திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்

12. எய்யாமற் காப்பாய்

இறைவனிடம் பெண்கள் விண்ணப்பம் செய்து கொள்கிறார்கள். நீராடித் தூய்மையுடன் இறைவனை வழிபடுகிறவர்கள் அவர்கள், அவர்கள் சிறு பெண்களாதலின் நீராடும் பொழுது உல்லாசமாக ஆடிக் களிக்கிறார்கள் ஆடும் பொய்கையில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. அவற்றில் வண்டுகள் மொய்க்கின்றன, அத்தனை பேரும் நீராடுவதற்குரிய விசாலமான பொய்கை அது.

மொய்யார் தடம் பொய்கை.

அதிலே அவர்கள் குதிக்கிறார்கள். முகேர் என்ற ஒலி எழும்புகிறது. கையினாலே நீரை அள்ளி ஒருவர் மேல் ஒருவர் வீசிக்கொள்கிறார்கள். அப்படி வீசும் பொழுதெல்லாம் இறைவனுடைய திருவடிகளைப் பாடிக்கொண்டே வீசுகிறார்கள்.

முகேர்என்னக் கையால் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி.

“இவ்வாறு உன்னிடம் அன்பு வைத்து எது செய்தாலும் உன்னை மறவாமல் நினைக்கிறோம்; பாடுகிறோம். ஐயனே, நாங்கள் பரம்பரை பரம்பரையாக உனக்கு அடியார்களாக இருப்பவர்கள். அவ்வாறு இருப்பதனால் எங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்தோம். உண்மையான வாழ்வு இதுதான் என்பது எங்களுக்குத் தெரியும். இது நீயும் அறிந்ததுதானே?’

ஐயா, வழி அடியோம் வாழ்ந்தோம்; காண்,

“திருமேனி நிரம்பி அழலைப் போலச் சிவப்பாய் இருக்கும் எம்பெருமானே, திருநீற்றில் ஆடி உவகை கொள்பவனே, அருட் செல்வம் நிரம்பியவனே. சிறிய இடையையும் நிறைந்த மையை உடைய விசாலமான கண்ணை யும் உடைய மடந்தையாகிய உமா தேவியின் மணவாளா!”

ஆரழல்போல் செய்யா, வெண் ணீறாடி; செல்வா.
சிறுமருங்குல்
மைஆர் தடங்கண் மணவாளா!

“எங்கள் தலைவனே, நீ அன்பர்களை ஆட்கொண் டருள்வதையே திருவிளையாடலாக உடையவன். அத்தகைய விளையாட்டினால் நற்பேறு பெற்றவர்கள் பலர். அவர்களைப் பற்றிக் கேட்டிருக்கிறோம். அவர்கள் எவ்வெவ்வாறு நற்பேறு பெற்றார்களோ அவ்வகையெல்லாம் ஒன்றுக்கும் பற்றாத நாங்கள் பெற்று உயந்து நிற்கின்றோம். இதுகாறும் எங்களை உன்னுடைய அன்பிலே ஈடுபடுத்திப் பாதுகாத்தாற்போல இனியும் இளைக்காமல் எங்களைப் பாதுகாப்பாயாக!”

ஐயா, நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்;

எய்யாமற் காப்பாய் எமை ஏலோர் எம்பாவாய்!

உய்ந்து விட்டோம். என்ற பொருளை உடையது, உய்ந்து ஒழிந்தோம் என்பது உய்ந்து பிற செயல்களைச் செய்யாது ஒழிந்தோம் என்றும் பொருள் கொள்ளலாம்.

மொய் ஆர் தடம் பொய்கை புக்கு, முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து, உன் கழல் பாடி,
ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோம் காண்; ஆர் அழல்போல்
செய்யா! வெள் நீறு ஆடீ! செல்வா! சிறு மருங்குல்
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம், உய்ந்து ஒழிந்தோம்;
எய்யாமல் காப்பாய் எமைஏல் ஓர் எம்பாவாய்!

[வண்டுகள் மொய்க்கின்ற நீர் நிரம்பிய விசாலமான பொய்கையிலே குதித்து முகேர் என்ற ஒலி எழும்ப, கையினால் நீரை அள்ளி அள்ளி வீசி, உன் திருவடியைப் பாடி, ஐயனே, பரம்பரை பரம்பரையாக உன் அடியோமாக இருக்கும் நாங்கள் உய்தியை அடைந்தோம். நிரம்பிய தீயைப் போலச் சிவந்த திருமேனியை உடையவனே, வெண்மையாகிய திருநீற்றால் அபிடேகம் கொள்பவனே, அருள் என்னும் செல்வத்தை உடையவனே, சிறிய இடையையும் மையையுடைய விசாலமான கண்ணையுமுடைய உமா தேவியாரின் கணவனே. எம் தலைவனே, நீ தொண்டர்களைப் பல வகையில் ஆட் கொண்டருள்கிறாய். அவர்கள் பல்வேறு வகையில் நற்பேறு பெறுகிறார்கள் அவ்வாறு உய்யும் வகை யெல்லாம் நாங்களும் உய்ந்துவிட்டோம். இனி எம்மைச் சோர்வடையாமல் கைவிடாமல் பாதுகாப்பாயாக.]

மொய்- வண்டு மொய்க்கின்ற, தடம் – பொய்கை விசாலமான நீர் நிலை; பொய்கை – மனிதர் ஆக்காத நீர் நிலை என்று பொருள் எழுதுவார் நச்சினார்க்கினியர். அவர்கள் கன்னிப்பெண்களாதலின் பொய்கையில் குதிக்கிறார்கள். அதனால் முகேர் என்ற ஒலி எழும்புகிறது. அப்படிக் குதித்துக் கையினால் தண்ணீரை அள்ளி ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொள்கிறார்கள். அதனால், பொய்கை புக்கு முகேர் என்னக் கையால் குடைந்து குடைந்து, என்கிறார்கள். குடைதலாவது கை நிறைய அள்ளி வீசுதல், உள்ளே முழுகி எழுதலுமாம். அவ்வாறு மூழ்கும் போது இறைவனுடைய திருவடியைப் பாடிக்கொண்டே மூழ்குகிறார்கள். ‘உன்கழல்பாடி’ என்கிறார்கள்.

ஐயன் – தலைவன்,வழி அடியோம் என்பது, ‘உன்னைப் பாடுவதும் புகழ்வதும் நாங்கள் புதியனவாகக் கற்றுக் கொள்ளவில்லை. பரம்பரை பரம்பரையாக எங்கள் முன்னோர் காலத்திலிருந்து வந்த வழக்கம் இது. நாங்கள் மறந்தாலும் இந்த வழக்கம் எங்களை விடாது’ என்றபடி, ‘இவ்வாறு செய்வதனால் நாங்கள் உண்மையான வாழ்வை வாழ்ந்தோம். உன்னை மறந்து வாழ்வது வாழ்வன்று. காண். அசை ; இதை நீயே தெளிவாயாக எனலும் ஆம்.

இறைவன் செம்மேனியன். நிரம்பிய அழலைப் போல ஒளியும் செம்மையும் உடையவனாதலின். ‘ஆரழல்போல் செய்யா’ என்றாள். நீறாடி என்பதற்கு நீறு பூசுகிறவன், திருநீற்றபிடேகம் கொள்பவனென்றும் பொருள் கொள்ளலாம். பெண்களுக்கு இடை சிறுத்தல் அழகாதலின், ‘சிறு மருங்குல்’ என்றாள். மை இடுவது சுமங்கலிக்கு அடையாளம் அம்பிகை நித்திய சுமங்கலியாதலின் எப்போதும் மை யிட்டிருப்பவள். “மைந் நின்ற ஒண்கண்” என்று கூறுவது காண்க. தடங்கண் விசாலமான கண்; விசாலாட்சி.

தன் அன்பர்கள் பலருக்கும் கருணை வெள்ளம் பரப்பத்தக்க விசாலமான கண் மடந்தை என்றது பருவத்தைக் குறியாமல் பெண் என்னும் துணையாய் நின்றது. அம்பிகையை ஆண்டவன் இமய அரசன் தர மணந்துகொண்டான். என்றும் தன்னுடன் பிரியாமல் இருப்பவளாயினும் இப்படி ஒரு திருவிளையாடல் புரிந்தான். மீனாட்சி திருமணமும் அத்தகையதே. ஆதலின் மையார் தடங்கண் மணவாளா என்கிறாள்.

கல்யாணசுந்தர மூர்த்தி என்பது இறைவன் திருக்கோலங்களில் ஒன்று. ஐயா என்று இரண்டாம் முறையும் விளிக்கிறாள். ஆதரம் மிகுந்தால் இவ்வாறு மீட்டும் மீட்டும் ஒரே விளி வரும்.

ஆண்டவன் செய்வன யாவும் திருவிளையாடல்கள். அவற்றால் அன்பர்கள் உய்வார்கள்; அல்லாதார் துன்புறுவார்கள். கதிரவன் ஒரே மாதிரி வெயில் வீசினாலும் குளிர் காய்கிறவர்கள் காய்வதும் புழு மாய்வதும் போன்றது இது.

“உன்னுடைய அன்பின் வலிமையால் பல பேர் பல் வகையில் உய்ந்திருக்கிறார்கள், உன்பால் அன்புடைமையினால் அவ்வாறு உய்ந்தவர்களைப் பற்றியெல்லாம் நாங்கள் உசாவி அறிந்திருக்கிறோம். அவர்கள் எவ்வெவ்வாறு உய்ந்தார்களோ அப்படியெல்லாம் நாங்களும் உய்ந்துவிட்டோம்” என்கிறார் கள்: ‘ஐயா, நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின், உய்வார்கள் உய்யும்படியெல்லாம் உய்ந்தொழிந்தோம்’; ‘உனக்கு இது விளையாட்டாக இருந்தாலும் எங்களுக்குப் பெறுதற்கரிய பெரும் பேறாக விளைந்தது’ என்ற கருத்துப்படச் சொல்கிறாள்.

பெரும் பொருளை மடியில் வைத்திருக்கிறவன் தக்க பாதுகாப்புடன் சென்றாலும் ஒரு கால் தவறிவிடுமோ என்று ஐயப்படுவது போல, “எம்பெருமானே, மறவாமல் எங்களைப் பாதுகாத்தருள வேண்டும்” என்கிறார்கள். “உய்ந்தொழிந்தோம்” என்று சொன்னாலும், பெற்றது நழுவாமல் இருக்க வேண்டுமே என்ற அச்சத்தால் இவ்வாறு சொல்கிறார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *