
திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்
19. கண்ணாரமுதமாய் நின்றான்
மீண்டும், நீராடும்போது ஆண்டவனுடைய திருவடியைப் பாடிக்கொண்டு நீராட வேண்டுமென்பதைச் சொல்ல வருகிறார்கள். திரு வெம்பாவை திருவண்ணாமலையில் பாடப் பெற்றது ஆதலின் முதலில் ‘அண்ணாமலையான்’ என்று சொல்கிறாள்,
அவனுடைய பாதமாகிய தாமரையைச் சென்று வணங்குகின்ற தேவர்கள் முடிகளில் பல மணிகள் பதித்து இருக்கின்றன. ஆனால் இறைவனுடைய பாதமலரை இறைஞ்சும் போது அந்த மணிகள் தம்முடைய ஒளியை இழந்து விடுகின்றன. அவனுடைய அடிக்கமலம் அவ்வளவு செம்மையாக இருக்கிறது.
அண்ணா மலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்,
“அந்த மாணிக்கங்கள் எல்லாம் ஒளியற்றது போல நம்முடைய கண்ணுக்கு முன்னே தோற்றுகின்ற சூரியனுடைய கதிர்கள் ஒளிவிட மேகங்கள் எல்லாம் மறைந்து விடுகின்றன. இரவிலே ஒளிவிட்டுக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் தம்முடைய குளிர்ந்த ஒளி மங்கிவிடுகின்றன. இப்போது அவை கண்ணுக்குத் தெரியாமல் ஆகிவிட்டது போலத் தோற்றுகின்றன.
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம்அகல.
இனி, சிவபெருமானுடைய பெருமையைச் சொல்கிறார்கள். அவன் பெண், ஆண், அலி என்று எல்லாமாகி இருக்கிறவன். அவன் பெண்ணாக இருக்கிறான். ஆணாக இருக்கிறான். இரண்டும் அல்லாத அலியாகவும் இருக்கிறான்.
பெண்ணாகி ஆணாய் அலியாய்.
விளங்குகின்ற சந்திர சூரியனுடன் கூடிய வானமாக இருக்கிறான். இந்த நில உலகமும் ஆக இருக்கிறான். அவற்றுக்கு அப்பாலும் வேறாகி அவன் எழுந்தருளியிருக்கிறான்.
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி.
அமுதம் என்பது உண்ணப்படுவது. ஆனால் இறைவன் ஆகிய அமுதோ கண்ணால் கண்டு இன்பம் பெறும்படி இருக்கிறான். கண் நிறைந்த அமுதம் ஆண்டவன். எல்லாக் காலத்தும் ஆடாமல், அசையாமல் அழியாமல் நிற்கின்றவன் அவன்.
சுண்ணார் அமுதமுமாய் நின்றான்.
“அவன் திருவடியைப் பாடி, பெண்ணே, இந்தப் பூக்கள் நிறைந்த புனலில் பாய்ந்து ஆடுவோமாக” என்கிறாள்.
அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று இறைஞ்சும்விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றால்போல்,
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப,
தண் ஆர் ஒளி மழுங்கி, தாரகைகள் தாம் அகல,
பெண் ஆகி, ஆண் ஆய், அலி ஆய், பிறங்கு ஒலி சேர்விண் ஆகி, மண் ஆகி, இத்தனையும் வேறு ஆகி,
கண் ஆர் அமுதமும் ஆய், நின்றான் கழல் பாடி,
பெண்ணே! இப் பூம் புனல் பாய்ந்து ஆடு‘ ஏல் ஓர்எம்பாவாய்! (18)
[திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுடைய திருவடிக் கமலத்தை சென்று வணங்குகின்ற தேவர்களுடைய முடியில் பதித்து இருக்கின்ற மாணிக்கக் கூட்டங்கள் ஒளியற்றது போல. கண் நிறைந்த சூரியனுடைய கிரணங்கள் வந்து மேகங்கள் எல்லாம் மறைந்து போக நட்சத்திரங்கள் குளிர்ந்து ஒளி மழுங்கி போக பெண் ஆகவும். ஆண் ஆகவும், அலியாகவும் விளங்குகின்ற ஒளி சேர்ந்த விண் ஆகவும் மண் ஆகவும் இத்தனையும் வேறாகவும் இருக்கும் நம்முடைய கண் நிறைந்த அமிர்தமாய் நின்றவனுடைய திருவடியைப் பாடி, பெண்ணே, இந்தப் பூக்கள் நிறைந்த புனலில் பாய்ந்து ஆடுவோமாக!]
திருவண்ணாமலையில் பாடப்பெற்றதாதலின் முதலில் அண்ணாமலையான் என்கிறாள். அவன் அடி தாமரை போல இருக்கிறது. தேவலோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பதவி பறிபோகாமல் இருப்பதற்கு அவனை வந்து வணங்குகிறார்கள். அவர்கள் சிறந்த பதவியை உடையவர்கள் ஆதலின் முடியை அணிந்திருக்கிறார்கள். அந்த முடிகளில் மாணிக்கக் கூட்டங்கள் ஒளிர்கின்றன. இறைவனுடைய திருவடியை அவர்கள் வணங்கும் போது திருவடிச் சிறப்பு அந்த ஒளியை மங்கச் செய்கிறது. அடிக்கமலம் – திருவடியாகிய தாமரை.
கண் இருந்தும் சூரியன் இல்லாவிட்டால் எதுவும் தெரியாது. ஆதலால் ‘கண்ணார் இரவி’ என்கிறாள். சூரியன் தோன்றினவுடன் வானததிலுள்ள மேகங்கள் எல்லாம் மறைந்து போகின்றன.
நட்சத்திரங்கள் குளிர்ந்த ஒளி மங்கிப்போய் அகன்று போகின்றன.
இறைவன் சிலசமயம் பெண்ணாக இருக்கிறான். சிலசமயம் ஆணாக இருக்கிறான். சில சமயம் இரண்டும் இல்லாமல் அலி போன்று இருக்கிறான். ‘பெண்ணாகி ஆணாய் அலியாய்’ என்கிறாள். வானத்தில் சூரியனும் சந்திரனும் தோற்றுவதால் அது ஒளியுடையதாகிறது.ஆதலின் ‘பிறங்கொளிசேர் விண்ணாகி’ என்கிறாள்.
விண் ஆகவும், மண் ஆகவும், இத்தனையும் அவனாக இருக்கிறான். அவற்றோடு வேறு உலகமாகவும் அவனே இருக்கிறான். ஆதலின், “விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி” என்கிறாள். கண்ணால் கண்டு பருகுவது போல உட்கொள்வதற்கு உரியவன் ஆதலின், “கண்ணார் அமுதம்” என்கிறாள். அமுதம் சாவாமையைத் தருவது ஆதலால் இனிப் பிறக்க மாட்டோம் என்றபடி.
கண்ணார் அமுதம் என்பது திருவண்ணாமலைப் பெருமானுக்குரிய பெயர்களில் ஒன்று. இறைவன் என்றும் சாஸ்வதமாக இருப்பவன் ஆதலின், ‘நின்றான்’ என்றாள். கழல்-திருவடியில் அணியும் அணிகலன். அது அடியைக் குறித்தது ஆதலின் ஆகுபெயர். அதனைப் பாடிக் கொண்டு இந்தப் பூக்கள் நிறைந்த புனலில் ஆடுவோமாக என்கிறாள். கன்னி ஆதலின் குதித்து ஆடுவோம் என்று சொல்வாளாக, ‘பாய்ந்து ஆடு’ என்கிறாள். இறைவனுடைய பெருமையைச் சொல்லிக்கொண்டு நீராடலாம் என்பது கருத்து.



