திருவெம்பாவை
கி. வா. ஜகந்நாதன்

5. பால் ஊறு தேன்வாய்ப் படிறீ!

பெண்களின் தலைவி பெண்களின் கூட்டத்தோடு வேறு ஓர் பெண் வீட்டிற்குப் போகிறாள். அவள் படுத்துக் கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்துத் தலைவி பேசுகிறாள்.

“திருமாலால் அறியாதவரும். நான்முகனால் காண முடியாதவரும், மலை போன்றவருமான எம்பெருமானை நாம் அறிவோம் என்று பொய்களைப் பேசும் வாயையுடைய வஞ்சகப் பெண்ணே, பால் ஊறுகின்ற தேனையுடைய பெண்ணே, உன் வாயிற்கடையைத் திறப்பாயாக.”

மால்அறியா நான் முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்றுஉள்ள பொக்கங்க ளேபேசும் பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்.

‘மால் அறியா, நான்முகனும் காணா மலை’ என்று சொன்ன அளவில் அவள் வாயில் பாலும், தேனும் ஊறியது போல வந்தவர்கள் எண்ணினார்கள். ஆனால் ‘நாம் போலும் அறிவோம்’ என்று சொன்னவுடன் அவளை வஞ்சகம் உடையாள் என்று உணர்ந்தார்கள்.

“நாங்கள் உங்கள் வாயிலில் வந்து இறைவனுடைய பெருமையைப் பாடுகிறோம். அவனோ இந்த உலகத்தில் உள்ளோராலும், தேவ லோகத்தில் உள்ளோராலும், வேறு எந்தப் பொருளாலும் அறிவதற்கு அரியவன். அவன் நம்முடைய அன்புக்கு ஆட்பட்டுத் தன்னுடைய கோலத்தைக் காட்டி நம்மை ஆட்கொண்டவன். நம்மைக் கோதாட்டி அன்பு செய்தான். அவனது அருளை நினைந்து நாம் பாடுகிறோம், சிவனே, சிவனே என்று ஓலமிடுகிறோம்.

ஒருமுறை சிவனே என்று சொன்னாலே நீ எழுவாயே; அப்படி எழவில்லையே! இரண்டாவது முறை சிவனே என்று சொன்ன போதும் அதன் பொருளை நீ உணரவில்லையே! கோலம் பாடிச் சிவனே என்றோம். சீலம்பாடிச் சிவனே என்றோம்.”

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்.

“நீ உலக வாசனையை இன்னும் முற்றும் விட்டு விடவில்லை. உன்னுடைய குழல் இனிய மணம் பொருந்திய பொருளோடு இருக்கிறது”

ஏலக்குமலி, பரிசு ஏலோர் எம்பாவாய்.

ஏலக்குழல் – மணமுடைய பொருள்கள் பொருந்திய கூந்தல். உபலட்சணத்தால் மற்ற அலங்காரங்களையும் கொள்க. “அந்தத் தொடர்பினால் இப்படி உறங்குகிறாயோ? உன்னுடைய தன்மை இருக்கிறவாறு இதுவோ?” என்று சொல்கிறாள். இந்தப் பாட்டில் மால் என்பதற்கு மயக்கம் என்ற பொருள் உண்டு. அந்தப் பொருளைச் சுட்டும்படி ‘மால் அறியா’ என்று சொன்னாள். ‘நான்முகனும் காணா’ என்பது நான்முகனுக்கு எட்டுக்கண் இருந்தும் காண முடியாதவனாக இருக்கிறவன் என்பதையும் உணர்த்துவதோடு, அவன் பிறரால் அறிந்து கொள்ள முடியாதவன் என்ற சிறப்பும் தோன்றுகிறது.

நாம் போல் அறிவோம்

என்றது அகங்காரத்தைக் காட்டியது. யாம் என்று சொல்லி யிருந்தால் அனைவரையும் சேர்த்துச் சொல்லியது ஆகும். அப்படித் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் சேர்த்துச் சொல்லாது, ‘நாம் போல்அறிவோம்’ என்று அகங்காரத்தோடு சொல்கிறாள். ‘நாமாக்கும் அறிவோம்’ என்ற வழக்குப் போன்றது இது. அப்படிச் சொன்னவள் அவள் வருவதற்கு முன்னே எழுந்திருந்து, அவர்களோடு சேர்ந்து போவதற்குச் சித்தமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாமையினால் அவள் சொன்னது அத்தனையும் பொய் என்று சொல்கிறாள்.

பொக்கங்க ளேபேசும், பால்ஊறு தேன்வாய்ப் படிறீ!

என்பது அதைச் சுட்டுகிறது.

இறைவனை நன்கு தெரிந்து கொண்டவர்கள் இந்த உலகத்திலுள்ள பக்தர்கள்தாம். தேவர்கள் ஓரளவுதான் புரிந்து கொள்வார்கள். மற்ற உலகத்தில் உள்ளவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. ஆகவே, முதலில் உலகத்தைச் சொல்லி, பிறகு தேவலோகத்தவர்களையும், பிறவற்றையும் சொல்கிறாள்.

ஞாலமே, விண்ணே, பிறவே அறிவு அரியான்
கோலமும், நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி

என்று சொல்கிறாள். இறைவனுடைய கோலம், அவன் பக்தர்களுக்கு உள்ள துன்பங்களைப் போக்கி ஆட்கொள்ளும் சீலம் ஆகிய இரண்டையும் பாராட்டுகிறாள். சீலம்- எளிவந்து ஆட்கொள்ளும் தன்மை. “அவனை வாயாரப் பாடுகிறோம். உனக்குக் காது கேட்கவில்லையா? படிறீ!” என்று சொல்கிறாள். சிவனே சிவனே என்று இரண்டு சொல்லி யாவரும் பாடுகிறார்கள். ஒரு முறை சிவனே என்றாலே உறக்கம் நீங்க வேண்டும். இரண்டாவது முறை சொன்னவுடன் தன் கடமையை உணரவேண்டும். இரண்டும் இல்லாமல் படுத்துக் கிடக்கிறாள்.

சிவனே சிவனே என்று
ஓல மிடினும் உணராய் உணராய்காண்;
ஏலக் குழலி, பரிசுஏலோர் எம்பாவாய்!

ஏலம் என்பது கூந்தலில் பூசுகின்ற ஒருவகைச் சாந்து. இங்கே ஏலக் குழலி என்பது உலக பாசத்தில் ஈடுபட்டு அதிலே ஈடுபட்டுக் கிடக்கிறாள் என்னும் குறிப்பு உடையது. பரிசு – தன்மை. இதனால் படுத்து இருக்கிறவள் இயற்கையிலேயே இறைவனிடம் அன்பு இல்லாதவள். பேசும்போது மட்டும் மிகச் சிறப்பாக இறைவனிடம் அன்பு உள்ளவள் போலப் பேசுகிறாள் என்று குறிப்பிடுகிறாள் வந்தவள்.

மால் அறியா, நான்முகனும் காணா, மலையினை, நாம்
போல் அறிவோம், என்று உள்ள பொக்கங்களே பேசும்
பால் ஊறு தேன் வாய்ப் படிறீ! கடை திறவாய்.
ஞாலமே, விண்ணே, பிறவே, அறிவு அரியான்
கோலமும், நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி, சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும், உணராய், உணராய் காண்!
ஏலக்குழலி பரிசுஏல் ஓர் எம்பாவாய்! (5)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *