திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்

11. ஏது அவனைப் பாடும் பரிசு?

ஆண்டவன் பெருமையைச் சொல்லத் தொடங்குகிறார்கள். முதலில் அவனது பாதத்தைச் சொல்கிறார்கள். இறைவனைத் தரிசிக்கும்போது அவனது திருவடியைத் தரிசிப்பது தான் முறை.

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல்மடவாள் கூறுஉடையாள் ஒருபாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல்உன் அரவுவார் கழல்இணைகள் காண்பாரோ அரியானே?

என மணிவாசகர் பிறிதோரிடத்தில் பாடுகிறார். இறைவனுடைய திருவடியை முதலில் கண்டு ஈடுபட்டு, பிறகு அவனது திருவுருவத்தைப் பார்க்க வேண்டும். நக்கீரr திருமுருகாற்றுப்படையில் இறைவனைச் சொல்லும்போது

மதனுடை நோன்தாள்.

என்று முதலில் இறைவனது திருவடியை எடுத்துச் சொல்கிறார்.

இறைவனுடைய பாதமாகிய தாமரை மலர் ஏழு பாதாளங்களுக்கும் கீழே இருக்கிறது. அதாவது அதுதான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாகத் தாங்கி நிற்பது. நம்முடைய அறிவுக்கும் கண்ணுக்கும் எட்டாத அதைப் பற்றிச் சொல்வோமானால் நம்முடைய சொற்கள் நழுவிவிடும். ஆகையால்,

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

என்றார். பாதத்தைச் சொன்னவுடன் முடியைப் பற்றி நினைக்கிறார். எந்தப் பொருள் முடிந்தாலும் அவற்றுக்கும் அப்பால் இருக்கிறவன் ஆண்டவன் எல்லாப் பொருளுக்கும் முடிவு உண்டு. முடிவாக உள்ள பொருளுக்கும் முடிவாக அவனே இருக்கிறான். அவன்தான் முடிவான முடிவு. அவன் திருமுடியில் மலர் இருக்கிறது. இங்கே அடியார்கள் அவனுக்கு அலங்காரமாக இட்ட மலர்களை அவன் தன்னுடைய விசுவரூபத்திலும் ஏற்றுக் கொண்டிருக்கிறான். அடியார்களுடைய அன்பை நிளைந்து அவ்வாறு செய்கின்ற பெரும் கருணையாளன் அவன்.

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே.

முதலில் பாதமலர் ‘சொற்கழிவு’ என்றும், இங்கே பொருளின் முடிவு என்றும் சொல்லையும், பொருளையும் குறித்தார்.

ஆண்டவனுக்கு எத்தனையோ வடிவங்கள். தனக்கென்று ஓருருவம் இல்லாவிட்டாலும் அடியார்களுக்குத் திருவருள் செய்யும் பொருட்டுப் பலவகையான திருமேனிகளை எடுத்துக் கொள்கிறான். அருவாக இருக்கிற அவன் முதலில் உருவாக வரும்போது அர்த்தநாரீசுவரனாக வருகிறான்.

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன; முறையே

என்று ஐங்குறுநூறு சொல்கிறது. அப்படி அர்த்தநாரீசுவரராக இருக்கும் திருமேனி ஒன்றுமாத்திரம் அவனுக்குச் சொந்தமானது அல்ல. இன்னும் பலப்பல திருவுருவங்களை ஏற்று அருளுவாள்.

பேதை ஒரூபால் திருமேனி ஒன்றல்லன்.

பேதை என்றது பெண் என்ற பொருளில் நின்றது. எல்லாம் கடந்தவனாக இருக்கின்ற அவனை நமக்கு வேதம் பல வகையிலே காட்டுகிறது அந்த வேதத்தின் முதல்வனாக இருக்கிறவன் அவன்தான்.

வேத முதல்.

அவனுடைய தொண்டர்களுக்குக் கணக்கே இல்லை ஆதிகாலம் முதற்கொண்டு இன்றுவரை அவனுக்குப் பலப்பல தொண்டர்கள் இருக்கிறார்கள். அந்தத் தொண்டர்களுடைய கூட்டம் எண்ணி அளவிட முடியாது. தேவலோகத்தில் உள்ளவர்களும், பூலோகத்தில் உள்ளவர்களும் துதித்தாலும் சொல்ல முடியாத பெரும் கூட்டமாகிய தொண்டரைப் பெற்றவன் எம்பெருமான்.

விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழம் தொண்டர் உளன்.

தோழம் என்பது கூட்டத்தைச் சொல்வது. இப்போது தொழுவம் என்று வழங்கும் சொற் போன்றது அது.

அந்த ஆண்டவனுடைய திருக்கோயிலில் தொண்டு செய்யும் பெண்களைப் பார்த்துச் சொல்கிறார். ‘இறைவனுடைய குற்றம் இல்லாத மேன்மையான குலத்தில் பிறந்து, கோவிலில் தொண்டு செய்யும் பெண்பிள்ளைகளே!’ என்று விளிக்கிறார்.

கோதில் குலத்து அரன்தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்!

அவர்கள் கோது இல்லாத குலத்தில் பிறந்து, திருக் கோயில்களோடு தொடர்புடைய தொண்டுகளைச் செய்பவர்கள். ஆதலின் அவ்வாறு சொன்னார்.

ஆண்டவனைப்பற்றி நாம் புகழப் புகுந்தால் எவ்வாறு புகழ்வது? உலகத்திலுள்ள மக்களுக்கு ஊர் என்றும் பேர் என்றும் உற்றார் என்றும் அயலார் என்றும் வேறுபாடு உண்டு. ஆனால் ஆண்டவனுக்கோ அது இல்லை. எல்லாம் அவன் ஊர்? ஆதலால் எந்த ஊரை அவன் ஊர் என்று சொல்வது?

ஏதவன் ஊர்?

அவனுக்குச் சத் நாம் அருச்சனை இருக்கிறது. சகஸ்ர நாம் அருச்சனை என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு தலத்திற்கும் வெவ்வேறு சகஸ்ர நாமங்கள் இருக்கின்றன.

அவற்றுக்குள்ளும் அவனுடைய திருநாமங்கள் அடங்குவது இல்லை. அவனுக்கு என்று தனிப் பேர் இருந்தால் இன்னது என்று சுட்டிச் சொல்ல முடியும். அவனுக்கோ பேர் இல்லை.

ஏதவன் பேர்?

உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அவனுக்குச் சொந்தமானவர்கள். அயலார் என்று சொல்வதற்கு யாரும் இல்லை. அவனுடைய திருவருள் ஆட்சியில் அடங்காத பிராணிகளே கிடையா. ஆகவே அவனுக்கு உற்றார் இவர். அயலார் இவர் என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஆர் உற்றார், ஆர் அயலார்?

“இவ்வாறு எந்த வகையிலும் எல்லை கட்ட முடியாத அந்தப் பெருமானை நம்முடைய சிற்றறிவும், சிறிய ஆற்றலும் கொண்டு எப்படிப் பாடுவது? அவன் பல பெரியவர்கள் பாடும் பாடலைக் கேட்டவன். அவற்றைக் கேட்டவனாகிய அவன் நாம் பாடும் பாடலைக் கேட்பானா? நாம் அவனை எவ்வாறு பாடுவது? அவனைப் பாடும் தன்மை எது?”

ஏதவனைப் பாடும் பரிசுஏலோர் எம்பாவாய்!

சிவபெருமானுடைய பாதமலர் சப்த பாதாளங்களுக்கும் கீழே சொல்லுக்கு எட்டாத நிலையில் இருப்பவை. அன்பர்கள் இட்ட மலர்களுடன் அலங்காரமாக விளங்கும் திருமுடியும் எல்லாப் பொருளுக்கும் முடிவாக இருக்கின்றது.

அவன் ஒரு பக்கத்தில் அம்பிகையை வைத்திருக்கின்ற திருமேனியை உடையவன். அந்த ஒரு திருமேனி மட்டும் கொண்டவன் அல்லன். அவன் வேதத்தாலே உணரப்படுகிற முதற்பொருள். தேவலோகத்தில் உள்ளவர்களும், பூலோகத்தில் உள்ளவர்களும் துதித்தாலும் எல்லை கட்ட முடியாத பெரும் கூட்டமாகிய தாண்டர்களை உடையவன் அவன். குற்றம் இல்லாத குலத்தில் பிறந்து, இறைவன் கோவிலில் திருப்பணி செய்யும் பெண பிள்ளைகளே. அவன் ஊர் எது, அவனுக்குப் பேர் எது. அவனுக்கு உற்றார் யார், யார், அவனைப் பாடுகின்ற தன்மை எது?’

பாதாளம் ஏழினும் கீழ் சொல் கழிவு பாத மலர்;
போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒருபால்; திருமேனி ஒன்று அல்லன்;
வேத முதல்; விண்ணோரும், மண்ணும், துதித்தாலும்,
ஓத உலவா ஒரு தோழம் தொண்டர் உளன்;
கோது இல் குலத்து, அரன் தன் கோயில் பிணாப்
பிள்ளைகாள்!
ஏது அவன் ஊர்? ஏது அவன் பேர்? ஆர் உற்றார்? ஆர்
அயலார்?
ஏது அவனைப் பாடும் பரிசு?’ ஏல் ஓர் எம்பாவாய்! (10)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *