
நல்லவர்
க. நா. சுப்பிரமணியம்
அங்கம் 2
காட்சி 1
(அதே இரவு. தாத்தா ராமச்சந்திரனின் மாளிகையின் சாப்பாட்டுக் கூடம். விசாலமான கூடத்தின் மத்தியில் ஒற்றைக் கல்லின் மேல் தபஸியாக நிற்கும் பாண்டுரங்கர் படம் ஒன்று வைத்திருக்கிறது.
பச்சையும் சிவப்பும் வைரமும் பதித்த விலையுயர்ந்த ஆளுயரப் படம். அதற்கு முன்னால் ஒரு ஐந்து முகக் குத்துவிளக்கு அலங்காரமாக, தாத்தா ராமச்சந்திரன் வீட்டில் எரிகிறோம், என்கிற நினைப்புடன் எரிகிறது.
கூடத்துச் சுவரில் வரிசையாகப் பல படங்கள் ஆணி அடித்துத் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. எல்லாம் பெரிய பெரிய ஐதிகப் படங்கள். முக்கால் வாசிக்குமேல் சுவாமி படங்கள்தான். பாக்கிக் கால் வாசியும் பட்டிலும் வெள்ளைக் காகிதத்திலும் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பாராட்டுப் பத்திரங்கள். எல்லாம் தாத்தா ராமச்சந்திரனைப் பாராட்டுபவை என்று சொல்லவேண்டிய அவசியமில்லை.
கூடத்திலே மூன்றாவது அங்கணத்தில் பளபள வென்று வெள்ளித் தாமரைக் குமிழ்கள் வைத்த ஊஞ்சல் பலகை போடப்பட்டிருக்கிறது. அதில் இப்போது விசாலம் என்கிற தாத்தாவின் பெண்ணும், லீலா என்கிற ஒன்பது வயதுப் பேத்தியும் உட் கார்ந்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஊஞ்சல் சங்கிலிகள் இரும்பால் ஆனவைதான் எனினும் வெள்ளி போலப் பளபளக்கின்றன.
பிரகாசமான ஐந்து கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. சமையற்கட்டுக்குப் பக்கத்து இரண்டு அங்கணங்களிலும் பதினேழு பதினெட்டு தலைவாழை இலைகள் போடப்பட்டிருக் கின்றன.
பாண்டுரங்கர் படத்தை எதிர்த்த சுவரில் மாட் டப் பட்டிருக்கும் சுவர்க் கடிகாரம் மணி ஒன்பதடிக்கிறது.]
விசாலம்: (ஊஞ்சலிலிருந்தபடியே) உங்க தாத்தாவுக்கு இன்னிக்குச் சாப்பிடவேணும் என்கிற நினைப்பே வராது போலிருக்கு. பாராட்டுப் பேச்சிலேயே வயறு ரொம்பிப் போச்சோ! தினம் எட்டரை மணிக்கே இலை போடு, இலை போடு என்று கூத்தடிப்பார். இன்று என்னடா என்றால் ஒன்பது மணிக்கும் ஆளைக் காணவில்லை.
வேணு: (உள்ளே வந்துகொண்டே) ஏனம்மா இத்தனை சொல்லுகிறாய்? சாப்பிடக் கூப்பிட்டால் தானே வருகிறார் தாத்தா!
விசாலம்: போய்க் கூப்பிடேன் என்றுதான் சொல்லுகிறேன்.
லீலா: நான் போய்க் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன் தாத்தாவை.(ஊஞ்சலை விட்டிறங்கித் தடதடவென்று முன் கூடத்துக் கதவைத் தாண்டி ஓடுகிறாள்)
விசாலம்: (தன் மகன் வேணுவைப் பார்த்து) இன்றைக்குக் கூட்டமெல்லாம் அமர்க்களமாக நடந்ததாமே!
[அதைக் கேட்டுக்கொண்டே வந்த விசுவம் என்கிற அவள் புருஷன் அலக்ஷியமாக]: அமர்க்களத்துக்கு என்ன குறைச்சல். ஏமாந்து பணத்தை விடத் தயாராக இருப்பவன் ஒருவன் அகப்பட்டால் அவனை இந்திரன் சந்திரன் என்று புகழ ஆளா அகப்படாது?
வேணு: தாத்தா ஏமாந்துதான் பணத்தை விடுகிறார் என்று நீ எண்ணுகிறாயா அப்பா?
விசுவம்: (ஏளனமாக) இல்லை! இல்லை! ஏமாறாமல் தான் விடுகிறார்!
விசாலம்: ஏமாந்தோ, ஏமாராமலோ, பணத்தை விடாமலிருக்க இந்தச் சமர்த்து மாப்பிள்ளையிடம் அவர் கற்றுக் கொண்டிருக்கலாம்!
(கடைசி இவருடைய பேச்சையும் கேட்டுக்கொண்டே வந்த விசாலத் தின் தம்பி
சிவன்: அத்திம்பேர் இனி மேல் இன்றிரவு பேசவே மாட்டார்.
விசுவம்: அப்படி என்னடா உங்கக்கா கிட்ட எனக்குப் பயம்?
விசாலம்: அவர் பயப்பட நான் புலியா, சிங்கமா?
சிவன்: இரண்டுமில்லைதான். ஆனாலும் அத்திம்பேரே, நீங்கள் அடிநாள் முதல் எந்தெந்த பிஸினெஸ்லே எத்தனை எத்தனை பணம் விட்டேள் என்று அக்கா அடுக்க ஆரம்பித்தாளானால் ராத்திரி பூராவும் ஆகுமே முடிக்க! முடிந்து போச்சு என்று நீங்க நினைக்க ஆரம்பிக்கிறபோது, புதுசா ஒரு பாணம் சீறிக்கொண்டு வரும். பயந்தான்னு ஒத்துக்குங்கோ அத்திம்பேரே.!
விசாலம்: கௌரி எங்கே காணவில்லை?
விசுவம்: எதுக்கு அவளைத் தேடறே! அவளும் சேர்ந்துண்டு என் மண்டையை உருட்டட்டும் என்றா? நான் அப்படியெல்லாம் பயந்துவிடமாட்டேன். மாமனார் வீட்டிலே வேலைவெட்டியில்லாமல் தங்கிவிடத் துணிந்தவன், இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சினால் சரிப் பட்டு வருமா? தவிரவும் இங்கே சேவா சங்கத்தின் ஆதரவிலே மட்டும்தான் தருமச் சாப்பாடு எல்லாம் நடக்கிறது என்று சொல்ல முடியாது. இங்கே என் மாமனார் வீடும் தரும சாத்திரம்தான்.
சிவன்: அதோ இலைகள் போட்டிருக்கிறதைப் பார்த்தாலே தெரியறதே!
விசாலம்: இப்படியெல்லாம் சொல்லிக்கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
விசுவம்: என் பெண்டாட்டி பேச்சைக் கேட்டு நான் செய்து வந்துள்ள காரியத்துக்கெல்லாம் வெட்கப்பட் டால் கட்டி வருமா, சொல்லு.
சிவன்: அதோ தாத்தாவை அழைத்து வந்துவிட்டாள் நம்ப லீலா. வாக்குவாதத்தை இதோடு நிறுத்தி வைப் போம்…. அடாடா! நானும் தாத்தா, தாத்தா என்று தான் சொல்லுகிறேன். அப்பா என்று சொல்ல வாய் வர மாட்டேன் என்கிறது.
[தாத்தா ராமச்சந்திரனும் பேத்தி லீலாவும் சற்றுத் தூரத்திலிருந்து உரக்கப் பேசிக்கொண்டே வரு கறார்கள்.]
தாத்தா: உனக்கும் பப்பர்மிண்ட் பொட்டலம் கொடுத்தாளா, லீலா?
லீலா: பொட்டலம் எல்லாம் கட்டறதுக்கு முன்னாலேயே நான் எனக்குப் பிடித்த நார்த்தஞ்சுளைப் பப்பர்மிண்டாக ஒரு கை எடுத்துக்கொண்டுவிட்டேன்.
தாத்தா: அப்படிச் செஞ்சது தப்பில்லையா, லீலா?
லீலா: (கலகலவென்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே) வில்லை பப்பர்மிண்டாக ஒரு எட்டு எடுத்துத் தனியாக ஒரு பொட்டலம் கட்டிப்போட்டேன்.
தாத்தா: பாவம்! அது எந்தக் குழந்தைக்குக் கிடைத்ததோ. அப்படியெல்லாம் செய்யலாமோ நீ. நளினி கோபித்துக் கொள்ளவில்லையா?
லீலா: கோபித்துக்கொள்ளத்தான் ஆரம்பித்தாள், தாத்தா. ஆனால் நான் பேச்சை மாத்தி அவளுக்குச் சிரிப்பு மூட்டிவிட்டேன்.
தாத்தா: (செல்லமாக) அட போக்கிரி!
லீலா: இன்னிக்கி ஆத்திலே கூடப் பாயசம் எல்லாம் பண்ணியிருக்கா, தாத்தா.
தாத்தா: (ஊஞ்சலண்டை வந்து நின்றுகொண்டு) பாக்கிப் பேரையெல்லாம் எங்கே காணவில்லை. இரவு சாப்பிடும் போதாவது வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் என்னுடன் ஒன்றாகச் சாப்பிட உட்காரவேண்டும் என்று சொல்லியிருக்கிறேனே – எத்தனை தடவை சொல்வது?
சிவன்: அதோ கௌரி வந்துவிட்டாள். சரோஜாவும் மூர்த்தியும்
கௌரி: (வந்துகொண்டே) சங்கத்துத் தோட்டத்திலே வாக் போயிருந்தோம். சரோஜாவும் மூர்த்தியும் என்னோடு வந்துவிட்டார்கள். கால் அலம்பிக்கொண்டு…. அதோ அவர்களும் வந்துவிட்டார்கள்.
தாத்தா: நளினியையும் இன்று இங்கே சாப்பிடக் கூப்பிட்டிருந்தேன்.
கௌரி: அவள் வருவதாகச் சொல்லவில்லையே! தலையை லேசாக வலிக்கிறது உடம்பு சரியாக இல்லை என்று மட்டும் சொன்னாள்.
தாத்தா: நான் சொல்லியும் வராமல் அப்படி அலக்ஷியமாக இருந்துவிடக் கூடியவள் அல்லவே அவள். (முன் கூடத்து டெலிபோன் மணி அடிக்கிறது) நளினியாகத் தான் இருக்கும். போய்ப் பாரு, சிவம்.
[சிவன் போய்ப் போனில் பேசுவது கூடத்திலிருப்பவர் காதில் விழு கிறது.]
சிவன்: யாரு ? நளினியா….? சாப்பிட வர முடியவில்லையா….? உடம்பு சரியாக இல்லையா? தலை வலியா? அசதியா? இன்று வேலை அதிகம். தாத்தா இப்போதான் கேட்டார்…. சொல்லிவிடுகிறேன்….மன்னிப்பு என்ன….? இதென்ன பெரிய விஷயம்? (போனை வைத்துவிட்டு சாப்பாட்டுக் கூடத்துக்குள் வந்து தாத்தாவை அணுகி) நளினிதான்.சாப்பிட……..
தாத்தா: நீ போனில் பேசியது என் காதிலும் விழுந்தது. உம். அவரவர்களை வைக்கிற இடத்தில் வைத்திருந்தால் தான் சரியாக இருக்கும். கொஞ்சம் இடம் தந்து விட்டால்….அது சரி; பேபி எங்கே?
கௌரி: பேபியா? பேபி சாப்பிடவில்லை என்றாள். அவள் அறையில் இருக்கிறாள். இரண்டு நிமிஷத்தில் வருவாள்.
சரோஜா: (கேலியாக) பேபி சிங்காரித்துக் கொண்டிருக்கிறாள். இரண்டு நிமிஷத்தில் வரமாட்டாள். குறைந்த பக்ஷம் இருபது நிமிஷமாவது பிடிக்கும்.
மூர்த்தி: கலைந்துவிட்ட தலையை வாறிக்கொள்ளப் போயி ருக்கிறாள் அவள்.உன் மாதிரி எல்லோருமே பரட்டைத் தலையாக இருக்கணும் என்பது சாஸ்திரமா சரோஜா?
வேணு: என்ன அத்திம்பேரே? அக்கா தலையைப் பரட்டையாக வைத்துக் கொண்டிருப்பதும் ஒரு அழகாகத் தான் இருக்கிறது; இல்லையா?
மூர்த்தி: அந்த அழகைப் பார்த்து மயங்கித்தானேடா நான் கலியாணம் செய்துகொண்டேன்.
லீலா: (கொட்டாவி விடுகிறாள். கண்ணைக் கசக்குகிறாள்.) சாப்பிடலாம் தாத்தா. மணி பத்தடிக்கப் போறது. எனக்குத் தூக்கம் தூக்கமாக வருகிறது. பாயஸமும் ஆறிப்போயிடும்.
விசுவம்: நம்மால்தான் தவக்கம்.
சிவன்: சாப்பாடு விஷயத்திலே எப்போதும் அத்திம்பேர் தான் முதல்.
லீலா: நான் இன்றைக்குத் தாத்தா பக்கத்தில்தான் உட்காரப் போகிறேன்.
விசாலம்: தாத்தாவால் உன்னோடு தோதகமாட முடி யாது. இப்படி வந்து உட்கார். சாதம் நான் பிசைந்து வைக்கிறேன்.
லீலா: தாத்தா பக்கத்தில்தான் நான் உட்காருவேன்.
சரோஜா: உட்காரட்டும் அம்மா. நான் அவளுக்குச் சாதம் பிசைந்து வைத்துவிட்டு உட்காருகிறேன்.
[எல்லோரும் சாப்பிட உட்காருகிறார் கள். தாத்தா தனியாக உட்கார்ந்திருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் லீலா உட்காருகிறாள். விசாலம், சிவம், கௌரி எல்லோரும் இருமருங் கிலும் வரிசையாக உட்காருகின்ற சமையற்காரன் பரிமாறச் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.]
தாத்தா: விசாலத்தின் ஏற்பாடோ இது! சங்கத்தின் இரு பத்திநாலாவது ஆண்டு நினைவு விழாவை நம்மாத்திலேயும் விருந்தோடு கொண்டாடலாம் என்பது. அதுவும் நல்லதுதான்.
லீலா: நான் பாயசத்தைத் தவிர வேறு ஒன்றும் சாப்பிடப் போறதில்லை தாத்தா.
தாத்தா: சிவம்! சங்கத்திலே ஏழைகளுக்குச் சாப்பாடும் குழந்தைகள் போட்டிப் பந்தயங்களும், மற்றும் இனாம் அளிப்புகளும் சரிவர நடந்ததா?
சிவன்: சரிவர நடக்காமல் என்ன?
மூர்த்தி: அந்த நளினி பம்பரம் மாதிரிச் சுறுசுறுப்பாகச் சுற்றிச் சுற்றி வந்து எல்லாவற்றையும் பொறுப்பாக சரியாகத்தான் கவனித்து வந்தாள்.
சிவன்: அவளிடம் ஒப்படைத்த எதையுமே அவள் சரி வரச் செய்துவிடுவாள்.
வேணு: இந்த வயசிலே இவ்வளவு பொறுப்புத் தெரிந்து நடக்கிற பெண் வேறு ஒன்று உலகிலே இருக்குமா என் பதே சந்தேகம்தான்.
விசாலம்: அதுவும் நம்ப சங்கத்து அனாதாஸ்ரமத்திலே அனாதையாக எங்கிருந்தோ வந்து சேர்ந்த ஒரு பெண் படித்துப் பாஸ் பண்ணி வளர்ந்து…. நேற்று நடந்தது போல எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.வராட்டு வராட்டு என்று கத்திக்கொண்டு, அது ஒண்ணரை வயசாக இருக்கும்போது, தலையெல்லாம் சடை சடையாகச் சிக்குப் பிடித்து, பாவாடை சட்டையெல்லாம் பேனோட வந்து கிடந்தது நேற்றிக்கி நடந்த மாதிரி எனக்கு ஞாபகம் இருக்கிறது.
லீலா: போ அம்மம்மா! எங்க நளினி ஒண்ணும் அப்படி இருந்திருக்க மாட்டாள். பொய் சொல்றே நீ!
கௌரி: (விளையாட்டாக) எங்க நளினியாமே, நளினி! அவள் எங்க நளினிதான். உங்க நளினி ஒண்ணும் இல்லை, போ!
லீலா: அவளையே கேளேன் சொல்லுவாள். என் நளினி தான் அவள்
விசுவம்: (ருசித்து சாப்பிட்டுக்கொண்டு) இன்று ரஸம் பலே ஜோர்.
சிவன்: அத்திம்பேருக்கு எப்பவுமே சாப்பாடுதான் பிரதானம்!
விசாலம்: எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானேடா அது! புதுசா என்ன?
விசுவம்: எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பானேன்?
வேணு: இந்தக் காலத்திலே மனுஷ்யன் சாப்பாடு ஒன்றுக்காகத்தானே உயிர் வைத்துக்கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது? வாழ்வில் வேறு என்னத்தைக் காணமுடிகிறது. அவர் அந்த ரஸத்தைத்தான் ரஸித்துச் சாப்பிடட்டுமே! பாவம்!
தாத்தா: (ஏதோ பெரியதோர் விஷயத்தை எல்லோரும் கவனித்துத்தான் ஆகவேண்டும் என்று சொல்கிற குரலில்) இன்று பூராவுமே நான் நளினியின் கல்யாணத்தைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
விசாலம்: அவளுக்குக் கல்யாணம் செய்து வைப்பதும் நம் பொறுப்புத்தானே!
சிவன்: நம் வீட்டுப் பேர் எத்தனையோ பேருக்குக் கல்யாணம் செய்து வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தா…….அப்பா, இந்தப் பொறுப்பைப் பற்றி இவ்வளவு சிந்தனை செய்வானேன்?
கௌரி: நளினியும் நம் வீட்டுப் பெண் போலத்தானே?
தாத்தா: பாலா? போடு… வேண்டாம். சர்க்கரை வேண்டாம்…. நான் சொல்வதை முழுவதும் கேளுங்கள். அவளுக்கேற்ற மாப்பிள்ளையையும் தீர்மானித்துவிட்டேன்.
சரோஜா: அதோ பேபியும் வந்துவிட்டாள்….வா, பேபி.
(பேபி அழகி. அலங்காரமாகவே இருக்கிறாள். யுவதி. அவள் முக வாய்க்கட்டை பிடிவாதத்தையும், நெற்றி அறிவையும் காட்டுகிறது. கண்கள் அடிக்கடி சிவன் கண்களைச் சென்று சந்திக்கின்றன.)
தாத்தா: (தீர்மானமான குரலில்) வேணுவை அவள் கலியாணம் செய்து கொள்வதுதான் சரி என்று நான் தீர்மானித்து விட்டேன்.
வேணு: (பதட்டமாக) நானா? இருபது வருஷங்களாக அண்ணனும் தங்கையுமாகப் பழகிவிட்ட நாங்கள். தவிரவும் என்னை மணக்க அவள் நிச்சயமாகச் சம்மதிக்க மாட்டாள்.
கௌரி: நளினி இதற்குச் சம்மதிக்க மாட்டாள்!
தாத்தா: நீ என்ன சொல்லுகிறாய்?
கௌரி: (பிடிவாதமாக, அழுத்தமாக) நளினி சம்மதிக்க மாட்டாள் என்று சொன்னேன்.
தாத்தா: (கம்பீரமாக) நான் சொன்னாலும் சம்மதிக்க மாட்டாளா?
கௌரி: அதைப்பற்றித் தெரியாது எனக்கு. படித்தபெண் அவள் – தனக்கு ஏற்ற மணாளனைத் தானாகவே தேடிக்கொள்வாள். இதில் நம்முடைய குறுக்கீடு ஒன்றும் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
தாத்தா: அவள் எனக்குக் கடமைப்பட்டவள். சொன்னால் மறுத்தோ எதிர்த்தோ சொல்லமாட்டாள்.
பேபி: தாத்தாவுக்குப் பின்னால் (ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து விசையாக ஊஞ்சலை ஆட்டிக்கொண்டே) கடமைப்பட்டிருக்கிறாள் என்பதற்காக அவளை நீ கட்டாயப்படுத்த நினைப்பது தவறில்லையா தாத்தா? அவளை விலைக்கே வாங்கி அடிமைப்படுத்திவிட்ட மாதிரி நீ பேசுவது தவறில்லையா தாத்தா.
விசாலம்: சமயத்துக்கு வந்து சேர்ந்தாயா நீயும்? வா, வா, தாத்தாவுக்கு உனக்கும்தான் பொருத்தமாச்சே!
தாத்தா: யாரு பேபியா? பெரிய பெரிய வார்த்தையா இங்கே உருளறதே!
(திரும்பி ஊஞ்சலாடும் பேபியைப் பார்க்கிறார்.]
பேபி: உலகத்திலே எல்லாமே நம்மிஷ்டப்படி தான் நடக்க வேண்டும் என்று யாரும் ஆசைப்படக்கூடாது தாத்தா! அது பேராசை!
தாத்தா: உனக்குத் தெரிந்த வேதாந்தத்தை விட எனக்குச் சற்று அதிகமாகவே தெரியும் குழந்தை! என் உலகத்தில் எல்லாமே என் இஷ்டப்படி நடக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கலாம். அதில் தவறில்லை…. அதுவும் இந்த விஷயத்தில், நளினி விஷயத்தில் என் இஷ்டப்படி அவள் நடக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கலாம்.
லீலா: நீங்கள்ளாம் பேசுங்கோ. நான் இன்னொரு கப் பாயசம் சாப்படறேன்.
தாத்தா: நான் எத்தனை கல்யாணங்கள் செய்து வைத் திருக்கிறேன்? இந்தக் கையால் எத்தனை பேருக்கு எத்தனை காரியங்கள் செய்திருக்கிறேன். என் கண்ணால் எனக்குக் கடன்பட்ட எத்தனை பேர் சுகமாக வாழ்வதைக் கண்டு களித்திருக்கிறேன்! என் எழுபத்திமூணு வயதில் நான் யாருக்கும் எவ்விதக் கெடுதியும் செய்ததில்லை. ஊருக்கும், நம் குடும்பத்துக்கும், என்றும் நல்லதேதான் செய்து வந்திருக்கிறேன். அன்பு, அறிவு, அநுபவம் மூன்றிலுமே நான் முதிர்ந்தவன்.
பேபி: அதெல்லாம் உண்மையாகவே இருக்கலாம் தாத்தா. ஆனாலும் கல்யாணம் என்கிற இந்தக் காரியத்திலே அவரவர்களுக்குத் தனியாக ஒரு மனம் உண்டு என்பதை நீங்களும் ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் தாத்தா.
தாத்தா: (பிடிவாதமாக) என் அபிப்பிராயத்தையும் இஷ்டத்தையும் மீறித் தனியாகத் தன் மனசுக்கு இடம் தருகிறவர்களை நான் தண்டிக்கவும் தயங்கமாட்டேன்.
பேபி: அப்படிச் செய்ய யாருக்கும்-ஏன் உங்களுக்கும் கூடத்தான் – உரிமை எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
தாத்தா: அவரவர்களுடைய சொந்த அபிப்பிராயங்களை யும் மீறி அவர்களுக்கு நன்மை செய்ய எனக்கு உரிமையுண்டு.
பேபி: (ஊஞ்சலை விட்டிறங்கி வந்து தாத்தா முன் நின்று கொண்டு) நீ நல்லது என்று நினைத்துச் செய்வதெல்லாம் நல்லதாகத்தான் இருக்கவேண்டும் என்று ஏதாவது அவசியமுண்டா தாத்தா? நீ நல்லது என்று நினைத்துச் செய்யலாம். அது சம்பந்தப்பட்டவர்கள் வரையில் கெடுதலாக முடியாது என்று யார் சொல்லமுடியும்? கடவுள் உனக்கு ஏதாவது பத்திரம் எழுதிக் கொடுத் திருக்கிறாரோ?
விசாலம்: (உஷார்ப்படுத்துகிற குரலில்) பேபி!
விசுவம்: அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசாதே பேபி!
பேபி: எது அப்பா அதிகப்பிரசங்கித்தனம்? நான் பேசுவதா? அல்லது தாத்தா சொல்கிற மாதிரி இதுதான் உனக்கு நல்லது, இதைத்தான் நீ செய்ய வேண்டும் என்று பிறரைக் கட்டாயப்படுத்துவதா? எது அதிகப் பிரசங்கித்தனம்?
விசாலம்: இது உன் விஷயம் அல்லவே, பேபி – பேசாமல் – தான் இரேன்!
பேபி: என் விஷயமாக இல்லாததனால்தான் என்னால் இவ்வளவு தூரம் பேச முடிகிறது. என் விஷயமாக இருந்திருந்தால் இவ்வளவு தூரம் ஓடவிட்டிருப்பீர்களா நீங்கள்? பாபம்! சொந்த விஷயத்தில் அந்தப் பெண் பேச முடியாமல் தவிக்கப் போகிறதே என்றுதான் நான் அடித்துப் பேசுகிறேன்.
விசுவம்: ரொம்ப சமர்த்துத்தான் போ. நீ படித்த படிப் பெல்லாம் இந்த மாதிரிப் பேசத்தான் உனக்கு உதவுகிற தாக்கும்!
பேபி: நான் படித்ததற்கெல்லாம் கூடப் பணம் தந்தவர் தாத்தாதான்!
விசாலம்: சொந்த சிகரெட் செலவுக்கேதான் உங்கப்பாவிடம் பணம் கிடையாதே!
பேபி: தாத்தா! நான் சொல்கிறேன் கேளு. நல்லது கெட்டது என்று நீ சொல்லிக்கொண்டு நளினியின் இஷ்டத்துக்கு விரோதமாக ஏதாவது தீர்மானம் பண்ணி அவளைக் கட்டாயப்படுத்தினால் அது சரியல்ல என்று நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன். ஆமாம்.
வேணு: இவ்வளவு விவாதமும் காரசாரமான பேச்சும் அவசியமேயில்லை. நளினி அந்த ராஜாராமனைக் கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்து விட்டாள்!
தாத்தா: (அலக்ஷியமாக) யார் அது, ராஜாராமன்! என்னைக் கேட்காமல், எனக்குத் தெரியாமல், எப்படி அந்த நளினிக்கு யாருக்காவது எதையும் வாக்களிக்கத் தைரியம் வந்தது?
வேணு: இதற்கெல்லாம் தைரியம் தானாக வருவதுதான் தாத்தா! அவள் நமக்குக் கடமைப்பட்டவள் என்பதற்காக, நளினியின் வாழ்வை நீ குலைப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க நாங்கள் சம்மதிக்க மாட்டோம்.
தாத்தா: (ஏளனமாக) நாங்கள் என்றால்….நீயும் வேறு யாரும்?
வேணு: நானும்… (மேலும் சொல்லாமல் தயங்குகிறான்.)
பேபி: ஏன் தயங்குகிறாய் வேணு? நளினிக்குத் தன் மனசுக்குகந்த மணாளனைத் தேடியெடுத்துக் கொள்ள உரிமையுண்டு என்பதை நிலைநிறுத்த ஊரே திரண்டு வரும் தாத்தா. அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் நீ செய்துபார் தெரியும்!
தாத்தா: நீயே ஊரைக் கூட்டி அமர்க்களப்படுத்துவாயாக்கும்!
பேபி: வேண்டுமானால் இத்தனை செய்தேனே என்று அங்கலாய்த்துக்கொள்ளலாம். நன்றி கெட்டவள் என்று நளினியைத் தூற்றலாம். அவள் மனம் கஷ்டப் படும்படி ஏதாவது சொல்லலாம். அவ்வளவுதான்!
தாத்தா: என் வீட்டிலேயே பெண் கல்வி இவ்வளவு தூரம் முற்றிவிட்டது என்று எனக்கே தெரியாமல் போய்விட்டது! தெரிந்துகொள்ளாதது மடத்தனம் தான்.
பேபி: அதைத்தான் நானும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். தாத்தாவுடைய காலம் வேறு; இந்தக் காலம் வேறு. அந்தக் காலத்தில் நடந்த மாதிரியெல்லாம் இந்தக் காலத்தில் நடக்கும் என்று எதிர்பார்ப்பதுதான் தவறு.
தாத்தா: என் பெண்களை எல்லாம் விட நான் நளினியிடம் அன்பு வைத்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். அவளுக்கு நல்லது எது…
பேபி: நல்லது, நன்மை யென்று பேசுகிற தாத்தா சற்றே யோசித்துப் பார்த்தாரானால் தெரிந்துவிடும். அவரே சிந்தித்துப் பார்த்துச் சொல்லட்டும். இந்தக் குடும்பத்திலே இங்கு கூடியிருக்கிற எல்லோருக்குமே நல்லது செய்வதாக எண்ணித்தானே தாத்தா இத்தனை நாளும் ஏதேதோ செய்து வந்திருக்கிறார். நல்லது என்று தாத்தா நினைத்தது எத்தனை பேர் விஷயத்திலே கெடுதலாக முடிந்திருக்கிறது என்று தாத்தாவே சிந்தித்துப் பார்த்துச் சொல்லட்டும்.
தாத்தா: நான் செய்தது ஏதாவது இந்தக் குடும்பத்தில் யாருக்காவது நல்லதல்லாமல்….
பேபி: (சவால் விடுகிற குரலில்) இங்கு எல்லோரும்தான் இருக்கிறோமே! அவரவர்கள் மனச் சாக்ஷிக்கு விரோத மில்லாமல் சொல்லட்டுமே! எத்தனை பேர் விஷயத்தில் தாத்தா நல்லது என்று செய்தது பலித்தது என்றுதான் பார்க்கலாமே!
விசாலம்: (அதட்டலாக) இதென்னடி. பேபி இது!
பேபி: எல்லோருடைய மனசிலும் இருப்பது தாத்தாவுக்கும்தான் தெரியட்டுமே அம்மா. உண்மையைக் கண்டு பயந்து ஒளிவது நல்லதல்ல.
தாத்தா: சொல்லட்டுமே! நான் செய்ததில் திருப்தியடை யாதவர்கள் வாய் திறந்து சொல்லட்டும். (சிறிது தாமதித்து, யாரும் பதில் சொல்லாததைக் கண்டு) ஒரு வருக்குமே திருப்தி தரும்படியாக நான் ஒன்றுமே செய்ததில்லையா? நிஜம்தானா இது!
[யாரும் பதில் தரவில்லை. அரை நிமிஷ மௌனத்துக்குப் பிறகு]
சிவன்: அப்படியில்லை அப்பா! ஓரளவு வரைக்கும்தான் நாம் இந்தக் காலத்தில் பெண்களையும் பிள்ளைகளையும் அடக்கிவைக்க முடியும். சுதந்தரத்தை இழந்தவர்கள் தங்கள் வாழ்க்கை வேறு திருப்பங்களில் திரும்பியிருக்கக் கூடாதா, வேறு வழிகளில் சென்றிருக்கக் கூடாதா என்று எண்ணிப் பார்த்து மனம் புழுங்குவது என்பது இப்பவெல்லாம் சகஜமாகிக் கொண்டிருக்கிறது!
பேபி: நான் வயசில் சின்னவள்தான். இருந்தாலும் யோசித்துப் பார்த்து இதுவே சரி என்று நான் ஒரு முடிவுக்கு வரும்போது தாத்தாவும் யோசித்தால் அதே முடிவுக்குத்தானே வர முடியும்?
தாத்தா: (தனக்குள் பேசிக்கொள்கிற மாதிரி) என்ன பைத்தியக்காரன் நான்! நல்லது, நன்மை தரும் என்று எண்ணியேதான் நான் இன்றுவரை எல்லாக் காரியங் களையும் செய்துவந்திருக்கிறேன்; அது சில சந்தர்ப்பங்களில் நன்மை பயக்காவிட்டால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பு? அது என் குற்றமாகுமா?
சிவன்: யாரும் உன்னைக் குற்றம் சாட்டவில்லை யப்பா! நல்லதுடன் கெட்டதற்கும் நீயே பொறுப்பேற்றுக் கொள்வதை விட, அவரவர்களே இரண்டுக்கும் பொறுப் பேற்றுக்கொள்ளட்டும் என்று நீ விட்டுவிடுவதில் தவறு என்ன?
பேபி: விஷயம் தெரிந்தவர்கள் தங்கள் தங்கள் காரியத் துக்குத் தாங்களே பொறுப்பேற்பதுதான் நல்லது! நியாயம்!
லீலா: கை காயறது தாத்தா! பேபி மனசிலே சிவனை நினைத்துண்டு ராத்திரி பூராவும் பேசிண்டிருப்பாள், தாத்தா. வா நம்ப போகலாம்!
பேபி: இந்தாடி லீலா!
விசுவம்: பேஷ்! பேஷ்! நளினியின் சுயம்வரத்தைப்பற்றி இப்படிப் பேசுவதற்குக் காரணமில்லாமலா போய்விடும் என்று எண்ணினேன்! பேஷ்! Out of the mouth of babes….
தாத்தா: எழுந்திருக்கலாம். கை காயறது. மனசும் காயறது!
[எல்லோரும் எழுந்திருக்கிறார்கள்.]
விசாலம்: (தன் கணவனிடம் ரகசியமாக) சிவனுக்கு என்ன குறைவு?
விசுவம்: சிவனுக்குக் குறைவு உண்டென்று யார் யாரிடம் சொன்னார்கள். நம்ப பெண் நம்ப ரெண்டு பேரையும் விடக் கெட்டிக்காரி என்று தான் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டேன். அவ்வளவுதான்.
[தாத்தா மேடையில் இல்லை. கை அலம்பப் போனவர் மறைவிலிருந்து ஆனால் உரக்க]
விஷயம் இவ்வளவு முற்றிவிட்டதா? இதுவரையில் தெரிய வில்லையே!
[எல்லோரும் போகிறார்கள். சுவர்க் கடிகாரம் மணி பத்தரையடிக்கிறது.]



