திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்

13. “சுனைநீர் ஆடுவோம்”

நீராடும் பெண்கள் பேசிக் கொள்கிறார்கள். சுனை நீரில் ஆடுகிறார்கள். நம்மைப் பிறவியென்னும் துயரம் பிணித்திருக்கிறது. அது கெட வேண்டும். அதற்கு வேறு யாரிடம் சென்று வேண்டுவது? அந்தத் துயரம் போக வேண்டுமானால் ஒருவனால்தான் முடியும். அவன்தான் ஆரவாரத்தோடு பாடி நடனமிட்டுக்கொண்டாடும் புனிதன்.”

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்,

“அவன் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்கள் பல.அவற்றில் எல்லாம் சிறந்தது நன்மைகள் யாவும் பொருந்தியதில்லை. அங்கே உள்ள திருச்சிற்றம்பலத்தில் தீயில் நின்று நடனம் செய்யும் பெருமான் அவன்.’

நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீஆடும்
கூத்தன்.

எல்லா வகையினும் சிறந்த தீயைப் போன்ற அந்தப் பெருமான் அதில் உவந்து கூத்தாடுகிறான். பெருந் தீயைச் சிறு தீ என்ன செய்யும்? “அவன் செய்யும் திருவிளையாடல்கள் பல. இந்தத் தேவலோகத்தையும் பூவுலகையும் பாதுகாக்கிறவன், குவலயம் முழுவதையும் பாதுகாப்பவன் அவன். மன்னர்கள் காப்பது வெறும் வியாஜ மாத்திரம். உண்மையில் அவன்தான் காக்கிறான். தான் வைத்த மரத்துக்குத் தண்ணீரும் எருவும் இட்டுப் பாதுகாப்பவனாக இருக்கிறான். அதனைக் காக்கிறான். சர்வப் பிரளய காலத்தில் அவற்றை மறைத்தும் விளையாடுகிறான். ஐங்கலப் பாரம் சுமக்கிறவனுக்கு ஒரு சிறு துரும்பைத் தூக்குவது எப்படி எளிதோ அப்படி அவன் காத்தலையும் படைத்தலையும் கரத்தலையும் செய்து விளையாடுகிறான். அவனுடைய அன்பர்கள் அவன் செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் அவனுடைய திருவிளையாடல்களாகவே எண்ணிப் போற்றுவார்கள். தமக்குத் துன்பம் வந்தாலும் அதுவும் அவன் திருவிளையாடலே என்று எண்ணி மகிழ்வார்கள். ‘இடும்பைக்கு இடும்பைப் படுப்பவர்கள்’ அவர்கள். நாம் அவனுடைய புகழைப் பேசுவோம். வேறு வார்த்தைகளைப் பேசாமல் அவன் திருவிளையாட்டைப் பற்றியும் அவன் இயல்புகளைப் பற்றியும் பேசுவோம்.”

இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி.

“இவ்வாறு அவனைப் பற்றியே வார்த்தைகளைப் பேசி நம் வளைகள் ஒலிக்கவும் நீண்ட உடைகள் ஒலித்து ஓசை செய்யவும், நம் அழகுடைய கூந்தலின் மேல் வண்டு ஒலிக்கும்படி நீராடுவோம்.”

வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டு ஆர்ப்ப.

“தாமரை மலர்களும் பிற மலர்களும் மலர்ந்து விளங்கும் இந்தப் பொய்கையில் நாம் குள்ளக் குளிர மூழ்குவோம். நம்முடைய சுவாமியாகிய இறைவன் பொலிவு பெற்ற திருவடிகளைத் துதித்து இந்தப் பெரிய சுனை நீரில் ஆடுவோமாக.”

ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும்,
காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி,
வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம்
ஏத்தி, இரும் சுனை நீர் ஆடுஏல் ஓர் எம்பாவாய்!

[“நம்மைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பிறப்பு என்னும் துயரம் கெடும்படியாக, ஆரவாரித்து நடனம் செய்கின்ற புனிதனும், எல்லா நன்மைகளும் உடைய தில்லையில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் தீயில் நின்று ஆடும் கூத்தனும், இந்த வானத்தையும் பூவுலகத்தையும் மற்ற உலகங்களையும் பாதுகாத்தும் அவற்றைப் படைத்தும் பிறகு மறைத்தும் விளையாடுபவனும் ஆகிய சிவபெருமானுடைய புகழாகிய வார்த்தைகளையும் அவனோடு தொடர்புடையவற்றையும் பேசி, நம்முடைய அழகையுடைய கூந்தலின்மேல் வண்டுகள் மொய்த்து ஒலிக்க, பல வகையான மலர்கள் திகழும் பொய்கையில் மூழ்கி, நம்மை உடையவனாகிய சிவபெருமானுடைய பொலிவு பெற்ற திருவடிகளைத் துதித்து இந்தப் பெரிய சுனை நீரில் ஆடுவோமாக!”

“நம்முடைய செயலால் விடுபட முடியாமல் கட்டுப் படுத்தியிருத்தலால் ‘ஆர்த்த பிறவி’, அந்தப் பிறவி கெட் டால் முத்தியை அடையலாம். அதன் பொருட்டு, நாம் எல்லோரும், ஆரவாரம் செய்து நடனம் செய்யும்புனிதனும் திருத்தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் தீயில் நின்று ஆடும் நடராஜப் பெருமானும், இந்தத் தேவலோகத்தையும் பூவுலகத்தையும் பாதுகாத்தும் படைத்தும் பிறகு மறைத்தும் விளையாடுபவனுமாகிய சிவபெருமானைப் பற்றிய வார்த்தைகளையும் அவனோடு தொடர்புடையவற்றைப் பற்றியவற்றை யும் பற்றிப் பேசி, நம்முடைய வளைகள் ஒலிக்கவும், நம் நீண்ட ஆடைகள் ஒலித்து ஓசை செய்யவும். நம்முடைய அழகு பெற்ற கூந்தலின்மேல் வண்டுகள் ஒலிக்கவும், பல வகைப் பூக்கள் திகழும் இந்தப் பொய்கையில் மூழ்கித் திளைத்து நம்மை உடையவனுடைய பொலிவு பெற்ற திருவடிகளைப் புகழ்ந்து இந்தப் பெரிய சுனையில் ஆடுவோமாக.”

நம்முடைய முயற்சியால் நீக்க முடியாமல் இறைவன் அருளால் நீங்கும்படி கட்டுப்படுத்தலின் ‘ஆர்த்த பிறவி’ என்றாள். ‘நாம் வார்த்தையும் பேசி’ என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். ஆர்த்து ஆடும் – திருவடிச் சிலம்பு முழங்கவும் வாத்தியங்கள் ஒலிக்கவும் ஆடும். ஆர்த்து – ஆர்ப்ப; எச்சத்திரிபு. தீர்த்தன் – தூயவன்; தன் புகழைப் பாடுவோருடைய மாசுகளைத் தீர்த்துப் புனிதம் செய்பவன் எனலும் ஆம். நல் தில்லை என்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று நலங்களையும் பெற்ற திருத்தில்லை என்றபடி தில்லை என்பது தலம்; அங்கே உள்ளது திருச்சிற்றம்பலம். அங்கே இறைவன் தீயில் நின்று ஆடுகிறான். வானத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவதனால், ‘இவ் வானும்’ என்கிறாள். எல்லாமும் என்றது எல்லோமும் என நின்றது. உலகம் நிலவுவது கண்முன் தெரிவதாதலின் காத்தலை முதலில் உண்டாக்கியவனும் பிறகு மறைப்பவனும் அவனே ‘ஆதலின் காத்தும் படைத்தும் கரந்தும்’ என்றாள். ‘இவை யாவும் அவனுக்கு அருஞ்செயல் அல்ல. விளையாட்டுப் போன்றவை என்ற கருத்தால், “விளையாடி” என்றாள். விளையாட்டு ஆடுபவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் இன்பம் தருவது போல இறைவன் திருவிளையாடல்கள் அவனுக்கு அவனுடைய அன்பர்களுக்கும் இன்பம் தருவன. அவனுடைய செயல்கள் யாவும் விளையாட்டு என்பதை, உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும், நிலைநிறுத்தலும் நீக்கலும் நீங்கலா, அலகி லாவிளை யாட்டுடையார்” என்று கம்பர் கூறுவதனாலும் உணரலாம்.

விளையாடி – விளையாடுபவன்; வினையாலணையும் பெயர். விளையாடியினுடைய வார்த்தை. வார்த்தையும் என்னும் உம்மை, அவனைப் பற்றிய பிற இயல்புகளையும் பேசுவதைக் குறிக்கும் எதிரது தழீஇய எச்ச உம்மை. பேசி என்றது.

வெறுமனே பேசுவதெல்லாம் இறைவனுடைய குண நலங்களாகவே இருக்கும் என்பதைக் குறிப்பித்தது. பல வளைகள் அணிந்த பெண்களாதலின் அவை ஒலித்தன. கன்னிப் பெண்கள் பல வளைகள் அணிவது இயல்பு. பெண்கள் ஆண் களைவிட நீண்ட ஆடையை உடுத்துபவர்களாதலின், ‘வார் கலைகள்’ என்றாள். ஆர்ப்பு – ஒலி. அரவம் – பிறர் காதில் விழும்படி ஒலிக்கும் ஓசை. அணி குழல்- அழகையுடைய கூந்தல்; பல அணிகலன்களை அணிந்த கூந்தல் என்றும் ஆம். அந்தக் கூந்தலில் மலர்களைச் சூடியிருத்தலின் அவற்றின் மேல் வண்டுகள் முழங்கின. பூ என்றது தாமரை முதலிய நீர்ப் பூக்களை. திகழும் பொய்கை: இந்தப் பொய்கையில் பூத்ததனால் அவை திகழ்கின்றன.

பொய்கை – மனிதர் ஆக்காத நீர் நிலை. குடைதல் – மூழ்கி மூழ்கி எழுந்து விளையாடல். உடையான்- நம்மை உடையவன்; சுவாமி என்ற வட சொல் இந்தப் பொருளை உடையதே. பொற்பாதம் – பொலிவு பெற்ற திருவடிகள்; பொன்னைப் போன்ற திருவடிகள் என்னலும் ஆம். பொன்வண்ணம் எவ் வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்” என்று பொன் வண்ணத்தந்தாதியில் வருவது காண்க. ஏத்தி- உயர்வாகப் புகழ்ந்து. பல பெண்களும் ஆடப் புக்கமையின் அந்தச் சுனை பெரிய சுனையாக இருக்கிறது.

இறைவனைப் பாடி நீராடுவோம் என்பது கருத்து.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *