சமரச தீபம் 
திரு.வி. கலியாணசுந்தரனார்

சமரச தீபம்
திரு.வி. கலியாணசுந்தரனார்

உலகம்‌ இப்பொழுது எந்நிலையில்‌ இருக்கிறது? அதைச்‌ சொல்லலும்‌ வேண்டுமோ! உலகம்‌ இயற்கைச்‌ சன்மார்க்கத்தி னின்றும்‌ வழுவிச்‌ செயற்கைத்‌ துன்மார்க்கத்தில்‌ வீழ்ந்து வருகிறது. இது கண்கூடு. இவவீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம்‌ என்னை? மக்கள்‌ அறியாமையால்‌ அரசியலுக்கும்‌, புரோகிதத்துக்கும்‌ அடி மைப்பட்டு இரையாகி வருவதைச்‌ சிறந்த காரணமாகக்‌ குறிக்கலாம்.

ஆங்காங்குள்ள அரசியல்‌ வாதிகள்‌, பேர்‌, புகழ்‌, தன்னலம்‌ முதலியவற்றைக்‌ குறிக்கொண்டு, குடியாட்சி என்றும்‌ – கோனாட்சி என்றும்‌ – குடிக்கோனாட்சி என்றும்‌ – பலதிற அரசுகளை வகுத்து, மக்களை மயக்கி, ஒரு பக்கம்‌ வஞ்சித்து வருகிறார்கள்‌; மற்றொரு பக்கம்‌ புரோகிதர்கள்‌ நின்று, பலதிறக்‌கண்மூடி வழக்க ஓழுக்கங்களை நாளுக்கு நாள்‌ பெருக்கி மக்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறார்கள்‌. இவ்விரு வழியிலும்‌ மன்பதை நெருக்குண்டு துன்புறுகிறது. வஞ்சனைகள்‌ பெருகப்‌ பெருக, உலகம்‌ சன்மார்க்கத்தினின்றும்‌ வழுக்கி வீழ்தல்‌ இயல்பன்றோ? 

துன்மார்க்க வீழ்ச்சிக்கு அழிவுவேலை ஓருபாலும்‌, சன்மார்க்க எழுச்சிக்கு ஆக்கவேலை மற்றொருபாலும்‌ நடந்து வருதல்‌ வேண்டும்‌. அழிவும்‌ ஆக்கமும்‌ சேர்ந்த ஒன்றே சிர்திருத்தம்‌ என்பது. 

இந்நாளில்‌ உலக முழுவதும்‌, சிர்திருத்தத்தை விரும்புவது வெள்ளிடை மலை. இவ்விருப்பம்‌ இயற்கை அன்னையின்‌ ஏவலால்‌ எழுவதாகும்‌. இயற்கை அன்னை உலகைச்‌ செப்பஞ்‌ செய்ய, மறக்கருணையையும்‌ அறக்கருணையையும்‌ சொரிந்து வருவதை அறிஞர்‌ தமது கூர்த்த மதியால்‌ உணரலாம்‌. மறக்கருணை அழிவுக்குத்‌ துணைசெய்வது; அறக்கருணை ஆக்கத்துக்குத்‌ துணை செய்வது. இயற்கை அன்னையின்‌ வழி நின்று தொண்டாற்ற வேண்டுவது அன்பர்‌ கடமை.  உலகில்‌ பலதிற இயக்கங்கள்‌ எழுந்துகொண்டே இருக்‌ கின்றன. அவ்வவ்வியக்கத்தில்‌ ஈடுபடும்‌ அறிஞர்‌, அதை அதைச்‌ சன்மார்க்கத்தில்‌ செலுத்த முயலல்‌ வேண்டும்‌. இம்முயற்சிக்கு ஓல்லும்‌ வகையாதல்‌ துணைபோக வேண்டு மென்பது எனது தணியா வேட்கை. 

பலதிற மகாநாடுகளில்‌ தலைமை வகிக்கும்‌ பேறு எனக்கு அடிக்கடி வாய்ப்பதுண்டு. அம்மகாநாடுகளில்‌ குறிக்கத்தக்கன சில. அச்சிலவற்றுள்‌ மாயவரத்தில்‌ கூடிய சமரச சன்மார்க்க மகாதாடும்‌ ஓன்று. அம்மகாநாடு, ஓருவித சரித்திர சம்பந்த முடையதாகலின்‌, அதைப்பற்றி இம்முன்னுரையில்‌ மிகச்‌ சுருங்கிய முறையிலாதல்‌ கூறுதல்‌ பொருத்தமென்று யான்‌ கருதுகிறேன்‌. 

வாழ்வில்‌ பெறுதற்கு எளியன பல; அரியன சில. அவ்வரியனவற்றுள்ளும்‌, அரியது ஓன்றுளது. அஃது எது? அதுவே நட்பு என்பது. “செயற்கரிய யாவுள நட்பின்‌” என்றார்‌ திருவள்ளுவனார்‌.

யான்‌ பலதிற உலகில்‌ உலவும்‌ பேறுடையேன்‌. தமிழ்‌ உலகு, சமய உலகு, அரசியல்‌ உலகு, தொழிலாளர்‌ உலகு, சீர்திருத்த உலகு முதலிய பல உலகங்கள்‌ எனக்கு உண்டு. இப்பல உலகில்‌ உலவுவது எனது இயல்பாகிவிட்டது. ஒவ்வோர்‌ உலகிலும்‌ உரிய நண்பர்‌ சிலர்‌ எனக்கு வாய்த்துள்ளனர்‌. பொல்லாதது என்றும்‌, நட்புக்குரிய ஈரமில்லாதது என்றும்‌ சொல்லப்படும்‌ இக்கால அரசியல்‌ உலகிலும்‌ இரண்டொரு நண்பரை யான்‌ பெற்றேன்‌. அவருள்‌ இங்கே குறிக்கத்தக்கவர்‌ ஓருவர்‌. அவர்‌, திருமிகு – ஈ.வே.இராமசாமி நாயக்கர்‌ ஆவர்‌. 

திருமிகு – இராமசாமியாரது நட்பு, முதன்‌ முதல்‌ எனக்கு 1919-ம்‌ ஆண்டில்‌ கிடைத்தது. அன்று முதல்‌ அவரும்‌ யானும்‌ நண்பராகித்‌ தமிழ்நாட்டுக்‌ காங்ரஸில்‌ சேவை செய்துவந்தோம்‌. 1925-ம்‌ ஆண்டு முதல்‌, நண்பர்‌ நாயக்கருக்குக்‌ காங்கரஸ்‌ பற்று, படிப்படியாகக்‌ குறையலாயிற்று. இதற்குக்‌ காரணம்‌, “சிலகூட்டத்தார்‌ சூழ்ச்சி” என்று சொல்லப்பட்டது. 

1925-ம்‌ ஆண்டின்‌ இறுதியில்‌ காஞ்சியில்‌ எனது தலைமையில்‌ தமிழ்நாட்டுக்‌ காங்கிரஸ்‌ (தமிழ்‌ மாகாண மகாநாடு) கூடிற்று. அதில்‌ நண்பர்‌ இராமசாமியாரும்‌, மற்றுஞ்‌ சிலரும்‌ சேர்ந்து ஒரு தீர்மானம்‌ கொணர்ந்தனர்‌. தலைவன்‌ என்ற முறையில்‌ நீதிநெறி நின்று, பொருந்திய காரணங்கூறி, அத்தீர்மானத்தைத்‌ தள்ளும்‌ நிலைமை எனக்கு ஏற்பட்டது. அச்செயல்‌, நண்பர்‌ நாயக்கருக்குச்‌ சீற்றமூட்டிற்று. அதன்‌ பயனாக, அவர்‌, காங்கிரஸ்‌ கொள்கைக்கு மாறுபட்ட “ஜஸ்டிஸ்‌!” கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு நல்கத்‌ துணிவு கொண்டனர்‌. அதனால்‌, அவருக்கும்‌ எனக்கும்‌ அரசியலில்‌ கருத்து வேற்றுமை அரும்பலாயிற்று. 

1926-ம்‌ ஆண்டு இறுதியில்‌, அதுபோழ்து தமிழ்நாட்டுக்‌ காங்கரஸ்‌ நிருவாகக்‌ கூட்டத்தவரா யிருந்தவருள்‌ பெரும்‌ பான்மையோர்‌ ஓன்றுசேர்ந்து (கான்பூர்‌) காங்கரஸ்‌ நிறை வேற்றிய தீர்மானங்கள்‌ சிலவற்றுக்கு மாறுபட்டு நடக்க உறுதி கொண்டனர்‌. அதற்குத்‌ துணைநிற்க எனது மனச்‌ சான்று இடங்‌ கொடுக்கவில்லை. அதனால்‌, தமிழ்‌ நாட்டுக்‌ காங்கரஸ்‌ நிருவாகக்‌ கூட்டத்‌ தொடர்பைமட்டும்‌ யான்‌ அறுத்துக்‌ கொண்டேன்‌; காங்கரஸில்‌ சாதாரண அங்கத்தினனாக இருந்து காலங்கழிக்கலானேன்‌. 

நண்பர்‌ இராமசாமி நாயக்கர்‌ முயற்சியால்‌ 1927-ம்‌ ஆண்டில்‌ மாயவரத்தில்‌ “ஜஸ்டிஸ்‌” கட்சிச்‌ சார்பில்‌ ஒரு பெரிய மகாநாடு கூடிற்று. அம்மகாநாட்டிற்கு இப்பொழுது சென்னை அரசாங்கத்தில்‌ சட்ட அமைச்சராக உள்ள ஸர்‌. கிருஷ்ணன்‌ நாயர்‌ தலைமை வகித்தார்‌. தமிழ்நாட்டில்‌ கூடிய பல மகாநாடுகளில்‌ அதனை ஒரு சிறந்த மகாநாடென்றே கூறலாம்‌. 

அம்‌ மகாநாட்டுப்‌ பந்தரில்‌ எனது தொண்டும்‌ ஏதாவது நிகழ்தல்‌ வேண்டும்‌ என்று நண்பர்‌ நாயக்கர்‌ உள்ளிட்ட சிலர்‌ விரும்பினர்‌. அவ்விருப்பம்‌ சமரச சன்மார்க்க மகா நாடாக உருக்கொண்டது. அதற்குரிய தலைமைப்‌ பதவி எனக்கே வழங்கப்பட்டது. 

இரண்டு மகாநாடுகளும்‌ ஓரே இடத்தில்‌ கூட நேர்ந்தமை யால்‌, “ஜஸ்டிஸ்‌” கட்சித்‌ தலைவர்களில்‌ ஏறக்குறைய எல்லாரும்‌ சமரச சன்மார்க்க மகாநாட்டிலும்‌ கலந்து அளவளாவினர்‌. மகாநாடு முடிந்த பின்னை, “ஜஸ்டிஸ்‌” கட்சித்‌ தலைவர்களிடம்‌ விடைபெற யான்‌ போனேன்‌. அப்பொழுது, “ஜஸ்டிஸ்‌” கட்சியின்‌ பெருந்தலைவரும்‌, இராஜ தந்திரத்தில்‌ தலைசிறந்த வரெனப்‌ பேர்பெற்றவரும்‌, எனது கெழுதகை நண்பருள்‌ ஒருவருமாகிய பனகால்‌ ராஜா அவர்கள்‌, என்னைப்‌ பார்த்து, “உங்களுக்கு எங்கள்‌ அரசியல்‌ பிடிப்பதில்லை; உங்கள்‌ சமூக சிர்திருத்தம்‌ எங்களுக்குப்‌ பிடிக்கிறது. இது சன்மார்க்க மகாநாட்டில்‌ நன்கு விளங்கிவிட்டது. ஆகவே, சமூக சிர்திருத்தத்தில்‌ நாம்‌ அனைவரும்‌ ஏன்‌ ஒன்றுசேர்ந்து உழைத்தல்‌ கூடாது?” என்று கேட்டார்கள்‌. “அப்படியே செய்யலாம்‌’ என்று புன்முறுவலுடன்‌ கூறி, யான்‌ விடை பெற்றுத்‌ திரும்பினேன்‌.

சில திங்கள்‌ கழிந்தன. நண்பர்‌ நாயக்கரது “குடியரசு” பத்திரிகையினின்றும்‌ புதுப்புதுப்‌ பாணங்கள்‌ கிளம்பின. அப்பாணங்கள்‌ எனக்கென்றே செப்பஞ்‌ செய்யப்பட்டனவோ என்று யான்‌ ஐயுற்றேன்‌; அவ்வாறே உலகமும்‌ ஐயுற்றது. கடவுளைப்‌ பற்றியும்‌, அடியார்களைப்‌ பற்றியும்‌ யான்‌ மாறுபடும்‌ முறையில்‌ “சுயமரியாதை” என்னும்‌ பெயரால்‌ “குடியரசில்‌ பாணங்கள்‌ பூட்டப்பட்டன. அப்‌ பாணங்களால்‌, சன்மார்க்க மகா நாடு கொண்ட சமூக சீர்திருத்த முறைகளைப்‌ பரப்புதற்கு “நண்பர்‌ நாயக்கருடன்‌ கலந்து தொண்டு செய்தல்‌ வேண்டும்‌” என்று யான்‌ கொண்ட எண்ணம்‌ பாழாயிற்று. 

சமூக சர்திருத்தத்தில்‌ நாயக்கருக்கும்‌ எனக்கும்‌ கருத்து வேற்றுமை இல்லையாயினும்‌, கடவுள்‌ நெறியில்‌ அவருக்கும்‌ எனக்கும்‌ கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அவ்வேற்றுமை நாளுக்குநாள்‌ பெருகலாயிற்று. அப்பெருக்கால்‌ தமிழ்நாட்டில்‌ பெரும்‌ புயற்காற்றும்‌ வீசிற்று. பின்னே நாளடைவில்‌, “சுயமரியாதை” என்னும்‌ பெயர்‌, ஓர்‌ இயக்கமாகப்‌ பரிணமித்தது. இவ்வியக்கம்‌ தோன்றுதற்குக்‌ காரணமாக நின்றது, மாயவரத்திற்‌ கூடிய சமரச சன்மார்க்க மகா நாடாகலான்‌, அதைப்‌ பற்றி இம்முன்னுரையில்‌ பிரஸ்தாபித்தல்‌ நேர்ந்தது. 

நண்பர்‌ நாயக்கர்‌ முயற்சியும்‌, எனது தலைமைக்‌ கூட்டுறவும்‌ ஒன்றிய சன்மார்க்க மகா நாட்டின்‌ பயனாகச்‌ “சுயமரியாதை இயக்கம்‌” என்னுங்‌ குழவி பிறந்தமையால்‌, அதற்குத்‌ தந்தை நாயக்கரென்றும்‌, தாய்‌ யான்‌ என்றும்‌, அக்குழவி தந்தைவழி வளர்ந்து வருகிறது என்றும்‌ யான்‌ விளையாட்டாகச்‌ சொல்வது வழக்கம்‌. 

மாயவரத்திற்‌ கூடிய சமரச சன்மார்க்க மகா நாட்டுத்‌ தலைமை உரை, எனது தலைமை உரைகள்‌ சிலவற்றைக்‌ கொண்ட “தமிழ்த்‌ தென்றல்‌” என்னும்‌ நூலில்‌ முதற்கண்‌ ஒளிர்வது. அதனைத்‌ தனி நூலாகவும்‌ வெளியிடுதல்‌ வேண்டும்‌ என்று சில நண்பர்‌ விழைந்தனர்‌. அவர்‌ விழைந்தவாறு, அத்தலைமை உரையை இச்சிறு நூலாக்கி, இம்‌ முன்னுரையுடன்‌ வெளியிடலானேன்‌. நூலின்‌ உள்ளுறைக்‌ கேற்பச்‌ “சமரச தீபம்‌” என்னும்‌ பெயர்‌ நூலுக்குச்‌ சூட்டப்பட்டது. 

இந்நூற்கண்‌, சமரசம்‌, சன்மார்க்கம்‌, சீர்திருத்தம்‌ முதலியன சுருக்கமாகச்‌ சொல்லப்பட்டிருக்கின்றன. “சன்‌ மார்க்க போதம்‌” என்னும்‌ தலைப்புக்கொண்ட வேறொரு நூல்‌  என்னால்‌ இயற்றப்பட்டிருக்கிறது. அதன்கண்‌, சன்மார்க்க விளக்கம்‌, சமரச நுட்பம்‌, சத்தின்‌ இயல்‌, இயற்கைக்‌ கூறுபாடு, கண்மூடி. வழக்க ஒழுக்க இழிவு, சீர்திருத்தம்‌, சமதர்மம்‌, சங்க அமைப்பு முதலியன விளக்கமாகவும்‌ தெளிவாகவும்‌ கூறப்பட்டி ருக்கின்றன. சமரச சன்மார்க்கத்தைப்‌ பற்றிய விரிவை அந்நூலிற்‌ காண்க. 

திருவாரூர்‌-வி.கலியாணசுந்தரன்‌

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *