
திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்
14. பிராட்டியும் பிரானும் போன்ற பொய்கையில் ஆடுவோம்
பெண்கள் யாவரும் சேர்ந்து நீராடப் போகிறார்கள். அங்கே உள்ள பொய்கையைப் பார்க்கிறார்கள். குவளை மலர்களும். செந்தாமரைப் பூக்களும் நிறையப் பூத்து இருக்கின்றன. பலவகைப் பறவைகள் அங்கும் இங்குமாகப் பறந்து அந்த மலரில் உட்காருகின்றன. சில இடங்களில் தண்ணீர்ப் பாம்புகள் தோன்றுகின்றன. அவற்றை எல்லாம் அவர்கள் பார்க்கிறார்கள். தம்முடைய உடம்பிலுள்ள அழுக்குப் போகப் பல பேர் வந்து அங்கே மூழ்குகிறார்கள்.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால், பின்னும் அரவத்தால் தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்.
இப்படி இருப்பதை உவமையாக வைத்து, “இந்தப் பொய்கையானது எம்பெருமாட்டி உமாதேவியையும், எம் தலைவனாகிய சிவபெருமானையும் போன்று இருக்கிறது” என்று சொல்கிறாள். பைங்குவளைக் கார்மலர் போன்று உமாதேவி இருக்கிறாள். குவளையில் கருங்குவளை, செங்குவளை என்று இரண்டு வகை உண்டு. இங்கே சொன்னது கருங்குவளை ஆதலால் ‘பைங்குவளைக் கார்மலர்’ என்றாள். இது உமா தேவியை நினைப்பூட்டுகிறது.
சிவபெருமான் செம்மேனி உடையவன். “சிவன் எனும் பெயர் தனக்கே உடைய செம்மேனி அம்மான்” என்பர். செந்தாமரைப் பூக்கள் எல்லாம் றைவனுடைய திரு மேனியை நினைப்பூட்டுகின்றன.
செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால்.
அங்கு அங்கு உருகு இனத்தால் என்று பிரித்து இறைவனோடு சார்த்தவேண்டும். அங்கங்கே உள்ள அன்பர்கள் கூட்டமாக இருந்து இறைவனை உன்னுகிறார்கள்; உருகுகின்ற இனம், பக்தர்கள்.
பின்னும் அரவத்தால்.
இறைவனிடத்தில் பாம்புகள் அணிகலனாக இருக்கின்றன. அதனால், ‘பின்னும் அரவத்தால்’ என்கிறார்கள். அரவம் என்பதற்கு ஓசை என்றும் பொருள் கொள்ளலாம். உள்ளம் உருகுகின்ற பக்தர்கள் பல வகையாக இறைவனைப் பாடி ஒலி எழுப்புவதால் அரவம் என்று சொன்னதாகவும் பொருள் கொள்ளலாம்.
மக்களுடைய பிறவிக்குக் காரணமானவை மூன்று மலங்கள். அந்த மலங்களைப் போக்க வேண்டுமானால் இறைவனைச் சார்ந்து பக்தி செய்யவேண்டும்.
ஆதலால்,
தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்
என்று சொல்கிறாள். இவ்வளவும் சிலேடையாக அமைந்தவை. இத்தகைய பான்மையினால் நீர் பொங்கி வருகின்ற மடுவானது எம்பெருமாட்டி உமாதேவியையும், எம் கோனாகிய சிவபெருமானையும் போன்று இசைந்து இருக்கிறது.’
எங்கள் பிராட்டியும் எம்கோனும் போன்று இசைந்து.
“அந்த மடுவில் நாம் புகுந்து பாய்வோமாக” என்கிறாள். கன்னிப்பெண்கள் ஆதலால் மெல்ல இறங்கிக் குளிக்காமல் குதித்துப் பாய்கிறார்கள்.
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து.
அவர்கள் கை நிறைய வளையல்கள் அணிந்திருக்கிறார்கள். சங்காலான வளையல்கள் அவை. அவர்கள் பொய்கையில் பாயும்போது அவைகள் ஒலிக்கின்றன.
நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்ப.
கையிலுள்ள சங்கு வளையல்கள் ஒலிக்கவும், காலில் உள்ள சிலம்புகள் அந்த ஒலியோடு சேர்ந்து ஒலிக்கின்றன.
எல்லோரும் இளமை உடையவர்கள் ஆதலின் அவர்கள் நீராடும்போது அவர்களது தனங்கள் பூரிப்பு உடையனவாகத் தோன்றுகின்றன.
கொங்கைகள் பொங்க.
கூட்டமாகச் சேர்ந்து நீராடுவதால் அவர்கள் மூழ்கி எழுந்த இடம் புனல் பொங்கினாற் போலப் பெருகுகிறது.
புனல் பொங்க.
அவர்கள் பாயும் மடுவில் தாமரைப் பூக்கள் பூத்திருக்கின்றன. “அவற்றிலே பாய்ந்து ஆடுவோம்” என்று சொல் கிறார்கள்.
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!
அன்பு உடையவர்களுக்கு எதைப் பார்த்தாலும் இறைவனுடைய நினைவு வரும். ஆதலால் அந்த மடுவைப் பார்த்து இறைவியையும், இறைவனையும் நினைவு கூர்கிறார்கள்.
பைம் குவளைக் கார் மலரால், செம் கமலப் பைம் போதால்,
அங்கம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால்,
தம்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும், எம் கோனும், போன்று இசைந்தபொங்கு மடுவில், புகப் பாய்ந்து, பாய்ந்து, நம்சங்கம் சிலம்ப; சிலம்பு கலந்து ஆர்ப்ப;
கொங்கைகள் பொங்க; குடையும் புனல் பொங்க;
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு‘ ஏல் ஓர் எம்பாவாய்! (13)



