
வாழ்க்கைக் கூத்து
கி. வா. ஜகந்நாதன்
வேலன் துணை
பெரியவருடைய அச்சம்
ஒரு பெரியவர்: அவருக்கு வைரம், முத்து முதலியவை அடங்கிய ஒரு சிறு முடிச்சுக் கிடைத்தது. அற்கு முன்னால் அவர் என்ன என்ன மூட்டைகளையோ வைத்திருந்தார். அந்தக் காலங்களில் அவர் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஆனால் இன்றைக்கு வைரம், முத்து அடங்கிய இந்த முடிச்சுக் கிடைத்தவுடன் பயம் வந்துவிட்டது. அதை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல் அஞ்சினார். தம்முடன் இருந்த ஒரு பையனிடம் அந்த மூட்டையைக் கொடுத்து, ‘அப்பா, இந்த மூட்டையை மிகவும் பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு என்னுடன் வா. நாம் இங்கே இருக்கக் கூடாது. வேறு ஓர் இடத்திற்கு ஓடிப் போய் விடுவோம்” என்றார்.
நடுவழியில் அந்தப் பையன் மெல்ல முடிச்சைத் திறந்து பார்த்தான். அதைப் பக்கத்தில் இருந்த வேறு சிலரும் பார்த்தார்கள். அவனிடத்தில் உள்ள அந்த முடிச்சை எப்படித் திருட்டுத்தனமாகக் கைப்பற்றிக் கொண்டுபோவது எனச் சிலர் நினைத்தார்கள். “அப்பா, இந்தப் பகல் நேரத்தில் எங்கே பார்த்தாலும் மக்கள் திரண்டு இருக்கிறார்கள். இவர்களுக்குத் தெரியாமல் நாம் எப்படிப் போவது? இவர்கள் எல்லோரும் நம்மிடம் உள்ள முடிச்சைப் பற்றிக் கொண்டு போகப் பார்க்கிறார்களே!” என்று பெரியவர் மிகவும் அஞ்சினார்.
இரவு வந்தது. ‘இந்த ராத்திரியில் எங்கேயாவது ஓடிப் போய்விடுவோம்’ என்று முதலில் அவர் நினைத்தார். ஆனால் அவரை வேறு ஒரு பயம் பற்றிக் கொண்டுவிட்டது. “பகல் நேரத்திலாவது யாராவது கை முடிச்சைப் பற்றினால் பற்றுகின்றவனது முகம் தெரியும். இரவுக் காலத்திலோ கள்ளர் பயம் அதிகமாக இருக்கும். யாரேனும் கையில் உள்ளதைத் தட்டிப் பறித்துக் கொண்டு போனால் பறித்துக் கொண்டவனது முகத்தைக்கூடப் பார்க்க முடியாது. கூவி அழைத்தால் யாரும் உதவி செய்ய வரமாட்டார்களே!” என்று நடுங்கினார்.
ஆகவே, அவர் பையனைப் பார்த்துச் சொல்லுகிறார்: “நாம் கையிலுள்ள முடிச்சைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டு மென்றால் பகல், இரவு அற்ற ஓர் இடத்திற்குப் போனால்தான் அது சாத்தியமாகும். என்னுடன் ஓடிவா. நாம் இருவரும் பகல், இரவு அற்ற ஒரு வெளியில் போய் ஒளிந்து கொள்வோம்” என்கிறார். பையன்,”சரி” என்கிறான்.
அந்தப் பையனுக்கு அவ்வளவாகச் சாமர்த்தியம் போதாது என்பது பெரியவரின் எண்ணம். முன்பு அவன் தலையில் கரி மூட்டையை ஏற்றிவைத்து அழைத்துப் போயிருக்கிறார்; விறகு மூட்டையைத் தூக்கிவரச் செய்திருக்கிறார். இன்றைக்கோ அவனிடம் வைர மூட்டையை அல்லவா கொடுத்திருக்கிறார்? அவன் அதைப் பத்திரமாக எடுத்து வருவான் என்ற நம்பிக்கை இல்லை.
யார் துணை?
அவர்களிடமுள்ள மூட்டையை வழியில் யாரும் பறித்துக் கொண்டு போகாமல் இருக்க வேண்டுமானால், பாதுகாப்போடு போவதுதான் நலம். பாதுகாப்பான இடம், இரவும் பகலும் இல்லாத இடம் என்று தெரிந்து கொண்டார். அந்த இடத்துக்குப் போய்ச் சேரும் வரையிலும் பாதுகாப்பு வேண்டுமே! அதற்கு யாரைப் பாதுகாப்பாளனாக நியமிப்பது? அவன் திருடர்களை அடித்து ஒழிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அவர்களை எதிர்ப்பதற்குக் கையில் தக்க ஆயுதம் தாங்கியவனாகவும் இருக்க வேண்டும்.
வேலாயுதன் காப்பு
அவருடைய நல்ல காலம், கூர்மையான வேலைத் தாங்கிய வேலாயுதன் பாதுகாப்பாளனாக வர இசைந்தான். அவ்வளவு தான். அந்தப் பெரியவர் மிக்க மகிழ்ச்சியோடு அந்தப் பையனைப் பார்த்து, “சீக்கிரம் ஓடி வா. பகல், இரவு அற்ற ஒரு வெளிக்குப் போய்விடுவோம். இங்கே இருக்கக் கூடாது. யார் எந்தச் சமயத்தில் நம்மிடம் உள்ள செல்வத்தைப் பறித்துப் போவார்களோ தெரியாது. அதற்குள் யார் கண்ணிலும் படாத ஓர் இடத்திற்கு நாம் போய் விட வேண்டும்” என்கிறார். மடியில் கனம் உள்ளவர் அல்லவா?
அப்படி அழைப்பது போல ஒரு பாடலைப் பாடுகிறார் அருணகிரியார். இங்கே பையன், மனம். வைரம், முத்து அடங்கிய முடிச்சுத்தான் ஞானம். பெரியவர், ஆத்மா. ஆத்மாவாகிய பெரியவர் தம்மிடம் உள்ள ஞான முடிச்சைக் காப்பாற்றிக் கொள்ள மனம் என்னும் பையனிடம் அதைக் கொடுத்து, “முருகனாகிய வேலா யுதனது துணை கொண்டு அல்லும் பகலும் இல்லாத, சூதானது அற்ற, வெளிக்கு ஓடிப்போய் ஒளிந்து கொள்ளலாம், வா!” என்று அழைக்கிறார்.
வேதா கமசித்ர வேலா
யுதன்வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணாக
அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே
ஒளித்துச்சும் மாஇருக்கப் போதாய்,
இனிமன மேதெரி
யாதுஒரு பூதர்க்குமே.
மனக் குரங்கு
நம்முடைய மனம் நல்ல வழியைக் காட்டினாலும் காட்டும்; அல்லாத வழியைக் காட்டினாலும் காட்டும். அது குரங்கு போன்றது. குரங்கு சிட்டுக் குருவிகள் கட்டுகிற கூட்டைப் பிரித்து எறியும். மாலைகளைப் பிய்த்து எறியும். கட்டியதைப் பிரித்து எறியும் இயல்புடைய குரங்குகளை ஆட்கொண்டான் இராமன். அந்தக் குரங்குகள் குரங்கரசனாகிய சுக்கிரீவனது தலைமையில், ஆங்காங்கே சிதறிக் கிடந்த கற்களை எல்லாம் ஒன்று சேர்த்துக் கொண்டு வந்து இலங்கைக்கு அணை கட்டின. கட்டியதைப் பிரிக்கும் இயல்புடைய குரங்குகள் இராமனோடு சேர்ந்தமையால் பிரிந்தவற்றை ஒன்று சேர்த்துக் கட்ட உதவின. அவ்வாறே மனம் என்னும் குரங்கு தன் விருப்பப்படி திரிந்தால் நாம் நல்ல எண்ணங்களைக் கட்டக் கட்ட அவற்றைக் குலைத்து, செய்கின்ற முயற்சியை எல்லாம் சின்ன பின்னப்படுத்துகிறது; துன்பத்தை உண்டாக்குகிறது. ஆனால் அதே குரங்கை இராமன் ஆண்டது போல நாமும் அடக்கி ஆண்டுவிடுமோனால் அதுவே நமக்கு உதவியாக இருக்கும்.
மனமென்னும் யானை
மதம் பிடித்த யானையினிடம் யாராவது போனால் தன் துதிக்கையினால் அவர்களைப் பற்றி இழுத்து மிதித்து அழித்து விடுகிறது. அதைக் கண்டால் எல்லோரும் ஓடுகிறார்கள். அந்த யானையை அடக்கிய பிறகு தன்னைக் குத்தி நோவ அடிக்கும் மாவுத்தனுக்குப் பணிந்து கீழே கிடக்கும் அங்குசத்தை எடுத்துக் கொடுக்கிறது. தன்னைக் கட்டுவதற்குரிய இரும்புச் சங்கிலியைத் தன் துதிக்கையினாலேயே அவனிடம் எடுத்துக் கொடுக்கிறது. காலையும் தூக்கிக் காட்டுகிறது. மதம் அடங்கின யானையாக மனம் ஆகிவிட்டால் தன்னைக் கட்டுகிற வழியை அதுவே காட்டும். இல்லாவிட்டால் மதம் பிடித்த யானை சுற்றியுள்ளவர் களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, தன்னை அடக்க வருகின்ற மாவுத்தனையும் கொன்று வீழ்த்துவது போலத் துன்பம் கொடுத்து, ஆத்மாவையே கொன்றுவிடும்.
அத்தகைய மனத்தைப் பார்த்து அருணகிரிநாதர் சொல்லுகிறார். அந்த மனம் இப்போது நல்ல மனமாகி விட்டது. முன்பு மதம் பிடித்த யானை போலத் தன் இச்சைப்படி எங்கெங்கோ ஓடித் திரிந்து கொண்டிருந்தது. தன் வழியில் குறுக்கிடுபவர்களின் மேல் சினம் கொண்டு சீறி விழுந்தது. உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் தானே பற்றிக் கொள்ள வேண்டும் என்ற பேராசையால் அலைந்து ஓடிற்று.
அழுக்கு மூட்டையைச் சுமந்து செல்லும் கழுதை போல அது இருந்தது. இப்பொழுதோ அருணகிரிநாதப் பெருமானாகிய ஆசிரியர் உபதேசம் செய்த பின்பு, அந்த மனம் மடைமாறிச் சென்றது. வெகுளி அடங்கியிருக்கிறது. தன்னிடமுள்ள பொருள்களை எல்லாம் தானமாகப் பிறருக்குக் கொடுத்துப் பற்று நீங்கி இருக்கிறது. முன்பு சிறிது. கண்ணை மூடினாலும் என்ன என்ன எண்ணமோ வரும்; யார் யார் முகமோ தோன்றும். இப்பொழுது கண்ணை மூடும் பொழுது முருகப் பெருமானின் திருவுருவந்தான் வருகின்றது. அவன் சம்பந்தமான நினைவுகள் தாம் வரு கின்றன. இப்போது மனம் கழுதை அன்று; முருகப் பெருமானாகிய அரசனைச் சுமந்து வரும் யானை. வேலாயுதப் பெருமான் வருகிறான் வருகிறான் என்று பராக்குக் கொடுத்துக் கொண்டு வருவது போலத் துதிக்கையை உயரத் தூக்கி தூக்கி அசைத்துக் கொண்டு வருகிறது.
உலகத்தினிடம் பயம்
ஞானம் என்ற வைர முடிச்சைப் பெற்றவுடன் ஆத்மா பயப்படுகிறது. இதை மனமாகிய பையன் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமே! என அஞ்சுகிறது. ‘மாயை பல பல விதமாக வந்து வேறு வேறு விளையாடல்களைச் செய்யுமே. அவற்றினின்றும் பிழைத்து இந்த ஞானச் செல்வத்தைக் காப்பாற்ற வேண்டுமே! என்று பெரியோர் அஞ்சுகிறார்கள்.
ஒருவன் பாங்கிலிருந்து நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு டாக்ஸியில் வந்து இறங்குகிறான். அவனுடைய தந்தை, “ஏண்டா பஸ்ஸில் வரக்கூடாதோ?” என்கிறார். அவன், டாக்ஸிக்கு ஒரு ரூபாய் செலவாகுமே என்று எண்ணிப் பஸ்ஸில் ஏறி வந்தால் நூறு ரூபாயையும் யாராவது முடிச்சு மாறிகள் அடித்துக் கொண்டு போய் விடுவார்கள். டாக்ஸிக்கு ஒரு ரூபாய் போனாலும் எஞ்சிய 99 ரூபாய் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தனவே” என்கிறான். சில நாளைக்குள் செலவழிந்து போகும் செல்வத்துக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றால், பலகாலம் செய்த தவப் பயனாகப் பெற்ற ஞானமாகிய தனத்தைப் பாதுகாக்க எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இறைவன் திருவருளால் பெற்ற ஞானச் செல்வத்தைப் பாதுகாத்து வைக்க வேண்டுமே என்று அறிவு பயப்படுகிறது. ‘உலகிலுள்ள யாராவது நம் இந்திரியங்களுக்கு இன்பத்தைக் கொடுத்துத் திருடிப் போவார்களோ? நாக்குக்குச் சுவையான சாப்பாட்டைப் போட்டுத் தூங்கப் பண்ணிக் கைப்பொருளை அபகரித்துப் போவார்களோ? நமது பழைய பிறவி வாசனையை உண்டு பண்ணி விடுவார்களோ’ என்று அஞ்சுகிறது. ‘ராத்திரி நேரமானாலோ தாமச குணத்தினால் சோர்வு வருகிறது. பகலானாலோ பகைவர்கள் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். ஆகவே, இந்தப் பொருளைக் காப்பாற்றப் பகலும் கூடாது, இரவும் கூடாது’ என்று நினைக்கிறது.
பகலும் இரவும்
பகல் என்பது நினைப்பு; ராத்திரி என்பது மறப்பு. பகலானது, உலகத்தோடு ஒட்டி வாழ்ந்து கொண்டே போகிற நிலை. இரவாவது, செயலை மறந்து தூக்கத்திற்குள் அடங்கிக் கிடக்கிற நிலை. இந்த இரண்டு நிலையும் நமக்குப் பயன் ஒன்றையும் அளிக்கவில்லை. பகலும் இரவும் நாம் ஓயாமல் ஒழியாமல் வேலை செய்கிறோம். இரவில் படுத்துத் தூங்குவதும் ஒரு வேலைதானே? அவை உயிருக்கு நலம் செய்யும் பயனை அளிப்பதில்லை.
ஒரு குருநாதருக்கு ஒரு சிஷ்யன் கிடைத்தான். ஒரு நாள் ராத்திரி அவர் அந்தச் சிஷ்யனிடம், “நாளைக் காலை செங்கற் பட்டு வரையில் போகவேண்டும்” என்றார். மறுநாள் காலையில் பத்து மணிக்குச் சிஷ்யன் வந்து நின்றான். அவன் காலில் முழங்கால் மட்டும் புழுதி. “எங்கேயடா போயிருந்தாய்?” என்று கேட்டதற்கு அவன், “செங்கற்பட்டு வரையில் போக வேண்டு மென்று அவ்விடத்தில் உத்தரவாயிற்றே; அதன்படி போய்விட்டு வந்தேன்” என்றான். குருநாதர் உத்தரவிட்டது உண்மைதான். ஆனால் அவன் செய்தது பயனில்லாத காரியம்.”எதற்காகப் போக வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டுக் கொள்ளாமல் அவன் போய் வந்தால் பயன் என்ன?
இப்படியே நாம் சுறுசுறுப்பாக எத்தனைதான் வேலை செய்தாலும் அதனால் இன்பம் வராது. பகல் முழுவதும் உத்தியோக சம்பந்தமாகவோ வீண் காரியங்கள் சம்பந்தமாகவோ நம்முடைய உழைப்பை எல்லாம் ஈடுபடுத்தி விடுகிறோம். ஆத்மாவுக்கு இன்பத்தைத் தரக்கூடிய காரியம் ஒன்றைக்கூடச் செய்வதில்லை.
இரவிலோ அந்தச் செயல்கூட அற்றுத் தூங்கிக் கிடக்கிறோம். நனவாகிய நிலை சகலாவஸ்தை; தூக்கமாகிய நிலை கேவலா வஸ்தை. சகலத்தில் பயனற்ற வீண் வேடிக்கைக் காரியங்களைச் செய்கிறோம். கேவலத்தில் அந்த முயற்சியும் இல்லாமல் தூங்குகிறோம். ஆகவே, பகலும் இரவும் நமக்கு இன்பத்தைத் தருவதில்லை. ஆத்மாவுக்கு இன்பத்தைத் தருவதற்குப் பகல் இர அற்ற இடம் வேண்டும்.
தெரியாது ஒரு பூதர்க்குமே.
எப்படி ஓர் அருமையான பொருள் கிடைத்துவிட்டால் வேறு யாருடைய கண்ணிலும் படாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அப்படியே கிடைத்தற் கரிய பேறான ஞானத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பூதர்க்கும் – ஓர் உயிருக்கும் – தெரியாமல் இருக்க வேண்டும்.
2
அருணகிரியார் மனத்தைப் பார்த்துச் சொல்கிறார்; ”ஒரு பூதர்க்கும் தெரியாத ஓர் இடம் உண்டு. நமக்கு இரவும் கூடாது. பகலும் கூடாது. இரவு, பகல் அற்ற அந்த வெளிக்குப் போய் விடலாம் வா” என்று அழைக்கிறார். “போகிற வரைக்கும் துணை வேண்டும். போன பிற்பாடும் துணை வேண்டும். கள்ளர் நம்மைக் கண்டு பயப்பட்டு நெருங்காமல் போக வேண்டுமென் றால் ஆயுதம் கையில் உடையவன் துணையாக வர வேண்டும். பெரிய பெரிய அசுரர்களைச் சங்காரம் செய்து வாகை சூடிக் கொண்டிருக்கும் தேவசேனாபதியாகிய முருகனுடைய துணையைப் பெற்றுப் போகலாம் வா. சூரபன்மன் முதலிய அசுரர்களைச் சங்காரம் செய்வதற்குக் கருவியாய் இருந்த வேல் அவன் கையில் இருக்கிறது.நமக்குக் கவலை இல்லை. அவனுடைய பாதங்களையே சரணாகப் பற்றிக் கொண்டு போகலாம் வா” என்கிறார்.
ஞானத்தின் உருவம்
அவன் கையில் உள்ள வேல் எத்தகையது? நாம் பற்றிக் கொள்கிற அவனது பாதார விந்தம் எத்தகையது?
வேதா கமசித்ர வேலாயு தன்வெட்சி
பூத்ததண்டைப்
பாதாரவிந்தம்.
ஆண்டவனது கையில் உள்ள வேல் ஞான மயமானது. அது ஞானசக்தி.தாமச குணங்களைப் போக்கி, அறியாமையை நீக்கி, அறிவைக் கொடுப்பது அந்த ஞானவேல்.
ஞானத்திற்கு உருவம் என்ன? ”அவன் மிக்க அறிவாளி என்றால், அவனிடமுள்ள அறிவைக் காண இயலாது. அதற்கு உருவம் இல்லை. அவன் அறிவுக்கு ஓர் உருவம் கொடுக்க வேண்டுமென்றால் நாம், ”அவன் பெரிய அறிவாளி; எம்.ஏ. படித்திருக்கிறான்” என்று கூறுகிறோம். அறிவுக்கு உருவம் இல்லையானாலும் எம்.ஏ. படித்திருக்கிறான் என்பதன் மூலம் அதற்கு ஒரு வகையாக அடையாளம் கூறுகிறோம். அதையே உருவம் என்று சொல்லலாம்.
இறைவனோடு தொடர்வுடைய அறிவு எதுவோ, அது மெய்ஞ் ஞானம். ஞானம் இருவகைப்படும். கல்வி, கேள்வியினாலே வருவது அபரஞானம். உணர்வினாலே அநுபவத்தினாலே பெறுவது பரஞானம். அநுபவத்தினால் பெறுகின்ற ஞானத்திற்கு இந்த நாட்டில் எப்பொழுதும் தலைமை உண்டு. கல்வி, கேள்வி ஞானத்தோடு கூட, அநுபவத்தினால் உயர்ந்த அறிவைப் பெற்ற எத்தனையோ மகான்கள் இந்த நாட்டில் ஆசாரியர்களாக இருந்திருக்கிறார்கள்.
அபர ஞானத்தைத் தர உதவியாக இருப்பவை நூல்கள். எல்லா நூல்களிலும் சிறந்தது வேதம். வேதம் இறைவன் அருளியது என்பர். அது எல்லோருக்கும் பொதுவானது. வேதத்தோடு சார்த்திச் சொல்பவை ஆகமங்கள். அந்த அந்தச் சமயத்தவர் களுக்கு ஏற்றபடி தனித்தனியே ஆகமங்கள் இருக்கின்றன. பொதுவான வேதத்தையும், சிறப்பான ஆகமங்களையும் சேர்த்து வேதாகமம் என்று சொல்வது வழக்கம்.
வேதத்தில் மந்திரம் மிகவும் முக்கியம். ஆகமத்தில் தந்திரம் மிகவும் முக்கியம். அதனால் வேதத்தை மந்திரமென்றும் ஆகமத்தைத் தந்திரம் என்றும் சொல்வர். வேதம் இறைவனைப் பற்றியும், அறங்களைப் பற்றியும் சொல்கிறது. ஆகமங்கள் இறைவனை அடைவதற்குரிய செயல் முறைகளைச் சொல்கின்றன.
நால் வகை நூல்கள்
வேதம் எசமானனைப் போல், “இது செய்; இது செய்யாதே” என்று கட்டளையிடுகிறது. ஒரு தலைவன் இப்படி இப்படிக் காரியங்களைச் செய் என உத்தரவு இடுவது போல இருக்கிறது அது. ஏன் அப்படிச் செய்யவேண்டுமென்று கேட்கக்கூடாது. அது எசமானனுடைய உத்தரவு. அதனால் வேதத்தை, “பிரபு சம்மிதை” என்பர். பிரபு – தலைவன். வேதம் கட்டளை இடுகிறது. ஆகவே தான் அது தலைவன் வாக்கு, பிரபு சம்மிதை ஆயிற்று.
சில நெறிமுறைகள் காலத்திற்குக் காலம் மாறுபடலாம். இடத்திற்கு இடம் வேறுபடலாம். நம்முடைய நாட்டில் இருக்கிற ஆசாரம் வேறு. வடநாட்டில் இருக்கிற ஆசாரம் வேறு. இவற்றை எல்லாம் கண்டு இப்படி இப்படி ஒழுக வேண்டும் என்று அவ்வப்போது வழி வகுத்துக் கொடுப்பது ஸ்மிருதி ஆகும். அது, அரசாங்கத்தார் அவ்வப்போது படைக்கிற சட்டத்தைப் போன்றது.
அத்தகைய ஸ்மிருதியை “ஸுஹ்ருத் ஸம்மிதை” என்பர். ‘ஸுஹ்ருத்’ என்பது நண்பனைக் குறிக்கும். அவன் நமக்கு நல்லதையே சொல்வான். நமக்கு ஓர் உயர்ந்த நண்பனைப் போல் இருந்து, நம்முடைய மனநிலை, முயற்சி இவற்றுக்கு ஏற்ப ஒழுக்க வகைகளை நிர்ணயம் செய்வது ஸ்மிருதி. அது நண்பன் வாக்கைப் போன்றது.
சுருதி ஸ்மிருதிகளைத் தெரிந்து கொள்ளப் பயிற்சி வேண்டும். அத்துணைப் பயிற்சி இல்லாதவர்களும், வேதக் கருத்தைத் தெரிந்து கொள்ளும்படி அமைந்தது காவியம். அதைக் காந்தா ஸம்மிதை என்பர். மனைவியின் சொல் போன்றது என்பது பொருள். மனைவி, நாயகன் மனத்தை மாற்றுவதற்கு எவ்வளவு இங்கிதமாகப் பேசுகிறாள்! கணவனிடம், ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று சொல்வதற்கு முன், சிரித்த முகத்தோடு அவன் எப்பொழுது காரியாலயத்திலிருந்து வருவான் எனக் காத்துக் கொண்டிருக்கிறாள். வந்தவுடனே அந்த விஷயத்தைச் சொல்வது இல்லை. பலகாரம், காபி முதலியவை கொடுத்து அவன் களைப்பைப் போக்குகிறாள்.
அப்புறம் மெல்ல இனிமையாகப் பேசுகிறாள். அவள் பேச்சிலே இவன் குழைந்து இன்புற்று இருக்கும்போது சொல்ல வேண்டியதை மெல்லச் சொல்லுகிறாள். ”இன்றைக்கு நானும், அடுத்த வீட்டு லலிதாவும் கோயிலுக்குப் போயிருந்தோம். சுவாமி தரிசனம் திவ்யமாகக் கிடைத்தது. அங்கே பச்சைப் புடைவை கட்டிக் கொண்டு ஒருத்தி வந்திருந்தாள். எவ்வளவு அழகாக இருந்தது! விலை நூறு ரூபாய்க்கு மேல் இருக்குமென்று நினைத்தேன். ஆனால் அறுபது ரூபாய்தானாம். லலிதாகூட அம்மாதிரி ஒன்று வாங்கிக் கொள்ளப் போவதாகச் சொன்னாள்” என்று அவள் சொல்வதற்குள்ளேயே, “நீயும் ஒன்று வாங்கிக் கொள்ளேன்” என்று சொல்லிவிடுவான். இதற்காகத் தானே அவள் இவ்வளவு குழைவாகப் பேசுகிறாள்?
இவ்வாறே காவியம் மிக இனிமையாகக் கருத்தைச் சொல்லி, நம் உள்ளங்களிலே இன்பம் சுரக்கும்படி செய்து அறிவூட்டுகிறது. அதனால் ‘காந்தா ஸம்மிதை’ என்று அதைச் சொல்கிறார்கள். சாகுந்தலம், வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம் முதலிய காவியங்களில் உள்ள உண்மை எல்லாம் வேதத்தில் இருப்பனவே. ஆனால் வேதம் போல அப்படியே இவை சொல்லவில்லை. கதையை அலங்காரமாகச் சொல்லி இன்பத்தைச் சுரக்கச் செய்து, தம்மை மறந்து படித்து உண்மையை உணரும்படி செய்துவிடுகின்றன.
புராணங்கள் உருவகக் கதைகள். குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல, அரிச்சந்திரன் கதை முதலியவற்றைச் சொல்லி வேதப் பொருளின் சாரத்தை மனத்தில் பதியவைப்பது புராணம். இப்படி வேதாகமம், ஸ்மிருதி, காவ்யம், புராணம் என நான்கு பிரிவுகளாக ஞானம் நிற்கிறது. வை நான்கும் ஞானத்தின் வடிவங்கள் என்று கூறலாம்.
வேதாகம வேல்
நமக்கு கிடைக்கும் ஞானம் எப்படி வருகிறது? வேதமாக வருகிறது. ஆகமமாக வருகிறது. பிற நூல்களாக வருகிறது. எம்பெருமான் திருக்கரத்திலுள்ள வேலை ஞான வேல் என்று பெரியவர்கள் சொன்னார்கள். அருணகிரிநாதர் அந்த ஞானத்திற்கு உருவம் கொடுத்து ஞானம் தரும் நூலாகிய வேதத்தையும், ஆகமத்தையும் நினைத்து, அந்த வேல் வேத வேல், ஆகம வேல் என்று சொல்கிறார்.
இறைவனோடு சம்பந்தப்பட்டட எல்லாவற்றையுமே வேதம் என்று சொல்வது வழக்கம். சிவபிரான் ஏறிச் செல்லும் இடபம் வேதம். அவன் அணிகின்ற ஆடை வேதம். அவன் பாதுகை வேதம். அவன் சிலம்பு வேதம் என்பர்.
அருணகிரிநாத சுவாமிகள் இந்த முறையை நினைத்து, மற்றவர்கள் சொல்லாத புது வகையில், முருகன் வேதாகமத்தையே வேலாக வைத்திருக்கிறன் என்கிறார். வியப்புக்குரிய பொருளாக இருக்கிறது அந்த வேல்; சித்ரவேல் அது.
வேதா கமசித்ர வேலாயுதன்
கிடைப்பதற்கரிய பொருள் ஒன்று கிடைத்தால் அதை அறிவுடைய மனிதனால்தான் காப்பாற்ற முடியும். உயர்ந்த ஞானச் செல்வத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதற்குரிய பாதுகாப்பாக இருப்பது ஞானவேல்.
ஞானவேல்
உலகத்தைத் தனக்குள் அடக்கி ஆண்ட சூரபன்மனது உடலைத் துளைத்து, அவனுக்குக் கவசம் போலிருந்த கிரௌஞ்ச கிரியையும் பொடிப் பொடியாக்கிப் பெரிய ஆச்சரியமான காரியங்களைச் செய்தது அந்த வேல். அஞ்ஞானத்தைப் போக்க உதவும் ஞானமே வடிவான வேதாகமத்தை வேலாக வைத்திருக்கிறான் முருகன். அவனை நமக்கு துணையாகக் கெள்ள வேண்டும்.
வேல் நமக்குத் துணையாக வேண்டுமென்றால் அந்த வேலை உடைய வேலாயுதன் தாளை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். அவன் காலைப் பற்றினால் வேலை விடுத்து நம்மைக் காப்பாற்று வான். காலைப் பிடிப்பவருக்குப் பயன் படுவதாகவே வேலை வைத்திருக்கிறான்.
திருத்தாள் அழகு
அவன் திருத்தாள்கள் எத்தகையவை?
அநாதிகாலம் தொட்டுப் பக்தர்கள் எப்போதும் அருச்சனை செய்து வரும் பாதம் அது. அவர்கள் தூவிய மலர்கள் அதன்பால் இருக்கின்றன. வெட்சிப் பூ நிரம்பக் குவிந்திருக்கிறது. அவன் பாதத்திலேயே பூத்த மாதிரியாக அது மலர்ச்சியோடு இருக்கிறது. வெம்மையுடைய மனிதன் கையில் பட்டால் மலர் வாடிவிடும். செடியில் இருப்பது போலவே, அதையும்விட மிக்க மலர்ச்சி யோடு, முருகன் கால்களில் வெட்சி மலர் கிடக்கிறது. அவ்வளவு தண்மை உடையது அவன் தாள். மலரை அணிந்ததோடு தண்டை யையும் அணிந்த திருவடி அது; அரவிந்தம் போன்றது.
வெட்சி பூத்த தண்டைப் பாதர விந்தம் அரணாக.
றைவன் தண்டை அணிந்திருப்பதால் அவன் வரும்போது, “இறைவன் வருகிறான், வருகிறான்” என்று பக்தர்களுக்கு அது ஒலி செய்து காட்டுகிறது. “அந்தத் திருவடித் தாமரைகளை நமக்கு அரணாகப் பற்றிக் கொண்டு போவோம் வா, மனமே என்கிறார் அருணகிரியார்.
காலும் வேலும்
நாம் பற்றிக் கொள்வது கால். நமக்கு அஞ்சல் என்று சொல்வது கை. நாம் தண்ணீர் விடுகிற இடம் வேர். நமக்குக் காய் தருகிற இடம் செடியின் மேற்பகுதி. அவனது திருவடியைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டு, “நீயே சரணம்” என்று கதறினால் அவன் கை, “அஞ்சல்” என்று சொல்லும். அவனது வெட்சி பூத்த, தண்டை அணிந்த பாத தாமரையைப் பற்றிக் கொண்டால், அவன் கையிலுள்ள வேல் நம்மைப் பாதுகாக்கும்; நாம் பாதுகாப்பான இடத்தை அடையலாம்.
அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச்
சும்மா இருக்கப் போதாய்.
இப்போதே
“இனி இங்கே ஒரு கணமும் இருக்கக் கூடாது. இந்தச் சமயமே இங்கிருந்து கிளம்பிவிடு. வேறு இடத்திற்குப் போய் விடுவோம்” என்கிறார் அருணகிரி முனிவர். அது எப்படிப்பட்ட இடம்? பகலும் இரவும் அற்ற இடம்; நினைப்பும் மறப்பும் அற்ற இடம்; நமக்கு கிடைத்துள்ள ஞானச் செல்வத்தைக் கள்வர்கள் பறித்துக் கொண்டு போய் விடுவார்களோ என்று பயப்பட அவசியம் இல்லாத இடம்.
திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் சொல்வது இங்கே நினைவுக்கு வருகிறது. புலவன் ஒருவன் வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டான். முருகன் எங்கே இருக்கிறான் எனத் தேடி, வீடு, வாசல், மாடு, மனைவி எல்லாவற்றின் மேலும் உள்ள பற்றை விட்டு விட்டுக் கிளம்பிவிட்டான். வழியில் நக்கீரர் வருகிறார். அவர் முகத்தைப் பார்க்கும் போதே அவனுக்கு, “முருகன் எங்கே இருக்கிறான்?” என்று அவரிடம் கேட்க வேண்டுமெனத் தோன்றுகிறது. ‘சுவாமி, உங்களைப் பார்த்தால், ஆண்டவனுடைய அருள் அநுபவம் உடையவராகத் தோன்றுகிறதே! ஆண்டவன் முருகன் எங்கே இருக்கிறான்?’ எனக் கேட்கிறான்.
“முருகனைத் தேட ஆரம்பித்துவிட்டாயா? வீட்டை விட்டும் கிளம்பிவிட்டாயா? மெத்த மகிழ்ச்சி. அப்படியானால் இனி ஒரு கணம்கூடத் தாமதிக்காதே; திரும்பிப் பார்க்காதே. அவன் அருளை இப்பொழுதே நீ பெறுவாய். உடனே புறப்படு” என்கிறார்.
“எய்யா நல்இசைச் செவ்வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்
செலவுநீ நயந்தனை ஆயின், பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே.”
நீ பிறந்த குலம் என்ன? செய்துவந்த தொழில் என்ன?’ என்பன போன்ற கேள்விகளை அவர் கேட்கவில்லை. ‘உடனே புறப்படு, இன்னே பெறுதி நீ ” என்று சொல்கிறார்.
இப்படித்தான் ஞானிகள் இறைவனது அருளினால் ஞானத்தைப் பெற்ற மாத்திரத்தில் அவனுடைய திருவடியில் சேர்ந்து எல்லை யில்லா இன்ப நலங்களைத் துய்க்க, ஒரு கணமும் தாமதமின்றி ஓடுகிறார்கள். “நமக்குத் தெரியாமல் அவர்கள் எங்கே போய்விடு கிறார்கள்?” எனக் கேட்கலாம். அவர்களது உடல் நம்மிடையே இருந்தாலும் மனத்தால் அவர்கள் நம்மைவிட்டு வெகுதூரம் ஓடி விடுகிறார்கள்.
அப்படி ஓடிவிட வேண்டுமென்ற உள்ளம் படைத்த மக்களுக்குச் சொல்வதைத் தம் மனத்துக்குச் சொல்கிறார் அருணகிரியார். “எங்கே போவது, போனாலும் நம்மிடம் இருக்கும் ஞானச் செல்வத்தை எப்படிப் பாதுகாப்பது, என்ற கவலை இனி வேண்டாம். வேலாயுதனைத் துணையாகக் கொள்வோம். இங்கே பகல் இருக்கிறது. இரவு இருக்கிறது. ஞானத்தைக் குலைக்கும் அஞ்ஞானமாகிய சூது இருக்கிறது. எங்கே பார்த்தாலும் மனிதர்களாகவே இருக்கிறார்கள். நல்ல காற்று வாங்குவதற்குக் கொஞ்சம் கூட இடம் இல்லை. எங்கே பார்த்தாலும் மூச்சு காற்று. எங்கே பார்த்தாலும் கட்டிடங்கள். வஞ்சனையும் சூதுமே நிரம்பியிருக் கின்றன. இந்த இடத்தில் இருக்க வேண்டாம், வா. போகலாம். மனமே.”
அல்லும் பகலும் இல்லாச்
சூதான தற்ற வெளிக்கே…….. போதாய்.
சூதானதற்ற வெளி
இரவு அற்ற இடம் என்றால், அங்கே பகல் உண்டு என்று தோன்றும். பகல் அற்றது என்றால் இரவு உண்டு என்று ஆகும். இரண்டும் ஒன்றுக்கொன்று இனமானவை. வெண்டாமரை என்ற சொல் செந்தாமரை என்ற இனத்தை நினைப்பூட்டுகிறது. அதைப் போல இரவு என்று சொன்னால் பகல் இருப்பது நினைவுக்கு வருகிறது. அந்த வெளியோ பகலும் இரவும் இல்லாத இடம். மறதி, நினைப்பு ஆகிய இரண்டும் அங்கே இல்லை. மறதி நினைப்பு அற்ற, இரவு பகல் அற்ற இடம்; சூது அற்ற இடம்; வெறும் வெட்ட வெளியான இடம் அது.
வெளி என்பது ஆகாசம். ஆகாசம் ஐந்து பூதங்களுக்குள் ஒன்று; மற்றப் பூதங்களை எல்லாம் தன்னுள் அடக்கி வைத்திருப்பது; அது பூதாகாசம். அந்த வெளி சூதுடைய வெளி. அதற்கு மேல் ஓர் ஆகாசம் உண்டு. அதற்குச் சிதாகாசம் என்று பெயர். அது எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி வைத்திருப்பது. பூதாகாசத்திற்குத் தோற்றம் உண்டு; முடிவு உண்டு. சிதாகாசத்திற்கு அவை இல்லை. முன்பு ஒரு பாட்டில், கால எல்லை, பூத எல்லை, இட எல்லை யாவையும் கடந்த ஓர் இடத்தை, ‘வெறும் பாழ்’ என்று சொன்னார். அந்தப் பாழைக் குறிப்பிடுக்கின்றது, “அல்லும் பகலும் இல்லாச் சூதானது அற்ற வெளி” என்பது. கால எல்லைக்குள், பூத எல்லைக்குள், மூச்சுக் காற்றுக்குள் அடங்கி வாழ்கின்ற நாம் காலனுக்குப் பயப்பட்டே வாழ வேண்டும். இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இடத்தில், இரவும் பகலும் அற்ற வெளியில் சிதாகாசத்தில் இருக்கின்ற இறைவனோடு நாம் போய்ச் சேர்ந்து விடலாம். அங்கே போய் ஒளித்துக் கொண்டால் வேறு யாருக்கும் தெரியாது.
தெரியாது ஒரு பூதர்க்குமே.
”ஓருயிருக்கும் தெரியாமல் யாரும் காணமுடியாத நிலைமையில், அல்லும் பகலும் அற்ற வெளியாக இருக்கிற, சூது அற்ற நிலைக்குப் போதாய்” எனச் சொல்கிறார். அங்கே போவதற்கும் வேலாயுதன் துணையாக இருப்பான். அங்கே போன பிறகும் துணையாக எப்பொழுதும் இருப்பான்.
இங்கே இருந்தால் ஒரு கணம்கூடச் சும்மா இருக்க முடிவதில்லை. எந்தச் சமயத்தில் யார் நம்மிடம் இருக்கும் செல்வத்தைப் பறித்துப் போய்விடுவார்களோ எனப் பயந்து பயந்து ஓடி ஒளிய வேண்டியிருக்கிறது. ஒரு கணம் கூடத் தூக்கம் வருவதில்லை. எப்போதும் வேலை. பகலும் வேலை; இரவும் வேலை. பகலும், இரவும் இல்லா இடத்தில் வேலையே இராது.
சும்மா இருத்தல்
சும்மா இருக்கப் போதாய்.
சும்மா இருப்பது என்பது என்ன? செயல் அடங்கி, பேச்சு அடங்கி, மனம் அடங்கி இருப்பதையே சும்மாயிருத்தால் என்பர். இந்த மூன்றையும் காஷ்ட மௌனம், வாங் மெளனம், மனோ மௌனம் என்று சொல்வர்.
அநுபவமும் ஆராய்ச்சியும்
இறைவனுடைய அருளைத் தேடிச் செல்கிறவர்கள் அதைப் பெறுவதற்கு என்ன என்னவோ முயற்சி செய்கிறார்கள். அதை அடைந்த மாத்திரத்தில் சொல் அடங்கி, செயல் அடங்கி, மனம் அடங்கிச் சிதாகாசப் பொருளோடு ஒன்றுபட்டுச் சும்மா இருக்கிறார்கள். அதுவரைக்கும் அவர்கள் பேசியிருக்கலாம். ஆனால் அநுபவத்தில் ஈடுபடும் போது எல்லாம் அடங்கிவிடும்.
இரண்டு பேர், எங்கே உயர்ந்த நல்ல சாதி மாம்பழம் கிடைக்கும் எனத் தேடிப் போனார்கள். ஒரு மாந்தோட்டத்திற்குள் வந்தார்கள். ஒருவன் தனக்குக் கிடைத்த மாம்பழத்தை கையில் வைத்துக் கொண்டு, “இந்தப் பழம் எப்படி வந்தது? இந்த மாமரத்திற்கு வயசு என்ன? இந்தச் செடி எந்த நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது?” என்று ஆராய்ச்சி செய்தான். அவன் தாவர சாஸ்திர வல்லுநன். ஆனால் மற்றவன் தன் கையில் கிடைத்த மாம்பழத்தை நன்றாகச் சுவைத்துச் சாப்பிட்டான். எதைப் பற்றியும் யோசிக்க வில்லை. இரண்டு பேரும் மாம்பழத் தோட்டம் எங்கே இருக்கிறது என்றுதான் முதலில் ஆராய்ச்சி செய்தார்கள். மாம்பழம் கிடைத்த மாத்திரத்தில் ஒருவன் ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டான். மற்றொருவன் கிடைத்த மாம்பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு பின்னும் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தான். ஆராய்ச்சிக்கும் பேச்சுக்கும் எல்லை உண்டு. அந்த எல்லை கடந்து செல்வதால் பயன் இல்லை.
“ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா“
என்று திருஞானசம்பந்தர் சொல்கிறார்.
இறைவனைப் பற்றியும் உயிரைப் பற்றியும் அவனருள் பெறுவது பற்றியும் ஆராய்ச்சி பண்ணத்தான் வேண்டும். உண்பதற்கு உணவு படைத்தால் அது உணவுதானா, அல்லது நஞ்சா என ஆராய்ச்சி செய்யலாம். அது உணவுதான் என்று அறிந்த பிறகு அதைச் சாப்பிடாமல், “இந்த அரிசியின் பெயர் என்ன? எங்கே விளைந்தது? எத்தனை நாள் பயிர்? எந்தக் கடையில் வாங்கியது?” என்றெல்லாமா துருவித் துருவி ஆராய்ச்சி செய்வது? ஆத்மாவுக்கு உண்மையான ஆனந்தத்தைத் தருபவன் இறைவன் எனத் தெரிந்து கொண்டுவிட்டால், அவன் அருளைப் பெறு வதற்கு அந்தக் கணமே உழைக்க ஆரம்பித்துவிட வேண்டாமா?
ஞானமாகிய செல்வம் கிடைத்துவிட்டால் அதைப் பாதுகாத்து அவனோடு இயைந்து சும்மா இருக்க வேண்டாமா? சும்மா இருத்தல்தான் அநுபவம்.
அருணகிரியார் உபதேச முறை
“மனமே,வா, சும்மா இருக்கலாம்” என்று அருணகிரியார் தம் மனத்தைப் பார்த்துச் சொன்னதுதான் இது.
“தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியைத்
தானம் என்றும் இடுங்கோள்“
என்று நேரே நம்மைப் பார்த்துச் சென்ற பாட்டில் சொன்னவர் இப்பொழுதும் தம் மனத்தைப் பார்த்துச் சொல்வது போலச் சொல்கிறார். இரண்டும் நமக்காகச் செய்த உபதேசமே.
வேதா கமசித்ர வேலா
யுதன்வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணாக,
அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே
ஒளித்துச்சும் மாஇருக்கப்
போதாய், இனிமன மே!தெரி
யாதுஒரு பூதர்க்குமே.
[மனமே! வேதமும், ஆகமமுமான அழகிய வேலைப் படையாகக் கொண்ட முருகனது வெட்சி மலர் மலர்ந்தாற் போல விளங்கும் தண்டையை அணிந்த பாதமாகிய தாமரையே பாதுகாப்பாக நிற்க, இரவும் பகலும் இல்லாத,சூது அற்ற சிதாகாச வெளியில் ஓருயிருக்கும் தெரியாமல் உலகினின்றும் ஒளித்துச் செயலற்று இருக்க, இப்போது வருவாயாக.
வேதம், ஆகமம் ஆகிய சித்ரவேல். சித்ரம் – அழகு; வியப்புக்குரியது என்றும் சொல்லலாம். அரண் – பாதுகாப்பு. அல் – இரவு. சூது அஞ்ஞானத்தால் விளையும் நிகழ்ச்சிகள். வெளி – சிதாகாசம். போதாய்- வருவாயாக. பூதர் – உயிரையுடையோர்.]



