திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்

16. புனல் பாய்ந்து ஆடுவோம்

நீராட வந்து பெண்கள் தங்களுக்குள் ஒருத்தியின் பக்திச் சிறப்பைப் பற்றிச் சொல்லுகிறார்கள்.

“நம்முடைய பக்திக்கும் அவளுடைய பக்திச் சிறப்புக்கும் எவ்வளவு வேற்றுமை! நாமோ ஒவ்வொரு சமயம் சிவ பெருமானை எம்பெருமான் என்று என்று சொல்வோம்.”

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றேம்.

”அவளோ நம் பெருமானுடைய புகழை ஒருகாலும் சொல்லுவதை நிறுத்தாமல் வாயோயாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.”

நம்பெருமான் சீர்ஒருகால் வாய்ஓவாள்.

“அப்படிச் சொல்லும்போது அவளுடைய சித்தம் எத்தனை மகிழ்ச்சியை அடைகிறது!”

சித்தம் களிகூர.

”அவ்வாறு சொல்லும் போதெல்லாம் அவளிடத்தில் பக்திக்குரிய மெய்ப்பாடுகள் எல்லாம் தோன்றுகின்றன. அவள் கண்களில் ஒரு காலும் பக்திப்பெருக்கினால் வரும் நீர் நிற்பதில்லை. கண்ணீர் துளித்துக் கொண்டே இருக்கிறது!”

நீர்ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப.

“இவ்வுலகத்தில் உள்ள யாரையும் ஒரு முறையேனும் வந்தனை செய்வதில்லை. தேவ லோகத்திலுள்ள பிற தேவர்களையும் பணியாதவளாக இருக்கிறாள்.”

பார்ஒருகால் வந்தனையாள்; விண்ணோரைத்
தான்பணியாள்.

“எல்லாரிலும் சிறந்த பெரிய அரசனாகிய சிவ பெருமானிடத்தில் இவ்வாறு பித்துக்கொண்டு ஒருவர் ஆகும் வண்ணம் வேறு யாரிடம் பார்த்திருக்கிறோம்; அவளை இவ்வாறு அடிமையாகக் கொள்ளும் வித்தகர் சிவபெருமானை அன்றி வேறு யார் இருக்கிறார்கள்?”

ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்?

“கச்சையும் அணிகலன்களையும் அணிந்த நகில்களை உடைய பெண்களே, அத்தகைய வித்தகருடைய திருவடியை நாம் வாயாரப் பாடுவோமாக. எழுச்சி மிக்க அழகுடைய பூம்புனலில் பாய்ந்து ஆடுவோமாக!”

வித்தகர்தாள் வார்உருவப் பூண்முலையீர், வாயார நாம்பாடி ஏர்உருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேல்ஓர் எம்பாவாய்!

‘வாய்க்குள்ளே முணுமுணுக்காமல் வெளிப்படையாக யாவரும் கேட்கும வண்ணம் நாம் பாடுவோமாக. வாய் நிரம்ப அவன் புகழைச் சொல்லிப் பாடுவோமாக.

ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே, நம் பெருமான்
சீர் ஒரு கால் வாய் ஓவாள்; சித்தம் களி கூர,
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப,
பார் ஒரு கால் வந்தனையாள்; விண்ணோரைத் தான்
பணியாள்;
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும்
ஆர் ஒருவர்? இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்,
வார் உருவப் பூண் முலையீர், வாய் ஆர நாம் பாடி,
ஏர் உருவப் பூம் புனல் பாய்ந்து ஆடுஏல் ஓர் எம்பாவாய்!

[“நாம் ஒவ்வொரு சமயம் சிவ பெருமானை எம்பெருமான் என்றென்று சொன்னோம். அவளோ நம் பெருமானுடைய சிறப்புக்களை ஒருகாலும் விடாமல் சொல்கிறாள். அப்படிச் சொல்லும்போது அவள் கண்களிலிருந்து வழியும் நீர் ஒரு காலும் நிற்பதில்லை. நீண்ட தாரையாகக் கண்ணீர் வருகிறது. அவள் இவ்வுலகத்தில் உள்ள யாரையும் வணங்குவதில்லை. தேவலோகத்தில் உள்ள தேவர்களையும் அவள் வணங்குவதில்லை. பெரிய தலைவனாகிய சிவபெருமானிடம் இவ்வாறு ஒருவர் பித்துப் பிடித்து ஆகும் விதமும் உண்டோ? இவ்வாறு தமக்கு ஆளாகக் கொள்ளும் ஞானப் பிழம்பாகிய வித்தகர் வேறு யார் ஒருவர் இருக்கிறார்? கச்சை அணிந்த அழகையும் அணிகலன்களையும் உடைய தனங்களை உடைய பெண்களே, வாய் நிரம்ப நாமும் எம் பெருமானைப் பாடி எழுச்சியும் அழகும் உடைய இந்தப் பூம்புனலில் ஆடுவோமாக!”

ஓர் ஒரு கால் – ஒவ்வொரு சமயம்; சில சமயங்களில் மட்டும். எம்பெருமான் என்று என்று இடைவிட்டுச் சொன்னோம்’; ‘என்று என்றேம்’]

‘இவள் எப்படி இருக்கிறாள்? இவள் தோற்றத்தைக் கண்டாலே இவள் இயல்பு தெரியும். காண்பார் மனமும் உருகும். நம் பெருமானுடைய சிறப்புக்களை ஒருகாலும் நிறுத்தாமல் வாய் ஓயாமல் சொல்கிறாள்.’

நம்பெருமான்
சீர்ஒருகால் வாய்ஓவாள்.

அவள் ஓயாமல் விடும் நீண்ட நீர் ஒழுக்குக் கண்களில் தோன்றுகிறது.

நெடுந்தாரை கண்பனிப்பு.

“மற்ற மக்கள் செல்வத்தாலும் பதவியாலும் பிறவற்றாலும் சிறந்தவர்களைப் பணிகிறார்கள். இவள் ஒருகாலும் பாரில் உள்ளவரை வந்தனை புரியாள்.”

வந்தனையாள் – வந்திக்க மாட்டாள். முயற்சித்தல் என்பது போன்ற பிரயோகம் இது.

“தேவலோகத்தில் உள்ள இந்திரன் முதலியோரை வேள்வியிலும் மற்றச் சமயங்களிலும் துதிப்பவர்கள் இருக்கிறார்கள் இவளோ விண்ணோரையும் தான் பணிவதில்லை” தான் – இவள். விண்ணோரையும் என்ற உம்மை தொக்கது. இறைவன் என்றும் நிலையாக நின்று உலகத்தைக் காப்பாற்றுபவனாதலின், ‘பேரரையன்’ என்றாள். இங்ஙனே- இத்தகைய மெய்ப்பாடுகள் உண்டாகும் படி. பித்து – வேறு ஒன்றையும் கவனியாமல் இறைவனையே நினைந்தும் புகழ்ந்தும் வணங்கியும் இருக்கும் நிலை. ஆமாறும்- ஆகும் வண்ணமும்; ஆவதோடு அதற்குரிய பலவகைச் செயல்களைச் செய்கிறாள் என்பதை உம்மை குறித்தது; எதிரது தழீஇய எச்ச உம்மை.

இவ்வண்ணம் இவ்வாறு பித்துப் பிடிக்குமாறு. ஆட்கொள்ளும் – தமக்கே தொண்டு புரியும் அடிமையாகச் செய்து கொள்ளும். வித்தகர் – சர்வக்ஞர். ‘அவருடைய தாளைப் பணிவோமாக’ என்கிறாள். ‘இவள் இருக்கும் நிலையைக் கண்டேனும் நாம் இறைவனைப் பணிவோம்’ என்று குறிப்பிக்கிறாள். தாள் – திருவடியை. வார் – கச்சு. உருவம் – அழகு. பூண் – அணிகலன்கள். இவ்வளவும் பெற்றும் என்ன பயன்? இறைவனைப் பாடிப் பணிதலே பெரிய ஆபரணமாகும்’ என்பது குறிப்பு.

சிற்றின்பத்திலும் பேரின்பத்திலும் நாணத்துக்கு இடமில்லை. நாணம் விட்டு ஒன்றுபட்டால்தான் இன்பம் கிடைக்கும்; “நாணொணாததோர் நாணம் எய்தி” (திருக்கழுக்குன்றப் பதிகம்) என்று பிறிதோரிடத்திலும் கூறுவார். ஆதலால், வாயார நாம் பாடி என்கிறாள், ‘வாய் நிரம்பப் பாடி’ என்று பொருள். வாய் நிரம்புவதாவது, வேறு பேச்சுக்கு இடம் கொடாமல் இறைவன் பாடலையே பாடுதல். ஏர் – அழகு எழுச்சியம் ஆம்.

உருவம் – தனக்கு உரிய இலக்கணங்களுடன் அமைந்த உருவம் பூம்புனல் – பொலிவு பெற்ற புனல்; மலர்கள் பூத்திருக்கும் புனல் என்பதும் ஆம். கன்னிப் பெண்கள் ஆதலின், மெல்ல இறங்கிக் குளிக்காமல், பாய வேண்டும் என்கிறாள்.

இறைவனுடைய புகழைப் பாடி நாம் நீராடுவோம் என்பது கருத்து.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *