திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்

18. பூம்புனல் பாய்ந்து ஆடுவோம்

பெண்கள் எல்லாம் இப்போது நீராடப் போகிறார்கள். இறைவனைப் புகழ்ந்து பாடி நலம் பெற்று நீராட வேண்டுமென்று சொல்கிறார்கள். ‘பூந்தாது உடைய கரிய குழலைப் பெற்ற பெண்ணே’ என்று ஒருத்தி மற்றொருத்தியை விளிக்கிறாள்.

கொங்குண் கருங்குழலி!

‘இறைவன் யாவருக்கும் பொதுவாக அருள்செய்தாலும் தன்னுடைய அன்பர்களுக்குச் சிறப்பான இன்பத்தைத் தருகிறான். சிவந்த கண்ணை உடைய புண்டரீகாட்சனாகிய திருமாலிடத்திலும் நான்கு திசைகளிலும் முகங்களையுடைய பிரமனிடத்திலும், மற்றத் தேவர்களிடத்திலும், வேறு எந்த இடத்திலும் இல்லாததாகிய ஒரு பெரிய இன்பம் நம்மிடத்தில் உண்டாகும்படியாகச் செய்கின்றான் இறைவன்.”

செங்கண் அவன்பால், திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பமநம் பாலதா.

“நம்முடைய குற்றங்களை எல்லாம் போக்கி, தான் இருக்கும் இடத்திலிருந்து இங்கே எழுந்தருளி, நம்முடைய வீடுகள் தோறும் வந்து அருள் செய்கிறான்.”

நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி,

“நாம் அவனைத் தேடிச் செல்லாமல் அவனே தன்னுடைய செங்கமலமும் பொன்னும் போன்ற திருவடிகளைத் தந்து அருளுகின்ற வீரம் உடையவன் அவன்.

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

‘நாம் முழுமையும் தூய்மை உடையவர்களாக இல்லா விட்டாலும் அழுக்குள்ள குழந்தையை எடுத்து அதனுடைய அழுக்கைப் போக்கிக் தாய் அதனை அணைப்பது போல் நம்முடைய கோதுகளை நீக்கி அருளுகிறான். அதோடு அவனைத் தேடி எங்கும் செல்லாமல் இங்கே நம்முடைய இல்லங்கள் தோறும் அவன் எழுந்தருளுகிறான்.

நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி.

“அப்படி எழுந்தருளும் எம்பெருமான் தன்னுடைய சிவந்த தாமர் போன்ற ஒளிபெற்ற பாதங்களை நமக்குத் தந்தருளுகின்றான்.”

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை.

அவன் பெரிய வீரன். எட்டு வகையான வீரங்களைச் செய்வதற்குரிய தலங்களை உடையவன். அவனுடைய கண்களோ எப்போதும் அருள் சுரந்துகொண்டிருக்கும். நமக்கெல்லாம் தலைவனாகவும், நம்மை அடியவர்களாகக் கொண்டமையினால் நமக்கு அமுதம் போலச் சுவை உள்ளவனாகவும் இருக்கிறான்.

அங்கண் அரசை, அடியோங்கட்கு ஆரமுதை.

“உலகிலுள்ள தலைவர்களைப் போல அன்றி, நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் தருகின்றவன். ஆகையால் நம் பெருமானாகிய அவனை நாம் பாடவேண்டும். அதனால் நமக்கு எல்லாவகையான நலங்களும் திகழும்,’

நங்கள் பெருமானைப் பாடி நலம்திகழ

“தாமரைப் பூக்கள் நிறைந்த இந்தப் புனலில் பாய்ந்து ஆடுவோமாக.”

பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

என்கிறார்கள்.

செம் கண் அவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால்,
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்பாலதா,
கொங்கு உண் கரும் குழலி! நம் தம்மைக் கோதாட்டி,
இங்கு, நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி,
செம் கமலப் பொன் பாதம் தந்தருளும் சேவகனை,
அம் கண் அரசை, அடியோங்கட்கு ஆர் அமுதை,
நங்கள் பெருமானை, பாடி, நலம் திகழ,
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடுஏல் ஓர் எம்பாவாய்! (17)

[பூந்தாது உடைய கரிய கண்ணைப் பெற்ற பெண்ணே சிவந்த கண்ணை உடைய திருமாலிடத்தும், திசைதோறும் முகத்தை உடைய நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும் வேறு எங்கும் இல்லாததாகிய ஒப்பற்ற பேரின்பத்தை நம்மிடத்தில் உள்ளதாக, நாம் கோதுகள் உடையவர்கள் ஆனாலும் அவற்றை எண்ணாமல் ஆட்கொண்டு அந்தக் கோதுகளை எல்லாம் நீக்கி, பலரும் காணாமல் இருக்கின்ற அவன் இங்கே நம்முடைய வீடுகள்தோறும் எழுந்தருளுகிறான். அத்தகைய வீரம் பொருந்தியவனை, கருணை பொழிவதனால் அழகிய கண்ணையுடைய அரசனை, அடியவர்களாகிய நமக்கு அரிய அமிர்தம் போன்றவனை, நமக்கெல்லாம் தலைவளைப் பாடி, நன்மை விளங்கும்படியாகத் தாமரைப் பூக்கள் நிறைந்த இந்தப் புனலில் பாய்ந்து ஆடுவோமாக.]

திருமால் சிவந்த கண்ணையுடையவன். ஆதலினால் புண்டரீகாட்சன் என்னும் பெயர் பெற்றான். நான்கு முகங்களால் நாலு திசையும் நோக்குபவன் ஆதவால் பிரமனை ‘திசைமுகன்’ என்றாள். திருமால், பிரமன் ஆகிய இருவரையும் சொன்னமையினால் ‘தேவர்கள்’ என்று அவர்கள் அல்லாத இந்திரன் முதலிய பிற தேவர்களைக் குறித்தாள். இன்பம் தருகின்ற இடங்களாக மலை முதலியன இருப்பவும், அங்கெல்லாம் கிடைக்காத பெரிய இன்பத்தை நமக்குத் தந்தான் என்பதை, ‘இன்பம் நம்பாலதா’ என்கிறாள். அந்த இன்பம் ஒப்பற்ற இன்பம் ஆதலின் ‘எங்கும் இலாததோர் இன்பம்’ என்றாள்.

“முழுவதும் தூய்மை பெற்று அவனை அடையவேண்டும். அப்படி இல்லாமல் நாம் குற்றங்கள் உடையவர்களானாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் நம்முடைய சிறிய அன்பை ஏற்றுக் கொண்டு நம்முடைய குற்றங்களை எல்லாம் போக்கி அருள்கிறான். அல்லாமல் எங்கோ இருக்கிற அவன் இங்கே நம்முடைய வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். தனக்கென்று ஓரிடம் இல்லாவிட்டாலும், கோவில்களில் எழுந்தருளி இருக்கும் அவன் நம்முடைய இல்லங்களைத் தான் எழுந்தருளும் கோவில்களாக்கிவிடுகிறான்.”

அவனுடைய பாதம் செந்தாமரை போலப் பொலிவு பெற்றிருக்கிறது. பொற்பாதம்’ என்பதற்குப் பொன் போன்ற திருவடிகள் என்று பொருள் கொள்ள வேண்டும். “பிறருக்குக் கிடைக்காத அந்த பாதத்தை நமக்குத் தந்தருளுகிறான்.” பாதம் தருவது என்பது அதனை எக்காலத்தும் நினைந்து வாழ்கின்றதைச் சுட்டியது. சேவகன் – வீரன். எட்டு வகையான வீரச் செயல்களைச் செய்தமையினால் அவனுக்கு அட்ட வீரத்தானம் என்று தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவனுடைய கண்ணை அங்கண் என்கிறாள். கண்ணுக்கு அழகாவது அருள் பொழிவது. உலகத்தில் ஆயிரம் ஆயிரம் அரசுகள் இருந்தும் கூட என்றைக்கும் மாறாமல் உலகத்தை எல்லாம் ஆளுகின்றவன் ஈசுவரன் ஆதலின், ‘அங்கண் அரசை’ என்கிறாள். “பிறருக்கு அவன் எப்படி இருந்தாலும் தம்முடைய அடியார்களாகிய நமக்கு அரிய அமுதம் போல இருக்கிறான். அமுது சாவா மூவாப் பெருமை உடையது. நாம் அவனை உட்கொண்டு இருப்பதனால் நமக்குப் பிறப்பில்லாமல் போகும்.” “ஆரமுது” என்பதற்கு அரிய அமுதம் என்றும், நிறைந்த அமுதம் என்றும் பொருள் கொள்ளலாம். “அத்தகைய நம்முடைய பெருமானை நாம் பாடுவோமாக. அப்படிப் பாடினால் நம்மிடத்தில் முன்பே உள்ள நலங்கள் எல்லாம் பின்பும் விளங்கப்பெறும்.”

இவர்கள் ஆடும் பொய்கை தாமரைப் பூக்கள் நிறைந்தது ஆதலின் “பங்கயப் பூம்புனல்” என்று சொல்கிறாள். கன்னிப் பெண்கள் ஆதலின், மெல்ல இறங்கிக் குளிக்காமல் குதித்து நீராடுகிறார்கள். ஆதலின் ‘பாய்ந்து ஆடு’ என்று சொல்கிறாள். இறைவனுடைய திருவருளை நினைந்து நாம் நீராடுவோமாக என்பது கருத்து.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *