
திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்
10. உன் அடியார் எம் கணவர் ஆவார்
பெண்கள் இப்போது எல்லோரும் கூடிக்கொண்டார்கள். இறைவனைத் துதிக்கத் தொடங்குகிறார்கள். அவன் எல்லாப் பொருளுக்கும் மூலமான ஆதிமூலப் பழம்பொருள். ஆகவே,
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
என்கிறார்கள். மேலும் மாறிமாறிப் புதிய புதிய பொருள்கள் வருகின்றன. புதிய புதிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவற்றுக்குப் பின்பும் புதுமை உடையவனாக இறைவன் இருக்கிறான். இதனை,
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!
என்று சொல்கிறார்கள். இத்தகைய சிறந்த பெருமானைத் தம்முடைய தலைவனாகப் பெற்ற சிறப்பு உடைய அடியார்கள் அவர்கள். ஆதலால்.
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
என்று அதனைக் கூறிக் கொள்கிறார்கள். மனிதர்களுக்கு அடியார்களாக இருப்பதைவிட இறைவனுக்கு அடியார்களாக இருப்பதன் காரணத்தால் ‘சீரடியோம்’ என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
தொண்டர்கள் கூட்டத்தோடு சேர்ந்து பணி செய்தால் அந்தப் பணிக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். தனியாக நின்று பணி செய்தால் சில சமயங்களில் சலிப்பு உண்டாகும். அப்படியின்றிக் கூட்டத்திலே சேர்ந்து திருப்பணி செய்தால் எல்லோரும் ஊக்கமாக அந்தப் பணியைச் செய்வார்கள் ஆகவே அடியார்களுடைய தொடர்பு தமக்கு வேண்டு மென்று சொல்ல வருகிறார்கள்.
உன்னுடைய அடியார்களின் தாளை நாங்கள் பணிவோம். அவர்களுக்குப் பக்குவமான காரியங்களை நாங்கள் செய்வோம்.
உன்அடியார் தாள்பணிவோம்; ஆங்கவர்க்கே
பாங்காவோம்.
‘அவர்கள் எங்களுடைய பக்குவத்தை அறிந்து எங்களிடம் அன்பு காட்டுவார்கள். அதன்மேல் அவர்களே எங்களை மணந்துகொள்வார்கள்.’
அன்னவரே எம்கணவர் ஆவார்.
“எங்களுடைய கணவன்மார்களின் உள்ளம் அறிந்து அவர்கள் சொல்லுகின்ற வழியே தொழும்பாக நாங்கள் பணி செய்வோம். அவர்கள் உன்னுடைய பக்தர்கள் ஆகையால் அவர்கள் சொல்வன எல்லாம் உன்னுடைய திருப்பணியைச் சார்ந்தே இருக்கும். அவர்கள் எங்களை ஏற்றுக்கொண்டு, எங்கள் பண்பை உகந்து சொல்வன எல்லாம் உன்னுடைய தொழும்பாகவே இருக்கும். நாங்கள் அந்தப் பணிகளை விடாமல் செய்வோம்.”
அன்னவரே எம்கணவர் ஆவார்; அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்.
“அத்தகைய பெரிய பேறு எங்களுக்குக் கிடைக்குமாறு நீ அருள் செய்யவேண்டும். எம்முடைய தலைவனாகிய நீ எங்களுக்கு அவ்வாறு அருள் செய்வாயாக. எங்களுக்கு வேறு குறையும் இல்லாமல் இருக்கும்.”
“உலகத்திலுள்ள பொருள்களால் வருகின்ற திருப்தி மிகவும் அற்பமானது. ஆகவே இவை எல்லாம் அழிந்து போகும். ஆனால் உன்னுடைய திருவருள் எல்லாக் காலத்தும் நின்று எங்களுடைய பிணிகளை எல்லாம் போக்கி எங்களுக்கு நல்வாழ்வு தரும். ஆகையால் நாங்கள் சொன்னபடி நீ எங்களுக்கு அருள் செய்யவேண்டும்.”
இன்ன வகையே எமக்குஎம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்.
உலகம் தோன்றியது எப்போது என்று யாருக்கும் தெரியாது. அப்படித் தெரிந்த பொருள்களுள் மிகவும் பழைய பொருள் இது என்று ஒருவர் ஒன்றைச் சுட்டிக் காட்டினாரானால் அதற்கு முன்பாக ஆண்டவன் இருக் கிறான். அந்தப் பொருளைப் படைத்தவனே அவன் தானே? படைக்கப்பட்ட பொருளுக்கும் முன்பே படைப்பவன் இருக்கத்தானே வேண்டும்? ஆகையால்,
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
என்கிறார்கள். பல புதிய நிகழ்ச்சிகள் எல்லாம் நாளுக்கு நாள் வருகின்றன. பழமையில் ஊறியவர்களுக்கு அவைகள் புதுமையாகத் தோன்றுகின்றன. இந்தப் புதுமைகள் நாளுக்கு நாள் வெவ்வேறாக வருகின்றன. பின்னும் பின்னும் புதுமைகள் வரவர அந்தப் புதிய பொருள்களுக்கு அப்பாலும் புதிய பொருளாக இறைவன் இருக்கிறாள்.
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!
முன்னைப் பழம்பொருள் என்று சொன்னாளாதலின் பின்னைப் புதுமை என்று சொல்கிறாள். எல்லாக் காலத்தும் இறைவன் இருக்கிறான் என்ற கருத்தை இவ்வாறு சொன்னார். “என்றைக்கும் நித்தியனாக உள்ள உன்னை எங்களுடைய தலைவனாகப் பெற்ற பெருமை எங்களுக்கு உண்டு இதைவிடப் பெரிய சிறப்பு வேறு இல்லை. ஆகையால் நாங்கள் எல்லாம் உன் சிறப்புடைய அடியார்கள்.”
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்.
“எங்களுடைய அடிமைத்தனம் உன்னோடு நிற்பது இல்லை. உன்னுடைய அடியார்களுக்கும் நாங்கள் பணி செய்வோம். அவர்கள் செய்கின்ற பணிகள் எல்லாம் உன்னோடு தொடர் புடையனவாக இருக்கும்; ஆதலின் அவர்கள் தொடர்பால் எங்கள் பக்திக்குச் சிறிதும் குறைவு வராது. ஆகவே, அவர்களுக்கு எவை எவை பக்குவமான பொருள்களோ அவற்றை எல்லாம் நாங்கள் செய்து கொடுப்போம். அன்னவரே எங்கள் கணவர்கள் ஆவார்கள்.”’அன்னவரே என்பதிலுள்ள ஏகாரம் பிரிநிலை ஏகாரம், ‘உலகத்திலுள்ள செல்வர்களுக்குப் பிரியமாக நடந்துகொண்டு அவர்களுடைய தயவைப் பெறுகிறவர்களே பெரும்பாவோர். அப்படி இல்லாமல் ‘நாங்கள் உன்னுடைய அடியார்களுக்கே பாங்காவோம்’ என்பதை இந்த ஏகாரம் குறிக்கிறது. “அவ்வளவு சிறப்புடைய பெரியவர்களோடு பக்குவமாகப் பழகியதால் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தொடர்பு இருக்கமாகும். அவர்கள் எங்களையே மணந்துகொள்வார்கள், நாங்களும் அவர்களை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள். ஆதலினால் எங்கள் வாழ்க்கைத் துணைவராக வேறு யாரையும் கருதாமல் அவர்களையே எங்கள் கணவராக ஆக்கிக்கொள்வோம். அவர் மனமுவந்து எங்களை ஏற்றுக் கொள்வார்கள்.”
அன்னவரே எம்கணவர் ஆவார்; அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்.
கணவருடைய மனம்போல நடப்பது உண்மையான பத்தினிமாருக்கு அழகு அவர்கள் உன் அடியார்கள் ஆதலின் அவர்கள் சொல்வன எல்லாம் உன் தொழும்போடு தொடர் புடையவனவாக இருக்கும். அந்தப் பணிகளை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு செய்வோம். இத்தகைய நிலை எங்களுக்கு வந்துவிட்டால் வேறு என்ன வேண்டும்? இந்த நிலையைத் தருவதற்கு எங்களுடைய தலைவனாகிய உன்னை அல்லாமல் வேறு யார் இருக்கிறார்கள்? அந்த வகையில் எங்களுக்கு எங்களுடைய கோன் ஆகிய நீ அருள்புரிய வேண்டும். இவ்வாறு நீ செய்தால் நாங்கள் எந்த விதமான குறையும் இல்லாமல் இருப்போம். உலகிலுள்ள பொருள்களால் உண்டாகின்ற இன்பத்தைவிட உன்னுடைய திருவருளால் உண்டாகிற இன்பம் மிகப் பெரியது. அதனை இந்த உலகத்தில் பெற்றுவிடுவோமானால் எங்களுக்கு வேறு என்ன குறை இருக்கப் போகிறது? நாங்கள் பரிபூரண ஆனந்தத்தைப் பெறுவோம்.”
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம்; ஆங்கு அவர்க்கே பாங்கு
ஆவோம்;
அன்னவரே எம் கணவர் ஆவார்; அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்;
இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்,
என்ன குறையும் இலோம்‘ ஏல் ஓர் எம்பாவாய்!
இதனால் ஆண்டவனுடைய அடியார்கள் தொடர்பு தங்களுக்கு வேண்டுமென்று, சொல்கிறார்கள்.



