வாழ்க்கைக் கூத்து
கி. வா. ஜகந்நாதன்

சிற்றடி பட்ட இடம்

அருணகிரிநாதப் பெருமான் முருகன் என்னும் குழந்தையை நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டிக் கொண்டு வருகிறார். குறிஞ்சிக் கிழவன் என்று பெயர் சொன்னாலும், குருத்தைப் போலப் பச்சிளம் குழந்தையாகத் தொட்டிலில் படுத்து விளையாடிப் பாலுக்காக அழுவதைச் சொன்னார். பின்பு அவனது இடையில் கட்டிய கிண்கிணியில் ஒலி எப்படி எதிரொலியை எழுப்பியது என்று சொன்னார். அதற்குப் பிறகு முருகன் தவழ்ந்து உட்கார்ந்து கையைச் சேர்த்துச் சப்பாணி கொட்டியதைக் கூறினார். அதன் பின்பு முருகக் குழந்தை நடக்கத் தொடங்கி யிருக்கிறான். அக்குழந்தை அடி எடுத்து வைக்கும்போது என்ன விளைந்தன என்று அவர் சொல்கிறார்.

கலைஞர் வழக்கம்

அருணகிரிநாதர் கவிஞராதலின், ஒரு கருத்தைச் சொல்ல வரும் போது அதை மாத்திரம் நேர்முகமாகச் சொல்லாமல், சுற்றிச் சூழ இருக்கிற விஷயங்களையும் சொல்லி அழகுபட விளக்குவார். ஒன்றைச் சொல்லுகையில் அதற்கு நிலைக்களனாகத் தொடர்புடைய வேறு பலவற்றைச் சொன்னால் அழகாக இருக்கும். பொன்னாலான கட்டித்திற்குள் வைரத்தை வைத்துக் கட்டினால் அழகு மிகுதியாகும். அஸ்திவாரம், விதானம், தூண் முதலியவை யாவும் விரிவாக வைத்து அமைத்துக் கோயிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்கிறார்கள். இது கலைஞர்களின் வழக்கம். அந்த வகையில் எம்பெருமான் அடி எடுத்து வைத்தான் என்று சொல்ல வரும்போது அவனுக்கு முன்னாலே அடி எடுத்து வைத்த பெருமானை நினைக்கிறார்; முருகனுடைய மாமாவை நினைக்கிறார். தம்முடைய பெரிய திருவடியால் அவர் மூன்றடி வைத்து அளந்தார். அவருடைய மருமகனாகிய முருகப் பெருமானும் தன்னுடைய சிறிய அடிகளால் மூன்றடி. வைத்தான். அருணகிரியார் இந்த இரண்டையும் சேர்த்துச் சொல்லுகிறார்.

திரிவிக்கிரமர்

முதலில் பெரிய அடிகளால் அளந்த பெருமானைப் பார்ப்போம்.

படிமாவலிபால்
மூவடி கேட்டு, அன்று மூதண்ட கூட. முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான்.

பழைய காலத்துக் கதையாகையால் ‘அன்று’ என்று சொல்கிறார். ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவற்றுக்கு முன்பே நடந்த கதை; வாமனாவதாரத்து நிகழ்ச்சி இது.

“மூன்று அடி தந்தேன்” என்று மகாபலி சொன்னவுடனே விசுவரூபத்தை எடுத்துக் கொண்டு பூவுலகத்தைத் தம்முடைய பேரடியினால் ஓர் அடியாகவும், வானுலகத்தை ஓர் அடியாகவும் அளந்துவிட்டு, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார் திரிவிக்கிரமர். மகாபலிச் சக்ரவர்த்தியிடம் அவர் வரும் போது வாமனராக, குறிய வடிவினராக வந்தார். தம்முடைய உடம்பை மிகவும் குறுக்கிக் கொண்டு, பார்ப்போர் அருவருத்து வெறுத்து ஒதுக்கும் படியாகக் கூனிக் குறுகி வந்தார். பல்லெல் லாம் தெரியக் காட்டிப் பிறரிடத்தில் கையை நீட்டி இரத்தல் இழிவான செயல். அப்படி இரக்கிறவன் எத்தகைய தைரியமும், பராக்கிரமும் உடையவனாக இருந்தாலும் கேட்கும்போது கூனிக் குறுகிப் போவான். தானம் வாங்கப் போன திருமால் தம்முடைய நெடிய உருவத்தோடு போக வேண்டாம்; சாதாரண மனிதனது உயரத்திலாவது போயிருக்கக் கூடாதா? அதிலும் மிகக் குட்டை யான் வாமன உருவத்தோடு சென்றார். கடவுள் எந்த விளையாட்டைச் செய்தாலும் அதில் ஒரு நீதி இருக்கும். யாசகத்திற்கு என்று போகும்போது அவருடைய உருவமே குறைந்துவிட்டது. பிறரிடம் கையை நீட்டி யாசகம் பண்ணுகிறவர்கள் கூனிக் குறுகிப் பல்லை இளிக்கும் அவலநிலையை அடைவார்கள் என்ற தத்துவத்தை அதனால் காட்டினார்.

உலகத்தில் உள்ளவர்களுக்கு மிகுந்த துன்பத்தை அளித்து வந்த மகாபலியை அடக்கவே அவர் போனார். அவனிடத்தில், “மூன்றடி மண் தா” என்று கேட்டார். உலகத்தோருக்கு எல்லாப் பொருளையும் கொடுக்கும் வள்ளலாகிய திருமால், எல்லாப் பொருள்களையும் தம்மிடத்திலேயே வைத்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும், மகாபலியிடம் அவர் கேட்டது யாசகந் தானே? இல்லாதவன் கேட்பது இயற்கை. அவன் கூடக் கேட்கக் கூடாது என்று பெரியோர் கூறுவர்.

மகாபலியின் இயல்பு

வாமனராக வந்து யாசித்த போது மகாபலி என்ன நினைத் தான்? அவன் ஞானம் உடையவன் அல்லவே! ஞானம் உடையவனாக இருந்தால் தருகிறேன் என்று சொல்வானா? “நான் தருவதற்கு என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் எனக்குத் தந்தவன் நீ தானே? என்னிடம் நீ கொடுத்திருப்பனவற்றை எல்லாம் நீயே வாங்கிப் போக வந்திருக்கிறாய். எடுத்துக் கொண்டு போ” என்று சொல்லி அவன் காலைப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டானா?

மகாத்மா காந்தி அடிகள் ஒரு கருத்தை அடிக்கடி சொல்வார். பணக்காரர்கள் எல்லாம் தர்மகர்த்தா மாதிரி இருக்க வேண்டும். ஆண்டவன் திருவருளால் தாம் பெற்ற பணத்தைப் பிறருக்கும் கொடுத்துப் பகிர்ந்து உண்ண வேண்டும். “அப்படிப் பணக்காரர்கள் இருந்தால் தொழிலாளி, முதலாளியிடையே சண்டையே வராது’ என்று பலமுறை அவர் சொல்லி இருக்கிறார். மகாபலி ஞானம் உடையவனாக இருந்தால், “ஆண்டவனே, முன்னாலே கொடுத்த பொருளை உரிமையோடு கேட்பதற்கு வந்திருக்கிற நீ எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போகலாம்” எனச் சொல்லி அவன் காலைப் பற்றிக் கொண்டிருப்பான். அவன் அரக்க சாதியினன். ஆகவே தன்னிடம் யாசகத்திற்கு வந்திருப்பவனுக்குத் தான் ஏதோ கொடுப்பதுபோல எண்ணிக் கொண்டு, ‘தருகிறேன்” எனச் சொல்லி, கையில் நீர் வார்க்கக் கிண்டியை எடுத்தான்.

உலகத்தில் முற்றும் பொல்லாதவர்களும் இல்லை; நல்லவர் களும் இல்லை. பொல்லாதவர்களிடத்தும் சில நல்ல குணங்கள் இருக்கும். ஒருவன் ஒழுக்கம் தவறியவனாக இருப்பான். ஆனால் யார் கேட்டாலும் இல்லை என்னாது கொடுக்கும் இயல்பு அவனிடம் இருக்கும். இத்தகையவன் மகாபலி. வாமன உருவத்தில் திருமால் வந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ளவில்லை. அவர் கேட்ட மூன்றடி மண் தருகிறேன் என்று சொல்லிவிட்டான்.

சுக்கிராசாரியார் செய்கை

ஆனால் அவனுடைய குரு சுக்கிராசாரியாருக்கு வாமனராக வந்தவர் யார் என்று தெரியும். அவர் ஞானம் உடையவர். “மகா பலியே, வாமனராக வந்திருப்பவர் யார் என்று தெரியாமல், கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டாயே. முடியாது என்று சொல்லிவிடு” என அவனைத் தடுத்தார்.

”நான் சொன்ன வாக்கை மீற மாட்டேன்” என்று சொல்லி விட்டான் மகாபலி. அப்பொழுதுங் கூடச் சுக்கிராசாரியாருக்கு மனம் வரவில்லை. அவன் தண்ணீர் வார்க்க எடுத்த கிண்டியின் வாயில் ஒரு சிறு வண்டைப் போல நுழைந்து கொண்டு, தண்ணீர் கீழே விழாமல் தடுத்தார். வாமனர் தம் கையில் வைத்திருந்த தர்ப்பையை எடுத்து அதன் துவாரத்தின் வழியே குத்தினார். அதனால் சுக்கிராசாரியார் ஒரு கண்ணை இழந்தார். நல்ல ஞானம் படைத்த சுக்கிராசாரியாருக்கு அசுரனாகிய மகாபலியைத் திருத்துகிற ஆற்றல் இல்லை. மகாபலியின் அசுரத் தன்மை அவருக்கு வந்துவிட்டது. நல்லவர்களிலும் சிலர் சேர்க்கையினால் இப்படித் தான் கெட்டுப் போவார்கள் என்பதற்கு அவர் ஒரு சான்று. சில நல்லவர்கள் எங்கே இருந்தாலும் அந்த இடத்தில் தாம் கெட்டுப் போகாமல் இருப்பார்கள். இது அவர்களின் மனத்தின்மையைப் பொறுத்தது.

ஒருவன் மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுக்கும்போது அதைக் கொடுக்காதே என்று தடுக்கக் கூடாது என்பது நல்ல ஞானம் வாய்ந்த சுக்கிராசாரியாருக்குத் தெரியவில்லை. நாம் சில சமயங்களில், “அவன் எனக்குக் கொடுக்கிறேன் என்றதை இந்தப் பாவி கொடுக்காமல் செய்துவிட்டானே! இவனும் இவனைச் சேர்ந்தவர்களும் வாழ்வார்களா? சோற்றுக்கும் துணிக்குமின்றி இவன் நாசமாகப் போகமாட்டானா?” என்று சொல்வது உண்டு. அதையே அழுத்தந் திருத்தமாக வள்ளுவர் அழகான தமிழில் மிக நாகரிகமாகச் சொல்கிறார்.

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.”

சுக்கிராசாரியார் இந்தப் பாவத்தைச் செய்தார். வாமனர் ஒரே அடியாகச் சுக்கிராசாரியாரை மாய்த்து இருக்கலாம். பெருமாளுடைய நோக்கம் அது அல்ல. சுக்கிரசாரியாருக்கு அறிவு போதாது; இரண்டு கண்ணும் இருக்கும் மனிதனுக்கு இருக்க வேண்டிய அறிவு விரிவு அசுரகுருவுக்கு இல்லை. ஆகையால் ஒரு கண்ணைக் குத்தி விட்டார்.

மகாபலி நீர் வார்த்து, ”மூன்றடி மண் தந்தேன்” என்று சொன்னான். உடனே வாமனருடைய திருவுருவம் பெரிதாகி விட்டது. விசுவரூபத்தை ஏற்றுக் கொண்டவுடன் தம்முடைய ஓர் அடியாலே பூவுலகத்தை அளந்தார். மற்றோர் அடியாலே வானுலகத்தை அளந்தார். மூன்றாவது அடியால் அளக்க ஒன்றும் இல்லை.”நீ வாக்களித்தபடி மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?” என்று கேட்டார். அப்போது மகாபலி தன் தலையைக் காட்டினான். “உன் திருவடியை என் தலையில் வைத்து அளந்து கொள்” என்றான். திருமால் அவன் தலையின் மேலே தம்முடைய திருவடியை எடுத்து வைத்தார். இறைவரது திருவடி சம்பந்தம் கிடைத்த மாத்திரத்திலே அவனுக்குப் புகழ் உண்டாகி விட்டது. “எம்பெருமானே,இன்றைக்குத்தான் என் அகத்தில் நீங்கள் விளக்கு ஏற்றி வைத்தீர்கள். இன்றைத் தினத்தில் உலகிலுள்ள மக்கள் தங்கள் அகங்களில் விளக்கு ஏற்றி வைத்துக் கும்பிடட்டும், என் நினைவாக” என்றான். மகாபலிச் சக்ரவர்த்தி நல்ல ஞானம் பெற்று உய்யுமாறு பெருமாள் அவன் தலையில் திருவடி வைத்த நாளைத்தான் நம் நாட்டில் இன்றைக்கும் கார்த்திகைத் திருவிழாவாகத் தீபங்கள் ஏற்றி வைத்துக் கொண்டாடுகிறோம்.

“மனிதன் யார்? அவன் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள வழி என்ன? அதைக் காப்பாற்றித் தருகின்ற நாயகன் யார்?” என்பவற்றைப் போதிக்கின்ற வேதாந்த சித்தாந்த தத்துவங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றன நாம் கொண்டாடுகின்ற திருநாட்கள். மகாபலியின் அகத்தில் விளக்கு ஏற்றப்பட்ட நாள் எல்லா மக்களின் அகத்திலும் விளக்கு ஏற்றி வைக்கப்படும்

கார்த்திகை நாளாக இருக்கிறது; இந்தக் கதையை நினைவு படுத்துகிறார் அருணகிரியார்.

படி மாவலிபால்
மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான்

மாவலிபால் படி மூவடி கேட்டார். படி என்பது நிலம். பிறகு பழையதாகிய இந்த அண்டத்தின் உச்சியிலே முட்டும்படியாத் தம் சிவந்த அடியை நீட்டிய பெருமான் திருமால்.

2

பேரடியும் சிற்றடியும்

சேவடி நீட்டும் பெருமான்
மருகன்தன் சிற்றடியே

அப்படிச் சேவடியை நீட்டிய பெருமானுக்கு மருகன், தங்கை பிள்ளை, முருகன்.மாமாவாகிய திருமாலின் அடி பெரிய அடி; உலகத்தை எல்லாம் அளந்த பேரடி. அந்தப் பேரடியை உடையவர் மருகன் முருகக் குழந்தை. அவனுடைய திருவடி சிறிய அடி. மாமாவின் பேரடி மூன்று பொருளை அளந்தது. மருகனின் சிற்றடியும் மூன்று பொருளை அளந்தது. பூவுலகம், வானுலகம், மாவலியின் தலை ஆகிய மூன்றையும் அளந்தது அந்தப் பேரடி. இந்தச் சிற்றடி எந்த மூன்று பொருள்களை அளந்தது?

தாவடி ஓட்டும் மயிலிலும் தேவர் தலையிலும்,என் பாஅடி ஏட்டிலும் பட்டதன்றோ?

மயிலின்மேல்

முருகனுடைய சிற்றடி மயில் மேலே பட்டது. மோட்டார் கார் வைத்திருந்தவர்கள் யாவருக்கும் யுத்த காலத்தில் பெட்ரோலுக்கு லைசென்சு எளிதில் கொடுக்கவில்லை. ஆனால் பெட்ரோல் மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய சிலபேர் இருந்தார்கள். அவர்கள்தாம் டாக்டர்கள். அவர்களுக்குப் பெட்ரோல் எளிதாகக் கிடைக்கும் படி லைசென்சு கொடுக்காவிட்டால் யாருக்குத் துன்பம்? நோய்ப் பட்டிருக்கிற உயிர்களின் நோயைப் போக்குபவர்கள் டாக்டர்கள். சமுதாயத்தில் மிகச் சிறந்த தொண்டைச் செய்பவர்கள். அவர்களுக்குக் கார் எதற்கு என்றா கேட்பது?

டாக்டர் ரங்காச்சாரியார் வைத்தியத் துறையில் மிகப் புகழ் வாய்ந்தவர். எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றியிருக்கிற புண்ணியவான் அவர். அவர் மிகப் பெரிய ‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார் வைத்திருந்தார். யாரோ ஒருவர் அவரை, “இவ்வளவு அதிக விலை உடைய கார் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாராம். டாக்டர் அதற்குப் பதிலாக அவரைப் பார்த்து, “நீங்கள் இரண்டு மூன்று லட்சம் செலவு செய்து எதற்காக வீடு கட்டினீர்கள்?” என்று கேட்டார். நான் வாழ்கின்ற வீடு அல்லவா? அதற்காகத் தான் மிக்க வசதியுள்ளதாக அதிகப் பொருள் செலவு செய்து கட்டினேன்” என்றாராம் கேட்டவர். “நானும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் காரில் வசிப்பதனால் தான் இதை வைத்திருக்கிறேன்” என்று சொன்னாராம்.

அதைப்போல மயில் வாகனம் வைத்துக் கொண்டிருக்கிற பெருமான் அதைப் பெருமைக்காக வைத்துக் கொள்ளவில்லை. கோயிலில் வைத்துக் கும்பிடுவதற்காகவும் அல்ல. அடியார்கள் அழைப்பதற்கு முன்னே ஓடிச் சென்று அருள் செய்வதற்காக வைத்திருக்கிறான்.

நீலம்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் டதனாலே மால்கொண்ட பேதை

என்று ஒரு திருப்புகழ் வருகிறது.

“ஆண்டவனே, நான் நீ இருக்கிற இடத்திற்கு வந்து உன்னை எவ்வாறு வேண்டி அருள்பெறப் போகிறேன்!” என ஏங்கினாள் ஒரு பெண். முருகன் மயில் வாகனத்தில் வந்து அன்பர்களின் வீட்டு வாசலில் இறங்கினான். ‘தேவலோகத்தில் இருப்பவன் பூலோகத்திலுள்ள சிற்றுயிர்களுக்கு அருள் செய்வதற்காகவே மிக வேகமாக ஓடி வரும் மயிலை வாகனமாக வைத்திருக்கிறான். ஆகவே அவன் மேல் காதல் கொண்டால் அது நிறைவேறும் என்று அந்தப் பெண்ணுக்குத் தைரியமும் நம்பிக்கையும் வந்தனவாம்.

எம்பெருமான் மயில் வாகனத்தின்மேல் எப்பொழுது ஏறு கிறான்? தன்னை நினைந்து உருகுகின்ற பக்குவத்தை அடைந் திருக்கும் அடியார்களை அந்தக் கணமே ஆட்கொள் வதற்காகப் பாய்ந்து ஓடும்போது அதை அணைத்துக் கொண்டு ஏறுவான். அவனது கால் மயிலின்மீது படுவதே அடியார்களுக்கு அருள் செய்வதற்காகத் தான். அதன்மீது அவன் ஒரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மற்றொரு காலைத் தூக்குகிறான். அவன் அமர்ந்த மாத்திரத்திலே நாலுகால் பாய்ச்சலில் குதிரை செல்வது போல அந்த மயில் தாவி ஓடுகிறது. அவன் விரைவாகவே ஏறு கிறான். அவன் சரியாக அமர்வதற்கு முன்னே மயில் விரைந்து செல்லத் தொடங்குகிறது. முருகன் மயில் வாகனத்தின் மேல் பொருந்திச் சுகமாக அமர்ந்திருக்கவில்லை. அன்பர்களிடம் சென்று உதவ வேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறான். இதை நினைந்தே, “சுப்பிரமணியசுவாமி மயில் வாகனத்தில் இருக்கிறமாதிரி” என்ற பழமொழி வந்தது. அதற்கு வேறு வகையாகப் பொருள் சொல் வார்கள். அது தவறு.

தாவடி ஓட்டும் மயிலிலும்.

தாவுகின்ற அடியை உடையது மயில். தாவித் தாவி ஓடுகின்ற அந்த மயிலின் மேல் முருகன் தன் சிற்றடியை வைத்தான், எதற்காக? அடியார்களுக்கு அருள் செய்வதற்காக.

தேவர் தலை மேல்

தேவர் தலையிலும்

எம்பெருமான் அடி சிற்றடியானாலும் அதன் பெருமை சொல்லி முடியாது.”ஒரு பறவையின் மேலேதானே அந்தத் திருவடி பட்டது?” எனக் குறைவாக நினைக்கக் கூடாது.

முப்பத்து முக்கோடி தேவர்கள் தாம் தாம் உயர்ந்தவர்கள் என்று எண்ணி இறுமாந்து தலை நிமிர்ந்து நடந்தார்கள். அவர்கள் தலை வணங்கி அறியாதவர்கள். தம்மைக் காட்டிலும் வேறு ஒரு தலைவன் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தலைவனாகிய இந்திரன் தலை நிமிரிந்து செருக் கோடிருந்தான். ஆண்டவன் அவர்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டு மென்று நினைத்தான். சூரன் என்ற அசுரன் வந்தான். அப்பொழுது தான் இந்திராதி தேவர்களுக்கு, தங்களினும் மேம்பட்ட ஆற்றலுடையவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. சூரன் தன்னுடைய அசுரத் தன்மையைக் காட்டித் தேவர்களை அல்லலுற வைத்தான். இந்திரனது வீரம் அவனை அடக்கப் பயன்பட வில்லை. அவனது வச்சிராயுதமும் பயன்படவில்லை. அவன் தேவலோகத்தையே இழந்தான்.

அப்பொழுதுதான் இந்திரன் முதலிய தேவர்களுக்கு ஆண்டவன் நினைவு வந்தது. சிவபெருமானிடத்தில் ஓடிப் போய், “எம் பெருமானே, சூரன் செய்கிற கொடுமைகள் எல்லையில்லாதன; அவனை அடக்க மிக்க வீரம் செறிந்த ஒரு குழந்தையைத் தர வேண்டும்” என்று வேண்டினர். அப்பொழுது முருகன் அவதாரம் செய்தான். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு வாழ்வளிக்க முருகன் என்னும் குழந்தை அவதாரம் செய்திருக்கிறான் என்றால், அவர்களெல்லாம் அவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடாமல் என்ன செய்வார்கள்? அக்குழந்தையின் சிறிய திருவடிகள் தேவர் தலைகளின் மேல் பட்டன. “முருகனே, உன்னுடைய சின்னஞ்சிறு திருவடியை எங்கள் தலையிலே வை அப்பா” எனச் சொல்லித் தேவர்கள் தலையைக் காட்டி வணங்கினர். முன்பு தலை நிமிர்ந்து நின்றவர்கள் முருகப் பெருமானுக்கு முன் தலை வணங்கினார்கள். அவர்கள் தலைகளில் எல்லாம் அந்தக் குழந்தையின் சிற்றடி பட்டது.

3

பழமும் விதையும்

தாவடி ஓட்டும் மயிலிலும்
தேவர் தலையிலும்,என்
பாஅடி ஏட்டிலும் பட்டதன்றோ?

இந்தப் பாட்டை அருணகிரியார் சொல்வதற்கு முக்கியமான காரணம் இரண்டாவது அடியில் இருக்கிறது. நல்ல பழத்தில் மேலே தோல் இருக்கும். அப்புறம் கதுப்பு, சுளை; நடுவிலே விதை இருக்கும். இந்தப் பாட்டிலும் விதைபோல அவருடைய சொந்த அநுபவம் இரண்டாவது அடியில் இருக்கிறது. அதை எப்படிச் சொல்கிறார்? “மகாபலியிடத்தில் மூன்றடி நிலம் கேட்டு, பிரபஞ்சமாகிய அண்டத்தின் முகடு முட்டும்படியாகப் பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு தம்முடைய பெரிய அடி ஒன்றினாலே பூமியையும், மற்றோர் அடியாலே வானத்தையும், மூன்றாவது அடியாலே மகாபலியின் தலையையும் அளந்த பெருமானுடைய மருகனாகிய முருகன், மயிலின் மேலே ஏறும் போது தன்னுடைய சிற்றடி அதன் மேல் படும்படி செய்தான். முப்பத்து முக்கோடி தேவர்களுடைய தலைமீது தன் சிற்றடி படும்படியாகச் செய்தான். தேவர்களுடைய சிரத்திற் பட்டது கிடக்கட்டும். அந்தச் சிற்றடி “என் பா அடி ஏட்டிலும் பட்டது” என்று சொல்கிறார். இதுதான் அவரது சொந்த அநுபவம்.

அடி ஏடு

ஒருவர் அருணகிரியாரைப் பார்த்து, “நீங்கள் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிக் குவிக்கிறீர்களே; அது எப்படி முடிகிறது? அற்புதமான திருப்புகழைச் சந்தம் பிறழாமல் பாடும் ஆற்றல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? கங்கையாற்று வெள்ளம் போலல்லவா பாட்டு உங்கள் வாக்கிலிருந்து பொங்குகிறது?” என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம். அந்தக் கேள்விக்கு விடை அளிப்பதைப் போல இங்கே அருணகிரியார் பாடுகிறார்.

“என்ன அப்பா சொன்னாய்? நானா பாடுகிறேன்? நான் எழுதுகிற பாக்கள் எல்லாம் உயர்ந்தன என்றா புகழ்கின்றாய்? இந்தப் புத்தகத்தைப் பார்த்தாயா? இதன் அடி ஏட்டிலே விழுந்திருக்கும் முத்திரையைப் பார்?” என்று காட்டுகிறார்.

ஒரு வியாபாரியிடம் சென்று, “என்ன ஐயா, இந்த ஆண்டு லட்சக்கணக்கான லாபம் சம்பாதித்திருக்கிறாயே! உன் கணக்குப் புத்தகத்தில் இவ்வாண்டு முதல் முதலில் யாருடைய பெயரில் வரவு வைக்கப்பட்டது?” என்றால் அவர் என்ன சொல்கிறார்? “என் அம்மாவின் பெயரைப் போட்டு முதலில் வரவு வைத்தேன்” என்று சொல்கிறார்.

அதே மாதிரியாக அருணகிரியார் சொல்கிறார். “இவற்றை எல்லாம் நானா பாடினேன்? என்னுடைய பாக்களின் அடி ஏட்டைப் பார்த்தாயா? மஞ்சள் குங்குமம் தடவினாற்போல, பிள்ளையார் சுழி போட்டாற்போல, என் பாடி அடி ஏட்டிலே முருகப் பெருமானுடைய சிறிய திருவடிகள் அல்லவாபட்டிருக்கின்றன? என் பாட்டின் அடி ஏட்டிலே முதல் முதலில் அவன் தன் திருப்பாதங்களை வைத்தான். அந்த ஏட்டைத் தன் திருவடிகளால் தொட்டுவிட்டு, அப்புறம் அவன் அல்லவா எல்லாவற்றையும் காலால் எழுதினான்?” என்பது போலச் சொல்கிறார்.

என்
பா அடி ஏட்டிலும் பட்ட தன்றோ?

“தாவி ஓடுகின்ற மயிலின் மேலே பட்ட திருவடி, தேவர் களுடைய தலையில் பட்ட திருவடி, என்னுடைய கவிதையின் அடி ஏட்டிலும் பட்டதன்றோ? மயிலைப் போல மெத்தென்று இருப்பது அல்ல என் ஏடு. அல்லது தேவர்களுடைய முடியைப் போல ரத்தின கசிதமான வேலைப்பாடு அமைந்த மகுடங்கள் நிரம்பியதும் அல்ல. வேறு சிறப்பு எதுவும் இல்லாதது.அப்படி இருந்தும் அந்தப் பெருமானுடைய சிற்றடி என் பா அடி ஏட்டிலும் பட்டது. அவன் கருணை அது. அவன் திருவடி பட்ட மாத்திரத்திலே இக்கவிதைகள் உயர்வு பெறாமல் எப்படி இருக்கும்?” என்று சொல்வது போலச் சொல்கிறார்.

அருணகிரியார் பெரிய புலவர். அவர் சந்தம், எதுகை மோனை முதலியவை பார்த்து, வார்த்தைகளைச் சேர்த்துக் கவிதை எழுதுபவர் அல்ல; கவிதை பாடுகிறவர்.

“என் பா அடி ஏட்டிலும் பட்டதன்றோ எனச் சொல்லி யிருக்கிறாரே; ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியிருக் கிறாரே; எந்தச் சுவடியின் அடி ஏட்டில் அந்தப் பெருமானுடைய சிற்றடி பட்டது?” என்று கேட்கலாம்.

அருணகிரியாரைப் போன்று பெரும் புலவர்கள் ஏடு எழுத்தாணி எடுத்து வைத்துக் கொண்டு பாட்டுக்கள் எழுதுபவர்கள் அல்ல. அவருக்கு ஏடு எது? நாக்குதான். நாவிலிருந்து வெள்ளம் வெள்ளமாகக் கவிதை பெருகும். அவ்வாறு பாட்டு வரவேண்டுமென்றால் அது இருதயத்திலிருந்து கிளம்ப வேண்டும். உள்ளே நினைத்தால்தான் வாக்கிலே வரும். நாம் பேசுகின்ற பேச்சு எல்லாம் முதலிலே மனத்துள் உருவாகிறது. அது வெடித்து எழுந்து வந்து நாக்கிலே குதிக்கிறது. பேசுகிறோம்.

உள் நின்ற நாக்கு

தஞ்சை மாவட்டத்தில் திருக்கருகாவூர் என்று ஒரு தலம் இருக்கிறது. அதன் பெயர் திருக்களாவூர் என மருவி வழங்குகிறது. அந்த ஊரில் உள்ள அம்பிகையின் பெயர் கருக்காத்த நாயகி. கருவுற்ற மகளிரைக் கருச்சிதையா வண்ணம் காப்பாற்றுகிறவள் அந்த அம்பிகை. இன்றைக்கும் அம்பிகை சந்நிதியில் எண்ணெய் வார்த்து அந்த எண்ணெயைக் கருவுற்ற மகளிர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அம்பிகை, கருக் காக்கின்ற ஊர் ஆதலாலே அதற்குத் திருக்கருகாவூர் என்று பெயர். அந்தத் தலத்துக் கடவுளைப் பற்றி அப்பர் சுவாமிகள் ஒரு பாட்டுப் பாடுகிறார். பெரிய பாட்டு. அதிலே நமக்கு வேண்டியது ஓர் அடி.

உள்நின்ற நாவுக்கு உரையாடியாம்”

எனப் பாதி அடியில் சொல்கிறார்.

நாடகங்களில் திரைக்கு முன்னாலே மேடையில் வேஷம் போட்டுக் கொண்டிருப்பவர்கள் நடிப்பார்கள். திரைக்குப் பின்னால் இருந்து ஒருவன் நடிகன் பேச வேண்டிய பேச்சுக்களை மெள்ளப் படிப்பான். அவனுக்குப் “ப்ராம்ப்டர் (Prompter) என்று ஆங்கிலத்தில் பெயர். எவ்வளவு பெரிய நடிகனாக இருந்தாலும் அவன் சொல்ல வேண்டிய வார்த்தைகள் விட்டுப் போகாமல் இருக்க, உள்ளே இருந்து ‘ப்ராம்ப்டர்’ சொல்லிக் கொண்டே இருப்பான்.

அதே போன்ற ஒன்று நாம் பேசுகையில் நிகழ்கிறது. நாக்குப் பேசுகிறது. இந்த நாக்குப் பேசுவதற்கு முன்னாலே உள்ளே இருக்கிற நாக்கு ஒன்று பேசுகிறது. வெளியே இருக்கிற நாக்காகிய ஏட்டுக்கு அடி ஏடு உள்ளேயுள்ள நாக்கு.

புறத்தில் இருக்கிற கண்ணைப் புறக்கண் என்கிறோம். அதே போல அகத்தில் கண் இருக்கிறது. அது அகக்கண். கண் மாத்திரம் அல்ல. காதும் இருக்கிறது. உள்ளே இருக்கிற நாக்குப் பேசுவதைத்தான் நினைப்பு என்று சொல்கிறோம். உள்ளே இருக்கிற நாக்குப் பேசுவதை வெளியே இருக்கிற நாக்கானத ஒலியை அதிகப்படுத்திக் கூட்டியும், குறைத்தும் வெளியிடுகிறது.

‘இல்லை, இல்லை. வெளியே இருக்கிற நாக்குத்தான் பேசு கிறது” என்றால் ஊமைக்கும் நாக்கு இருக்கிறதே, அவனால் பேச முடிகிறதா? இல்லை. ஏன்? பேச்சு என்ற ஒன்று உள்ளே எழுந்தால்தான் வெளியே வரும். உள்ளே உள்ள நாக்குப் பேச வில்லை என்றால் வெளியே உள்ள நாக்கும் பேசுவது இல்லை.

உள்ளே இருக்கிற நாக்கும் தானாகப் பேசாது. அதற்கு உரை சொல்லிக் கொடுக்கிறவன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் ஆண்டவன். முதலிலே பேசுகிறவன் ஆண்டவன். அதற்கு அப்புறம் உள்ளேயுள்ள நாக்கு, மன நாக்கு, பேசுகிறது. அதற்கப்புறந்தான் வெளி நாக்குப் பேசுகிறது. ஆண்டவனே ஒவ்வொருவருடைய நாக்கும் இயங்க மூலமாக இருக்கிறான். இதையே அப்பர்,

‘உள்நின்ற நாவுக்கு உரையாடியாம்” என்று பாடினார்.

உள்ளமே அடி ஏடு

பாட்டுக்களை வெள்ளம் வெள்ளமாகப் பொழிந்த அருணகிரி நாத சுவாமிகள் என்ன சொல்கிறார்? “நானா அவற்றைப் பாடுகிறேன்? எம்பெருமான் முருகனது சிற்றடி என்பா அடி ஏட்டிலும் பட்டது” என்கிறார். பாட்டுக்கு அடி ஏடு எது? மேல் ஏடு எது? மேல் ஏடுதான் வெளியிலுள்ள நாக்கு. அடி ஏடு உள்ளம். உள்ளத்தில் தோன்றியது நாவில் வருகின்றது.

“எம்பெருமான் முருகனது சிற்றடி என் மனத்திலே பட்டது. அதனால் அல்லவா வெள்ளம் வெள்ளமாகப் பாட்டு வருகிறது?” என்கிறார்.

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண் டாகும்

எனப் பாரதியார் பாடுகின்றார். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாவதற்குக் காரணம் ஆண்டவன் அங்கே வீற்றிருப்பதுதான். ஆண்டவனது அடி அந்த அடி ஏட்டில் பட்டால்தான் ஒளி உண்டாகும். பிறகு அந்த உண்மை ஒளி வாக்கினிலும் உண்டாகும். “கவிதை பிறக்கின்ற என் உள்ளமாகிய அடி ஏட்டில் இறைவனது சிற்றடி பட்டது” எனச் சொல்கிறார் அருணகிரியார். பட்டது என்று செருக் கோடு அவர் பேசவில்லை.”பட்டது அல்லவா?” எனக் கேட்கிறார் நயமாக. அவன் கருணையை நினைந்து அப்படிக் கேட்கிறார்.

‘நான் கவிதை எழுதுகிற புத்தகத்தின் மேல் ஏடு நாக்கு.அடி ஏடு உள்ளம். அதன்மேல் ஆண்டவன் திருவடி வைத்தான். திருவடி வைத்ததுமே எம்பெருமானின் மணம் பாட்டில் மணந்தது. பாட்டும் வெள்ளமாக வருகிறது. நான் பாடினேன் அல்லேன். எம்பெருமான் பாட வைத்தான். நான் வாக்கினாலே பாட, என் உள்ளத்திலே தன் திருவடியை வைத்தான். அவன் திருவடி பட்ட தனால் மணக்கின்ற அடிநாக்கின் மணந்தான் வெளி நாக்கிலிருந்து வெளிப்படுகிறது” என்று அலங்காரமாகச் சொல்கிறார்.

சுவடுபடாத உள்ளம்

குருக்ஷேத்திரத்தில் என்றோ ஒரு நாள் பாரத யுத்தம் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்தது என்று எண்ணுகிறோம். ஒவ்வொரு நாளும் நம் உள்ளங்களில் நடந்து கொண்டிருக்கிறது அந்தப் போர். ஒரு கோடி மாயா சக்திகள் நமது உள்ளங்களிலே நித்தம் போராடி அவற்றை எல்லாம் போர்க் களமாக்குகின்றன. போர்க்களத்திலே அர்ச்சுனனுக்குக் கீதை உபதேசம் செய்த கண்ணபிரான் நித்தம் நமது உள்ளங்களிலேயும் கீதை படிக்கிறான். ஆனால் அந்தக் கீதையைக் கேட்பதற்குச் சக்தி இல்லாமல் இருக்கிறோம். துன்பப்படுகிறோம். எம் பெருமான் நம் உள்ளங்களிலேயே இருக்கிறான். மனச்சாட்சியாக இருக்கிறான்.இருந்தும் அவன் அடிச்சுவடு நம் உள்ளங்களிலே விழவில்லை. காரணம் என்ன?

ஒரு திருடன் எப்படி ஓடினான் எனப் போலீஸார் துப்பு விசாரிக்கிறார்கள். அந்த வீட்டிற்கு உள்ளே திருடன் எந்த எந்தப் பக்கம் போயிருப்பான் என்று பார்க்கிறார்கள். கீழே காலடிச் சுவடு எதுவும் இல்லை. தோட்டப் பக்கம் வருகிறார்கள். முதல் நாள் இரவு மழை பெய்ததனால் தோட்டம் ஈரமாக இருக்கிறது. அந்த ஈர மண்ணிலே திருடன் காலடிச் சுவடு படிந்திருக்கிறது. உள்ளே காலடிச் சுவடு இல்லை. அங்கே ஈரமில்லை. ஈரமில்லாத கட்டாந்தரையில் எப்படிக் காலடிச் சுவடுபடும்?

அதுபோல், “நமது உள்ளங்களிலே இறைவன் நடமாடின போதிலும் அவன் காலடிச் சுவடு விழவில்லையே!” என்றால், நம் உள்ளங்கள் காய்ந்த கட்டாந் தரையாக இருக்கின்றன. அவற்றை அன்பு நீரால் நனைந்த தரையாக்கினால் அவன் காலடி தானே விழும். அருணகிரிநாதப் பெருமான் உள்ளம் அன்பினால் நனைந்து ஈரமாக இருப்பது. நாய்கள் நடமாடுகிற உள்ளத்திலே நாய்களின் சுவடு இருக்கும். மனிதன் நடமாடுகிற இடத்திலே மனிதர்களின் சுவடு இருக்கும். முருகப் பெருமான் நடமாடுகிற உள்ளம் உடையவர் அருணகிரியார். ஆகவே, அங்கே முருகப் பெருமானின் சிற்றடி பதிந்திருக்கிறது. காமம், மோகம், மதம், மாச்சரியம் முதலிய அழுக்குகளை வேரோடு களைந்து எடுத்தவர் ஆதலால் எம்பெருமான் அவரது உள்ளத்திலே பல பல சுவடுகள் உண்டாகுமாறு எப்போதும் ஓடி ஆடிக் கொண்டிருக்கிறான். அது எப்படித் தெரியும்? மன ஏட்டிலே அவன் திருவடி படுகின்றது; பாட்டு வெளி வருகின்றது; அவன் வைக்கின்ற ஒவ்வோர் அடியும் ஒவ்வொரு பாட்டாக மலர்கிறது.

உள்ளமும் உரையும்

நமக்கு அப்படி வராததற்கு நமது உள்ளங்களிலே முருகன் சிற்றடிகள் பதியவில்லை என்பதுதான் காரணம். கோபத்தின் அடிபடுகிறது. அதன் பயனாக நமது நாவில் வசவு கொப்புளிக்கிறது. காமத்தின் அடி பதிகிறது. அதனால் பைத்தியக்காரச் சொற்கள் வருகின்றன.

திரு.வி.க. அவர்கள் வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். அரசியல் மேடைகளின் நடக்கும் சொற்பொழிவுகளை எல்லாம் கேட்டு, “நாம் முன்னோர்கள் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று மூன்று வகைத் தமிழ் இருப்பதாக வரையறை செய்தார்கள். அந்த மூன்றுக்கும் மேல் நான்காவதாக ‘வசைத்தமிழ்’ என்ற ஒன்று இப்பொழுது வளர்ந்து வருகிறதே” என்று சொல்வார்கள்.

இனிமையான தூய சொற்கள் நம் வாக்கிலிருந்து வர வேண்டுமானால் நம் உள்ளங்கள் தூயனவாக இருக்க வேண்டும். நாம் பேசுகிற பேச்சு நமது உள்ளங்களின் நினைவையே எடுத்துக் காட்டுகிறது. உள்ளம் நன்றாக இருந்தால் தவறான பேச்சைச் சொல்ல வேண்டுமென்றாலும் வராது.

ஒரு பெரியவர் இருந்தார். அவர் தூய உள்ளம் உடையவர். அவருக்கு வசவே வராது. ஒரு வெள்ளைக்காரன் அவர்மேல் கோபம் கொண்டு கண்டபடி அவரை ஆங்கிலத்தில் வைதான்.

அது அவருக்கு விளங்கவில்லை. ஆனால் நம்மை வைகிறான் என்பதை மாத்திரம் உணர்ந்தார். திரும்ப வைய ஆரம்பித்தால் தான் அவன் போவான் எனவும் எண்ணினார். ஆனால் எப்படி வைவது? அவருக்கு வசைத்தமிழ் தெரியாது. “வாழைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கத்திரிக்காய்” என்று காய்களின் பெயராகவே அடுக்கிக் கொண்டு போனார். அப்படிச் சொல்லும் போது வார்த்தைகளைக் கடுமையாகச் சொன்னார். அந்தத் தொனியைக் கேட்டு அவர் தன்னை வைகிறார் என எண்ணி அந்த வெள்ளைக்காரன் போய்விட்டான். வைய வேண்டுமென் றாலும் கனிந்த உள்ளங்களிலே வசவு தோன்றுவதில்லை.

ஈர உள்ளம்

அன்பு நீரினால் நனைந்து ஈரமாகிய உள்ளங்களில் ஆண்டவனது சிற்றடிகள் பதிகின்றன. “என்னுடைய உள்ளத்தில் ஆண்டவனுடைய சிற்றடிகள் பதிந்தன” என்று அருணகிரியார் அகங்காரத்தோடு சொல்லவில்லை. ‘மயில்மேல் பட்ட பாதம், தேவர் தலையில் பட்ட மலரடி இந்த ஏழையின் ஏட்டிலும் பட்டது’ என்று பணிவாகவே சொல்கிறார். அகங்காரம் அறவே அற்றுப்போன உள்ளங்களில்தானே அவன் சிற்றடி படுகின்றது? இருதயத்திலே பதிந்து அவன் திருப்பாதம் மணக்கிறது. இருதயத்திலிருந்து வெளிப்படும் பாட்டிலும் அந்த அடியின் மணம் வீசுகிறது.

“முருகன் அடி என் பாவின் அடி ஏட்டிலே பட்டது” என்று தம் அநுபவத்தையும் நன்றியறிவையும் சொல்ல வந்தவர், இறைவன் செய்த அந்த உபகாரத்தின் பெருமையை எடுத்துக் காட்ட அந்தச் சிற்றடி செய்த பிற செயல்களையும் உடன் கூறினார்.

தாவடி ஓட்டும் மயிலிலும்
தேவர் தலையிலும்என்
பாஅடி ஏட்டிலும் பட்டதன்
றோ,படி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்ட
கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான்
மருகன்தன் சிற்றடியே?

[தாவிப் பாய்ச்சலாக ஓடச் செய்யும் மயிலின் மேலும், தேவர்களின் தலையின் மேலும், என்னுடைய பாக்கள் எழுதிய சுவடியின் அடி ஏட்டிலும் பட்டது அல்லவா, அன்று மாவலியினிடம் மூன்று அடி மண் கேட்டுப் பழைய அண்ட கூடத்தின் உச்சி முட்டும்படியாகத் தன் சிவந்த அடியை நீட்டும் பெருமானாகிய திருமாலின் மருகனுடைய சிற்றடி?

தாவடி ஓடுதல் – தாவிச் செல்லுதல். வீரர்கள் நடப்பதைத் தாவடி செல்லுதல் என்பர். பா எழுதிய அடி ஏடு. படி-பூமி முது அண்ட கூடம். முட்டை போன்ற வடிவை உடைமையால் பிரபஞ்சத்துக்கு அண்டம் என்ற பெயர் வந்தது. முகடு – உச்சி. சிற்றடி பட்டதன்றோ?]

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *