
திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்
6. ‘உணராய், உணராய்’
பின்னும் ஒரு வீட்டுக்குப் போகிறார்கள். அவள் இறைவனிடம் பக்தி உள்ளவள்தான். என்றாலும் உறக்கத்தின் சுகத்திலே மயங்கிப் படுத்திருக்கிறாள். இப்போது அவளைப் பார்த்து வந்தவர்களில் தலைவி பேசத் தொடங்குகிறாள்.
“திருமால் அறியாதவனும் நான்முகனாற் காணப்படாதவனும் ஆகிய மலை போன்ற சிவ பெருமானை நாம் அறிவோம் என்று இத்தகைய பொய்களைப் பேசும் வஞ்சகம் உள்ள பெண்ணே, பாலூறுகிற தேன் படிந்திருக்கிற வாயை உடையவளே; கதவைத் திறப்பாயாக”
மால்அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்க ளேபேசும் பால்ஊறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்.
“நாங்கள் உள் வீட்டு வாயிலில் வந்து நின்று எம் பெருமானைப் பாடுகிறோமே! உலகத்தாராலும் விண்ணகத் தாராலும் பிற உலகத்தாராலும் அறிவதற்கரியவனுடைய திருக் கோலத்தையும், அலன் ஒன்றுக்கும் பற்றாத நம்மையும் ஆட் கொண்டு நம் குற்றங்களைத் தீர்த்து நலம் செய்யும் எளிய சீலத்தையும்,பாடி, சிவனே, சிவனே என்று இத்தனை பேரும் சேர்ந்து ஓலமிடுகிறோமே!’
ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான் கோலமும், நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும்பாடிச் சிவனே, சிவனே என்று ஓலம் இடினும்.
“இன்னும் நீ துயில் நீங்கவில்லை. நாங்கள் பேசுவதையும் உணரவில்லை.”
உணராய் உணராய் காண்
‘மயிர்ச் சாந்தைப் பூசிய குழலையுடைய பெண்ணே, உன் தன்மை இது தானா?’
ஏலக் குமலி பரிசேல் ஓர் எம்பாவாய்
மால் அறியா நான் முகனும் காணா மலையினைநாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்க ளேபேசும் பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்; ஞாலமே விண்ணே, பிறவே, அறிவரியான்
கோலமும், நம்மைஆட் கொண்டருளிக் கோதுஆட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும், உணராய், உணராய்காண்;
ஏலக் குழலி, பரிசு! ஏலோர் எம்பாவாய்!
‘திருமாலால் அறியப்படாதவனும் நான்முகப் பிரமனால் காணப்படாதவனும் மலை போன்றவனுமாகிய சிவ பெருமானை நாம் அறிவோம் என்றும் பிறவாறும் உள்ள பொய்களையே பேசும், பால் ஊறுகிறதும், தேன் பிலிற்றுவதுமுடைய வாயைப் பெற்ற வஞ்சகமுடைய பெண்ணே, உன் வாயிலைத் திறப்பாயாக, பூமியும் தேவருலகமும் பிற உலகங்களும் அறிவதற்கரிய எம் பெருமானுடைய அழகிய திருக் கோலத்தையும், ஒன்றுக்குப் பற்றாத நம்மையும் தனக்குத் தொண்டராகக் கொண்டு நம்முடைய குற்றங்களைப் போக்கி யருளும் எளிய சீலத்தையும் பாடிச் சிவனே, சிவனே என்று இத்தனை பேரும் சேர்ந்து கூக்குரல் இட்டாலும் நீ துயில் நீங்காமலும் நாங்கள் சொல்வதை உணராம லும் இருக்கிறாயே! மயிர்ச் சாந்து பூசிய கூந்தலையுடையே பெண்ணே, உன் தன்மை இதுதானா?’
மால் என்பது மயக்கத்தையும் குறிக்கும். இரட்சக கர்த்தாவாக இருக்கிற தன் நிலையை எண்ணி அவன் மயங்கியிருக்கிறானாம்; அதனால் அவன் சிவபெருமான் பெருமையை அறியவில்லை. நான்கு முகங்களை உடைய பிரமனுக்கு எட்டுக் கண்கள். இருந்தபடியே எல்லாத் திசைகளையும் பார்க்கும் ஆற்றல் உள்ளவன். அவன் பிரபஞ்சத்தைப் பார்க்கிறான். ஆனால் எல்லாவற்றுக்கும் மூலகாரணனாக இருக்கும் இறைவனை எண்ணாமல் தான் படைப்பதனால் தான் உலகம் உண்டாகிறது என்ற எண்ணத்தோடு பார்க்கிறான். அதனால் ‘நான்முகனும் காணா’ என்கிறாள்.
இறைவன் அசஞ்சலமானவன். யார் இறந்துபட்டாலும் தான் நித்தியனாக இருக்கிறவன். வறப்பினும் வளந்தரும் மலைபோல யாவரினும் உயர்ந்து நிற்கிறவன். ஆதலால் அவனை ‘மலையினை’ என்கிறாள்.
“அத்தகையவனை நாம் போலறிவோம், என்கிறாயே” என்கிறாள். ‘நாமாக்கும் அறிவோம்’ என்ற உலக வழக்குப் போன்றது இது. ‘என்று உள்ள பொக்கங்கள்’ என்பது, ‘என்று இவ்வாறுள்ள பல பொய்கள்’ என்னும் பொருளுடையது. பொக்கம் – பொய். இறைவனை, ‘மால் அறியா நான்முகனும் காணா மலை’ என்று அவள் சொன்ன அளவிலே கேட்கிறவர்களுக்குப் பாலும் தேனும் ஊறுவது போல இருந்தது. ஆனால், ‘நாம் போல் அறிவோம்’ என்பதைக் கேட்டவுடன் அவளுடைய வஞ்சகம் தெரிந்துவிட்டது. ஆகவே, ‘பால் ஊறு தேன் வாய்ப் படிறீ என்கிறாள். கடை – வாசல். ஞாலமே முதலிய ஏகாரங்கள் எண். இறைவன் தேவர்களைவிட உலகிலுள்ள அன்பர்களுக்கு எளியவனாதலின் முதலில் ஞாலமே என்றாள். உலகம் பதினான்கு என்பர். ஆதலின் பிற என்று பூமியையும் தேவ லோகத்தையும் அன்றிப் பிற உலகங்களைக் குறித்தன.
இறைவன் நம்மிடத்தில் குற்றம் இருந்தாலும் நம்மிடம் உள்ள பக்தி ஒன்றையே எண்ணி ஆட்கொண்டு பிறகு நம் குற்றங்களைத் தீர்த்து வைக்கிறான். அதனால், நம்மை ‘ஆட் கொண்டருளிக் கோது ஆட்டும்’ என்கிறாள். சீலம் என்பது எளியனாம் தன்மை. தன்னினும் உயர்ந்தாரைக் கண்டு பழகுதல் உலகினர் இயல்பு. இறைவனினும் உயர்ந்தவர் யாரும் இல்லை. அவன் கருணையினால் அடியவர்களை ஆட் கொண்டு கோது ஆட்டுகிறான். தாய் அழுக்கு நிறைந்த தன் குழந்தையை எடுத்துப் பிறகு நீராட்டித் தூய்மைப்படுத்துவது போன்றது இது. கோலம் பாடிச் சிவனே என்றோம். ‘சீலம் பாடிச் சிவனே என்றோம்’ என்பதைக் குறித்து, ‘சிவனே சிவனே’ என்கிறாள். பலர் வந்து கூட்டமாய் நிற்றலின் அவர்கள் குரல் ஓலமிடுவதுபோலக் கேட்கிறது. ஓலம் என்பது இரக்கக் குரல். ‘இவள் இப்படி இருக்கிறாளே’ என்ற இரக்கத்தால் அவர்கள் குரல் ஓவம் ஆயிற்று. முதலில் உள்ள உணராய் என்பதற்கு, விழிக்காமல் இருக்கிறாயே என்றும், பின் உள்ள உணராய் என்பதற்கு, நாங்கள் கூறுவதைத் தெளியாமல் இருக்கிறாயே என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
ஏலம் – மயிர்ச் சாந்து, ‘உன்னை அலங்கரித்துக்கொண்டு உன் கோலத்தைப் பார்த்து மகிழும் இயல்புள்ளவளாக இருக்கிறாயே அன்றி எம்பெருமானுடைய கோலத்தைக் காணும் விருப்பம் இல்லாமல் இருக்கிறாய்!’ என்பதைக் குறிப்பிக்கிறது, ‘ஏலக்குழலி’ என்னும் விளி.
குழலைச் சொன்னதால் மற்ற அங்கங்களையும் அணி செய்து கொள்பவள் என்பது உபலட்சணத்தால் பெறப்படும்.
‘நீயாக உணரா விடினும் நாங்கள் வந்து உரக்கச் சொல்லியும் நீ உணராமல் இருக்கிறாயே!’ என்பது கருத்து.



