திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்

21. மார்கழி நீர் ஆடுவோம்

இந்தப் பாடலில் ஒவ்வொர் அடியிலும் இறைவனுக்கு வணக்கம் சொல்லி, ‘போற்றி, போற்றி’ என்று சொல்கிறாள். எல்லாம் இறைவனது திருவருளாலே நடக்கின்றன என்பதைக் குறிப்பிடுகிறாள். “எல்லாவற்றுக்கும் ஆதி ஆகிய உனது பாத தாமரைகள் எங்களைக் காப்பாற்றி அருள்வனவாக.”

போற்றி அருளுகன் ஆதியாம் பாதமலர்.

“எல்லாப் பொருளுக்கும் முடிவாக நின்று அதற்குப் பின்னும் இருக்கும் சிவந்த தளிர்கள் போன்ற உன் திருவடிகள் எங்களைக் காப்பாற்றி அருள்வனவாகுக.”

போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்

“எல்லா உயிர்களும் உன்னுடைய திருவடிகளிலிருந்து தோற்றுகின்றன. அந்தத் திருவடிகளுக்கு வணக்கம்.”

போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்.

உயிர்கள் பல வகையான போகங்களைப் பெறுகின்றன. அந்தப் போகங்கள் எல்லாம் இறைவனுடைய திருவடிப் பெருமையினால் கிடைப்பன. ஆதலின்,

போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

என்கிறாள். எல்லாப் பொருளுக்கும் தானே ஈறாகி நிற்கின்ற இரண்டு திருவடிகளை உடையவன் ஆண்டவன். ஆதலின்,

போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

என்கிறாள்.

“அவனுடைய தாமரை போன்ற பாதங்கள் திருமாலாலும், நான்முகனாலும் காணாதன. அதற்கு வணக்கங்கள்'” என்கிறாள்.

போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்.

“அவ்வளவு சிறப்புடைய உன்னுடைய பாதங்கள் எங்களை நாங்கள் உய்யும்படியாக ஆட்கொண்டு அருளின. அவற்றுக்கு எங்கள் வணக்கம்.”

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்.

“நாங்கள் இந்த மார்கழி மாதத்தில் உன்னைப் போற்றி நீராடுவோம்.”

போற்றியாம் மார்கழிநீ ராடுஏலோர் எம்பாவாய்!

ஒவ்வொர் அடியிலும் போற்றி போற்றி வருவது, ‘வணக்கம்’ எனனும் பொருளைத் தருவது.

போற்றி! அருளுக, நின் ஆதி ஆம் பாத மலர்.
போற்றி! அருளுக, நின் அந்தம் ஆம் செம் தளிர்கள்.
போற்றி! எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம்.
போற்றி! எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள்.
போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை அடிகள்.
போற்றி! மால், நான்முகனும், காணாத புண்டரிகம்.
போற்றி! யாம் உய்ய, ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்.
போற்றி! யாம் மார்கழி நீர் ஆடு’ ஏல் ஓர் எம்பாவாய்!

ஆதியாம் பாதமலர் என்றது தன்னிடத்திலிருந்து எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் என்றபடி. எல்லாவற்றுக்கும் முடிவாக நின்று அதற்கு மேலும் நிலைத்திருப்பதாதலின், ‘நின் அந்தமாம் செந்தளிர்கள்’ என்கிறாள். இறைவன் பாதம் சிவந்த தளிர்களைப் போல மென்மையாக இருக்கின்றன. அந்தத் திருவடியிலிருந்தே எல்லா உயிர்களும் தோன்றுகின்றன. சர்வப் பிரளய காலத்தில் அவன் திருவடியில் எல்லா உயிர்களும் அடங்கிவிடுகின்றன. சிருஷ்டி செய்யும்போது அவைகள் அங்கிருந்து தோற்றம் பெறுகின்றன.

உலகத்தில் பல வகையான போகங்களை மக்கள் அனுபவிக்கிறார்கள். அந்தப் போகங்களுக்கு எல்லாம் காரணமாக இருப்பது அவனுடைய திருவடிகளே ஆதலின், “எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்” என்கிறாள்.உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் அழிந்து போவன. உயிர்கள் எல்லாம் இறைவனது திருவடியைச் சார்ந்து விடுகின்றன. அவை எல்லாம் போய்ச் சாரும் இடம் அவன் திருவடிகள் ஆதலின், “எல்லா உயிர்க்கும்ஈறாம் இணையடிகள்” என்கிறாள். அவனுடைய தாமரையைப் போன்ற பாதங்கள் திருமாலாலும் நான்முகனாலும் காணப்படாதவை, ஆதலின், “மால் நான்முகனும் காணாத புண்டரிகம்” என்கிறாள்.

“இத்தகைய சிறப்புடைய பொன் மலர் போன்ற பாதங்கள் நாங்கள் பெறும் பேறு கொண்டு உய்யும்படி ஆட்கொண்டன. யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்’ என்கிறான். இத்தகைய திருவடிகளைப் போற்றி மார்கழி மாதத்தில் நீராடுவோமாக” என்கிறாள்.

இந்தப் பாடலில் ஆதியாம் பாதமலர் என்றும், அந்தமாம் செந்தளிர்கள் என்றும், தோற்றமாம் பொற் பாதம் என்றும், போகமாம் பூங்கழல்கள் என்றும், ஈறாம் இணையடிகள் என்றும், காணாத புண்டரிகம் என்றும் இறைவன் செய்யும் ஐந்தொழில்களையும் குறிப்பித்தாள்.

‘இறைவனுடைய பெருமையைப் பாடி நாம் மார்கழி மாதத்தில் நீராடுவோமாக’ என்பது கருத்து.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *