதம் முடிவதன் முன்பு, என் ரெஜிமென்ட் உடனே பர்மாவுக்குப் புறப்பட வேண்டுமென்று உத்திரவு வந்தது எங்கள் தலைவர் நான் தக்க பயிற்சி அடைந்து விட்டதாக கூறி, என் தகப்பனாருடன் புறப்பட்டுப் போகலாமென்று எங்களை பிரயாணம் செய்துவிட்டார். மதுரையிலிருந்து சென்னப் பட்டணம் வந்து, அங்கிருந்து ரங்கூனுக்கு, புகைக் கப்பல் மார்க்கமாய் பிரயாணம் செய்தோம். அதுதான் நான் முதல் முதல் புகைக் கப்பலில் பிரயாணம் செய்தது. நான் மிகவும் கஷ்டப்பட்டு பிரயாணத்தை முடித்தேன். என் தகப்பனார் புகைக்கப்பல் பிரயாணத்தில் வழக்கப்பட்டிருந்தபடியால் ஒரு கஷ்டமும் படவில்லை ரங்கூனில் எங்கள் ரெஜிமென்ட் ஒரு பெரிய கட்டிடத்தில் தங்கும்படி உத்தரவாயது, இங்கு எல்லாம் எனக்கு புதிதாயிருந்தது: என் தகப்பனாருக்கு ஒத்தாசை செய்யும் காலம் போக, மற்றக் காலமெல்லாம் ஊரைச் சுற்றிப் பார்த்து வந்தேன்.

திடீரென்று ஒருநாள் நாங்கள் எல்லோரும் ஒரு மணிக்குள்ளாக யுத்த முனைக்குப் புறப்படவேண்டும் என்று மேல் அதிகாரிகளிட மிருந்து உத்திரவு வந்தது. ஒரு பெரிய ஸ்டீம் லாஞ்சில் (Steam Launch) எங்களில் முப்பது பேர் அடைக்கப்பட்டோம். இது ஐராவதி எனும் நதியின் வேகத்திற்கு எதிராக, அழைத்துச் சென்றது, மறுநாள் காலை, அந்நதியின் கரையோரமுள்ள ஒரு பட்டணத்தருகில் எங்கள் படகு நின்றது. அன்றைத்தினம் சாப்பாட்டிற்கு வேண்டிய சாமக்கிரியைகளை வாங்கி வருவதற்காக நானும் எனது நண்பர்கள் சிலரும் பட்டணத்திற்குள் அனுப்பப்பட்டோம்.

அந்த வேலைக்காக நான் புறப்பட்ட போது என் தகப்பனார் “பையா இந்த ஊரில் கடைத் தெருவில் மங்குஸ்தான் விற்றால், எனக்காக, ஆறு பழங்கள் வாங்கிக் கொண்டுவா” என்று சொன்னார். மங்குஸ்தான் என்றால் என்ன வென்று கேட்க, அது மிகவும் ருசிகரமானதும் ரத்த புஷ்டியைத் தரும் படியானதுமான பழம், என்று சொன்னார், அன்றியும் அப்பழம் இத்தேசத்தில் தான் கிடைக்கும் என்றார். நான் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு புறப்பட்டு போய், எங்கள் பிரிவிற்கு வேண்டிய உணவுப் பொருள்களை எல்லாம் வாங்கியானவுடன், என்னுடன் சென்ற, எனது சிநேகிதர் ஒருவர் உதவியால், ஆறு மங்குஸ்தான் பழங்களை வாங்கிக் கொண்டு திரும்பி வந்து எங்கள் படகில் ஏறி, கடை சாமான்களையெல்லாம் சமயற்காரனிடம் கொடுத்து விட்டு, என் தகப்பனாரிடம் பழங்களைக் கொடுக்கப் போனேன். அச்சமயம் அவர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு இரண்டு மூன்று கஜதூரம் போனதும். நான் இதோ அப்பா! நீங்கள் வேண்டிய

என்று ஆரம்பித்ததுதான் ஞாபகமிருக்கிறது – உடனே மின்னலைப் போல் ஒரு வெளிச்சம் தோன்றி, இடி இடித்தது போன்ற சப்தம் காதில் விழுந்தாற் போல் ஞாபகமிருக்கிறது – அவ்வளவுதான். பிறகு என்னினைவிற்கு வருகிறது- ஏதோ ஒரு புதிய இடத்தில் நான் கண் விழிக்க, என் தாயாரின் கண்களை நான் சந்தித்ததேயாம் ! என் மனதில் உண்டான ஆச்சரியம் கொஞ்சம் குறைந்தவுடன், ”அம்மா?– தகப்பனார் எங்கே? அவர் எப்படியிருக்கிறார்? என்று கேட்டேன். என் குரல் எனக்கே ஏதோ புதுமையாயிருந்தது. என் தாயார் அதற்கு, தழதழத்த குரலுடன், “அவர் சவுக்கியமாக – இருக்கிறார் – அவரைப்பற்றி உனக்கு கவலை வேண்டாம்- ஈஸ்வரன் கருணை நீ பிழைத்தாய்- இப்பொழுது-மறுபடியும் தூங்கப்போ” என்று என்னைத்தடவிக் கொடுத்தார்கள். நான் உடனே தூங்கினேன் என்று நினைக்கிறேன்.

நான் கண்விழித்த போது, நான் இருந்த அறையில் வேறொரு வரும் இல்லை. ஒரு மின்சார விளக்கு மேலே எரிந்து கொண்டிருந்தது. சுற்றிப் பார்த்த பொழுது, நான் ஒரு ஆஸ்பத்திரி அறையில் இருப்பதை அறிந்தேன், மெல்ல மெல்ல எனக்கு எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது நான் காண்பது கனவல்ல என்று கண்டேன்- நான் கொஞ்ச முன்பாகப் பார்த்தது என் தாயார் என்பதற்குச் சந்தேகமில்லை – எங்கே அவர்கள் இப்பொழுது ? அவர்கள் தன் வழக்கப்படி என் நெற்றியில் முத்தமிடுவதைவிட்டு, என் கையையேன் முத்தமிட்டார்கள்!–நான் மெலிந்து போன என் கையை மெல்லத் தூக்கி, என் நெற்றியைத் தொடப் பார்த்தேன் அச்சமயம் தான் அங்கு ஒரு பெரிய கட்டு கட்டியிருப்பதை அறிந்தேன்! மறு நிமிஷம் எனக்கு எல்லாம் விளக்க மாயிற்று! வெடிகுண்டோ என்னவோ என் தலையில் மோத, நான் காயம் பட்டு பிரக்ஞை அற்று போயிருக்க வேண்டும். ஆயினும் என்னை இங்கு யார் கொண்டு வந்தது? இந்த ஆஸ்பத்திரி எங்கே இருக்கிறது? என்னுடைய தகப்பனார் என்ன—-

இட்சணம் ஆஸ்பத்திரி நர்ஸ் (Nurse) ஒரு அம்மாள் வந்து என் தேக உஷ்ணத்தை, உஷ்ணமறியும் கருவியைக் கொண்டு பரி சோதித்துப் பார்த்தார்கள் நான் கொஞ்சம் தைரியத்துடன், என் தாயார் எங்கே? என்று அவர்களைக் கேட்க- “அவர்கள் எல்லாம் சரி தான்-நான் அவர்களை இங்கு அழைத்துக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியே போய், என் தாயாரை அழைத்துக் கொண்டு வந்தார்கள்; என் தாயாருடன் ஒருவர் வந்தார், அவர் ஒரு வயித்தியராயிருக்க வேண்டும் என்று ஊகித்தேன். என் தாயார் என் படுக்கைக்கு ஓடிவந்து, தன் கைகளால் என்னை அணைத்து, என் நெற்றியின் பேரில் கட்டு கட்டியிருந்ததின் மீது முத்தமிட்டார்கள்.

நான் அச்சமயம் தகப்பனார் எங்கே என்று மெல்ல கேட்க -அவர்கள் மிருதுவாய்,”அவர் சுகமாய்தான்-இருக்கிறார் – சீக்கிரம் நாம் அவரைத் காண்போம் கவலைப்படாதே. என்றார்கள் – உடனே வயித்தியர் என்னைப்பார்த்து “பிள்ளையாண்டான்! நீ இப்பொழுது என் வசம் இருக் கிறாய்- நான் சொல்கிறபடி கேட்க வேண்டும் எதைப் பற்றியும் இப்பொழுது – கவலைப்படாதே; – நான் உன் காயத்தைப் பரிசோதித் துப்பார்த்து கட்டு கட்டுமளவும் பேசாதே ஒன்றும் !’–என்று சொல்லி என் இருதயம் எல்லாம் பரிசோதித்துப் பார்த்து விட்டு என் நெற்றியிலிருந்த கட்டை அவிழ்த்துச் சிகிச்சை செய்து மறுபடியும் புதிய ஒரு கட்டைக் கட்டிவிட்டு-“அம்மா இனி உங்களுக்கு ஒரு பயமும் வேண்டாம் – காயம் சரியாக ஆறிக்கொண்டு வருகிறது, என்று கூறிவிட்டு நர்ஸிடம், என் ஆகாரத்திற்காக ஏதோ கொடுக்கும் படி சொல்லிவிட்டு, வெளியே போய் விட்டார்-போகு முன் என் தாயாரிடம் “இவன் எதைப்பற்றியும்-கவலைபடாதபடி கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் ” என்று கூறிப்போனார்-உடனே நர்ஸும் வெளியே போக, என் தாயாரும் நானும் மாத்திரம் தனித்திருந்தோம்.

நான் தனியாய் என் தாயாருடன் இருந்தபோது, கொஞ்சம் களை தீர்ந்தவனாய்,”அம்மா, அப்பா எங்கே இருக்கிறார்கள் எப்பொழுது வருவார்கள் சொல்லுங்கள்,” என்று கேட்டேன், அதற்கு அவர்கள் அவர் சுகமாய்த் தானிருக்கிறார் – நம்மிடம் கொஞ்ச காலம் பொறுத்து வருவார்- நாளை காலை உனக்கு எல்லாம் தெரிவிக்கிறேன் – இப்பொழுது நல்ல பிள்ளையைப் போல் கொஞ்சம் தூங்கு, என்றார்கள். இப்படிச் சொல்லி விட்டு தன்கையால் மிருதுவாய் என்னைத் தடவிக் கொடுத்தார்கள், அப்பொழுது, அவர்கள் நெற்றியில் அணிந்திருந்த பெரிய குங்குமப் பொட்டை உற்றுப்பார்த்து விட்டு, ஒருவாறு சந்தேகம் நீங்கினவனாய் உறங்கி விட்டேன்.

ஒரு வாரம் பொறுத்து என்னை ஆஸ்பத்திரியினின்றும் விடுதலை செய்து விட்டார்கள், உடனே நாங்கள் இருவரும் மதுரைப்போய்ச் சேர்ந் தோம், கூட்ஸ் ஷெட் (goods shed) தெருவிலிருக்கும் எங்கள் பழய வீட்டிற்கு போனோம். அவ்விடம் போன பிறகு தான், கடவுளின் கிருபையால் நான் எனக்கு நேரிட்ட ஆபத்தினின்று காப்பாற்றப்பட்டேன் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிவித்தார்கள். நான் வெடி குண்டினால் காயப்பட்டு பிழைக்க மாட்டாத கஷ்ட திசையில், சென்னையில் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், உடனே வந்து காண வேண்டுமென்றும் தனக்கு தந்தி வந்ததாம், நான் அவர்கள் பெயரைச் சொல்லி அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டிருந்தேனாம்- உடனே புறப்பட்டு வந்து என்னை சென்னையில் பார்த்தார்களாம்: அப்பொழுது அவர்களை நான் இன்னாரென்று கண்டுபிடிக்க முடியாமல், என் மாறாட்டத்தில் அவர்களைக் காணவேண்டும் காணவேண்டும், என்று கத்திக் கொண்டிருந்தேனாம், என் தகப்பனாரையும் காண வேண்டுமென்று பிதற்றிக் கொண்டிருந்தேனாம்; அன்றியும் ஏதோ ஆறு பழங்களைப்பற்றி அடிக்கடி உளறிக் கொண்டிருந்தேனாம். என்னைப் பார்த்து வந்த வயித்தியர், நான் பிழைப்பது கஷ்டம் என்று கூறினாராம் எந்த க்ஷணம் என் உயிர் போகுமோ என்று திகிலடைந்தார்களாம், இப்படி பல நாள் என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த போது, ஒரு நாள் வயித்தியர், நான் யாரையாவது இன்னாரென்று தெரிந்துக் கொள்ளும்படியான சக்திவந்தால், ஒரு வேளை நான் பிழைக்க கூடும், என்று தெரிவித்தாராம்.

பகலிரவு ஓயாமல் என் படுக்கையின் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு, நான் ஓயாமல் கூவிக்கொண்டிருக்கும் என் தாயார் தான் தானென்று நான் அறியும்படி தன்னாலான சூழ்ச்சிகளெல்லாம் செய்து பார்த்தார்களாம் ; கடைசியில் தெய்வாதீனத்தால் ஒரு நாள் நான் முன்பு கூறியபடி தன்னை அறிந்துக் கொண்டேனாம்.

