நல்லவர்
க. நா. சுப்பிரமணியம்

நல்லவர்
க. நா. சுப்பிரமணியம்

முன்னுரை

நாடகங்கள் பார்ப்பதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் கிடையாது. ஆனால் நாடகங்கள் படிப்பதில் நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல. நாடகங்கள் நடிக்கப்படுவதற்காக எழுதப்பட வேண்டிய அவசியமே இல்லை; இலக்கியமாகப் படிப்பதற்கு மட்டும் எழுதப்பட்டால் போதும் என்பது என் அபிப்பிராயம். இது தனிப்பட்ட என் பிரத்தியேக அபிப்பிராயம் என்று தான் வெகு நாள் எண்ணியிருந்தேன். பண்டைய கிரேக்க நாடகாசிரியர்களிலிருந்து இன்றைய யூஜின் ஓநீல், அநீல்ஸ் வரையில் எல்லோருமே படிப்பதற்காகத்தான் நாடகங்கள் எழுதியிருக்கிறார்கள்; சில சமயம் அவை நடிக்கவும் பட்டிருக்கின்றன என்பது தான் உண்மையென்பது சமீப காலத்தில்தான் எனக்குத் தெரிய வந்தது.

அறுபது வருஷங்களாகத் தமிழிலும் தான் நாடகச் சீர்திருத்தம் நடந்து வருகிறது. அது சரியானபடி பலன் தராததற்கு ஒரு  காரணம்தான் எனக்குத் தெரிகிறது. சீர்திருத்தமெல்லாம் நாடக மேடையை ஆதாரமாக வைத்துத்தான் நடந்து வருகிறது. நாடக மேடைக்கு ஆதாரமான இலக்கியத்தை வைத்து நடந்து வரவில்லை என்பதுதான் விஷயம். நாடக இலக்கியம் மஹோந்நதமாக எழுந்துவிட்டால், நாடக மேடை தானாகச் சீரடைந்துவிடும். முதலில் நாடகம் என்பது இலக்கியமாக அமையவேண்டும். அதுதான் முக்கியம். அதற்குப் பிறகு நாடகம் நடிக்கவும் பயன்பட்டாலும் படலாம். இயற்கையான ஒரு அமைப்பை நான் மாற்றிச் சொல்வதாகப் பலருக்கும் தோன்றலாம். ஆனால் அது சரியல்ல. பட்டணத்து ஹோட்டல்களிலே காபி சாப்பிட்டுச் சாப்பிட்டு அயன் காபியின் ருசியைச் சந்தேகிக்கிற ரஸிகன் நிலைமை அது என்று சொல்லலாம். நாடக இலக்கியம், நாடக மேடை என்பதில் எது முதல், எது இரண்டாவது என்கிற வரிசை அப்படி மாறிவிட்டிருக்கிறது இப்போது. தொடர்கதையையும் இலக்கியம் என்று நம்புகிற பத்திரிகை யுகம் தானே இது!

உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியரான ஜியார்ஜ் பெர்னாட்ஷாவும், இலக்கியத்திலே முதல் படியிலிருக்கும் ஷேக்ஸ்பியர், மோலி யேர், இப்ஸன்,பெனாவண்டே போன்ற நாடகாசிரியர்களும் கூடத் தங்கள் நாடகங்களைச் சிறப்பாகப் படிப்பதற்குத்தான் எழுதினார்கள் என்பது என் அபிப்பிராயம். ஷேக்ஸ்பியர் காலத்தில் கையாண்ட நாடக மேடை யுக்திகள் இன்று கையாளப்படவில்லை. யூஜின் ஓநீல் இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வெகு வெகு சிரமப்பட்டுக் கையாண்ட உத்திகள் அடுத்த பத்து வருஷங்களில் எட்டாவது ரக நாடகாசிரியனும் லாகவமாகக் கையாளுகிற உத்திகளாகிவிடுகின்றன. நாடகமேடை என்பது விஞ்ஞான வளர்ச்சியால் சமீப காலத்தில் வெகு வேகமாகப் பல தினுசான சக்திகளைப் பெற்று வளருகிறது. இந்த விஞ்ஞான சக்திகள் எதையும் நம்பி நிற்பதல்ல இலக்கியம். இலக்கியத்தின் சக்திகள் அடிப்படையானவை. அந்தச் சக்திகளை மனசில் கொண்டு நாடகங்கள் எழுதப்பட்டால் தமிழிலும் நாடகத்துக்குப் புத்துயிர் உண்டாகும்.

தமிழில் இயல் இசை நாடகம் என்று முத்தமிழ் உண்டு என்று சொல்கிறார்கள். எனக்குத் தெரிந்த இயலும், இசையும்,நாடகமும் தொல்காப்பியருக்கோ அவருக்குப் பின்னோ முன்னோ உள்ள இலக்கண பண்டிதர்களான அவர் வரிசைகளுக்கோ தெரிந்த இசையும் இயலும் நாடகமும் அல்ல என்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன். கம்ப ராமாயணத்தில் சிறு கதையும் நாடகமும், நாவலும் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் இருக்கிறது. “கண்ணகியானால் போ, போ, மாதவியானால் மடிமேல் வா” என்கிற ‘நாடகமும்’ சிலப்பதிகாரம் என்கிற காவியமும் ஒன்றுதான் என்ற இலக்கிய தத்துவம் முப்பது வருஷ இலக்கியப் படிப்பில் எனக்குப் புரியவில்லை என்பதைத் தாழ்மையுடன் ஒப்புக் கொள்கிறேன்.

சம்ஸ்கிருத நாடகங்கள், கிரேக்க கவிதை நாடகங்கள், நாள் கணக்காக ஓடும் சீன நாடகங்கள், முகமூடியணிந்து ஆடும் ஜப்பானிய நோ நாடகங்கள், மற்றும் அரிஸ்டாடலின் இலக்கியக் கொள்கையைப் பின்பற்றி எழுந்த ஐரோப்பிய நாடகங்கள் பூராவுக்கும் வாரிசாகவும், இணையாகவும் அமைகிற நாடக இலக்கியம் இன்று தமிழுக்கு உடனடியான தேவை என்று எனக்குத் தோன்றுகிறது. பல வருஷங்களாகவே நாடகங்கள் எழுதவேண்டும் என்கிற எண்ணத்தை உள்ளத்திலே போற்றி வந்தேன். கதைகள், கட்டுரைகள், நாவல்களுக்கு கிடைக்கிற ஆதரவு கூட நாடகங்களுக்கு, வாசகர்களிடமிருந்து இன்று கிடைக்காது என்கிற நினைப்பில் பல வருஷங்கள் எதுவும் எழுதவில்லை அகில இந்திய ரேடியோ நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒன்றிரண்டு முழுநேர நாடகங்கள் எழுதினேன். இப்படி ரேடியோ வுக்குத் தயார் செய்த நாடகங்களில் ஒன்றுதான் ‘நல்லவர்’ என்னும் இந்த நாடகம்.

கிட்டத் தட்ட இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் கல்கத்தாவில் அப்போது Imperial Library யாக இருந்த வாசகசாலையில் பல நாடகங்களைப் படித்து அநுபவித்துக்கொண்டிருந்த காலத்தில் ஹசிண்டோ பெனாவண்டே என்னும் இஸ்பானிய நாடகாசிரியரைப் படித்தனுபவித்தேன். நாலு பாகங்களாக அவர் நாடகங்களில் ஒரு பதினேழு பதினெட்டு ஆங்கிலத்தில் வந்திருந்தன. அவையெல்லாம் சிந்தனையைத் கிளறும் இலக்கியம், இப்ஸனின் மேதை சமைத்துத் தந்த புது இலக்கியம் என்று அநுபவித்தேன். பெனாவண்டே எழுதிய நாடகங்களில் ஒன்றின் பெயர் “கெடுதி செய்யும் நல்லவர்கள்” என்பதாகும். நல்லது செய்வதாகச் சொல்லிக் கொண்டு பிறருக்கு எப்படியோ தீமை விளைவித்து வரும் ஒரு கும்பலைப் பற்றிய நாடகம் அது.

அந்த நாடகத்தில் ஒரு அம்சமும் எனக்கு இப்போது ஞாபகமில்லை. பெனாவண்டேயின் மேதை ஒரு சிறந்த நாடகத்தைச் சிருஷ்டித்திருந்தது என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு ஞாபகமில்லை.

ஆனால் கெடுதி செய்யும் நல்லவர்கள் என்கிற சிந்தனை என் மனசிலே வளர்ந்தது. பெனாவண்டேயின் நாடகத்துக்கும் என் நல்லவருக்கும் ஏதாவது ஒற்றுமையிருந்தால் அது பெனா வண்டேயின் மேதா விலாசத்தில் ஒரு நிழலாகத்தான் இருக்கும். இந்த இருபத்தைந்து வருஷங்களில் நான் பல தடவைகள் தேடியும் அந்த நாடகம் மறுபடியும் படிக்க எனக்குக் கிடைக்கவில்லை.

தாத்தா ராமச்சந்திரனும், அவர் பெண் விசாலமும், அவர் மாப்பிள்ளை விசுவமும் எனக்குத் தெரிந்த சில மனிதர்களின் இலக்கிய உருவங்கள். அடிக்கொருதரம் “உனக்கு நல்லதைத் தானேடா சொல்லுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே எங்களூரில் பல பள்ளிக்கூடங்களைக் கெடுத்த ஒரு “தாத்தா ராமச் சந்திரனை” எனக்குத் தெரியும். சித்தவைத்தியப் பித்துக்கு அவர் மனைவி பலியானதும் உண்மைதான். ஆனால் எனக்கு நேரடியாகத் தெரிந்த ராமச்சந்திரன் சமூக சேவை செய்தது கிடையாது. யாருக் கும் கடைசி வரையில் அவர் ஒரு நன்மையும் செய்தது கிடையாது என்பதும் எனக்குத் தெரியும்.

வாழ்க்கையில் கண்ணில் படுகிற இந்த விஷயங்களை வைத்து இலக்கிய அளவில் நாடகங்கள் செய்கிற முயற்சியில் நல்லவர் என்னுடைய முதல் முயற்சி. இதற்குக் காரணமானவர்கள் என்று நான் இருவரைக் குறிப்பிட வேண்டும். ஒருவர் எனது இலக்கிய நண்பர் ந. சிதம்பர சுப்பிரமணியன்.

அவருக்கு மறந்திருக்கலாம். ஆனால் ஒரு சமயம் ஏதோ பேச்சுவாக்கில் நான் முழு நீள நாடகங்கள் எழுதினால் சரியாக வரலாம், வெற்றிகரமாகவே அமையலாம் என்று சொன்னார். அதைப் பிடித்துக் கொண்டேன் நான் என்று சொல்லலாம் ஒருவிதத்தில். இரண்டாவது இங்கு குறிப்பிட வேண்டிய நண்பர் டி.என்.விசுவநாதன். ரேடியோ நாடக இலாகா இவர் மேற்பார்வையில் இருந்த சமயம் என்னை ஒரு மணி நேர நாடகம் எழுதித்தர வேண்டும் என்று கேட்டார். இந்த நாடகத்தை எழுகினேன்.

ஒரு மணிக்கு என்று எழுதிய நாடகம் நாற்பத்தியெட்டு நிமிஷங்கள் தான் ஓடிற்று. ஆனால் அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அந்த நாற்பத்தியெட்டு நிமிஷங்களுமே திருப்தியாக இருந்தன. இந்தத் திருப்தியை எனக்கு ஏற்படுத்தித் தரக் காரணமாக இருந்த நண்பர் டி. என். விசுவநாதனுக்கும் நல்லவரை ஒலி பரப்பிய அகில இந்திய ரேடியோ அதிகாரிகளுக் கும் அதில் நடித்தவர்களுக்கும் என் நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

முயற்சிதான் இலக்கியத்தின் மூச்சு, நாடக இலக்கியத்தில் பெரும் முயற்சிகள் செய்ய மனமுண்டு, காலதேவன் என்னைப் பற்றிய வரையிலோ, தமிழைப் பற்றிய வரையிலோ அப்படி ஒன் றும் லோபியல்ல என்கிற நம்பிக்கையும் உண்டு எனக்கு.

க.நா. சுப்ரமண்யம்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !