
திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்
2. விளையாடி ஏசும் இடம் ஈதோ?
அடுத்த வீட்டிற்குப் போகிறார்கள். அங்கே அந்தப் பெண் படுத்திருக்கிறாள் அவளைப் பார்த்துப் பேசுகிறார்கள்,
நேரிழையாய்?
என்று அழைக்கிறார்கள். அதற்கு இரண்டு பொருள் உண்டு. இரண்டு பக்கத்திலும் ஒத்த இழைகளை அணிந்தவள் என்பது ஒரு பொருள். மிகவும் நுண்ணிய ஆபரணங்களை அணிந்தவள் என்பது மற்றொரு பொருள். இழை என்பதற்கு உருவகத் தால் குணம் என்று கொண்டு, ‘நேர்மையாகிய பண்புகளை உடையாய்’ என்றும் பொருள் கொள்ளலாம்; “நவையறு குணங்களென்னும், பூணெலாம் பொறுத்த மேனி” என்று கம்பன் பாடுவான். “நேரிழையே, இரவும் பகலும் நாம் பேசும்போதெல்லாம் என்னுடைய பாசம் பரஞ்சோதியாகிய ஆண்டவனுக்கு என்று சொல்வாயே” என்று முதலில் தொடங்குகிறாள்.
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப்பகல்நாம் பேசும்போது.
பாசம் என்பது தம்பால் அன்பும், உறவும் உடையார்களிடத்தில் விடுவிக்க முடியாமல் கட்டுப்பட்டுக் கிடப்பது. இறைவனிடத்தில் எந்தத் தடை வந்தாலும் மாறாமல் ஒட்டிக் கிடக்கும் தன்மையை அந்தச் சொல் இங்கே வலியுறுத்துகிறது. இரவும் பகலும் எப்போது பேசினாலும், ‘என்னுடைய பாசம் பரஞ்சோதிக்கு என்பாயே, இப்போது இந்த மலர் நிறைந்த படுக்கையினிடத்தில் எப்போது ஆசை வைத்தாய்?” என்று கேட்கிறாள்.
எப்போதுஇப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ?
படுக்கையில் நேசம் வைத்தது என்பது சிற்றின்ப வாழ்வு உடையவள் என்று பொருளையும் குறிப்பாகத் தெரிவிக்கிறது. இதை நினைந்தவுடன் படுத்துக் கிடக்கிறவளுக்குக் கோபம் வந்துவிடுகிறது. நேசமும் என்ற உம்மையை அமளிக்கும் என்று பிரித்துக் கூட்டி அமைக்க.
“என்னைப் போலவே நேரிழையை அணிந்த பெண்களே இப்படியும் பேசலாமா? நாங்கள் விளையாட்டாகப் பேசுகிறோம் என்று நீங்கள் சொல்லலாம். இப்படிப் பேசுவது விளையாட்டா? இப்படி விளையாட்டாகப் பேசி ஏசும் இடம் இதுதானா?”
நேரிழையீர்,
சீசி இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ?
“இறைவனுடைய திருப்பாதத்தினிடத்தில் உனக்குப் பற்றுதல் அதிகம் என்று சொல்கிறீர்களே, அவனுடைய பாத மலரிடத்து அன்பு தானே வருவதற்கரியது. அந்த மலர் போன்ற பாதத்தைப் புகழ்வதற்கு விண்ணோர்களே கூசுகிறார்கள்” என்கிறாள்.
விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம்.
கண்ணும், பல்லும் கூசுவது வழக்கம். கண்ணால் பேரொளியைக் கண்டால் கண் கூசும். ஆண்டவனுடைய மலர்ப் பாதம் தேவர்களால் துதிப்பதற்கு அடங்காமல் அவர்களுடைய வாயைக் கூசச் செய்கிறது.
விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம்.
நாமாக முயன்று அந்தப் பாதத்தைப் பற்றிவிட முடியாது. இறைவனாக அருள் செய்து தன் திருவடியை நமக்குத் தந்தருள வந்தருளுவான்.
மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன், சிவலோகன்.
சிவலோகத்
“அவன் தெய்விகத் தேஜஸ் உடையவன். சிவலோகத்தில் இருக்கிறான். அடியார்களுக்கு அருள் செய்வதற்காகத் தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து நடனம் ஆடுகிறாள். அத்தகைய பெருமானிடத்தில் உள்ள அன்புக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?நம்மிடத்தில் சிறிதும் அன்பு இல்லையே!” என்கிறாள்.
தில்லைச்சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்புஆர் யாம்ஆர் ஏலோர் எம்பாவாய்.
ஆர் என்பது என்ன தொடர்பு உடையோம் என்ற பொருளை உடையது
“யான்ஆர் என் உள்ளம்ஆர் ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்?” என்று வேறிடத்தில் திருவாசகத்தில் வருகிறது.
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப் பகல் நாம்
பேசும்போது; எப்போது இப் போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்!’ நேரிழையீர்!
சீ! சீ! இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப் பாதம் தந்தருள வந்தருளும்
தேசன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர்? யாம் ஆர்?’ ஏல் ஓர் எம்பாவாய்! (2)



