திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்

20. எங்கு எழில் என் ஞாயிறு?

திருமணம் செய்து கொடுக்கும்போது உலகத்தில் உம்முடைய கையில் ஒப்படைக்கின்ற இந்தப் பெண்பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று மிகப் பழங்காலம் முதற் கொண்டு சொல்வார்கள். அந்தத் திருமணம் எங்களுக்கு வேண்டியதில்லை. உலகத்திலுள்ள பிற மனிதர்களைப் போல நாங்கள் மணம் செய்துகொள்ள மாட்டோம். யாருக்கேனும் எம்மை மணம் செய்து வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் எங்களுக்கு உண்டு.

உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்.

“எங்கள் பெருமானே. உன்னிடத்தில் ஒன்றை உரைப்போம். நீ கேட்டருள்வாயாக.”

எங்கள் பெருமான் உனக்குஒன்று உரைப்போம்கேள்

“நாங்கள் பருவம் நிரம்பியவர்கள். எங்களுடைய கொங்கைகள் நின் அன்பர்கள் அல்லாதவர்களுடைய தோள்களைச் சேராமல் இருக்கவேண்டும். பிறரையும் அணையும் துர்ப்பாக்கியம் எங்களுக்கு இருக்கக்கூடாது.”

எம்கொங்கை நின் அன்ப ரல்லார்தோள் சேரற்க.

“எம்முடைய கைகள் உனக்கு அல்லாமல் வேறு எந்த வேலைகளையும் செய்யாமல் இருக்கட்டும். எந்தச் செயலைச் செய்தாலும் அது உன்னுடைய பணியோடு தொடர்புடையதாக இருக்கட்டும்.”

எம்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க.

“இரவானாலும், பகலானாலும் எங்களுடைய கண்கள் அழகுடையது என்று வேறு ஒன்றையும் காணாமல் இருக்கட்டும். உலகில் அழகுள்ள பொருள்கள் என்று எத்தனையோ பொருள்கள் இருக்க, பிறர் எல்லாம் அவற்றைக் காண்கிறார்கள். நாங்கள் அப்படிக் காணக் கூடாது. உன்னுடைய அழகைக் காட்டிலும் அழகான பொருள் வேறு ஒன்றும் இல்லையாதலின் இரவானாலும், பகலானாலும் வேறு ஒன்றையும் காணாமல் இருக்கவேண்டும்.”

கங்குல் பகல்எம்கண் மற்றொன்றும் காணற்க.

“இத்தகைய தன்மை எங்களுக்கு இங்கே கிடைக்க வேண்டும். எம்முடைய தலைவனாகிய நீ எங்களுக்கு இதனை அருள் செய்வாயானால். சூரியன் கிழக்கே ஏழாமல், வேறு திசையில் எழுந்தால் அதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை?

இங்கிப் பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்குஏலோர் எம்பாவாய்!

“சூரியன் எந்தத் திசையில் எழுந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. இங்கே எங்கள் வேண்டுகோளைக் கேட்டு அருள் செய்வாயாக” என்கிறார்கள்.

உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம், என்று
அங்கு அப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்,
எங்கள் பெருமான், உனக்கு ஒன்று உரைப்போம், கேள்!
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க;
எம் கை உனக்கு அல்லாது எப் பணியும் செய்யற்க;
கங்குல், பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க.
இங்கு இப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்,
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு?’ ஏல் ஓர் எம்பாவாய்!

உங்கை என்று பன்மையில் சொல்லிப் பின்பு உரிமையினால் ‘உனக்கே’ என்று ஒருமையில் சொல்கிறாள். பிள்ளை என்பது பெண் பிள்ளையைக் குறித்தது. பெண்களை, ‘பெண் பிள்ளை’ என்று சொல்வது வழக்கம் அடைக்கலம் – சரணா கதி. “நீ இவளை எவ்வாறும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்ற கருத்துடையது. திருமணத்தில் பாணிக்கிரகணம் செய்யும்போது, ‘இந்தப் பெண் உனக்கே உரியவள்’ என்று சொல்வார்கள். இது மிகப்பழங்காலம் தொட்டு வருகின்ற பழக்கம். அந்தப் பழக்கம் எங்களுக்கு வரக்கூடாது. வேறு யாருக்கேனும் மணம் செய்து கொடுத்து அந்தப் பழம் சொல்லைப் புதியதாக இப்போது சொல்லக் கூடும் என்ற அச்சம் இப்போது எங்களுக்கு இருக்கிறது. புதுக்கும் – புதிய தாக்கும். உன் கையில் கொடுக்கும் இந்தப் பெண்பிள்ளை உனக்கே அடைக்கலம் ஆவாள் என்ற அந்தப் பழைய சொல்லை மீட்டும் புதிப்பிப்பார்களோ என்ற எம்முடைய அச்சத்தால் எங்கள் பெருமானே, உனக்கு ஒரு விண்ணப்பம். இதனை நீ கேட்டருள்வாய். பருவம் உடைய எங்களுடைய கொங்கை உன்னிடம் அன்பு செலுத்தாதவருடைய தோள்களைச் சேராமல் இருக்கட்டும். எங்களுடைய கை உனக்கு அல்லாமல் வேறு எந்தப் பணிகளையும் செய்யாமல் இருக் கட்டும்.

இரவானாலும், பகவானாலும் எம்முடைய கண்கள் உன்னையன்றி வேறு ஒன்றையும் காணாமல் இருக்கட்டும். இங்கேயே இவ்வாறு எங்களுடைய வேண்டுகோளுக்கிணங்க அருள் செய்வனால் சூரியன் எங்கே உதித்தால் என்ன?” என வேண்டியவாறு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *