வாழ்க்கைக் கூத்து
கி. வா. ஜகந்நாதன்

எல்லாம் மறந்த நிலை

தமிழ் நூல்களில் சொல்லப் பெறும் பொருள்கள் எல்லா வற்றையும் இலக்கண ஆசிரியர்கள் இரண்டு வகையாகப் பகுத்திருக்கிறார்கள். அகம் என்பதும் புறம் என்பதுமே அந்தப் பகுப்பு ஆகும். மக்கள் வாழ்க்கையிற் பெற வேண்டிய பொருள்கள் நான்கு. அறம்,பொருள், இன்பம், வீடு என்ற அந்த நான்கையும் உறுதிப் பொருள்கள் என்பர். அவற்றையே அகம், புறம் என்ற இரண் டிலும் அடக்குவது தமிழ் மரபு. இன்பத்தை அகம் என்றும், அறம் பொருள் வீடு என்ற மூன்றையும் புறம் என்றும் வகைப் படுத்தியிருக்கிறார்கள்.

அகம், காதல் கற்பு என்ற இன்ப வாழ்க்கையின் வகைகளைச் சொல்வது. புறம், அறம் பொருள் வீடு என்ற மூன்றையும் சொன்னாலும் பெரும்பாலும் பொருளின் வகையாகிய வீரத்தைப் பற்றியே சொல்லும். ஆதலால் அகம் என்றால் காதலும், புறம் என்றால் வீரமுமே முதலில் நினைவுக்கு வரும். காதல் வாழ்க்கையின் பல துறைகளை விரித்துரைப்பது அகப்பொருள் இலக்கணம். வீர வாழ்க்கையின் பல துறைகளை விரிவாகச் சொல்வது புறப் பொருள் இலக்கணம்.

காதலும் வீரமும்

காதலும் வீரமும் இரண்டு கண்களைப் போலத் தமிழர்களால் போற்றப் பெற்றவை. பெண் என்றால் காதலும், ஆண் என்றால் வீரமும் நினைவுக்கு வருகின்றன. பெண்ணின் இயல்பு காதலை உண்டாக்குதல்; விருப்பத்தைக் கிளரச் செய்தல். அதனால்,

மாதர் காதல்

என்று தொல்காப்பியம் சொல்கிறது. மாதர் என்ற சொல்லுக்கே காதல் என்று பொருள். பெண்ணின் தன்மை பெட்பு; அதற்கு விருப்பம் என்று பொருள்.

இப்படியே ஆணின் தன்மை ஆண்மையாகும். ஆண்மை என்ற சொல்லுக்கு வீரம் என்று பொருள். ஆண்டவனுடைய இயல்புகளுள் வீரம் தலை சிறந்தது என்பது இதனால் தெரிய வரும். பெண்ணால் காதலும் ஆணால் வீரமும் வளர்கின்றன. பெண்ணின் காதலை ஆணின் வீரம் பாதுகாக்கிறது.

ஆணும் பெண்ணுமாக மக்கள் உருக்கொண்டு வாழும் உலகத்தில் வீரமும் காதலும் வாழ்க்கையை அரண் செய்து இன்பத்தை ஊட்டுகின்றன.வீர வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் கவிஞரால் காப்பியங்களில் சிறப்பாக வருணிக்கப் பெறுகின்றன.

வீரமுருகன்

முருகன் வீரத்தைப் பாதுகாக்கும் தெய்வம்; வீரம் நிறைந்த தெய்வம். அவன் தேவர் படைத் தலைவன். போர் பல செய்து வெற்றி பெற்றவன். அவன் திருக்கரத்தில் உள்ள வேல் அவன் வீரச் சிறப்புக்கு அடையாளமாக இலங்குகிறது. படைகளுக்குள் வில், வாள், வேல் என்பவை சிறந்தவை. அவற்றிலும் வேல் சிறந்தது. அதனைக் கைக்கொண்ட முருகன் பெரிய வீரன்.

பெருவிறல் மள்ள”

என்று திருமுருகாற்றுப்படை அவனைப் போற்றுகிறது.

காதலிற் சிறந்த முருகன்

வீரத்தில் சிறந்து நிற்பது போலவே முருகன் காதலிலும் சிறந்து நிற்கிறான். காதலைப் பாதுகாக்கும் தெய்வம் அவன். வள்ளியெம்பிராட்டியிடம் காதல் சிறந்து நின்ற பேரழகன் அவன். வீரமும் காதலும் சிறந்த முருகனை,

மங்கையர் கணவ, மைந்தர் ஏறே”

என்று நக்கீரர் பாராட்டுகிறார்.

காதற் சிறப்பை அவன் அணிந்த மாலை காட்டுகிறது. அவன் வெவ்வேறு வகையான மாலைகளை அணிவதுண்டு. அவனுக்கு அடையாள மாலை காந்தள். அவனுடைய காதலுக்கு அடையாளமாக இருக்கும் மாலை கடம்பு. அதைப் போகத்துக்கு உரிய மாலை என்று நச்சினார்க்கினியர் சொல்வார்.

முருகனது வீரப் பெருமையை அவன் திருக்கரத்திலுள்ள வேலும், காதற் பெருமையை அவன் திருமார்பில் அணிந்த கடம்ப மாலையும் புலப்படுத்துகின்றன. அந்த இரண்டையும் ஒரு சேர நினைக்கிறார் அருணகிரிநாதர்.

சொன்ன க்ரவுஞ்ச கிரிஊ டுருவத் தொளைத்தவைவேல் மன்ன!
கடம்பின் மலர்மாலை மார்ப !

வேல்

முதலில் வேலைப்பற்றிச் சொல்கிறார். அது கிரௌஞ்ச மலையைத் துளைத்தது; அதனூடே புகுந்து உருவியது. யானை, குதிரை முதலியவற்றையும் காலாளையும் ஊடுருவிச் செல்வது எளிது. குருதியும் தசையும் உள்ள உடம்புகளாதலின் பச்சை மரத்தில் ஆணி இரங்குவது போல வேல் புகுந்துவிடும். ஆனால் கிரௌஞ்ச மலை பாறையாக இருப்பது. அம்பும் வேலும் தன்பால் வந்து மோதினால் அவற்றின் முனைகளை மழுங்கச் செய்யும் வன்மையை உடையது அந்த மலை. அது சொர்ண மயமானது என்று அருணகிரியார் சொல்கிறார்.

பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
எங்கோன்”

என்று கந்தர் அலங்காரத்திலும்,

கனகக் கிரியைப் பொரும்வேலா

என்று திருப்புகழிலும் கிரௌஞ்ச மலையைத் தங்கமலை என்று பாடியிருக்கிறார். வெள்ளி மலையாக இருப்பதே தன் மாயத்தால் தங்க மலையாகவும் நிற்கலாம்.

கந்தபுராணத்தில் உள்ள வரலாறுகள் வெவ்வேறு வகையாக வழங்கி வருகின்றன. பழங்காலத்தில் முருகனைப் பற்றி வழங்கிய வரலாறுகள் பல பிற்காலத்தில் மறைந்தன. புதிய வரலாறுகள் எழுந்தன. பிற நூல்களில் காண இயலாத பல வரலாறுகள் அருணகிரியார் வாக்கில் வரும். அப்படி உள்ளவற்றில் ஒன்று, கிரௌஞ்ச மலை பொன் மயமானது என்பது.

இறுகிய பொன்னாக நின்ற கிரௌஞ்சத்தில் ஊடுருவிச் சென்று முருகனுடைய வேல் தொளைத்தது. வேல் தொளைத்தது என்று கூறினாலும், அந்தச் செயலுக்குரிய வீரம் முருகனிடம் இருப்பதுதான். அவன் வேலை ஏவினான்; அது தொளைத்தது.

மாலை

வீரம் படைத்த வேலாயுதத்தையுடைய மன்னனாக முருகனைப் பரவிய அருணகிரியார், அடுத்தபடி அவனது மாலையைச் சொல்கிறார். அவன் வெட்சி, காந்தள், கடம்பு முதலிய மாலைகளை அணிபவன். கடம்பு அவன் திருமார்பில் அணியும் மாலை. குறிஞ்சி நிலத்திலே மலரும் மலர் கடம்பு. அம்மலர் சக்கரத்தைப் போல உருளும்; மாலை தொடுத்தாற் போல அதன் கொத்து இருக்கும். முருகன் அலங்காரம் செய்து கொண்டு தன் தேவி மாரோடு உல்லாசமாக இருக்கும்போது அணிகிற மாலை அது.

அலங்கலென வெண்கடம்பு
புனைந்துபுண ருங்குறிஞ்சி
அணங்கைமணம் முன்புணர்ந்த பெருமாளே

என்று திருப்புகழில் வருகிறது. கடம்பு மாலையை அணிந்து வள்ளியெம்பெருமாட்டியோடு இன்புற்றானாம் முருகன்.

வீரத்துக்கும் காதலுக்கும் நாயகனாக வைவேல் மன்னனாகவும் கடம்பணியும் மார்பனாகவும் இருக்கும் முருகனை ஏத்துகிறார் அருணகிரியார்.

சொன்ன க்ரவுஞ்ச கிரியூ
டுருவத் தொளைத்தவைவேல்
மன்ன! கடம்பின் மலர்மாலை
மார்ப!

2

அநுபவ நிலைகள்

அருணகிரியார் முருகனுடைய திருவருளில் திளைத்து இன்ப அநுபவம் பெற்றவர். இறைவனை வழிபட்டு அன்பு முறுக முறுகப் பலவகையான அநுபவங்கள் உண்டாகும். யோகம் செய்தாலும், உபாசனை செய்தாலும், துறவுள்ளத்தோடு உண்முக நோக்கிலே ஈடுபட்டாலும் இறைவன் அருள் பதியப் பதியப் புதிய புதிய அனுபவம் உண்டாகி வரும். முத்தியின்பம் என்பது முடிந்த முடிபாகிய அனுபவம். அதற்குமுன் எத்தனையோ படிகள் உண்டு. சாதனங்களை மேற்கொண்டு ஒரு காலைக்கு ஒரு கால் பயிற்சி முற்றி வரும்போது அநுபவமும் முதிர்ந்து வரும். பயிரை விளைக்கையில் நாளுக்கு நாள் பயிர் வளர்ந்து பல நிலைகளை அடைவதுபோல அநுபவம் வளரும்.

அறிவும் அநுபவமும்

புத்தகத்தைப் படித்தும் இறைவனைப் பற்றிய செய்திகளைக் கேட்டும் பெறும் அறிவு நமக்கு இறைவன் அருளைப் பெற வேண்டும் என்ற ஆசையை உண்டாக்குமே யன்றி, அநுபவத்தை உண்டாக்காது. நெல்லின் வகைகளைப் பற்றியும் நெற்பயிர் விளைவிக்கும் திறத்தைப் பற்றியும் வேளாண்மையில் நேரும்

இடையூறுகளைப் பற்றியும் எவ்வளவு தெரிந்து கொண்டாலும், நெல் அறுவடை செய்ய இயலாது. உழுது பரம்படித்து விதைத்துப் பயிர் செய்தால்தான் நெல்லை அறுவடை செய்யலாம். முயற்சி இல்லாமல் எந்தக் காரியமும் கைகூடாது. ஒரு கவளம் சோறு கிடைக்க வேண்டுமாயின் அதற்காக எவ்வளவோ பாடுபட வேண்டியிருக்கிறது. அன்ன சத்திரங்களின் விலாசங்களை மாத்திரம் தெரிந்து வைத்துக் கொண்டால் சோறு நம் வாயில் வந்து விழாது. சோற்றைத் தேடி அலைய வேண்டும். அதைப் பெறுவதற்கு என்ன காரியம் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

அதற்கே அப்படியானால் உயிருக்கு இன்பம் தரும் அநுபவம் எளிதில் வருமா? நூலறிவினால் அதனைப் பெற இயலாது. பல ஆண்டுகள் முயன்றும் தமக்கு இறையருள் அநுபவம் கிடைக்க வில்லையே என்று ஏங்குபவர்கள் இருக்கிறார்கள்.

அநுபவத்தில் பல நிலைகள் உண்டு என்று சொன்னேன். இறைவன் திருநாமத்தைச் சொன்னால் நாக்கு இனிக்கும் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். அந்த அநுபவம் நமக்குத் தெரியாது.

இறைவனை நினைத்தால் மனம் இனிக்கும் என்கிறார்கள். அது மற்றோர் அநுபவம்.

பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கநின்று கேட்டாலும் பரிந்துளுணர்ந் தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே

என்று இராமலிங்க சுவாமிகள் பாடுகிறார். அது ஓர் அநுபவம்.

முயற்சியும் பலனும்

உண்மையாக முயற்சி செய்பவனுக்குக் கைமேல் பலன் உண்டு. வேளாண்மை செய்கிறவனுக்கு நிலமும் கருவியும் உரமும் உழைப்பும் தக்கபடி அமைந்தால், அவன் நாளுக்கு நாள் தன் உழைப்புக்குப் பலன் உண்டாகி வருவதைக் கண்முன் காண்பான். இறைவனுடைய அருளுக்காக ஏங்கி நின்று அன்பு செய்யும் அன்பர்களுக்கும் நாளுக்கு நாள் அநுபவத்தில் வளர்ச்சி தெரியும். “நான் செய்கிற பக்தி சரிதானா?” என்று பிறரைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. சோறு வயிற்றில் போகப் போகப் பசி அடங்கி வருவதை உண்டவன்தானே அறிகிறான்? அவன் வேறு ஒருவனிடம் போய், ”எனக்குப் பசி தீர்ந்துவிட்டதா?” என்று கேட்பதில்லை.

இறைவன் அருளுக்காக முயலும் அன்பு நெறியில் கிடைக்கும் அநுபவம் அவரவர்களுக்குத் தெரியும். அந்த அநுபவம் முதிர்ந்து வருவதும் அவர்களுக்குத் தெரியும். முயற்சி செய்யாதவர்களுக்கு, சாதனத்திலே ஊக்கம் இல்லாதவர்களுக்கு, அநுபவம் பெற்றவர் கள் ஏதேனும் சொன்னால் கதையாகத் தோன்றும்; கற்பனை யாகத் தோன்றும்; நம்பிக்கை பிறக்காது. ஆனால் ஓரளவு முயற்சி செய்து அதனால் விளைந்த அநுபவத்தைப் பெற்றவர்களுக்கோ, அநுபூதிமான்களின் வாக்குக் கேட்கும் போது, ‘ஐயோ! இந்த அநுபவத்தை நாம் இன்னும் பெறவில்லையே! என ஏக்கம் உண்டாகும். தாம் செய்த முயற்சியின் அளவுக்கு ஒருவகை அநுபவம் பெற்றவர்களாதலின், பெரியவர்கள் கூறும் அநுபவங்கள் உண்மையானவையே என்று தோன்றும். தாம் பெற்ற சிறிய அநுபவம் ஒரு காலத்தில் பொய்யாக அவர்களுக்குத் தோன்றி யிருக்கும். ஆனால் இப்போது அது மெய் என்று தெளிந்திருக் கிறார்கள். இது முயற்சியின் பயனாக விளைந்தபோது எப்படி மெய்யாகத் தோன்றுகிறதோ, அப்படியே இன்னும் முறுகிய முயற்சியினால் பெரியவர்கள் பெற்ற மேலான அனுபவமும் மெய்யாகத் தோன்றும் என்ற அறிவு அவர்களுக்கு உண்டாகும்.

அருணகிரிநாதர் பெற்ற அநுபவ வகைகளில் ஒன்றை இப்போது சொல்கிறார். அதை அருளிய வைவேல் மன்னனை, கடம்ப மலர்மாலையணிந்த மார்பனைப் பார்த்துச் சொல்கிறார். அந்த அநுபவம் அவருக்கு வியப்பை மூட்டுகின்றது.

அது என்ன அனுபவம்?

உடம்பு இறந்தது

இந்த உடம்பு இறந்துபோய்விட்டதாம்.

இறந்தே விட்டது இவ்வுடம்பே.

உடம்பு இறந்துபோனால் இந்தப் பாட்டை எப்படிப் பாடினார்?

உயிர் உடம்பினின்றும் போய்விட்டால் இறந்துவிட்டான் என்று சொல்கிறோம். இறத்தல் என்ற சொல்லுக்கு விட்டு நீங்குதல் என்பதுதான் பொருள். உடம்பிலிருந்து உயிர்விட்டு நீங்குவதால், உயிர் இறந்துவிட்டது என்று சொல்வதுதான் பொருத்தம். “முத்தப்பன் இறந்துவிட்டான்” என்று சொல்கிறோம். முத்தப்பன் என்ற பெயராலே குறிக்கப்பட்ட உடம்பு எங்கும் போகவில்லை. உயிர்தான் போயிற்று. அந்த உடம்பு உயிரோடு இருந்தபோது முத்தப்பன் என்று அடையாளம் சொல்லுகிறோம். அவன், அவர் என்று சுட்டும் பொருள் உயிர்தான். “அவர் போய் விட்டார்” என்னும்போது போனது உயிர்தானே? ஆகவே உயிர்தான் இறந்ததேயன்றி உடல் இறக்கவில்லை. உயிர் இறந்ததனால், உடம்பு பிணமாயிற்று என்று வேண்டுமானால் சொல்லலாம், உடம்பு இருக்க உயிர் போகிற நிலை அது.

அருணகிரிநாதர் அதைச் சொல்லவில்லை. உயிர் இருக்கும் போது உடம்பு இறந்துவிட்டதாம்! இது வேடிக்கையாக இருக்கிற தல்லவா? உடம்பு இறந்துவிட்டது என்று கூறுவதற்கு என்ன பொருள் என்று சிந்திக்க வேண்டும். உயிர் இறந்த பிறகு உடம்பு இருந்தாலும் அதில் உணர்ச்சி இருப்பதில்லை. அதை வெட்டினாலும் குத்தினாலும் துடிப்பதில்லை. கொசுக் கடித்தால் உடனே துள்ளுகிறோம். புண் வந்தால் துடியாய்த் துடிக்கிறோம். இதே உடம்பு உயிர் இறந்தபிறகு என்ன பண்ணினாலும் உணர்ச்சியின்றிக் கட்டையாகி விடுகிறது.

உயிர் போன உடம்புக்கும் உயிர் போகாத உடம்புக்கும் இந்த வேற்றுமை இருக்கிறது.உயிர் போனபிறகு வர வேண்டிய நிலை உயிர் இருக்கும்போது உடம்புக்கு வந்துவிட்டதாம். அதைத்தான், “இறந்தே விட்டது இவ்வுடம்பே” என்று அருணைமா முனிவர் சொல்கிறார்.

உணர்ச்சி மரத்தல்

“அப்படி உணர்ச்சி இல்லாமல் உயிருள்ள உடம்பு இருக்குமா?” என்று கேட்கலாம். ஒருவன் அயர்ந்து தூங்குகிறன்.”உடம்பு மறந்து தூங்குகிறான்” என்று சொல்கிறோம். மூட்டைப் பூச்சி கடிக்கிறது. அது அவனுக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவன் உடம்பிலே உணர்ச்சி இருப்பதில்லை. அந்தப் பூச்சி அழுத்தமாகக் கடித்தால் சற்றே புரண்டு கொடுக்கிறான்.

மயக்கம் போட்டு விழுந்தவனைப் பாருங்கள். அவன் மண்டையில் காயம் பட்டு ரத்தம் ஒழுகுகிறது. ஆனாலும் அவனுக்கு உணர்ச்சி இருப்பதில்லை. அவன் உடம்பிலே உயிர் இருந்தாலும் உணர்ச்சியற்றுப் போகிறது.

ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்கிறார்கள். உணர்ச்சி மரத்துப் போக ஊசி குத்திச் சஸ்திர சிகிச்சை செய்கிறார்கள். கத்தியினால் அறுத்து மருந்து போட்டுப் பின்பு தைக்கிறார்கள். அப்போதெல்லாம் அவன் உடம்பில் உணர்ச்சியே இருப்பதில்லை. உயிர் உடம்பில் இருக்கும் போதே உணர்ச்சி அற்றுப் போகும் நிலை வருவது அநுபவ பூர்வமானதுதான் என்று இவற்றால் தெரிகிற தல்லவா?

தூக்கத்தால் ஓரளவு உணர்ச்சி மரக்கிறது; மயக்கத்தாலும் மரக்கிறது; மருந்தினால் உணர்ச்சி மரத்துப் போகிறது. அப்படியே ஒருவகை நிலையில் யோகியர்களுக்கு உடம்பு உணர்ச்சியற்றுப் போகிறது. உடம்பு இருந்தும் இறந்துவிட்டது போல ஆகிவிடுகிறது. அந்த நிலையில் பெற்ற அநுபவத்தையே,

இறந்தே விட்டது இவ்வுடம்பே

என்று அருணகிரியார் சொல்கிறார்.

படிப்படியாக

அந்த நிலை எவ்வாறு வந்தது என்பதை அவர் சொல்கிறார். உடம்பு உணர்ச்சியற்றுப் போவதற்கு முன்பு படிப்படியாகச் சில முயற்சிகள் செய்தார். அவற்றின் விளைவே இந்த அநுபவம்.

முருகனை எப்போதும் பாடினார்; பின்பு மௌன முற்றார்; தியானித்தார். மனத்தால் நினைத்தார். அப்படி நினைக்கும்போது வேறு நினைப்புகளும் இடையிடையே தலைப்பட்டன. அவற்றை மெல்ல மெல்ல ஓட்டினார். முருகனது நினைப்பில் அழுத்தமும் ஒருமைப்பாடும் ஏறியவுடனே மற்ற நினைப்புகள் தாமே ஒழிந் தன. அந்த நினைவில் ஒன்றியபோது முருகனுடைய நினைவு மாத்திரம் இருக்கவில்லை. முருகனுடைய உணர்வே எழுந்தது.

நினைவும் உணர்வும்

நினைவு என்பது மனத்தோடும் அறிவோடும் ஒட்டியது. உணர்வு என்பது அநுபவத்தோடு இணைந்தது. முருகனுடைய திருநாமம், அவன் திருவிளையாடல், அவன் திருக்கோலம் ஆகியவற்றை நினைக்கலாம் அவனை நினைப்பதென்பது இது தான். அவனை உணர்வதாவது அந்த நினைப்பையும் மறந்து அநுபவத்திலே கரைவது. நினைக்கத் தொடங்கும் போது கடைப் பிடி நழுவுவதும் மீட்டும் நினைப்பதும் நமக்கு வழக்கம். திரும்பத் திரும்ப ஒன்றை நினைத்து நினைத்துப் பழகினால்தான் ஒருமைப்பாடு உண்டாகும். அப்படியே நினைவு கடந்த உணர்விலும் கடைப்பிடி நழுவும் நிலை உண்டு. உணர்வு நினைவாக இழியும். அப்போது மீட்டும் மீட்டும் உணரவேண்டும். அப்படி உணர உணர அந்த உணர்வில் ஒருமைப்பாடு உண்டாகும்.

நினைந்துநினைந்து உணர்ந்துஉணர்ந்து
நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே
நிறைந்துநிறைந்து

என்பது திருவருட்பா. நினைக்க வேண்டும்; மீட்டும் மீட்டும் நினைக்க வேண்டும். நினைப்பு முறுகின பக்குவத்தில் உணர்ச்சி தலைப்படும். உணர வேண்டும்; மீட்டும் மீட்டும் உணர வேண்டும். உணர உணர அவ்வுணர்வில் முதலில் தட்டுப்படும் மேடு பள்ளங்கள் மறையும்; சலனம் ஒழியும்.

உணர்ச்சி முதலில் தோற்றும்போது புது வெள்ளம் போல வரும்; அலையெறிந்து கொண்டு வரும்; கொந்தளிப்போடு குதிக்கும். மீண்டும் மீண்டும் உணரும்போது ஒருமைப்பாடு உண்டாகும்; அமைதி பிறக்கும்.

பொறிகளால் உண்டான அனுபவம் மனத்தில் வாசனையாக நிற்கிறது. இறைவனுடைய திருவருளுணர்வு உதயமாகும் போது இந்த வாசனை இடறுவதனால்தான் கொந்தளிப்பு ஏற்படுகிறது. பண்பட்ட நிலத்தில் நீர் பாய்ந்தால் மெல்லப் பாயும். மேடும் பள்ளமுமான நிலத்தில் பாய்ந்தால் வேகம் உண்டாகும்; கொந்தளிப்பு ஏற்படும்? மேடு கரைந்து பள்ளம் நிரம்பினால் அலையில்லாத அமைதி நிலவும்.

வாசனை காரணமாக மனம் அலைகிறது. புழுதியாக இருக்கிற இடத்தில் நீர் ஊற்றும்போது முதலில் புழுதி கிளம்பும். அப்படியே இறைவனை நினைக்கும்போது மனத்தில் பழைய வாசனைப் புழுதி கிளம்புகிறது. நினைப்பு நிலை தாண்டி உணர்ச்சி நிலை வரும்போது, புழுதி அடங்கினாலும் மண் வாசனை வீசுவது போல, மனத்தில் அடங்கி நிற்கும் மாசுகள் மேலே வர முண்டுகின்றன. மனம் சிதறுகிறது. பஞ்சு போலச் சிந்தனைகள் பரவப் பார்க்கின்றன. ஆனால் உணர்ச்சி முறுகி விட்டால், உணர்ச்சியிலே ஒருமைப்பாடு வந்துவிட்டால், அவை அடங்கிவிடும். திக்குக்கு ஒன்றாக எழுந்த எண்ணங்களும் தலை நீட்டிய வாசனைகளும் மணம் வீசிய வித்துக்களும் அடங்குகின்றன. இறைவன் உணர் வாகிய ஒன்றிலே ஒன்றி மறைந்து மாய்கின்றன. அப்போது ஒருமைப்பாடு வருகிறது. எல்லாம் ஒருமுகப்பட்டு உணர்வு மயமாக நிற்கும் அநுபவம் அது.

நினைப்பு உள்ளவரையில் மனம் இயங்கியது. உணர்வு உள்ள வரையில் உள்ளம் இயங்கியது. மனம் நின்ற போது அநுபவத்தை உணரும் உள்ளம் இயங்கத் தொடங்கியது. மனம் இயங்கும்போது உருவம் நாமம் எல்லாம் நினைவு இருந்தன. அவன் நாமமும், உருவமும் தியானத்துக்குத் தட்டுப்பட்டன.

மனம் அடங்கி உள்ளம் இயங்கியபோது இன்னதென்று சொல்ல இயலாத ஒன்று உணர்ச்சியிலே தட்டுப்பட்டது. அதை வடிவம் என்று சொல்ல இயலாது; நாமம் என்று சொல்ல இயலாது. ஆனால் ஒன்று இருப்பது தெரிந்தது. அதுவே இந்த அநுபவத்துக்கு நிலமாக இருப்பதும் தெரிந்தது. அப்படி இருக்கும் நிலையே குணம் உள்ள நிலை. அதற்கு வடிவில்லை. ஆனால் அநுபவத்தைத் தரும் இயல்பு உண்டு. அப்படிச் சொல்வதைவிட, நாம் வேறாக நின்று, இதை அனுபவிக்கிறோம் என்ற உணர்ச்சியைத் தரும் வேறுபட்ட நிலை உண்டு என்று சொல்லலாம். அதுதான் குணம்.

நிர்க்குணம்

உணர்வு ஒன்றியது; எல்லாம் ஒருங்கியது; அப்போது அந்தக் குணமும் மறைந்தது. அடையாளம் ஒழிந்தது. நான் அநுபவிக்கிறேன் என்ற உணர்வும் மறைந்தது. மயக்க மருந்தை மூக்கிலே காட்டும்போது டாக்டர் ஒன்று இரண்டு என்று எண்ணச் சொல் கிறார். எண்ணிக் கொண்டே வருகிறவன் கடைசியில் எண்ணுவதை மறந்து தன்னையும் மறந்து விடுகிறான். அது போன்ற நிலை இப்போது வருகிறது. இது வரையில் ஏதோ பிழம்பாகத் தோன்றிய ஒன்றில் மூழ்கிச் செயலற அனுபவ உணர்ச்சி மாத்திரம் தோற்றியது. இப்போது அதுவும் நழுவியது. அநுபவம் இது, அநுபவிப்பவன் நான் என்ற வேறுபாடே இல்லை. நிர்க்குண மான நிலையில் தன்னையும் மறக்கும் அநுபவம் ஏற்படுகிறது. கருவி கரணம் கழன்ற நிலை இது என்பார்கள்.

இத்தகைய அநுபவத்தைப் படிப்படியாகச் சொல்கிறார் அருணகிரியார்.

‘நான் உன்னை உணர்ந்தேன். இடையே வாசனை கலைத்தது. மீட்டும் உணர்ந்தேன். இந்த உணர்ச்சியை அடுத்தடுத்து இயங்கச் செய்தேன்.’

நின்னை உணர்ந்து உணர்ந்து.

‘நினைப்புக் கடந்து உணர்வுலகத்திலே பலமுறை ஊற்றம் பெற்று முறுகியபோது, பல திசையிற் சிதறிய எண்ணமும் உணர்வும் ஒன்றி ஒருமுகப்பட்டன. அப்போது வடிவில்லாத, உருவில்லாத அடையாளமில்லாத, குணமில்லாத, நிர்க்குணமே பூண்டிருந்தேன்.’

நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம்
ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு.

‘அப்போது நான் பெற்ற அநுபவம் வேறு, நான் வேறு என்ற உணர்வு இல்லை. நீ வேறு, நான் வேறு என்ற உணர்வும் இல்லை. நானே அங்கு இல்லை. என்னையே மறந்திருந்தேன்.’

எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம்பூண்டு என்னை மறந்திருந்தேன்

தன்னையே மறந்த நிர்க்குண நிலையில், உணர்வின் இயக்கமும் ஒழிந்து ஒருங்கிய நிலையில், உடம்பு இறந்துவிட்டதாம். உடம்பை இயக்கும் உயிரே உணர்வற்று நிற்கும்போது உடம் புணர்வு எங்கே எழப்போகிறது?

உள்ளே போட்ட சட்டையோடு கழற்றும் போது வெளிச்சட்டை யும் கழலுவதுபோல, தன்னையே மறந்த நிர்க்குண நிலையில் உடம்பும் மறந்துபோவது இயல்பு தானே?

முருகனுடைய தியானத்தினால் இந்த அநுபவம் விளைந்த தென்று அருணகிரிப் பெருமான் சொல்கிறார்.

என்னை மறந்திருந்தேன், இறந்
தேவிட்டது இவ்வுடம்பே.

முருகனுடைய வீர வேலையும் கடம்பமாலையையும் நினைத்துத் தியானம் பண்ணத் தொடங்கினால் நாளடைவில் நினைப்பிலே ஒருமை உண்டாகும்; பிறகு உணர்வு தலைப்படும்; அப்பால் உணர்வில் ஒருமைப்பாடு வரும்; எல்லாம் ஒருங்கிய ஒருமைப்பாட்டிலே குணங்குறி கடந்த நிர்க்குண அநுபவம் நிகழும்; அப்போது கருவி கரணம் கழன்று, தன்னை மறந்து, தன் உடம்பை மறந்து நிற்கும் இன்பம் ஏற்படும்.

சொன்ன க்ரவுஞ்ச கிரிஊ
டுருவத் தொளைத்தவைவேல்
மன்ன! கடம்பின் மலர்மாலை
மார்ப!மௌ னத்தை உற்று
நின்னை உணர்ந்துஉணர்ந்து எல்லாம்
ஒருங்கிய நிர்க்குணம்பூண்டு
என்னை மறந்திருந்தேன்; இறந்
தேவிட்டது, இவ்வுடம்பே.

[தங்க மயமான கிரவுஞ்சமலை ஊடுருவும்படியாகத் தொளைத்த கூர்மையையுடைய வேலாயுதத்தைக் கொண்ட மன்னனே! போகத்துக் குரிய கடம்பமலர் மாலையை அணிந்த மார்பை உடையவனே! வாயால் பேசுவதை ஒழிந்து மௌனத்தை அடைந்து, நின்னைப் பலகால் உணர்ந்து உணர்ந்து முயற்சி யாவும் ஒருமுகப்பட்ட நிர்க்குண நிலையைப் பூண்டு என்னை மறந்திருந்தேன்; அப்போது இவ்வுடம்பு உணர்ச்சியற்று இறந்தே போய்விட்டது.

சொன்னம் – தங்கம்.வை – கூர்மை. நிர்க்குணம் – குணம் அற்றது.]

மௌனத்தை உற்று என்றது வாய் பேசுவதை ஒழிந்த நிலை; நிர்க்குணம் பூண்டு என்றது மனம் சிந்தித்தலை ஒழிந்த நிலை; இறந்தேவிட்டது இவ்வுடம்பே என்றது உடம்பு உணர்ச்சியை மறந்த நிலை. இவை முறையே வாங் மௌனம், மனோ மௌனம், காஷ்ட மௌனம் எனப் பெறும்.

வாயால் பேசுவது நின்று மனத்தால் சிந்திப்பதும் நின்றால் உடம்பு தானே உணர்விழந்துவிடும். நான் என்ற உணர்வும் அற்றுப் போகும். இதையே சமாதி நிலை என்று கூறுவர் பெரியோர்.

உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப விநோதனும் நீ அலையே?
எல்லாம் அற என்னை இழந்தநலம்
சொல்லாய், முருகா! சுரபூபதியே!”

என்ற அநுபூதிப் பாட்டில், “என்னை இழந்த நலம்” என்று குறிப்பிப்பதும் இந்த நிலைதான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *