
திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்
8. வாளா கிடத்தியால்
“தாய் போன்ற பெண்ணே, எங்களுக்கு எல்லாம் வழி காட்டி போன்றவள் அல்லவா நீ ! நீ இப்படி இருக்கலாமா? உன் செயல்களுள் இவ்வாறு சோம்பி இருப்பதும் சிலவோ? நாங்கள் இறைவன் பெருமையைச் சொல்லிப் பேசுகிறோம். பல தேவர்களும் நினைப்பதற்குக் கூட அரியவன் ஆகிய ஒப்பற்ற ஒருவன், பெரும் புகழை உடையவன், திருச்சின்னங்கள் கேட்டால் சிவனே என்று வாய் திறந்து முன்னெல்லாம் முழங்குவாயே! பாடுவதற்கு முன்னால் ‘தென்னா’ என்று சொல்வதற்கு முன்பு தீயிலிட்ட மெழுகு போல உருகிப் போவாயே. இப்போது எப்படி இருக்கிறாய்?
நாங்கள் எல்லாம் சேர்ந்து ‘என் ஆனை போன்றவன். என் தலைவன், என் இன்னமுதன்’ என்று எல்லோரும் சேர்ந்து சொன்னோம். வெவ்வேறாகவும் சொல்கிறோம். அப்படி இருந்தும் இன்னும் உறங்குகிறாயே! உன்னுடைய நெஞ்சில் அன்பு இல்லையா? வன் நெஞ்சமும், பேதைமையும் உடையவர்களைப் போல ஒன்றும் செய்யாமல் படுத்துக் கிடக்கிறாயே! உன்ளைச் சொல்லிக் குற்றம் இல்லை. உன்னை ஆட்கொண்டிருக்கிற தூக்கத்தின் நிலை அது. தூக்கத்தின் தன்மைதான் என்னே, ஆச்சரியம்” என்கிறாள்.
தம்மைவிடச் சிறந்தவளாகவும் வழிகாட்டியாகவும் இருந்ததால்,
அன்னே
என்று விளிக்கிறாள்.
இவையும் சிலவோ
என்றது இப்படி படுத்துக் கிடப்பதும், சும்மா இருப்பதும் உனக்குரிய சில காரியங்களா என்ற பொருளையுடையது.
பல அமரர்
உன்னற்கு அரியான்
தேவர்கள் முப்பத்து முக்கோடி பேர்கள் என்று சொல்வது வழக்காதலின் பல அமரர் என்கிறாள். அவர்கள் நினைத்துப் பார்ப்பதற்கும் அரியவன் ஆதலின் உன்னற்கு அரியான் என்கிறாள். அப்படி உள்ளவாகள் பலர் அல்ல. அவன் ஒருவன்தான். எனவே,
ஒருவன்
என்கிறாள். அவன் ஒப்பற்றவன்; பெரும் புகழை உடையவன் என்ற எண்ணத்தோடு
இருஞ்சீரான்
என்கிறாள்.
முன்பெல்லாம் திருவீதியில் எம்பெருமான் எழுந்தருளும் போது சின்னங்கள் வாசிப்பார்கள். “மூர்த்தி எழுந்தருளுவதற்கு முன்னே அந்தச் சின்னங்கள் காதல் கேட்டவுடனே ‘சிவனே’ என்று வாய் திறந்து முழங்குவாயே! பாடுவதற்கு முன்னால் ‘தென்னா’ என்று சொல்வதற்கு முன்பே தீயிற் சேர்ந்த மெழுகுபோல உருகுவாயே” என்கிறாள்.
சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய்திறப்பாய் தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
சின்னங்கள் என்பன இறைவன் எழுந்தருளுவதற்கு முன் ஊதுகின்றவை. மிக நீளமாக இருப்பவை. ‘சிவபெருமானைக் காணாமல், அந்தச் சின்னங்களின் ஒலியைக் கேட்ட அளவில் சிவனே என்று வாய் திறந்து உருகுபவள் ஆயிற்றே’ என்கிறாள்.
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
பாடுவதற்கு முன் தரனன என்று இப்போது சொல்கிறார்களே, அது போன்றது தென்னா என்பது. “பாடுவதற்கு முன்னால் இராகத்தைத் தொடங்கும்போதே நீ தீயில் விழுந்த மெழுகுபோல உருகி நிற்பாயே. நாங்கள் இன்று இவ்வளவு பாடியும் சும்மா இருக்கிறாயே! எல்லோரும் சேர்ந்து பாடியும் சும்மா படுத்துக் கிடக்கிறாயே” என்கிறாள்.
என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லோமும் சொன்னோம்கேள் வெவ்வேறாய்; இன்னம் துயிலுதியோ?
ஆனை என்பது பெருமைக்குரிய வார்த்தை. விலங்குகளில் மிகப் பெரியது. என் ஆனை என்பது திருவண்ணாமலையிலுள்ள என்பெருமானைக் குறிக்கும். என் அரையன் என்றது எங்களுக்குத் தலைவன் என்றபடி. சாவா மூவாப் பெரு வாழ்வு தருபவன் ஆதலின் ‘இன்னமுது’ என்றாள்.”நாங்கள் எல்லோரும் சேர்ந்து சொன்னோம். தனித்தனியாகவும், வெவ்வேறாகவும் சொன்னோம்” என்பதைக் குறித்து.
எல்லோமும் சொன்னோம்கேள், வெவ்வேறாய்
என்கிறாள். ஒருத்தி சொன்னாலே எழ வேண்டியவள், எல்லோரும் சொன்ன பிறகும் துயில்கிறாளே என்ற கருத்துடன்,
இன்னம் துயிலுதியோ?
என்கிறாள். ‘இறைவனுடைய திருவுருவத்தைக் காணாமலேயே, சின்னத்தைக் கேட்டே உருகுகின்ற நீ, இப்போது இத்தனை பேரும் அவன் பெருமையைச் சொல்லியும் சும்மா கிடக்கிறாயே! உன் நெஞ்சம் வலியதோ? நீ அறியாமை உடையவளோ? சும்மா கிடக்கிறாயே!”
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
“உன்னைப் சொல்லிப் பயன் இல்லை. உன்னை அணைத்திருக்கும் தூக்கம் அத்தனை வலியது என்பது தெரிகிறது”
என்னே துயிலின் பரிசு!
“துயிலின் தன்மைதான் என்ன ஆச்சரியம்! எங்களோடு சேராமல் உன்னை அணைத்துக் கொண்டிருக்கிறது” என்கிறாள்.
அன்னே, இவையும் சிலவோ? பல அமரர்
உன்னற்கு அரியான், ஒருவன், இரும் சீரான்,
சின்னங்கள் கேட்ப, சிவன் என்றே வாய் திறப்பாய்;
தென்னா என்னா முன்னம், தீ சேர் மெழுகு ஒப்பாய்;
என்னானை, என் அரையன், இன் அமுது, என்று எல்லோமும்
சொன்னோம் கேள், வெவ்வேறாய்; இன்னம் துயிலுதியோ?
வன் நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,
என்னே துயிலின் பரிசு?’ ஏல் ஓர் எம்பாவாய்! (7)
“தாய் போன்றவளே, நீ இவ்வாறு இருக்கும் செயல்கள் நீ செய்கின்றவற்றுள் சிலவோ? பல தேவர்கள் உன்னுவதற்கும் அரியவன் ஆகிய ஒருவன். பெரிய புகழை உடையவன் சிவபெருமானுடைய திருச்சின்னங்கள் கேட்க, சிவனே என்று வாய் திறந்து முழங்குவாயே! இராகத்தைப் பாடுவதற்கு முன் தென்னா என்று தொடங்குவதற்கு முன்பு தீயில் சேர்ந்த மெழுகு ஒத்து உருகுவாயே! இப்போது நாங்கள் எல்லோரும் ‘என் ஆனை, என் அரையன், இன்னமுது’ என்று சொன்னோமே, கேள். வெவ்வேறாகவும் சொன்னோம். இன்னும் துயில்கிறாயே! வலிய நெஞ்சுடைய பேதையர் போலச் சும்மா கிடக்கிறாயே! தூக்கத்தின் தன்மைதான் என்ன வலியது!
தம்மைவிடச் சிறிது பெரியவள், மூத்தவள் ஆதலின் “அன்னே” என்று விளக்கிறாள். “நீ செய்கின்ற காரியங்கள் இவையும் பக்தர்களுக்கு உகந்தன ஆகுமோ?” என்னும் பொருளில் “இவையும் சிலவோ” என்று கேட்கிறாள். “முன்பெல்லாம் இறைவனுடைய திருச்சின்னம் வாயிலில் கேட்ட அளவிலே ‘சிவனே’ என்று வாய் திறந்து கூவுவாயே!
முப்பத்து முக்கோடி தேவர்களும் நினைப்பதற்கு அரியவனாக இருப்பவன் அவன். தனக்குச் சமானமில்லாத ஒருவன். அவன் புகழ் விரிக்க விரிக்கப் பரவும்; ஆதலால் ‘இருஞ் சீரான்’ என்கிறான். அவன் எழுந்தருளும்போது முன்னாலே வாசிக்கின்ற சின்னங்கள் ஒலிக்கின்றன “அவற்றைக் கேட்ட உடனேயே சிவனே என்று வாய் திறந்து முழங்குறையே” என்கிறாள். பாடுவதற்கு முன்னாலே தரனை என்று இப்போது வழங்குவார்கள். அதுபோல தென்னா என்று அப்போது தொடங்குவார்கள். “அப்படித் தொடங்குவதற்கு முன்னாலே தீயைச் சேர்ந்த மெழுகுபோல உருகி நிற்பாயே! நீ இப்போது ஒன்றும் செய்யாமல் இருக்கிறாயே” என்கிறாள். நாங்கள் தனித்தனியாகவும், வெவ்வேறாகவும் இறைவனைப் போற்றுகிறோம். ‘என் ஆனை போன்றவன், என் அரையன், இனிய அமுது போன்றவன்’ என்று எல்வோரும் சொன்னோம். நீ அதைக்கேள். தனித்தனியாகவும் சொன்னோம். அவற்றை கேட்டு இன்னமும் உறங்குகிறாயா? துயிலுதியோ?” சிவ பெருமான் எழுந்தருளும் போது முன்னாலே திருச்சின்னங்கள் வாசிப்பது வழக்கம் இறைவன் ஆணையைப் போன்ற கர்பீரம் உடையவன் ஆதலால் ‘என் ஆனை’ என்றாள். திருவண்ணாமலைப் பெருமானுக்கு என் ஆனை என்பது ஒரு திருநாமம். உலகத்திலுள்ள அரசர்கள் எல்லாம் குறிப்பிட்ட பகுதியை ஆள, எல்லா உலகங்களையும் தன ஆட்சிக்குள்ளே கொண்டு காப்பாற்றுகிறவன் இறைவன் ஆதலால், ‘என் அரையன்’ என்று சொல்கிறாள். தேவர்கள் கடைந்து உண்ட அமுது அவர்களுக்குச் சாவாமையைத் தரும் என்று எண்ணினார்கள். ஆனால் அதை உண்டும் அவர்கள் இறந்து விட்டார்கள்.
“விண்ணோர் அமுது உண்டும் சாவ”
என்று சிலப்பதிகாரம் சொல்கிறது, “அந்த அமுதத்தைப் போன்று இல்லாமல் என்றைக்கும் இன்பம் தரக்கூடியதாக, பிறவிப் பிணியைப் போக்கி மீண்டும் பிறந்து இறக்காமல் செய்கின்ற இன்னமுது அவன். அவ்வாறு எல்லோரும் சேர்ந்து சொன்னோம். நீ அதைக் கேட்டாய். வெவ்வேறாகவும் சொன்னோம். அவற்றைக் கேட்டும் இன்னும் உறங்கு வாயோ?” என்கிறார்கள்.
“முன்பெல்லாம் இறைவனுடைய புகழைப் பேசுவாயே இப்போது அவற்றை மறந்து போனாயோ? முன் ஒன்று சொல்லிப் பின் ஒன்று செய்யும் வஞ்சக நெஞ்சம் கொண்டவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருக்கிறாயே! ஒரு சொல்லும் சொல்லாமல், எந்தவிதமான மெய்ப்பாடும் இல்லாமல் சும்மா படுத்துக்கிடக்கிறாயே! வன்நெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்திறாயே’ என்கிறாள். உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை. உன்னை ஆட்கொண்டிருக்கும் உறக்கம் அவ்வளவு வலியதாய் இருக்கிறது. அந்த உறக்கத்தின் தன்மை என்ன ஆச்சரியம்! இதைப்போல நான் கண்டது இல்லை; என்னே துயிலின் பரிசு!”
பலபேர் சேர்ந்து பாடியும் ஏழாமல் இருப்பதை பார்த்து அவ்வாறு சொல்கிறான்.