இதுவரையில், நான் என் தகப்பனாரைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் “அவர் ஸ்வாமியின் கிருபையால் ஒரு நாள் நம்மிடம் வந்து சேர்வார் நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே!” என்று சொல்லி நான் பன்முறை கேட்டும் வேறொன்றும் தெரிவிக்கவில்லை, ஆகவே என் மனதில் வருத்தமிருந்த போதிலும், நான் கேட்கும் போதெல்லாம் அவர்களுக்கு மன வருத்தம் அதிகமாகியது, என்று கண்டு அவரைப்பற்றி கேட்பதை விட்டேன்.

ஒரு நாள் துரைத்தனத்தாரிடமிருந்து என்னை ராணுவத்திலிருந்து விடுவித்ததாக உத்திரவு வந்தது எனக்கு நேரிட்ட விபத்தில் எனது இடது கரம் பிரயோஜன மற்றதாய் விட்டது என்பதை, உங்களுக்கு சொல்ல மறந்தேன், எனக்கு போனஸ் (Bonus) பணம் கொடுத்து ஏதாவது சிவில் உத்தியோகத்தில் என்னைப் பிறகு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்கள் இதை நான் சந்தோஷத்துடன் வரவேற்றேன். இதை நான் என் தாயாருக்குத் தெரிவித்தேன் அவர்களும் சந்தோஷப்பட்டார்கள் ஏனெனில், உண்மையைக் கூறுமிடத்து என் பிதுர் ராஜித சொத்து பெரும்பாலும், எனக்கு சிகிச்சைச் செய்வதில் செலவழிந்து போய் விட்டது.

அச்சமயம் நான்,”என்துர் அதிஷ்டம்! தகப்பனார் நம்முடன் இல்லையே இந்த சந்தோஷ சமாசாரத்தைக் கேட்க!” என்று வருத்தப் பட்டேன். அப்பொழுது தான், என் தகப்பனாரைப் பற்றி உண்மையை எனக்கு வெளியிட் டார்கள் – ராணுவ உத்தியோகஸ்தர்கள் அவரது உடலைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும், ஆகவே அவரை காணாமற் போன படை வீரர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட வேண்டும் என்று, தெரிவித்ததாகச் சொன்னார்கள். ஆயினும் அவர் உயிரோடுதான் இருக்கிறார் எப்படியும் கடவுளின் கிருபையால் ஒரு நாள் நம்மிடம் வந்து சேர்வார் ! என்றும் உறுதியாய் கூறினார்கள். இதைக் கேட்ட தும் என்ன காரணத்தினாலோ முதலில் இருந்த என் மன துயரம் சற்று நீங்கி ஆறுதலடைந்தேன்.

கொஞ்சம் காலம் பொறுத்து, கடல் சுங்கம் வாங்கும் ஆபிசில் (Custom house office) எனக்கு ஓர் உத்தியோகம் கிடைத்தது இதைக் கேட்டபோது என் தாயார் முக்கியமாக சந்தோஷப் பட்டார்கள், அப்பொழுது அவர்கள் என்றைக்காவது ஒரு நாள் உன் தகப்பனார் ரங்கூனிலிருந்து வந்து சேர்வார்கள். ஆகவே அங்கிருந்து வரும் நீராவிக் கப்பல்களிலிருந்து வருபவர்களை யெல்லாம், தினம் கவனித்துப் பார்த்துக் கொண்டு வரவேண்டும், என்று என்னிடமிருந்து வாக்குறுதி வாங்கிக் கொண்டார்கள் அப்படி என் தகப்பனார் வருவார் என்று எனக்கு கொஞ்ச மேனும் நம்பிக்கையில்லா விட்டாலும். அவர்களை திர்ப்தி செய்வதற்காக அப்படியே செய்வதாகவும் ஒப்புக் கொண்டேன்.

வருடம் மாறி வருடம் வந்தது, என் தகப்பனார் ரங்கூன் ஸ்டீமரில் திரும்பி வரவில்லை; அவரைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் அவரை நான் மறுபடியும் காண்பேன் என்னும் ஆசை குன்றிக் கொண்டு வந்தது தினம் அவர் வரவில்லை என்று சாயங்காலம் நான் வீட்டிற்கு திரும்பி வந்தவுடன் அதே பாடம் என் தாயாருக்கு ஒப்பித்துக்கொண்டு வந்தேன் ஆயினும் அவர்கள் மாத்திரம் தன் நம்பிக்கையினின்றும் கொஞ்சமும் மாறவில்லை; அடிக்கடி “அப்பா, என்றைக்காவது ஒரு நாள் திரும்பி வருவார்,கலங்காதே” என்று எனக்கு தைரியம் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

ஒரு நாள் காலை எழுந்தவுடன் திடீரென்று குழந்தை! இன்றைக்கு உன் அப்பா திரும்பி வருவதாக நான் நேற்றிரவு கனவு கண்டேன் — இன்றைக்கு எப்படியும் அவரை நாம் காண்போம் ரங்கூனிலிருந்து வரும் பிரயாணிகளை ஜாக்கிரதையாக உற்றுப் பார்த்துவா என்று சொன்னார்கள் அதை நான் நம்பாவிட்டாலும். அவர்களுக்கு ஆகட்டும் என்று உத்திரவு சொல்லி, அன்றைத் தினம் வழக்கப்படி என் வேலைக்குப் போனேன்.

அன்றைத்தினம் ரங்கூன் நீராவிக் கப்பல், கொஞ்சம் கால தாமதமாகி வந்தது; நான் ஹார்பரில் (Harbor) கப்பல் பிரயாணிகள் வரும் வாயிலருகில் நின்று இறங்கி வரும் ஒவ்வொரு பிரயாணியின் முகத்தையும் கவனமாய் உற்றுப் பார்த்து வந்தேன் அவர்களில் ஒருவறாவது என் தகப்பனாரின் ஜாடையுடையவனாயும் காணவில்லை மனதில் மிக்க கிலேசத்துடன், நான் வீட்டிற்குத் திரும்ப, யத்தனிக்கும் தருவாயில், யாரோ ஒருவர் என் முதுகில் தட்டி “அடே கிழவா உன்னை நான் இங்கு சந்திப்பேன் என்று நினைக்கவே யில்லை !’ என்று சந்தோஷத்துடன் கூறிய சப்தம் என் செவியில் பட்டது.

நான் ஆச்சரியத்துடன் திரும்பிபார்க்க, சென்ற யுத்தத்தில் என்னுடன் எங்கள் ரெஜிமெனடில், என் பக்கலில் நின்று யுத்தம் புரிந்த பழய சிநேகிதர் ஒருவரைக் கண்டேன் நாங்கள் கொஞ்சம் நேரம் ஒருவொருக்கொருவர் யோக க்ஷேமத்தை விசாரிப்பதில் கழித்தோம் நான் தங்கியிருக்கும் வீட்டின் மேல் விலாசம் அவருக்குக் கொடுத்த பிறகு அவர் என்னை விட்டுப் பிரியுமுன் “இந்தா கிழவா- இதோ நான் பர்மாவிலிருந்து கொண்டு வந்த மங்குஸ்தான் பழங்கள், இவற்றை வாங்கிக் கொள் என்று சொல்லி, எனக்கு 12 பழங்கள் கொடுத்தார், அவர் பின்னால் ஒரு போர்டர் தூக்கிக் கொண்டு வந்த கூடையினின்று அப் பழங்களைக் கண்டவுடன் என்னையும் அறியாதபடி என் மனதில் ஒரு சந்தோஷம் உண்டாச்சுது- “சரிதான்- ஆனால் எனக்கு ஆறுபழங்கள் போதும்” என்று கூறி, எனது நண்பர் எவ்வளவு சொல்லியும் கேளாமல் அவைகளில் ஆறு பழங்களை மாத்திரம் பொறுக்கி எடுத்துக் கொண்டேன்.

என்னிடம் இன்னொரு கூடை பழங்கள் இருக்கின்றன என்று அவர் எவ்வளவோ வற்புறுத்தியும் ஆறுக்கு மேல் வேண்டாம் என்று மறுத்தேன். இவைகளை என் கைகுட்டையில் ஜாக்கிரதையாகக் கட்டிக்கொண்டு, என் நண்பரிடமிருந்து விடைபெற்று வீட்டிற்குத் திரும்பினேன் வருகிற வழியில் அன்று வெள்ளிக் கிழமை யாயிருந்தபடியால், புஷ்பக் கடைக்குப் போய் என் தாயார் தினம் பூஜை செய்யும் தகப்பனாரின் படத்திற்காக, வழக்கம்போல் ஒரு மல்லிகை மாலை வாங்கிக் கொண்டுபோய், அதை என் தாயாரிடம் கொடுத்துவிட்டு, எனக்கு அதிர்ஷ்டவசத்தால் அன்று கிடைத்த ஆறு மங்குஸ்தான் பழங்களையும் காட்டினேன். அவர்கள் மிகவும் சந்தோஷப் பட்டவர்களாய். உன் தகப்பனாருக்குக் கொடு” என்றார்கள் அதாவது தகப்பனாரின் படத்திற்கு நிவேதனம் செய் என்று அர்த்தம், நான் கை கால்களை சுத்தி செய்து கொண்டு அப் பழங்களை எடுத்துக் கொண்டுபோய் என் தகப்பனாரின் படத்தெதிரில் வைத்து, “அப்பா! நீங்கள் விரும்பிய பழங்கள் இதோ கொண்டு வந்தேன்!” என்று கூறினேன் அப்பொழுது என்னையுமறியாதபடி துயரமுற்றவனாய், கண்ணீர் சொரிந்து அப்படியே சாய்ந்து விட்டேன்;

எவ்வளவு காலம் அப்படியிருந்தேன் என்று எனக்குத் தெரியாது; எனக்கு பிரக்ஞை வந்து கண் விழித்தவுடன் “அவனை எழுப்பாதே” என்று யாரோ கூறியது போல் என் செவியிற் பட்டது, என் கண்களை நன்றாய் திறந்து பார்க்க, என் எதிரில் பழங்களை காணாதவனாய், கோபத்துடன் “பழங்களை யார் எடுத்தது? என்று கேட்டுத் திரும்பிப் பார்க்க, என் தகப்பனாரின் கண்களை என் கண்கள் சந்தித்தன! என் தகப்பனார் ! கண்ணே ! நான்தான் அப்பழங்களை உன் கையினின்றும் வாங்கிக் கொண்டேன்! என்று கூறினார்! என் தாயார் அவருக்குப் பின்னால் சிரித்த முகத்துடன் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவரது வார்த்தை என் செவியில் அமிர்தம் பொழிவதுபோல், விழுந்தன ! ஆனந்தம் அதிகப் பட்டவனாய், மெய்தளர்ந்து அப்படியே அவர் பாதத்தில் விழப்போனேன் – உடனே அவர் தன் இருகைகளாலும் என்னைக் கட்டியணைத்து என்னை முத்தமிட்டார் எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் அதுதான் அவர் என்னை முதல்விசை முத்தமிட்டது.

மிகுதி கதையை சீக்கிரம் சொல்லி விடலாம், அன்றிரவு நன்றாய் சாப்பிட்டுவிட்டு என் தகப்பனாருடன் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டேன்; அப்பொழுது மேற்கூறியபடி அபாயகரமான காயம் எனக்கு பட்ட சமயம், தனக்கு அந்த வெடிகுண்டினால் சிறு காயம்தான் பட்டதாயும்,உடனே தன்னை சில ஜப்பானியர்கள் கைதியாகப் பிடித்துக்கொண்டு போய், சிறையில் அடைத்ததாயும், அங்கு அவர்கள் எவ்வளவோ சித்திரவதை செய்தும் எங்கள் சையனித்தைப் பற்றிதான் ஒன்றும் கூற மறுத்ததாயும், பிறகு சண்டை முடிந்து சமாதானம் ஆன பிறகு தான், அவர்கள் தன்னை சிறையிலிருந்து விடுவித்தாயும் சொன்னார், விடுபட்டவுடன் ரங்கூனுக்கு வந்து ஒரு தமிழ் பத்திரிகையில் நான் ஒரு பத்திரியில் அவரைப்பற்றி வினாவியிருந்த சமாசாரத்தை வாசித்து.

உடனே நீராவிக் கப்பலேறி, பட்டணம் வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார் அன்றிரவு மிகவும் சந்தோஷமாய்த் தூங்கினேன் என்று நான் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை, அன்றுமுதல் தெய்வம் ஒன்று இருக்கிறது என்றும், எந்த முடியாத காரியமும் தெய்வாதீனத்தால் முடியக்கூடும் என்று நம்பிக்கை யுடையவனாயினேன். இனி நான் அந்த நம்பிக்கை உடைய வனாயிருப்பதைப் பற்றி இதை வாசிக்கும் எனது நண்பர்கள் சிரிக்க விரும்பியிருந்தால் சிரிக்கட்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *