திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்

திருவெம்பாவையும் திருப்பாவையும்

திருவெம்பாவை இருபது பாடல்களால் ஆகியது. திருப்பள்ளி யெழுச்சி யென்று தனியே மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். திருப்பாவையில் முதலில் பெண்களை நீராட அழைத்துப் பிறகு வாயில் காப்பான் முதல் பெருமாள் வரையில் எழுப்பும் வகையில் பாடல்கள் உள்ளன. தொண்டரடிப் பொடி ஆழ்வார் தனியே திருப்பள்ளி எழுச்சி என்று வேறு பாடியிருக்கிறார். திருவெம்பாவையின் இறுதியில், “மார்கழி நீராடுவோம் எம்பாவாய்” என்று வருகிறது. திருப்பாவையில் முதலிலேயே, “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” என்று தொடங்குகிறது.

கோதை நாய்ச்சியாரின் திருநாமமாகிய ஆண்டாள் என்பதன் முதலெழுத்தாகிய ஆவை வைத்து, ‘ஆதியும் அந்தமும்’ என்று தொடங்குகிறது திருவெம்பாவை, மாணிக்கவாசகர் திருநாமத்தின் முதல் எழுத்தாகியை மாவைவைத்து. “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” என்று தொடங்குவதோடு, “மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்” (4) என்று திருப்பாவை கூறுகிறது.

“நீராடப் போதுவீர் போதுமினோ'” என்றும், “நாட் காலே நீராடி” (2) என்றும்,”நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்” (3) என்றும், “நாங்களும் மார்கழி நீராடுவோம்” என்றும் திருப்பாவையில் வருகின்றன. மொய்யார் தடம் பொய்கை புக்கு” (10) என்றும், ”இருஞ் சுனைநீராடேலோ ரெம்பாவாய்’ (12) என்றும், பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோரெம் பாவாய்”(13) என்றும், சீதப் புனவாடி” (14) என்றும், ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோ ரெம்பாவாய்’ (15) என்றும், “பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்” (17) என்றும், ”பூம்புனல் பாய்ந்து ஆடேலோ ரெம்பாவாய்” (18) என்றும் திருவெம்பாவையில் வருகின்றன.

திருப்பாவையில் முதற்பாட்டிலேயே, “நீராடப் போதுவீர் போதுமினோ” என்றும், “நாட்காலே நீராடி” (2) என்றும், “நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்” (3) என்றும், ‘நாங்களும் மார்கழி நீராட” (4) என்றும், “குள்ளக் குளிரக் குளிர்ந்து நீர் ஆடாதே” (13) என்றும். “இப்போதே எம்மை நீர் ஆட்டேலோ ரெம் பாவாய்” (20) என்றும், “மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள்” (26) என்றும் வருகின்றன.

திருவெம்பாவையில் “என்னே துயிலின் பரிசு” (7) என்றும், “வாழி ஈதென்ன உறக்கமோ” (9) என்றும், வருகின்றன. திருப்பாவையில், “ஈதென்ன பேருறக்கம்?” (12) என்று வருகிறது. “ஏதேனும் ஆகாள் கிடந்நாள்” (1) என்று திருவெம்பாவை சொல்ல, திருப்பாவை, “பள்ளிக் கிடத்தியோ?” (12) என்கிறது. “உய்வார்கள் உய்யும் வகை யெல்லாம் உய்ந்தொழிந்தோம்”(11) என்று திருவெம்பாவை யில் வர “உய்யுமா றெண்ணி உகந்தேலோரெம்பாவாய்”(2) எனத் திருப்பாவையில் வருகிறது.நேரிழையீர் (1) என்று திருவெம்பாவை பாடும் பெண் விளிப்பது போலவே திருப் பாவை பாடும் பெண்ணும், “நீராடப் போதுலீர் போதுமினோ, நேரிழையீர்'” (1) என்று விளிக்கிறாள்.

திருவெம்பாவையில்,”உன் சீர் அடியோம்” (9) என்று வர “சீர்மேவும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்கள்” (1) என்று திருப்பாவையில் சீர் உடையார் வருகிறார்கள். “இன்னருளே என்னம் பொழியாய் மழை” (10) என்று திருவெம்பாவை கூற, “தீங்கின்றி நாடெங்கும் மும்மாரி பெய்யும்” (3) என்றும், ”வாழ உலகினில் பெய்திடாய்” (4) என்றும் திருப்பாவை சொல்கிறது.

விடியற் காலையை வருணிக்கும் போது, “கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்; ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்” (8) என்று திருவெம்பாவையில் வரும் குருகுகளும் சங்கும் திருப்பாவையில், “புள்ளும் சிலம்பின காண்: புள்ளரையன் கோயில், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ” (6), “புள்ளும் சிலம்பின காண்” (13) என்பவற்றில் வந்துள்ளன. “சங்கிடுவான் போத் தந்தார்” (19)என்பது திருப்பாவை. பெண்ணை. “பிள்ளை”(19) என்று திருவெம்பாவை சொல்லும் வழக்கை, “பிள்ளாய் எழுந்திராய்” (6) என்று திருப்பாவையிலும் பார்க்கிறோம். “யாம் பாடக் கேட்டேயும்… வளருதியோ…ஏதேனும் ஆகாள் கிடந்தாள்” (1) என்று திருவெம்பாவை சொல்ல. “கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ” (7), “பள்ளிக் கிடத்தியோ” (13) என்று திருப்பாவை கூறுகிறது. ”வன்செவியோ நின்செவிதான்?'” (1) என்று திருவெம் பாவைப் பெண் கேட்க, “ஊமையோ அன்றிச் செவிடோ?” (9) என்று திருப்பாவைப் பெண் வினவுகிறாள்.

”மானே, நீ நென்னலை நாளை வந்து உங்களை, நானே எழுப்புவன்” (6) என்றாளாம் திருவெம்பாவைக் கன்னிப் பெண் திருப்பாவை அதனையே, “எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்” (14) என்கிறது. அவ்வாறு சொன்னவள் இப்போது நாணம் இன்றிப் படுத்திருப்பதை. ‘நானே எழுப்புவன் என்றலும் நாணாமே, போன திசைபகராய் ‘ ‘ (6) என்று திருவெம்பாவையில் காண்பதையே, “எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய். நாணாதாய், நாவுடையாய்” (14) என்பதிலும் காண்கிறோம். பெண்களை, “வண்ணக் கிளிமொழியார்” (4) என்று திரு வெம்பாவை படர்க்கையில் வைத்துச் சொல்ல, திருப்பாவை ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தி,”எல்லே இளங்கிளியே” (15) என்கிறது. “இன்னம் துயிலுதியோ?” (7) என்று திருவெம்பாவையில் வரும் வினா. திருப்பாவையிலும், “இன்னம் உறங்குதியோ” (15) என்ற உருவில் வருகிறது.

“வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ? எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்” என்று சொன்னவள், ” நீயே வந்து எண்ணிக் கொள்” (4) என்பது திருவெம்பாவை, “எல்லாரும் போந்தாரோ, போந்தார், போந்து எண்ணிக்கொள்” (15) என்பது திருப்பாவை. ஒரு பெண்ணை, “ஏலக்குழலி” (5) என்று திருவெம்பாவை சொல்ல, “கந்தம் கமழும் குழவீ” (18) என்ற விளி திருப்பாவையில் வரப் பார்க்கிறோம்.

விடியற்காலையில் கோழி கூவுவதை, ‘கோழி சிலம்ப’ (8) என்று திருவெம்பாவையிற் காண்பதை, “வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்” (11) என்று திருப்பாவையிலும் காண்கிறோம். “திருவெம்பாவை அம்பிகையை, மையார் தடங்கண்” (II) என்று படர்க்கையில் சொல்வதை, திருப்பாவை ஒரு பெண்ணை முன்னிலைப் படுத்தி, “மைத் தடங் கண்ணினாய்” (19) என்று விளியாக்கிச் சொல்கிறது. திருவெம்பாவை சிவபெருமானை, “நந்தம்மை ஆளுடை யாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான்” (10) என்று சொல்ல, திருப்பாவை ஒரு பெண்ணை, நீயுன் மணாளனை…. எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்” (19) என்கிறது. திருவெம்பாவை அம்பிகையின் இடையை, “எந்தம்மை ஆளுடையாள் இட்டிடை” (10) என்பதையே, திருப்பாவை “சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்” (20) என்று நப்பின்னையை கூறுகிறது. “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” (20) என்பது திருவெம்பாவை; உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே” (21) என்பது திருப்பாவை.

திருவெம்பாவை இறுதிப்பாட்டில் ஒவ்வோரடியிலும் முதலில், “போற்றி” என்ற சொல் வருகிறது, “போற்றி யருளுகநின் ஆதியாம் பாதமலர்” என்பது முதலாக. திருப்பாவை போற்றியை ஒவ்வோரடியிலும் இறுதியில் வைத்து, ”அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி” (29) என வருகிறது. ஒழிக்க ஒழியா அன்பைத் திருவெம்பாவை, “பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்” (2) என்று சொல்ல, திருப்பாவை, “உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது”(28) என்று கூறுகிறது.

“ஈசன் பழவடியீர்” (3) என்று அடியார்களைத் திருவெம்பாவை குறிக்கிறது. திருப்பாவையோ, தாம் ஏழேழ் பிறவிக்கும் இறைவன் அடியார் ஆவதைச் சொல்கிறது; “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே ஆவோம். உனக்கேநாம் ஆட்செய்வோம்” (29) என்கிறது.

இவ்வாறு பல ஒப்புமைகள் இரண்டு பாவைப் பாடல்களிலும் காணப் பெறுகின்றன.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *