
திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்
3. சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?
அடுத்த வீட்டிற்குப் போகிறார்கள். அங்கே உள்ள பெண் விழித்துக் கொண்டாலும் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறாள். வருகிறவர்கள் தன்னை எழுப்புவார்கள், ஏதாவது பேசுவார்கள் என்று எண்ணிச் சற்றே புன்னகை பூக்கிறாள். அதைக் கண்ட தலைவி, “முத்துப் போன்ற வெள்ளை நகையையுடைய பெண்ணே” என்று அழைக்கிறாள்.
முத்து அன்ன வெள்நகையாய்
“முன்னே எல்லாம் எங்களுக்கு முன்னே வந்து எதிரில் நின்று ஆண்டவனை, “எங்கள் தலைவன். எங்களுக்கு ஆனந்தத்தைத் தருபவன் என்றும், ‘தெவிட்டா அமுது போன்றவன்’ என்றும் வாய் எல்லாம் அள்ளூறும்படித் தித்திக்கப் பேசுவாயே! இப்போது வந்து உன்னுடைய வாசற் கதவைத் திறப்பாயாக” என்கிறாள். அள்ளூறுவது படுத்திருப்பவள் செயல். தித்திப்பது கேட்பவர் செயல்.
முத்துஅன்ன வெள்நகையாய் முன்வந்து எதிர்எழுந்துஎன் அத்தன் ஆனந்தன், அமுதன்என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்துஉன் கடைதிறவாய்.
அத்தன் என்பது தலைவன் என்ற பொருளை உடையது. ஆனந்தன் – ஆனந்தமயமாக இருக்கிறவன்; தன்னை வாழ்த்துபவர்களுக்கு ஆனந்தம் தருபவன். அமுதன் தன்னைத் தொழுபவர்களுக்கு மீண்டும் பிறவாத அமுத நிலையைத் தருபவன்.
இவ்வாறு பேசிய பெண்ணுக்குப் பதிலாகப் படுத்திருக்கிறவள் சொல்கிறாள்.
“ஈசனிடத்தில் பக்தி உடையவர்களே, அவனுக்கு நீங்கள் பழைய அடியார்கள். ஆகையால் அந்த அன்பினுடைய பாங்கை எல்லாம் நீங்கள் உடையவர்களாக இருக்கிறீர்கள். என்னைப் போன்றவர்களோ புதிய அடியார்கள். நாங்கள் தவறு செய்வோம். எங்களுடைய புன்மையை நீங்களே நீக்கி ஆட்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது பொல்லாதது ஆகுமா?” என்று கேட்கிறாள்.
பத்துஉடையீர், ஈசன் பழஅடியீர், பாங்குஉடையீர்,
புத்து அடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ?
(பத்து – பக்தி. பழ அடியீர் – பழைய அடியார்களே. “ஐயா பழவடியோம்” என்று வேறிடத்திலும் வருகிறது. பாங்கு என்பது பக்குவம்.]
அவ்வாறு அந்தப் பெண் சொன்னதைக் கேட்டவுடன் எழுப்ப வந்த தலைவி சொல்கிறாள், “உன்னுடைய அன்பு எங்களுக்குத் தெரியாதா? அது எத்தகையது! நாங்கள் எல்லோரும் அதனை அறியமாட்டோமா?” என்கிறாள்.
எத்தோநின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?
இதைக் கேட்டுப் படுத்துக் கிடக்கிறவள் சொல்கிறாள். உண்மையாகச் சித்தம் அழகுடையவர்கள் பெருமானைப் பாடமாட்டார்களா? என்கிறாள். என்பது எத்தோ எனத் திரிந்து நின்றது.
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?
சித்தம் அழகியார் என்பது இறைவனுடைய திருவருளைச் சிந்தித்துப் பக்தி செய்பவர் என்னும் பொருளை உடையது. யாரையும் குறிக்காமல் ‘சித்தம் அழகியார் பாடாரோ’ என்றமையினால் இவள் நம்மைத்தான் சொல்கிறாள். இறைவனைப் பாடாமல் இவ்வளவு நேரம் என்னைப் பற்றிப் பேசி வீண் பொழுது போக்குகிறீர்களே!’ என்று அவள் சொல்வதாக நினைத்துக் கொள்கிறாள். ஆகவே,
இத்தனையும் வேண்டும்எமக்கு ஏலோர் எம்பாவாய்.
‘இதுவும் வேண்டும்! இன்னமும் வேண்டும் எங்களுக்கு!’ என்று அவள் வருந்திப் பேசுகிறாள்.
முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, என்
அத்தன், ஆனந்தன், அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்‘.
பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?’
எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?’
சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?’
இத்தனையும் வேண்டும் எமக்கு‘ ஏல் ஓர் எம்பாவாய்! (3)



