வாழ்க்கைக் கூத்து
கி. வா. ஜகந்நாதன்

இருந்தபடி இருங்கள்

சொல்லும் வகை

கந்தர் அலங்காரத்தில் அருணகிரியார் வெவ்வேறு வகையாகக் கருத்துக்களை எடுத்துச் சொல்கிறார். முதல் பாட்டிலே வந்தது போல்,

பேற்றைத் தவம்சற்றும் இல்லாத
என்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா!”

என்று தம்முடைய சொந்த அநுபவ நிலையில் நின்று சொல்கிறது ஒரு வகை. முருகனைச் சார்ந்திருக்கிற வேல், சேவல், மயில், கிண்கிணி இவற்றின் ஆற்றலை உணர்த்துவதன் வாயிலாக அவன் பெருமையை உணரவைப்பது ஒரு வகை.

அழித்துப் பிறக்கெஒட்டா அயில் வேலன் கவியை அன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீர்

என்பது போல நாம் செய்யாத காரியத்தைச் சொல்வது மற்றொரு வகை.

இப்பொழுது வேறு ஒரு வகையாகப் பாடுகிறார். இன்னது செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல வருகிறார். மற்றவர் களுக்கு அறிவுரை கூற வருகிறவர்கள், தாம் உயர்ந்த நிலையில் இருந்தால்தான் அப்படிச் செய்யலாம். உயர்ந்த நிலையில் இருக்கிறவர்களிலும் இரண்டு வகையினர் உண்டு. தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாக எண்ணிக் கொண்டு, மற்றவர்கள் கீழான நிலையில் இருப்பதுபோல் எண்ணி, உபதேசம் செய்ய வருவார்கள் சிலர். தாங்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நினைக்காதவர்கள் சிலர். அவர்கள் பின்னும் உயர்ந்த நிலைக்கு ஏறிவிடுகிறார்கள். செருக்கு எந்த நிலையிலும் வந்து விடும். செருக்குக் கூடாதென்று பிறருக்குச் சொல்லச் சொல்ல அந்த அறிவைப் பிடித்துக் கொண்டே செருக்கு வந்துவிடும். அதனால் ஏமாந்து போகாமல் உயர்ந்த நிலையப் பெற்றவர் தாம் உயர்ந்த நிலையில் இருப்பதை மறந்து விட வேண்டும். தாம் பெற்ற பேற்றாலே உயர்ந்த நிலை ஒன்று; அதனை மறந்து விடுவதனாலே மேலும் உயர்ந்த நிலை ஒன்று; ஆக இரண்டு உயர்வு அப்போது கிடைக்கும்.

ஆணவம் இல்லாத உரை

பிறருக்கு உபதேசம் செய்ய வருகின்ற அருணகிரிநாதப் பெருமான், “நான் இந்த அதிகாரம் உடையவன்” என்று நினைத்துச் சொல்லவில்லை. “நானா பாடுகிறேன்? எம் பெருமான் திருவடி பட்டதனால் அல்லவா இந்தப் பாட்டு வருகிறது?” எனச் சொல்வதன் மூலம் செருக்கைத் தொலைத்துக் கொண்டு, பிறகு உபதேசம் செய்கிறார். அவர் செய்யும் உபதேசம் நம்மிடத்தில் உள்ள பரிவினால் வருவது. பல பக்தர்கள் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவர்களுக்கும் வழி காட்டி அழைத்துப் போக எண்ணிப் பின்னே திரும்பி வந்து, அழைத்துப் போகும் ஒருவரைப் போல அவர் பேசுகின்றார். அவரது உள்ளத்தில் அன்பும், பரிவும் இருக்கின்றன.ஆணவம் இல்லை.

வழி உண்டா?

அவரிடம் ஒருவர் கேட்கிறார். “நான் ஆண்டவனது திருவருளைப் பெற வேண்டும். எனக்குச் சாஸ்திரம் எதுவும் தெரியாது. யோகம் பண்ணத் தெரியாது. ஞான விசாரம் செய்யும் ஆற்றல் இல்லை. நான் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும். வாழும் போதே இறைவன் திருவருள் எனக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு ஏதாவது வழி உண்டா?” என்று கேட்கிறார் ஒரு பக்தர்; பக்தர் என்பதைவிட ஆசை உடையவர் என்று சொல்லலாம்.

இறைவன் திருவருள் வேண்டுமென்ற ஆசை உடையவரானாலும் அதற்கு ஏற்ற வகையில் உழைக்கும் ஆற்றல் அவருக்கு இல்லை. மனைவி மக்களிடையே வாழவேண்டும். சாதாரணமாகத் தினமும் சாப்பிடுவதையே சாப்பிட வேண்டும். எந்த எந்தக் காரியங்களைச் செய்து வருகிறோமோ அந்த அந்தக் காரியங்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போதே இறைவன் திருவருள் வந்து வாய்க்குமா?

இந்தக் கேள்வியைக் கேட்டவர் நம்முடைய பிரதிநிதியாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் நாமும் அப்படித்தான் கேட்போம். தினந்தோறும் உண்ணுகின்ற உணவில், அணிகின்ற ஆடையில், நுகர்கின்ற உலகியல் இன்பத்தில் சிறிதும் குறைவுபடாமல் இருக்கும்போதே, இறைவன் திருவருள் கிடைக்க வேண்டுமென்ற ஆசை உலகத்திலுள்ள எல்லா மக்களிடத்திலும் இருக்கிறது. தவநெறியில் செல்ல வேண்டுமானால் இப்பொழுது நுகரும் இன்பங்களைக் கைவிட வேண்டும். இறைவனது திருவருள் பெற்று விட்டால் அழிவே இல்லாத, எல்லையே இல்லாத பேரின்பம் சித்திக்கும் என்று சொல்லுகிறார்கள். அது கிடைக்கிறது என்பது என்ன நிச்சயம்? இப்பொழுது நாம் அடைகின்ற உலக இன்பம் கையின் மேல் இருக்கிறது. பேரின்பம் கிடைப்பது உண்மையாக இருந்தால் கையில் கிடைப்பதை விட்டு விடலாம். அது கிடைப்பது உண்மையோ, பொய்யோ நமக்குத் தெரியாது. “இப்பொழுது கிடைப்பதை விட்டுவிடாமல் இதையும் அனுபவித்துக் கொண்டே இருக்கிறோம்; அந்தப் பேரின்பம் உண்மையானால் அதைப் பெறவும் ஆயத்தமாகய் இருக்கிறோம். இந்த இன்பத்தைச் சிறிதளவும் விடாமல், அதைப் பெறுவதற்கு வழி ஏதேனும் உண்டா?” இதுதான் நம் கேள்வி.

இப்படிக் கேட்பவர் கூட்டத்தைப் பார்த்து ஒருவர், “உனக்கும் வழி உண்டு” என்று சொன்னால், அவரை விடக் கருணை உடையவர் யாராவது இருக்க முடியுமா? “நீ பட்டினி கிடக்க வேண்டாம். சாஸ்திரங்கள் படித்திருக்க வேண்டாம். தலங்களுக்கு யாத்திரை செய்திருக்க வேண்டாம். தத்துவ விசாரம் செய்திருக்க வேண்டாம். அவற்றில் ஒன்றும் இல்லையே என்ற கவலை வேண்டாம். கொஞ்ச நேரமாவது மௌனமாக இருக்க எனக்குத் தெரியாதே என்று கூடக் கவலைப்பட வேண்டியதில்லை. நீ இப்பொழுது இருக்கிறபடியே இரு. இறைவன் அருள் தானே உனக்கு வந்து வெளிப்படும்” என்று அருணகிரியார் சொல்கிறார்.

கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே.

“ஆண்டவனுடைய திருவருள் எங்கே, எப்படிக் கிடைக்கும் என்று அதை நீங்களே தேடிச் செல்ல வேண்டாம். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். தானாக அவன் அருள் வந்து கிடைக்கும்” என்று அவர் சொல்கிறார்.

“இது மிகவும் நல்ல உபதேசமாக இருக்கிறதே! இன்றைக்கு நாம் செய்து கொண்டிருக்கிற காரியங்களை எல்லாம் இப்படியே செய்து கொண்டு, இருந்தபடி இருந்தால் போதுமே! இவர் சொல்கிறபடி அருள் தானாக வந்து வெளிப்பட்டுவிட்டால் மிகவும் நன்று” எனப் பலர் நினைக்கலாம்.

அருணகிரிநாதர், “இருந்தபடி இருங்கள்” என்று மாத்திரம் சொல்லி இருந்தால் எல்லா மக்களும் அந்த இன்பத்தை அடைய முடியும். ஆனால் அதற்கு முன்னாலே சில சாதனங்களைச் சொல்கிறார்.

தடுங்கோள் மனத்தை; விடுங்கோள்
வெகுளியைத் தானம்என்றும்
இடுங்கோள்.

அறம் செய்ய விரும்புதல்

குழந்தைகளுக்கு உபதேசம் செய்கிறாள் ஒளவைப் பாட்டி. அகர வரிசையில் அவள் சொல்ல ஆரம்பித்து முதலில், “அறஞ் செய விரும்பு” என்கிறாள். அதற்கு அடுத்தபடி “ஆறுவது சினம்” என்று போதிக்கிறாள். இவை இரண்டும் மனித வாழ்க்கைக்குப் பயன்படுகிற காரியங்கள். சாஸ்திரங்கள் எல்லாம் மனிதனுக்கு எந்தத் தர்மத்தைச் சொல்கின்றனவோ அதைக் குழந்தைகளுக்குச் சொல்கிறாள் ஒளவை. காரணம் என்ன? ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ ஆதலால் குழந்தை உள்ளத்திலேயே அந்த வித்தைப் புதைத்துவிட்டால் பிறகு அது நன்கு வளர்ந்து படரும். தலை நரைத்த பிறகு, ‘ஆண்டவன் நாமத்தைச் சொல்; அறத்தைச் செய்’ என்று சொன்னால் வராது. ஆகவே வேத சாஸ்திரங்களின் பரம தாத்பர்யம் எதுவோ அதைச் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அகர வரிசைப் பாட்டிலே ஒளவை சொல்கிறாள்.

வாழ்க்கையில் மனிதர்கள் பெற வேண்டியவை அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் ஆகும். இவற்றையே தர்மார்த்த காம மோட்சம் என்கிறார்கள். இந்த நான்கையும் குழந்தைக்குப் பாட்டி சொல்கிறாள். ”அறஞ்செய விரும்பு” என்று தர்மத்தைச் சொன்னாள். பிறகு “பொருள்தனைப் போற்றி வாழ்” என்று பொருளைச் சொன்னாள். “மெல்லியலார் தோள் சேர்” என்று இன்பத்தைச் சொன்னாள். “வீடு பெற நில்” என்று வீட்டு நெறியையும் சொல்லிவிட்டாள்.

இந்த வகையில்தான் முருகப் பெருமானின் அருள் தானே வந்து நமக்கு வெளிப்பட வேண்டுமாயின், அதற்கான சாதனங்கள் இன்னவென்று சொல்ல வருகிறார் அருணகிரியார். அறத்தைச் சொல்ல வருகிறார். பக்தி என்பது அறத்திலிருந்து வேறுபட்டது அல்ல. தர்மம் இல்லாத பக்தி பக்தி அன்று.தர்மம் இல்லாதது தவமும் அல்ல. அரக்கர் செய்த தவம் அறநினைவு இல்லாத தவம். தவம் முதலியன விசேஷ தர்மங்கள். அன்பு, ஜீவதயை என்பன சாமான்ய தர்மங்கள். அடிப்படையான அறம் சாமான்ய தர்மம் – இல்லாமல் சிறப்பான அறம் – விசேஷ தர்மம் பயன் தராது. அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் நிற்குமா? உயர்ந்த தர்மங்களை எல்லாம் செய்யப் போகின்ற ஒருவன் மிகவும் அடிப்படையான தர்மமாகிய அன்பு பாலிப்பதை விட்டு விடலாமா?

சூரபன்மன் தவம் செய்தான்; அறிவை வளர்த்தான்; அன்பு இல்லாமல் அறிவு வளர்ந்து கொண்டே போகும் போது என்ன ஆகிறது? அணுக்குண்டு பிறக்கிறது. அன்பு, கருணை, இரக்கம் ஆகிய அடிப்படைக் குணங்கள் இல்லாமல் வளர்ந்து கொண்டே போன அறிவினால் அவன் தன்னைவிட உயர்ந்தவர்கள் இல்லை என்று எண்ணி உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் துன்பத்தைத் தருகின்ற ஆற்றல் படைத்தான். தர்மம், அன்பு ஆகியவை அவனது தவத்திற்கு ஆதார பீடமாக அமைந்திருந்தால் அவன் அறிவு நன்மையை உண்டாக்கியிருக்கும்.

இறைவன் திருவருள் கிடைக்க வேண்டுமானால் அறத்தோடு இணைந்த தவம் செய்ய வேண்டும். அருளுக்கு ஆதார பீடமாக அறத்தை வைத்திருக்கிறார்கள். இறைவனோடு ஒன்றுபட்டு வேறு அல்லாமல் இருக்கிற அருட்சக்தியாகிய அம்பிகைக்குத் தர்மசம்வர்த்தினி என்று பெயர்; அறப் பெருஞ் செல்வி என்பார்கள்; அறம் சிறிதும் இல்லாவிட்டால் அருளைப் பெறுவதற்கு மனிதன் எந்த வகையான முயற்சி செய்தாலும் கிடைக்காது.

அறமும் மனமும்

எல்லாவற்றிற்கும் அடிப்படையாக நிற்பது அறம். அந்த அறம் உள்ளத்திலே முதலில் தோன்ற வேண்டும். அதனால் பாட்டி குழந்தையைப் பார்த்து, ”அறஞ்செய்” என்று சொல்லாமல், “அறம் செய விரும்பு” என்றாள். பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வருகிற குழந்தை தன் பையிலுள்ள காலணாவை ஒரு குருட்டுப் பிச்சைக்காரனுக்குப் போடுகிறது. மிக்க செல்வம் உடைய ஒருவன் லட்ச ரூபாயைத் தர்மத்திற்காக எழுதி வைக்கிறான். அது காலணா, இது லட்ச ரூபாய் என்ற வேறுபாடு இருந்தாலும் அந்தச் செயலுக்கு மூலகாரணமாக இருப்பது அவர்கள் அற நினைவு. அந்த நினைவு மனத்திலே தோன்ற வேண்டும். அறத்தில் விருப்பம் மனத்திலே தொடங்கினால் அது வாய்ப்பு நேரும்போது செயலாக வரும். மனத்தில் இல்லாமல் புறத்தில் இருந்தால் அது கணத்திலே மடிந்து விடும். நம் வீட்டிலுள்ள ரோஜாச் செடி பூக்கவில்லை. பக்கத்து வீட்டு ரோஜாச் செடி நிறையப் பூத்துக் குலுங்குகிறது. அந்தப் பூவிலே சிலவற்றைப் பறித்துக் கொண்டு வந்து, இந்தச் செடியில் ஒட்ட வைத்தால் என்ன ஆகும்? சில நிமிஷத்திற்கு அப்பால் அவை வாடிவிடும். அந்த மலருக்குச் செடியோடு ஒட்டுதல் இல்லை. செடி ரோஜாச் செடித்தான்.பூ ரோஜாப் பூத்தான். ஆனால் அந்தச் செடியில் பூத்த ரோஜாப் பூ அல்ல.”யார் யாரோ தர்மம் செய்து புகழ் அடைகிறார்களே; நாமும் புகழ் வாங்க வேண்டும்” என்று எண்ணிச் செய்கிற தர்மம் உள்ளத்திலே தோன்றாமல் புறத்தில் மாத்திரம் இருக்கிறது. செடியில் பூக்காத பூவை அதனுடன் ஒட்டி வைத்தாற்போல அமைவது அது. அதனால்தான் வள்ளுவர்,

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்;
ஆகுல நீர பிற

என்று சொன்னார். மனிதன் குற்றம் அற்ற உள்ளம் உடையவனாக இருந்தால் அதற்கு ஏற்றபடி அவன் செய்யும் அறம் சிறப்படை யும் என்கிறார். பலர் உள்ளத்தில் அன்பு உணர்ச்சி இல்லாமல் செய்யும் காரியங்கள் அறச் செயல்கள் அல்ல; தம்மை விளம்பரப் படுத்திக் கொள்ளும் செயல்களாம்.

மனத்தைத் தடுத்தல்

தர்மம் செய்வது முக்கியம். ஆனால் தர்மம் செய்வது புறத்தில் இருந்தால் போதாது. மனத்திலிருந்து அந்த அற நினைவு உண்டாக வேண்டும். அறமல்லாத வகையிலே புகும் மனத்தை அறத்திலே செலுத்த வேண்டும். மனம் தூய்மை உடையதாக, அன்பு உடையதாக இருந்தால், அங்கே உண்டாகின்ற எண்ணங்கள் உண்மையான செயலாக மாறும். அந்தச் செயல் நிரந்தரமாகவும் நீடிக்கும். அதை அருணகிரிநாதர் தெரிந்து கொண்டார். “நீ இருந்த படி இரு. கை காலை ஆட்ட வேண்டாம். ஆனால் ஒரு காரியம் மாத்திரம் செய். கடிவாளம் எதுவும் இல்லாமல் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறது மனம். அதன் ஓட்டத்தை நிறுத்த வேண்டாம்; ஓடும்போது லகானை மாத்திரம் இழுத்துப் பிடி” என்கிறார்.

தடுங்கோள் மனத்தை.

அவர், “மனத்தை ஓடாமல் செய்யுங்கள்” என்று சொல்லலாம். “மனத்தை அடியோடு அழித்துவிடுங்கள்” என்றும் சொல்லலாம். அப்படிச் சொல்லவில்லை.

மனத்தை அடக்கிப் பக்குவமாக்குகிற பெரியவர்கள் மூன்று வகையான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று மனத்தைத் தடுப்பது. மற்றொன்று மனத்தை நிறுத்துவது. மூன்றாவது மனத்தை அழிப்பது. மனத்தைத் தடுப்பது என்பது, போகும் வழியை மாற்றுவது; மடை மாற்றுவது. ஓட்டத்தை நிறுத்துவது அல்ல. மனத்தை நிறுத்துவது என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசையாமல் நிற்கச் செய்வது. அப்புறம், நின்ற மனத்தை இறந்து போகும்படி செய்யும் நிலை ஒன்று. அவ்வாறு மனம் அற்ற பரிசுத்த நிலையே ஜீவன் முத்தி நிலை. இந்த நிலை எப்படி வரும்? தன் இச்சைப்படி ஓடுகின்ற மனத்தை மடைமாற்றி ஓடச் செய்து, பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்கச் செய்து பழகப் பழகக் கடைசியில் வரும். “இப்பொழுது மனம் உன்னைத் தடுத்துக் கொண்டிருக்கிறது. “இனி நீ மனத்தைத் தடு” என்று அருணகிரியார் ஆரம்பிக்கிறார். ‘உன் மனக் குதிரையின் கடிவாளத்தை வேறு யார் யாரோ பிடித்துக் கொண்டு ஓட்டுகிறார்கள். அதை மாற்றி நீ பிடித்துக் கொள். பாய்ந்தோடுகிற மனத்தை நிறுத்த வேண்டாம்; மடை மாற்றி விடு” என்கிறார்.

தடுங்கோள் மனத்தை.

மணிவாசகர் அநுபவம்

மாணிக்கவாசகப் பெருமான் தம்முடைய சொந்த அநுபவம் ஒன்றை இப்படித்தான் மிக அழகாகச் சொல்கிறார். ‘ஆண்டவனே, நான் உன்னை அடைவதற்கு எந்தக் காரியத்தையும் செய்ய வில்லையே! நான் இருந்தபடி இருந்தேன். என் இந்திரியங்களை நிக்கிரகம் செய்தேனா? இல்லையே! கண்ணால் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். காதால் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். அப்படி இருக்கும்போது என்னை நீ ஆட் கொண்டோயே! அது என்ன ஆச்சரியம்?” என்று வியப்பெய்திப் பேசுகின்றார். ஆண்டவன் அவரை எப்படி ஆட்கொண்டான்? அவரே சொல்கிறார்: “ஆண்டவனே, நான் பல பல பொருள்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். அந்தச் சிந்தனையை அடைக்கவில்லை. ஆனால் அதை உன் பக்கம் திருப்பிவிட்டேன்; நீ திரும்பும்படி அருள் செய்தாய். என் கண்கள் ஏதேதோ பார்த்துக் கொண்டே இருந்தன. அந்தப் பார்வையை நான் நிறுத்தவில்லை, அதை உன் பக்கம் திருப்பிவிட்டாய். வாய் எதை எதைப் பற்றியோ பேசிக் கொண்டே இருந்தது. அந்த வாயை அடைக்கவில்லை. ஆனால் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கும்படியாகச் செய்தாய். ஆகவே நான் முன்பு எப்படி சிந்தித்துப் பார்த்துக் கேட்டுப் பேசிக்கொண்டு இருந்தேனோ, அப்படியேதான் இருந்து கொண்டிருந்தேன்.ஆனால் அவை முன் போய்க் கொண்டிருந்த பாதையைத் திருப்பி, உன் பக்கமாகப் போய்க் கொண்டே இருக்கும்படி செய்தேன்; மடை மாற்றிவிட்டேன். அவ்வளவுதான்” என்றார்.

ஓர் ஓட்டைக் குடம் இருக்கிறது. அந்த ஓட்டைக் குடத்தில் தண்ணீரை எவ்வளவு தடவை நிரப்பி வைத்தாலும் தண்ணீர் அந்தத் துவாரத்தின் வழியாக ஒழுகிப் போய்விடுகிறது. அந்த ஓட்டைக் குடத்தில் அமுதத்தை நிரப்ப வேண்டும். தண்ணீர் விட்டாலே ஒழுகிப்போய்விடுகிற ஓட்டைக் குடத்தில் அழுதத்தை விட்டால் ஒழுகிப் போகாமல் இருக்குமா? அமுதக் கடலாக இருக்கிற இறைவனிடத்திலிருந்து அமுதத்தை அகப்பையினால் எடுத்துக் குடத்திற்குள் விட்டால் ஒழுகிப் போகும். ஆகவே மாணிக்கவாசகர் என்ன செய்தார்? அந்தக் குடத்தையே அமுதக் கடலுக்குள் போட்டு விட்டார். எந்தத் துவாரத்தின் வழியே அமுதம் ஒழுகிப் போய்விடும் என்று அஞ்சினாரோ, அந்தத் துவாரத்தின் வழியே அமுதம் உள்ளே புகுந்து குடத்தை நிரப்பிற்று. முன்னே இருந்த துவாரம் அடைபட்டு விடவில்லை. ஆனால் அமுதம் அதன் வழியாகவே குடத்திற்குள் நிரம்பிவிட்டது. குடமும் அமுதக் கடலுக்குள்ளேயே கிடக்கிறது. ஓட்டைகளை அடைக்காமல் குடம் நிரம்பிவிட்டது எவ்வளவு வியப்பு!

சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்தன்
கண்இணைநின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குடன் மணிவார்த்தைக்கு ஆக்கிஐம் புலன்கள் ஆர
வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மால்அமுதப் பெருங்கடலே! மலையே! நின்னைத்
தந்தனை; செந் தாமரைக்காடு அனைய மேனித்
தனிச்சுடரே! இரண்டுமில்இத் தனியே னேற்கே!”

என்பது திருவாசகம்.

“இதைப் போல நீங்கள் செய்ய வேண்டும்” என்கிறார் அருண கிரிநாதர். தன் இச்சைப்படி ஓடுகின்ற மனத்தை நிறுத்த முடியாது. அது ஓடுகின்ற வேகத்திற்கு அங்கங்கே முட்டுக் கட்டை போட்டு, மடை மாற்றிவிட வேண்டும். ஓடுகின்ற மனத்தை அங்கங்கே தடுக்க வேண்டும். தடுப்பதாவது அதன் போக்கைத் திருப்பி ஓடவிடுவது.

வெகுளியை விடுதல்

இதனால் என்ன ஆகும்? அப்போதைக்கு மனம் கொஞ்சம் வசப்பட்டது போலாகும். ஆனால் தன் இச்சைப்படி போக முடியாத காரணத்தினால் கோபம் உண்டாகும். நம்மை நாமே கோபித்துக் கொள்வோம். மற்றவர்களை அடித்துப் பழகின கை, அடிக்க ஆள் அகப்படாவிட்டால் தன்னையே அடித்துக் கொள்ளும். வெறிபிடித்த நாய், கடிப்பதற்கு வேறு எதுவும் அகப்படாவிட்டால் தன்னைத் தானே கடித்துக் கொள்ளும். அது இயற்கை. பொறி களின் செய்கை தடுக்கப்படவில்லை என்றாலும், மடை மாற்றப் பட்டுவிட்டதல்லவா? அதனால் உள்ளே கோபம் கொந்தளிக்கும். “அந்தக் கோபத்தை அழி” என்கிறார் அருணகிரியார்.

விடுங்கோள் வெகுளியை.

எத்தனையோ சொல்வதற்கு இருக்க, அருணகிரியார் கோபத்தை விடுங்கள் என்று சொன்னாரே என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது.

எல்லாவற்றையும் பற்றிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மனத்திற்கு உண்டு. இப்படிப் பற்றிக் கொள்ள நினைப்பதைத் தான் காமம் என்பர்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

என்று திருவள்ளுவர் பேசுகின்றார். மனிதர்களுக்குத் துன்பம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அவா. மற்றொன்று வெகுளி. அடுத்ததாக இருப்பது,ஒன்றை ஒன்றாக நினைக்கின்ற மயக்கம். முதலில் இருக்கின்ற அசுரன் அவா என்கிற காமம். மனம் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுவதுதான் ஆசை அல்லது அவா. மனத்தை நிறுத்த வேண்டுமானால் காமத்தை நிறுத்த வேண்டும். மனத்தின் சஞ்சாரம் அவாவின் வெளியீடு. அவா என்பதுதான் எல்லாப் பிறப்புக்கும் மூல வித்து. நமக்கு உபதேசம் செய்ய வருகின்ற அருணகிரியார் பிறப்புக்கு மூலமாக இருக் கின்ற பொருளைக் கெடு என்று மறைமுகமாகப் பாடுகிறார். அவர் காமம் இல்லாமல் இரு என்று சொன்னால் பயமாக இருக்கும். நமக்கு விளங்காது. காமத்தை அடக்கு என்று சொல்வதும், மனத்தைத் தடு என்று சொல்வதும் ஒன்றுதான்.

அடுத்தபடி, ஆசையினால் கோபம் உண்டாகிறது. காமம், வெகுளி இரண்டும் ஒழிய வேண்டும். முதலில் அதை அப்படியே சொல்லாமல், “தடுங்கோள் மனத்தை” என்றும், “விடுங்கோள் வெகுளியை” என்றும் சொன்னார். “ஆறுவது சினம்” என்று ஒளவையும் சொன்னாள்.

பற்று நீங்க வழி

கோபத்தை அடக்கிவிட்டோம். எல்லாத் துன்பத்திற்கும் காரணமாய் இருக்கிற பற்றை எப்படி ஒழிப்பது? அதைப் போக்குவதற்கு வழி உண்டு. அது தானம். பத்து ரூபாய் நம் கணக்கில் கூடிவிட்டது என்றால் அந்தப் பத்து ரூபாயைச் செலவிட்டு விட்டால் முன்பு இருந்த நிலை வந்துவிடுகிறது. அதே போலப் பல பல பொருள்களிடத்தில் பற்றுக் கொண்டுள்ள மனத்திடம் பற்றை விட்டுவிடு என்று சொன்னால் பயன் இல்லை. தேடின பொருள்களிடத்தில் பற்று இருப்பது போல, அந்தப் பொருள்களைப் பிறருக்குக் கொடுப்பதிலும் விருப்பம் வைக்க வேண்டும். பல பல பொருள்களை ஈட்டிப் பற்று வளர்கிறது; அவற்றை உவகையோடு பிறருக்குக் கொடுப்பதன் மூலம் அந்தப் பற்றுக் குறைந்து விடுகிறது. ஒரு குழந்தை காகிதத்தை நிறையக் கிழிக்கிறது. அதைக் கிழிக்காதே என்று சொல்வதில் பயன் இல்லை. அப்போதைக்குப் பயந்து கொண்டு நம் முன் சும்மா இருந்தாலும் நாம் இல்லாதபோது அது எல்லாப் புத்தகங்களையும் கிழித்து விடும். ஆகவே நாம் என்ன சொல்ல வேண்டும்? “கிழித்துப் போட்டவைகளைப் பொறுக்கிக் கொண்டு போய்க் குப்பைத் தொட்டியில் போடு” என்று சொல்ல வேண்டும். குழந்தைக்குக் கிழிப்பது முதல் விளையாட்டு; கிழித்ததை வெளியில் கொண்டு போய்ப் போடுவது இரண்டாவது விளையாட்டாக அமைகிறது. அதனால் அறை முன்பு இருந்தது போலவே சுத்தமாக இருக்கும்.

பலபல பொருள்களை ஈட்டுவதன் மூலம் மனம் அழுக்கடை கிறது. ஈட்டிய பொருளைப் பிறருக்குத் தானம் செய்வதன் மூலம் அது மறுபடியும் சுத்தம் அடைந்துவிடுகிறது. பல காலமாகப் பொருளை ஈட்டி ஈட்டிப் பழக்கப்பட்ட மனத்தை மாற்ற வேண்டு மானால், அதற்கு மாற்று மருந்தாக இருப்பது அறநினைவு; தியாகம் செய்யும் உணர்ச்சி பிறருக்குக் கொடுக்கும் செயல். ஆகவே அருணகிரியார்,

தானம் என்றும் இடுங்கோள்

என்று உபதேசிக்கிறார்.

தான வகை

“எவற்றைத் தானம் பண்ண வேண்டும்?” என்று கேட்கலாம். தானம் என்பது அணா பைசாவைக் கொடுப்பது மாத்திரம் அன்று. நல்லது நினைப்பதே தானம். நல்ல வாக்குச் சொல்வதே தானம். இந்தக் காலத்தில் எத்தனை பேர் வாக்குத் தானம் செய்கிறார்கள்! “பாவம்! இந்தப் பிள்ளை ஏழை; உங்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று ஒருவர் சிபாரிசு செய்கிறார். அதனால் அந்தக் குழந்தை பள்ளியில் சேர்ந்து, படித்து ஐ.ஏ.எஸ். பரீட்சையில் தேர்ச்சி பெறுவதற்குரிய அடிப்படையான உபகாரத்தைச் செய்யவில்லையா அவர்? உண்மையான தூய நினைப்பினால் பலர் பிறருக்குத் தானம் செய்கிறார்கள். தாய் போடுகின்ற சாப்பாடு இந்த உயர்ந்த நிலையைச் சேர்ந்தது. குழந்தை வளர வேண்டுமென்று அவள் நினைக்கிறாள். அந்த நினைப்போடு வெறும் மோர் சாதத்தைத் தான் பிசைந்து குழந்தைக்குப் போடுகிறாள். இருந்தாலும் அவளது தூய அன்பு நினைப்பினாலே அந்தக் குழந்தை வளருகிறது. சமுத்திர அலைகளைக் காட்டிலும், நாம் பார்க்கிற காற்று அலைகளைக் காட்டிலும், நாம் கேட்கிற ஒலி அலைகளைக் காட்டிலும், எண்ண அலைகள் மிகுதியான சக்தியை உடையவை. நாம் வாழ வேண்டுமென்று பெரியவர்கள் நினைக்கின்ற நல்ல நினைப்பானது, கண்ணுக்குத் தெரியாத மிக நுட்பமான சக்தி உடையது. அந்தச் சக்தியின் வன்மையினால் நம்மிடத்திலுள்ள கெடுதல் மறைந்துவிடும். கல்லை எடுத்து ஒருவனை அடிக்கிறோம்; மண்டை உடைந்து ரத்தம் வருகிறது. இரண்டு நாளில் காயம் ஆறிப்போகிறது. ஆனால் ஒருவனை வாயினால் அவன் மனம் புண்படும்படி பேசிவிடுங்கள். அந்தச் சொல் வெளிப்படையாக உடம்பில் காயத்தை ஏற்படுத்தா விட்டாலும், அவன் உள்ளத்தை எவ்வளவு நோக அடித்துவிடுகிறது?

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”

என்று வள்ளுவர் சொல்லவில்லையா? வெறும் சொல், வெறும் காற்று; அது படும்போது அறிவுடையவனுக்கு, உணர்ச்சி உடையவனுக்கு, உயிர் துடிக்கிறது. இது குழந்தைக்கு விளங்காது.

செயலைக் காட்டிலும் சொல் நுட்பமானது; அதைக் காட்டிலும் எண்ணம் நுட்பமானது. அவற்றின் விளைவுகளும் அப்படியே வரவர நுட்பமானவே. நெஞ்சின் நினைப்பு அலைகள் வேல் செய்வதைக் கண்டுபிடிக்க மேல்நாட்டு விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அதற்கு உருவம் உண்டு, நிறம் உண்டு என்று கண்டுபிடித்துப் புத்தகம் எழுதி இருக்கிறார்கள். நினைப்பு எத்தனைக்கு எத்தனை தீயதாக இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை அது சார்ந்த இடங்கள் துன்பமயமாக இருக்கும்.

“அவன் கொள்ளிக் கண்ணால் பார்த்தான். செடி பட்டுப் போய் விட்டதே! குழந்தை அன்றைக்கே ஜுரம் என்று கீழே படுத்துக் கொண்டு விட்டது” என்று சொல்வதைக் கேட்பது இல்லையா? உள்ளத் திலே தோன்றுகிற அசுர சக்திகளுக்கு அத்தனை ஆற்றல் உண்டு.

பிறருக்குத் தானம் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம் உள்ளத்தின் விளைவு. உள்ளத்தில் அன்பு இருந்தால்தான் கொடுக்கத் தோன்றும். உள்ளத்தில் பற்று மெல்ல மெல்ல நழுவி, தன்னிடம் உள்ள பொருள்களை எல்லாம் பிறருக்குக் கொடுக்க வேண்டு மென்ற அன்பு நினைவு எப்பொழுது உண்டாகிறதோ, அப்பொழுது இறைவன் நமக்கு அருள் பாலிக்க வருகிறான்.

தடுங்கோள் மனத்தை, விடுங்கோள்
வெகுளியைத் தானம் என்றும்
இடுங்கோள்.

உள்முகப் பார்வை

இந்த விரிந்த உலகத்திலே ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களது பார்வை எல்லாம் வெளி நோக்காக இருக்கிறது. ஒருவர் பார்த்ததை இன்னொருவர் பார்க்கவில்லை. அவரவர்கள் தாம் தாம் கண்டதே உண்மை எனச் சொல்கிறார்கள். எல்லோரும் மையத்தின் வெளிவட்டக் கோட்டில் நிற்கிறார்கள். அவர்கள் பிரயாணத்தை வட்டத்தின் உள்முகமாகச் செலுத்தினால் எல்லோரும் வந்து சேருகின்ற இடம் மையப் புள்ளி ஒன்றுதான். புற நோக்கமானது வேறுபாட்டை வளர்த்து வரும். பார்வையை உள்முகமாகச் செலுத்தினால், வேறுபாடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கிற பரம்பொருளைத் தெரிந்து கொள்ள முடியும்; அன்பு பெருகி, நாம் எல்லோரும் சகோதரர்கள், இறைவனுடைய குழந்தைகள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

‘பல பல பொருள்களைப் பார்த்துப் பார்த்து விரிந்து கொண்டே போகிற மனத்தைத் தடுத்து உள்முகமாகச் செலுத்து; உள்ளே பொங்குகின்ற கோபத்தை அடக்கு. எல்லாவற்றையும் பற்றிக் கொள்ள வேண்டுமென்ற பேராசையால் ஈட்டிக் கொண்டே இருக்கும் பொருள்களை எல்லாம் வாரி வாரித் தானம் வழங்கு.

“இப்படிச் செய்தால் ஒரு நடு நிலைமை வரும். நீ அதே நிலையில் இருந்து கொண்டிரு” என்பது அருணகிரியார் உபதேசம்.

தடுங்கோள் மனத்தை; விடுங்கோள்
வெகுளியை; தானம் என்றும்
இடுங்கோள்; இருந்த படிஇருங்கோள்.

இருந்தபடி இருத்தல்

இருந்தபடியே இருந்து கொண்டு உயிர்களுக்கு ஞானத்தைப் போதிக்கிறார் தட்சிணாமூர்த்தி. ஆலயத்திற்கு வருகின்றவர்களுக்கும் மனோவேகம் கெட்டுக் கொஞ்சம் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யட்டும் என்பதற்கு வழிகாட்டியாக அவர் தெற்குமுகம் நோக்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பெரியவர்கள் பரமேசுவரன் சந்நிதானத்தில் வணங்கிவிட்டு, அம்பிகையையும் தரிசனம் செய்து கொண்டு, தட்சிணா மூர்த்தியின் சந்நிதானத்தில் உட்கார்ந்து கொண்டு மந்திரஜபம் செய்வார்கள். இறைவன் பிறரை உட்கார வைக்கத் தானும் உட்கார்ந்திருக்கிறான்.

இப்படி மற்ற மற்றச் செயல்கள் செய்யாமல், மனம் அடங்கி, செயல் அடங்கி மௌனமாக இருந்தபடி இருப்பார்களானால் அருள் அங்கே வரும்.

மனத்தில் பல காலமாக ஏறியிருக்கிற அழுக்கைத் துடைக்க வேண்டும். காமம் அற்றுப் போக மனத்தைத் தடுக்க வேண்டும். வெகுளியை ஓட்ட வேண்டும். பல காலமாக இருந்த பற்றுக் கழிவதற்காகத் தானம் செய்ய வேண்டும். இந்த மூன்று முயற்சியும் தீவிரமாக இருந்தால் மனத்தினுடைய மாசு போகும்; அது சுத்தமாகும். ஆண்டவன், “எந்த இடம் சுத்தமாக இருக்கிறது? நாம் தலையிலுள்ள அருள் மூட்டையை எங்கே சிறிது வைத்து விட்டு உட்காரலாம்?” என்று காத்துக் கொண்டிருக்கிறான். சுத்தமான உள்ளத்தை வைத்துக் கொண்டு, இருந்தபடி இருந்தான் அவன் அருள் அங்கே வெளிப்படும்.

தடை நீக்கம்

ஒரு விளக்கை ஏற்றி வைத்து அதன்மேல் மரக்காலைக் கவிழ்த்தால் விளக்கின் ஒளியைப் பார்க்க முடியாது. மரக்கால் விளக்கின் ஒளியை மறைத்து, விளக்கை நமக்குக் காட்டாமல் தன்னைக் காட்டுகிறது. ஆனால் விளக்கின் மேல் கண்ணாடி குளோப்பைக் கவிழ்த்தால் அதற்குள் இருக்கிற விளக்கும் தெரிகிறது; விளக்கின் ஒளியும் வெளிப்படுகிறது. மரக்காலுக் குள்ளும் கண்ணாடிக் குளோப்புக்குள்ளும் இருப்பது விளக்குத் தான். ஆனால் மரக்கால் தன்னுள் உள்ள விளக்கின் ஒளி வெளிப் படுவதற்குத் தடையாக இருக்கிறது. கண்ணாடிக் குளோப் தடையாக இராமல் வெளியிடுகிறது. இதைப் போல் அகங்கார, மமகாரம் உடையவர்களுக்குள் ஆண்டவன் இருந்தாலும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. அவன் அருள் ஒளி வெளிப் படுவதற்கு அவைகளே தடையாக இருக்கின்றன. அகங்காரம், மமகாரம் நீங்கியவர்கள் பரிசுத்தமான கண்ணாடி போல் தம்முள் இருக்கும் ஆண்டவன் அருள் ஒளி வெளிப்படுவதற்குத் தடை ஏதும் இராமல் இருக்கிறார்கள்.

எல்லோர் உள்ளத்திலும் ஆண்டவன் இல்லாமல் இல்லை. புதிதாக அவன் வெளிப்படுவதில்லை. மறைந்திருந்தவன் வெளிப்படுகிறான். “பரிசுத்தமான உள்ளம் உடையவர்களாக இருங்கள். அருள் வந்து தானே வெளிப்படும்” என்கிறார். இல்லாத ஒன்று எப்படி வெளிப்பட முடியும்? அது இருக்கிறது. ஆனால் வெளிப் பட முடியாமல் அகங்கார மமகார அழுக்குகள் அதற்குத் தடையாக இருக்கின்றன. “அந்த அழுக்கைக் கழுவி விடுங்கள். அருள் தானே வெளிப்படும்” என்கிறார் அருணகிரியார்.

ஆற்று நீர்

ஆற்று நீர் பாய்ந்து கொண்டே இருக்கிறது. அதன் கரையில் மேடான வயல் ஒன்று இருக்கிறது. அதில் தண்ணீர் பாய்கிறதில்லை. மேடாக இருக்கிறதனால் பாய்கிறதில்லை. தண்ணீர் பாய வேண்டும் என்று வயலுக்குச் சொந்தக்காரன் நினைக்கிறான். ஒரு பெரியவர் அதற்கு வழி சொல்கிறார். ”ஆற்றோரத்தில் மேடாக இருக்கிறதே; அந்த மேட்டை வெட்டி விடு; நடுவில் இருக்கிற புதர்களை எடுத்துப் பள்ளமாக்கு. பிறகு பார், தானே ஆற்று நீர் உன் வயலில் பாயும்” என்கிறார். அவர் சொல்வது நியாயந்தானே? ஆற்று நீரைக் குடம் குடமாக எடுத்துவிட்டாலும் வயல் முழுமையும் பாய்ச்ச முடியாது.வயலில் நீர் பாயத் தடையாயிருக்கும் மேட்டையும் புதரையும் நீக்கினால், நீர் தானே பாயும்.

இது போலவே அருணகிரியார் ஆண்டவன் அருள் நீர் பாய வழி சொல்கிறார். “இந்த மேட்டையெல்லாம் வெட்டிவிட்டுச் சும்மா இரு. அது தானே பாயும், பார்” என்கிறார்.

கிணற்று நீர்

பூமிக்குக் கீழே தண்ணீர் இருக்கிறது. அது தானே வெளிப் படும்படி செய்யலாம். நல்ல கூர்மையான ஆயுதங்களால், தண்ணீர் வெளிப்படத் தடையாக இருக்கிற மண்ணைத் தோண்டினால் தண்ணீர் குபுகுபு என்று வெளிப்படுகிறது. அது வெளிப்படுவதற்குத் தடையாக இருந்தது மண். அது தன்னைக் காட்டி, தன்னுள் இருக்கும் தண்ணீரை மறைத்துக் கொண்டிருக்கிறது. அதை அகற்றிவிட்டால் அந்தப் பூமியில் இருந்தே தண்ணீர் வெளிப்படுகிறது. அதைப் போல நம்முள் இறைவன் இருந்தாலும் அருள் வெளிப்படுவதற்குத் தடையாகச் சில இயல்புகள் இருக்கின்றன. விளக்கை மறைத்துக் கொண்டிருக்கும் மரக்காலைப் போல, தண்ணீர் வெளிக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டிருக்கும் மண்ணைப் போல அவை இருக்கின்றன. அவற்றை ஒழித்துவிட்டால், இறைவன் அருள் தானே வெளிப்படும். காமம், வெகுளி, உலகத்துப் பொருளை உண்மையாகக் கொண்டு அவற்றைப் பற்றிக் கொண்டிருக்கும் மயக்கம் ஆகிய மூன்றையும் நாம் ஒழித்துவிட்டால் அருளே மயமாக இருக்கிற ஆண்டவன் வெளிப்படுவான்.

சிற்பி செய்யும் தொண்டு

ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு வந்து கோயிலுக்கு எதிரே போட்டிருக்கிறார்கள். அந்தக் கல்லை நாம் பார்க்கிறோம். அதே கல்லை ஒரு சிற்பியும் பார்க்கிறான். நாம் கல்லைத்தான் பார்க்கிறோம். அவன் கல்லையும் பார்க்கிறான்; அதற்குள் இருக்கிற முருகனது வடிவத்தையும் பார்க்கிறான். ஆனால் நமக்கு முருகனது வடிவம் தெரியவில்லை. சிற்பி அந்த முருகனது வடிவம் நமக்குத் தெரியாதபடி மறைத்திருக்கின்ற பகுதிகள் எல்லாவற்றையும் தன்னுடைய உளியால் செதுக்கிச் செதுக்கித் தள்ளுகிறான். அப்பொழுது முருகப் பெருமானது உருவம் நமக்குத் தெரிகிறது. அப்பொழுதுதான் அந்த உருவம் வரவில்லை. அதற்கு முன்னாலேயே அதற்குள் மறைந்திருந்த உருவத்தை அந்தச் சிற்பி மாத்திரம் கண்டான். இப்பொழுது நாமும் காணும் படியாகச் செய்தான்.

அதைப் போல, நம்முள் இருக்கிற இறைவனது அருள் ஒளியை நாம் காணமுடியவில்லை. அதற்குக் காரணம் அவன் உள்ளே இல்லை என்பது அல்ல. அதற்குத் தடையாக இருக்கிற பொருள்கள் தங்களைக் காட்டுகின்றன; அந்த அருள் ஒளியைத் தடை செய்கின்றன. அவற்றை நாம் செதுக்கி எறிந்துவிட்டால் அந்த அருள் ஒளி தானே வெளிப்படும்.

சூரும் குன்றமும்

யாருடைய அருள் வெளிப்படும்?

எழு பாரும்உள்ளக்
கொடுங்கோபச் சூருடன், குன்றம் திறக்கத் துளைக்க
வைவேல்
விடும்கோன் அருள்வந்து தானே உமக்குவெளிப்படுமே.

“விடுங்கோள் வெகுளியை” என்று சொன்னார். வெகுளி இருந்தால் கொடுங்கோபச் சூரன் ஆவோம். சூரன் அகங்காரத்தின் உருவம். அகங்காரத்தின் விளைவு, மமகாரம், அந்த மமகாரமே கிரௌஞ்சாசுரன்; சூரனுக்குக் கவசம் போல் இருந்தவன் அவ்வசுரன். கிரௌஞ்சாசுரனாகிய குன்றத்திற்குள் சூரன் ஒளிந்திருந்தான்.”என் வீடு, என் மனைவி, என் பிள்ளை” என்று விரிந்து கொண்டே போகின்ற மமகாரத்திற்குள் ஒளிந்திருப்பது நான் என்ற அகங்காரம். ஆண்டவன் தன்னுடைய கூர்மையான வேலைக் கிரௌஞ்ச மலைக்குள் செலுத்தி மலையும் தவிடு பொடியாகப் போகும்படி செய்தான்; அதனுள் ஒளிந்து கொண்டிருந்த சூரனையும் அழிந்து போகும்படி செய்தான். மலை போலச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிற மமகாரம், அதற்குள் ஒளிந்திருக்கும் நான் என்ற அகங்காரம் ஆகிய இரண்டையும் தன்னுடைய ஞானமாகிய வேலைச் செலுத்தி ஒழிப்பவன் முருகன் என்பதை இந்தத் திருவிளையாடல் புலப்படுத்துகிறது.

உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் வாழ வேண்டுமென்பது இறைவன் கருணை. எழுபாரும் உய்ய வைவேல் விடும் கோன் அவன். “சூரனும் கிரௌஞ்சாசுரனும் அழிந்தால், அகங்காரமும் மமகாரமும் ஒழிந்தால், உலகம் சுபிட்சத்தை அடையும். தான தர்மங்கள் நடைபெறும். தவம் செய்ய முடியும்” என்று கண்டு கொண்டு தன்னுடைய வேலைச் செலுத்தினான் முருகன். அந்த வேல் கூர்மையானது; வைவேல்.

”இவ்வாறு கூர்மையான வேலை விட்ட முருகனுடைய அருள் வந்து தானே, உமக்கு வெளிப்படும். மனத்தைத் தடுத்து, கோபத்தை அழித்துவிட்டு ஈட்டி வைத்திருக்கின்ற பொருள்களைத் தானம் செய்து, நீங்கள் இருந்தபடி இருங்கள்” என்பது அருண கிரியார் உபதேசம்.

தடுங்கோள் மனத்தை; விடுங்கோள்
வெகுளியைத் தானம்என்றும் இடுங்கோள்;
இருந்த படிஇருங் கோள்; எழு
பாரும்உய்யக் கொடுங்கோபச் சூருடன்,
குன்றம் திறக்கத் துளைக்க, வைவேல்
விடுங்கோன் அருள்வந்து தானே
உமக்கு வெளிப்படுமே.

[மனத்தை அதன் போக்கிலே விடாமல் தடுங்கள்; கோபத்தை விட்டு விடுங்கள்; என்றும் தானம் இடுங்கள்; அந்த நிலையில் இருந்தபடியே இருங்கள்; அப்போது, ஏழுலகமும் உய்யும்படியாக, கொடுமையான கோபத்தைக் கொண்ட சூரனோடு கிரௌஞ்சமென்னும் குன்று திறக்கவும், கூர்மையான வேலை விடும் இறைவனாகிய முருகனது அருள் தானே வந்து உமக்கு வெளிப்படும்.

தடுங்கோள், விடுங்கோள், இடுங்கோள், இருங்கோள் என்பன வழக்குச் சொற்கள். சூர்-சூரபன்மன்,குன்றம் – கிரௌஞ்சமலை. வை- கூர்மை]

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *