வாழ்க்கைக் கூத்து
கி. வா. ஜகந்நாதன்

செல்லும் பொருளும் செல்லாப் பொருளும்

பலவகை உபதேசம்

கந்தர் அலங்காரப் பாடல்கள் யாவும் ஒரே வகையில் அமைந்தவை அல்ல. அருணகிரியார் தம்முடைய அநுபவ நிலையிலிருந்து சொல்லும் பாடல்கள் பல. உலகினருக்குப் பயன்படும் உபதேசங்களாக உள்ளவை பல. அப்படிச் செய்யும் உபதேசங்கள் ஒரே மாதிரியாக இருந்தால் அதற்கு ஏற்ற நிலையில் இருப்பவர் கள் மாத்திரம் பயன் அடைவார்கள். மிக உயர்ந்த பக்குவிகளும் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கும் அபக்குவிகளும் உலகில் வாழ்கிறார்கள். அவரவர்களுக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு உபதேசங்களை அருணகிரியார் அருளியிருக்கிறார்.

மிக நன்றாகப் படித்த ஒருவர் மிக உயர்ந்த நிலையில் பேசினால் பலருக்கு விளங்காது. எல்லோருக்கும் புரிய வேண்டுமென்பதற்காகக் கொஞ்சம் எளிய நடையில் பேசினாலோ, “இது என்ன சந்தைக் கடையா?” என்று படித்தவர்கள் சொல்வார்கள். எல்லாவகையிலும் பேசினால் யார் யாருக்கு எது பிடிக்குமோ அதை எடுத்துக் கொள்வார்கள். எல்லோருக்கும் பயன்படும் வகையில் தெளிவாகப் பேசக் கூடியவர் சகலகலா வல்லுநராக இருக்க வேண்டும்.

தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறும்படியாகச் செய்கிறவர்களே சிறந்த ஆசாரியர்கள். அவர்கள் உயர்ந்த அநுபவ நிலை யிலிருந்தே பேசினால் பலருக்கு விளங்காது. தாழ்ந்த நிலைக்கு இறங்கி வந்து மாத்திரம் பேசினால் உலகத்தோர் மதிக்க மாட்டார்கள்; ‘இவரும் நம்நிலையில் தானே இருக்கிறார்?’ என்று எண்ணிவிடுவார்கள். அதனால் உலகியல் வாழ்க்கையில் தொடர் புடைய மக்கள் தங்கள் தங்கள் மனப் பக்குவத்திற்கு ஏற்பப் பயன் அடையக் கூடிய பல வழியில் அருணகிரியார் உபதேசம்செய்கிறார்.

பெருமையும் கருணையும்

தம் அநுபவத்தைச் சொல்லும்போது அவருடைய பெருமை தெரிகிறது. இறங்கி வந்து பேசும்போது அவருடைய கருணை வெளியாகிறது. இந்த இரண்டு நிலைகளிலும் அவர் இருப்பது அவருடைய சிறப்பை மிகுதிப்படுத்துகிறது.

அருணகிரியார், மனம் அடங்காதவர்களுக்கும் நல்வழி காட்டுகிறார். மனம் அடங்கிய பிறகு எந்த வழியில் போக வேண்டு மென்று தெரியாதவர்களுக்கும் வழிகாட்டுகிறர். போன பாட்டில் நல்ல மனம் உடையவர்கள், பக்குவம் இருந்தும் வழி தெரியாது நிற்கும்போது, மேற்கொள்ளும் நெறியைத் தம் மனத்தைப் பார்த்துச் சொல்வது போலச் சொல்லி வழி காட்டினார்.

இந்தப் பாட்டு மிகக் கீழ் நிலையில் உள்ளவர்களும் பயன் பெற வேண்டுமென்று பாடுவது; எல்லாவற்றுக்கும் அடிப்பீடமாகிய அறத்தைச் சொல்வது.

நாணய மாற்றம்

ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போகிறவர்கள் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு போவார்கள். நீண்ட தூரம் போகிறவர்கள் பணத்தை முடிச்சாகக் கொண்டு போவது வழக்கம்; அல்லது நோட்டாக மாற்றிக் கொண்டு போவார்கள். வெளி நாட்டுக்குப் போகிறவர்கள் இந்த நாட்டுப் பணத்தை நிறைய எடுத்துக் கொண்டு போனாலும் பயன் இல்லை. அந்த நாணயம் போகும் தேசத்தில் செலாவணி ஆகாது. அங்கே செலாவணி ஆகக் கூடிய வகையில் நாணய மாற்றம் செய்யும் காரியாலயத்தில் அந்தத் தேசத்து நாணயமாக மாற்றிக் கொண்டு போக வேண்டும்.

ஆகவே, “அந்த ஊரில் எந்த நாணயம் செல்லும்? நம்மிடம் இருக்கும் நாணயத்தை, அந்த ஊரில் செல்லும் நாணயமாக எப்படி மாற்ற வேண்டும்?” என்பன போன்ற விஷயங்களை வெளிநாடு போகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட பயணம்

இந்த உலகத்தில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் நெடுந்தூரப் பயணம் ஒன்று உண்டு. உலகத்தில் பிறந்த யாராலும் இந்தப் பிரயாணத்தைத் தவிர்க்க முடியாது.

இந்த நெடுவழிப் பிரயாணத்திற்கு முன்கூட்டியே பாதுகாப்புச் செய்ய வேண்டும். இங்கே சுகமாக இருந்தாலும் இல்லா விட்டாலும் போகிற இடத்திலாவது சுகமாக இருக்க வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்பு.உள்ளே இருக்கும் போது அழுக்குச் சட்டை, வெளியே போகும் போது வெள்ளைச் சட்டை என்று நாம் திட்டம் வைத்துக் கொள்கிறோம். அதே போலப் போகிற இடத்தில் சுகமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்ற நாம், அப்படி இருப்பதற்கு வழி என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆனால், நாம் அப்படிச் சிந்திப்பதில்லை. இந்த உலகத்தில் நம்மிடம் உள்ள செல்வத்தை அந்த உலகத்தில் பயன் படுவதற்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள மறந்துவிடுகிறோம்.

இங்கும் அங்கும்

இங்கே உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தூய்மையானதாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் மக்கள் மதிக்கமாட்டார்கள். வேறு உலகத்திற்குப் போனால் மனத்தை வளர்த்துப் பக்குவப்படுத்த வேண்டும்.

ஆயிரம் புத்தகங்கள் படித்திருந்தாலும் மிக்க அறிவுடை யவனாக இருந்தாலும் ஓர் இடத்திற்குப் போகும் போது நல்ல ஆட டம்பரமான மேலாடை இல்லாமல் போனால் என்ன மதிப்புக் கிடைக்கும்? எந்த வகையில் பார்த்தாலும் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். இங்கே உடம்பின் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். அங்கே உள்ளத் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். இங்கே ஆடை அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். அங்கே மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.

மன அழுக்கை மாற்றிக் கொண்டு போனால் போதுமா? அங்கே சாப்பாடு வேண்டாமா? இந்த உலகத்தில் நம்மிடம் இருக்கும் செல்வத்தை அந்த உலகத்தில் செலாவணி ஆகின்ற நாணயமாக மாற்றிக் கொள்ள வேண்டும். வேறு உலகத்தில் செலாவணி ஆகின்ற நாணயம் எது? அதுதான் புண்ணியம்; அது அறத்தினால் வருவது.

நம்பிக்கை

வேறு உலகத்தில் செலாவணி ஆகும் நாணயங்களைப் பெறுவதற்கு இந்த உலகத்தில் நம்மிடமுள்ள நாணயங்களைத் தர்மத்தில் செலவிட வேண்டும். இங்கே செய்கிற தர்மம் அங்கே பயன்படும் என்ற நம்பிக்கை இருந்தால் தான் அப்படிச் செலவிட மனம் வரும்.

உடனே கண் முன்னாலே பயன் கிடைக்கும் என்று இத்தகைய செயல்களில் எதிர்பார்க்க இயலாது. நல்ல காரியம் செய்யும் போது ஐயங்கள் உண்டாகின்றன. ‘இறைவனுக்குக் குடம் குடமாகப் பால் அபிஷேகம் செய்கிறார்களே; இதனால் என்ன பயன்? எத்தனையோ குழந்தைகள் குடிக்கப் பால் இன்றித் தவிக்கும் போது எதற்காக இப்படிப் பாலைக் கொட்ட வேண்டும்?’ என்பது போன்ற சந்தேகம் எழும். அதற்குக் கண் முன்னாலே ஒரு பயனும் தோன்றவில்லை அல்லவா? ”இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் உயர்வு” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு பால் அபிஷேகம் செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை. வீட்டில் குழந்தை பாலுக்காகக் கதறும் போது, இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய் என்று சொல்லவில்லை. எவ்வளவு இயலுமோ, அந்த அளவுக்குச் செய்தால் போதும்.

பால்வளம்

நம்முடைய நாட்டில் எங்கே பார்த்தாலும் முன் காலத்தில் பசுக்கள் மிகுதியாக இருந்தன. வறுமையான வீட்டில் கூட ஒரு மாடு இருந்தது. சங்க காலத்து நூலாகிய குறுந்தொகையில்,

ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை”

என்று வருகிறது. ஒரு பசுமாத்திரம் ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டார் வாழ்க்கை சிறப்பில்லாத வாழ்க்கையாம்.

அப்படி இருந்த நாட்டில் இப்பொழுது நமக்குப் பால் போதியதாக இல்லை. பால், தயிர், நெய் ஆகியவற்றில் எதுவும் சுத்தமானதாகக் கிடைக்கவில்லை. நம்முடைய வாழ்க்கை சீருடைய வாழ்க்கை ஆகாது. வறுமை மிகுதியான வீட்டில் ஒரு மாடாவது அந்தக் காலத்தில் இருக்கும் என்றால் எத்தனை பசுக்கள் நாட்டில் இருந்திருக்கும்!

“வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” என்று ஆண்டாள் பாடியிருக்கிறாள். மனிதர்களுடைய தொகையைக் காட்டிலும் அதிகமாகப் பசு மாடுகளின் தொகை இருந்தமையால், தேவைக்கு அதிகமான பால் மிகுதியாகக் கிடைத்த காலம் அது.

தேவைக்குமேல் பால் கிடைக்குமானால் மிஞ்சும். மிஞ்சின பாலை அப்படியே வைத்துப் பல நாளுக்குக் காப்பாற்ற முடியாது; புளித்துப் போய்விடும். பால் பயனின்றி வீணாகிறது என்ற எண்ணம் மக்களுக்கு உண்டாகி விட்டால் பால் கறக்கும் ஆர்வம் குறைந்து போகும்; பசுக்களைப் பேணும் உற்சாகமும் போய்விடும்.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தேவைக்கு மேல் அதிகமாகக் கோதுமை விளைந்தமையால் அவற்றைக் கப்பலில் எடுத்துப் போய்க் கடலில் கொட்டினார்கள். அடுத்த ஆண்டு கோதுமை விளைச்சல் குறைந்துவிட்டதாம். காரணம் என்ன? “சென்ற ஆண்டு கோதுமை விளைவித்தோம். அதைக் கடலில் கொண்டு போய்க் கொட்டினார்கள். எதற்காக இவ்வாண்டு அவ்வளவு உழைக்க வேண்டும்?” என்று பலர் உற்சாகம் குன்றி யிருக்கக் கூடும். அப்படி இல்லாமல் எத்தனை விளைந்தாலும் அதற்குச் சிறந்த விநியோகம் உண்டென்று தெரிந்தால், மேலும் மேலும் விளைச்சல் அதிகமாகிக் கொண்டே வரும்.

கோதுமை அளவுக்கு மிஞ்சி அமெரிக்காவில் விளைந்தது போல இந்நாட்டில் பால் அதிகம் இருந்தது. இறைவனுக்கு அபிஷேகம் செய்வது உயர்வு என்று சொன்னார்கள். படிப்பால் மிஞ்சியவனும் படிப் பால் அபிஷேகம் செய்தான். குடப்பால் மிஞ்சியவனும் குடப் பால் அபிஷேகம் செய்தான். மேற் கொண்டு இருவரும் பசுக்களைப் பேணி வளர்த்து, பால் அதிகம் கறந்தார்கள். மிஞ்சினால் பின்னும் அதிகப் பயனுள்ள காரியத்துக்குப் பயன்படுகிறது என்ற எண்ணம் இருந்ததே இந்த ஊக்கத்துக்குக் காரணம்

“பால் குறைவாக இருக்கும் காலத்தில் அபிஷேகம் செய்ய வேண்டியது அவசியமில்லையே?” என்ற கேள்வி எழலாம். ஒரு வழக்கம் இடைவிடாமல் இருந்தால்தான் சமயத்தில் நல்ல பயனைத் தரும். பால் இல்லாத காலத்தில் அபிஷேகத்தை நிறுத்தி விட்டால் மீண்டும் அந்தப் பழக்கம் வருவது எளிதன்று. அதனால் தான் எப்போதும் பால் அபிஷேகம் செய் என்றார்கள். இவ்வளவு பால்தான் அபிஷேகம் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தவில்லை. வழக்கத்தை விடாதே என்று மட்டும் சொன்னார்கள். ஓர் உத்தரணி விட்டாலும் போதும். உலகியலுக்கும் அருளியலுக்கும் ஒத்த பழக்கம் இது.

நம்மிடம் இருக்கும் மிகுதியான பொருளை இறைவனுக்கு நாம் அர்ப்பணம் செய்தால் நம்மிடம் இல்லாத பொருளை அவன் நமக்கு அளிக்கிறான் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு இருந்தது. ‘இறைவனுக்கு நாம் பால் அபிஷேகம் செய்வதனால் கண்ணுக்கு முன்னாலே என்ன பயன்?’ என்று இப்போது கேட்கிறார்கள். தென்ன மரத்துக்கு வேரிலே விடுகின்ற தண்ணீர் இளநீராக வருகிறது. அப்படி இறைவனுடைய திருவடிக்கு நாம் பக்தியால் செய்பவை அவன் அருளாக மாறிப் பயன் தருகின்றன. அறத்தில் நம் பொருளையும்,ஆற்றலையும் செலவிட்டால் அது புண்ணிய மாக மாறி மறுமைக்குப் பயன்படுகின்றது.

பாங்கில் உள்ள பணம்

பாங்கில் பணம் போடுகிறோம். பாங்கில் இருப்பவர்கள் நம்முடைய பணத்தை அப்படியே மூட்டை கட்டி வைப்பதில்லை. ஆனால் நம் பணம் அங்கே இருக்கிறது என்பதற்குக் கணக்கு உண்டு. கோயில் கட்டுபவன், தண்ணீர்ப் பந்தல் வைக்கிறவன், ஏழைகளுக்கு உபகாரம் செய்கிறவன் ஆகிய பலர் செய்யும் நற்செயல்களும் இறைவனுடைய அருளாட்சிப் பாங்கில் அடையாளமிட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பணத்துக்குரிய கணக்கு நமக்குத் தெரியாது. அந்த உலகத்தில் நமக்குப் பயன் படுவதற்குத் தகுந்த நாணயமாக அவை மாறுகின்றன.

“இவ்வுலகிலுள்ள மக்கள் எல்லோரும் கடைசியாகச் செய்ய வேண்டிய பிரயாணம் ஒன்று இருக்கிறது. அது நெடுவழி. அந்த வழியில் செல்லும்போது நமக்குப் பயன்படும் செல்வத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டாமா?” என்று கேட்டால் ஒருவர், ”என்னிடம் பத்து வீடுகள் இருக்கின்றன. பத்து லட்சம் ரூபாய் இருக்கிறது. அவற்றை வெள்ளி ரூபாயாகவே கட்டி வைத்திருக் கிறேன், இவை பயன்படாவா?” என்கிறார். அருணகிரியார், “இவை யாவும் போகக்கூடிய உலகத்தில் உனக்குப் பயன்படுவ தில்லையே!” என்கிறார். ”அப்படியா? இவற்றால் எனக்குப் பயன் உண்டாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று மறுபடியும் கேட்டால், அவர் சொல்கிறார்.

வையிற் கதிர்வடி வேலோனை
வாழ்த்தி, வறிஞர்க்குஎன்றும்
நொய்யிற் பிளவள வேனும்
பகிர்மின்கள்; நுங்கட்குஇங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா
உடம்பின் வெறுநிழல்போல்
கையில் பொருளும் உதவாது
காணும் கடைவழிக்கே.

“அந்தப் பயணத்திற்கு நம் கையில் வைத்திருக்கும் பணம் உதவாது. அந்த உலகத்தில் செலாவணி ஆகக் கூடிய பணம் ஒன்று சொல்கிறேன். உங்களிடம் இருக்கும் பணத்தை எந்தப் பாங்கில் கொடுத்து, அந்தப் பணமாக மாற்ற வேண்டும் தெரியுமா? பணம் இல்லாத வறியவராகிய பாங்கில் போட்டு மாற்ற வேண்டும்” என்கிறார்.

நேர் மாறு

உலகியலும் அருளியலும் சில சமயங்களில் நேர்மாறாகத் தோன்றும். மிக்க ஆடம்பரமாக உடையணிந்து கொண்டிருக்கும் பெரிய பணக்காரனை உலகியலில் மதிக்கிறார்கள். அவன் ஞானியாக மாட்டான். வீதியில் ஓடு ஏந்திக் கோவணம் கட்டிக் கொண்டு போகும் சிலரை ஞானிகள் என்கிறோம். அருளியலில் அவர் களுக்குத்தான் மதிப்புண்டு. இறைவனே கபாலியாகத் தோற்றம் அளிக்கிறான். நம்மிடம் இருக்கும் பணத்தை நாம் பணம் நிறைய இருக்கும் பாங்கில் போடுகிறோம். உலகத்துச் செல்வ நிலை இது. ஆனால் வறிஞர்களாகிய பாங்கில் போடச் சொல்கிறார் அருணகிரியார். இது தலைகீழ்ப் பாடமாகத் தோன்றுகிறது.

போன பாட்டிலே, நம்மிடத்தில் இருக்கும் ஞானமாகிய செல்வத்தைப் பிறர் களவாடிக் கொண்டு போகாமல் இருக்க நமக்கு வேதாகம சித்திர வேலாயுதன் துணையாக வருவான் என்று சொன்னார். நாம் செல்கின்ற இடத்தில் செலாவணி ஆகும் பொருளை நம்மிடம் வைத்திருந்தால் வழியில் நமக்குத் துணையாக வருகிறவனும் அவனே.

இவ்வுலகில் நம்மிடம் இருக்கும் செல்வத்தை எப்படி மாற்ற வேண்டும்?

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி
பகிர்மின்கள்

(வை கூர்மை.) கூர்மையான கதிரை வீசும் வடிவேல் பெருமானை வாழ்த்தி, அவனைத் தொழுது, தர்மம் செய்ய வேண்டும்.

செருக்கு அற

தர்மம் செய்வோருக்குச் செருக்கு உண்டாவதுண்டு. நல்ல காரியங்கள் செய்பவர்கள் கர்வம் அடைவார்கள். தவம் செய்வோருக்கும் அகங்காரம் வந்துவிடுகிறது. மனித வாழ்வில் கடைசியில் நினைவு செத்துப்போகும்; இந்திரியம் செத்துப் போகும்; ஆசை செத்துப் போகும். ஆனால் நான் என்ற உணர்ச்சி கடைசி வரையில் செத்துப் போகாது. எதைச் செய்தாலும், “நான் செய்தேன்” என்ற நினைவு வரும்.

புகழ் ஆசை

நாலு பேர் புகழ வேண்டும் என்பதற்காகச் சிலர் தர்மம் செய்கிறார்கள். அவர் எதிர்பார்த்த புகழ் கிடைத்துவிட்டால் அவருக்கு அந்தத் தர்மத்துக்குரிய பயன் அப்பொழுதே கிடைத்தாகிவிடுகிறது; இனி மறு உலகில் கிடையாது.

நாம் ஒரு கூலியாளுக்கு இரண்டு ரூபாய் முன் பணம் கொடுக்கிறோம். அவன் நாளைக்கு வந்து செய்ய வேண்டிய வேலைக்காகக் கொடுக்கிறோம். அப்படியின்றி அவனிடம் இரண்டு ரூபாயைக் கொடுத்துவிட்டு, அன்றைக்கே வேலையை வாங்கிக் கொண்டுவிட்டால் நாளை வந்து அவன் செய்கின்ற வேலைக்குப் புதுக் கூலி கேட்பான். நேற்றே கொடுத்தேனே என்றால், நேற்றைக்குக் கொடுத்தது நேற்று வாங்கிக் கொண்ட வேலைக்குச் சரியாகப் போய்விட்டது என்பான். இவ்வுலகில் நாம் லட்ச லட்சமாகத் தர்மம் செய்துவிட்டுப் பலபேர் புகழ வேண்டுமென்று நினைத்தால், அந்தத் தர்மத்திற்குரிய விலையாகப் புகழ் கிடைக்கிறது. மறுபடியும் பயன் எப்படி வரும்? ஆகவே, தர்மம் செய்யும் போது நான் செய்கிறேன் என்று நினைத்துச் செய்யக் கூடாது; புகழை எதிர்பார்த்தும் செய்யக் கூடாது.

உலகில் பொருள் பெறுவது எளிது. உயர் குணங்கள் நிரம்பியவனிடத்திலும் பொருள் இருக்கிறது. தவறான காரியங்கள் செய்கின்றவனிடத்திலும் பொருள் இருக்கிறது. ஆகவே பொருளைப் பெறுவது கடினம் அல்ல. ஆனால் அதைக் கொடுப்பது அருமை. கொடுப்பதிலும் தன்னை மறந்து கொடுப்பது மிகமிக அருமை. ஈதலின் நோக்கமே ஆசைகளை அழிப்பதுதான். ஆதலால் புகழாசையை அந்த ஈகை உண்டாக்கக் கூடாது.

பொருளால் அருள்

சிலருக்கு எத்தனை முயன்றும் பொருள் கிடைப்பதில்லை. ஆனால் சிலருக்கு மிகுதியான பொருளைக் கொடுத்திருக்கிறான் இறைவன். எதற்காக?

“இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்” என அப்பர் சுவாமிகள் சொல்கிறார். மக்களுக்கு அருள் புரிவதற்காக இறைவன் அவர்களிடம் மிகுதியான பணத்தைக் கொடுக்கிறான். அந்தப் பணத்தின் மேல் அவர்கள் ஆசை வைக்காமல், அதைக் கொடுத்தவன் இறைவன் என எண்ணி, இரப்பவர்களுக்கு எல்லாம் தம்மிடம் இருப்பதை இல்லையென்று ஒளிக்காது ஈந்தால் அவர்களுக்கு இறைவன் அருளைக் கொடுக்கிறான்.

கரப்பவர் தங்கட் கெல்;லாம்கடுநர கங்கள் வைத்தார்.”

தம்மிடம் பொருள் இருந்தும், இரப்போர்க்குக் கொடுக்காமல், இல்லை எனச் சொல்லி மறைத்து வைத்துக் கொள்கிறவர்களுக்குக் கடுமையான நரகத்தை வைத்திருக்கிறானாம். நம்மிடம் பொருள் மிகுதியாக இருந்தால், இறைவன் அருள் பெற மிகுதியான வாய்ப்பு இருக்கிறது என்று கொள்ள வேண்டும். அருள் வருகின்ற வாய், பொருள் என்ற கார்க்கினால் அடைபட்டிருக்கிறது. புட்டிக்குள் இருக்கும் பொருள் வேண்டுமென்றால் மேலே மூடியிருக்கிற கார்க்கை எடுத்து எறிய வேண்டும். அந்தக் கார்க்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தால், உள்ளே இருக்கிற பொருளை நுகர முடியுமா? அருள் வருகின்ற வாயை அடைத்துக் கொண்டிருக்கும் பொருளை இரப்போர்க்கு எல்லாம் இல்லை யென்னாது கொடுத்தால் ஆண்டவன் அருள் வரும். அந்தப் பொருளைத் தன்னுடையது என்று வைத்துக் கொண்டால் அருள் வராது.

அருள் பாலிக்க வேண்டும் என்ற பெருங்கருணையுடன் இறைவன் சிலரிடம் மிகுதியான பொருளைக் கொடுத்திருக்கிறான்.”எந்தக் குழந்தை நாம் கொடுத்த பொருளைக் கையாராப் பிறருக்கு எடுத்துக் கொடுக்கிறது?” என்று அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அக்குழந்தைக்கு அருளை வழங்குகிறான்.

அருளைப் பெறுவதற்குத் துணையான பொருளை நம்மிடம் கொடுத்திருக்கிறான் என்று உணர்ந்தால் அவனை வாழ்த்த வேண்டாமா? வேறு உலகத்திலே பயன்படுகிற நாணயமாக மாற்றுவதற்கு உரிய பொருளையும் நம்மிடம் கொடுத்து, பயணம் புறப் பட்ட பின்பு, ‘நானும் உன்னுடன் துணையாக வருகிறேன்’ என்று வேலைப் பிடித்துக் கொண்டு நிற்கும் அவனை வாழ்த்துவது நம் கடமை. ஆகையால், வையிற் கதிர்வடி வேலானை வாழ்த்தி வறிஞர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அருணகிரிப் பெருமான் சொல்கிறார்.

நாலு பேர் காணக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கர்வத்துக்கு அறிகுறி. ஆயிரம் ஆயிரம் கோயில்களை இந்நாட்டில் எழுப்பியிருக்கிறார்களே, அவற்றை எல்லாம் எழுப்பியவர் யார் என்று நமக்குத் தெரியுமா? ஆண்டவன் பெயரை வெளிப்படுத்தி, தம் பெயரை மறைத்துக் கொண்டு விட்டார்கள் அவர்கள். காரணம் என்ன? “நான் செய்தேன்” என்ற நினைப்பு அற்று, எல்லாம் இறைவன் திருவருளால் நிகழ்க்கின்றன என்ற எண்ணத் தில் தம்மை மறந்து தர்மம் செய்த பெரியவர்கள் அவர்கள்.

நான்கு குற்றம்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்

என்றார் வள்ளுவர். ‘அவன் தர்மம் பண்ணிப் புகழ் பெறுகிறானே; நாம் குறைந்து விட்டோமா? அவனுக்கு மேல் கொடுக்க வேண்டும்” என்று எண்ணிக் கொடுப்பது பொறாமையின் விளைவு. அது அறம் ஆகாது. “இது செய்தால் எனக்குப் புகழ் கிடைக்கும்; பிறர் நமக்கு உதவி செய்வார்கள்” என்று நினைப்பது அவா. அதுவும் தவறு. எப்போதும் தொந்தரவு பண்ணிக் கொண்டே இருக்கிறா னென்று சிடுசிடுவென்ற முகத்தோடு வீசுவது சினம். ”இதைத் தொலைத்துக் கொண்டு போ” என்பது இன்னாச் சொல். இந்த நான்கும் இல்லாமல் செய்யும் தர்மம் உயர்ந்தது என்று வள்ளுவர் சொல்கிறார்.

இறைவன் திருவருளினால் கொடுக்க வாய்ப்புக் கிடைத் திருக்கிறது” என்ற நினைப்பு இவற்றை அழிக்கும். ‘ஒரு கை கொடுப்பது மற்றொரு கைக்குக்கூடத் தெரியக் கூடாது’ என்பர். கையா கொடுக்கிறது? கையை உடையவன் கொடுக்கிறான்; கை கருவியாக நின்று கொடுக்கிறது. நாம் கொடுக்கிறோம் என்று கை நினைப்பது இல்லை. அது போல நம்மைக் கருவியாகக் கொண்டு இறைவன் கொடுக்கிறான் என்று உணரவேண்டும். நாம் நம் விருப்பப்படி கொடுக்கிறோம் என்ற எண்ணம் தக்க தன்று. நினைத்தபடி செய்யக் கூடிய ஆற்றல் நம்மிடம் இருக்குமானால் எத்தனையோ அரிய செயல்களைச் செய்வோம். அவ் வாற்றல் நம்மிடம் இல்லை. அப்படி இருக்க, நாம் கொடுக்கிறோம் என ஏன் நினைக்க வேண்டும்? ஆண்டவனது சித்தப்படி கொடுப்பதற்கு மனம் முந்துகிறது; கை கொடுக்கிறது என்றே எண்ண வேண்டும்.

கொடுக்கும்போது அன்புடன் கொடுக்க வேண்டும். இறைவனிடத்தில் அன்பு வேண்டும்; இரப்பவனிடத்திலும் அன்பு வேண்டும். நாம் கருவியாக இருந்து கொடுக்கிறோம் என்று நினைந்து கொடுக்க வேண்டும். “வையிற் கதிர் வடி வேலானை வாழ்த்திக் கொடு” என்று அருணகிரியார் சொல்கிறார்.

யாருக்கு?

யாருக்குக் கொடுக்க வேண்டும்? “வறிஞர்க்கு என்றும் கொடுங்கள்” என்கிறார். யார் வறுமை உடையவர்களோ அவர்களுக்குக் கொடுப்பது கொடை.

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறிஎதிர்ப்பை நீர் துடைத்து”

என்கிறார் வள்ளுவர். ‘வறியார்க்குக் கொடுப்பதே கொடை. மற்றவர்களுக்குக் கொடுப்பது, பின்னாலே நமக்கு வேறு வகையில் உதவி அவராலே கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொடுப்பதே ஆகும்’ என்பது அவர் கருத்து.

நடைமுறைக்கு ஏற்ற உபதேசம்

“நான் எப்படிக் கொடுக்க முடியும்? எனக்கு என்ன சக்தி இருக்கிறது?” என்று சிலருக்குச் சந்தேகம் வரும். சிலர் பிச்சைக் காரர்கள் தம் வீட்டுக்கு வந்தால், “என்னிடம் பிச்சை கேட்க வந்தாயா? நீ வெளியில் வந்துவிட்ட பிச்சைக்காரன்; நான் உள்ளே இருக்கிற பிச்சைக்காரன்” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ”நமக்கு இருந்தால்தானே பிறருக்குக் கொடுக்க முடியும்?” என்று கேட்பவர் பலர். அருணகிரியார் இது தெரிந்து சொல்கிறார்:

வையிற் கதிர்வடி வேலோனை
வாழ்த்தி வறிஞர்க்குஎன்றும்
நொய்யிற் பிளவள வேனும்
பகிர்மின்கள்

“நீ இரண்டு வேளை சாப்பிடுகிறாய் அல்லவா?”

“இல்லை; ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன்.”

”சரி; அந்த ஒரு வேளையாவது அரிசிச் சோறு சாப்பிடுகிறாய் அல்லவா?”

“இல்லையே! அந்த ஒரு வேளையும் கஞ்சிதானே சாப்பிடுகிறேன்?”

”சரி, நீ கஞ்சிக்கு நொய் போடுகிறாய் அல்லவா? அந்த நொய்யிலும் உடைந்த நொய் இருக்கிறது. நீ நொய்யைச் சாப்பிடு. நொய்யிலும் உடைந்த குறுநொய் இருக்கிறதே, அதையாவது பிறருக்குக் கொடுக்கலாமே” என்கிறார்.

ஓர் அரிசியில் உடைந்தது நொய். அதில் குறைந்தது குறு நொய். அதைக் குறுணை என்று இப்பொழுது சொல்கிறோம். பெரிய விருந்தாக வைத்தால் தான் தர்மம் என்று ஆகாது. “நீ விருந்து போடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சோறு சாப்பிட்டால் அதில் ஒரு பகுதியைத் தர்மமாகக் கொடுக்கலாம். அரிசியாகவே கொடுக்க வேண்டு மென்பதில்லை. நொய் கூடக் கொடுக்க முடியாது என்றால் அதிலும் உடைந்த குறுநொய் இருக்கிறது. அதைக் கொடுக்கக் கூடாதா?” என்கிறார்.

குறிப்பு

வறிஞர்க்கு என்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள்.

”நொய்யிற் பிளவள வேனும்” என்று உம் போட்டுச் சொல்வதன் பொருள் என்ன? நொய்யில் பிளவுதான் கொடுக்க வேண்டுமென்பது இல்லை.

ஒரு பணக்காரனிடம் ஏழைப் பிள்ளை ஒருவன் வந்து, “”ஐயா, நான் படிப்பதற்கு மிகவும் துன்பப்படுகிறேன். ஒரு புத்தகம் வாங்கிக் கொடுங்கள்” என்று சொன்னால் ஒரே ஒரு புத்தகம் வாங்கிக் கொடுங்கள் என்று பொருள் ஏற்படும். அப்படி இல்லாமல், “ஒரு புத்தகமாவது வாங்கிக் கொடுங்கள்” என்றால் என்ன பொருள், “எல்லாப் புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்தால் நல்லது” என்ற குறிப்பு அதில் தோன்றுகிறது. அதைப் போல், “நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள்” என்றால், “உங்களிடம் இருப்பது எல்லாவற்றையும் கொடுத்தாலும் கொடுக்கலாம். அது நல்லது” என்ற குறிப்புத் தோன்றுகிறது. பிளவளவு கடைசிப் பட்சம்; உயர்ந்த பட்சத்துக்கு அளவு இல்லை.

யாரோ ஒரு பெரிய பணக்காரக் கிறிஸ்துவரிடம் ஒரு பிச்சைக்காரன் வந்தான். அவனுக்கு அந்தப் பணக்காரன் ஒரு தம்படி கொடுத்தான். அந்தப் பிச்சைக்காரன், “நீயும் நானும் சகோதரர்கள் என்று கர்த்தர் சொல்கிறார். உன்னுடைய சொத்தில் பாதிக்கு உரிமை உடைய எனக்கு ஒரு தம்படி போடுகிறாயே?” என்று கேட்டானாம். அதற்கு அந்தப் பணக்காரன், “ஆம்; அவர் சொன்னது உண்மை. அவர் சொன்னதை எண்ணி நான் என்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் பிரித்து எல்லாக் கிறிஸ்துவர்களுக்கும் கொடுப்பதானால் உனக்கு இந்த ஒரு தம்படி கூட வராது. ஆகவே அந்தத் தம்படியையும் கொடுத்துவிட்டுப் போ அப்பா’ என்றாராம். பிச்சைக்காரன் நடைமுறையில் நடக்காததைக் கேட்டான். அருணகிரிநாதர் அப்படிச் சொல்லவில்லை.

“நீங்கள் சோறு சாப்பிடுகிறீர்கள்; அதைக் கொடுங்கள்” என்று சொன்னால் சிலர் மறுக்கலாம். நீங்கள் அரிசி சாப்பிட வில்லையா? அந்த அரிசியைக் கொடுக்க வேண்டாம். அந்த அரிசியில் உடைந்த நொய்யைக் கொடுக்கக் கூடாதா? அதுவும் முடியவில்லை என்றால் அதில் பிளந்த குறுநொய் இருக்கிறது. அதைக் கொடுக்கலாம்” என்று சொன்னால், ‘நிச்சயம் தரலாம்’ என்று தோன்றும். இப்படி வாழ்க்கையில் நடைமுறையில் பயன் படுகிற உபதேசத்தைச் சொல்கிறார் அருணகிரியார்.

யாருக்குக் கொடுக்க வேண்டும்? வறிஞருக்கு. எப்பொழுது கொடுக்க வேண்டும்? எல்லாக் காலத்தும்; என்றும்.

காரணம்

ஏன் கொடுக்க வேண்டும்?

நுங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா
உடம்பின் வெறு நிழல்போல்
கையில் பொருளும் உதவாது
காணும் கடைவழிக்கே.

“நீங்கள் இவ்வுலகை விட்டு, வேறு உலகத்திற்குக் கடைசி யாகச் செய்யப் போகின்ற பிரயாணத்தில் உங்களிடம் இருக்கும் பணம் பயன்படாது. ஆகவே அந்த உலகத்தில் பயன்படக்கூடிய அருட்செல்வமாக அவற்றை எல்லாம் மாற்றிக் கொள்ள, வறிஞர் களுக்கு இப்பொழுதே கொடுங்கள்” என்கிறார்.

மனம் திருந்த

ஆண்டவன் கோயிலுக்குப் போவதும், தர்மம் செய்வதும் மனத்தைப் பக்குவப்படுத்தத்தான். நான் என்பது அகங்காரம். என்னுடையது என்பது மமகாரம். நான் என்பது உண்டாகிப் பின்பு என்னுடையது என்பது உண்டாகிறது. நான் என்ற ஆணவம் அடங்க வேண்டும். ஆணவம் முதலில் அடங்காது.கப்புக் களைகளை எல்லாம் கழித்துவிட்டு நடுமரத்தை வெட்டுவது போல, எனது என்பதைத் தறித்துப் பின் நான் என்பதைத் தறிக்க வேண்டும். எனது என்பதைத் திடீரென்று மறந்துவிட முடியாது. எனது என்பதைப் பிறரது என்று மாற்ற வேண்டும். “எனது, எனது” என்று சொல்லிப் பழகின மனத்தை, “என்னுடையது அல்ல” என்று மறுத்து நினைக்கச் செய்ய முடியாது. ஆனால் வெகு சுலபமாக, “எல்லாம் இறைவனுடையது” என்று நினைக்கச் செய்யலாம்.

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னையாட்
கொண்ட போதே கொண்டிலையோ?
இன்றோ ரிடையூ றெனக்குண்டோ?
எண்டோள் முக்கண் எம்மானே!
நன்றே செய்வாய், பிழைசெய்வாய்;
நானே இதற்கு நாயகனே?”

என்று மணிவாசகர் சொல்கிறார்.

ஒரு கல்லை எடுத்து ஆற்றில் போட்டால் அது ஆற்றுக்குள் அமிழ்ந்துவிடுகிறது. ஆனால் ஒரு தெப்பக் கட்டையைப் போட்டு அதில் எவ்வளவு பெரிய கல்லை ஏற்றினாலும் தண்ணீரின் மேலே மிதக்கிறது. “நான் இருக்கிறேன்; எல்லாம் என்னுடையது” என்றால் தண்ணீருக்குள் மூழ்கிப் போக வேண்டியதுதான். “என்னுடையது அன்று. எல்லாம் இறைவனுடையவை. இறைவன் சார்பிலே இருக்கிறேன்” என்று நினைக்கிறவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. மிதக்கிற பொருளுக்கு ஆழத்தைப் பற்றி கவலை இல்லை. ஆழ்கின்ற பொருளுக்குத்தான் ஆழத்தைப் பற்றிக் கவலை. “ஓர் அடி ஆழமாக இருந்தால் தப்பலாமே! ஒன்பது அடி ஆழமாக இருந்தால் செத்துப் போவோமே” எனத் தண்ணீருக்குள் தனித்து வீழ்ந்தவன் கவலைப்படுவான். தெப்பக் கட்டையோடு புகுந்தவனுக்கு ஆழ்த்தைப் பற்றி என்ன பயம்?

துன்பமும் இன்பமும்

உலகத்தில் துன்பங்களுக்கு நடுவில் வாழ்கிற மனிதனுக்கு இறைவன் திருவருள் தெப்பமாக இருந்தால் எத்தனை துன்பங்கள் வந்தாலும் கலங்கமாட்டான். துன்பங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகம் மாறிவிடவில்லை. அருளைத் தெப்பமாகப் பெற்றவனும் வேறிடம் போவதில்லை. எந்த ஊரில் எந்த மக்களுக்கு இடையே வசித்து வந்தானோ அதே ஊரில், அதே மக்களுக்கிடையே தான் அவன் வசித்து வருவான். ஆற்றுக்குள் எத்தனை மேடுபள்ளம் இருந்தாலும் கல், முள் இருந்தாலும் ஆற்றின்மேல் தெப்பத்தில் மிதக்கிறவனுக்கு அவற்றைப் பற்றி என்ன கவலை? அவன் ஆற்றின் மேலேதான் இருக்கிறான்?

அதைப் போல உலகமாகிய ஆற்றில், இறைவன் அருளாகிய தெப்பத்தின் மீது ஏறிக்கொண்டவர்களுக்கு, உலகத்தில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் கவலை இல்லை. அவர்கள் உலகத் திலேதான் இருக்கிறார்கள். ஆனால் துன்பம் அடைவதில்லை.

மழை பெய்கிறது. வீதியில் போகிறவர்கள் குடுகுடு என்று ஓடி, மழைக்காக ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆனால் ஒருவன் மாத்திரம் போய்க் கொண்டே இருக்கிறான்; மழையில்தான் போய்க் கொண்டிருக்கிறான். மழை எங்கும் பெய்து கொண்டே இருந்தாலும் அவனளவில் மழை இல்லை போல இருக்கிறது. காரணம்; அவன் கையில் குடை வைத்திருக்கிறான். மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது மழை இல்லாதது போன்ற நிலை அவளைவில் வந்துவிடுகிறது. எம்பெருமானின் திருவருள் நமக்குக் குடையாக இருந்துவிட்டால் உலகில் எத்தனை துன்பம் இருந்தாலும் நம்மள வில் துன்பம் இல்லாத நிலை வந்துவிடும்.

வேறுபாடு இல்லாத நிலை

உலகத்தில் துன்பம் என்றும், இன்பம் என்றும் வேறு பிரித்துப் பகை என்றும் நட்பென்றும் வேற்றுமை கொள்வதற்கு நம் அகங்கார மமகாரமே காரணம். ஞானிக்கு எல்லாரும் நண்பர்கள். உலகத்திலுள்ள குழந்தைகள் எல்லாரும் இறைவன் குழந்தைகள். உலகில் நிகழ்கின்ற எல்லாச் செயல்களும் அவனால் நிகழ்கின் றன. அடிப்பதும், அணைப்பதும் ஒன்றே ஆகும் என்ற ஞானம் அவர்களிடம் இருக்கிறது. கறுப்பு, சிவப்பு, பச்சை என்ற வர்ணங்கள் இருக்கின்றன. எல்லாம் நிறங்களே. முள்ளைப் போலச் சித்திரம் போட்டாலும், பூவைப் போலச் சித்திரம் போட்டாலும் சித்திரங்களே. இரண்டு சித்திரங்களுக்குள்ளும் உயர்வு, தாழ்வு இல்லை. ஆனால் நாம் நம்முடைய அகங்கார மமகாரங்களுடன் தொடர்புபடுத்திப் பார்த்து வர்ணங்களுக்குள்ளும் சித்திரங்களுக்கும் உயர்வு, தாழ்வு கற்பிக்கிறோம். பலாப்பழத்தை விரும்புகிறோம்; பாகற்காயை வெறுக்கிறோம். பாகற்காயைச் சுவைத்துச் சாப்பிடுகிறவனும் இருக்கிறான். பலாப்பழத்தை வெறுக்கிறவனும் இருக்கிறான். பலாப்பழம், பாகற்காய் இரண்டும் ஒன்றுக்கொன்று உயர்வு, தாழ்வு, வேறுபாடு அற்றன. இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தன் அளவில் வேறுபாடாகக் காண்கிறான். அவன் உள்ளத்திலுள்ள வேறுபாடு பொருள்களுக்குள் உயர்வு தாழ்வை நிர்ணயம் செய்கிறது.

அகங்காரம், மமகாரம் அற்ற நிலையில் இறைவன் திருவருளோடு ஒன்றுபட்ட ஒருவனுக்கு உலகம் முழுவதும் நல்லதாக இருக்கும். இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்கிறார். ஒரு பெரியவர் ஒரு நாள் பிரசங்கத்தில், ”உலகத்திலுள்ள எல்லாம் பிரம்மம்” என்று சொன்னாராம். அதை ஒருவன் கேட்டுவிட்டு, “எல்லாம் பிரம்மம்” என்று கூவிக் கொண்டே போனான். போகும் வழியில் ஒரு மதம் பிடித்த யானை வந்தது. அதன்மேல் இருந்த பாகன், “ஐயா, ஐயா ! நகர்ந்து போங்கள்” என்று சொன்னான். “போடா போ, எல்லாம் பிரம்மம்” என்று சொல்லி அவன் போனான். யானை துதிக்கையால் பிடித்து அவனைத் தூக்கி எறிந்து விட்டது. நல்லவேளை, அவன் சாகவில்லை. உடனே உபதேசம் செய்தவரிடம் அவன் சென்று, “எல்லாம் பிரம்மம் எனச் சொன்னீர்களே; அந்த யானை என்னைத் தூக்கி எறிந்துவிட்டதே!” என்றானாம். அதற்கு அவர், ”ஆம், சொன்னேன். யானையைப் பிரம்மம் என்று எண்ணினாய். அதன் பாகனும் பிரம்மந்தானே? அந்தப் பிரம்மம் உன்னை நகர்ந்து போ எனச் சொன்னபோது நீ ஏன் நகரவில்லை?” என்றாராம். அவன் ஞானம் போலி ஞானம்.

உலகம் எங்கும் இறைவன் இருக்கிறான் என்பதை அநுபவப் பொருளாக ஞானிகள் காண்கிறார்கள். சுகமாக இருக்கும் போது நாம் இறைவனை நினைப்பதில்லை. “ஆண்டவன் கோயிலில் இருக்கிறான். தொண்டர்கள் கூட்டத்தில் இருக்கிறான்” என்றெல்லாம் சொல்கிறார்கள். அவன், “நோயுளார் வாய் உளான்” என்கிறார் சம்பந்தர். நோய் என்றால் துன்பம். யார் யார் துன்பம் உடையவர்களோ அவர்கள் வாயில் இருக்கிறானாம். துன்பப் படும்போதுதான் இறைவனை நினைக்கிறோம். இது மனித இயல்பு. எப்போதும் அவனையே நினைப்பது உண்மை அன்பர் இயல்பு.

அகங்காரம், மமகாரம் மாறவேண்டும். அகங்காரம் மாறும் முன்பு எனது என்கிற மமகாரம் ஒழிய வேண்டும். மமகாரத்தை ஒழிக்க எனது எனது என்ற எண்ணத்தை மாற்றி, எல்லாம் அவனது என்று சொல்லவேண்டும். அவனது கருவியாக நான் இங்கே நடமாடிக் கொண்டிருக்கிறேன் என்று எண்ண வேண்டும். நம்மிடம் வரும் வறியவர்களை அவனாகவே எண்ணி, அவன் கொடுத்திருக்கும் பொருளை ஒளிக்காமல் அவனிடமே கொடுக்க வேண்டும்.

கடவுள் வந்தும்

டால்ஸ்டாய் ஒரு கதை எழுதியிருக்கிறார். ஓர் ஊரில் ஒரு சக்கிலியன். அவனுக்கு ஆண்டவனைக் கண்ணால் பார்க்க வேண்டு மென்று ஆசை. பல காலம் அவனது தரிசனத்திற்காகக் காத்துக் கிடந்தான். ஒருநாள் அவன் கனவில், ‘வெள்ளிக்கிழமையன்று நான் வருவனே” என்று ஆண்டவன் சொல்லி மறைந்தான். வெள்ளிக்கிழமை அன்று வழக்கமாகத் தான் செய்யும் வேலைகளை எல்லாம் கட்டி வைத்துவிட்டு ஆண்டவனது வருகைக்காக அந்தச் சக்கிலியன் காத்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு கிழவர் வந்தார். ‘அப்பா, நான் பத்து மைல் தூரம் நடந்து போக வேண்டும். என் செருப்பு அறுந்துவிட்டது. கொஞ்சம் இதைத் தைத்துக் கொடு’ எனக் கேட்டார். “அதெல்லாம் இன்றைக்கு முடியாது; போ போ” எனச் சொல்லி விட்டான் அவன். மணி ஏறிக் கொண்டே போயிற்று. இறைவனைக் காணவில்லை. ஒரு சின்னக் குழந்தை குடு குடுவென ஓடி வந்து மழலைச் சொல்லில், “நான் விளையாடப் போக வேண்டும். இந்தச் செருப்பைக் கொஞ்சம் தைத்துக் கொடு” என்றது. அவன், “இன்று ஒரு வேலையும் செய்ய முடியாது போ” எனச் சொல்லி விரட்டி விட்டான். ஆண்டவன் வருகைக்காக அல்லவா அவன் காத்துக் கொண்டிருக்கிறான்? ஆண்டவன் வரவில்லையே என்ற ஏமாற்றத்தோடு இருந்த அவனிடம் மறுபடியும் ஒரு கிழவி வந்தாள்.”அப்பா,தண்ணீர் வைக்கும் இந்தத் தோல் பை கிழிந்துவிட்டது. இதைத் தைத்துக் கொடு” என்று கேட்டாள். அவன் கோபத்தோடு, “இன்று ஆண்டவன் வரும் நாள். ஒன்றும் செய்ய முடியாது போ” என்று சொல்லிவிட்டான். இரவு மணி பத்தாகிவிட்டது. இறைவன் சொன்னபடி வரவில்லை. சக்கிலியன் துக்கத்தோடு, “ஆண்டவனே, நீ இன்றைக்கு வருவதாகச் சொன்னாயே! வரவில்லையே! என்று நைந்து வருந்தியபடியே படுத்தான். கனவில் இறைவன், “அப்பா, நான் மூன்று தடவை வந்தேன். ஏழைக் கிழவனாக வந்தேன். குழந்தையாக வந்தேன். கிழவியாக வந்தேன். நீதானே என்னைப் போ போ என்று மூன்று தடவையும் விரட்டினாய்?” என்றானாம்.அப்பொழுதுதான் அவனுக்கு ஞானம் பிறந்தது.

ஏழையாக வருவான்

எம்பெருமான் ஏழையாக வருவான். இறைவன் அருளை நமக்கு வாங்கிக் கொடுக்க வருகின்ற பிரதிநிதிகள் ஏழைகள் என்று நினைத்தார்கள், நம் நாட்டுப் பெரியோர்கள். நம்மிடம் இறைவன் கொடுத்து வைத்திருக்கிற பொருளை வாங்கிப் போக யார் வருவார்கள் என்று காத்துக் கிடந்தார்கள்.

தன்னிடம் உள்ள பொருளை இறைவனுடையது என்று எண்ணி ஏழைகளுக்குக் கொடுப்பது அகங்காரம், மமகாரம் இரண்டையும் ஒழிப்பதற்கு வழி. பற்றையும் ஆசையையும் போக்கத் தியாகமே மாற்று. நம்மிடம் உள்ள பொருளை நம்முடையது அல்ல என்று நினைக்கலாம். அப்போது யாருடையது என்ற கேள்வி வரும். அதற்கு இடமே இல்லாமல் இறைவனுடையது என்று எண்ணி, இதை அவன் நமக்குக் கொடுத்திக்கிறான் என நினைக்க வேண்டும். ஆகவேதான் அருணகிரியார்,”வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும் கொடுப்பாயாக” என்றார்.

உதவாத பொருள்

அப்படி ஏன் கொடுக்க வேண்டும்? கடைசியாகப் போக வேண்டிய கடை வழிக்குப் பயன்படும் பொருட்டு. ”இவ்வுலகில் என்னிடம் இருக்கும் செல்வம் வேறு யாரிடமும் இல்லை. இத்தனை பணம் சேகரித்து வைத்திருக்கிறேனே, இவை யாவும் பயன்படவா?” என்றால், ‘இந்தப் பணம் பயன்படாது அப்பா. உன்னுடைய கைப்பொருள்களில் எதுவும் உனக்கு உதவாது. இவையேனும் உன் கை கால்களால் ஓடி ஆடிச் சம்பாதித்தவை. ஆனால் உன் உயிரோடு ஒட்டியே பிறந்த உடம்பு இருக்கிறதே, அது உனக்கு உதவுகிறதா? நல்ல வெயிலில் போக முடியாமல், புழுதிச் சூட்டைத் தாங்க முடியாமல், தவிக்கிறாயே. அப்போது உன்னுடைய நிழலில் நீயே கொஞ்சம் தங்கி இளைப்பாற முடியுமா? அல்லது உன் நிழலில் வேறு யாராவது தான் தங்க முடியுமா? உன் உடம்பின் நிழல் எப்படி உனக்கே பயன்படாதோ அதுபோலவே உன் கைப்பொருளும் அந்தக் கடை வழிக்குப் பயன்படாது” என்கிறார்.

வெய்யிற்கு ஒதுங்க உதவா
உடம்பின் வெறுநிழல்போல் கையில்
பொருளும் உதவாது
காணும் கடைவழிக்கே.

“உங்களிடம் இருக்கும் பொருளை வறிஞருக்குக் கொடுங்கள். அவ்வுலகில் பயன்படுகிற இறைவன் அருளாகக் கிடைக்கும். போகிற வழியில் நமக்குத் துணையாக இருக்கிற வடிவேலனை வாழ்த்திக் கொடுங்கள்.அவன் கையில் இருக்கிற வேல் கூர்மையானது ; ஒளியை உடையது. இருட்டில் போகும்போது அது ஒளி கொடுக்கும். பகை வரும்போது அதன் கூர்மை உங்களைக் காப்பாற்றும். உங்களிடம் இருக்கும் பொருளை வறிஞருக்கு என்றும் கொடுத்து, கடை வழிக்குப் பயன்படுகிற அருளாக மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் படைத்த உடம்பே உங்களுக்கு உதவாத போது உங்கள் கையில் படைத்த தனமா உதவும்? உதாவது என்கிறார் இந்தப் பாட்டில்.

வையிற் கதிர்வடி வேலோனை
வாழ்த்தி வறிஞர்க்குஎன்றும்
நொய்யிற் பிளவள வேனும்
பகிர்மின்கள்; நுங்கட்குஇங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா
உடம்பின் வெறுநிழல்போல்
கையிற் பொருளும் உதவாது
காணும் கடைவழிக்கே.

[கூர்மையையும்,ஒளியையும் உடைய அழகையுடைய வேலாயுதக் கடவுளை வாழ்த்தி, பொருள் இல்லாத வறுமையை உடையவர்களுக்கு இள்ள காலம் என்னாது எந்த நாளிலும், நீங்கள் உண்பது நொய்யுணவாக இருந்தால் அப்போது நொய்யிலும் பிளவளவாவது பகிர்ந்து கொடுங்கள். அப்படிக் கொடுக்காமல் பாதுகாத்து வைத்திருந்தால், உங்களுக்கு இங்கே வெயிலுக்கு ஒதுங்கவும் உதவாத உடம்பின் பயனற்ற நிழலைப் போலக் கையில் உள்ள பொருளும் இறுதியில் செல்லும் வழிக்கு உதவாது.

நொய்யுணவாக உண்பவரானால் அதிற் பிளவாகிய குறு நொய் யுணவைத் தர்மம் செய்யுங்கள் என்பது பொருள். ஒரு நொய்யில் பாதி எடுத்து வைத்து, “இந்தாருங்கள்'” என்று சொல்வது அவர் கருத்தன்று.

வை – கூர்மை. வடி – அழகு. இங்ஙன் – இங்கே.வெறு நிழல் பயன்படாத நிழல்! ]

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *