
திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்
4. எண்ணிக் குறையில் துயில்
அடுத்த வீட்டுக்கு வருகிறார்கள். அங்குள்ளவர் கண்ணைத் திறக்காமல் நன்றாகச் சிரித்துக்கொண்டு இருக்கிறாள். முன்பு “முத்தன்ன வெண்நகையை உடையவளே என்று விளித்தார்கள். இப்போது வெளிச்சம் அதிகமாகி விட்டமையால் நன்றாகச் செவ்வைப் படுத்தப்பட்ட முத்துக்களைப் போலச் சிரிக்கிறவளே” என்று அழைக்கிறாள்.
ஒள் நித்தில நகையாய்!
“கண்ணை மூடிக்கொண்டிருக்கிறாயே, இன்னும் விடியவில்லையா?” என்று கேட்கிறாள்.
ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?
சில சமயங்களில் கோவில் திருவிழாவுக்கு வீதியில் உள்ளவர்கள் சேர்ந்து போவார்கள். ஒருத்தரை அவர்கள் அழைத்தால் அவர் கேட்பார், “எல்லாரும் வந்துவிட்டார்களா?” என்று. அதாவது யாவரும் வந்த பிற்பாடு, அவர்களோடு நானும் வருகிறேன் என்ற பொருளில் சொல்வார்.
அதுபோல் இவள், “அழகிய கிளி போன்ற மொழியை உடைய பெண்களே, எல்லோரும் வந்துவிட்டார்களா?” என்று கேட்கிறாள். கண்ணை மூடிக்கொண்டிருப்பதனால், குரலினாலே இனம் கண்டு கொண்டு ‘கிளி மொழியார்’ என்கிறாள். சிலர் குரல் கேட்கவில்லை. ஆகையால் கிளிமொழி என்ற சொல்லாலே இனம் காட்டுகிறாள்.
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?
வந்தவள் சொல்கிறாள்.”நாங்கள் யார் யார் வரவில்லை என்று இதுவரைக்கும் யோசிக்கவில்லை. இப்போது நாங்கள் எண்ணிக்கொண்டு எவ்வளவு பேர் வந்திருக்கிறோம் என்று சொல்கிறோம். அது வரைக்கும் நீ தூங்கலாம் என்று நினைக்காதே. வீணாகக் காலத்தைப் போக்காமல் இறைவனைப் புகழ்ந்து பாடுவாயாக” என்கிறாள்.
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்; அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
என்று சொல்லி, இறைவனைப் பாடுவாயாக என்று சொல்கிறவள் இறைவனது பெருமையைச் சொல்கிறாள். “தேவர் உலகத்திற்கு ஒப்பற்ற தனி அமுதமாக இருப்பவனை, வேதத்தின் விழுமிய பொருளாக உள்ளவனை, கண்ணுக்கு இனியவனைப் பாடி மனம கசிந்து, உள்ளம் நெக்குருக நின்று உருகுவாயாக” என்று சொல்ல வந்தவள்.
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துஉள்ளம்
உள்நெக்கு நின்றுஉருக
என்று அவளுக்குச் சொல்கிறோமே, நாம் அத்தனை பேரையும் எண்ணிக்கொண்டிருப்பதனால், அவர்கள் தலையை எண்ணிக் கொண்டிருப்பதனால், என்ன பயன் இருக்கிறது நமக்கு? என்ற எண்ணம் வரவே, “நாம் எண்ணமாட்டோம். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிப் பார். யாராவது குறைந்திருந்தால் நீ போய்த் தூங்கு” என்று சொல்கிறாள். எல்லோரும் வந்த பிற்பாடு நான் வருகிறேன் என்று அவள் சொல்லிவிட்டால் என்ற எண்ணத்தால் இவள் பேசுகிறாள்.
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துஉள்ளம்
உள்நெக்கு நின்றுஉருக– யாம்மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய்.
கண்ணுக்கு இனியான் என்பது திருவண்ணாமலை எம்பெருமான் பெயர்களில் ஒன்று. திருவெம்பாவைப் பாட்டு அந்தத் தலத்தில் பாடப்பெற்றது. முதல் பாட்டிலுள்ள பெருஞ்சோதி என்பதும், இரண்டாவது பாட்டிலுள்ள பரஞ்சோதி என்பதும், மூன்றாவது பாட்டிலுள்ள அமுதன் என்பதும், இந்தப் பாட்டிலுள்ள கண்ணுக்கு இனியான் என்பதும் திருவண்ணாமலைப் பெருமானைக் குறிப்பவை.
ஒள் நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?’
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?’
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்: அவ்வளவும்
கண்ணைத் துயின்று, அவமே காலத்தைப் போக்காதே‘
விண்ணுக்கு ஒரு மருந்தை, வேத விழுப் பொருளை,
கண்ணுக்கு இனியானை, பாடிக் கசிந்து, உள்ளம்
உள் நெக்கு, நின்று உருக, யாம் மாட்டோம்; நீயே வந்து
எண்ணி, குறையில், துயில்‘ ஏல் ஓர் எம்பாவாய்! (4)



