திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்

9. ஈது என்ன உறக்கமோ?

வேறொரு வீட்டுக்குப் போய் அங்கே படுத்துக் கிடக்கும் பெண்ணைப் பார்த்துப் பேசுகிறாள் வந்தவர்களில் தலைவி.

“விடிந்து விட்டதே! அஃறிணையாகிய கோழி கூவி விட்டது. மற்றப் பறவைகளும் எங்கும் ஒலிக்கத் தொடங்கி விட்டன. சப்தஸ்வரங்களை உடைய வாத்தியங்கள் முழங்குகின்றன. விடியற்காலத்தில் ஊதும் வெண் சங்கை எங்கும் ஊதுகிறார்கள். இவை உன் காதில் விழவில்லையா?”

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்;
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்.

“நாங்கள் யாவரும் உன் வீட்டு வாசலுக்கே வந்து இறைவனைப் பாடினோமே. அவன் தனக்குச் சமானம் வேறு இல்லாத பரஞ்சோதி. அவனுடைய மேலான கருணைக்கும் ஒப்பு இல்லை. அவனைப் பற்றியன யாவும் ஒப்பு இல்லாதவை. இவற்றை எல்லாம் சொல்லி நாங்கள் பாடினோம். நீ அவற்றைக் கேட்கவில்லையா?’

கேழ்இல் பரஞ்சோதி. கேழ்இல் பரங்கருணை,
கேழ் இல் விழுப் பொருள்கள் பாடினோம்; கேட்டிலையோ?

“நீ வாழ்வாயாக! இவ்வளவு நாங்கள் பேசியும் நீ உறங்குகிறாயே! இது என்ன உறக்கமோ: உன் வாயிலைத் திறவாய்.”

வாழி! ஈது என்ன உறக்கமோ? வாய்திறவாய்.

“எல்லா உலகையும் ஆளும் ஆக்ஞா சக்கரத்தையுடைய சிவபெருமானிடம் உனக்குள்ள அன்புடைமை ஆகும் வண்ணம் இவ்விதந்தானோ? நீ இறைவனிடம் அன்பு உடையவளாயிற்றே! அது இந்த எல்லைக்குள் நின்று விட்டதா? நாங்கள் பாடியும் கேட்காமல் செய்து விட்டதா?”

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

“இனி நீ எழுந்து வா. எல்லா யுகங்களுக்கும் முதல்வனாக, ஆதி பரம்பொருளாக நிலையாக நிற்கும் ஒப்பற்ற எம் பெருமானும், உமாதேவியைத் தன் பங்கில் உடையவனும் ஆகிய இறைவனைப் பாடு.”

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்!

ஏழை பங்காளன் என்பதற்கு ஏழைகளின் பங்கிலிருந்து பாதுகாக்கும் தீனதயாளன் என்றும் பொருள் கொள்ளலாம்.

கோழி சிலம்ப, சிலம்பும் குருகு எங்கும்;
ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கு எங்கும்;
கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங்கருணை,
கேழ் இல் விழுப் பொருள்கள் பாடினோம்; கேட்டிலையோ?
வாழி! ஈது என்ன உறக்கமோ? வாய் திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடு!’ ஏல் ஓர் எம்பாவாய்!

“கோழிகள் கூவ எங்கும் மற்றப் பறவைகள் ஒலிக்கின்றன. ஏழு சுவரங்களையுடைய வாத்தியங்கள் முழங்க, விடியற்காலையில் ஊதும் வெண் சங்குகள் எங்கும் ஒலிக்கின்றன. புறத்திலே இத்தகைய ஒலிகள் ஒலிக்க இங்கே நின் வாயிலில் வந்து நாங்கள் நின்று ஒப்பற்ற பரஞ்சோதியாகிய இறைவனுடைய ஒப்பற்ற மேலான கருணையையும் ஒப்பற்ற மேலான அவனைச் சார்ந்த பொருள்களையும் பாடினோமே! நீ அவற்றைக் கேட்கவில்லையா? நீ வாழ்வாயாக! இப்படி உன்னை அழுத்தி வைக்கும் இது என்ன தூக்கமோ, தெரிய வில்லையே! நீ உன் வாயிலைத் திறப்பாயாக. ஆக்ஞா சக்கரத்தையுடைய சிவபெருமானிடத்தில் உனக்குள்ள அன்புடைமை ஆகும் வண்ணம் இவ்வண்ணந்தானா? யுகங் களுக்கெல்லாம் முன்னே இருப்பவனாக நிற்கும் ஒப்பற்ற சிவ பெருமானை, ஏழைபங்காளனை நீ எழுந்து வந்து பாடுவாயாக.”

விடியற் காலத்தே கூவும் கோழிகள் கூவின. பறவைகள் கூடு விட்டுச் சிறகடித்துப் புறப்படுவதற்கு ஒலிக்கின்றன. அதனால்,

கோழி சிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும்

என்கிறாள். சிலம்ப – ஒலிக்க. குருகு – பறவை.

ஏழு சுவரங்களையுடைய வாத்தியத்தை ஏழில் என்றாள். சுரங்கள் ஏழுக்கு இருப்பிடமான இசைக் கருவி என்று பொருள் கொள்க. ஏழில் என்பதோர் பறவை என்பாரும் உளர். விடியற்காலையில் சங்கூதுதல் வழக்காதலின்,

இயம்பும்வெண் சங்கெங்கும்

என்றாள்.

புறத்தே ஒலிக்கும் ஒலிகளைக் கேட்டாலே எழுந்து விடலாம். நீ எழவில்லை. இப்போது நாங்கள் உன் நாதாங்கியைப் பிடித்துக் கொண்டு பாடுகிறோமே! ஒப்பற்ற பரஞ் சோதியாகிய இறைவனுடைய மேலான கருணையையும் அவனோடு சார்ந்த ஒப்பற்ற பொருள்களையும் பாடினோமே; கேட்கவில்லையா?

கேழ்இல் பரஞ்சோதி, கேழ்இல் பரங்கருணை
கேழ்இல் விழுப்பொருள்கள் பாடினோம்; கேட்டிலையோ!

“இதற்கெல்லாம் உன் ஆழ்ந்த உறக்கந்தான் காரணம். நீ வாழ்க. அந்த உறக்கத்தைத்தான் சொல்லவேண்டும். இது என்ன மயக்கம் தரும் உறக்கமோ தெரியவில்லை.”

வாழிஈ தென்ன உறக்கமோ?

‘ உன் வாயிலைத் திறந்து எங்களோடு சேர்ந்து பாடுவாயாக.’

‘உன் வாய் திறவாய்’ என்பதற்கு ‘உன் வாயைத் திறந்து எங்கள் கேள்விக்குப் பதில் சொல்வாய்’ என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆழி என்பது சக்கரம். ஆழியான் என்பதை உலகத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் ஆக்ஞாசக்கரத்தை உடையவன் என்றபடி. ஊழி முதல்வன் என்பது காலம் கடந்தவன் என்பதைக் குறித்து நின்றது. நின்ற – நிலையாகச் சலனமின்றி நின்ற. ஒருவனை – ஒப்பற்றவனை. ஏழைபங்காளன் – உமா தேவியைப் பாகத்திலே கொண்டவன்; தீனதயாளன் என்றும் கொள்ளலாம்.

இறைவனை எங்களோடு வந்து சேர்ந்துகொண்டு பாடுவாயாக என்பது கருத்து

கோழி சிலம்ப, சிலம்பும் குருகு எங்கும்;
ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கு எங்கும்;
கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங்கருணை,
கேழ் இல் விழுப் பொருள்கள் பாடினோம்; கேட்டிலையோ?
வாழி! ஈது என்ன உறக்கமோ? வாய் திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடு!’ ஏல் ஓர் எம்பாவாய்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *