
நல்லவர்
க. நா. சுப்பிரமணியம்
அங்கம் 4
காட்சி 1
[தாத்தா ராமச்சந்திரனின் மாளிகையின் முன்னறை. பாராட்டுக் கூட்டத்துக்கு மறுநாள் காலை முன்னறையில் ஸோபா ஸெட்டுகளும் ஜன்னல் திரைகளும் பூந்தொட்டிகளும் அலங்காரமாக இருக்கின்றன. ஒரு மூலையில் ஒரு அலமாரியில் அழகாக ஒரு நூறு புஸ்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக் கின்றன.
தன் நீண்ட கூந்தலைப் பின்னிக்கொண்டே ஜன்னல் வழியாகத் தோட்டத்துக்குள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் பேபி. கை பின்ன, மனம் சிந்தனையில் ஊசலாட, வாய் ஒரு சினிமாப் பாட்டை முணுமுணுக்க நின்றுகொண்டிருக்கிறாள் பேபி.
உள்ளேயிருந்து வந்த சிவன் ஒரு நிமிஷம் அவளையே பார்த்துக்கொண்டு நிற்கிறான்.
சிவன்: பார்த்துக்கொண்டே ஒரு கல்பகாலம் இருக்கலாம்.
[திடுக்கிட்டவளாகப் பேபி திரும்புகிறாள். பிறகு சமாளித்துக் கொண்டு பின்னலைத் திருத்திவிட்டுக் கொண்டு சிவனைப் பார்த்தபடி ஒய்யாரமாக ஜன்னலில் சாய்ந்து நிற்கிறாள்.]
சிவன்: இப்படி ஒரு கல்பகாலம் பார்த்துக்கொண்டே யிருக்கலாம்.
பேபி: இரண்டு கல்பகாலம் ஆன பிறகு என்ன செய்வதாம்!
சிவன்: அது சரி. நேற்று ராத்திரி என்ன தாத்தாவை அப்படி வெளுத்துக் கட்டிவிட்டே!
பேபி: பின்னே என்ன? எப்பொழுதாவது யாராவது தைரியமாகச் சொல்லவேண்டியதுதானே! விஷயத்தை மூடி வைத்து என்ன லாபம்!
சிவன்: அது சரி, பேபி! இருந்தாலும் நமக்கேன் இந்தப் பொல்லாப்பு என்று தான் எல்லோரும் ஒதுங்கிப் போவார்கள்!
பேபி: ஒதுங்கிப் போய்க்கொண்டே யிருந்தால் நம் விஷயம் என்று வரும்போதும் தோல்வியடைய வேண்டியது தானே.
சிவன்: அப்பா எவ்வளவு பிடிவாதக்காரரோ அவ்வளவு பிடிவாதக்காரனில்லையா நானும். நம் விஷயத்தில் இன்னும் தெளிவாகச் சண்டை போட்டிருக்கலாம்….
பேபி: அதென்ன அப்படி? நளினி மட்டும் என்ன பாவம் பண்ணினாளாம்! அவள் எப்படியாவது போகட்டும்- நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நாம் நினைக்கலாமா? அது சரியா?
சிவன்: என்னையே மடக்க ஆரம்பித்து விடுகிறாயே! அப்படிச் சொன்னேனோ நான்? தன் விஷயத்தை நளினியால் இன்னும் நன்றாகவே சமாளித்துக்கொள்ள முடியும் என்றுதான் நான் நினைத்தேன்.
பேபி: அதென்னவோ – இப்படியே தாத்தா இஷ்டப்படி எல்லாவற்றையும் போகவிட்டுக் கொண்டிருந்தாலும் தான் அதற்கென்ன முடிவு?
சிவன்: இருந்தாலும் நம்ப விஷயம் வியவகாரத்துக்கு வரும்போது நாம் இந்தச் சண்டையை போட்டிருக்கலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
பேபி: இந்தப் புருஷர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை நம் விஷயமும் இப்போது விவாதத்துக்கு வந்துவிட வில்லை என்று நீ எண்ணிக்கொண்டிருக்கிறாயா?
சிவன்: சந்தடி சாக்கிலே லீலா நம்ம குட்டையும்தான் போட்டு உடைத்துவிட்டாளே!
பேபி: எல்லாம் தன்னிஷ்டப்படியேதான் நடக்க வேண்டும் என்று உத்தரவு போடுகிற குரலில் தாத்தா பேச ஆரம்பித்தது தான் எனக்குக் கோபம் வந்தது.
சிவன்: தன் குடும்பத்தாரைப் பற்றிய வரையிலாவது சரி தான். நளினியையும் தன்னால் கட்டாயப்படுத்த ஓரளவு முடியும் என்று அப்பா சொன்னபோது, என்னால்….
பேபி: அதுதான் ஆண்பிள்ளைச் சிங்கம் மாதிரி வாயை மூடிக்கொண்டு, நடப்பது நடக்கட்டும் என்று பேசாதிருந்து விட்டாயாக்கும்!
சிவன்: நளினிக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு பேச நீ இருக்கும்போது, நான் எதற்காகக் குறுக்கிட வேண் டும் என்று தான் பேசாதிருந்தேன் என்று வைத்துக் கொள்ளேன்.
பேபி: சமயம் அறிந்து ஒதுங்கிக் கொள்கிற ஆண்பிள்ளைகள் அதிருஷ்டசாலிகள்தான்…. அதிருக்கட்டும். காலையில் எட்டு மணிக்கு நளினியை வரச் சொல்லச் சொன்னாரே- சொல்லி விட்டாயா?
சிவன்: சொல்லிவிட்டேன். நளினி மட்டும் தனியாக வரமாட்டாள்!
பேபி: வேறு யாரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வரப் போகிறாள்?
சிவன்: அந்த ராஜராமனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வருவதாக அவள் சொன்னாள்.
பேபி: நீ சொன்னாயா?
சிவன்: அதெல்லாம் ஒன்றுமே நான் சொல்லவில்லை. அவளாகவேதான் இந்தச் சந்தர்ப்பத்தில், தாத்தா வேறு எதுவும் முடிவாகச் செய்து விடுமுன், விஷயத்தை அவருக்குத் தெரிவித்து அனுமதி பெற்றுவிட வேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னாள். என் யோசனை ஒன்றும் இல்லை இதிலே!
பேபி: அதுவும் நல்லதுதான் என்று தோன்றுகிறது எனக்கு.
(தடதடவென்று ஓடி வருகிறாள் லீலா.)
பேபி: என்ன அவசரம் கொள்ளை போகிறது? கண் மண் தெரியாமல் ஏன் இப்படி ஓடி வருகிறாய்? லீலா!
லீலா: தாத்தா கார்த்தாலை முதல் இது வரையில் எட்டுத் தடவை என்னைக் கேட்டுவிட்டார்.
பேபி: என்னடி கேட்டார்?
லீலா: (தாத்தா பேசுகிற மாதிரியே பேசுகிறாள்): “லீலா நீயே சொல்லு; நான் நல்லவனா இல்லையா, சொல்லு.”
சிவன்: அடி போக்கிரி!
பேபி: நீ என்னடி பதில் சொன்னே அதற்கு?
லீலா: உலகத்திலே எல்லோருமே நல்லவாதான்னு பதில் சொன்னேன்,பேபி.
சிவன்: பொல்லாத குட்டிதான் இது!
பேபி: இந்தப் பதில் நிச்சயமாகத் தாத்தாவுக்குத் திருப்தி அளித்திராது!
சிவன்: இன்னமும் தா……..அப்பா நளினியும் ராஜாராமனும் கலியாணம் செய்துகொள்வதற்குச் சுலபத்தில் சம்மதித்து விடுவார் என்று எனக்குத் தோன்றவில்லை. பே
பி: (பிடிவாதமாக) தாத்தா சம்மதிக்கிறாரோ இல்லையோ, அந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்து விடுவது நம் பொறுப்பு!
சிவன்: அப்படி ஒன்றும் சுலபமாக நிறைவேறிவிடக் கூடிய காரியம் அல்ல அது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
பேபி: ஆண்பிள்ளைகளே பயந்தாங்கொள்ளிகள்தான்!
சிவன்: ஆண்பிள்ளைகள் தைரியசாலிகளாக இருந்த காலம் போய் விட்டது; அதற்கென்ன செய்வது?
பேபி: எதுவும் பிரமாதமாக ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடாது. தாத்தா – நம்ப தாத்தா உண்மையிலேயே நல்லவர்தான். தானாகவே இந்த விஷயம் பற்றிச் சிந்தித்துப் பார்க்க அவர் தெம்பில்லாமல் இருந்துவிட்டார். இப்போது நான் தெளிவாக, அழுத்தமாகச் சொன்ன பிறகு. தன் மனோபாவத்தை மாற்றிக் கொண்டிருப்பார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
சிவன்: எழுபது வருஷத்துப் பழக்கம் அவ்வளவு சுலபத்தில்
பேபி: அப்படியானால் இன்னும் கொஞ்சம் அடித்து உறைக்கும்படியாகச் சொல்ல வேண்டியதுதான்!
லீலா: அம்மம்மா வராள்!
[விசாலம் சமையலறைப் பக்கத்துக் கதவு வழியாக உள்ளே வருகிறாள்.]
விசாலம்: என்னடியம்மா சதியாலோசனை அதிகாலையிலேயே ஆரம்பமாகிவிட்டது?
பேபி: நான் என்ன அப்படிச் சதிகாரியோ? இந்த வீட்டில் உள்ள மற்றவர்களைப் போலப் பயந்து ஒதுங்கி ஒதுங்கி அவஸ்தைப்படுவதற்குப் பதில் இனி வருகிற தலைமுறைகளாவது சந்தோஷமாக இருக்கட்டுமே என்கிற நினைப்பில் நினைப்பதைச் சொல்லிவிட்டேன்….
சிவன்: சதியாலோசனையில் முதல் ஐட்டமாக நானும் பேபியும் உனக்கு நமஸ்காரம் பண்ணப் போகிறோம்!
விசாலம்: பண்ணேன். கிழக்கு முகமாக இப்படிப் பண்ணுங்கள்.
[சிவனும் பேபியும் நமஸ்காரம் பண்ணுகிறார்கள்.]
கல்யாணத்தைப் பண்ணிண்டு பேரும் புகழுமாக, ஏழெட்டுப் பெண்ணும் பிள்ளையுமாகச் சந்தோஷமாக இருங்கள்.
லீலா: அம்மம்மாவுக்கு அழுகையே வந்துவிட்டது!
விசாலம்: அழுகையில்லையடா அது கண்ணா!
பேபி: தன்னிஷ்டப்படியே எல்லாம் நடக்கவில்லையே என்று தாத்தாவுக்கு முதலில் வருத்தமாக இருந்தாலும் கூட, பிறகு சரிப்பட்டுப் போய்விடும்!
[மூர்த்தி உள்ளே வந்து சதியாலோ சனையில் கலந்து கொள்கிறார்.]
மூர்த்தி: எங்களையெல்லாம் போலில்லாமல், முதலில் வருத்தப்பட்டுப் பிறகு சந்தோஷமடைவது எவ்வளவோ மேல்.
[கடிகாரம் மணி எட்டடிக்கிறது.]
லீலா: நான் யாரைக் கலியாணம் பண்ணிக்கப் போகிறேன் என்று மத்தியானத்துக்கு மேல் தாத்தாவுக்குச் சொல்வதாக நான் சொல்லி யிருக்கிறேன்.
பேபி: அடியம்மா! பெரிய பிரச்னை தான் !…. அதோ நளினியும் ராஜாராமனும் வந்துவிட்டார்கள்.
மூர்த்தி: (அவனையே பார்த்துக்கொண்டு) யார் அது ராஜாராமன்? நளினியின் சாய்ஸா? முகம் களையாக இருக்கிறது. பொருத்தமான ஜோடிதான்!
விசாலம்: (சிவனைப் பார்த்து) இரண்டு பேரையும் சேர்த்து நீதான் வரவழைத்திருக்கிறாய் என்று அப்பா இப்போ உன்னைக் கோபித்துக் கொள்ளப் போகிறார்
பேபி: கோபித்துக் கொள்ளட்டுமே அம்மம்மா! அதனால் என்ன? உண்மையில் சிவனுக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று அறிந்ததும், தானே கோபம் சரியாகப் போய் விடுகிறது!
(நளினியும் ராஜாராமனும் தோட்டத் துக்குப் போகும் கதவு வழியாக உள்ளே வருகின்றனர். அங்கிருப்பவர்களுக்கு வணக்கம் சொல்லு கின்றனர்.)
சிவன்: நமஸ்காரம் ராஜாராமன். வா நளினி.
பேபி: நமஸ்தே, நளினி. நமஸ்தே, ராஜாராமன்.
ராஜாராமன்: முதலில் நீ போய்த் தாத்தாவைப் பார்த்து விட்டு வந்துவிடு, நளினி.
லீலா: ஆமாம் நளினி. நானும் உன்னோடு வரேன். தாத்தா கொஞ்சம் கோபமாகத்தான் இருக்கா. நான் வந்து சொன்னால் சரியாகப் போயிடும்!
நளினி: வா, லீலா, போகலாம்.
[லீலாவும் நளினியும் போகிறார்கள், தாத்தா ராமச்சந்திரன் இருக்கும் அறைப் பக்கம்.]
சிவன்: உங்கள் உத்தியோக அப்பாயிண்ட்மெண்டு ஆர்டர் வந்துவிட்டது என்றீர்களே!
ராஜாராமன்: ஆமாம். நேற்றுத்தான் வந்தது.
சிவன்: எப்போது போய்ச் சேரவேண்டும்?
ராஜாராமன்: அடுத்த மாதம் பதினைந்து தேதிக்கு.
சிவன்: டையம் போதுமானது இருக்கிறது. கல்யாணத்தை எல்லாம் ஒரு நல்ல நாள் பார்த்து முடித்துக் கொண்டு, நளினியையும் உடன் அழைத்துப் போக….
ராஜாராமன்: (கவலையுடன்) என்ன மிஸ்டர். சிவன், எனக்கு இதுதான் மிகவும் கவலையாக இருக்கிறது. நளினிக்கு நான் தகுதியற்றவன் என்று தாத்தா ஏதாவது ஆக்ஷேபம் சொல்லப் போகிறாரே என்றுதான் எனக்குப் பயமாக இருக்கிறது.
பேபி: (தானாக வந்து பேச்சில் கலந்து கொள்ளுகிறாள், ராஜாராமனின் கூச்சத்தையும் பொருட்படுத்தாமல்). நளினியின் விருப்பத்துக்கு விரோதமாகத் தாத்தா ஒன்றும் சொல்ல மாட்டார். நீங்கள் பயப்பட வேண்டி யதேயில்லை.
விசாலம்: எங்களையெல்லாம் விடக்கூட என் அப்பாவுக்கு. நளினியிடம் விசேஷ ப்ரியம் உண்டு. ஆரம்ப காலத்தில் அதைப்பற்றி எண்ணி நான்கூட ஆத்திரப்பட்டதுண்டு!
பேபி: நளினியிடம் அதிக நாள் யாரும் ஆத்திரம் வைத்துக் கொள்ள முடியாது என்பது நிச்சயம்!
ராஜாராமன்: எனக்குத்தான் பயம்! நளினியைப் பற்றித் தாத்தா மனசில் வேறு ஏதாவது திட்டங்கள் வைத்துக் கொண்டிருந்தாரானால்
மூர்த்தி: இவ்வளவு தூரம் செய்தவராயிற்றே. அவர் மனசில் நளினியைப் பற்றி ஒரு திட்டம் இல்லாமல் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாமா?
ராஜாராமன்: (தயக்கத்துடன்) இரண்டு மாதங்களுக்கு முன் நளினி என்னை மணக்கச் சம்மதம் தெரிவித்த போது, நான் சொன்னேன் – உடனடியாகத் தாத்தாவிடம் இது விஷயத்தைச் சொல்லி விடலாம் என்று. நளினிதான், பின்னர் உரிய காலத்தில் சொல்லலாம் என்று தடுத்துவிட்டாள்.
பேபி: (பெருமையாக) எங்கள் நளினி புத்திசாலிதான்.
சிவன்: இது உரிய காலம்தான். விஷயத்தைச் சொல்வதற்கு இது சரியான சமயம்தான்.
பேபி: தாத்தாவுக்கு என்ன ஆக்ஷேபம் இருக்கக்கூடும்?
விசாலம்: நளினி கலியாணம் செய்துகொண்டு டெல்லி என்று கிளம்பி விட்டால் இங்கு வேலைகளுக்குச் சிரமப் படுமே என்று வேண்டுமானால் அப்பா ஆக்ஷேபம் சொல்லாம்!
சிவன்: ஆமாம். என்னதான் சொன்னாலும் சங்கத்தின்
வேலைகளை நளினி மாதிரி செய்வதற்கு தா………. அப்பாவுக்கு வேறு ஆசாமி கிடைப்பது துர்லபம்தான்!
மூர்த்தி: தானே தன் சொந்த அனுபவத்தில் இந்த மாதிரி சபைகளின் அவசியத்தை உணர்ந்து மலர்ந்தவள் அல்லவா?
பேபி: அதற்காக அவள் கல்யாணமே செய்துகொள்ளக் கூடாது, தாத்தா பக்கத்திலிருந்து நகரவே கூடாது என்று தடை விதிக்க முடியுமா என்ன?
சிவன்: அப்படிச் சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது.
விசாலம்: உங்க தாத்தா அப்படி ஒரு நாளும் சொல்ல மாட்டாரே.
பேபி: அதோ அடுத்த அறையில் தாத்தாவும் நளினியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் கேட்கலாமே!
விசாலம்: லீலா கூடச் சாதுவாகச் சத்தம் போடாமல் நளினியின் கையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறாளே! ஏதேது?
(தாத்தாவும் நளினியும் லீலாவும் நிற்பது தெரியவில்லை. ஆனால் அவர் கள் சம்பாஷணை தெளிவாகவே கேட்கிறது.)
தாத்தா: உனக்காக நான் வேறு பிளான்கள் போட்டு வைத்திருந்தேன் நளினி. உன்னை என் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக் கொள்வதாகத் திட்டமிட்டிருந்தேன் நான்.
நளினி: இப்பவும் நான் உங்கள் குடும்பத்தில் ஒருத்தி தானே? சட்டப்படி யல்லவென்றாலும், எனக்குத் தாய் தந்தை பாட்டன் பாட்டி எல்லாமே நீங்கள்தானே தாத்தா!
தாத்தா: இது நீ ஆழ்ந்து அறிந்து செய்துகொண்ட முடிவுதானா குழந்தாய்! இதை நிறைவேற்றாவிட்டால் உன்னால் சமாளித்துக் கொள்ள முடியாது என்கிறாய் நீ- இல்லையா?
நளினி: அவரும் என்னை விரும்பினார். என் மனசும்
அவரை நாடியது. நான் வாக்குத் தந்துவிட்டேன்.
தாத்தா: வேறு பெரிய இடமாக உனக்குப் பார்த்திருப்பேன் நளினி.
நளினி: எனக்கு ஏற்காத பெரிய இடம் எதிலும் என் னால் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியிருக்க முடியாது தாத்தா! என்ன சொன்னாலும் நான் சிறிய இடத்தவள் தானே!
தாத்தா: இதுதான் உனக்கு நல்லது என்று நீ திடமாக நம்புகிறாய், இல்லையா?
நளினி: மிஸ்டர் ராஜாராமனைப்பற்றி உங்களுக்கும்தான் தெரியுமே தாத்தா. நான் என்ன..
[மூவரும் முன்னறைக்குள் வருகின் றனர். முன்னறையில் இருப்பவர் களைக் கவனிக்காத மாதிரியே நளினி யும் தாத்தாவும் தொடர்ந்து பேசு கிறார்கள்.]
தாத்தா: நான் ராஜாராமனைப் பற்றிப் பேசவேயில்லை. அவன் நல்லவன், குணசாலி, பொறுப்புணர்ச்சி யுள்ளவன் என்பதெல்லாம் எனக்கும் தெரியும். உனக்குச் சகல விஷயங்களிலும் ஏற்றவன் என்றும் தெரியும் எனக்கு. நான் உன்னைப் பற்றியும் உன் சந்தோஷத்தைப் பற்றியும்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
நளினி: என்னைப் பற்றிய வரையில் முடிவு இதுதான் தாத்தா. உங்களைக் கேட்காது இப்படி முடிவு செய்தது தவறுதான். உங்களுக்கு எவ்வளவோ கடமைப்பட்டுள்ள நான்….
தாத்தா: அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நீ உன் மனசிலுள்ளதைத் தெளிவாக எனக்குத் தெரிவித்துவிடு.
நளினி: மணம் செய்துகொள்ள எனக்கு உங்கள் அனுமதி உண்டானால், நான் ராஜாராமனைக் கல்யாணம் செய்து கொள்வேன். இல்லாவிட்டால்….
தாத்தா: இல்லாவிட்டால்….?
நளினி: நான் கல்யாணமே செய்து கொள்ளாமல், ஆயுள் பூராவும் இப்படியே சங்கக் காரியங்களைக் கவனித்துக் கொண்டு இருந்து விடுகிறேன்.
தாத்தா: (தீர்மானமாக) நீ கல்யாணம் செய்துகொண்டு மற்றப் பெண்களைப் போல நிறைவான வாழ்வு வாழ வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். உன்னிஷ் டப்படியே நடக்கட்டும் நளினி. வேறு என்ன நான் சொல்ல இருக்கிறது?
நளினி: (சந்தோஷம் ததும்பும் குரலில்) மிஸ்டர் ராஜா ராமன்!
ராஜாராமன்: (பாய்ந்தோடிப் போய்) இதோ வந்துவிட்டேன். நமஸ்காரம் செய்கிறேன் தாத்தா.
[நளினியும் ராஜாராமனும் சேர்ந்து நமஸ்கரிக்கிறார்கள்.]
தாத்தா: உங்கள் இருவருக்கும் என் ஆசிகள்! சீக்கிரமே கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் நடக்கட்டும். சங்கத்திலேயே நடக்கட்டும்.
பேபி: அவர்களை விட நீ அதிகமாக அவசரப்பட முடியாது தாத்தா.
தாத்தா: நளினி! நான் ஒன்று சொல்கிறேன். உனக்கே தெரியாது உன் வாழ்வில் உள்ள சுக துக்கம் இரண்டுக்குமே இந்த பேபிக்குள்ள பொறுப்பு உனக்குத் தெரியாது.
பேபி: தாத்தா பொய் சொல்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை நளினி.
நளினி: இங்கு ஏதோ நடந்திருக்கிறது – எனக்குப் புரியவில்லை!
லீலா: உனக்குப் புரியும்படியாக நான் சொல்கிறேன், நளினி.
நளினி: அநாதையான நான் இன்றுவரை ஒவ்வொன் றுக்குமே பிறருக்குக் கடன் பட்டுத்தான் வாழ்ந்து வந்திருக்கிறேன். பிறர் விஷயத்தில் வேண்டுமானால் இந்தக் கடன் பட்ட உணர்ச்சி சில சமயங்களில் சுருங்கி விடலாம். என் விஷயத்தில் இந்தச் சங்கத்துக்கும் தாத்தாவுக்கும் அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் நான் கடமைப்பட்டிருப்பதை எப்படி மறக்க முடியும்?
ராஜாராமன்: தகுதி என்பது சிறிதுமற்ற என்னிடம் நளினி போன்ற ஒரு பெண்ணை, உங்களிஷ்டத்துக்குப் விரோதமாக, ஒப்படைக்க நீங்கள் சம்மதித்ததற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? எங்கிருந்தோ வந்து எப்படியோ, உங்கள் குடும்பத்தில் நானும் ஒருவனாகப் புகுந்துகொண்டு விட்டேன். இதற்கெல்லாம் நான் பிரதி என்ன செய்ய முடியும்?
தாத்தா: ஒரு ஆயுள் காலம் பூராவிலும் ஒரு நாள் பொழுதுகூட நளினி தன்னுடைய இந்தத் தீர்மானத்தை எண்ணிக் கண் கலங்காதிருக்கும்படி வாழ்க்கை நட விட்டாயானால், அதுவே நீ எனக்குச் செய்யக் கூடிய சிறந்த கைம்மாறு.
மூர்த்தி: சபாஷ்!
தாத்தா: சிவம்! சீக்கிரத்திலேயே ஒரு முகூர்த்தத்தைப் பார்த்து….
விசாலம்: அே த முகூர்த்தத்திலேயே சிவனுக்கும் பேபிக்கும் திருமணத்தை முடித்து வைத்து விடலாம்.
தாத்தா: அதுவும் நிச்சயமாகி விட்டதா?
லீலா: உனக்குத் தெரியாதா தாத்தா? ஒரு மாசமாகவே அது நிச்சயமாகி இருக்கிறதே தாத்தா!
தாத்தா: (பெருமூச்சு விடுகிறார்). உம். எனக்கு உலகத்திலே ஒருவரும் ஒரு வேலையும் பாக்கி வைக்கவில்லை போல இருக்கிறது. இனிமேல் நான் சங்கத்துப் பக்கம், சங்கத்து அலுவல்களைக் கவனிக்கக் கூடப் போக மாட் டேன். சிவனும், பேபியும்தான் அதையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நளினி: அவற்றைப் பார்த்துக் கொள்ள அவர்களைவிடச் சிறந்தவர்கள் வேறு யார் கிடைப்பார்கள்?
லீலா: என் கல்யாணம்தான் இன்னும் நிச்சயமாகவில்லை! என்ன செய்வது?
(திரை)
முற்றும்.
★ ★ ★



