நல்லவர்
க. நா. சுப்பிரமணியம்

அங்கம் 1

காட்சி 1

(ஊர் பூராவுமே ஒரே குதூகலமாக இருக்கிறது. வீதிகள் எல்லாம் சுத்தமாகப் பெறுக்கிக் கோலங்கள் போடப்பட்டிருக்கின்றன. எங்கும் நீர் தெளித்து வெண்மணல் பரப்பியிருக்கிறது. தெருவெல்லாம் காகிதக் கொடிகளும் தோரணங்களும் காற்றிலே ஆனந்தமாக அசைந்தாடுகின்றன. ஆடவர் பெண்டிர் குழந்தைகள் எல்லோருமே குதூகலமாக இருக் கிறார்கள்.

தெருவோடு போகிறவர்கள் தங்களுக்குள் “அவரைப் போல உண்டா?” என்று தங்களையே கேட்டுக் கொண்டு நடக்கிறார்கள்.

மாலை மணி நாலரை இருக்கும். எல்லோரும் அலங்காரமாக ஆடை அணிந்து கூட்டம் கூட்டமாகப் பூங்காவை நோக்கி நடக்கின்றனர். தஞ்சாவூர் பாண்டு சப்தம் ஒரு பக்கம் கேட்கிறது. நாதஸ்வரம் ஒரு பக்கம் முழங்குகிறது. ஜே ஜே என்றிருக்கிறது. பூங்காவின் மத்திய சதுக்கத்திலே தூவெண் மணல் அழகாகப் பரப்பப்பட்டிருக்கிறது. பூங்காவின் மரங்களிலே விதவிதமான வர்ண விளக்குகள் (நேரமாகவில்லை எனினும்) எரியத் தொடங்கி விட்டன. ஆங்காங்கே மரங்களிலும் கம்பங்களிலும் ஒலிபெருக்கி ஊமத்தம் பூக்கள் சொருகப்பட்டிருக் கின்றன. ஒலிபெருக்கி மூலம் சன்னமான பெண் குரல் பாரதியாரின் கீதங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பாடிக் கொண்டிருக்கிறது. பாட்டாக அது பிரமாதமாக இல்லாவிட்டாலும் வார்த்தைகள் அழுத்தமாக பாவத்துடன் உச்சரிக்கப்படுவதால் நன்றாகவே இருக்கிறது.

பந்தலின் முகப்பில் கூந்தற்பனையும், வாழை மரங்களும், தென்னங்குலைகளும், பனங்குலைகளும் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கின்றன. மஞ்சளான தோரணங்களும் காகிதப் பூக்களும் அலங்காரமாக இருக் கின்றன. முகப்பிலே மூன்று வாசல்கள் இருக் கின்றன. ஒன்றின் முன் நின்று ஒரு அழகான யுவதி சந்தனம் தாம்பூலம் வழங்கிக்கொண்டிருக்கிறாள். ஒரு பக்கம் பூச்செண்டுகள் வழங்கப்படுகின்றன. ஒரு பக்கம் குழந்தைகளுக்குப் பெப்பர்மிண்டுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

பந்தல் முகப்பிலே “தாத்தா ராமச்சந்திரனுக்கு ஜே!” என்று தங்க கில்ட்டில் எழுதப்பட்டிருக்கிறது. கீழே சிறிய தங்க எழுத்துக்களில் ”சமூக சேவா சங்கம் -24வது ஆண்டுவிழா” என்று எழுதப்பட்டிருக்கிறது.)

[கையில் ஒரு பொட்டலம் பெப்பர் மிண்டுடன் ஒரு பெரியவர் வருகிறார். அவரைத் தடுத்து நிறுத்தி ]

வேறு ஒரு பெரியவர்: ஏது ஐயா குழந்தைகளுக்குத் தரப்பட்ட பெப்பர்மிண்டுப் பொட்டலம் ஒன்று உம் கையில் இருக்கிறது?

முதல் பெரியவர்; பெண்களுக்கு மட்டும் தரப்பட்ட பூச் செண்டு எப்படி ஐயா உம் கையில் வந்தது – சொல்லு மேன் நீர்?

[குறுக்கே விழுந்தடித்துக் கொண்டு நாலைந்து குழந்தைகள் ஓடி வரு கின்றனர்.]

ஒரு பையன்: என் பொட்டலத்தில் எட்டுப் பப்பர் மிண்டு இருந்ததுடா!

இரண்டாவது பையன்: என் பொட்டலத்தில் ஆறு தாண்டா இருந்தது.

மூன்றாவது பையன்: என் பொட்டலத்தில் (துக்கமாக) எல்லாம் சூடப் பப்பர்மிண்டுதாண்டா!

[நாலைந்து யுவதிகள் கைகோத்துக் கொண்டு வருகிறார்கள்.]

முதல் யுவதி: இந்தமாதிரி சந்தர்ப்பங்களில்தான் நாமும் இந்தச் சேவா சங்கப் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

இரண்டாவது யுவதி: அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவு காட்ட ஆயிரம் பேர்வழிகள் இருக்கிறார்கள். நமக்குத்தான் கஷ்டம் வந்தால் கூட கவனிக்க ஆளேயில் லாமல் போய்விடுகிறது.

பெப்பர்மிண்டுப் பேச்சைத் தொடங்கிய பெரியவர்: பிர சங்கங்கள் ஆரம்பமாகிவிட்டன போலிருக்கிறதே! போகலாமா?

 [எல்லோரும் போகிறார்கள். ஒலி பெருக்கிகளில் பாரதி பாட்டு ஓய்ந்து விட்டது. “வாங்கோ! வாங்கோ!” என்று பல ஆண் குரல்களும் பெண் குரல்களும் ஒலிக்கின்றன.”இப்படி வந்து உட்காருங்கள்” என்று யார் யாரையோ யார் யாரோ உபசரிக் கிறார்கள். “ஆரம்பிக்கலாமா?” என்றும் ”ஆரம்பிக்கலாமே!” என் றும், “இப்ப ஆரம்பித்தால் இருட்டு முன் முடித்து விடலாம்” என்றும் பல குரல்கள் கேட்கின்றன.)

காட்சி 2

[பிரசங்கப் பந்தலில். சபையிலிருந்து பார்த்தால் மேடைமேல் மூன்றே மூன்று பேர்வழிகள்தான் உட்கார்ந்திருக்கிறார்கள். அதில் நடுவில் வீற்றிருப்பவர் தான் தாத்தா ராமச்சந்திரன். பழுத்த கிழவர். பார்ப் பதற்குக் கம்பீரமாக ஆஜானுபாகுவாக இருக்கிறார். மங்காது கூர்மையாக உள்ள கண்களும், நரைக்காத புருவங்களும், விசாலமான நெற்றியும், எடுப்பான மூக்குமாக, பார்ப்பவர் மனசைக் கவரும் ஆணழகனாக வீற்றிருக்கிறார். லேசான, எதிலும் ஒட்டாத ஒரு பாவம் அவர் முகத்திலே படர்ந்திருக்கிறது. பழுத்த வேதாந்தி என்று அசப்பிலே பார்த்தாலும் சொல்லத் தோன்றும். ஆனால் அவர் வேதாந்த விசாரத்தில் ஈடு பட்டு நடைமுறை உலகை மறந்துவிட்டவர் என்றும் சொல்ல முடியாது. அவருடைய நடைமுறை வெற்றிக்கு இன்று ஆண்டு விழாக் கொண்டாடும் சமூக சேவா சங்கமும் அதற்கு ஆதாரமான அவர் சேவையும் பொருள் உதவியுமே சான்று. துல்லிய கதர் சட்டை அணிந்திருக்கிறார். பற்களில்தான் ஒரு பத்தைக் காணவில்லை – மற்றப்படி வயதின் காம்பீர்யம் தெரிகிறதே தவிர, வயதின் பலஹீனங்கள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை.

விழாவைத் தலைமை தாங்கி நடத்தித் தர ஏற்றுக் கொண்டிருப்பவர் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியின் போஷகர், நிர்வாகி, கரெஸ்பாண்டெண்டு. அவரும் வயதானவர்தான்; ஆனால் தாத்தாவைப் போல அவ்வளவு வயதானவர் அல்ல; அவ்வளவு காம்பீர்யம் உள்ளவரும் அல்ல.

மேடைமேல் உட்கார்ந்திருக்கும் மூன்றாவது ஆசாமியைக் கவனிக்க வேண்டிய அவசியமேயில்லை. அவர் சாதாரணமாக இந்த மாதிரிக் கூட்டங்களுக்குக் கென்று பிரமுகராகி மேடைமேல் வீற்றிருப்பவர். மற்ற நாட்களில் அவரை யாரும் கவனிக்க மாட்டார் கள். அவர் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை; நாமும் கவலைப்படுவானேன்? பிரமுகர் – ஆனால் பொறுப்பற்றவர். பெரியவர் – ஆனால் ஜனங்களின் மதிப்பைப் பெறாதவர். உயர்ந்தவர் – ஆனால் அப்படியொன்றும் குணசாலி அல்ல. பணக்காரர் – ஆனால் எதையும் தானாகச் சம்பாதிக்கும் திறமையில்லாதவர். பெயருக்கு ஆசைப்பட்டவர்தான் – ஆனால் எப்படியும் யாருக்கும் எதுவும் உதவி செய்துவிட மாட்டார். தாத்தா ராமச்சந்திரனுக்கு நேர் எதிர் அவர். அவரைப் போன்றவர்கள் நம் கிராம நகர சமூகங்களில் நூற்றுக் கணக்கானவர்கள் இருக்கிறார்கள். “வாய்ப் பேச்சில் வீரரடி” என்று பாரதியார் பாடியது இவரைப் போன்ற மனிதர்களைத்தான்.

விழாத் தலைவர் அழுத்தம் திருத்தமாக பேசுகிறார் – கவனிப்போம்.]

தலைவர்: இந்தச் சேவா சங்கத்தை ஸ்தாபித்து இருபத்தி நாலு வருஷங்களாகத் திறம்பட நடத்தி வரும் தாத்தா ராமச்சந்திரனுக்கு நாமெல்லோரும் என்றென்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறோம்; இந்த ஊரில் வரப்போகிற பல தலைமுறைகளும் கூட அவருக்கு வெகுவாகக் கடமைப்பட்டிருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமே யில்லை. இந்த மாதிரியான ஒரு சங்கத்தை ஸ்தாபிப்பது என்பது இந்த நாட்களில் மிகவும் சுலபமான காரியம். பாங்கிலிருக்கும் பணத்தில் ஏதோ கொஞ்சத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, பெயர் வாங்கிக்கொண்டு நகர்ந்து விடுவது மிகவும் சுலபம். ஆனால் லக்ஷக் கணக்கில் பணத்தையும் போட்டுவிட்டு, அலுப்பு சலிப்பில்லாமல் தினசரிச் சொந்த அலுவல்களையும் கவனித்துக் கொண்டு, பெரிய எதிர்ப்புகளையும் சமாளித்துக் கொண்டு, இருபத்தி நாலு வருஷங்கள் ஒரு ஸ்தாபனத்தை வளர்த்து நிலை நிறுத்தி ஸ்திரப்படுத்துவது என்பது தனி ஒரு மனிதனால் சுலபத்தில் செய்துமுடிக்கக்கூடிய காரியமல்ல. (பலத்த கரகோஷம்).

தலைவர் தொடர்ந்து: இரண்டு வருஷங்களாக இங்கு ஒரு சின்னப் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்துவிட்டு சமாளிக்க முடியாமல் நான் திண்டாடுகிற திண்டாட்டம்தான் நான் சொல்லாமலே உங்களுக்கெல்லாம் தெரியுமே! சிரிப்பு, ஒரு குரல் – சிரமப்படுகிறவரைப் பாரடோய்!) எப்படித்தான் இவர் ஒருவராக இவ்வளவு பெரிய ஸ்தாபனத்தை இத்தனை நாட்களாகச் சமாளிக்கிறாரோ என்று என்னால் நினைத்துப் பார்த்து வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

ஒரு ஸ்தாபனம் என்று நான் சொன்னது பிசகு. தாத்தா ராமச்சந்திரனின் சங்கத்தின் ஆதரவில் பல ஸ்தாபனங்கள் தழைத்துக் கிளைத்து வளர்ந்தோங்கியிருக்கின்றன. பதினேழு பதினெட்டு ஸ்தாபனங்கள் – அவற்றின் பெயரை நான் இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே எண்ணுகிறேன் – தனித் தனியே சிறப்பாக இயங்கி வருகின்றன. பக்ஷபாதம் சிறிதுமில்லாமல், ஒன்றோடொன்று மோதி ஸ்தம்பித்துவிடாமல், எல்லாவற்றையும், வீணாகிவிடாமல் நடத்தி வருகிற தாத்தா ராமச்சந்திரனின் திட சித்தத்தையும், தைரியத்தையும், சுயநலமின்மையையும், திறமையையும், சேவை உணர்ச்சியையும் நான் எப்படிப் புகழ்ந்து முடிக்க முடியும். (பலத்த கைதட்டல்)

இரு பத்தி நாலு வருஷங்கள்! ஆம். ஒரு வாழ்வு முழுமையும் என்று இந்தியக் கணக்கில் சொல்லவேண்டும்: தன் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கைப் பூரணமாக தாத்தா ராமச்சந்திரன் இச் சங்கத்துக்கென்று அளித்திருக்கிறார். (பலத்த கரகோஷம்) இந்த ஊரைவிட்டு அவர் வெளியே போக மட்டும் சம்மதித்திருந்தாரானால், அவருக்குப் பெரிய பெரிய பதவிகள் கிட்டியிருக்கும் என்பதில் யாருக்கும் எவ்விதச் சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் தியாகம் செய்ய அவர் சிறிதும் தயங்கவில்லை. நம் ஜில்லாவுக்கு, நம் தமிழகத்துக்கு, ஒரு பெருமையாக ஒரு ஸ்திரமான எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்று அவர் தன்

வாழ்வையும் தன் வாழ்வின் பெரும்பயனாக இந்த ஸ்தாபனத்தையும் உருவாக்கிவிட்டார். உங்களிடையே புதியவனாக வந்து சேர்ந்த நான், உங்களுக்கே, உங்களில் ஒருவராகிய தாத்தா ராமச்சந்திரனை அறிமுகம் செய்து வைக்க முற்படுவது அதிகப் பிரசங்கம்தான். எனினும், எனக்குத் தோன்றியதைச் சொல்லச் சந்தர்ப்பம் கிடைக்கிறபோது சொல்லவே நான் விரும்புகிறேன். (பலத்த கரகோஷம்).

தாத்தா இதற்காகச் செலவிட்ட பொரு ளெல்லாம் அவர் சொந்தமாகவே தலைப்பட்டுச் சம்பாதித்தது என்பது நமக்கெல்லாம் தெரியும். இந்தச் சேவா சங்கத்தின் பேரில் அவருக்குள்ள ஈடுபாட்டில் ஒரு பாதியை அவர் தன் வியாபாரத்தில் திருப்பி யிருந்தாரானால் இன்னும் பல லக்ஷங்கள் அவருக்குச் சேர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நம் தாத்தா ராமச்சந்திரனுக்கு என்றுமே பணம் பொருட்டாக இருந்ததில்லை. சேவை என்பது மட்டுமே தன் லக்ஷியம் என்று வாழ்க்கை நடத்துபவர் அவர். (பலமான கைதட்டல்)

இருபத்திநாலு வருஷங்கள்! ஆமாம். தன் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கைப் பூரணமாக இந்தச் சங்கத்துக்கென்று அளித்திருக்கிறார். அவர். (மறுபடியும் கைதட்டல்).

மேலும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. உட்காரு முன் நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வற்புறுத்த விரும்புகிறேன். அடுத்த வருஷம் நமது சங்கத்துக்கு வெள்ளி விழாக் கொண்டாடவேண்டும். அதை நாம் பாரதநாடு பூராவும் கவனித்துப் பாராட்டும்படியாகக் கொண்டாட வேண்டும், அதற்காகும் செலவு ஐம்பதினாயிரம் என்று திட்டமிட்டு ஒரு கமிட்டி இன்று முதலே வேலை செய்யத் தொடங்கி யிருக்கிறதென்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஐம்பதினாயிரம் செலவிடுவதை ஐந்து லக்ஷமாக வசூல் செய்து சங்கத்துக்கு உதவி நாம் எல்லோரும் தாத்தா ராமச்சந்திரனுக்கு நமது பாராட்டை வெள்ளி விழாவில் தெரிவித்துவிட வேண்டும் என்பது என் கோரிக்கை.

கடைசியாக ஒன்று. தாத்தா ராமச்சந்திரன் நெடுங்காலம் நம் மிடையே வாழ்ந்து, நம் சமூகத்துக்குச் சேவை செய்து ஊக்கமளித்து உயிரூட்ட நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக் கிறேன். கடைசியாக ஒரே ஒரு…

[சபையில் பல குரல்கள் தாத்தா ராமச்சந்திரன்! தாத்தா ராமச்சந்திரன்! என்று கூறுகின்றன.பலத்த கரகோஷத்துக்கிடையே தலைவர் உட்காருகிறார்.]

தாத்தா ராமச்சந்திரன்: (கனைத்துக்கொண்டே எழுந்து நின்று தன் மார்பைப் பார்த்துக் கொள்கிறார். எல்லாரும் வந்திருக்கிறார்களா என்று பார்க்கிறவர் மாதிரி வரிசையாகச் சபையைக் கண்காணித்துக் கொண்டே அழுத்தமான குரலில் பேசத் தொடங்குகிறார்.) நான் செய்துவிட்டதை ஏதோ எல்லோருமாகக் கூடி வானளாவப் புகழுகிறீர்கள். ஊருக்கு நல்லதை அவனவனுக்குத் தெரிந்த அளவில் அவனவனுக்குச் சக்தியுள்ள வரையில் செய்தே தீரவேண்டும் என்கிற கொள்கையை யுடையவன் நான். என் சக்திக் கெட்டிய வரையில் ஏதோ கொஞ்சம் செய்திருக்கிறேன். அதைப் பெரிதுபடுத்துகிற அளவுக்குப் பாராட்டியும் போற்றியும் வந்திருக்கிற நமது தலைவர் போன்றவர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். சமூக சங்கச் சேவை பலன் தரக்கூடிய அளவிலே அமைந்ததற்கு எனக்கு உதவி செய்தவர்கள் என்று சொல்லவேண்டு மானால் நூற்றுக்கணக்கான பேர்வழிகளைப் பெயரிட்டுச் சொல்லவேண்டும். (பலத்த கைதட்டல்). என் குடும்பத்தினரைப் பற்றிமட்டும் குறிப்பிடவில்லை நான். (இன்னும் பலத்த கைதட்டல்).

மற்றவர்களின் பெயர் களையும் நான் இங்கு சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. அவ்வவ் வருஷத்திய ஆண்டு அறிக்கைகளில் அவர்களுடைய பெயர்கள் ஒன்றையும் விட்டுவிடாமல் அவ்வப்போது என் கடமையைச் செலுத்தி அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லியே வந்திருக்கிறேன் நான். சங்கத்தின் நிரந்தரத் தலைவனாக இருக்க அவர்களில் பலர் என்னையும் விட அதிகத் தகுதி வாய்ந்தவர்கள். இருந்தும் மீண்டும் மீண்டும் நானே தலைவனாக வரவேண்டும் என்று அவர்களே விரும்புவதால் என் பணியை என் அளவில், என் சக்திக்கேற்பச் செய்து வந்திருக்கிறேன். ஆனால் பொதுவாக எனக்கு உதவி செய்து வந்திருப்பவர்களில் ஒருவர் பெயரை மட்டும் இங்கு நான் சொல்லவேண்டியது அவசியமாகிறது. இந்த நாலு வருஷங்களாக இந்தச் சங்கம் பல புதுத் துறைகளில் வேலை செய்து வந்திருக்கிறது. அதில் என் கைத்திறன் ஒன்றுமில்லை. யாருமற்ற அனாதையாகச் சங்கத்தில் சேர்ந்து படித்துப் பெரியவளாகி இப்போது இச் சங்கத்தின் எல்லாத் துறைகளுக்குமே நிர்வாகியாக இருந்து பணியாற்றும் மிஸ் நளினியைத்தான் சொல்லுகிறேன். (நீண்ட கரகோஷம்)

இங்கு கூடியுள்ளவர்களில் அநேகமாக எல்லோருக்குமே மிஸ் நளினியைத் தெரியும். என்னைத் தெரிந்தவர்கள் எல்லோருக்குமே மிஸ் நளினியையும் தெரியும். மற்ற இருபது வருஷங்களில் சாதித்ததைப் போல நாலு மடங்கு அதிகமாகவே இந்த நாலு வருஷங்களில் இச் சங்கம் சாதித்திருக்கிறது என்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன். அதற்கான பொறுப்புப் பூராவும் பெருமை பூராவும் மிஸ் நளினியையே சாரும் என்கிற அர்த்தத்தில்தான் சொல்லுகிறேன். நான் இருந்து நடத்துகிறேன் என்றாலும் நடைமுறையில் எல்லாவற்றை யும் கவனிப்பவள் மிஸ் நளினிதான். (கரகோஷம்)

இரண்டொரு பெண் குரல்கள்: மிஸ் நளினி! மிஸ் நளினி!

தாத்தா ராமச்சந்திரன்: மிஸ் நளினியைப் பேசக் கூப்பிடுமுன் இன்னொரு சந்தோஷச் சமாசாரத்தையும் இங்கு உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன். மிஸ் நளினி இன்னும் சில நாட்களிலே மிஸ்ஸிஸ் நளினியாகிவிடுவாள் என்பதுதான் அந்த விஷயம். அதற்குமேல் அவ் விஷயம் பற்றிச் சொல்வதற்கில்லை. சங்கத்தின் இருபத்தைந்தாம் வருஷக் கொண்டாட்டம் பற்றிக் குறிப்பிட்டாரே தலைவர், அது போலப் பெருமையாகக் கொண்டாட வேண்டிய விஷயம் அதுவும். (சபையில் பல குரல்கள் “ஆமாம் ஆமாம்” என்று எதிரொலிக்கின்றன) இப்போது நான் மிஸ் நளினியைப் பேசக் கூப்பிடுகிறேன்.

[தாத்தா ராமச்சந்திரன் உட்கார்ந்து விடுகிறார்.]

நளினி: (மிகவும் அடக்கமாக வெள்ளை ஆடை உடுத்திய அதிக அழகில்லாத யுவதி. இருபத்திநாலு வயதிருக்கும். மிகவும் பணிவுடன் மேடையேறி இரண்டு கரங்களையும் கூப்பி வணங்கிவிட்டுத் தலைவரைப் பார்த்துப் பேசுகிறாள்):

தாத்தாவும் சபையோரும் என்னை அளவுக்கு மீறியே பாராட்டுகிறார்கள் என்று எனக்குத் தோன்று கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்றே எனக்குத் தெரியவில்லை. தாத்தா வுக்கு நான் மட்டுமல்ல, இந்த ஊர் பூராவுமே எப்படிக் கடமைப்பட்டிருக்கிறது என்பது நாடறிந்த விஷயம். நாட்டுக்கே அவர் சேவை ஒரு எடுத்துக்காட்டு;

ஒரு உதாரணம். முன்னேற்றத்துக்கான ஒரு யோசனை, கல்வித் திட்டத்தில் ஒரு நூதனப் பரீக்ஷை, ஏழைகளுக்கு ஒரு உதவி, என்றால் தாத்தா ஒரு நிமிஷம்கூடத் தயங்க மாட்டார். தயங்கத் தெரியாது அவருக்கு. குப்பைத் தொட்டியிலே கைவிடப்பட்டுக் கிடந்த என்னை எடுத்து, சொந்தப் பெண்ணிடம் காட்டுவது போன்ற அன்பு காட்டி, வளர்த்துப் போதிய வரையில் படிக்க வைத்து, இந்தச் சேவையில் பங்குகொள்ளச் செய்த அவருடைய பெருந்தன்மையை நான் என்னவென்று புகழ்வது! ஆனால் இந்தப் பெரும் சேவையில் சமூகத்திலுள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்க வேண்டும். விரிவடைந்து கொண்டிருக்கும் சேவா சங்கத்தின் வேலைகளில் நீங்கள் எல்லோருமே பங்கு கொள்ள வாருங்கள் என்று உங்களெல்லோரையுமே அழைக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய உழைப்பும் ஆதரவும் எங்களுக்குத் தேவை. இன்னும் சிறப்பாக இந்தச் சங்கத்தை நடத்த உதவுங்கள் என்று நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

சபையில் ஒரு குரல்: கலியாணம் எப்போது?

[மிஸ் நளினி சபையை வணங்கிவிட்டு மேடையிலிருந்து இறங்கிக் கூட்டத் தில் மறைந்துவிடுகிறாள்.]

தலைவர்: (எழுந்து ஆடம்பரமாக அங்கவஸ்திரத்தை இழுத்து விட்டுக்கொண்டு) மிஸ் நளினி இவ்வளவு ரத்தினச் சுருக்கமாக ஆணித்தரமாகப் பேசிய பிறகு அதன் பயனை வீணாக்கும் வகையிலே நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. காரியத்தில் கண்ணாக இருப்பவர்கள் பேசவேண்டிய அவசியமே இல்லைதான். மிஸ் நளினி உங்களைச் சேவை செய்ய அழைக்கிறார்கள். அந்த அழைப்புக்குச் செவி சாய்த்து அவரவர்கள் சக்திக் கேற்ப சேவை செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக்கொண்டு நான் இந்தப் பாராட்டுக் கூட்டத்தை நிறைவேற்றி வைக்கிறேன்.

[கை தட்டல். கும்பலில் பலவிதமான சப்தங்கள். சபை கலைகிறது.]

காட்சி 3

(கூட்டம் கலைந்து வரும் சந்தடிகள். ஒரு பக்கம் கார் நம்பர்கள் சொல்லப்படுகின்றன. ஒரு பக்கம் கார் ஹார்ன்கள் அலறுகின்றன. பல குரல்கள் ஏக காலத்தில் கசமுச வென்று பேசுவது கேட்கிறது.)

பல குரல்கள் ஏக காலத்தில்: சீக்கிரமே கச்சிதமாக முடித்துவிட்டார்களே! தேவலை!

ஒரு கிழவர்: ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று. தொடங்கினால் அது முடிவில் தனக்கு நல்லது செய்து கொள்கிற மாதிரித்தான் என்பது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியாமல் போய்விட்டது.

வேறு ஒரு கிழவர்: தெரிந்திருந்தால் மட்டும் போதுமா? வசதிகள் வேண்டாமா?

மூன்றாவது கிழவர்: இதுவரை இந்தச் சேவா சங்கத்திற்காக தாத்தா ராமச்சந்திரனின் சொந்தப் பணம் ஒரு ஐந்து லக்ஷமாவது செலவழிந்திருக்கும் என்று எனக்குக் கேள்வி.

இரண்டாவது கிழவர்: பாக்கி எங்கே போவதாம்? இப்போது சங்கக் கட்டிடங்களே ஒரு ஏழெட்டு லக்ஷம் பெறுமே. தான் சம்பாதித்ததில் ஒரு பாதியையாவது இந்தச் சங்கத்துக்காகச் செலவிட்டிருப்பார் தாத்தா. சும்மா சொல்லக்கூடாது!

முதல் கிழவர்: (உலகப் போக்கறிந்த குரலில்) இதனால் வரவு ஏதாவது இல்லாமலா இருந்திருக்கும்?

இரண்டாவது கிழவர்: வரவு தேடுகிறவராக இருந்தால் தாத்தாவால் இந்தச் சங்கத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்க முடியாது என்பது நிச்சயம். மற்ற ஊர்களி லெல்லாம் சற்றேறக்குறைய அதே சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட சங்கங்கள் எல்லாம் போன வழி இதுவும் பல வருஷங்களுக்கு முன்னதாகவே புகைந்து போயிராதா?

முதல் கிழவர்: பின் எதற்காகப் பணத்தையும் காலத்தையும் விரயம் செய்துகொண்டு இவ்வளவும் செய்கிறாராம்?

இரண்டாவது கிழவர்: ஊருக்கு நல்லது என்றுதான். பிறருக்கு நல்லது செய்வதில் அக்கரையுள்ளவர்கள் இன்றும் நம்மிடையே இருக்கத்தான் இருக்கிறார்கள்.

மூன்றாவது கிழவர்: அதுக்கு மட்டுமல்ல. ஒரு மனிதன் பெரும் பொருளீட்டுகிறான் என்றால் அதற்கும் கூட இந்தச் சேவையால் அர்த்தம் உண்டாகிவிடுகிற மாதிரி இருக்கிறது. ஒரு மனுஷ்யனுக்குத் தேவைக்கு மேல் வந்தால், பிறருக்குத் தரவேண்டும் என்கிற எண்ணம் தோன்றலாமில்லையா?

நாலாவது கிழவர்: (விவாதத்தில் புதுசாகக் கலந்து கொள்கிறார்) இதனால் ஒரு அந்தஸ்து, ஒரு கௌரவம், ஒரு சக்தி, ஒரு பெருமை பிறக்கிறது. அதற்காகவும் தான்.

முதல் கிழவர்: இந்த அதிகார அந்தஸ்தைச் சொல்லுங்கோ முதலில். பிறர் காரியங்களில் ஈடுபட்டு நடத்தி வைக்கிற அதிகார வெறி, சக்தி உணர்ச்சி இருக்கிறதே, அதைப் பற்றிய ஆசை ஒரு மனிதனுக்கு ஏற்பட்டுவிட்டால், அது பணத்தாசையையும் விட, பெண்ணாசையையும், மண்ணாசையையும் விடப் பெரிதாகச் செயலாற்றும். சாம்ராஜ்யங்களையும் ஆட்டி வைக்கும் சக்தி அது. மனிதன் இந்தக் சக்தி ஆசைக்கு மட்டும் இடம் தரக் கூடாது. சுற்றியிருப்பவர்களின் வாழ்வைப் பாலைவன மாக்கிவிடும் சக்தி இது,

(கிழவர்கள் பேசிக்கொண்டே போகிறார்கள்.)

காட்சி 4

[பிரசங்கப் பந்தலில் ஒரு மூலை.

துல்லியமான வெள்ளை வேட்டியும் கதர் ஜிப்பாவும் ஒரு டவலும் அணிந்த ஒரு வாலிபன் வருகிறான். அவன் பெயர் ராஜாராமன். அழகாகவே இருக்கிறான். வயது இருபத்தியாறு இருபத்தியேழு இருக்கும்.)

ராஜாராமன்: (தூரத்தில் காணப்படும் நளினியைக் கூப்பிடுகிறான்.) நளினி! நளினி!

நளினி: யாரு? மிஸ்டர் ராஜாராமன்? வந்துவிட்டேன். (அருகில் வந்து) என்ன விஷயம் ராஜாராமன்? நான் இப் போது அவசரமாகப் பெரியவர் வீட்டுக்குப் போக வேண்டும்.

ராஜாராமன்: கும்பல் கலையட்டும் என்று காத்திருந்தேன் நளினி. கூட்டத்தில் தாத்தா சொன்னவுடனே எனக்கு. என்னவோ போலாகிவிட்டது நளினி. நம் விஷயம் இவருக்கும் தெரிந்துவிட்டதா, எப்படித் தெரிந்தது என்று திகைத்துவிட்டேன் நான். நீ இன்னமும் சொல்லியிருப்பாய் என்று……..

நளினி: நானா?நான் ஒன்றும் சொல்லவில்லை. அவராகவே எப்படியோ தெரிந்துகொண்டிருக்கிறார் போல இருக்கிறது.

ராஜாராமன்: அடேயப்பா! இந்தத் தாத்தா யமன்னாலும் யமன்தான். எப்படியோ அவர் உன் ரகசியத்தையும் என் ரகசியத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாரே! கூட்டத்தில் போட்டு குட்டை உடைத்து விடப் போகிறாரே என்று நான் பயந்து விட்டேன் நளினி.

நளினி: (தனக்குள்ளேயே பேசிக்கொள்பவள் போல) தாத்தா மனசில் வேறு ஏதாவது அபிப்பிராயம் ஏற்பட்டு விடுமுன் நான் அவரிடம் விஷயத்தை தெரிவித்து விட வேண்டும். இத்தனை நாள் மறைத்து வைத்திருந்ததே அவருக்குத் துரோகம் செய்துவிட்ட மாதிரித்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. தவிரவும் வேறு ஏதாவது அவர் தீர்மானித்துவிட்டாரானால் அவர் மனசை மாற்றுவது சிரமம்! சிரமம்!

ராஜாராமன்: எனக்கும் உத்தியோகத்துக்கு வந்து சேரச் சொல்லி உத்தரவு வந்துவிட்டது நளினி. இனி ஒளிவு மறைவுக்கு அவசியம் எதுவுமில்லை. இன்று மாலையே தாத்தாவை நீயும் நானும் சேர்ந்து போய்ப் பார்த்து….

நளினி: இன்று வேண்டாம். அதை நாளைக்கு வைத்துக் கொள்வோம்…. இன்று நல்ல கூட்டம்தான்….நாமும் போவோம். (கிளம்புகிறாள்)

ராஜாராமன்: நீ எதையோ நினைத்துத் தயங்குகிற மாதிரி இருக்கிறதே நளினி!

நளினி: தயக்கமா? என்ன தயக்கம்? அதெல்லாம் ஒன்று மில்லை. நம் விஷயத்தை அவரிடம் எடுக்க இது சரியான சமயமல்ல. நாளைக்கு வைத்துக்கொள்வோம் என்று தான் சொன்னேன்.

ராஜாராமன்: அப்போ நாளை சந்திக்கிறேன். வரட்டுமா, நளினி.

நளினி: சரி. (அதே சமயம் யாரோ வந்து)

நளினி! நளினி! தாத்தா தேடுகிறாரே.

நளினி: தாத்தா தேடுகிறாரா? இதோ வந்துவிட்டேன்! (போகிறாள்.ராஜாராமனும் அவளைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடக்கிறான்.)

[பந்தலில் கலைந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் மூவர் பேசிக்கொண் டிருக்கின்றனர்.]

ஒருவன்: முடிசூடா மன்னன் என்றால் அவருக்குத் தாண்டா தகும்! இங்கு எல்லாமே அவரிஷ்டப்படித்தான் நடக்கவேண்டும். வாழ்ந்தால் மனிதன் இப்படி வாழ வேண்டும் – தெரிந்ததா?

இரண்டாமவன்: உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை. மறு பேச்சு யார் பேசமுடியும்!

மூன்றாமவன்: யமன் அவர்- சாக்ஷாத் யமனேதான்

(மூவரும் பேசிக்கொண்டே நகருகிறார்கள்.)

ராஜாராமன்: நாளைக் கண்டம் தாண்ட வேண்டுமே! கடவுளே! (போகிறான்.)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !