வாழ்க்கைக் கூத்து
கி. வா. ஜகந்நாதன்

அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் பிரபஞ்சச் சேற்றைக் கழுவித் தூய ஆனந்த வாரியில் ஆழும் பேறு பெற்றவர்; தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெற வேண்டும் என்ற கருணை உடையவர். அந்தக் கருணையினால் பாடிய பாடல்களே திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி முதலியவை.

தமக்குப் புலமை முருகன் திருவருளால் வந்ததென்பதைப் பல இடங்களில் அவர் சொல்கிறார். கந்தர் அலங்காரத்தில், முருகன் சிற்றடி, “என்பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ?” என்று பாடுகிறார். அவர் சொல்லுகிற அடி ஏடு அவருடைய உள்ளம். முருகனுடைய சின்னஞ்சிறிய குழந்தைத் திருவடி அவர் உள்ளத்திலே பதிந்ததாம். அதிலிருந்து பாக்கள் வந்தனவாம். கந்தர் அநுபூதியில்,

யாம்ஓ தியகல் வியும்எம் அறிவும்
தாமே பெறவே லவர்தந் ததனால்

என்று பாடினார். அவர் உள்ளத்தில் இறைவன் திருவடி பட்டது. அதன் விளைவாக அவர் நாவின் வழியே பாக்கள் வெள்ளமாகப் பெருக்கெடுத்தன.

முருகன் திருவருளால் பெற்ற புலமையை அவனுக்கே அர்ப்பணமாக்கினார்.

அருணதள பாதபத்மம் அதுநிதமு மேதுதிக்க
அரியதமிழ் தானளித்த மயில்வீரா

என்று பாடுகிறவர் அல்லவா?

இந்தப் புத்தகத்தில் “தாவடி யோட்டு மயிலிலும்” என்ற கந்தரலங்காரப் பாட்டு இருக்கிறது. அதில்தான் “என் பாவடி யேட்டிலும் பட்டதன்றோ?” என்று பாடுகிறார்.

இந்தப் புத்தகத்தில் ஏழு அலங்காரப் பாடல்கள் உள்ளன. அருணகிரியாரின் இயல்புகளை உணர இந்த ஏழு பாடல்களும் உதவுகின்றன. அருட்புலமை பெற்ற அவருடைய பக்தித் திறத்தையும், கருணைப் பெருக்கையும், அநுபவ முதிர்ச்சியையும் காண்கிறோம். முருகன் அருளால் தாம் பாடும் ஆற்றல் பெற்றதையும், எல்லாவற்றையும் மறந்து நிற்கும் அனுபவம் பெற்றதையும் பாடுகிறார்.

நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய
நிர்க்குணம்பூண்டு
என்னை மறந்திருந்தேன்! இறந்தே
விட்டது இவ்வுடம்பே

என்ற அநுபவம் மிக மிக உயர்ந்தது. உலகில் உள்ள மக்களிடம் பற்றையும், பொருள்களிடம் ஆசையையும் வைத்த மனம் முருகனை நிலையாக நினைக்கக்கூடத் தெரிந்து கொள்ளவில்லை. ஒரு கணத்தில் எண்பது கோடி நினைந்து எண்ணும் வேகம் உடையது அது. அத்தகைய மனம் ஒன்றையே நினைப்பது அருமை. நினைந்து நினைந்து பழகிப் பின்பு ஒன்றை உணர்வது பின்னும் அருமை. முருகனை உணர்ந்து உணர்ந்து உள்ளத்தின் ஆற்றல் முழுவதும் ஒருமுகப்பட்டால் உள்ளமே நின்றுவிடுகிறது; தன்னையே மறக்கும் நிலை வருகிறது; அங்கே உடம்புக்கு என்ன வேலை?

இந்த அநுபவம் அருணகிரிநாதருக்குக் கிடைத்தது. நமக்கும் இது கிடைக்காதா என்று அன்பர்களுக்கு ஆர்வம் உண்டாக வேண்டுமென்றே இதைச் சொல்கிறார்.

இத்தகைய அநுபவத்தை நுகர்ந்த அவர் இனிப் புதிதாகப் பெறப் போகிறவரைப் போல, மனத்தைப் பார்த்து ஒரு பாட்டில் பேசுகிறார். பக்குவம் பலவகை. முருகன் திருவடியிலே அன்பு வைத்து உருகும் ஒருவன் தன் மனத்தைத் துணையாக்கிக் கொண்டு இன்ப நிலையை அடைய முயலுகிறான். அவன் சொல்வது போல இருப்பது அந்தப் பாட்டு. ‘இக்கரை கடந்து வேலாயுதனைத் துணைக் கொண்டு அக்கரைக்குப் போகலாம் வா, மனமே’ என்று அழைப்பவர் போலப் பாடுகிறார்.

அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச்
சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே

என்று சொல்கிறார்.

தம்முடைய நிலை மிக உயர்ந்ததாக இருந்தாலும் மற்றவர்களையும் உயர்த்த வேண்டும் என்ற கருணை உள்ளவர் அருண கிரிநாதர். அவர்கள் நிலையையே தமதாக எண்ணிப் பாடும் இடங்கள் பல. சற்றே உயர்ந்த பக்குவ நிலையில் இருப்போர் பாடுவதாகச் சொன்னது மேலே சொன்ன பாட்டு. பெரும்பாலான மக்கள் அந்த நிலையில் இல்லை. பாசத்துட் கட்டுப்பட்டு ஐம்பொறிகளின் போக்கிலே மனத்தை அலைய விட்டுச் சுழன்று திரிகிறவர்களே பலர். அவர்களுக்கும் முருகன் அருள் கிடைக்க வேண்டும். அவர்களோ தமக்கு இன்ன அல்லல் வந்திருக்கிறது என்பதையே தெரிந்து கொள்ளாமல் உழல்கிறார்கள்; ஐம்பொறி களுக்கு அடிமையாகி உலக அரங்கில் ஆடுகிறார்கள்.

வாழ்க்கையை நாடகமாகச் சொன்னவர்கள் உண்டு. அருண கிரியாரும் ஒரு வாழ்க்கைக் கூத்தைக் காட்டுகிறார். ஒருவர் திரைக்குப் பின் இருந்து ஆட்டப் பாவைகள் ஆடும் கூத்து ஒன்று உண்டு; அதற்குப் பாவைக் கூத்து என்று பெயர். ஐந்துபேர் ஆட்ட ஒரு பாவை ஆடுகிற கூத்து வாழ்க்கைக் கூத்து. நெஞ்சாகிய ஒன்று ஐவருடைய செயலுக்கு உட்பட்டுச் சுழலுகிறது. ‘இத்தகைய கூத்துக்கு ஆட்பட்டு நான் திண்டாடுகிறேன்; என்னை ஈடேற்ற வேண்டும், முருகா!’ என்று வேண்டுகிறார் அருணகிரியார்.

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும்
ஐவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்”

என்பது அந்த வேண்டுகோள். ‘நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு, என்னை மறந்திருந்தேன்’ என்று சொன்னவரே இப்படிச் சொல்கிறார். இந்தப் பிரார்த்தனைப் பாட்டு, கந்தரலங்காரத்தில் 14-ஆவது பாட்டு. “என்னை மறந்திருந்தேன்'” என்ற அநுபவப் பாட்டு 19-ஆவது பாடல்.

14-ஆவது பாட்டுப் பாடுகிறபோது அப்படி இருந்தார். 19-ஆவது பாடலைப் பாடுகையில் உயர்ந்து விட்டார் என்று சொல்லலாமா? இதற்கு முன்பும் இத்தகைய அநுபவங்களைச் சொல்லியிருக்கிறார். கந்தர் அலங்காரத்தின் முதற் பாட்டே,

பிரபஞ்சம் என்னும்
சேற்றை கழிய வழிவிட்டவா!”

என்றல்லவா சொல்கிறது? பிரபஞ்சச் சேற்றை இறைவன் அருள் நீரினால் கரைத்துப் போக்கிவிட்டவர் அருணகிரிநாதர், அவருக்குப் பாச நெஞ்சு ஏது? ஐவரினால் சுழற்சி ஏது?

உலக வாழ்க்கையில் ஈடுபட்டு ஐவர் அடிக்கும் கூத்திலே சிக்கிச் சுழலும்த மனமுடையார்களுக்காகப் பாடிய பாட்டு இது. அவர்கள் வாயில்லாப்பூச்சிகள் என்ற இரக்கத்தால், அவர் களுக்காகப் பாடியது; அவர்களைத் தாமாகவே கருதிப் பாடியது. இத்தகைய வேண்டுகோட் பாடல்களை நாம் முருகன் சந்நிதானத்துக்குச் சென்று வழிபடும்போது பாடி உருக வேண்டும்.

இப்புத்தகத்தில் உள்ள பாடல்களில் இரண்டு அருணகிரியார் தாம் பெற்ற பேற்றைச் சொன்னவை; ஒன்று தம் மனத்தை நோக்கிச் சொல்வதாக அமைந்தது; மற்றொன்று பிரார்த்தனையாக உள்ளது. எஞ்சிய மூன்றும் உலகத்தவரைப் பார்த்து இன்னவாறு ஒழுகுங்கள் என்று உபதேசம் செய்யும் முறையில் இருப்பது. அறம், பொருள், வீட்டுநெறி என்ற மூன்று திறத்தில் இந்த உபதேசங்கள் அமைந்துள்ளன. தாம் ஈட்டியவற்றைப் பிறருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஈகை என்பது பொருள் நிரம்பியவருக்கு மாத்திரம் உரியதன்று. யாரும் அறம் செய்யலாம். தாம் தாம் பெற்றதைப் பிறருக்கும் இட்டு உண்ணுவதே அறம். தாம் உண்ணுவது சிறிதாயினும் அதிலும் ஒரு சிறு பங்கைப் பிறருக்கு வழங்க வேண்டும். இந்தக் கருத்துக்களை இரண்டு பாடல்களில் வெளியிடுகிறார்.

தானம் என்றும் இடுங்கோள்

என்று பொதுவாகச் சொன்னவர்,

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி
வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள்

என்று வசதியில்லாதவர்களும் அறம் செய்யும் முறையைச் சொல்லித் தருகிறார்.

பொருளைப் பிறருக்கு ஈவதுதான் அதனை ஈட்டுவதற்குப் பயன். ஈயாமல் ஈட்டித் தொகுக்கும் பொருளாலே இம்மையிலும் பயன் இல்லை; மறுமையிலும் பயன் இல்லை.

வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின்
வெறுநிழல் போல்
கையில் பொருளும் உதவாது காணும்
கடைவழிக்கே

என்றும்,

உங்கள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி உண்ணவொட்
டாது உங்கள் அத்தம் எல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வரு,
மோநும் அடிப்பிறகே

என்றும் பாடுவது காண்க.

உலகில் நன்றாக வாழவேண்டுமானால் முருகனைப் பணிந்து அன்பு செய்ய வேண்டும் என்று எதிர்மறைமுகமாகக் குறிப்பிக்கிறார்.

கோழிக் கொடியன் அடி பணி
யாமல் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலிகாள்!”

அமைதியுடைய வாழ்வே வாழ்வாகையால், அமைதியைத் தரும் இறையன்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது. நன்றாக வாழ்வதாக எண்ணுகின்ற வாழ்க்கை வெறும் போலி வாழ்க்கை; இறுதியில் சாவிலே முடியும் வாழ்க்கை; வளர்த்த ஆசைகளையும் வளர்த்த உறவுகளையும் வளர்த்த தாபனங்களின் மேல் உள்ள பற்றையும் வளர்த்த உடம்பையும் சுடுகாட்டிலே பொசுக்கிவிடும் வாழ்க்கை. இங்கே தொடங்கின முயற்சி அங்கே பலிக்க வேண்டும். அத்தகைய வாழ்வே வாழ்வு. அல்லாதது வாழ்வு அன்று.

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே! வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய், ஆழாமற் காப்பானை ஏத்தாதே

என்று மணிவாசகர் பேசுகிறார். நெஞ்சம் தான் நன்றாக வாழ்வதாகவே எண்ணி ஏமாந்து நிற்கிறது. “இது வாழ்வு அன்று; திடீரென்று அற்றுவிடும் கனவு. இந்த வாழ்வு பின்வரும் நீடிய இன்ப வாழ்வுக்கு வேராக, வித்தாக இருக்க வேண்டும். வல்வினைப் பட்டு ஆழாமல் காப்பானை ஏத்துவதே அதற்கு வழி” என்று மணிவாசகர் சொல்வதையே அருணகிரியார், “கோழிக்கொடியன் அடிபணியாமல் வாழ்ந்துவிடலாம் என்று மதிமோசம் போகிறவர்களே!” என்று வேறு வகையில் சொல்கிறார். “கோழிக்கொடியன் அடிபணியுங்கள்; நீங்கள் நன்றாக வாழலாம்” என்ற உபதேசமாகவே அதைக் கொள்ளவேண்டும்.

பின்னும் சில உபதேசங்களை அருணை முனிவர் இந்தப் பாடல்களில் சொல்கிறார். தானமும் தருமமும் செய்து, கோழிக் கொடியன் அடிபணியச் சொன்னவர் மனத்தைப் பண்படுத்தும் வழியையும் சொல்கிறார். மனம்போன போக்கிலே திரிந்து அதற்கு அடிமையாகிவிட்டால் நமக்கு மீட்சி இல்லை. அதன் போக்கிலே முட்டுக்கட்டை போடவேண்டும். வெகுளியைப் போக்க வேண்டும். சிறிதும் சலியாமல், ‘அது வேண்டும்; இது வேண்டும்’ என்று அலையாமல், ‘ஐயோ இது கிடைக்குமா!’ என்று ஏங்காமல், இருந்தபடி இருக்க வேண்டும்.

தடுங்கோள் மனத்தை; விடுங்கோள்
வெகுளியைத்; தானம் என்றும்
இடுங்கோள்! இருந்தபடி இருங்கோள்”

என்னும் பொன்னான உபதேசத்தை அருணகிரியார் கூறுகிறார்.

முருகனுடைய திருக்கோலத்தையும், அவனுடைய வீர விளையாடலையும் சொல்லாவிட்டால் இது கந்தருடைய அலங் காரம் ஆகாதே! அவற்றை அங்கங்கே இணைத்து இணைத்துப் பாடுகிறார். அவன் கை ஆறு இரண்டு உடையவன்; சண்முகன்; அவன் திருமார்பில் கடம்ப மலர்மாலை விளங்குகிறது.

அவன் திருவடி தாமரை மலரைப் போன்றது. அந்தப் பாதாரவிந்தங்களில் அடியார்கள் அருச்சித்த வெட்சி மலர் பொலிவு பெற்றுத் தோன்றுகிறது. தண்டையை அணிந்த திருவடி அது. அதனை அடியார்கள் அரணாகப் பற்றிக் கொள்கிறார்கள். அது தாவடி ஓட்டும் மயிலின் மேல் அமர்கிறது; தேவர் தலையிலே படுகிறது; அருணகிரியார் பா அடியேட்டிலே பதிகிறது.

அவன் திருக்கரத்தில் வேல் விளங்குகிறது. அது கூர்மையான வேல். வேதமும் ஆகமமுமே முருகன் கையில் வேலாக விளங்கு கின்றன. அழகுடைய அந்தச் சித்திர வேலால் அவன் சூரனுடைய மார்பையும் கிரவுஞ்ச மலையையும் துளைத்தான். கிரவுஞ்ச மலை சொன்னமயமானது. அதனை ஊடுருவிச் சென்றது அந்தக் கதிர்வேல்.

அவன் தன் திருக்கரத்தில் கோழிக் கொடியைப் பிடித்திருக்கிறான்.

குழந்தை முருகன் தன் பன்னிரண்டு கைகளாலும் சப்பாணி கொட்டுகிறான். அப்போது எட்டுத் திக்கிலும் உள்ள மலைகள் பிளந்து பாதி பாதியாய் விழுகின்றன; மேருமலை குலுங்குகிறது. “நாங்கள் பிழைத்துப் போனோம்” என்று தேவர்கள் குதுகலிக்கிறார்கள்.

ஒரு பாட்டில் முருகப் பெருமானுடைய மாமா வருகிறார். வாமனராகவும் திரிவிக்கிரமராகவும் வருகிறார்.

மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான்

என்று திருமாலைக் காட்டிப் பின்பு அவனுடைய மருகனாகிய முருகனைக் காட்டுகிறார்.

இந்தச் சொற்பொழிவுகளில் பாடல்களின் விளக்கம் விரிந்து நிற்கிறது. பல பெரியார்கள் சொன்ன கதைகளை இடையிடையே சொல்லியிருக்கிறேன். இராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறிய கதைகள் வரும். டால்ஸ்டாய் கதை வரும். புதிய கதையும் வரும். அப்படியே பழைய உவமைகளும் புதிய உவமைகளும் விரவியிருப்பதைக் காணலாம். நுட்பமாக உள்ள கருத்தைச் சொற்பொழிவில் விளக்கும் போது இவைகளெல்லாம் உபகாரமா கின்றன.

சில இடங்களில் மேற்கோளாகக் காட்டும் பாடல்களுக்கும் விளக்கம் கூறியிருக்கிறேன். திருக்குறட் பாக்களும் திருவாசகப் பாடலும் இப்புத்தகத்தில் விளக்கம் பெறுவதைக் கண்டு, மற்றொன்று விரித்தல் என்று அன்பர்கள் கொள்ள மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். சொல்ல வந்த கருத்துக்கு உபகாரமாக உள்ள அப்பாடல்களின் பொருள் தெளிவாகத் தெரிந்தால்தான் எடுத்துக் கொண்ட கருத்தோடு ஒப்பு நோக்க இயலும்; ஆதலால் விளக்க வேண்டியது இன்றியமையாததாயிற்று.

கந்தர் அலங்காரப் பாடல்கள் இலக்கியச் சுவைக்காக மாத்திரம் படிப்பவை அல்ல; அருணகிரியார் பெருமையை உணர்ந்து பாராட்டுமளவில் நிற்பதற்காகவும் இவற்றைப் படிக்கக் கூடாது. நம்முடைய வாழ்க்கைக்குப் பயன்படும் கூறுகள் இவற்றில் உண்டா என்று ஆராய்ந்து, அவற்றை மேற்கொள்ள வேண்டும். இந்தக் கருத்தைச் சொற்பொழிவுகளில் அவ்வப்பொழுது வற்புறுத்தி வருகிறேன். இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றிலும் அத்தகைய இடங்கள் சில இருக்கும்.

வழக்கம் போல் இந்தச் சொற்பொழிவுகளை எழுத்து வடிவம் எடுக்கும்படி செய்யும் அன்பர் ஸ்ரீ அனந்தன் அவர்கள் உதவி நீளுகிறது; அதனால் புத்தக வரிசையும் நீண்டு வருகிறது.

தேனாம்பேட்டைக் கோயில் தர்மகர்த்தர்களுடைய பேரார்வமும் கேட்கும் அடியார்களுடைய அன்பும் இணைந்து இச்சொற் பொழிவுகளை நன்றாகச் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தை எனக்கு அளிக்கின்றன.

எழுத்தாக வடிவெடுத்த சொற்பொழிவுகளைப் புத்தகமாகத் திரட்டிக் கோலம் செய்யும் உதவியை அமுத நிலையம் மேற்கொண்டிருக்கிறது. அதன் தலைவர் ஸ்ரீ. ரா.ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள் அன்பே இதனைச் செய்விக்கிறது.

எல்லோருக்கும் நன்றி.

கி.வா. ஜகந்நாதன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *