திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்

7. இன்னும் துயிலுதியோ?

பாவை நோன்பு நூற்பதற்கு முதல் நாள் கன்னிப் பெண்கள் எல்லோரும் கூடிப் பேசிக் கொள்கிறார்கள். “நாளை விடியற்காலை எல்லோரும் எழுந்து நீராடச் செல்ல வேண்டுமே. யாவரும் எழுந்து வருவார்களா?” என்று ஒருத்தி கேட்கிறாள். அதற்கு வேறொருத்தி, “என்ன அப்படிச் சொல்கிறாய்? நானே எல்லோருக்கும் முன்னே எழுந்து வந்து உங்களை எழுப்புகிறேன். பாருங்கள்” என்கிறாள். ஆனால் அவள் இன்று படுத்திருக்கிறாள். அதைக் கண்டு வந்தவர்களின் தலைவி சொல்கிறாள். “மான் போன்ற பெண்ணே, நீ குதித்து எழுந்தால் மான் துள்ளிக் குதிப்பது போல இருக்குமே. நேற்று நீ என்ன சொன்னாய்? நினைவு இருக்கிறதா? உங்களை நானே வந்து எழுப்புகிறேன் என்றாயே. இன்னும் என்னென்னவோ சொன்னாயே. அவைகள் எல்லாம் இப்போது எங்கே போயின? அவை போன திசை இன்னது என்று சொல்வாயா?”

மானே; நீ நென்னலை, நாளைவந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய்.

“எங்களுக்கு எல்லாம் விடிந்துவிட்டது. இன்னும் உனக்கு மாத்திரம் விடியவில்லையோ?” என்று கேட்கிறாள்.

இன்னம் புலர்ந்தின்றோ?

நாங்கள் எல்லாம் சிவபெருமானுடைய திருவடியைப் பாடி வந்திருக்கிறோம். அவன் எத்தகையவன்? விண்ணுலகத்தில் உள்ளவர்களும், பூ உலகத்தில் உள்ளவர்களும், ஏனைய உலகங்களில் உள்ளவர்களும் அறிவதற்கு அரியவன் அல்லவா?

வானே நிலனே, பிறவே அறிவரியான்.

‘நாம் முயன்று அவனுடைய அருளைப் பெறுவது என்பது அரிய காரியம். அவன் அருளாலே அவன் தாள் வணங்க வேண்டும் அவனே வந்து நமக்குத் தம் சிறந்த அருளைத் தந்து ஆட்கொண்டருளுவான். அத்தகைய எங்கள் பெருமானின் பெருமை பொருந்திய நீண்ட திருப்பாதங்களைப் பாடி வந்திருக்கிறோம். வந்து உன்னை எழுப்புகிறோம். எங்களுடைய வார்த்தைக்கு நீ உன் வாயிலைத் திறப்பாயாக”

தானே வந்து எம்மைத் தலையளித்துஆட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குஉன் வாய்திறவாய்

நாங்கள் அவனைப் பாடும்போது எங்கள் ஊன் எல்லாம் உருகுகின்றனவே. நீ உருகாமல் இருக்கிறாயே. இது உனக்குத் தகுமா? நாங்கள் எங்களுக்குத் தலைவனாக இருக்கிறவனைப் பாடுகிறோம். “எங்களுக்கும், உன்னைப் போன்ற மற்றவர்களுக்கும் உரிய தலைவனாகிய சிவபெருமானைப் பாடுகிறோமே, நீயும் வந்து பாடு” என்று சொல்கிறாள்.

ஊனே உருகாய்; உனக்கே உறும்எமக்கும் ஏனோர்க்கும் தம்கோனைப் பாடுஏலோர் எம்பாவாய்.

“நாங்கள் எல்லாம் உருக உருகப் பாடுகிறோமே. நீ உருகாமல் படுத்திருக்கிறாயே. அவன் எங்களுக்கு மாத்திரமா தலைவன்? எங்களுக்கும் எம் போன்ற மற்றவர்களுக்கும் உரிய தலைவன் அல்லவா? அவனை எங்களோடு வந்து பாடுவாயாக” என்கிறாள்.

மானே! நீ நென்னலை, நாளை வந்து உங்களைநானே எழுப்புவன் என்றலும், நாணாமேபோன திசை பகராய்; இன்னம் புலர்ந்தின்றோ?
வானே, நிலனே, பிறவே, அறிவு அரியான்தானே வந்து, எம்மைத் தலையளித்து, ஆட்கொண்டருளும்வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு, உன் வாய் திறவாய்!
ஊனே உருகாய், உனக்கே உறும்; எமக்கும்ஏனோர்க்கும் தம் கோனைப் பாடுஏல் ஓர் எம்பாவாய்!

“மான் போன்ற பெண்ணே, நீ நேற்று நாளை வந்து உங்களை நானே முன்னாலே வந்து எழுப்புவேன் என்றும் பிறவாறும் சொன்னவை நாணம் இல்லாமல் இன்று போன திசை எது? அதைச் சொல்வாயாக. உனக்கு இன்னும் விடிய வில்லையோ? தேவலோகமும், பூலோகமும், பிற உலகங்களும் அறிவதற்கு அரியவனாகிய சிவபெருமான் நம்முடைய முயற்சியின்றியே தன்னுடைய பேரருளால், தானே வந்து ஒன்றுக்கும் பற்றாத எம்மைச் சிறந்த அருள் பூண்டு ஆட் கொண்டு அருளினான். அவனுடைய பெருமை பொருந்திய நீண்ட திருவடிகளைப் பாடி நாங்கள் வந்திருக்கிறோம். எங்களுக்கு உன் வாயிலைத் திறப்பாயாக துள்ளித் துள்ளிக் குதித்து எழுபவள் ஆதலின் ‘மானே’ என்று அழைக்கிறாள். தென்னல் – நேற்று. நானே வந்து எழுப்புவன் என்றது. நீங்கள் வந்து எழுப்பும்வரை படுத்திராமல், நாளே முதலில் எழுந்திருந்து உங்களை முதலில் வந்து எழுப்புகிறேன் என்ற படி. நானே – ஏகாரம், பிரிநிலை.”

“இப்படி நேற்றுச் சொன்னவள் இன்று படுத்திருக்கிறாயே. உனக்கு நாணம் இல்லையா? இயல்பாக நாணம் உள்ளவளாயிற்றே. அந்த நாணம் இப்போது எங்கே போயிற்று?” என்று கேட்கிறாள். இன்னம் புலர்ந்தின்றோ என்றது, உலகம் எல்லாம் விடிந்து விட்டது. அவரவர்கள் தங்கள் செயல்களைச் செய்கிறார்கள். உனக்கு மாத்திரம் இன்னும் விடியவில்லையோ?’ என்றபடி வானே, நிலனே, பிறவே என்பவற்றிலுள்ள ஏகாரங்கள் ஏகாரம். இறைவன் தேவலோகத்தில் உள்ளவர்களாலும் பூலோகத்தில் உள்ளவர்களாலும், மற்ற உலகத்தில் உள்ளவர்களாலும் அறிவதற்கு அறியவன். அத்தகைய பெருமான் நம்மிடத்திலுள்ள பெரும் கருணையினால், நம்மால் அவனை அடைய முடியாது என்பதைத் தெரிந்துகொண்டு, தானே எழுந்தருளி வந்து நம்மை ஆட்கொண்டான். அவன் செய்த அன்பு மிகச் சிறந்த அன்பு. தலையளி. அத்தகைய தலையளியைச் செய்து நம்மை ஆட்கொண்டு அருளினவன் அவன். அவன் கழல் மிகப்பெருமை உடையது. மிக நீண்டது; வான் வார் கழல். அவற்றைப் பாடி நாங்கள் வந்திருக்கிறோம். நீயும் எங்களுடன் வரவேண்டும். அப்படி இல்லாமல் படுத்திருக்கிறாயே. இப்போதாவது உன் வாசலைத் திறப்பாயாக.” வான் வார் கழல் – என்பதற்கு தேவலோகத்தில் நடந்த திருவடி என்றும் பொருள் கொள்ளலாம். “இறைவனுடைய திருநாமத்தைக் கேட்டால் அன்பர்களுடைய உள்ளமும், உடலும் உருகும். ஆனால் நீயோ உருகாமல் இருக்கிறாய். இறைவனிடத்தில் அன்பு உடைய உனக்கு இது தகுமா?” என்று கேட்கிறாள். உனக்கே உறும் என்பதில் உறும், காகுஸ் வரம். உறுமா என்பது பொருள். “அவன் எங்களுக்கு மாத்திரமா தலைவன்? உனக்கும் உன்னைப் போன்ற பிறருக் கும் தலைவன் அல்லவா? அவனைப் பாட வேண்டாமா? வந்து பாடு” என்று சொல்கிறாள்.

இந்தப் பாடலால் தங்களைப் போல அவளும் வந்து தங்களோடு சேர்ந்து இறைவன் புகழைப் பாடவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *