திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்

15. பாடி ஆடுவோம்

பெண்கள் நீராடும்போது அவர்கள் உடம்பு அசைகின்றன. நீரிலே குதிக்கும்போது காதுகளிலே உள்ள குழைகள் ஆடுகின்றன.

காதார் குழையாட

அவர்கள் மார்பிலும். மற்ற அங்கங்களிலும் பசிய பொன்னாலாகிய ஆபரணங்களை அணிந்திருக்கிறார்கள். அவைகள் ஆடுகின்றன.

பைம்பூண் கலனாட.

மலர்களைச் சூடிய கூந்தலும் ஆடுகின்றன.

கோதை குழலாட

அந்தப் பூக்களில் வண்டுகள் மொய்க்கின்றன. அவர்கள் பொய்கையில் குதிக்கும்போது அந்த வண்டுகள் எல்லாம் எழுந்து சேர்ந்து ஆடுகின்றன.

வண்டின் குழாமாட

இவ்வாறு மிகவும் குளிர்ச்சி பொருந்திய புனலில் நாம் ஆடுவோம்.” மார்கழி மாதமாதலால் புனல் குளிர்ச்சியாக இருக்கிறது. அப்படி ஆடும்போது இறைவனையும் அவனோடு சார்ந்த பொருள்களையும் பாடுகிறார்கள். தில்லையில் உள்ள சிற்றம்பலத்தைப் பாடுகிறார்கள்.”

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி.

வேதத்திலுள்ள பல பொருள்களைச் சொல்லிப் பாடுகிறார்கள்.

வேதப் பொருள்பாடி.

அந்தப் பொருளே இறைவனாக இருக்கிறது என்பதை நினைவு கூர்ந்து அதனைச் சொல்லிப் பாடுகிறார்கள்.

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி.

சோதி வடிவினனாகிய எம்பெருமானின் பலவகை அருள் திறத்தையும் பாடுகிறார்கள்.

சோதி திறம்பாடி.

அவன் தன் திருமுடியில் சுற்றியிருக்கும் கொன்றை மலரைப் பாடுகிறார்கள். சிவபெருமானின் அடையாள மாலை கொன்றை.

சூழ்கொன்றைத் தார்பாடி.

“எல்லாப் பொருளுக்கும் முதல்வனாக நிற்கிறவன் அவன். எல்லாம் மறைந்தாலும் தான் மறையாமல் இறுதியில் நிற்கிறவனும் அவன், இந்தத் தன்மைகளை எல்லாம் நாம் பாடுவோம்.”

ஆதி திறம்பாடி, அந்தம்ஆ மாபாடி.

இறைவியையும் பாடுவோம் என்று சொல்கிறாள். இறைவிதான் உலகத்திலுள்ள மக்களை எல்லாம் பெற்று எடுத்தவள். அவரவர்களுடைய இயல்புக்கேற்ப மக்கள் வளர்கிறார்கள். இந்தப் பேதம் அவர்கள் முன் செய்த வினையினால் வந்தது. அதற்கேற்ப வேற்றுமை உண்டாகும்படி நம்மை வளர்த்து எடுக்கிறாள், எம்பெருமாட்டி. அவள் கை நிறைய வளையலை அணிந்திருக்கிறாள். “அவளுடைய பாதார விந்தத்தைப் பாடி நாம் நீராடுவோமாக.”

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்!

இந்தப் பாடலினால் இறைவனையும், இறைவியையும் ஒருங்கே பாடி நீராடலாம் என்று சொல்கிறாள்.

காது ஆர் குழை ஆட, பைம் பூண் கலன் ஆட,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட,
சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப் பொருள் ஆமா பாடி,
சோதி திறம் பாடி, சூழ் கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
பேதித்து நம்மை, வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி, ஆடுஏல் ஓர் எம்பாவாய்!

[காதிலே உள்ள குழைகள் ஆடவும், பசிய பொன்னால் ஆகிய அணிகலன்கள் ஆடவும், மவர்கள் அணிந்த குழல்கள் ஆடவும், அந்தப் பூக்களில் மொய்த்த வண்டுக் கூட்டங்கள் ஆடவும், மிகவும் குளிர்ச்சியான நீரில் ஆடி. ஆண்டவன் எழுந்தருளியிருக்கும் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதத் தால் சொல்லப்படும் அவனுடைய திறங்களைப் பாடி, வேதத்தின் பொருளாகவே அவன் இருப்பதையும் பாடி, எல்லாவற்றுக்கும் ஆதியாக இருக்கும் அவனுடைய திறங்களைப் பாடி, அவன் எல்லாவற்றுக்கும் முடிவாக இருக்கும் தன்மையையும் பாடி, நம்முடைய வினைக்கேற்ப நமமை வெவ்வேறாக வளர்த்து எடுத்து, கைநிறைய வளையல்களை அணிந்திருக்கிற எம்பெருமாட்டியின் திருவடிப் பெருமையையும் பாடி நாம் ஆடுவோமாக!]

பெண்கள் காதில் குழையை அணிவார்கள். அது மங்கலத்திற்கு அறிகுறி. பசும்பொன்னாலான அணிகலன்கள் ஆதலின், ‘பைம்பூண் கலன்’ என்கிறாள். பெண்கள் சூடுகின்ற மாலையைக் கோதை என்று சொல்வது வழக்கம். குழலில் கோதை சூட்டியிருக்கிறார்கள். ஆதலால், “கோதை குழல் ஆட” என்கிறாள். அடுத்து. மலர்கள் இருக்கும் இடத்தில் வண்டுகள் வந்து மொய்க்கும். இந்த மகளிர் சூடிய கோதையில் வண்டுகள் மொய்க்கின்றன. அவர்கள் நீராடும்போது இந்த வண்டுகள் மேலே வந்து கூட்டமாக ஆடுகின்றன.

வண்டின் குழாமாட

மிகவும் குளிர்ச்சி பொருந்திய புனல் ஆதலால், ”சீதப் புனல்” என்று சொல்கிறாள். மார்கழி மாதத்தில் குளிர்ந்த புனலில் நீராடுகிறவர்கள் மற்ற மாதங்களில் எளிதில் நீராடுவார்கள்.

இறைவன் இல்லாத இடம் என்று ஒன்று இல்லை. அவன் நடம் செய்யும் இடம் சிற்றம்பலம். “சிற்றம்பலம் பாடி.” வேதத்தில் பல பொருள்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. “இறைவனைப் பற்றிய தன்மைகள் எல்லாம் அவற்றில் உள்ளன. அவற்றையும் பாடுவோம். வேதத்திலுள்ள எல்லாப் பொருள்களிலும் திரண்ட பொருளாகச் சிவ பெருமான் இருக்கிறான். அப்பொருள் ஆமாபாடி.”

அவன் சோதிவடிவினன். திருவண்ணாமலைப் பெருமானுக்குச் சோதி என்று ஒரு பெயர் உண்டு. அந்தப் பெருமான் பல வகையான திருவிளையாடல்களைச் செய்கிறான். ”அவற்றை எல்லாம் நாம்பாடுவோம்’; “சோதி திறம்பாடி.” அவன் தன் திறம்பாடி.”அவன்தன் மார்பிலும், திருமுடியிலும் கொன்றையை அணிந்திருக்கிறான். அவனுக்கு அடையாளம் கொன்றை என்பதை முன்பே தெரிந்துகொண்டோம். சூழ்கொன்றை – சுற்றி அணிந்த கொன்றை ஆடவர்கள் அணியும மாலையைத் தார் என்று சொல்வது வழக்கம். அவனே எல்லாவற்றுக்கும் ஆதியாகவும் இருக்கிறான்; அந்தமாகவும் இருக்கிறான். எனவே, ‘ஆதி திறம்பாடி அந்தம் ஆமாபாடி’ என்கிறாள்.

மக்கள் பல வகையான அனுபவங்களைப் பெறுகிறார்கள். இன்பம், துன்பம் அவர்களை வந்து அடைகின்றன. ஒருவன் செய்த வினைக்கு அப்பொழுதே பயன் கிடைக்கலாம் பல காலம் கழித்துப் பயன் உண்டாகலாம். அடுத்த பிறவியிலும் வரலாம். முள் குத்தினால் உடனே அவர்களுக்குப் பயன் தெரிகிறது. ஒருவனுக்குத் தவறு செய்தால் பல காலம் கழித்து அவன் இவனை எதிர்த்துத் தண்டிக்கிறாள். வேறு வகையான செயல்களுக்கு எல்லாம் மறு பிறவிகளில் பலன் கிடைக்கின்றன. இப்படிப் பல வகையான வகையில் ஆன்மாக்கள் வளர்கின்றன அப்படி வளர்த்து அவர்களை எடுத்து ஆதரவு செய்கின்ற பெருமாட்டி அம்பிகை. ஆதலின், ”பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை” என்கிறாள். வளைகள் அணிவது மங்கலத்திற்கு அறிகுறி. ஆதலின் ‘பெய்வளை’ என்று சொல்கிறாள். சிவ பெருமானைப் பாடுவதோடுகூட அம்பிகையையும் பாடு கிறார்கள். பெய்வளை தன் பாதத் திறம்பாடி” என்று சொல்கிறாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *