வாழ்க்கைக் கூத்து
கி. வா. ஜகந்நாதன்

வாழ்க்கைக் கூத்து

முருகப் பெருமானுடைய பெருமையை அலங்காரமாகச் சொல்லி வருகிறார் அருணகிரியார். எம்பெருமான் மெல்ல மெல்லத் தவழ்ந்து வர, அவன் இடையில் கட்டப்பட்டுள்ள கிண்கிணி ஒலிக்கிறது. அந்த நாதத்தினாலே மேரு மலையும், ஏனைய எட்டுக் கிரிகளும் அசைகின்றன. அதனை முன்னே சொன்னார். அந்தப் பெருமான் சற்று வளர்ந்துவிட்டான். இப்பொழுது எழுந்து உட்கார்ந்து கொண்டான்; உட்கார்ந்து கொண்டு கையைத் தட்டுகிறான்.

குழந்தைப் பருவம்

குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விளையாட்டுச் சிறப்பாக இருக்கும். குழந்தை பிறந்த ஒன்பதாம் நாள் அதற்குக் காப்பு இடுவார்கள்; தெய்வங்கள் இந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமென்று சொல்லி, வேப்பிலைக் காப்பும், தங்கக் காப்பும், வெள்ளிக் காப்பும் இடுவார்கள். அந்தப் பருவத்தைப் பிள்ளைத் தமிழில் வருணிப்பார்கள் புலவர்கள். அதுவே காப்புப் பருவம். அடுத்தபடி தொட்டில் இடுவார்கள். தொட்டில் இட்டுத் தாலாட்டுப் பாடும் பருவத்திற்குத் தாலப் பருவம் என்று பெயர். குழந்தை ‘இங்கு இங்கு’ என்று சொல்லும்; பூமியில் படுத்துக் கொண்டு நீந்தத் தொடங்கும். இந்தப் பருவத்திற்குச் செங்கீரைப் பருவம் என்று பெயர். பின்பு குழந்தை எழுந்து உட்கார்ந்து கொண்டு இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டும். அது சப்பாணிப் பருவம். பாணி என்பது கை. கையோடு கை சேர்த்துத் தட்டுவதனால் அப்பெயர் வந்தது. அடுத்தது முத்தந் தா என்று கேட்கும் முத்தப் பருவம். வா, வா என்று அழைப்பது வருகைப் பருவம். இப்படியே பத்துப் பருவங்கள் உண்டு.

இப்போது அருணகிரியார் சப்பாணிப் பருவத்தைப் பாடுகிறார். முருகன் சப்பாணி கொட்டுகிறதனால் விளையும் விளைவைச் சொல்கிறார். சென்ற பாட்டிலே அவன் இடையிலுள்ள மணி யின் ஓசையை எடுத்துக் காட்டினார். இந்தப் பாட்டிலே அவன் கை ஓசையை எடுத்துக் காட்டுகிறார்.

குழந்தை சற்றே வளர்ந்து உட்காரத் தெரிந்து கொண்ட பிறகே இரண்டு கைகளையும் ஓசை எழும்படி தட்ட இயலும். பிறந்த குழந்தைக்குக் கை விரிவது இல்லை. பற்றிக் கொண்டு இருக்கும். முருகக் குழந்தை சற்று வளர்ந்துவிட்டான். மூடி இருக்கிற கையை விரித்துத் தட்டி, சப்பாணி கொட்டி விளையாடுகிறான்.

பிரார்த்தனை

இந்த விளையாட்டைச் சொல்வதற்கு முன்னே அருண கிரியார் பிரார்த்தனை செய்து கொள்கிறார்; சப்பாணி கொட்டும் குழந்தையைப் பார்த்துத்தான். மற்றக் குழந்தைகள் இரண்டு கைகளினாலே சப்பாணி கொட்டும். அவன் ஆறுமுகமும், பன்னிரண்டு திருக்கரங்களும் உடையவன். ஆகையால் தன்னுடைய பன்னிரண்டு திருக்கரங்களினாலும் சப்பாணி கொட்டி விளையாடுகிறான். அவனைப் பார்த்து வேண்டுகிறார்.

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில்
கொட்பு அடைந்த இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்!

பொம்மலாட்டம்

ஒரு பெரிய மேடை. அதில் திரை விட்டிருக்கிறார்கள். பொம்மலாட்டம் நடக்கிறது. பழங் காலத்திலிருந்து வரும் கலை பொம்மலாட்டம். மேடைகளில் பொம்மைகளே வந்து ஆடும். கையைத் தட்டும். ஆணும் பெண்ணும் கையைக் கோத்துக் கொண்டு நடனம் ஆடும். திரைக்கு முன்னாலே மேடையில் வந்து பொம்மைகள் ஆடும். அந்தப் பொம்மைகள் இயங்குவதற்குக் காரணமாய் இருப்பவன் திரைக்குப் பின்னால் இருப்பான். பொம்மையின் கை, கால், தலை ஆகியவை ஆட வேண்டுமானால் அதை ஆட்டுவிக்கின்றவனுடைய கை, கால், தலை திரைக்குப் பின்னால் ஆடும். பொம்மைகளின் ஆட்டம் அத்தனையும் பின்னால் இருக்கிற மனிதனுடைய ஆட்டத்தை ஒத்தே நிகழும்.

அவன் ஆடாவிட்டால் அந்தப் பொம்மைகள் ஆட மாட்டா. அவன் ஆடும் போது அந்தப் பொம்மைகள் எப்படி ஆடுகின்றன? மிகவும் மெல்லிய கறுப்புக் கயிற்றினால் பின்னால் ஆடுகின்ற மனிதனுக்கும் அந்த பொம்மைகளுக்கும் தொடர்பு இருக்கும். அவன் கையையும் காலையும் ஆட்டும் போது அந்தப் பொம்மையின் கையும் காலும் ஆடும். இந்த இரண்டு பேரையும் இணைக்கும் பொருள் கயிறு. கயிற்றை வடமொழியில் பாசம் என்பார்கள். பின்னால் இருக்கிற ஆளுக்கும், முன்னால் இருக்கிற பொம்மைகளுக்கும் பாசம் ஆகிய கயிறு தொடர்பாக இருப்பதால் அந்த மனிதன் இந்தப் பொம்மைகளை எல்லாம் ஆட்டி வைக்கிறான். பொம்மைகள் ஆடுவதற்கு இரண்டு காரணங்கள். ஒரு காரணம் பின்னால் இருக்கிற மனிதனது ஆட்டம். மற்றொரு காரணம் அவனுக்கும், பொம்மைகளுக்கும் இடையில் தொடர்பாகவுள்ள கயிறு.

கயிறு அறுந்தது

ஒரு கதை இங்கே நினைவுக்கு வருகிறது. நன்றாகப் பாடுகின்ற வித்துவான் ஒருவன் ஓர் அரசனிடம் வந்தான். அரசன் சங்கீதம் என்றால் பலம் எத்தனை விலை என்று கேட்கிறவன். சங்கீத வித்துவான் பாடும்போது தன் அறியாமையைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று அரசன் நினைத்தான். தன் மந்திரியிடம், “அந்தச் சங்கீத வித்துவான் பாடப் போகிறார். அவர் பாடும் போது எங்கே மிக நன்றாக இருக்கிறதோ அங்கே தலையை அசைக்க வேண்டும். எனக்கு விஷயம் தெரியாது. என் தலையோடு சேர்த்து உன் தலையையும் ஒரு கறுப்புக் கயிற்றினால் கட்டிக் கொண்டு திரைக்குப் பின்னால் நீ உட்கார்ந்து கொள். நீ தலை அசைப்பதை அக்கயிற்றினால் நான் அறிந்து கொண்டு, நானும் தலையை அசைக்கிறேன்” என்றான். அப்படியே மந்திரி செய்தான். வித்துவான் பாடும்போது அரசனும் அங்கங்கே தலை அசைத்து வந்தான். ஓர் ராகத்தை வித்துவான் மிக நன்றாகப் பாடும் போது, அந்தச் சுவாரசியத்தில் மந்திரி மிகவும் வேகமாகத் தலையை அசைத்தான். கயிறு அறுந்துவிட்டது. அரசன் வித்துவானைப் பார்த்து, ”கொஞ்சம் இரும். கயிற்றைக் கட்டிக் கொண்டு விடுகிறேன்” எனச் சொல்லிவிட்டான். அங்கே கயிறு அறுந்த பிற்பாடு அவன் நாடகமும் அறுந்துவிட்டது; நடிக்க முடியவில்லை.

அப்படியே, பின்னால் இருக்கிற ஆளுக்கும், முன்னால் உள்ள பொம்மைகளுக்கும் இடையே தொடர்பாக உள்ள கயிறு அறுந்துவிட்டால், எவ்வளவுதான் பின்னால் இருக்கிற ஆள் ஆடினாலும், மேடையிலுள்ள பொம்மைகள் ஆடா. பொம்மைகள் ஆடவேண்டுமானால் கயிறு வேண்டும். ஓர் ஆள் பின்னால் நின்று கொண்டு கயிற்றின் மூலம் மேடையில் உள்ள பல பொம்மைகளை ஆடவைக்கிறான்.

அதற்கு மாறாக அருணகிரியார் இங்கே சொல்கிறார். பின்னால் ஐந்து பேர்கள் சேர்ந்து கொண்டு ஒரு பொம்மையை ஆட்டி வைக்கிறார்களாம். பின்னால் இருந்து ஆட்டுகின்றவர்களோ ஐந்து பேர். ஆடுவது ஒரு பொருள்.

இந்த ஆட்டம் நிகழும் மேடை எங்கே அமைந்திருக்கிறது? உலகம் என்ற மேடையிலே ஆட்டம் நடக்கிறது.

கண்ணியில் சிக்குதல்

மிருகங்களை வேட்டை ஆடுகின்ற வேடர்கள் அவை நடமாடுகின்ற இடங்களில் எல்லாம் வலைகளைப் பரப்பி வைத்திருப்பார்கள். அவற்றில் மிருகங்கள் வந்து சிக்கிக் கொள்ளும். அவ் வண்ணமே இந்த உலகம் முழுவதும் எங்கே போனாலும் அங்கே நெஞ்சம் சிக்கிக் கொள்கிற கண்ணிகள் நிரம்பியிருக்கின்றன. நெஞ்சம் என்ற ஒன்று காலில் கத்தி கட்டிக் கொண்டு போனா லொழியக் கண்ட இடங்களில் எல்லாம் வீழ்ந்து சிக்கிக் கொள்ளும். அந்தக் கத்திக்கு ஞானம் என்று பெயர். பார்ப்பதற்கு நல்ல இடமாக இருக்கிறதே என்று கத்தி இல்லாமல் நெஞ்சம் அந்த இடத்திற்குப் போனால், அங்கே சிக்கிக் கொள்ளும்.

இறைவன் திருக்கோயிலை நாடிப் போனாலும் அங்கேயுள்ள கண்ணிகளில் சிக்கிக் கொள்ளும். அது எப்படி? எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டுக் கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து, மூர்த்திகளைச் சிலர் பிரதிஷ்டை செய் கிறார்கள்; அந்தக் கோயில்களின் கும்பங்களையும், மூர்த்திகளையுமே சிலர் திருடிக் கொண்டு போகலில்லையா? கோயிலுக்கு வந்தவன் கண்ணிகளில் சிக்கிக் கொண்டுதான் இம்மாதிரியான திருட்டுக் காரியங்களைச் செய்கிறான் என்பதை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

அறுபத்து மூவர் விழாவின் போது சிந்தாதிரிப் பேட்டை முருகன் வீதிவலம் வருகின்றான். முழுக்க முழுக்க வைரங்களி னாலேயே அம் முருகனை அலங்கரித்திருப்பார்கள். அதனாலேயே அவனை வைர முருகன் என்று சொல்வது வழக்கம். ஒரே வைரக் கற்களாலான நகைகளாகவே போட்டுக் கொண்டிருப்பான். நம்முடைய நாட்டில் பெண்களுக்கு நகை என்றால் கொஞ்சம் அதிக ஆசை. புன்னகையைவிடப் பொன்னகையின் மேல் ஆசை; அதைவிடக் கல் நகையின் மேல் ஆசை. இறைவனிடத்தில் அன்பு உடையவர்கள், ஞானம் ஆகிய கத்தியைக் கட்டிக் கொண்டிருக்கும் நெஞ்சமுடையவர்கள், அவனைத் தரிசித்து, ”சண்முகநாதரின் திருக்கோலந்தான் எத்தனை அழகு! இந்தக் குமரேசனது இரு தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும், தோளும் கடம்பும் எனக்கு முன்னே சதா தோன்றிக் கொண்டே இருக்கக் கூடாவா?” என நெகிழ்ந்து வேண்டுகிறார்கள். ஆனால் அங்கே வந்த ஒரு பெண் அங்கேயுள்ள கண்ணியில் சிக்கிக் கொள்கிறாள். “எவ்வளவு பெரிய வைரப் பதக்கம் போட்டிருக்கிறது பார்த்தாயா? இது எத்தனை விலை இருக்கும்? நம் ஜமீன்தாரிணி அம்மாள் போட்டிருப்பதைவிடப் பெரியதாக இருக்கிறதே!” என்கிறாள்.

இப்படி இந்த உலகம் முழுவதும் நல்ல இடமோ, பொல்லாத இடமோ எங்கே பார்த்தாலும் இந்தக் கண்ணி பரப்பப்பட்டிருக்கிறது. அதில் சிக்கிக் கொள்ளாமல் நெஞ்சம் தப்பிக் கொள்ள வேண்டுமென்றால் ஞானம் என்ற கத்தி வேண்டும். ஞானம் இருந்தால் கண்ணிகள் அறுபட்டுப் போகும். பெரும்பாலான நெஞ்சங்களுக்கு அது இல்லை. பாசவலைக்குள் சிக்கிக் கொள்கிற ஆற்றல் தான் இருக்கிறது.

அப்படிச் சிக்கிக் கொள்ளும்போது பின்னால் இருக்கிற ஐந்து பேர்வழிகள் அதை ஆட்டத் தொடங்குகிறார்கள். உலகமாகிய பெரிய மேடையில் பாசமாகிற கயிற்றால் நம்மைப் பிடித்துக் கொண்டு ஐவரும் ஆட்டி வைக்கிறார்கள்.

கயிற்றைச் சுற்றி மிக வேகமாக இழுத்துவிட்டால் பம்பரம் மிக வேகமாகச் சுழலுகிறது. அதைப் போல நெஞ்சம் சுழன்று கொண்டே இருக்கிறது. பாசமாகிற கயிற்றினால் சுற்றப்பட்டு ஐந்து பேர்களால் மிக வேகமாகச் சுழலுகிறது.ஓர் இடத்தில் நிற்பதே இல்லை. ஒரே கணத்திற்குள் எத்தனையோ கோடி காதம் சென்று விடுகிறது மனம். சென்று சென்று சுழன்று கொண்டே இருக்கிறது.

மனமும் அநுபவமும்

முன்னலே அநுபவித்த ஒன்றை நினைப்பதற்குத்தான் மனத்துக்கு ஆற்றல் உண்டு. ஐந்து பொறிகளென்னும் வாசல் வழியாக நமக்குப் பல அநுபவங்கள் வருகின்றன. கண்டு, கேட்டு, கண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்பொறிகளால் அநுபவிக்கிறோம். அந்த அநுபவத்தின் வாசனை மனத்தில் ஏறுகிறது. மல்லிகை மலரை எடுத்து மோந்து பார்க்கிறோம். பிறகு ஒரு சமயம், அந்தப் பொருள் கண் முன்பு இல்லாவிட்டாலும் ஒரு மல்லிகை மலரை எடுத்து மோப்பது போன்ற அநுபவத்தை நினைப்பால் மனம் பெறுகிறது. நல்ல ஜிலேபியைச் சாப்பிடுகிறோம். சாப்பிடுவது வாய்தான் என்றாலும், சாப்பிட்ட பிற்பாடு அதை மனம் நினைக்கிறது. வாசனை நுகர்கின்ற நினைவு வேறு; சங்கீதம் கேட்கின்ற நினைவு வேறு. நினைப்பு ஒன்றாக இருந்தாலும் அநுபவ வேறுபாட்டால் ஐந்து விதமான நினைப்புக்கள் அமை கின்றன. ஜிலேபியை வாயில் போட்டுக் கொண்டு சுவைப்பது சுவை; அதைப் பற்றி நினைப்பது நினைவு; அதுவே வாசனை. குழந்தையை அணைக்கிற மாதிரி நினைக்கிறோம். அழகான உருவத்தைப் பார்க்கிற மாதிரி நினைக்கிறோம். இப்படி ஐந்து பொறிகளின் அநுபவமான வாசனைகளும் மனத்தில் படிந்திருக்கும். மனம் ஐந்து பொறிகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை நினைக்க முடியாது. ஐந்து பொறிகளுக்கும் உட்பட்ட அநுபவத்தையே நாம் நினைக்கிறோம். முன்பின் பார்த்திராத மனிதன் ஒருவனைச் சொப்பனத்தில் பார்க்கிறோமே, அது எப்படி? பார்க்காத மனிதனைச் சொப்பனத்தில் பார்த்தேன் என்று சொன்னாலும், மனிதன் என்ற பொருளை நாம் பார்த்துப் பார்த்துப் பழகியிருக் கிறோம் அல்லவா? மனத்தில் இத்தகைய அனுபவம் படலம் படலமாகச் செறிந்திருக்கிறது.

பதிவும் வாசனையும்

அமெரிக்க நாட்டில் குற்றவாளியையும், நோயாளியைப் போலவே கருதி, மருத்துவத்தின் மூலம் அவனது குணத்தை மாற்றலாம் என்று கண்டிருக்கிறார்கள். அவன் குற்றம் செய் வதற்குக் காரணம் அவனது இளம் பருவ முதல் மனத்தில் படிந்த வாசனை என்று உளநூலறிஞர் சொல்கிறார்கள். திடீரென்று குழந்தை கோபுரத்தைப் பார்த்துப் பயந்து கொண்டு அழுகிறது. அதற்குக் காரணம் என்ன? ஏதோ ஒரு காலத்தில் கோபுரத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதன் வாசனை அதன் அடி உள்ளத்தில் இருப்பதனால் தான் பயப்படுகிறது என்கிறார்கள். இளமைக் காலத்தில் பட்ட அநுபவங்களின் வடுக்கள் எல்லாம் வாசனையாக நின்று வயசு ஆக ஆக அதன் பரிணாமமான உணர்ச்சிகளை எழுப்புமாம். இப்படி விஞ்ஞானம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

அப்படி அறிந்தவர்களுக்கும் புலப்படாத பல நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அவர்கள் இந்தப் பிறவியில் இளமைக் காலத்தில் உண்டான அனுபவத்தை ஏடு புரட்டிப் பார்க்கிறார்கள். நம்மவர்கள் ஒரு படி மேலேயே சென்றிருக்கிறார்கள். மனம் என்பது இந்தப் பிறவி அநுபவத்தை மாத்திரம் கொண்டு அமைவது அன்று. பிறவி தோறும் வரும் வாசனை படலம் படலமாக அதன்பால் இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தப் பிறவியில் ஏற்படும் அநுபவங்களின் வாசனை கடப்பைக் கல் போல இருக்கும் என்றால், முந்திய பிறவிகளின் வாசனை வெங்காயத் தோல் போல இருக்கும் என்ற சொல்லலாம். கடப்பைக் கல்லை விஞ்ஞான அறிவினால் பார்த்து விட்டார்கள். அதற்குப் பிறகு மிக நுட்பமாக வெங்காயத் தோல் இருப்பதை மெய்ஞ்ஞான அறிவினால் நம் பெரியோர்கள் பார்த்திருக்கிறார் கள். நம்முடைய மனத்தில் தோற்றுகிறதை நினைவு என்று சொல்கிறோம். நாம் தெரிந்து கொள்ள முடியாதபடி மனத்துக்கு அடியில் இருந்து கொண்டு விளைவுகளை உண்டாக்கும் நினைவுகளை அடிமனப் பதிவுகள் என்று சொல்வார்கள். இந்த இரண்டுக்கும் கீழே ஆழமாகவும், மிக மிக நுட்பமாகவும் உள்ளவைகளை வாசனை என்று சொல்வது சமயநூல் மரபு. இந்த மூன்று நிலைகளில் முதல் நிலையாகிய நினைவை நாம் தெரிந்து கொண்டிருக் கிறோம். இரண்டாவதாகிய அடிமன வடுவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். மூன்றாவதாகிய வாசனையை மெய்ஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

ஒரு வயிற்றில் பிறந்து ஒரே ஆசிரியரிடம் பயிலும் இரண்டு மாணவர்களின் அறிவு வெவ்வேறு விதமான சக்தி உடையனவாக இருப்பதைப் பார்க்கிறோம். இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்தவர் களின் அறிவேனும் ஒரே மாதிரியாக இருக்கிறதா? இல்லை. இதற்குக் காரணம் என்ன? இரண்டு பேரும் ஒரே வயிற்றில் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தாலும், முந்திய பிறப்பில் அவர்களின் உள்ளங்களில் அமைந்த வாசனையினால் அறிவு முதலியன மாறுபாடு அடைகின்றன. மனத்தில் முன்பு ஏற்பட் டிருக்கும் அநுபவங்களின் வடுக்கள் எல்லாம் வாசனையாக இருப்பதனால்தான் வெவ்வேறு வகையில் மனமும் செயல்களும் அமைகின்றன.இந்த மனம் ஆகிய பொம்மையைப் பொறிகளாகிய ஐந்துபேர்கள் பின்னால் இருந்து வெவ்வேறு வகையில் ஆட்டுகிறார்கள். பாசம் என்ற ஒன்றோடு நெஞ்சைச் சேர்த்துக் கட்டி வைத்து ஆட்டுகிறார்கள். வாழ்க்கையே ஐந்துபேர் மனத்தைப் பாசத்தால் ஆட்டும் கூத்தாக அமைகிறது.

ஞானிகளும் பொறிகளும்

உடம்பைப் பெற்ற யாவருக்கும் ஐந்து பொறிகள் உண்டு. பொறிகளை இந்திரியங்கள் என்பர். மெய்ஞ்ஞானிகளுக்கும் அவை உண்டு. அவர்களும் கண்ணால்தான் பார்க்கிறார்கள். காதால் தான் கேட்கிறார்கள். காலால்தான் நடக்கிறார்கள். வாயால்தான் சாப்பிடுகிறார்கள். ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் முதலிய பெரிய ஞானிகளும் அப்படித்தான் இருந்தார்கள். ஞானம் பெற்றவர்கள் என்பதற்காக அவர்கள் காது செவிடாகப் போகவில்லை. கண் குருடாகப் போகவில்லை. உடம்பு கட்டையாகக் கிடக்கவில்லை.

அப்படியாயின் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேற்றுமை? அவர்களுக்கும் நம்மைப் போல ஐந்து பொறிகளும் வேலை செய்கின்றன. ஆனால் மனம் அமைதியாக இருக்கிறது. பின்னே இருக்கிற மனிதன் எப்படி ஆட்டினாலும், வெளியிலுள்ள பொம்மைகள் ஆடவில்லை. ஏன்? இருசாராரையும் இணைத்திருக்கும் கயிறு அறந்துபோய்விட்டது. ஐந்து பொறிகளும் மனத்திற்கும் இடையே உள்ள கயிறாகிய பாசம் அறுபட்டுப் போய்விட்டது; அதனால் மனம் ஆடுவது இல்லை. பார்ப்பதற்கு நாமும், ஞானிகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும், நாம் பாசமாகிற கயிற்றினால் பொறிகளோடு கட்டப்பட்ட மனத்தை உடையவர்கள். அவர்கள் அந்தக் கயிற்றை ஞானமாகிற கத்தியினால் அறுத்து விட்டவர்கள். ஆகவே அவர்கள் இருதயத்தில் இருக்கிற இறைவனோடு எப்போதும் ஒன்றுபட்டு ஞானமயமாக இருக்கிறார்கள். அவர்கள் செய்கிற காரியங்கள் அத்தனையும் ஞானத்தின் விளை வாகவே அமையும். நாமோ பாசமாகிற கயிற்றை அறுக்கும் ஞானம் இல்லாதவர்களாக இருக்கிறோம். நம்மை ஐந்து பொறிகளாகிய பேர்வழிகள் ஆட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கிறோம். அப்படிச் சுழல்வதனால் நமக்கு ஏதாவது இன்பம் உண்டா? இல்லை. துன்பத்தைத் தான் கண்டோம். ஐந்து பொறிகளையும் நமக்கு அடிமையாக்க முடியாமல் நாம் அவற்றுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். நம் மனம் அவற்றுக்கு அடிமைப்பட்டு நம்மையும் தன்னோடு இழுத்தடிக்கிறது. அதனால் விளைவது துன்பம்.

பொறியால் விளையும் துன்பம்

பொறிகளின் வசம் அகப்பட்டுப்படுகின்ற துன்பமே பல ருடைய உயிரை மாய்க்கிறது. விட்டில் பூச்சி எரிந்து கொண்டிருக் கிற விளக்கைக் கண்ணால் பார்க்கிறது. கட்பொறிக்கு அடிமைப்பட்ட அது, அதனைப் பழம் என்று நினைத்துக் கொண்டு போய் அதில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறது. பழமா இல்லையா என்று பார்க்கிற ஆற்றல் இல்லாமையினால் கட்பொறிக்கு அடிமைப்பட்டு உயிரையே விடுகிறது.

அசுணம் என்பது ஒரு பறவை. அதன் காது மிக நுட்பமானது. வீணை வாசித்தால் ஓடி வரும். பறையைக் கேட்டால் இறந்து விடும்.

யாழ் நறையடுத்த அசுணநன் மாச்செவி
பறை அடித்தது போலும்

என்று இந்தச் செய்தியைக் கம்பர் உவமையாக ஆளுகிறார். இந்த அசுணப் பறவையைப் பிடிப்பதற்கு வேடர்கள் ஒரு தந்திரம் செய்வார்கள். முதலில் வீணையை வாசிப்பார்கள். வீணா கானத்தைக் கேட்ட அந்தப் பறவை வந்து நிற்கும். உடனே அதைப் பற்றிக் கொள்வார்கள். காது என்ற பொறிக்கு அது அடிமையாவதனால் தான் வேடர்களிடம் சிக்கிக் கொண்டு உயிரை விடுகின்றது.

இப்படிப் பறவையும், விலங்கும் பொறிகளுக்கு அடிமைப் பட்டு அல்லலுறுவதைப் பார்க்கிறான் ஆறறிவு படைத்த மனிதன். ஆயினும் அவற்றைப் போலவே அவனும் அந்தக் கண்ணிகளில் சிக்கிக் கொள்கிறானேயன்றித் தப்புவதற்கு ஞானமாகிற கத்தியை உபயோகப்படுத்தாமல் இருக்கிறான்.

உபதேசம் வீணாதல்

மனம் என்ற ஒன்றை ஐந்து பொறிகளும் பாசமாகிய கயிற்றினால் கட்டிச் சுழற்றிக்கொண்டே இருக்கின்றன. மனம் கொஞ்ச நேரம் நின்றால்தானே இறைவனை நினைக்க முடியும்? மிக வேகமாகச் சுழன்று கொண்டே இருக்கிற இயந்திரத்தின் அருகில் போய்த் தொட்டால் அது தொட்டவனைத் தூக்கி எறிந்துவிடும். கல்லையோ, வேறு ஏதாவது பொருளையோ போட்டாலும் அப்படித்தான் தூக்கி எறியும். ஐந்து பொறிகளுக்கும் அடிமைப்பட்டு எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும் மனமுடையவனிடம் சென்று கொஞ்சம் உபதேசம் பண்ணிப் பாருங்கள். நம்மை அப்படியே தூக்கி எறிந்து விடுவான். ஓடுகின்ற ரெயிலின் மீது கல்லை விட்டெறிந்தால் அந்தக் கல் திரும்பவும் எறிந்தவன் மேலேயே வந்து விழுவது போல, ஐந்து பொறிகளுக்கும் அடிமைப்பட்டவன் காதிலே உபதேசம் செய்தால் சொன்ன வேகத்தைக் காட்டிலும் மிக வேகமாக அது திரும்பி வந்துவிடும்.

தாடகை மேலே ராமன் அம்பை விட்டான். அது என்ன ஆயிற்று?

சொல்ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் அல்லொக்கும் நிறத்தினாள்மேல் விடுதலும் வயிரக் குன்றக் கல்லொக்கும் நெஞ்சில் தங்கா தப்புறம் கழன்று கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்றன்றே!”

அவன் விட்ட அம்பு, முனிவர் சாபம் இட்டால் எப்படி வேகமாகப் போய்ச் சாபத்துக்கு ஆளானவர்களைத் தாக்குமோ அவ்வளவு வேகமாகத் தாடகையைத் தாக்கியது. அந்தத் தாடகையின் மார்பு வைரம் பாய்ந்த பாறை போல் இருக்கிறது. அதைத் தொளைத்துக் கொண்டு போயிற்று, ராமன் விட்ட அம்பு. அதற்குக் கம்பர் கூறும் உவமையை இங்கே கவனிக்க வேண்டும். கல்லாத மனிதர்களுக்குக் கற்றவர்கள் உபதேசம் செய்தால் அது அவர்களது ஒரு காதில் புகுந்து மற்றொரு காதின் வழியே எவ்வளவு வேகமாக வெளியே போய்விடுமோ அவ்வளவு வேகமாகப் போயிற்று என்கிறார். ஐந்து பொறிகளுக்கும் அடிமைப்பட்டுச் சுழன்று கொண்டே இருக்கிறவர்கள் என்ன சொன்னாலும் ஏற்கமாட்டார் கள். எப்போதும் மனம் சுழன்று கொண்டே இருக்கும் மக்களுக்கு அமைதி என்பது இல்லை. ”இவ்வாறு நான் சுழலுகிறேன்” என்று நாம் சொல்ல வேண்டியதை அருணகிரியார் சொல்கிறார்.

பாசக்கட்டு

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும்
ஐவரிற் கொட்படைந்த.

கு என்பது உலகம். இங்கே நாம் வாழ்கிற வாழ்க்கை பாச வாழ்க்கை. ஆத்மாவைக் கட்டியிருப்பது பாசம். ஆத்மாவானது கடவுளிடம் சொல்லாதவாறு பாசம் என்ற கயிறு அதைக் கட்டியிருக்கிறது. அந்தக் கயிற்றை ஞானமென்னும் கத்தியினால் துண்டித்தால் தான் ஆத்மா கடவுளை அடைய முடியும். அந்தக் கட்டு இருக்கிற வரைக்கும் இறைவனை அடைய முடியாது. ஒரு பசு இருக்கிறது. அது தன் கன்றுக் குட்டிக்குக் கொடுப்பதற்காக மடி நிறையப் பாலை வைத்திருக்கிறது. ஆனால் மாட்டுக்காரன் கன்றுக் குட்டியை முளையோடு முளையாகச் சேர்த்துக் கட்டி விடுகிறான். கன்றை அவிழ்த்து விட்டால் தான் பசுவின் பாலைக் கன்றுக் குட்டி உண்ண முடியும். ஆத்மாக்கள் பாசம் என்ற கயிற்றினால் கட்டப்பட்டுள்ன. கயிறு அறுபட்டால் தான் ஆத்மா இறைவனை அடைய முடியும். பதியாகிய இறைவன் பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு இன்பம் தருவதற்காகவே இருக்கிறான். அதைப் பெற முடியாமல் பாசமாகிற கயிற்றால் கட்டுண்டிருக்கிறது, ஆன்மா. பாசம் என்ற கயிற்றினால் கட்டப்பட்டு வாழ்கின்ற வாழ்க்கை இவ்வுலக வாழ்க்கை; பாச வாழ்க்கை.

உலகமாகிய மேடையில் உயிர்களாகிய பொம்மைகள் ஆடுகின்றன. இவற்றோடு சேர்த்துக் கட்டப்பட்டுள்ள பாசமாகிற கயிற்றைப் பிடித்து ஆட்டி வைப்பவர்கள் திரைக்கு மறைவில் இருக்கிறார்கள். பல பல வேஷங்களைப் போட்டுக் கொண்டு உலகமாகிற மேடையில் வந்து ஆடுகின்றது உயிர். இந்தப் பாச வாழ்க்கையில் ஐந்து பேர்கள் கூத்தாடுகிறார்கள். இவர்கள் திரைக்கு மறைவில் கூத்தாடினால் தான் திரைக்கு முன்னே இருக்கிற உயிர்கள் கூத்தாடும்.

ஐம்பொறிகளைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் ஆடுகின்ற படியெல்லாம் ஆடிக்கொண்டே, சுற்றிக் கொண்டே இருக்கிறோம். அதனாலே வருகிறது என்ன? மீண்டும் மீண்டும் பிறவிதான் வருகிறது.

ஐந்து இந்திரியங்களுக்கும் கட்டுப்பட்டே மனிதன் வாழ்கிறான். எத்தனை தூரம் அவை அவனை ஆட்டி வைக்கின்றனவோ அத்தனை தூரம் அவன் ஆடுகிறான். அவற்றைத் திருப்திப் படுத்துவதற்கான காரியங்களையே செய்து கொண்டிருக்கிறான். இந்த உலகத்தில் பிறந்து இந்த உடம்பையும், உடம்பில் ஐந்து இந்திரியங்களையும் பெற்றிருப்பது இந்த உலகிலுள்ள பொருள்களைத் தன் சக்தி கொண்ட மட்டும் அனுபவித்து இன்புறுவதற்காகவே என்று நினைக்கிறான். அதனாலே மீண்டும் மீண்டும் பிறவி வந்து கொண்டே இருக்கிறது. பிறவி வளர வளரத் துன்பமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஐந்து இந்திரியங் களுக்கு உட்பட்டு அவை சுற்றுகின்றபடி எல்லாம் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கும் நெஞ்சு உடையவர்களுக்குப் பிறவி மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது.

“இந்த உலகமாகிய பாச வாழ்க்கையில் கூத்தாடுகின்ற ஐந்து பேர்கள் என் நெஞ்சை ஆட்டுகிறார்கள். அவர்கள் சுற்றுகின்ற சுற்றுக்கு ஏற்ப என் நெஞ்சு சுழன்று கொண்டே இருக்கிறது. ஒரு நிமிஷங்கூட நிற்பது இல்லை. உன்னை நினைக்கலாம் என்றால் மனம் அமைதியாக நின்றால் அல்லவா நினைக்க முடியும்? எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிற என் நெஞ்சில் உன் நினைவு ஒரு கணம் வந்தாலும் சிதறுண்டு போகிறது. இதற்குக் காரணமாய் இருப்பது என்ன? ஐந்து இந்திரியங்களின் ஆட்டம்.

அதற்கு இடமாக இருப்பது பூமி. பூமியிலே பாசம் நிரம்பி வாழ்க்கையில் ஐம்பொறிகள் மனத்தை ஆட்ட, “நான் ஆடுகிறேன். சுழற்சியை அடைந்த பாச நெஞ்சினை உடைய பாவியாக நான் இருக்கிறேன்.இப்பாச நெஞ்சனை ஈடேற்ற மாட்டாயா?” என்று பிரார்த்தனை செய்கிறார் அருணகிரியார்.

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்.

அருணகிரியாரே ‘கொட்பு அடைந்த நெஞ்சினை உடைய வனாக இருக்கிறேனே!’ என்று சொன்னால் நாம் எல்லாரும் எங்கே இருக்க வேண்டும்? நாம் ஒரு கணம்கூட இறைவனை நினைந்து அறியாதவர்கள். ஐந்து இந்திரியங்களுக்கும் அப்பாற் பட்டு இருக்கிற ஒருவனை, ஐந்து இந்திரியங்களுக்கும் உட்பட்டு எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும் நெஞ்சுடைய நம்மால் நினைக்கத்தான் முடியுமா? அவனை நினைக்க வேண்டுமென் றால் இந்திரியங்கள் நமக்கு அடங்கினவை ஆக வேண்டும். நாம் அலங்காரம், மமகாரம் அடங்கினவர்களாக ஆகவேண்டும். இந்தச் சுழற்சி நீங்க வேண்டும். யாரை வேண்டியனால் சுழற்சி நீங்கும்? நம்மை ஆட்டி வைக்கின்ற ஐந்து பேர்களின் கொட்டம் அடங்க, இந்த ஐந்து பேருக்கும் அப்பாற்பட்ட வேறு ஒருவன் அருள் வேண்டும். அவன் யார்? அவனே முருகன். அவன் ஐந்து பேரை அடக்கும் ஆற்றல் படைத்தவன்.

2

ஐவரை அடக்கியவன்

கந்தப் பெருமான் அசுரர்களோடு போர் செய்து அவர்களைச் சங்காரம் செய்தான். பல வெள்ளக்கணக்கான அசுரர்கள் இருந்தாலும் அந்தப் படைக்குத் தலைவனாக இருந்தவன் சூரன். அவனுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் சேர்த்தால் பெருந் தலைவர்கள் ஐவர் ஆவார்கள். தாரகாசுரன் ஒருவன்; யானைமுகம் படைத்தவன்; அவன் சூரனுக்குச் சகோதரன். சிங்கமுகாசுரன் மற்றொரு சகோதரன். கிரௌஞ்சாசுரன் சூரனுக்குக் கவசம் போன்றவன். பானுகோபன் சூரனுடைய மகன். இந்த நால்வரோடு சூரனும் சேர்ந்தால் ஐவர். இவர்கள் ஐந்து பேர்களும் கந்தபுராணத்தில் வருகின்ற அசுரர்களின் தலைவர்கள். இவர்களோடு போரிட்டுச் சங்காரம் செய்தவன் ஆறுமுகம் படைத்த ஆண்டவன். ஐந்து அசுரர்களையும் அடக்கி ஒழித்துத் தேவர்களுக்கு இன்பம் தந்த பெருமான் ஆறுமுகநாதன்.

எச்சரிக்கை

ஆறுமுகநாதப் பெருமான் அவதாரம் செய்தவுடனே சூரனைப் போய்க் கொல்லவில்லை. “நான் உன் கொட்டத்தை அடக்கத் தான் அவதாரம் செய்திருக்கிறேன். ஜாக்கிரதை” எனச் சூரனுக்கு எச்சரிக்கை செய்ய விரும்பியவனைப் போல, முன்னாலே தன் அவதாரத்தை அழுகையினால் தெரிவித்தான். பாலுக்காக அழும் குழந்தையைப் போல அழுது காட்டினான். கேட்டு, “ஐயோ, நம்மைக் கொல்ல வந்த எமன் பிறந்து விட்டானே!” எனச் சூரன் அழுதான். ஆனால் அழுத மறுகணமே மாயை அவனை மூடி விட்டது.

அந்த உடம்பு நிலை அற்றது என்று நமக்கு நன்றாகத் தெரியும். இறந்து போகின்றவர்களின் பிரேதத்தோடு சுடுகாடு போய் வருகிறோம். வீட்டுக்கு வந்த மறுகணமே நாமும் ஒரு நாள் இறக்கத்தானே போகிறோம் என்ற நினைப்பின்றிப் பல காரியங்களைச் செய்கிறோம். அதுதான் மாயை. மாயையின் வாடை படுகின்ற நமக்கே அப்படியானால், மாயையின் பிள்ளையாகிய சூரனைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அவன் அழுதான். மறுபடியும் அதை மறந்து விட்டான். குழந்தை தன் இடுப்பில் கட்டியிருக்கும் கிண்கிணி ஓசையை எழுப்பிற்று. அந்த நாதம் யுத்த காலத்தில் எழுப்புகின்ற ஒலியைப் போல நாலு பக்கமும் முழங்கியது. அந்த ஒலியையும் சூரன் கேட்டான். அப்பொழுதும் அவன் கொட்டம் அடங்கவில்லை. இப்பொழுது முருகன் தன் சின்னக் கையைத் தட்டினான்.

கை தட்டல்

கிராமங்களில் இரவுக் காலங்களில் நீர் நிலைகளுக்குப் போகிறவர்கள் கையைத் தட்டிக்கொண்டுதான் போவார்கள். பூச்சி புழுக்கள் கை தட்டும் சத்தத்தைக் கேட்டவுடனே ஓடிவிடும். உலகத்திற்குத் துன்பத்தைத் தரக் கூடிய பூச்சி புழுக்களாகிய அசுரக் கூட்டங்கள், தன்னுடைய வருகையை உணர்ந்து கொண்டு ஓடிவிடமாட்டாவா என்ற கருணையினால் முருகப் பெருமான் தன் சின்னஞ் சிறு கைகளைச் சேர்த்துத் தட்டினான்.

கையைத் தட்டின மாத்திரத்தில் குன்றுகள் எல்லாம் குலுங்கின. அஷ்ட திக்குப் பர்வதங்கள் பாதியாய்ப் பிளந்தன. சூரனுக்கு அந்தச் சத்தம்கூடவா கேட்கவில்லை? கை தட்டிய சத்தம் கேட்கா விட்டாலும், குன்றுகள் பாதி பாதியாய்ப் பிளந்து விழுந்ததுகூடா கண்ணில் படவில்லை?

முருகன் தன் தாய் தந்தையர்களை மாத்திரம் மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டுமென்று எண்ணியிருந்தால், அவர்கள் காதில் மட்டும் விழும்படி சப்பாணி கொட்டியிருப்பான். தேவர்கள் மகிழ வேண்டும், தன்னுடைய அவதாரத்தின் காரணத்தைப் பகைவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று எண்ணிச் சண்முகப் பெருமான் தன் ஆறிரண்டு கைகளால் சப்பாணி கொட்டுகிறான். அதனால் விளைந்தவற்றைப் பார்க்கலாம்.

இரு நான்குவெற்பும்
அப்பாதி யாய்விழ மேருங்
குலுங்கவிண் ணாரும்உய்யச்
சப்பாணி கொட்டிய கைஆ
நிரண்டுடைச் சண்முகனே.

உலகத்திற்கு நடுவாய் இருப்பவன் ஆண்டவன். எட்டுத் திசை களுக்கும் நடுவான இடத்தில் அவன் இருக்கிறான். அவன் இருக் கிற இடத்தில் இருந்து கையைத் தட்டினால் எந்தத் திசையில் எங்கே நின்றாலும் கேட்கும். எட்டுத் திசைகளுக்கும் அடையாள மாக அவற்றின் எல்லையில் எட்டுக் குலாசலங்கள் இருக்கின்றன என்பர் புராணக்காரர்கள். சூரன் எங்கே இருந்தாலும் இந்தச் சத்தம் கேட்கும். தேவர்களுக்கும் கேட்கும். வருந்துகின்ற அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

இந்த ஓசை எட்டுத் திக்குகளின் எல்லையிலுமுள்ள மலை களைத் தாக்குகிறது.

இரு நான்கு வெற்பும் அப்பாதி யாய்விழ.

அந்தத் தாக்குதலினால் எட்டுக் குலாசலங்களும் பாதி பாதியாய்ப் பிளந்து விழுகின்றன.

சூரன் காணும் காட்சி

ஒரு பெரிய மலைக்கு நடுவிலே சூரன் உட்கார்ந்து இருக்கிறான். இடி இடிப்பது போன்ற சத்தம் கேட்கிறது. உடனே மலைகள் பிளந்து பிளந்து விழுகின்றன. அவன் பார்க்கிறான். ‘நாம் போடுகின்ற உத்தரவுப்படி முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நாம் எந்தவிதமான உத்தரவும் போடவில்லையே! அஷ்ட திக்குப் பர்வதங்கள் நம்முடைய உத்தரவு இன்றியே பிளந்து பிளந்து விழுகின்றனவே. நம்முடைய சக்திக்கும் அப்பாற்பட்டதொரு சக்தி இருக்கிறது போல் இருக்கிறதே’ என எண்ணுகிறான். மறுபடியும் ஒன்று நிகழ்கிறது.

மேரு குலுங்குதல்

உலகத்திற்கே நடுத் தூணைப் போலவும், அச்சைப் போலவும் இருக்கிற மேரு மலை குலுங்குகிறது. அது குலுங்கினால் உலகம் முழுதும் குலுங்கும். சூரனது குடல் குலுங்குகிறது. அவன் தன் கண் முன்னாலேயே தனக்குக் கட்டுப்படாத வேறு ஒரு சக்தி இயங்குகிறது என்பதைக் கண்டுவிட்டான். உலகம் எல்லாம் தன் ஆட்டத்திற்கு அடங்கி ஆடிக் கொண்டிருப்பதாக எண்ணியிருந்த அவன் மனம் ஆடுகிறது.

“ஏன் இப்படி மலைகள் பிளந்து விழுகின்றன? மேருகிரி ஏன் குலுங்குகிறது?” எனக் கேட்கிறான் சூரன். அறிந்தவர்கள் சொல்கிறார்கள்; “ஒரு குழந்தை தன் கையைத் தட்டிற்று, அந்த ஓசை கேட்டு இப்படி நிகழ்ந்தன” என்கிறார்கள். சின்னஞ்சிறு குழந்தை விளையாட்டாகக் கையைத் தட்டும்போதே அஷ்டதிக்குக் குலாசலங்களும் பாதி பாதியாய்ப் பிளந்து விழுகின்றன, மேரு குலுங்குகிறது என்றால், அந்தக் குழந்தை நினைத்து ஒரு காரியத்தைச் செய்தால் என்ன ஆகும் என்று நினைக்கிறான். அப்படி நினைக்கும்போது சூரனது மனமாகிய மலை அசையத் தொடங்குகிறது. பின்னாலே நடக்கப் போகிற யுத்தத்தை நடக்காமல் செய்ய முடியுமா என்ற உள்ளம் ஆண்டவனுக்கு.

இவற்றையெல்லாம் கண்டாவது சூரன் திருந்த மாட்டானா என்று நினைக்கிறான்.குறும்பு செய்கிற குழந்தையை அடிப்பதற்கு முன்னால் தாய் அதைப் பயமுறுத்தித் திருத்த விரும்புகிறாள். அப்படியும் திருந்தாவிட்டால் அடிக்கிறாள்.

தேவர் மகிழ்தல்

முருகன் சப்பாணி கொட்டிய அதிர்ச்சியில் மேரு மலை குலுங்குகிறது. மேருமலையின் உச்சியிலே வாழ்கின்ற தேவர்கள் முதலில் அஞ்சினார்கள். சூரனிடம் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் உள்ளங்களில் முதலில் பயம் தோன்றுவது தானே இயல்பு? ஆனால் அடுத்த கணமே சண்முக நாதப் பெருமான் கையைத் தட்டியதால் மேரு குலுங்கியது என்று உணர்ந்தவுடன் அவர்களுக்கு முறுவல் உண்டாகிவிட்டது. முன்பு சூரனிடம் நடுங்கி நடுங்கி அச்சம் கொண்டார்கள்; இப்பொழுதோ முதலில் நடுங்கிப் பின்பு உவகை கொண்டார்கள்.

ஆறு குழந்தைகளாக அவதாரம் செய்த எம்பெருமான் பரா சக்தியின் அணைப்பினாலே ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங் களும் உடைய சண்முகநாதனாக மாறி வந்திருக்கிறான்; போர் செய்து சூரனைத் தொலைக்க வந்திருக்கிறான். அவன் தன் கையைத் தட்டி, “நான் இருக்கிறேன். உங்களைக் காப்பாற்றுகிறேன்” என அபயம் அளிக்கிறான் என்று நினைக்கும் போது தேவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று. சப்பாணி கொட்டிய சண்முகநாதன் சூரன் உள்ளத்தில் பயத்தை உண்டாக்கி, தேவர்களது மனத்தில் அபயத்தை உண்டாக்கினான்.

விண்ணாரும் உய்ய.

தேவர்கள் எல்லாம் உய்வு பெறும்படியாகச் சப்பாணி கொட்டினான். தேவர்கள் சூர சங்காரம் ஆனால்தானே உய்வு பெறுவார்கள்? சப்பாணி கொட்டிய மாத்திரத்தில் எப்படி உய்வு பெற்றார்கள்?’ என்றால், எந்தக் காரியத்தையும் ஆண்டவன் தொடங்கி விட்டால் போதும், அது நிச்சயமாக வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும். அற்ப சக்தி உடைய மனிதர்கள் ஒரு காரியத்தை நினைந்து ஆரம்பித்தால் அது முற்றுப் பெறாமல் போகலாம். ஆனால் எம்பெருமானுடைய சக்தி அளவிடற்கரியது. தொடங்கினால் போதும்; நிச்சயம் வெற்றி பெறுவான். இந்த உண்மை தெரிந்த தேவர்களுக்கு, அஞ்சாதீர்கள் எனச் சொல்கின்ற குறிப்புப் போலக் கையைத் தட்டினான்.

கைஆ றிரண்டுடைச் சண்முகனே.

ஆறுமுகமும் பன்னிரண்டு திருக்கரங்களும் உடைய சண்முக நாதனாக இருப்பவன் தட்டினான்; பன்னிரண்டு திருக்கரங் களாலும் சப்பாணி கொட்டினான்.

‘பன்னிரண்டு திருக்கரங்களும்,ஆறுமுகமும் உடைய சண்முக நாதப் பெருமானே, நீ சப்பாணி கொட்டித் தேவர்கள் உய்யும்படியாகவும், சூரன் முதலிய ஐந்து அசுரத் தலைவர்களின் மனமாகிய மலைகள் எல்லாம் நடுங்கிப் பிளந்து குலுங்கும் படியாகவும் செய்தவன் அல்லவா? நான் என்ன செய்வேன்! என் உடம்பாகிய வீட்டில் ஐந்து பகைவர்கள் எப்போதும் கூத்தாடிக் கொண்டே இருக்கிறார்கள். நெஞ்சம் கணம் கூட உன்னை நினைக்காமல் சுழன்று கொண்டே இருக்கும்படி செய்கிறார்கள். இந்தப் பகைவர் களை அடக்கி, எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிற என்னுடைய பாச நெஞ்சை, உன் திருவடியைப் பற்றிக் கொண்டு கொஞ்ச நேரமாவது சுழலாமல் நிலைத்திருக்கும்படி காப்பாற்றக் கூடாதா? இந்த வாழ்க்கைக் கூத்துக்கு ஒரு முடிவு கட்ட மாட்டாயா?” என்று வேண்டிக் கொள்கிறார் அருணகிரியார்.

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும்
ஐவரில் கொட்புஅடைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்று
வாய்;இரு நான்குவெற்பும்
அப்பாதி யாய்விழ மேரும்
குலுங்கவிண் ணாரும்உய்யச்
சப்பாணி கொட்டிய கைஆ
றிரண்டுடைச் சண்முகனே!

மேருவும் மலைகளும்

இந்தப் பாட்டையும் சேர்த்து நான்கு பாட்டுக்களில் மேரு மலையும், எட்டுத் திக்கிலுள்ள குன்றுகளும் குலுங்குவதைப் பார்த்தோம். முதல் பாட்டில் முருகப் பெருமானது வாகனமாகிய மயிலின் தோகை பட்டு வீசிய காற்றில் மேரு அசைந்தது என்றும், அது நடையிட எட்டுப் பர்வதங்களும் தூள் தூளாகப் போயின என்றும் சொன்னார். அடுத்த பாட்டில் எம்பெருமானது கொடியில் உள்ள சேவல் சிறகை அடித்துக் கொள்ள மாமேரு வெற்பும் இடைப்பட்ட குன்றமும் இடிபட்டன என்றார். அதற்கப்பால் முருகப் பெருமானின் இடையில் கட்டிய கிண்கிணியின் ஓசையினால் எட்டுவெற்பும் கனகப் பருவரைக் குன்றமும் அதிர்ந்தன என்றார். மயில், கோழி இரண்டும் முருகப் பெருமானது சம்பந்தம் உடையன என்றாலும் அவன் திருமேனியுடனேயே ஒட்டியிருப்பது, அவன் இடையில் கட்டியுள்ள கிண்கிணி. அதை விட அவனது திருமேனியின் உறுப்பாகவே இருப்பது கை.

எதையும் செய்வது கைதான். கை செயலுக்கு அறிகுறி. முருகன் கைகளே துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்பவை. தன்னுடைய சக்தியை முதலில் மயிலை விட்டுக் காட்டினான்; கோழியை விட்டுக் காட்டினான்; இடையிலுள்ள மணியை விட்டுக் காட்டினான். இப்பொழுது தன் கைகளைத் தட்டினான். அசுரர்களுக்குப் பயம் உண்டாயிற்று; தேவர்களுக்கு அபயம் அளித்தன.

அவன் கையைத் தட்டியவுடனே மேருவானது குலுங்கியது. எல்லைகளாக உள்ள மலைகள் தகர்ந்து, இரண்டாகப் பிளந்து விழுந்தன. எல்லைகளைக் காப்பாற்றுபவன் அல்லவா இறைவன்? உலகத்தைக் காப்பாற்ற வேண்டியவன் உலகுக்கே அச்சாக உள்ள மேருவைக் குலுக்கலாமா என்பது ஒரு கேள்வி. ஆனால் அந்த எட்டு மலைகளும் இதுவரையில் எந்த ராஜ்யத்திற்கு எல்லையாக இருந்தன? சூரபன்மனது இருள் அரசுக்கு எல்லைக் கல்லாக இருந்தன. மேரு அவன் ராஜ்யத்திற்கு அச்சாக இருந்தது. அதனால் சூரபன்மனது மாயா வாசனை ஏறியிராதா? படலம் படலமாக அவனால் ஏற்பட்ட அழுக்கு அவற்றின்மேல் ஏறி நிற்கின்றது. அவை உதிர வேண்டுமென்றால் அவற்றை உலுக்கித்தானே ஆக வேண்டும்? வைரம் உயர்ந்ததுதான். நல்லவர்கள் கையில் கிடைத் தால் அது மிகச் சிறந்து உயர்ந்த ஆபரணமாகியது. கெட்டவர்கள் கையில் சேர்ந்தால் அது நஞ்சாகத்தானே மாறுகிறது. மேரு உயர்ந்ததுதான். ஆனால் அது சூரனுடைய சம்பந்தத்தால் அழுக் கடைந்திருந்தது. அந்த அழுக்குப் போகவேண்டுமென்றால் குலுக்கத்தானே வேண்டும்?

“பன்னிரண்டு திருக்கரங்களால் சாப்பாணி கொட்டிய சண்முக நாதா, ஐந்து பகைவர்களால் என் மனம் சுழன்று கொண்டே இருக்கிறதே! இதைக் காப்பாற்ற மாட்டாயா? என் மனம் உன் திருவடிகளில் தூங்கும்படியாகச் செய்ய மாட்டாயா?” என்ற குறிப்புள்ள பிராத்தனையை அருணகிரியார் வழங்கும் பாட்டில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும்
ஐவரில் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்று
வாய்;இரு நான்கு வெற்பும்
அப்பாதி யாய்விழ மேரும்
குலுங்கவிண் ணாரும் உய்யச்
சப்பாணி கொட்டிய கைஆ
றிரண்டுடைச் சண்முகனே!’

[பூமியில் பாசத்தினாற் கட்டப்பட்ட வாழ்க்கையில், கூத்தாடும் ஐம்பொறிகளால் சுழற்சி அடைந்த இந்தப் பாசமயமான நெஞ்சையுடைய எளியேனை நற்கதி அடையச் செய்வாய்; எட்டு மலைகளும் அங்கங்கே அந்த அந்தப் பாதியாய்த் துண்டுபட்டு விழவும், மேரு மலையும் குலுங்கவும், தேவர்கள் உய்யவும் சப்பாணி கொட்டிய பன்னிரண்டு கைகளை உடைய ஆறுமுகப் பெருமானே!

கு – உலகம். ஐவர் – ஐம்பொறிகள். கொட்பு – சுழற்சி.]

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *