

திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்
பாவை நோன்பு
தமிழ்நாட்டில் நவராத்திரிக் காலத்தில் பெண்கள் பசுவைப் போல ஒரு பொம்மை செய்வது உண்டு. அதற்கு அலங்காரம் செய்து, கோலாட்டம் போட்டு வீடுதோறும் எண்ணெய், பணம் முதலியவற்றை வசூல் செய்வார்கள். அதுபோல் பழங்காலத்தில் மார்கழி மாதம் முழுவதும் நெய், பால் முதலியவை உண்ணாமல் விரதம் இருந்து தை மாதத்தில் விரதத்தை முடித்து நீராடுவார்கள். விரதம் முடிந்த உவகையினால் அப்போது நீராடுவதால் அவர்களுக்குச் செய்வினை முடித்த செம்மல் உள்ளமிருக்கும். விரதம் தப்பாமல் நிறைவேற்றி விட்டோம் என்ற திருப்தி உண்டாகும். தை மாதத்தில் தம் தாயருடன் சென்று நீராடுவார்கள். இப்படி ஆடுவதை ‘அம்பா ஆடல்’ என்று சொல்வது வழக்கம்.
வெம்பா தாக வியல்நில வரைப்புஎன
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
என்று பரிபாடல் இதைச் சொல்கிறது.
தாய் அருகா நின்று தவத்தைந்நீ ராடுதல்
என்று பரிபாடல் 11-ஆம் பாட்டில் வருகிறது. “இனிய பண்பின் இன் தை நீராடல்” என்றும் பரி பாடல் உரை கூறுகின்றது.
தை மாதம் முதல் தேதி நீராடுவதற்குத் தனிச் சிறப்பு உண்டு. மார்கழி முழுவதும் விடியற்காலையில் நீராடி அம்பிகையை வணங்குவார்கள். அம்பிகையின் படிமத்தை வைத்து அதற்குப் பூஜை முதலியன செய்வார்கள். இவ்வாறு நோன்பு இருப்பதால் இதைப் பாவை நோன்பு என்று சொல்வது வழக்கம். ஆண்டாள் திருப்பாட்டில் இதைப் பற்றிய செய்தி வருகிறது. பொதுவாக மார்கழி மாதம் தெய்வ சம்பந்தமுடையது. ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கண்ணபிரான் கீதையில் சொல்கிறார். நாமோ மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்று வழங்குகிறோம். அது தவறு. மற்ற மாதங்களில் எல்லாம் மக்கள் பல வகையான விழாக்களைக் கொண்டாடுவார்கள். சுற்றத்தார் அனைவர்களுடனும் சேர்ந்து இன்பக் களிப்பு அடைவார்கள். தெய்வத்தையும் வழிபடுவார்கள். ஆனால் மார்கழி மாதம் முழுவதுமே வேறு எந்தக் காரியமும் செய்யாமல் தெய்வத்தை வணங்குவதையே தம்முடைய குறிக்கோளாக வைத்து ஒழுகுவார்கள். அதனால்தான் மார்கழிக்குத் தெய்வத் தன்மை உண்டாயிற்று. இது அடிப்பட்டு வந்த வழக்கு. அது பீட மாதமேயொழிய பீடை மாதம் அன்று. தெய்வத்தைப் பீடத்தில் ஏற்றி, மனமாகிய பீடத்திலும் வைத்து வழிபடுகின்ற மாதம் அது. அதனால் மார்கழி மாதம் தெய்வங்களுக்குப் பூஜை விசேஷமாக நடக்கும். தனுர்மாச பூஜை எல்லாக் கோவில்களிலும் பெருமாள் கோவிலானாலும் சரி, சிவபெருமான் கோவிலானாலும் சரி,விடியற்காலையில் நடைபெறுவது வழக்கம். இன்றும் இந்த வழக்கம் இருந்து வருகிறது.
மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் ஒன்று கூடி மேற்கொள்ளும் இந்த விரதத்தினால் நாட்டிலும், வீட்டிலும் நன்மை உண்டாகும். நாட்டில் மழை பெய்யும்; வீட்டில் திருமணம் நடக்கும். திருவாசகத்திலுள்ள பாவைப் பாட்டிற்குத் திருவெம்பாவை என்றும், திவ்யப் பிரபந்தத்திலுள்ளதற்குத் திருப்பாவை என்றும் பெயர் வழங்கும். இனி, திருவெம்பாவையைப் பார்ப்போம்.
கி. வா. ஜகந்நாதன்



