நல்லவர்
க. நா. சுப்பிரமணியம்

அங்கம் 3

காட்சி 1

[அதே இரவு: தாத்தாவின் படுக்கை அறை. ஸோபாவும் திண்டும் தீவாஸமாக இருக்கிறது.உயர மின்சார விசிறி சுற்றுகிறது. இனிமையாகக் கடிகாரம் மணி பன்னிரண்டடிக்கிறது.

தாத்தா ஈஸிசேரில் சாய்ந்து வாசிப்பு விளக்கில் ஏதோ புஸ்தகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

விரல்களைச் சொடுக்கிக்கொண்டே கொட்டாவி விடுகிறார்.]

தாத்தா: மணி பன்னிரண்டாகிவிட்டதா? அப்பாடி களைப்பாகத்தான் இருக்கிறது. டிக்கென்ஸின் பிக்விக் என்றால் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. எண்பதாவது தடவையாகப் படிப்பதும் கூடச் சுவாரசியமாகவேதான் இருக்கிறது. இருந்தாலும் நேரமாகி விட்டது. அடையாளம் வைத்து விட்டுப் படுக்க வேண்டியதுதான். இன்னமும் கண் விழித்தால் நாளைக்கு உடம்பு சரியாக இராது. கவனிப்பதற்கு நளினியின் பிரச்னை வேறு பெரிதாக இருக்கிறதே! வயசு எழுபதுக்கு மேலாகிவிட்டாலே உடம்பு தளரத் தான் தளர்ந்துவிடுகிறது. இறுக்கமாகவும் இருக்கிறதே.

[மின்சார விசிறியை இன்னும் வேக மாக ஓடவிடுகிறார். விளக்கையும் அணைக்கிறார்.]

ம்…. இன்று என்னவோ போல இருக்கிறது. மனசு சரியாக இல்லை. உலகமே அறியாத சிறு பெண் ஏதோ சொல்லப்போக இன்று இரவு எனக்குத் தூக்கமே இல்லாது போய்விடும் போல இருக்கிறது. பைத்தியக்காரத்தனம்? (கொட்டாவி விடுகிறார்.)

யாரோ ராஜாராமனாம்! அவனுக்கு வாக்குக் கொடுத்து விட்டாளாம் இந்த அசட்டுப் பெண்! நன்றாக இருக்கிறதே கதை! படித்துப் பட்டம் வாங்கிக் கொண்டு காலேஜை விட்டு வெளியே வந்து விட்டாலே எல்லாம் தெரிந்த மாதிரித்தான்!

(கை விரலைச் சொடுக்கிக்கொண்டே மறுபடியும் கொட்டாவி விடுகிறார்.)

தேவி, லக்ஷ்மி, பாண்டுரங்கா, காப்பாற்று. அழகாக இருக்கிறாள் – வாலிபப் பருவம். சம்பாதிக்கிறாள். நல்ல குணமுள்ள பெண். எவனாவது வந்து கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்று சொல்லி ஆசை காட்டி மோசம் பண்ணிவிட்டுப் போய் விடுவான். பிறகு கையைப் பிசைந்துகொண்டு நிற்கும். பிறக்கிற குழந்தையை குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டுப் போகும்…. பரம்பரைக் குணம்!

தாயே! பாகீரதி! படுக்கை கொள்ளவில்லை. விளக்கைப் போடாமலே ஈஸிசேரில் சாய்ந்து பார்க்கிறேன் கொஞ்ச நேரம். (அப்படியே செய்கிறார்.) அப்பாடி! இருந்தாலும் சிறிசுகளுடன் பேச்சுக் கொடுக்கக்கூடாதுதான். தாய்க்குப் பெண்ணை வளர்க்கத் தெரியவில்லை படிப்பும் சேர்ந்து கொண்டது. அவள் இருந்தாளானால்…. அவள்….

[லேசாகக் குறட்டை விடுகிறார். காட்சி மாறுகிறது. அதே மாளிகை தான். ஆனால் இப்போதிருப்பது போல அவ்வளவு வளம் தெரிய வில்லை. அவள் இருக்கிறாள். ஆனால் படுத்த படுக்கையாக இருக்கிறாள். தாத்தா, விசாலம் மற்றும் வருகிற வர்கள் எல்லாருமே வயது குறைவாகக் காட்சி யளிக்கிறார்கள்.]

விசாலம்: அப்பா! அப்பா!

தாத்தா: என்னம்மா விசாலம்?

விசாலம்: அம்மா படுத்த படுக்கையாகி இப்போது இரண்டு மாசத்துக்கும் அதிகமாகிவிட்டதே !

தாத்தா: அதற்கென்ன விசாலம்! கவலைப்படாதே நீ! நம்ப வைத்தியர் கண்ணும் கருத்துமாக அவளைக் கவனித்து வருகிறார். நீ கவலைப்படாதே!

விசாலம்: உனக்கென்னவோ இந்த சித்த வைத்தியரிடம் அபாரமான நம்பிக்கை இருக்கிறது. எனக்கென்னவோ வேறு ஒரு நல்ல டாக்டரிடம் காண்பித்தால் தேவலை என்று தோன்றுகிறது அப்பா,

தாத்தா: அடி அசடே! எனக்குத் தெரியாதா? டாக்டர்களையும் வைத்தியத்தையும் பற்றி உனக்குத் தெரிந்ததை விட எனக்கு அதிகம் தெரியாதா?

விசாலம்: தெரியும்! இருந்தாலும்……..

தாத்தா: உன் அம்மாவுக்கு ஆபத்து என்றால் நான் சும்மா இருந்துவிடுவேனா,சொல்லு.

விசாலம்: அதற்குச் செல்லவில்லையப்பா!

தாத்தா: நீ கவலையே படாதே விசாலம். நான் உள்ள வரையில் நீ கவலையே படாதே! இந்த வைத்தியம், சித்த வைத்தியம் பலிக்காமல் போய்விடாது. இந்த வைத்தியர் அதுவும் சாதாரண மனிதர் அல்ல. தெய்வப் பிறவி. ஆராய்ச்சியாளர். வைத்தியரும் சாதாரண வைத்தியர் அல்ல. உன் அம்மாவுக்கு வந்திருப்பதும் அப்படி ஒன்றும் பிரமாதமான வியாதியுமில்லை. பயப்படாதே நீ! இன்னும் ஒரு மாதத்தில் பார் -அவள் பழையபடி எழுந்து நடமாட ஆரம்பித்து விடுவாள் பாரேன்.

விசாலம்: இன்னொரு டாக்டர் பார்ப்பதும் நல்லதுதானே அப்பா.

தாத்தா: எனக்குத் தெரியும் விசாலம்! வைத்தியர் வரும் நேரமாச்சு….

[சற்று நேரம் கழித்து விசுவம் வரு கிறான். விசாலம் கண் கலங்கி நிற்பதைப் பார்த்து]

விசுவம்: ஏன் விசாலம் கண் கலங்கி நிற்கிறாய்?

விசாலம்: அப்பாவிடம் எப்படிச் சொன்னாலும் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டேன் என்கிறாரே!

விசுவம்: நீ வருத்தப்படாதே விசாலம்! எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் மாம்பலத்தில் இருக்கிறார். அவர் எனக்காக, கூப்பிட்டால் வருவார். நல்ல கை ராசிக்காரர் – அழைத்து வரட்டுமா?

விசாலம்: அப்பா என்ன சொல்லுவாரோ?

விசுவம்: அவசியமானாலொழிய அவருக்குத் தெரியவே வேண்டாமே! அவர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து டாக்டரை அழைத்து வருகிறேனே!

விசாலம்: அது சரியில்லை…..

விசுவம்: சரியில்லைதான். ஆனால் ஆபத்துக்கு என்ன செய்வது? உயிருக்கே ஆபத்து வந்துவிடும் போல இருக்கும்போது என்ன செய்வது, சொல்லேன்.

விசாலம்: அப்படி ஒன்றும் நடந்துவிடாது. கடவுள் நம் பக்கம் இருப்பார். ஆனால் ஒன்று. அம்மா மட்டும் இல்லாவிட்டால் இந்தக் குடும்பம் ஒரேயடியாகச் சீரழிந்து போய்விடும். அதற்கப்புறம் அப்பா போகிற போக்குத்தான்.

விசுவம்: விதி, கடவுள் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக நாம் செய்யவேண்டியதைச் செய்யாமல் இருக்கலாமா?

விசாலம்: இருந்தாலும் அப்பாவுக்குத் தெரியாமல் டாக்டரை அழைத்துவர எனக்கு மனசில்லை.

விசுவம்: என் பொறுப்பாக விட்டுவிடேன் அதை!

விசாலம்: வேண்டாம்! அப்பாவுக்குத் தெரியாத விஷயமா?

விசுவம்: அப்படி நீயும் நினைத்தால் சரிதான். எனக்கொன்றும் ஆக்ஷேபமேயில்லை.

 [ஒரு விநாடி மேடை இருட்டிலே இருக்கிறது. இருட்டுப் பிரிந்து வெளிச்சம் வருமுன் பலர் சேர்ந்து அழும் சப்தம் கேட்கிறது. விசாலத் தின் குரல் பெரிதாக ஒலிக்கிறது.

ஐயோடி யம்மா! எங்களையெல்லாம் இப்படித் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டேயேடியம்மா!

[காட்சி மாறுகிறது. தாத்தா லேசாகக் குறட்டை விடும் சப்தம் கேட்கிறது. மூன்றாவது அங்கத்தின் ஆரம்பக் காட்சிக்கு மாறுகிறது. தாத்தாவின் படுக்கையறை. தாத்தா ஈஸிசேரில் படுத்திருக்கிறார். கடைசியில் இரண்டுதரம் புரளுகிறார். சோம்பல் முறிக்கிறார்.]

தாத்தா: என்ன கெட்ட கனவு இது! அப்பாடி! அப்பாடி! சித்த வைத்திய ஆராய்ச்சியாளனை அவ்வளவு தூரம் நான் நம்பினதே பிசகுதானோ?ம்…..அதைப்பற்றி என்ன இப்போது? அவள் போக வேண்டிய வேளை வந்தது – என்னைத் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டாள். (கொட்டாவி விடுகிறார்)

ஈஸிசேரில் படுத்தால் முதுகையும் வலிக்கும்; கனவுகளும் வரும். படுக்கையிலே படுக்கிறேன். நன்றாகத் தூங்க முடியுமா பார்க்கலாம்…. மணியும் ஒண்ணு ஒண்ணரை மணியிருக்கும் போல இருக்கிறதே!….ஹா! நடராஜா! முருகா! பாண்டு ரங்கா! பழனியாண்டி (மறுபடியும் லேசாகக் குறட்டைச் சப்தம் கேட்கிறது. இரண்டுதரம் புரண்டு படுக்கிறார்.)

சிவன்: அப்பா! அப்பா!

[காட்சி மாறுகிறது. சிவனும் அவன் அப்பா தாத்தா ராமச்சந்திரனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.]

தாத்தா: என்னடா சிவம்! என்ன பதட்டம் இது!

சிவன்: ஒன்றுமில்லையப்பா! நான் கேள்விப்பட்டேனே அது உண்மைதானா?

தாத்தா: எது?

சிவன்: நம்ப நிலத்தை விற்காமல் இந்தப்பூட்டுக்குச் சமாளிக்க முடியாது போல இருக்கிறதே! அது நிஜம்தானா?

தாத்தா: சமாளித்துக் கொள்ளலாமடா; நீ கவலைப் படாதே!

சிவன்: எதற்காகக் கேட்கிறேன் என்றால்……

தாத்தா: நீ எதற்காகக் கேட்டாலும் சரிதான். எது நல்லது என்று எனக்குத் தெரியும். அதை நடத்தி விடுவேன் கவலைப்படாதே!

சிவன்: செக்கடி நிலத்தை விற்காமல் சமாளிக்க முடியாது என்றால் இப்படியே உடனடியாக விற்றால் ஒரு பத்துப் பதினைந்தாயிரம் கூட விலை போகும். பின்னால் நெருக்கடி யான சமயத்தில் விற்கப் போனால் அது சரியானபடி விலை போகாது. அதற்காகத்தான் சொல்கிறேன்.

தாத்தா: தெரியும் சிவம் எனக்கு. ஆனால் அதை விற்க வேண்டிய அவசியமே இல்லாமல் செய்து விட்டேன் நான்.

சிவன்: எப்படி?

தாத்தா: நீ சின்னப் பையன். உனக்கு இந்த விஷயங்களிலெல்லாம் அனுபவம் போதாது!

சிவன்: உண்மைதான் அப்பா. இருந்தாலும் இந்தத் தொண்ணூறாயிரத்தைச் செக்கடி நிலத்தை விற்காமல் நம்மால் இந்தத் தடவை புரட்ட முடியாது போல இருக்கிறதே!

தாத்தா: நீ இவ்வளவு கவலைப்படுகிறாயே – நான் செய்திருக்கிற ஏற்பாட்டையும் சொல்லி விடுகிறேனே! சிவ ஷண்முகத்தை ஒரு லக்ஷம் கேட்டிருக்கிறேன். இரண்டு வருஷங்களில் சிறுகச் சிறுகத் தந்து விடுவதாக வாக்களித்திருக்கிறேன்.

சிவன்: சிவஷண்முகத்தையா? அவன் கிராதகனாயிற்றே! உன்னை எப்போது கவிழ்க்கலாம். எப்படி என்றுதானே காத்திருப்பான். அவன் சமயத்தில் கை விரித்து விடுவான்.

தாத்தா: நான் கேட்டும் தராமல் இருந்துவிட மாட்டான்.

சிவன்: நான் சொல்கிறேனே என்று கேளு அப்பா – சமயத்தில் அவன் கையை விரித்து விடுவான். முன் கூட்டியே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

தாத்தா: நான் எப்பவும் நல்லதையே நாடித் தாண்டா செய்வேன். நீ நிச்சயமாக நம்பலாம். சிவஷண்முகம் பணம் தராமலிருந்து விட மாட்டான். நம் செக்கடி நிலத்தை விற்க வேண்டியே வராது; பாரேன்.

சிவன்: என்னவோ அப்பா! எனக்கு நம்பிக்கையில்லை.

 [ஒரு விநாடி மேடைமேல் யாரு மில்லை. பிறகு தாத்தா ராமச் சந்திரன் தலையில் கை வைத்துக் கொண்டு தனக்குத் தானே பேசிக் கொள்கிறார்:]

சிவம்! இது விஷயத்தில் சின்னவனான உனக்கிருந்த அறிவுகூட எனக்கில்லாமல் போய்விட்டதே! நீ சொன்னபடியேதாண்டா நடந்தது. சிவஷன்முகம் நல்ல சமயம் பார்த்து இரண்டு கைகளையும் பாரபக்ஷ மில்லாமல் ஒரே மாதிரியாக விரித்துத்தான் விட்டான். ரெண்டு மூன்று நாளைக்குள் தொண்ணூறாயிரம் புரட்டுகிற அவசரத்தில், செக்கடி நிலத்துடன், வயலூர் சவுக்குக் காட்டையும் சேர்த்து விற்கத்தான் நேர்ந்தது. சாதாரணமாக லக்ஷம், லக்ஷத்திருபதினாயிரம் போகும். எண்பது எண்பத்திரண்டாயிரம் தான் தேறிற்று.என்ன செய்வது? போனது போனதுதான்! அப்பவே உன் பேச்சைக் கேட்காமல் சிறுவன் சொல்வது என்றும், எனக்குத் தெரியும் என்றும் இருந்தது தவறுதான்!…

(குறட்டைச் சத்தம் லேசாகக் கேட்கிறது. காட்சி மூன்றாம் அங்கத்தின் ஆரம்பத்துக்கு, தாத்தா ராமச்சந்திர னின் படுக்கை அறைக்கு மாறுகிறது. படுக்கையில் தாத்தா புரண்டு படுக்கிறார்.)

தாத்தா: சீ! இதென்ன! இன்று எப்படிப் படுத்தாலும் தூக்கமே வர மாட்டேன் என்கிறது. தூக்கம் வந்ததே என்று கண்ணை மூடினாலும் பழசும் புதுசுமாக சொப்பனங்களாகவே வந்துகொண்டிருக்கின்றனவே! (கைவிரல் களைச் சொடுக்கிக் கொண்டே கொட்டாவி விடுகிறார்.)

ராமா! கிருஷ்ணா! மஹாப்ரபோ! பாண்டுரங்கா!… இந்தச் சிறு பெண் ஏதோ சொல்லப் போக, விவரம் தெரியாமல் ஏதோ விவாதம் செய்ய, நான் இப்படித் தூக்கமில்லாமல் அவஸ்தைப்பட நேர்ந்து விட்டதே! இருந்தாலும் இதை நான் இவ்வளவு ‘ஸீரியஸாக’ எடுத்துக் கொள்ளக் கூடாது. மணி என்ன?

(எழுந்து விளக்கைப் போட்டுப் பார்க்கிறார்).

மூணடிக்கப் போகிறது. பாக்கிப் பொழுதாவது சரியாகத் தூங்கா விட்டால் சிரமம்தான். (விளக்கை அணைக்கிறார்). கண்ணை மூடினால் என்ன கனவு வருமோ என்று பயமாக இருக்கிறது. என் வாழ்வு பூராவுமே தோல்வி மயமாகத் தானா எனக்கு இன்று தோன்ற வேண்டும்? ஒரு அம்சத்தில் கூடவா நான் யாருக்கும் எந்தவிதத்திலும் நன்மை செய்யாதிருந்திருக்கிறேன். இந்த எழுபத்தி மூன்று வருஷங்களில்….அட கடவுளே! (விரலைச் சொடுக்கிக் கொண்டே மீண்டும் கொட்டாவி விடுகிறார்). இனிமேல் கூப்பிடுவதற்குத் தெய்வங்கள் கூடப் பாக்கியில்லை.

உம்…உம்…. இந்த நளினி அவள் விரும்புகிற ராஜாராம னைத்தான் கட்டிக்கொண்டு எக்கேடு கெட்டுத் தொலை யட்டுமே – எனக்கென்ன வந்தது? எனக்கேன் சாகிற வயதிலே இந்த வம்பெல்லாம்? யாரிடமும் எவ்விதப் பாசமும் வைப்பது தப்பு என்று இதனால்தான் நமது பெரியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள். அதை அறிந்து கொள்ள நான் எழுபத்தி மூணு வயசு வரையிலும் காத்திருக்க வேண்டியதாக இருந்ததா? உஷ்…….அப்பாடா. (குறட்டை விடுகிற சப்தம். காட்சி மாறுகிறது. ஸரோஜாவும் மூர்த்தியும் தாத்தாவுடன் சண்டை பிடிக் கிற உத்தேசத்துடன் வந்து நிற்கிறார்கள்.)

சரோஜா: பிடிவாதம் பிடித்து, என்னைப் பாழும் கிணற்றில் தள்ளுகிற மாதிரி இவர் கையில் ஒப்புவித்துச் சதி செய்தாயே, தாத்தா!

மூர்த்தி: பேய்க்குப் புடவையைக் கட்டி என்முன் நிறுத்திப் பெண் என்று சொல்லி என்னை ஏமாற்றி விட்டீர் களே, தாத்தா!

சரோஜா: கிளியை வளர்த்துப் பூனை கையில் தந்து விட்டீர்களே, தாத்தா!

மூர்த்தி: சுதந்தரமாகத் திரிந்துகொண்டிருந்த உல்லாசப் பறவையாகிய என்னைப் பிடித்துக் கூட்டிலடைத்து விட்டீர்களே,தாத்தா!

சரோஜா: குரங்குக்குப் பூ மாலையை அன்பளிப்பாகத் தந்து விட்டாயே,தாத்தா!

மூர்த்தி: காலிலே நாலு டன் னமுள்ள இரும்புக் குண்டைக் கட்டிவிட்டு ஓடுடா பயலே என்று விரட்டி வேடிக்கை பார்க்கிறீர்களே, தாத்தா- இது நியாயமா? தர்மமா? முறையே தானா?

சரோஜா: நீங்கள் எனக்கு இழைத்துவிட்ட தீங்குக்குத் தெய்வமே தான் பார்த்து உங்களைக் கேட்க வேண்டும், தாத்தா!

மூர்த்தி: அதே தெய்வம் உங்களையும் என் சார்பில் கேட்காமல் விடாது, தாத்தா!

தாத்தா: மணி மணியாகப் பிள்ளைகளையும் பெண்களையும் பெற்றுக் கொண்டு, ஒரு கவலையுமில்லாமல், என் ஆதரவிலே ஒருவிதமான கஷ்டமுமில்லாமல் வாழ்கிற உங்களுக்கு இப்போது என்ன குறை வந்து விட்டது, சொல்லுங்களேன்.

மூர்த்தி: நான் கல்யாணம் என்று செய்துகொண்டேனே அதுதான் மஹாப் பெரிய குறை எனக்கு!

சரோஜா: ஒன்றா, இரண்டா, பத்தா,இருபதா? ஒரே மூச்சில் சொல்லி அழ!

மூர்த்தி: அடாடா! ஏழேழு ஜன்மத்துக்கும் போறுமையா, நான் வாழும் இந்த வைபோகம்!

சரோஜா: கல் என்றால், புல் என்றால், மதிக்கலாம். கல்லுமல்லாத, புல்லுமல்லாத புருஷனை என்னவென்று மதிப்பது? மனிதனா அவர்! அல்லவே அல்ல. மிருகம் அதுவும் இந்தக் காலத்து மிருகங்கள்கூட அல்ல. சரித்திர காலத்துக்கு முற்பட்ட காலத்து ஆதி மிருகம் அது.

மூர்த்தி: பெண்ணென் றெண்ணிப் பண்ணிக் கொண் டேனே, அது பேய், தாத்தா, பேய். அதுவும் விக்கிர மாதித்தன் காலத்துக்கு முந்திய காலத்துப் பேய்! தெரிகிறதா, தாத்தா!

சரோஜா: வெளியே யாராவது ஐயாவை ஏதாவது சொல்லிவிட்டால் போதும். வீட்டிலே மஹா பாரத யுத்தம்தான். அந்த யுத்தம் பதினெட்டு நாட்கள் தானே நடந்தது- இந்த யுத்தம் பதினெட்டு வருஷங்களாக நடக்கிறது – முடிவே யில்லாத யுத்தம்.

மூர்த்தி: பதினெட்டுவருஷங்களா? பதினெட்டு யுகங்கள் என்று சொல்லு…

சரோஜா: (அழுகை ததும்பும் குரலில் காபி ஆறிப் போய்விட்டது என்று அவர் விசிறி எறிகிற பாத்திரங்களும், கண்ணாடி சாமான்களும் இத்தனை யென்று தினம் ஒரு சித்திராபுத்திரன் வந்துதான் கணக்கெழுத வேண்டும். அதுவும் எல்லாம் என் பிறந்தகத்துப் பாத்திரங்கள். உன் காசு போட்டு வாங்கின பாத்திரங்கள், தாத்தா.

மூர்த்தி: வீட்டிலே அழுமூஞ்சியை வைத்துக்கொண்டு பாத்திரங்களை உடைக்காமல் வேறு என்னதான் செய்வதாம்!

சரோஜா: இவரைத்தான் நான் கல்யாணம் செய்து கொண்டு ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினாயே தாத்தா – எனக்கு வாழ்வில் ஒரு துளியாவது சந்தோஷமுண்டா? (விசும்பி விசும்பி அழுகிறாள்).

தாத்தா: உனக்கு நல்லது என்று நான் எண்ணியதைத் தானே அம்மா நான் செய்தேன்.

சரோஜா: நல்ல நல்லதுதான் செய்தே,தாத்தா (விம்முகிறாள்).

தாத்தா: அழாதேயம்மா அழாதே! என் கண்ணான பேத்தி கண் நிறைந்த கணவனுடன் கண்யமாக வாழ வேண்டும் என்றுதான் நான் இந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்தேன். இவன் இப்படி யாவான் என்று எனக்கு எப்படியம்மா தெரியும்?

மூர்த்தி: இவளைக் கட்டிக் கொள்பவன் இப்படி யாகாமல் வேறு எப்படி யாவான் என்று எதிர்பார்த்தீர்கள் தாத்தா!

தாத்தா: அப்போது அவன் நல்லவனாக, அழகனாக, படித்தவனாக, அடக்கமுள்ளவனாகத்தானே யம்மா இருந்தான்?

சரோஜா: வெறும் வேஷம் தாத்தா! வெறும் ஏமாற்று வேஷம்!

மூர்த்தி: உங்கள் பேத்தியைப் போல ஒரு பெண்ணை – அட சை! பெண்ணை என்றா சொன்னேன்?- பேயைக் கட்டிக் கொண்டவன், எவ்வளவு நல்லவனாக இருந்தால் தான் என்ன? ஒரு வருஷத்தில் நான் வந்த கதிக்கு வந்துவிடமாட்டானா? நீங்களே சொல்லுங்கள்!தாத்தா!

சரோஜா: இதெல்லாம் போதாது என்று கண்ட பெண்களுடன் பழக்கம். ஸீஸனுக்கு ஸீஸன் குதிரைப் பந்தய மோஹம் – நாள் தவறாமல் மாமனார் பணத்தைப் போட்டுச் சீட்டாட்டம்…. சிவ சிவா! ஆயிரம் நாப் படைத்த அந்த ஆதிசேஷனாலேயும் சொல்லி மாளாது தாத்தா! நான் படும் அவஸ்தையைச் சொல்லி மாளாது தாத்தா; சொல்லி மாளாது! விம்முகிறாள்,கேவுகிறாள்).

மூர்த்தி: என் கிரஹதர்மிணியை மறக்கக் குதிரைப் பந்தயமும், சீட்டாட்டமும், குடியும் கூடப் போதாதே, தாத்தா – போதாதே! நான் என்ன செய்ய!

சரோஜா: அந்த டென்னிஸ் சாம்பியன் ராமமூர்த்தியை மணக்க நான் ஆசைப்பட்டேனே தாத்தா – ஞபகமிருக்கா? லஜ்ஜையை விட்டுவிட்டு அம்மாவிடம் சொல்லி உங்களிடம் சொல்லக் கூடச் சொன்னேன்….அவரை மட்டும் நான் கல்யாணம் செய்துகொண்டிருந்தால் என் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருக்கும்? உம்….(பெரு மூச்சு விடுகிறாள்.)

மூர்த்தி: நானும்தான் என் ஆசை அத்தங்காளைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன்.

சரோஜா: யார் வேண்டாமின்னது? என் வாழ்வும் குலையாதிருந்திருக்குமே! இவ்வளவு கஷ்டமும் எனக்கு விளைந்திராதே!

மூர்த்தி: தாத்தாதான் எங்கப்பாவுக்குப் பணத்தாசை காட்டி மதியிழக்கச் செய்துவிட்டார். என்னைப் பணத்துக்கு விற்று விட்டார் எங்கப்பா, உன் தாத்தாவிடம் – வேறு என்ன? பணத்துக்கு வாங்கின புருஷன் வேறு எப்படி யிருப்பான்? உனக்கு வேண்டும். இதுவும் வேண்டும் – இன்னமும் வேண்டும். என் அத்தங்காளைக் கட்டிக் கொண்டவன் அழகாக, ஆபீஸராக, டெல்லியிலே அவளையும் வைத்துக்கொண்டு குடித்தனம் பண்ணுகிறான்.

சரோஜா: (ஏளனமாக) போதுமே உங்க அத்தங்காள் பிரதாபம்!

மூர்த்தி: மாமனார் வீட்டிலேயே தங்கிவிட்ட மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளையாக நான் காலங் கடத்துகிறேன் ஒரு பிசாசைக் கட்டிக்கொண்டு. அதற்கு யார் காரணம்?

சரோஜா: கேட்பானேன்; தாத்தாதான்!

தாத்தா: உங்களனைவருக்குமே நல்லது செய்ய வேண்டுமென்று தான் நான் விரும்பினேன்.

மூர்த்தி: நீர் விரும்பியதென்னவானால் என்ன? நடந்து விட்டது என்னவோ இதுதான். நான் நரகத்தில் விழுந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்….

சரோஜா: நான் மட்டும் என்னவாம்? நானும் நரகத்தில் தான் கிடந்து உழலுகிறேன். தன் திருப்திக்காக என் வாழ்வையே கெடுத்து விட்டார் தாத்தா.

தாத்தா: (திடுக்கிட்டு) – நானா? நானா?

சரோஜா: நீயேதான் தாத்தா.

மூர்த்தி: நீங்களேதான் தாத்தா!

சரோஜா, மூர்த்தி (இருவரும் ஒருமிக்க) : எங்களைப் பற்றிய வரையில் நீ நல்லது அல்ல – கெடுதியே செய்து விட்டாய்!

தாத்தா: நானா? நானா?

சரோஜா, மூர்த்தி (இருவரும்) நீதான்! நீயேதான்! பேபி (திடுதிடுப்பென்று அங்கு தோன்றி கை கொட்டிக் கொண்டு ஏளனமாய்) – நல்லவர்! நல்லவர்! நல்லவரைப் பாரு!

[காட்சி மாறுகிறது. மூன்றாவது அங்கத்தின் ஆரம்பக் காட்சிக்கு மாறுகிறது தாத்தா ராமச்சந்திர னின் படுக்கையறை.]

[தாத்தா தூக்கத்தில் புரண்டு புரண்டு படுத்து முனகுகிறார் குழப்பமாகத் தெளிவில்லாத வார்த்தைகளாக,]

நல்லவர்! நல்லவர்; இந்த நல்லவரைப் பாரு!

[பொழுது விடியப் போகிற சமயம், தோட்டத்தில் பல பக்ஷி ஜாலங்கள் குரல் தருகின்றன. ஒரு காக்காய் விடாது கரைகிறது. லீலா தடதட வென்று ஓடி வருகிறாள். தாத்தா கட்டிலில் வந்து விழுந்து புரண்டு அவரை எழுப்புகிறாள்.]

லீலா: என்ன தாத்தா, நீ பாட்டுக்குத் தூக்கத்திலே ஏதோ பேத்திக் கொண்டிருக்கே! நகர்ந்து படுத்துக்கோ, தாத்தா, நானும் உன் கிட்டப் படுத்துக்கறேன். அதோ காக்கா கத்தறது பார்! பொழுது விடியப்போறது. கோழி கூவறச்சே விழித்துக்கொண்டுவிட்டேன் நான்,

தாத்தா: (நகர்ந்து லீலாவுக்கு இடம் தந்துவிட்டு) ஏன் லீலா – நீயே சொல்லு லீலா, நான் நல்லவனா இல்லையா? சொல்லு.

லீலா: ஆமாம் தாத்தா, நீ நல்லவன்தான்.

தாத்தா: (திருப்தியுடன்) அப்படி நீ ஒருத்தியாவது சொல்லுடி என் கண்ணே! நீ கூட அதை நம்பல்லேன்னால் என்ன பண்றது என்று தான் எனக்குத் தெரியவில்லை.

லீலா: (தாத்தாவை ஒட்டிப் படுத்துக்கொண்டு) உலகத்திலே எல்லோருமே நல்லவாதான் தாத்தா.

தாத்தா: ஹூம் நான் நம்பமாட்டேன் .உம்… நிஜமாவா?

லீலா: உலகத்திலே எத்தனை பேர் நல்லவா இருக்கா, தெரியுமோ?

தாத்தா: உனக்குத் தெரிஞ்சா சொல்லு

லீலா: தாத்தா!தாத்தா!நம்ப நளினியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிற ராஜாராமன் கூட நல்லவன் தான் தாத்தா! எனக்கு அவனை ரொம்பவும் பிடிச்சிருக்கு தாத்தா!

தாத்தா: அந்த ராஜாராமனைத்தான் அவள் கல்யாணம் பண்ணிக்கப் போறாள் என்று நீயே நிச்சயம் பண்ணி விட்டாயா லீலா?

லீலா: அவளேதான் நிச்சயம் பண்ணிவிட்டாளே தாத்தா! பின் அதிலென்ன தாத்தா சந்தேகம்!

தாத்தா: பேபிக்குத் தங்கைதானே நீ?

லீலா: பேபி யாரைக் கலியாணம் பண்ணிக்கப்போறாளாம் தெரியுமோ?

தாத்தா: தெரியாதே, சொல்லு. யாரை?

லீலா: மாமரத் தாத்தா, சிவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப்போறாளாம் அவள்,

தாத்தா: (ஆச்சரியத்துடன்) சிவனையா?

லீலா: என்ன சொல்றே தாத்தா நீ?

தாத்தா: என்ன சொல்லுவது என்றுதான் தெரியவில்லை!

லீலா: நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம் தாத்தா. அது தான் நல்லது!

தாத்தா: (குறை தொனிக்க) பேச வாயைத் திறந்தால் தான் சின்னதும் பெரிசுமா வாயிலே போடறதுகளே! அது சரி, லீலா, நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறே!

லீலா: (சற்று நேரம் யோசித்துவிட்டு) நானா? நான் இன்னும் யோசனை பண்ணி ஒரு முடிவுக்கும் வரவில்லை தாத்தா? மத்தியானம் ஒரு முடிவாகச் சொல்றேன் தாத்தா.

[கடிகாரம் மணி அடிக்கிறது.]

தாத்தா: சரி.

லீலா: காபி சாப்பிட முழிச்சுக்கலாம்! இப்பத் தூங்கு தாத்தா! எனக்கும் தூக்கம் வரது.

[இருவரும் படுத்து உறங்குகின்றனர்.]

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !