
திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்
17. மழையே பெய்
பெண்களெல்லாம் சேர்ந்து இப்போது மழை பெய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறார்கள். அப்படி வேண்டும் போது மழை பெய்வதற்குரிய அறிகுறிகளுக்கெல்லாம் அம்பிகையின் அங்கங்களை உவமையாகச் சொல் கிறார்கள்.
முதலில் இந்தக் கடலில் நீரை மொண்டு இதனைச் சுருங்கச் செய்து மேலே எழுந்து வானத்தில் மேகங்கள் சென்று பரவுகின்றன.
முன்இக் கடலைச் சுருக்கி எழுந்து.
எழுந்து பரவிய மேகங்கள் நீல நிறம் உடையனவாய் அம்பிகையின் திருமேனியைப் போலத் தோற்றம் அளிக்கின்றன.
உடையாள் என்னத் திகழ்ந்து.
“பின்பு மேகங்கள் மின்னுகின்றன. அந்த மின்னல் எம்மைத் தொண்டர்களாகக் கொண்டு ஆளும் அம்பிகையின் சிறுகிய இடையைப் போல மின்னி விளங்குகின்றன.”
எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து.
”அந்த மேகங்கள் முழங்குகின்றன. அந்த முழக்கம் எம்பிராட்டியாகிய அம்பிகையின் திருவடியில் அணிந்துள்ள பொன்னாலாகிய அழகிய சிலம்புகள் ஒலிப்பது போல ஒலிக்கின்றன.
எம்பிராட்டி திருவடிமேற்
பொன்அம் சிலம்பிற் சிலம்பி.
மேகங்களில் இந்திரவில் தெரிகிறது. வளைந்து தோன்றும் அது அம்பிகையின் திருப்புருவம் போல விளங்குகின்றது.
திருப்புருவம் என்னச் சிலைகுலவி.
“நம்மையெல்லாம் ஆளாகக் கொண்ட அம்பிகை தன்னினின்று பிரிவின்றி இருக்கின்ற எம் கோமானாகிய சிவபெருமானுடைய அன்பர்களை எண்ணி அவள் நம் போன்ற அன்பர்களுக்கு முன் வழங்கும் இனிய திருவருளைப் போன்று, மழையே, நீ பொழிவாயாக!”
நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவுஇலா எம்கோமான், அன்பர்க்கும்
முன்னி அவள்நமக்கும் முன்சுரக்கும் இன்அருளே என்னப் பொழியாய் மழைஏலோர் எம்பாவாய்!
“அருளது சத்தி யாகும் அரன்றனக்கு’ என்பராதலின் சத்தியாகும் இறைவனுடைய அன்பர்களுக்குப் அந்தச் சக்தியே அருள் புரிகிறாள்.
“மழையே. முன்பு இந்தக் கடலை முகந்து இதைச் சுருங்கச் செய்து எழுந்து வானத்தில் சென்று பரவி நின்று எம்மை உடையவளாகிய அம்பிகையைப் போல நீல வண்ணத் தோடு விளங்கி, எம்மை ஆளுடைய அப் பெருமாட்டியின் சிறுகிய இடையைப் போல மின்னி விளங்கி, எம்பெருமாட்டியின் திருவடிமேல் அணிந்த பொன்னாலாகிய அழகிய சிலம்பைப் போல ஒலித்து, அப்பிராட்டியின் அழகிய புருவத்தைப் போல இந்திர வில்லைப் போட்டு, நந்தம்மை ஆளாகக் கொண்ட அந்தத் தேவியினின்றும் பிரிதலின்றி உள்ள எம் கோமானாகிய சிவபெருமானுடைய அன்பர்களுக்கும் ஒன்றுக்கும் பற்றாத நமக்கும் பெருங்கருணையால் நினைவு கூர்ந்து முன்னே வழங்கும் இனிய திருவருள் போலப் பொழிவாயாக!
முதலில் கடலில் மேகங்கள் நீரை முகக்கின்றன. பல மேகங்கள் முகத்திலினால் கடல் நீர் குறைகிறது. முன் இக் கடலைச் சுருக்கி: இக் கடல் என்பதில் உள்ள சுட்டு, நெஞ்சறி சுட்டு. “நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும், தடிந்து எழிலி, தான்நல்கா தாகி விடின்” என்னும் குறளில் தடிந்து என்பது போலச் சுருக்கி என்னும் சொல் வந்தது. தடிந்து என்பதற்குக் குறைத்து என்று பொருள் எழுதுவர் பரிமேலழகர். எழுந்து- எழும்பி வானத்திற் சென்று. உடையாள் – நம்மைச் செல்வமாக உடையவள்; ஸ்வாமிநீ என்று வடமொழியிற் கூறுவர். பெற்ற தாய்க்குப் பிள்ளைகளே சிறந்த செல்வமாதலின் அவர்கள் அம்பிகையின் உடைமை போன்றவர்கள். குழந்தைகளை. ‘”என் செல்வமே!” என்று அழைக்கும் உலக வழக்கும் இங்கே நினைவு கூரத் தக்கது.
அம்பிகை நில நிறமுடையவ ளாதலின் மேகங்கள் அவளைப் போலத் திகழ்ந்தன, “நீல மேனி வாலிழை” என்று ஐங்குறுநூற்றில் வருவது காண்க. இட்டிடை – இடுகிய இடை; பெண்களுக்கு இடை சிறுத்திருத்தல் அழகு ;
‘சிற்றிடையாள்’ என்பது செய்யுள் வழக்கு. அம்பிகையின் இடை மின்னலைப் போலச் சிறுத்துள்ளது. ‘மின்னிடையாள்’ என்ற வழக்கும் உண்டு. ஆதலின், ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து’ என்றாள்.
அம்மை தன் திருவடிகளில் பொன்னாலாகிய அழகிய சிலம்புகளைப் புனைந்திருக்கிறாள். அவள் நடக்கும் போது அவை கல் கல் என்று ஒலிக்கின்றன. சிலம்புகளினுள்ளே பரல்கள் இருத்தலின் அத்தகைய ஒலி உண்டாகும். ஆதலால், எம்பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி, என்றாள். பொன் அம் சிலம்பு – பொன்னாலாகிய அழகிய சிலம்பு. இயற்கையாகவே பொற்சிலம்பு அழகிய தாயினும் இறைவியின் திருவடியில் அவை பின்னும் அழகு பெற்றுத் திகழ்கின்றன. ”அமிழ்தினைச் சுவைசெய்தென்ன அழகினுக் கழகு செய்தார்” (கோலங்காண் படலம்) என்று கம்பர் பாடுவது காண்க.
அம்பிகையின் அழகிய புருவம் அங்க இலக்கணத்துக்கு ஏற்ப வளைந்திருக்கின்றன. வானவில்லாகிய இந்திர வில் வளைந்து பார்க்கப் பார்க்க அழகு தருவது போல அன்னையின் புருவம் இலங்குகிறது. ஆகவே, ‘திருப்புருவம் என்னச் சிலைகுலவி’ என்கிறாள். குலவுதலாவது மேகத்தினிடையே சேர்ந்து தோன்றுதல் நந்தம்மை என்றது ஆட்கொள்ளப் பெற்ற பெருமிதத்தைக் குறித்தது. அம்பிகையும் இறைவனும் வேறன்றி ஒன்றி இருப்பவர்கள். அவர்கள் பிரிவதே இல்லை.ஆதலின், ‘தன்னிற் பிரிவிலா எம் கோமான்’ என்கிறாள். பெருமானிடம் பேரன்புடையவர்கள் ஆதலின், “எம் கோமான்” என்கிறாள், கோமான்-தலைவன்; உலகில் பணியாலும் பதவியாலும் தலைவர்களாக உள்ளவர்கள் யாவரினும் உயர்ந்த தலைவன் அவன். கோமான் என்றும் கோமகன் என்றும் வழங்குபவை ஒரே பொருளை உடையன,
சிவபெருமானுடைய அன்பர்க்கு அவன் அருள் கிடைக் கிறது. அந்த அருள் இறைவியே யன்றி வேறு அன்று. சிவ பெருமான் சக்தன்; அவனிடம் உள்ள சக்தி அருள். அந்த அருளே சக்தி “அருளது சத்தி யாகும் அரன்றனக்கு” என்று முன்பே காட்டப் பெற்றது. அன்பர்க்கும் நமக்கும் என்று சொன்னமையால், ‘அன்பர்களின் தன்மை சிறிதும் இல்லாத நமக்கும்’ என்ற பொருள் கொள்வதற்குரியது. முன்னி – நம்மையும் ஒரு பொருளாக எண்ணி.
முன் சுரக்கும் இன் அருள் உவகை யெல்லாம் பாதுகாக்கும் அருளை யுடைய பிராட்டி முன்பாக நமக்கு இனிய அருளை வழங்குகிறாள் என்றபடி. உணவு முதலியவற்றை வழங்குகிறவர்கள்
முதலில் தமக்கு வேண்டியவர்களுக்கு வழங்குவது போன்றது இது.
தமக்கு வழங்கும் அருள் பிற வகையில் செய்யும் அருளை விட இனியதாதலின் ‘இன்னருள்’ என்றாள். அந்த அருளால் பெறும் இனிமை வேறு எதனாலும் வருவதன்று. அருளே ஏகாரம், அசைநிலை. பொழியாய் – பெய்வாயாக. மழை: விளி.
மழையைப் பார்த்து, ‘நீ பொழிவாயாக’ என்று சொல்கிறார்கள்.



