
வாழ்க்கைக் கூத்து
கி. வா. ஜகந்நாதன்
அருளும் பொருளும்
உடம்பு இருந்தும் இல்லாது போன்ற நிலையை, கருவி கரணங்கள் கழன்று உடம்பின் வாசனை எல்லாம் போய்ப் புளியம் பழம் ஓட்டோடு ஒட்டாமல் இருப்பது போன்ற அநுபவ நிலையை, அருணகிரிநாதர் முன் பாட்டில் சொன்னார். ”இறந்தே விட்டது இவ்வுடம்பே” என்று முடித்த அவருக்கு, உடம்பை விட்டு இறந்தே போகின்ற மக்களைப் பற்றிய நினைப்பு வந்தது. வந்தவுடன் இரக்கம் பிறந்தது.
கோபமும் இரக்கமும்
உடம்பை விட்டுச் செல்ல வேண்டிய மக்கள், உடம்பு இருக்கும் பொழுதே, நிச்சயமாக உயிர் உடம்பை விட்டுப் போகப் போகிற தென்று உணர்ந்து, அதனிடம் உள்ள பற்றை அகற்றிவிட்டால் ஒருவிதமான துன்பமும் இல்லை. ரெயில் வருகிறதென்று தெரிந்தவுடனே மூட்டை முடிச்சுக்களை எல்லாம் ஆயத்தமாக எடுத்து வைத்துக் கொண்டால் வந்தவுடன் ஏறிக் கொண்டுவிடலாம். வண்டி வந்த பிறகு மூட்டை முடிச்சைக் கட்ட ஆரம்பித்தால் வண்டி நகர்ந்துவிடும். உடம்பு இருக்கும் பொழுதே அதனிடம் பற்று இல்லாமல் இருந்தால் பின்னால் துன்பம் இல்லை.
உடம்பினிடம் உள்ள பற்றை விடுவது இருக்கட்டும். உடம்பினால் உழைத்துச் சேமித்து வைத்துள்ள பொருள்களிடம் கொண்டுள்ள பற்றையே விட முடியவில்லையே! இந்த நினைப்பு அருணகிரியாருக்கு வந்தது. சிறிது கோபமும் உண்டாயிற்று. நல்லவர்களுக்குக் கோபம் வந்தால் கல்லால் அடிக்க மாட்டார்கள்; சொல்லால் அடிப்பார்கள். பொருளின் மேல் அழுத்தமான பற்றை உடையவர்களைப் பார்த்து,
மதியிலிகாள்!
என்று அழைக்கிறார். பின்பு இரக்கம் வருகிறது. ”பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு வாழத் தெரியாமல் இருக்கிறீர்களே!” என்று இரக்கப்படுகிறார்.
வாழத் தெரிந்தவர்கள்
உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார், வாழத் தெரிந்தவர்கள் யார் என்று கேட்டால், பெரும்பாலான மக்கள் என்ன விடை சொல்வார்கள்? யார் பணம் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லையோ அவர்களே வாழத் தெரியாதவர்கள் என்றும், பணம் உடையவர்களே வாழத் தெரிந்தவர்கள் என்றும் சொல்வர். அருணகிரிநாதர் அப்படிச் சொல்லவில்லை.
இந்த உலகத்தில் சுகமாக வாழலாம்; பல சௌகரியங்களைப் பெற்று வாழலாம். அத்தகைய வாழ்வுக்குக் கருவியாய் இருப்பது பணம். அதனால்தான் பணம் உடையவனை வாழத் தெரிந்தவன் என்றும், பணம் இல்லாதவனை வாழத் தெரியாதவன் என்றும் உலகத்தார் சொல்கிறார்கள். பணம் உள்ளவன் அந்தப் பணத்தை வாழ்வதற்குரிய கருவியாகக் கொண்டு பொருள்களை வாங்கிப் பயன்படுத்த இயலும்; அப்படிச் செய்வான் என்ற நினைப்பில், பணமுள்ளவன் வாழ்கிறவன் என்கிறார்கள். அப்படி இல்லாமல் பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொண்டு பயன்படுத்தாமல் இருப்பவனைப் பாராட்டுவதில் பொருள் இல்லை. பணத்தை வைத்துக் கொண்டிருந்தும் வாழத் தெரியாதவன் அவன் என்றே சொல்ல வேண்டும்.
ஒருவன் பாங்கில் நிறையப் பணம் வைத்துக் கொண்டிருக்கிறான்.ஒரு நாள் அவனுக்கு ஆயிரம் ரூபாய் உடனே தேவையாய் இருக்கிறது. பாங்கியில் பணம் எடுக்க முடியாது; அன்று ஞாயிற்றுக்கிழமை. அவன் ஓடிப் போய்ப் பக்கத்து வீட்டுக்காரனிடம் ஆயிர ரூபாய் கடன் வாங்கி வர வேண்டிய அவசியம் ஏற்படு கிறது. பணம் இருந்தும் சமயத்துக்குப் பயன்படாதபோது அவன் படுகிற பாடு அவன் உள்ளத்துக்குத் தெரியும். அந்த ஒரு நாள் அவன் பிறரை நம்பி வாழ்பவன் ஆய்விடுகிறான். வாழ்நாள் முழுவதும் பணத்தைப் பயன்படுத்தாமல் வாழ்கிறவர்களைப் பற்றி என்ன சொல்வது? அவர்களை எண்ணி இரங்குகிறார் அருணகிரியார்
கோழிக் கொடியன் அடிபணி யாமல்
குவலயத்தே
வாழக் கருதும் மதியிலி காள்!உங்கள்
வல்வினைநோய்
ஊழிற் பெருவலி உண்ணாட் டாது,உங்கள்
அத்தம் எல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வரு மோநும்
அடிப்பிறகே?
வாழ்வதற்குப் பொருள் அவசியம் என்று உலகம் சொல்கிறது. அருணகிரிநாதரோ அருள் அவசியம் என்று சொல்கிறார். கோழிக் கொடியனுடைய அடியைப் பணிந்து அருள் பெற்றால் இந்தக் குவலயத்தில் வாழலாம். அப்படி வாழத் தெரிந்து கொள்ளாத வர்கள் மதியிலிகள் என்பது அவர் கருத்து.
கோழிக் கொடியன் நினைவு
நம்முடைய வாழ்நாள் பல ஆண்டுகளை உடையது. ஒவ்வோர் ஆண்டிலும் மாதங்கள் உண்டு. மாதம் பல நாட்களால் ஆனது. ஒவ்வொரு நாளின் ஆரம்பத்தையும் காலை என்று சொல்கின்றோம். நாம் தூங்கி விழித்தவுடன் நமக்கு நாள் தொடங்குகிறது. நமக்கு விழிப்பை ஊட்டவும் நாள் ஆரம்பமாயிற்றென்று அறிவிக்கவும் கோழி கூவுகிறது. வாழ்நாளில் பரீட்சைக்குப் படிக்கிற குழந்தை களுக்கு ஒவ்வொரு நாளும் அலாரம் அடிப்பதிலிருந்து தொடங்குவது போல, பழங்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு ஒவ்வொரு நாளும் கோழி கூவுதலிலிருந்து தொடங்கிற்று. சூரியன் தன் பொற் கிரணங்களைப் பரப்பிக் கொண்டு வான வீதியிலே எழுந்து வரப் போகிறான் என்பதை நினைவுறுத்தக் கோழி கூவுகிறது. அதைக் கேட்டவுடனே நாம் எழுந்து செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்குகிறோம்.
மணி பார்க்கிறவன் கடியாரத்தை மறக்கலாமா? மணி பார்க்கும்போது கடியாரத்தையும் பார்த்து அதற்கு எப்போது சாவி கொடுக்க வேண்டுமென்பதை நினைப்பது முறை. அப்படியே காலையில் கூவி எழுப்பும் அந்தக் கோழியை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்பை மேலும் வளரவிட்டுத் தொடர்ந்து, கோழியைக் கையில் கொடியாக ஏந்திய ஆண்ட வனை நினைக்க வேண்டும். வாழ்வில் ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது முருகனை நினைப்பதற்கு வாய்ப்பாக அல்லவா கோழி கூவுகிறது?
நாமோ கோழியின் குரலைக் கேட்டுத் தினமும் எழுந்திருக் கிறோம். ஆனால் அந்தக் குரலையுடைய கோழியையும் நினைப்பதில்லை; அதைப் பிடித்த ஆண்டவனையும் நினைப்பதில்லை. கோயிலுக்குச் சென்று அங்குள்ள கொடி மரத்தில் இருக்கும் கோழியைப் பார்த்துக் கும்பிடா விட்டாலும், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கோழி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தன்னை நினைப்பூட்டுகிறது; முருகனையும் நினைப்பூட்டுகிறது. எவ்வளவு எளிதில் முருகனுடைய நினைப்பை உண்டாக்கிக் கொள்ளலாம்!
கோழிக் கொடியைப் படைத்த கரம் முருகன் திருக்கரம். அந்தக் கோழிக் கொடி முருகனது திருக்கரத்தின் நினைப்பை உண்டாக்கி, அப்பெருமானின் பாதத்தில் புக வேண்டுமென்ற நினைப்பையும் உண்டாக்கிவிடும். முருகனுடைய அன்பர் களுக்குக் கோழியின் குரல் கேட்ட மாத்திரத்தில் அத்தகைய நினைப்பே வரும்.
அவன் நினைப்பு இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியுமா? உலகத்தில் வாழ வேண்டுமென்று நினைக்கிற மக்கள், பொழுது விடிந்துவிட்டது என்று தெரியாமல் வாழ முடியுமா? விடிந்தது என்பதற்கு அறிகுறி கோழி. விழித்துக் கொள்பவனுக்குக் கோழி யின் குரல் காதில் விழும். நன்றாக விழித்துக் கொள்பவனுக்குக் கோழிக் கொடியன் அடி மனத்தில் தோன்றும்.
கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே வாழக் கருதும் மதியிலி காள்!
அருளா, பொருளா?
“கோழிக் கொடியை உடையவனைப் பணியாமல் இந்த உலகத்தில் வாழ விரும்புகிற புத்தி அற்றவர்களே!” என்று ஆரம்பிக்கிறார் அருணகிரியார். கோழிக் கொடியனைப் பணிவதால் வருவது அருள். வியாபாரம் முதலியவற்றால் வருவது பொருள்.
பொருள் இருந்தால் போதாது.அருள் இல்லாவிட்டால் இவ்வுலகில் வாழ முடியாது.
“அருள் இலார்க்கு அவ்வுலகம் இல்லை,
பொருளிலார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு”
என்று வள்ளுவர் சொல்கிறார். அதனால், “அருள் இந்த உலகத் திற்கு வேண்டியதில்லை. இந்த உலகத்தில் பொருள் இல்லா விட்டால் இன்பம் இல்லை” என்று சிலர் சொல்வர். அப்படிச் சொல்வது முறையன்று. இந்த உலகத்தில் அருளைப் பெறாதவர்களுக்கு அந்த உலகம் இல்லை. இந்த உலகத்தில் வாழும்போதே அருளைச் சேமித்துக் கொள்ள வேண்டும். அது மறுமையில் பயன்படும். இங்கே அருளும் பொருளும் உடையவன் இம்மையும் மறுமையும் நல்வாழ்வு பெறுவான். இதுதான் அக்குறளுக்குப் பொருள். பொருள் மாத்திரம் இருந்தால் வாழ்ந்துவிடலா மென்பதை மறுக்கிறார் அருணகிரிநாதர். அருள் இருந்தால்தான் அந்தப் பொருளினால் நல்ல பயனை அடைந்து வாழ முடியும்.
அருள் தரும் முருகனைப் பணிந்து வாழ வேண்டும். “அவன் திருவடிகளைப் பணியாமல் வாழ்ந்துவிடலாம் என நினைக்கிற மதி அற்றவர்களே, நீங்கள் நினைப்பது முடியாத காரியம்” என்று அறிவுறுத்துகிறார் முனிவர்.
இவ்வுலகிலுள்ள கோழி சூரியன் கிளம்புகிறான் என்பதற்கு அடையாளமாகக் கூவுகிறது. முருகன் திருக்கையில் உள்ள கோழி ஞான சூரியனான ஷண்முகநாதப் பெருமானை நினைத்துக் கூவுகிறது. புறத்தில் இருக்கும் இருள் விடிவது போல, அகத்தில் இருக்கும் இருள் விடிந்தால்தானே உண்மையாக வாழ முடியும்?
வாழ்வு என்பது என்ன?
வாழ்வு என்பது என்ன? ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்ந்தான் என்றால் நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்தான் என்பது பொருள் அல்ல. நல்ல நெறியில் இன்பமாக வாழ்வதே வாழ்வு; நல்லது அல்லாத வழியில் வாழ்நாள் போவது தாழ்வு. அவன் நன்றாக வாழ்ந்தவன் என்பதற்கு நல்ல நெறியிலே சென்று இன்ப வாழ்வு வாழ்ந்தவன் என்பதே பொருள். உயிரும்,உடம்பும் ஒட்டிப் பல காலம் கிடப்பதை நல்ல வாழ்க்கை என்று சொல்ல இயலாது.
பொருளால் வாழ்வு உண்டா?
இப்போது, நன்றாக வாழ்கிறவன் என்று பொருள் நிறைய வைத்துக் கொண்டிருப்பவனைச் சொல்கிறார்கள். பொருளினால் இன்பம் உண்டாவதனால் பொருளுடையோனை இன்பம் உடையவன் என்று சொல்லிவிடுகிறார்கள். பொருள் நிறைய இருப்ப தனால் மட்டும் இன்பம் உண்டாகாது என்பதை அமெரிக்காக் காரர்களைக் கேட்டால் சொல்வார்கள். அவர்களிடம் உள்ள பொருள் உலகத்தில் வேறு யாரிடமும் இல்லை. பொருளை மலைமலையாகக் குவித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தப் பொருள் ஒவ்வொரு கணமும் அவர்களுக்குப் பயத்தைத் தருகிறது. இன்பத்தைத் தரவில்லை. ரஷ்யாக்காரர்களைக் கண்டு ஒவ்வொரு நாளும் அமைதியற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
ஆண்டவன் திருவருளைப் பெறும் முயற்சி எதுவோ அந்த முயற்சி உடையவர்கள்தாம் உண்மையில் அமைதியுடன் வாழ்கிறார்கள்; இன்பமாக வாழ்கிறார்கள்.
இறைவனை நினைக்காமல் வாழ்கின்றவர்கள் தங்களை எவ்வளவு அறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அருண கிரிநாதர் அவர்களை, “மதியிலிகாள்” என்கிறார். நல்ல நெறியில் போகாத குழந்தையைப் பார்த்து வையும் உரிமை தாய்க்கு உண்டு. உலகிலுள்ள மக்கள் எல்லாரும் இன்பம் பயக்கும் நெறியைப் பின்பற்ற வேண்டுமென்ற பரம கருணையுடைய தாயைப் போன்ற அருணகிரியார், அந்நெறியே போகாமல் அல்லாத நெறியில் போவோரைப் பார்த்து, ‘மதியிலிகாள்” என்று அழைப்பது தவறாகுமா?
பொருள் தொடர்ந்து வருமா?
“நாங்கள் என்ன, புத்தியில்லாதவர்களா? எங்களிடம் அளவற்ற பணம் இருக்கிறது. நன்செய், புன்செய் நிலங்கள் நிறைந்திருக் கின்றன. நாங்கள் நினைத்தால் எங்கள் புத்தியைக் கொண்டு இன்னும் பத்தாயிரம் மடங்காகப் பெருக்கிக் கொள்வோம்” என்று சிலர் சொன்னார்கள். அவர்களைப் பார்த்து, ”உங்கள் சொத்துச் சுதந்தரம் எல்லாம் மறுமையிலே பயன்படுமா?” என்று கேட்கிறார்.
உங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி உண்ணஒட்டாது, உங்கள்
அத்தம் எல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வரு
மோநும் அடிப்பிறகே?
“நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அத்தம் – பொருள் – எதற்குப் பயன்படும்? நீங்கள் இறந்த பிறகு உங்களுடன் தொடர்ந்து வருமா? அதைப் புதைத்து வைக்கிறீர்களே! அது இப்போதும் பயன்படவில்லை; இனிமேலும் பயன்படாது” என்கிறார்.
வல்வினை நோய்
மக்கள் பாதுகாத்து வைத்திருக்கும் பொருள் அப்படியே அவர்களுக்குப் பயன்படும் என்று சொல்ல இயலாது. கோடி கோடியாகப் பணத்தைச் சேமித்து வைத்திருக்கிறவன் தன் வீட்டில் ஒரு கவளம் உண்ண முடிவதில்லை; வயிற்று வலி, வயிற்று வலி என்று துடித்துக் கொண்டே இருக்கிறான்.
ஒருவன் அமெரிக்கா போகிறான். அவன் அங்கே தங்கப் போகிற ஆறு மாத காலத்திற்கு வேண்டிய பணத்தை டாலர்களாக மாற்றி அந்நாட்டில் உள்ள பாங்கில் போட்டுவிடுகிறான். அவன் தனி விமானத்தில் போகிறான். அவன் வரப்போகிறான் என்று அமெரிக்க விமான நிலையத்தில் பலர் காத்து நிற்கிறார்கள். இங்கே புறப்பட்டவன் அங்கே போய்ச் சேரவில்லையே! கெய்ரோ போவதற்குள்ளேயே மார்படைக்கிறது; இறந்து போகிறான். அவன் விமானத்தில் ஏறுவதற்கு முன் டாக்டர்கள் அவனைப் பரிசீலனை செய்து பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு இப்படி ஆகும் எனத் தெரியவில்லையே! அது எதனாலே வந்தது தெரியுமா? அதற்குக் காரணம் வல்வினை நோய் என்கிறார் அருணகிரியார்.
“ஒரு வியாதியும் இல்லை. நேற்று வரை ஜுரம், தலைவலி என்று கீழே படுத்தது இல்லை. ஆளைப் பார்த்தால் கல்லுக் குண்டு போல் இருந்தான். அவன் இன்று செத்துப் போய் விட்டானே! நம்ப முடியவில்லையே!” எனச் சொல்கிறோம். நோய் இல்லை; நொடி இல்லை; ஆனால் எப்படி மரணம் அடைந்தான்? அருணகிரியார் சொல்கிறார்; “நீ சொல்கிற நோய் அல்ல அது. நீ சொல்கிறது உடம்புக்கு வருகிற நோய். இது வல்வினை நோய். பொல்லாத ஊழ்வினை நோய்” என்கிறார்.
நல்வினை நலம்
நல்வினை வேறு; வல்வினை வேறு. நல்வினை இருந்தால் என்ன ஆகும்? அவன் பம்பாய் போக விமானத்தில் இடம் பதிவு செய்திருப்பான். அந்தச் சமயம் பார்த்து யாராவது வருவார். அதனால் பயணத்தை ஒத்திப் போட்டு விடுவான். அன்று இரவு அவன் பிரயாணம் செய்ய இருந்த விமானம் போகும்போது நடுவழியில் எரிந்து விழுந்து விட்டது எனப் பத்திரிகையில் மறுநாள் வரும். அவன் அன்று போயிருந்தால் என்ன ஆயிருக்கும்? அவன் நல்வினை அவனுக்கு அரணாக இருந்தது.
ஒருவர் ஆயிரக்கணக்கில் செலவழித்துப் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்தார். கல்யாணத்தன்று பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு வைர அட்டிகை போட்டால்தான் கல்யாணம் நடக்கும் என்று சொன்னார்கள். வைர அட்டிகைக்குப் பெண்ணின் தந்தை என்ன செய்வார்! பெருந்தொகையைச் செலவழித்துக் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார். வைர அட்டிகை இல்லாமல் பிள்ளை வீட்டார் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்தார்கள். அந்தச் சமயம் பார்த்துச் சம்பந்திகளுக்குச் சந்தனம் கொடுக்கக் கையில் பேலாவுடன் அவர் மருமான் வந்தான்.”வாடா பயலே, இங்கே” என்று அவனைக் கூப்பிட்டு அவன் மார்பிலே சந்தனம் பூசி, “நீ உட்காரடா கல்யாணப் பந்தலிலே; என் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்” என்று சொல்லி அவனுக்கு மணம் செய்து வைத்தார். அவன் நல்வினை அப்படி வந்தது. நல்வினை நலம் இப்படியெல்லாம் விளையும்; வல்வினை நோய் நேர்மாறாக விளையும்.
வல்வினையின் விளைவு
உடம்பு குண்டாக, வியாதி இல்லாமல் வாழ்கிறவருக்குத் திடீரென்று உயிர் போகிறது. எத்தனை பணம் சேமித்து வைத் திருந்தால் என்ன? அவை அவருக்குப் பயன்படுகின்றனவா? பணம் பணம் என்று அதைச் சேமிக்க அவர் என்ன பாடுபட்டார்! வீட்டிற்குள் அவற்றைப் புதைத்து வைத்துப் பூதம் போல யாரும் எடுக்காமல் இருக்க வேண்டுமே என்று காவல் காத்தார். அது அவருக்காவது பயன்பட்டதா? இல்லை. அவர் உயிரைக் கொண்டு போக எந்த வியாதி வந்தது? அதுதான் வல்வினை நோய்.
தலைவிதியாகிய ஊழில் பெரிய வலிமையுடைய பகுதி அது. ஊழிற் பெருவலியாகிய பொல்லாத வல்வினையென்னும் நோய் வாழ்வில் புகுந்து துன்பத்தை உண்டாக்குகிறது. ஊழுக்கு ஏற்பப் போகம் தருகிறவன் ஆண்டவன். அது அவன் சக்தியால் இயங்குகிறது தவிர நம் சக்தியால் அல்ல. இறைவன் அருளாணை நல்வினை, பொல்லாத வினை ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டு இயங்குகிறது. மின்சார சக்தியானது பல்பை இடமாகக் கொண்டால் ஒளி வீசுகிறது. ரெப்ரிஜிரேட் ரோடு சேர்ந்து இயங்கும் போது தண்மை அளிக்கிறது. அது தண்மைதான் அளிக்கும் எனச் சொல்ல முடியுமா? ஹீட்டரோடு சேரும்போது வெப்பத்தை அளிக்கிறது. ஆகவே மின்சாரம் வெப்பத்தைத்தான் தரும், தண்மையைத்தான் தரும், ஒளியைத் தான் தரும், ஒலியைத் தான் தரும் எனச் சொல்லமுடியுமா? எல்லாவற்றையும் அது தருகிறது. எதனோடு இணைக்கப் படுகிறதோ அதற்கு ஏற்றபடி விளைவு உண்டாகிறது. இவை எல்லாவற்றையும் அளிக்கும் மின்சார சக்தி ஒன்றுதான். ஆண்டவன் அருளாணையும் அத்தகையதுதான். பாவமாகிய வல்வினை உள்ளவனுக்கு அவன் அருளாணையால் துன்பம் விளைகிறது. புண்ணியம் அவனது ஆணை யோடு சேரும்போது இன்பம் விளைகிறது.
ஊழின் வகை
ஊழ், ஆகூழ் என்றும் இழவூழ் என்றும் இரண்டு பிரிவாக நிற்கிறது. புண்ணியப் பயனால் இன்பத்தைத் தரக் காரணமாக திருப்பது ஆகூழ்; நல்ல ஊழ். அது நல்வினை விளைவாகிய நலம். பாவத்தின் பயனாகத் துன்பத்தைத் தருவது இழவூழ். அது பொல்லாத ஊழ். அது வல்வினையின் விளைவாகிய நோய். ”ஊழிற் பெருவலி யாவுள’ என்று வள்ளுவர் சொல்கிறார். அருணகிரியாரும், ”ஊழிற் பெருவலி” என்கிறார்.
நல்வினை நலமும் வல்வினை நோயும் சேர்ந்ததே ஊழ் என்றால், வல்வினை நோயையே பெருவலி என்று சொல்வது ஏன்? அதுதான் பெரும்பான்மையானது. “ஆண்டவன் நமக்குத் துன்பத்தைக் கொடுக்கிறான். மற்றவருக்கு இன்பத்தைக் கொடுக்கிறான். இப்படிப் பட்சபாதமாக அவன் நடக்கிறானே” என்று சொல்லக்கூடாது. அவனுடைய சக்தி எல்லோருக்கும் பொதுவாகவே இயங்குகிறது. ஆடிக் காற்று அடித்தால் ஆலம்பழுப்பு உதிர்ந்து பறக்கிறது. கொந்தளிக்கும் கடல் அலைகளை வாரி வாரி வீசுகிறது. இலவம் பஞ்சு பறக்கிறது. மலையோ அசையாமல் நிற்கிறது. காற்றின் வேகம் பொதுவானது. அதைத் தாங்கும் சக்தியுள்ள பொருள்கள் நிலையாக இருக்கின்றன. மற்றவை பறக்கின்றன. பறப்பதும், நிலையாக இருப்பதும் அந்த அந்தப் பொருள்களைச் சார்ந்தவையே தவிரக் காற்றுப் பாரபட்சமுடையது எனச் சொல்லலாமா? அப்படியே இறைவனுடைய அருட் சக்தி எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறது. அவரவர்களுடைய பாவ புண்ணியத்திற்கு ஏற்பத் துன்பமும், இன்பமும் விளைகின்றன.
விதியின் சக்தியை நாம் எப்பொழுது உணர்கிறோம்? இன்பம் உண்டாகும் போது யாரும், “இது என் தலைவிதி” என்று சொல்வது இல்லை.”என்ன ஐயா, உங்கள் பையன் பி.ஏ. முதல் வகுப்பில் தேறியிருக்கிறானாமே?” என்றால் யாராவது, “இது என் தலை எழுத்து” என்று சொல்கிறார்களா? “வியாபாரத்தில் உங்களுக்கு நஷ்டம் உண்டாகிவிட்டதாமே?” என்றால், “எல்லாம் என் தலை எழுத்து” என்கிறார். லாபத்தைத் தலையெழுத்து என்று சொல்வ தில்லை. ஆனால் தலையெழுத்து லாபம், நஷ்டம் இரண்டுக்கும் ஆதாரமாக இருக்கிறது. இருந்தாலும் ஊழின் விளைவு பெரும் பாலும் தீமையாக இருப்பதனால் வல்வினை நோயே ஊழிற் பெருவலிமையுள்ள பகுதியாகத் தோன்றுகிறது. அந்த வல்வினை நோய் எவ்வளவு பொருள் ஈட்டி வைத்தாலும் அவற்றை நுகர விடுவதில்லை.
உங்கள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி உண்ணஒட்டாது.
கைக்கு எட்டியது
பழம் இருந்தும், அதை எடுத்து எண்ணும் கை இருந்தும், வாய் இருந்தும், வயிறு இருந்தும், பழம் கை வரைக்கும் வருகிறது; அதற்கு மேல் போகாமல் ஊழ் தடுத்து விடுகிறது. “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம். அந்தப் பழமொழி காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை நினைக்கச் செய்கிறது.
புனிதவதி என்ற பெயருடைய அப்பெருமாட்டியார் பிறந்து மொழி பயின்ற போதிலிருந்தே சிவபெருமானத் தவிர வேறு யாரையும் நினைக்காதவர். ஆண்டவனிடம் இடையறாத பக்தி இளமைப் பருவத்திலிருந்தே வளர்ந்தது. அம்மையாருக்கு முறைப் படி திருமணம் ஆயிற்று. பரம தத்தன் என்ற அவருடைய நாயகன் ஒரு நாள் கடையிலிருந்து இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். பிற்பகல் இரண்டு மணிக்கு அவன் கடையிலிருந்து வீட்டிற்குச் சென்று சாப்பிடுவது வழக்கம். தம் நாயகனுக்காக அந்த அம்மையார் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது ஒரு சிவனடியார் மிகவும் பசியான இருக்கிறது என்று வீட்டிற்கு வந்தார். அவருக்கு உணவு படைக்க வேண்டுமென்பது புனிதவதியாரின் எண்ணம். காய்கறிகள் இன்னும் சமைக்கவில்லை. அன்னம் ஒன்றுதான் வடித்து இறக்கி வைத்திருந்தார். சிவனடியாரோ மிக்க பசி என்கிறார். அம்மையார் என்ன செய்வார்? அன்னத்தைப் பரிமாறி ஒரு மாங்கனியையும் படைத்து, அவரை உபசரித்து அனுப்பி விட்டார்.
பிற்பகல் இரண்டு மணிக்கு அவருடைய நாயகன் வீட்டிற்கு வந்தான். அவனுக்கு உணவு படைத்து, மீதியிருந்த ஒரு மாங்கனியையும் கொண்டு வந்து வைத்தார். அந்த மாங்கனியைச் சுவைத்தவன், ”இது மிகவும் நன்றாக இருக்கிறது. இரண்டு பழம் வாங்கி அனுப்பினேனே; மற்றதையும் கொண்டு வந்து போடு” எனச் சொன்னான். புனிதவதியார் மற்றொரு மாங்கனிக்கு எங்கே போவார்? அதைத்தான் சிவனடியாருக்குப் படைத்து விட்டாரே! அதை எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் உள்ளே போனவர், இறைவனை நினைத்துக் கொண்டு அப்படியே நின்று விட்டார். இறைவன் அருள் அப்போது வெளிப்பட்டது. அவர் கையில் ஒரு மாங்கனி விழுந்தது. அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தவராய், அதைக் கொண்டு போய் நாயகனுக்குப் படைத்தார்.
அதைச் சுவைத்துத் தின்றான் அவன். அது தனிச் சுவையாக இருந்தது.”இது நான் அனுப்பிய பழம் அன்று. இதைப் போன்ற சுவையுள்ள பழத்தை நான் இது வரையில் பார்த்ததே இல்லை. இந்தப் பழம் உனக்கு ஏது?” என்று தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான். அம்மையார் நடந்த வரலாற்றையும், அந்தப் பழத்தைக் கொடுத்தவன் இறைவன் என்பதையும் கூறிவிட்டார்.
“நீ சொல்வது உண்மையானால் மற்றொரு மாம்பழத்தை வருவித்துத் தா, பார்ப்போம்” எனக் கூறினான்.
அவர் என்ன செய்வார்? உள்ளம் உருகி இறைவனை வழி பட்டார். பின்னும் ஒரு மாம்பழம் கிடைத்தது. அதைக் கொண்டு வந்து தாம் சொன்னவை யாவும் உண்மை என்று மெய்ப்பித்து, அவன் கையில் கொடுத்தார். கையில் கிடைத்த பழத்தை அவன் புசித்திருந்தால் அவனும் அம்மையாரைப் போல ஞானியாகப் புறப்பட்டிருப்பான். ஆனால் அவன் விதிவிடவில்லை. பழத்தைச் சாப்பிட எடுத்தான். அது மறைந்துவிட்டது. கைக்கு எட்டியது அவன் வாய்க்கு எட்டவில்லை. முதலில் உண்ட பழம் அவனுக்குக் காரைக்கால் அம்மையாரிடம் பக்தியை ஊட்டியது.
இப்படியே தமக்குக் கிடைக்கிற பொருளை அனுபவிக்க மாட்டாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள்! காரணம் என்ன? “உங்கள் வல்வினை நோய் உண்ண ஒட்டாது” என்கிறார் அருண கிரியார். உண்ணுவதாவது அநுபவித்தல். அநுபவிக் காததற்குக் கையில் பொருள் இல்லாதது காரணம் அன்று. கையில் பொருள் இருந்தும் அநுபவிக்கும் வாய்ப்பு இல்லை. தீவினை கையில் எத்தனை பொருள் சேர்த்து வைத்திருந்தாலும் அவற்றை உண்ண ஒட்டாது.
பொன் புளிவிளங்காய் ஆதல்
ஒருவர் நிறையப் பணம் சேமிக்க வேண்டுமென்று நினைத்தார். ஓர் அணா இரண்டு அணாவாகச் சேர்த்து ஒரு தங்கக்கட்டியாக்கினார். அதை தம் குழந்தைகளுக்குக் கூடத் தெரியாமல் ஓர் இடத்தில் ஒளித்து வைத்திருந்தார். அது கடைசிப் பிள்ளைக்குத் தெரிந்தது. அப்பா செத்துப் போன பிறகு அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்ளலாம் என்று அவன் காத்திருந்தான். அவருக்கு நோய் உண்டாகி மிகவும் துன்பப்பட்டார். சாகக் கிடந்த அந்தப் பெரியவருக்கு அப்போது தர்மம் செய்ய வேண்டு மென்று ஓர் எண்ணம் தோன்றியது. ஒளித்து வைத்திருந்த தங்கக் கட்டி நினைவுக்கு வந்தது. அவரால் எழுந்திருக்க முடியவில்லை; பேசவும் முடியவில்லை. கையினால், ‘அங்கே அந்தத் தங்கக் கட்டியிருக்கிறது’ என்று சைகை செய்து காட்டினார். இது மற்றப் பிள்ளைகளுக்குத் தெரிந்துவிடப்போகிறதே என்ற பயம் கடைசிப் பிள்ளைக்கு வந்துவிட்டது. ”ஐயையோ! எங்கள் அப்பாவுக்குப் புளி விளாங்காயின் மேலே பிரியம் அதிகம். அது வேண்டுமென்று கையைக் காட்டுகிறாரே; இப்போது கொடுக்கலாமோ?” என்று வேதனைப்பட்டான் அவன்.
இந்தக் கதை நாலடியாரில் வருகிறது.
“சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் – இறுகிறுகிப்
பின்அறிவாம் என்றிருக்கும் பேதையர்
கைகாட்டும் பொன்னும் புளிவிளங்கா யாம்”
[சிறு காலை இளம் பருவத்தில், செல்வுழி வல்சி போகும் இடத்துக்குரிய உணவு, தோட்கோப்பு – தோட்சுமை.]
தங்கக்கட்டியை மறைத்து வைத்தவருக்கு அது சமயத்தில் பயன்படவில்லை. அவர் வல்வினை நோய் உண்ண வொட்டா மல் தடுத்துவிட்டது. இத்தகைய அநுபவத்திலிருந்தே,
உங்கள் அத்தம் எல்லாம் ஆழப் புதைத்துவைத்
தால்வரு மோநும் அடிப்பிறகே?
என்று கேட்கிறார் அருணகிரியார். “ஆழப் புதைத்து வைக்கின்ற பொருள் எல்லாம் இந்த உலகத்தில் உங்களுக்குப் பயன்படுவதில்லை. வல்வினையாகிய ஊழிற் பெருவலி அவற்றை இந்த உலகத்தில் நீங்கள் அநுபவிக்கும்படி விடுவது இல்லையே! இங்கே பயன்படாவிட்டாலும் மறுமையிலாவது வருமா என்றால் அங்கும் வராதே. உம்முடைய அடியைப் பின்பற்றி வருவதாக இருந்தால் எவ்வளவு புதைத்து வைத்தாலும் நல்லதுதான். அப்படி வருமா? நீங்கள் நடைபோடும்போது உங்களோடு உங்கள் நிழல் வருவது போல அவை வருமா? இப்படி அம்முனிவர் கேட்கிறார்.
புதைத்து வைத்தல்
பழங்காலத்தில் பாங்கிகள் இல்லை. திருடர்கள் பயமோ அதிகம். ஆகவே அக்காலத்தில் தாங்கள் சேமிக்கின்ற செல்வத்தைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள்ளேயே எங்கேயாவது குழி தோண்டிப் புதைத்து வைப்பது வழக்கம்.
பாடுபட்டுத் தேடிப் பணத்தை புதைத்து வைப்பது என்பது அக்காலம். புதைத்து வைக்கும் செல்வந்தான் புதையல்.
ஒரு பழைய வீட்டை வாங்குகிறோம். அதை இடித்துக் கட்டும் போது புதையல் கிடைக்கிறது. புதையல் கிடைப்பது அதிருஷ்டம் எனச் சிலர் நினைக்கலாம். அது அதிருஷ்டமா? தன் உழைப்பினால் சேமித்த பொருளை ஒருவன் புதைத்து வைத்தான். அந்தப் பொருள் அவனுக்குப் பயன்படவில்லை.
உழைப்பினால் சேமித்த பொருள் அவனுக்கே பயன்படவில்லை என்றால், உழைப்பு இல்லாமல் நமக்குக் கிடைக்கும் போது நமக்குத் தானா அது பயன்படப் போகிறது?
புதையலைப் பூதம் காக்கும் என்பர். புதைத்த அச்செல்வத்தை பூதம் போலத்தானே அதைப் புதைத்தவன் காத்திருக்கிறான்? அருணகிரிநாதர் இத்தகைய நிகழ்ச்சிகளை அக்காலத்தில் நேரில் பார்த்தவர் ஆகையால் சொல்கிறார். ‘இவ்வுலகத்தில் வாழ்நாளை வீணாக்காமல் வாழ வேண்டும். நல்லதைச் சேமிக்க வேண்டும். இங்கே சேமிப்பவை இரண்டு. ஒன்று அருள். கோழிக் கொடியனுடைய அடியைப் பணிந்தால் அதைச் சேமிக்கலாம். மற்றொன்று பொருள்.
முருகனை மறந்துவிட்டுப் பொருளைச் சேமித்துப் புதைத்து வைத்தால் அது இந்த உலகத்திலும் உதவாது. ஆதலின் அருளைச் சேமிக்க வேண்டும். அருள் கிடைத்தால் பெற்ற பொருளை நாமும் நுகர்ந்து பிறருக்கும் கொடுத்து வாழும் வகை பிறக்கும்’ என்ற எண்ணங்களின் சாரமாக இந்தப் பாட்டை பாடுகிறார்.
கோழிக் கொடியன் அடிபணி
யாமல் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலி
காள்!உங்கள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி உண்ணஒட்
டாது உங்கள் அத்தம் எல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வரு
மோநும் அடிப்பிறகே
[கோழியைக் கொடியாகக் கொண்ட முருகனுடைய திருவடியைப் பணிந்து அவன் அருளைச் சேமிக்காமல் உலகில் நன்றாக வாழ எண்ணும் அறிவில்லாத மக்களே! உங்கள் தீவினை நோய் ஆகிய விதியிலே பெருவலிமை யையுடைய பகுதி நீங்கள் சேமித்த பொருளை உண்ணும்படி உங்களை விடாது.
நீங்கள் உண்ண முடியாமல் இருக்கும் உங்கள் பொருள் எல்லாவற்றையும் நிலத்தில் ஆழமாகப் புதைத்து வைத்தால் அவை நீங்கள் இறந்த பிறகு உங்கள் அடிக்குப் பிறகே உங்களைப் பின்பற்றி வருமா?
வல்வினை – இழவூழ். அது துன்பத்துக்குக் காரணமாதலின் நோய் என்றார். வல்வினையாகிய நோய்; நோயாகிய பெருவலி. அத்தம் அர்த்தம்; பொருள். ஆழ ஆழும்படியாக; மறையும் படியாக. அடிப்பிறகே வருதலாவது, போகும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து வருதல். உங்கள் அத்தமெல்லாம் உண்ண வொட்டாது, அது வருமோ என்று கூட்டிப் பொருள் செய்க.]
இந்தப் பாட்டுக்கு மறுதலையான குறிப்பை ஆராய்ந்தால், கோழிக்கொடியன் அடிபணிந்தால் குவலயத்தே வாழலாம்; சேமிக்கும் பொருளை உண்ணலாம்; புதைத்து வைக்காமல் பிறருக்கும் கொடுக்கலாம். அதன் பயனாக விளையும் புண்ணியம் தொடர்ந்து வரும்’ என்ற பொருள் கிடைக்கும்.
முற்றும்.
★ ★ ★



