ஆலயங்கள் சமுதாய மையங்கள் குன்றக்குடி அடிகளார்

1. ஆலயங்கள் சமுதாய மையங்கள்

தமிழ்நாடு, ஆலயங்கள் நிறைந்த நாடு, விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் திருக்கோயில்கள், தமிழ்நாட்டுக்கு அழகும் பொலிவும் ஊட்டுவன. கல்லெல்லாம் கலையாக்கி, பேசும் பொற் சித்திரமாக்கி, வழிபடும் தெய்வமாகவும் படைத்துக் காட்டிய திறம் தமிழர்க்கேயுரியது. சென்ற காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, தமிழ்நாட்டின் வரலாற்றை இயக்குவதில் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் முக்கியமான பாத்திரத்தை வகித்து வந்துள்ளன. ஏற்றுக் கொண்டுள்ளன! தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கையில், வளர்ச்சியில், மாற்றங்களில் மிகுதியும் பங்கு பெற்றிருந்தவை திருக்கோயில்களே என்பது வரலாறு கூறும் உண்மை. அன்றாட வாழ்க்கை முதல், மொழி, கலை, இலக்கியம், சமயம் ஈறான அனைத்துத் துறைகளிலும் திருக்கோயில்களுக்குப் பங்குண்டு. தமிழ்நாட்டின் அரசியல், பொருளியல், சமூகவியல் ஆகிய அனைத்துமே திருக்கோயில்களின் வட்டத்தைச் சார்ந்தே இயங்கியுள்ளன; வளர்ந்து வந்துள்ளன. தமிழ்நாட்டு வரலாறு திருக்கோயில்களின் வரலாறு. திருக்கோயில்களின் வரலாறு தமிழ் நாட்டின் வரலாறு.

வாழ்வியலும் சமயமும்

வாழ்க்கை அருமையானது; அருமையிலும் அருமையானது. “வாழ்க்கை பொய்யானது; துன்பமானது” என்ற கருத்து தமிழியலுக்கு மாறானது. “வாழ்க்கை வாழ்வதற்கே!”, “வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்” என்பன தமிழ் நெறி, தமிழர் கோட்பாடு. வாழ்வாங்கு வாழ்வதற்குச் சிந்தனை தேவை, தெளிவு தேவை; அறிவு தேவை. “சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்பது திருமுறை. மானிடத்தை மற்ற உயிரினங்களிலிருந்து பிரித்துக் காட்டுவது சிந்திக்கும் திறனேயாம். “நான் ஆர்? என் உள்ளம் ஆர்?” என்று சிந்திக்கின்ற பொழுது உயிர் தன்மதிப்பீடு செய்து கொள்கிறது; தன்னை அறிந்து கொள்கிறது. தன்னுடைய குற்றங் குறைகளைத் தெரிந்து உணரும் உயிர், மேம்பாட்டை நோக்கி அவாவுவது இயற்கையின் நிகழ்வு. இது அறிவியல் சார்ந்த உண்மை. குறைகளை உணர்தலே நிறைகளைப் பெறுவதற்குரிய வாயில்! தன் அறியாமையை உணர்தலே அறிவைப் பெறுவதற்குரிய வாயில்! மனிதன் விலங்கல்ல; மனிதனுமல்ல மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி, மனிதத் தன்மையை முயன்று பெற்று, அதனினும் உயர்ந்த இறை நலம் அல்லது கடவுள் மங்கலம் அடைதலே வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி. இந்த முயற்சி எளிதில் கைகூடுவதே ! ஆயினும் அருமைப்பாடு உடையது என்பதையும் மறந்து விடுவதற்கில்லை!

மானிடன் தன் புலன்களின் அழுக்கை அகற்றிப் பொறிகளில் தூய்மை காத்துத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்கு உதவுவது சமயநெறி. ஒன்றுக்கொன்று சுவை ஒவ்வாதனவாக உள்ள உணவுப் பொருள்கள் தனித்தனியே இருக்கும் வரை சுவைக்கத் தக்க சுவையும் பெறுவதில்லை; உண்ணவும் நுகரவும் இயல்வதில்லை; உடலுக்கு நலமும் தருவதில்லை. இங்ஙனம் சுவை வேறுபாடுள்ள பல்வேறு பொருள்களை ஒத்திசைந்த நிலையில் கூட்டிப் பக்குவப் படுத்தும் தொழிலுக்குச் “சமையல்” என்று பெயர். சமைத்தல் – உணவைப் பக்குவப்படுத்தல். சமைதல் மகளிர் பருவநிலை எய்துதல். இந்தச் சொற்களின் அடிப்படையிலே சமயம் என்ற சொல் முகிழ்க்கிறது. புறக்கருவிகளாக இருக்கிற பொறிகளையும் அகக்கருவிகளாக இருக்கிற புலன்களையும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், இவற்றோடுள்ள தொடர்பிலிருந்து விலக்கி, அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகியவற்றோடு இயைபுபடுத்தி, உயிரை வளர்த்து உயர்த்துவதே சமயத்தின் குறிக்கோள். உயிர் வாழ்க்கை அகநிலையிலும் புறநிலையிலும் வளம் பெறச் சமயவாழ்க்கை தேவை. சமயம் சார்ந்த வாழ்க்கையே வாழ்க்கை! சமயச் சார்பில்லாத வாழ்க்கை சவலை வாழ்க்கை, “பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே” என்றும், “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்றும் அருளியுள்ளமை அறிக. ஆதலால், வாழ்வு முழுமை பெற, இம்மை மறுமை மட்டுமின்றி எழுமையும் அன்பும் அருளும் இன்பமும் அமையச் சமயம் தேவை.

வாழ்வியலும் வழிபாடும்

வாழ்வு, குறைவற்றதாக நிறைவுடையதாக அமைய வேண்டுமென்பதே அனைத்துயிர்களின் விருப்பம். ஆனால், நடத்துவதோ துன்பங்கலந்த வாழ்க்கை, ஏன்? முதலில் நன்று, தீது பகுத்தாராயும் திறன் வேண்டும். மானிட வாழ்வு சிறக்க, கடவுளின் துணை தேவைப்படுகிறது. “தனித்துணை” என்று இறைவனின் துணையைச் சிறப்பித்துக் கூறுவார் மாணிக்கவாசகர். ஒரு குறை, பிறிதொரு குறையை நீக்க இயலாது. கடவுள், குறைவிலா நிறைவு! கடவுள் வாலறிவு! கடவுளே நன்று, கடவுளே அன்பு, கடவுளே இன்பம்! ஆதலால் இந்த உயரிய இயல்புகளில் குறைபாடுடைய உயிர்கள், கடவுள் தன்மைகளை, நிறைநலம் பயக்கும் தன்மைகளை அடைய முயற்சி செய்தலே வாழ்க்கையின் குறிக்கோள்! நோக்கம்! இந்த உயரிய குறிக்கோளை அடைவதற்குச் சமயம் துணை செய்யும் ! தனிமனிதனைச் சமயம் வளர்த்து, சமுதாய வாழ்வுடையவனாக்கி, அன்பினாற்றலும், அருளொழுக்கமும் உடையோனாக மாற்றுகிறது. இதற்குத் துணை செய்வதே வழிபாடு, கடவுள் வழிபாடு என்பது வெறும் சடங்கன்று. வழிபாடு என்பது உயிர்ப்புள்ள ஒரு முயற்சி! அறிவார்ந்த ஆள்வினை! எண்ணுதல், நினைத்தல் ஆகிய அகநிலைப் பயிற்சிகள் மூலம், ஆன்மா தன்னை உயர்த்திக் கொள்வதற்குத் துணை செய்வது வழிபாடு! வழிபாடு கடவுளை முன்னிறுத்திச் செய்யப்படுவது உண்மை. ஆனால், வழிபாட்டின் பயன் கடவுளுக்கன்று. வழிபாட்டின் பயன் முழுதும் மனிதத்துக்கேயாம்.

திருவுருவ வழிபாடு

கடவுள் ஒரு பொருள்; அஃதோர் ஆற்றல்; வரம்பில் ஆற்றல்! கடவுள் ஓர் அறிவுப் பொருள்; வாலறிவுப் பொருள்! கடவுள் ஓர் இன்பம்; எல்லை கடந்த இன்பம்! கடவுள் ஓர் அறம், அறங்களுக் கெல்லாம் சிறந்த அறம்! கடவுள் ஒரு நிதி; நிலவும் நீதிக்களுக்கெல்லாம் தலையாய நீதி. இங்ஙனம் உயர்வற உயர்ந்துள்ள கடவுட் பொருளோடு, உயிர் ஓர் உயிர்ப்புள்ள உறவைக் கொள்ளும் போது உய்தி பெறுகிறது; உயர்கிறது; அதன் குறிக்கோளும் கைகூடுகிறது. இந்த உறவு எளிதில் கைகூடுவதன்று. கடவுளைச் சிந்திக்க வேண்டும்! கடவுள் உருவமில்லாதவர். ஆனால் எல்லையற்ற ஆற்றலும் நிகரற்ற அருளும் இருக்குமாயின் எந்த ஒரு பொருளும் அது விரும்பும் உருவத்தைப்பெற இயலும். ஆயினும் கடவுளுக்கு உருவம் தேவையில்லை. மானிடரில்கூட வளர்ந்த சிலர், ஞானத்தாலேயே இறைவனைத் தொழுவர். அவர்களுக்கும் உருவம் தேவைப்படாது. ஆனால், சராசரி மனிதர்கள் – சிந்திக்க மாட்டாதவர்கள் எண்ணிக்கையில் மிகப்பலர். இவர்கள் சிந்திப்பதற்குப் பற்றுக்கோடாக விளங்க வேண்டுமென்றே இறைவன், அருளும் நோக்கத்துடன் திருவுருவங்களை இடமாகக் கொண்டு எழுந்தருளி அருள் வழங்குகின்றான். ஒருவுருவ வழிபாடு, வளரும் சமுதாயத்திற்குத் தவிர்க்க இயலாதது; தேவையும் கூட! மக்கட் சமுதாயத்தில் திருவுருவ வழிபாடு தோன்றிய பிறகுதான் திருக்கோயில் நாகரிகம் கால் கொள்கிறது. திருக்கோயில் நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டு மனிதகுல வாழ்வில் ஒரு புதிய ஆற்றல் மிக்க சமுதாய உணர்வு அரும்புகிறது. திருக்கோயில் ஒரு மாபெரும் சமுதாய இயக்கத்திற்கு மையமாக விளங்குகிறது.

திருக்கோயில் ஏன்?


கடவுள் எங்கும் நிறைந்தவர்; எல்லாப் பொருள்களிடத்தும் தங்கியிருப்பவர்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.”

என்று மாணிக்கவாசகர் கூறுமாறு போலவும்,

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஒருவமன் இவ்வி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே”

என்று அப்பரடிகள் கூறுமாறு போலவும், இறைவன் இன்ன இடத்தன், இன்ன ஊரினன் என்று எடுத்தியம்ப இயலாது. அவ்வாறு எங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனுக்குத் திருக்கோயில் ஏன்? திருக்கோயில் கடவுள் எழுந்தருளியுள்ள இடம்! ஆனால், கடவுளுக்காகத் திருக்கோயில்கள் அல்ல! பொதுவாக, உயிர்க்குல ஈட்டம், சிறப்பாக மானிடகுல ஈட்டம் இறைவனைக் காண, அவனுடன் கலந்து உறவாட, இறை நலன்களைப் பெறத் துணையாய் அமைவது திருக்கோயில். அடுத்து, வாழப் பிறந்த மனித இனம் ஒன்றுபடவும், ஒப்புரவு நலன்கள் பெற்றுச் சிறந்து வாழ்ந்திடவும் திருக்கோயில் துணையாய் அமைவது. திருக்கோயிலை மையமாகக் கொண்டு இறைமைத் தத்துவம் மேலாண்மை செய்தது! இறைமைத் தத்துவத்தின் வழி நின்று மக்கள் சமுதாயத்தை ஒருங்கிணைக்க – சமுதாய மேம்பாட்டிற்குரிய நெறிமுறைகளைக் காண – சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு உருவம் கொடுக்கத் திருக்கோயில்களை மையமாகக் கொண்டு இயங்கினர்; செயல்பட்டனர். ஏன்? அப்பாலுக்கு அப்பாலாக விளங்கிய கடவுளையே சமுதாய உறுப்பாகக் கொண்டு வந்து செயல்படுத்தினர்; ஏவல் கொண்டனர் இஃதொரு அருமையான தத்துவம்!

அப்பன் நீ அம்மைநீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓருரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறுரர்ந்த செல்வன் நீயே”

என்ற பாடல் இறைவனை உற்ற அன்புடைய உறவாகவும் சுற்றமாகவும் கொண்டு போற்றும் பண்பு நோக்கத்தக்கது.

ஆதலால், தமிழர் நோக்கில் குறிப்பாகச் சைவ வைணவ சமய நோக்கில், திருக்கோயில்கள் கடவுள் எழுந்தருளியிருக்கும் இடங்கள் மட்டுமல்ல, சமுதாய மையங்கள்! சமுதாயத்தின் இயக்கம்! இதனாலேயே திருக்கோயில்களுக்குச் சிறப்பு வந்தடைந்தது. திருக்கோயில்களிடத்து மக்கள் அளவற்ற நம்பிக்கை வைத்தனர். அளவற்ற கொடைகளை வழங்கித் திருக்கோயில்களைச் சார்ந்த அறக்கட்டளைகளின் முதலீட்டைப் பெருக்கினர். முடியுடை அரசர்கள் நிவந்தங்கள் வழங்கினர்; இறையிலிநிலங்களை வழங்கினர். திருக்கோயில் பத்திமையின் விளைநிலம்! திருக்கோயில் வாழ்க்கைக்குக் காப்புறுதி வழங்கிய முறை மன்றம்! தமிழ்நாட்டு வரலாற்றில் திருக்கோயில் ஏற்ற பங்கு அளவற்றது! காலத்தை வென்று நிற்கக்கூடியது! இன்றும் நெறியல்லா நெறியிற் செல்லும் தமிழகம், நெறிப்பட நின்று நேர்பட ஒழுக விரும்பின் திருக்கோயில் சார்பே தேவை. திருக்கோயில் சமுதாய இயக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற பாங்கின் அடிப்படையில்தான் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற மூதுரை பிறந்தது.

சமுதாய மையம்

தமிழ்நாட்டில் நகர அமைப்பு, சிற்றூர் அமைப்பு முறை வளர்ந்த ஒன்று! நடுவூரில் திருக்கோயில் உயர்ந்து விளங்கும்! திருக்கோயிலைச் சுற்றி நான்கு புறமும் மக்கள் சூழ்ந்து வாழ்வர். நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் திருக்கோயிலுக்குள் வந்து குழும, நான்கு திசைகளிலும் பெரிய வாயில்கள்! ஊர் முழுதும் ஒலித்து அழைக்கும் மணிகள். இஃதோர் அற்புதமான அமைப்பு! மாலை நேரத்தில் ஊர் மக்கள் அனைவரும் தத்தம் குடும்பத்தினருடன் அணி பெற ஆலயத்திற்கு வருதலும், வணங்கி மகிழ்தலும் சிறந்த காட்சி! இறைமை வழிபாடு முடிந்தவுடன் இங்குமங்குமாகத் தனித் தனியாகவும் கூட்டாகவும் ஒருவர் மற்றவரை நலம் விசாரித்தும், கலந்தும் களித்துப் பேசுதலும் மகட்கோடல் முதலிய நிகழ்வுகள் பற்றிப் பேசுதலும் இன்றைக்கும் நடைபெறும் நிகழ்ச்சி. திருக்கோயிலில் ஒருமனப்பாட்டுடன் மக்கள் கூடுவர்; களித்தும் கலந்தும் பேசுவர். அதனால், திருக்கோயில் வளாகத்துக்குள் அன்பு செறிந்த, அருள்நலம் கனிந்த மனித உறவு வளர்கிறது; மனித நேயம் வளர்கிறது. சில சமயங்களில் அங்கேயே ஒரு கூட்டம் கூடுகிறது. கிராமத்தின் பொது நிகழ்வுகள் கலந்து பேசப்படுகின்றன; குடி மராமத்து, நாள் நிர்ணயித்தல், தண்ணீர் வரும் கால்கள் வெட்டுதல், நல்லேர் கட்ட நாளும் நாழிகையும் முடிவு செய்தல், விதை தெளிக்க நாள் முடிவு செய்தல், இன்னோரன்ன ஊரின் தேவைகளையும் ஆய்வு செய்து முடிவு எடுத்தல் நிகழ்கின்றன. இதனால், சமுதாயம் ஒழுங்கமைவு பெறுகிறது. ஓர் அருமையான கூட்டுவாழ்க்கை கால் கொள்கிறது.

ஒப்புரவு வாழ்க்கை

மானுடத்தின் மகோன்னத வெற்றிக்கு ஒப்புரவு நெறியைவிடச் சிறந்த வாழ்க்கை நெறி இல்லை. திருவள்ளுவர் விண்ணகத்திலும் மண்ணகத்திலும் ஒப்புரவு நெறியைவிட உயர்ந்த ஒன்றில்லை என்றார்.

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற”

என்பது திருக்குறள். திருக்கோயிலில் சிறந்த ஒப்புரவு நெறி வளர்ந்தது. திருக்கோயில், அமைப்பு முறையில் பற்பல பணிகளை அவாவி நிற்பது. அந்த ஒவ்வொரு பணியையும், அவ்வப்பணிக்குத் தகுதியுடையவர், உயர்வு தாழ்வு மனப் பான்மையின்றி, கடமையுணர்வோடு செய்து மகிழ்வது திருக்கோயில் பணிகளில் தான். திருக்கோயிலில் இறைவன் திருமுன்னர் திருவமுது படைக்கப்படுகின்றது. திருக்கோயிலைச் சார்ந்து வாழ்பவர்கள் – பணி செய்பவர்கள் அனைவரும் தம்முள் எந்த வேறுபாடுமின்றி அந்தத் திருவமுதைப் பங்கிட்டு உண்பதும் உழைப்பதும் ஒரு பொருள் பொதிந்த காட்சி! வாழ்க்கைக்கு உழைப்புத் தேவை. உழைப்புக்கு உணவு தேவை. திருக்கோயில் இயக்க அமைப்பில் உணவு வழங்கப்பட்டுவந்தது. பணநாயகத்திற்கு அங்கு இடமில்லை. அதனால், உழைத்தவர்கள் உடல்நலம் பெற்றிருந்தனர். திருக்கோயில் திருவமுதுமுறை நல்ல சத்தணவுமுறை. பொங்கல், வடை, பாயசம், அப்பம், சுண்டல், அவல், பொரி இவை இறைவன் திருமுன்னர் படைக்கப்படும் பண்டங்கள். பயறுவகையிலுள்ள புரதம்-உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அதனாலேயே மாலை நேரத்தில் இறைவன் திருமுன்னர் கடலை, பயறு வகைகள் சுண்டல் செய்து, படைத்துப் பெரியோர்க்கும் சிறப்பாகக் குழந்தைகளுக்கும் வழங்கினர். இங்ஙனம் நுகர்பொருள் எல்லோருக்கும் ஒரே முறையில் எளிய முறையில் கிடைக்கச் செய்யும் வாழ்க்கையிலும் சிறந்த ஒப்புரவு வேறு என்ன இருக்க முடியும்? உடையவர்கள் திருக்கோயிலில் இறைவனின் பெயரால் காணிக்கை இடுவார். இந்தக் காணிக்கைப் பொருளைக் கொண்டு வாய்ப்பற்றவர்களுக்கும் வாய்ப்புகளை நல்கி வளமுடையராக்கத் திட்டம் தீட்டி – அவ்வழி வளமார வளர்ந்து மகிழ்வர். ஆதலால், திருகோயிலைச் சார்ந்து வளர்ந்த ஒப்புரவு வாழ்க்கை, புகழ்ந்து பாராட்ட வேண்டியதொன்று.

கல்விச் சாலை

மனிதன் வளர்ச்சியடையக் கல்வி தேவை; கேள்வி தேவை. கல்வியும் கேள்வியும் எளிதில் பெறும் சமுதாயமே மேம்பாடடைய முடியும் கற்றல் கேட்டல் உடையார் பெரியார் என்று திருஞானசம்பந்தர் அருளிச் செய்து உள்ளார். இத்தகைய அருமையான கல்வியினைத் திருக்கோயில் வழங்கியது. திருவாவடுதுறைத் திருக்கோயிலில் இலக்கணம் கற்றுத் தரும் கல்விச் சாலை இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. திருவாமாத்துணர்த் திருக்கோயிலில் திருமுறை பயிற்றுவிக்கும் கல்விச்சாலை இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. திருக்கோயில்களில் பட்டி மண்டபங்கள் நிகழ்ந்துள்ளன. ஆதலால், திருக்கோயில்கள் கடவுட் கோயில்களாக மட்டுமின்றிக் கல்வி கற்பிக்கும் அமைப்புகளாகவும் விளங்கின என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

கலைக்கூடம்

வாழ்க்கை, சோற்றினால் மட்டும் ஆவதன்று. ஆன்மாவிற்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை; அழகுணர்வு தேவை. திருக்கோயில் ஒரு சிறந்த கலைபயில்கூடம், திருக்கோயில் சிற்பக் கலையின் உறைவிடமாக விளங்குவது. மதுரை, கிருஷ்ணாபுரம், திருப்பெருந்துறை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம், பேரூர், காஞ்சி, மாமல்லபுரம், தஞ்சை முதலிய ஊர்களில் உள்ள திருக்கோயிற் சிற்பங்கள் சிறந்தவை. கல்லில் எவ்வளவு அருமையான வேலைப்பாடுகள் செய்துள்ளர்கள்! அதுவும் கருங்கல்லில் சிற்ப உருவங்கள் அமைத்தல் மிகவும் கடினமானது. அது போலவே பல்வேறு வண்ணங்களால் தீட்டப் பெற்ற ஓவியங்களும் திருக்கோயில்களை அணி செய்துள்ளன. ஆடற்கலையும் பாடற்கலையும் இசைக்கலையும் வளர்ந்ததும் வளர்வதும் திருக்கோயிலைச் சார்ந்துதான். நாடகக்கலையும் கூட திருக்கோயிலைச் சார்ந்துதான் வளர்ந்தது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவில் நிறை நிலா நாளன்று முறையாக இராசராசேசுவர நாகடம் நடந்ததுண்டு. எண்ணற்ற மக்கள் கண்டு கேட்டு மகிழ்ந்தனர். திருக்கோயிலைச் சார்ந்து வளர்ந்த பண்ணிசை, பண்பாட்டு வளர்ச்சிக்கு மிகுதியும் துணை செய்தது. அது போலவே நாதசுர இசையும் வளர்ந்தது; மனித குலத்தையும் வளர்த்தது. மக்கள் பாட்டில், இசையில் எளிதாக ஈடுபட வாய்ப்பிருந்த பொழுது “வேந்தலைக்கும் கொல் குறும்புகள்” இருந்ததில்லை; வன்முறை இருந்ததில்லை; வன்கண்மையும் கூட இருந்ததில்லை. இறைவன், ஏழிசையாய் இசையின் பயனாய் விளங்குகின்றான் என்பது தமிழர் முடிவு. இசையினாலேயே இறைவனை வழிபட்டனர். தமிழோடு இசைபாடி நெஞ்சு நெகிழ்ந்து நின்றுருகி வழிபட்டனர். ஆதலால் திருக்கோயில் சமுதாயத்திற்கு மிக இன்றியமையாததாகிய கலைநலம் தரும் கலைபயில் கூடமாக விளங்கியது.

மருத்துவச் சாலை

மானிட வாழ்க்கை இனிதே அமைவதற்கு மருத்துவமும், தேவை. திருக்கோயிலைச் சார்ந்த வாழ்க்கை முறையில் மருத்துவம் சிறந்த முறையில் விளங்கியிருக்கிறது. திருக்கோயில் தத்துவத்தைக் கண்டவர்கள் சித்தர்கள். புறத்தே திருக்கோயிலைக் கண்ட சித்தர்கள் ஊனுடம்பாம் திருக்கோயிலையும் பேண, சித்த மருத்துவம் கண்டார்கள். சித்த மருத்துவத் துறையில் நோய் வராமைக்குரிய முற்காப்பு நெறிகளும் உண்டு. நோய் வந்தபின் செய்தற்குரிய மருத்துவமும் உண்டு. ஏன்? இறைவனே மருந்தாகவும், மருத்துவனாகவும் நின்று அருள் செய்பவன். எனவே எண்ணற்ற நோய்களை நீக்கி, “மருந்தீசன்” என்றும், “வைத்தியநாதன்” என்றும் பெயர் பெற்று விளங்குகின்றான். திருக்கோயில் வளாகத்தில் சிறந்த மருத்துவச் சாலைகள் இருந்தன.

திருவாவடுதுறையில் ஒரு வைத்தியக் கல்லூரி இருந்தது என்று விக்கிரம சோழன் கல்வெட்டுக் (கி.பி. 1131) கூறுகிறது. “சங்கரதேவியின் அறச்சாலை” என்ற உணவுச் சாலையில், உணவு அளிக்கப் பெற்றவர்களில் வைத்தியக் கல்லூரி மாணவர்களும் இருந்தனர். “முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலை”யிலும் மருத்துவ நூல் படிப்பவர்களுக்கும் இலக்கணம் படிப்பவர்களுக்கும் உணவு அளிக்கப் பெற்றது என்றும், அக்கல்வெட்டுக் கூறுகிறது. காஞ்சீபுரம் பக்கத்தில் உள்ள திருமுக்கூடல் கல்வெட்டு, கி.பி. 1067இல் திருக்கோயில் வருமானத்திலிருந்து வீரசோழன் என்ற பெயரால் மருத்துவ சாலையும் மருத்துவம் கற்பிக்கும் கலாசாலையும் நிர்வகிக்கப் பெற்றன. அவற்றில் ஓராண்டுக்குத் தேவையான மருந்து வகைகள் இருந்தன. ஒரு மருத்துவனும், சல்லியக் கிரியை-அறுவை மருத்துவம் பண்ணுவானும் அங்கு இருந்தனர். நோயாளிகட்குத் துணையாக மருத்துவப் பணி மகளிர்-தாதியர் பலர் இருந்தனர்; மருத்துவருக்குப் பெயர் “கோதண்டராமன் அஸ்வத்தாமப்பட்டன்” என்று பல்வேறு செய்திகளைக் குறிப்பிடுகிறது.

மேலும் தஞ்சையில் குந்தவைப் பிராட்டியாரால் அவர் தந்தை முதலாம் இராசராசன் நினைவாக, இலவச மருத்துவச்சாலை நிறுவப் பெற்றதாக அறிகிறோம். திருவிசலூர், திருப்புகலூர், திருச்சி மாவட்டம் கோவந்த புத்தூர், குன்றத்தூர், மைசூரைச் சார்ந்த சுகடூர் முதலிய இடங்களில் எல்லாம் திருக்கோயில்கள் மருத்துவச் சாலைகள் அமைத்து மக்கட் பணி புரிந்தமையைத் தெள்ளத் தெளிய அறியலாம்.

ஊராட்சி மன்றம்

பழங்காலத் தமிழராட்சி முறை, இன்றைய ஆட்சி முறையைப் போல அதிகாரம் ஓரிடத்தில் மையப்படுத்தப் பட்ட ஆட்சி முறையன்று. அதிகாரங்கள் முறைப்படுத்தப் பெற்றுப் பரவலாக்கப் பெற்றிருந்த ஊராட்சி மன்றங்களே ஊராட்சியின் மேலாண்மைக்குப் பொறுப்பேற்றிருந்தன. அரசு, மக்களைச் சலுகைகளால் வளர்க்கவில்லை, உரிமைகளால் வளர்த்தது. திருக்கோயில்களில் ஊராட்சி மன்றங்கள் அமைந்திருந்தன. அவை, ஊராட்சியின் மேலாண்மைக்குரிய பணிகளைத் திறம்படச் செய்தன. நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், நீர் நிலைகளைத் தூய்மையாகப் பேணுதல், காடுகள் வளர்த்தல், அவ்வப்பொழுது மக்கள் மன்றத்தில் தோன்றும் சிறிய பெரிய பூசல்களைத் தீர்த்து வைத்தல் முதலியவைகளை ஊராட்சி மன்றங்கள் திறமையாகச் செய்து வந்துள்ளன. திருக்கோயிலைச் சுற்றி வளர்ந்து வந்துள்ள ஆட்சி முறையில், நிறைவான மக்களாட்சித் தேர்வு முறை இடம் பெற்றிருந்தது. “குடவோலை”யின் மூலம் மக்கள் தங்கள் ஊராட்சி உறுப்பினர்களைத் தேர்வு செய்தனர். அரசு, யாரையும் ஊராட்சியில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நியமித்ததில்லை. பழங்காலத் திருக்கோயில்கள் சுதந்தரமான ஆட்சி உரிமைகள் பெற்ற மக்கட் பணிமனைகளாக இருந்தன என்பது நினைவு கூர வேண்டிய செய்தி.

அற்றார்க்கு உதவும் நிறுவனம்

திருக்கோயில்கள் அற்றார்க்கும், அலந்தார்க்கும் உதவும் நிறுவனங்களாக இருந்தன. குறிப்பாக வறியோர்க்கு உதவும் அமைப்புகளாக விளங்கின. தருமி என்றொரு ஆதி சைவன் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பின்றி, வறுமைக்கு ஆட்பட்டிருந்தான். மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருந்த ஆலவாயண்ணல், கவிஞனாகிச் சங்கப் புலவனாகி நக்கீரனோடு வாதாடி, பாண்டியனிடம் பொற்கிழி பெற்றுத் தருமிக்குத் தந்து உதவினான். திருஞானசம்பந்தர், அப்பரடிகள், சுந்தரர் ஆகியோரும் கூடப் பல சமயங்களில் பசித் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்பொழுதெல்லாம் ஆங்காங்கு திருக்கோயில்களிலிருந்த இறைவன் அவர்களுக்குச் சோறும், தண்ணீரும் தந்து உதவியிருக்கிறான். திருஞானசம்பந்தர் பொன் வேண்டிக் கேட்ட பொழுது, திருவாவடுதுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனும் பொன் கொடுத்து உதவியதை அறிக. இங்ஙனம் இறைவன் மட்டுமின்றித் திருக்கோயிலைச் சார்ந்திருந்த ஊர்ச் சபைகளும் உதவிகளைச் செய்துள்ளன.

நீதி சபை

மானிட வாழ்க்கையென்பது பிரச்சனைகளுக்கு உரியதுதான். பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை சாரமற்றது; சுவையற்றது. ஆனால், வாழ்க்கையில் பிரச்னைகளைச் சந்திக்கின்றபொழுது மனிதன் நிதானமாக நின்று சிந்திக்கத் தவறக்கூடாது, அறிவை இழந்துவிடக் கூடாது; ஆத்திரப்படக்கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் வாழ்க்கையின் செயற்பாடுகள் நீதியோடு தொடர்புடையனவாக அமைதல் வேண்டும். நமது சமயமே “நீதி”யென்று பெயர் பெற்றது. மாணிக்கவாசகர் இறைவனை நீதியென்றே அழைப்பர்.

பங்கயத் தயனுமால் அறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே”

என்பது திருவாசகம். திருக்கோயிலை மையமாகக் கொண்டு நீதி விளங்கியது. திருக்கோயில்களில் நீதி வழங்கு சபைகள் இருந்தன. அந்தச் சபைகள் வழங்கிய நீதிகள் வரலாற்றுப் புகழுடையன. திருக்கோயில் தத்துவத்தில் கடவுளும் நீதிக்குக் கட்டுப்பட்டவர். கடவுளும் தனக்கு ஏதாவது வழக்கு இருப்பின் தானே அடாவடித்தனமாக அடித்துப் பிடுங்க முடியாது. உவமையில்லாத தலைவனும் கூடத் திருக்கோயிலில் விளங்கும் பஞ்சாயத்தார் முன்னே நீதி கேட்டு நிற்கத்தான் வேண்டும்! திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கும், நற்றமிழ்ச் சுந்தரருக்கும் இடையேயிருந்த வழக்கைக் கூறி, இறைவன் திருவெண்ணெய் நல்லூர்ப் பஞ்சாயத்தார் முன்னே நீதி கேட்டு நின்றமையை அறிக. அதுபோலவே செட்டிப் பெண்ணுக்கு நலம் செய்ய நினைத்த திருப்புறம்பியத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், திருக்கோயிலில் விளங்கிய நீதி சபையின் முன்னால் சாட்சி கூறி, உதவி செய்ததை ஓர்தல் வேண்டும். அதுபோலவே மதுரையில் எழுந்தருளியுள்ள ஆலவாயண்ணல், மாமனாக வந்து வழக்குரைத்து நின்றமையையும் அறிக. ஆதலால், திருக்கோவில்கள் கடவுளின் திருக்கோயில்களாக மட்டுமல்லாமல் நீதிதேவதையின் திருக்கோயில்களாகவும் விளங்கின.

களவியலுக்கு வாயில்

தமிழர்கள் வாழ்க்கையை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள்; வாழ்வாங்கு வாழ விரும்பியவர்கள். தமிழர் தம் உணர்வுக்கு ஏற்றவாறு திருக்கோயிலும், திருக்கோயிலை ஆட்கொண்டிருந்த கடவுள் தத்துவமும் தொழிற்பட்டன. பெண்களைப் பெருமைப் படுத்தும் அகனைந்திணை வாழ்க்கை தமிழர்க்கே உரிய சிறந்த மரபு. மதுரையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவன், ஆணும் பெண்ணுமாக இணைந்து காதல் செய்து வாழ்கின்ற நெறியினைக் கூறும் அகப்பொருள் இலக்கணத்தையே அருளிச் செய்தான் என்பர். அந்நூல் ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் பெயர் பெற்றது. திருக்கோயிலைச் சார்ந்து களவொழுக்கமும் கற்பொழுக்கமும் வளர்ந்தன. இறைவனே பெண்பால் உகந்து வாழ்ந்தான்; போகமும் செய்தான். இதுவே திருக்கோயில் வளர்ந்த வாழ்க்கைத் தத்துவம். அதனால் அகனமர்ந்த மனையறத்திற்கு மாறாக வாழ்பவர்கள், பெண்ணைத் துறந்தவர்கள் திருக்கோயில் பூசனைக்கே யுரியவரல்லர் என்ற நியதி எழுந்தது. திருக்கோயில் வளாகத்திலேயே களவியல் ஒழுக்கத்திற்குரிய வாயில்கள் கிடைத்தன. சுந்தரர் பரவையாரைத் திருவாரூர்த் திருக்கோயிலில் கண்டு காதல் கொள்கின்றார். அங்ஙனமே பரவையாரும் காதல் கொள்கின்றார். திருக்கோயிலைச் சார்ந்து வளர்ந்த காதல் தத்துவத்தில், ஊனுடம்பின் கவர்ச்சியில்லை; அகனமர்ந்த காதல்; அருட்சார்புடைய காதல் இருந்தது. சுந்தரர் பரவையார் காதல் எப்படியிருந்தது?

கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன்”

என்று பரவையாரைக் கண்டு சுந்தரர் அதிசயிக்கின்ற செய்தியினையும்,

முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள்பெற் றுடையவனோ
என்னே! என் மனந்திரித்த இவன் யாரோ”

என்று சுந்தரரைக் கண்டு பரவையார் நினைந்த செய்தியினையும் திருத்தொண்டர் புராணம் சிறப்பித்துக் கூறும்.

சுந்தரர், சங்கிலியாரைக் காதலித்துத் திருமணம் செய்தது திருவொற்றியூர்த் திருக்கோயில் வளாகத்திலேயாம். ஆதலால் திருக்கோயில் திருவளாகம் அகனைந்திணை வாழ்க்கையின் பண்ணையாக விளங்கியது. திருக்கோயில் பொலிவு திருமணப் பொலிவாக விளங்கும் தன்மையது. இன்றும் இறைவன் ஆண்டுதோறும் திருமணம் செய்து கொள்கிறான். என்ன? ஆண்டுதோறும் புதுப்புதுத் திருமணமா? இல்லை, இல்லை. திருமண நாளை நினைவு கூரும் திருமணம். ஒரு நம்பியோ ஒரு நங்கையோ திருமணம் நிகழும் வரையில்தான் பிறந்த நாள் கொண்டாடலாம். திருமணம் நிகழ்ந்த பிறகு திருமண நாளே அவர்களின் நன்னாள்; அடிக்கடி நினைவு கூர்ந்து மகிழவேண்டி நன்னாள். இறைவன் உயிர்களுக்குப் போகம் – அதாவது இன்பம் வழங்குவதற்காகவே தமது ஆளுடைய நாயகியைக் கரும்புவில் ஏந்தச் செய்திருக்கின்றான். கரும்புவில் போகத்தின் சின்னம். சுந்தரருக்குத் திருமணம் செய்து வைத்தான் இறைவன். தான் விரும்பிய காதலனை மணக்க முடியாமல் தடை செய்கின்ற, கொடுமை செய்கின்ற மனிதர் இன்று போலவே பண்டும் இருந்தனர். அத்தகையோரை மறுத்துப் போராடி, ஒரு பெண் தான் விரும்பிய ஒரு காதலனை மணக்கத் துணை செய்தவன் இறைவன். இறைவன் அடியாராகிய திருஞானசம்பந்தரும் திருமருகலில் செட்டிப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றிமையை எங்ஙனம் புகழ முடியும்! ஆதலால் திருக்கோயில் மனையறத்தின் மாண்பறத்தையும் விளக்கியது; வளர்த்தது; மனித குலம் தலைமுறை தலைமுறையாகத் தழைத்து வளர வழி கண்டது.

புலவி தீர்த்தல்

பேரன்புடையீர், திருக்கோயில் அமைப்பில் வளர்ந்தவை திருமணங்கள் மட்டுமல்ல, கற்பியல் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ ஊடலும் ஊடல் முற்றிய நிலையில் புலவியும் தோன்றி வருகின்றன. இதனால் கருத்தொருமித்து வாழ வேண்டிய இருவர், உள்ளத்தால், உணர்வால் பிரிந்து விடுகின்றனர். இந்தப் பிரிவு வருந்தத்தக்க பிரிவு! இத்தகைய பிரிவு, இருபாலாருக்கும் பெருந்துன்பம் தருவது. இத்தகைய பிரிவுகளைத் திருக்கோயில்கள் அங்கீகரிப்பதில்லை. திருக்கோயிலைச் சார்ந்து வளர்ந்த வாழ்வியல் தத்துவம், ஊடல் தணிதலுக்கும் புலவி தீர்த்தலுக்கும் உரிய முயற்சிகளை மேற்கொள்ளும். திருநீலகண்டர் வாழ்க்கையில் அவருக்கும் அவர்தம் மனைவிக்கும் ஓர் ஆழமான புலவி தோன்றி விட்டது. பல ஆண்டுகள் பிரிந்து வாழ்கின்றனர். தில்லையம்பலத்திலுள்ள ஆடல் வல்லானுக்கு இவர்களின் புலவியும், புலவி வழிப்பட்ட பிரிவும் உறுத்தலைத் தந்திருக்கிறது. ஆதலால் ஆடல் வல்லானே முன்னின்று அவர்தம் புலவியைத் தீர்த்து, வாழச் செய்தருளினன். அதுபோலவே சுந்தரர் பரவையாரிடையே தோன்றிய ஊடலைத் தீர்க்க, பெருமானை,

நாயன் நீரே நான் உமக்கிங்கு அடியே னாகில் நீர் எனக்குத்
தாயின் நல்ல தோழருமாம் தம்பிரா னாரேயாகில்
ஆயஅறிவும் இழந்து அழிவேன் அயர்வுநோக்கி அவ்வளவும்
போய் இவ்விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாரும்”

என்று சுந்தரர் வேண்ட,

கழுதுகண்படுக்கும் நள்ளிரவில் பரவையார்பால் நடந்து தூது சென்ற காட்சியை எந்த எழுத்துக்களால் எழுதிக்காட்ட இயலும்! சேக்கிழாரால் மட்டுமே இயலும்!

இறைவர் விரைவின் எழுந்தருள
எய்தும் அவர்கள் பின்தொடர
அறைகொள் திரைநீர் தொடர்சடையில் –
அரவு தொடர, அரியஇளம்
பிறைகொள் அருகு நறைஇதழிப்
பிணையல் கரும்பு தொடர,உடன்
மறைகள் தொடர, வன்தொண்டர்
மணமும் தொடர வரும்பொழுது”

என்று ஓவியமாகத் தீட்டிக் காட்டுகிறார், சேக்கிழார் பெருமான். அதிலும், முதல் தடவை பரவையார் உடன்படாமற் போகத் தோல்வியைச் சுமந்து கொண்டு ஆரூரரின் முன்வந்து நின்ற இறைவனைப் பார்க்க இரக்கமாக இருக்கிறது. சுந்தரரோ பெருமான் மனம் வைத்தால் இயலாத தில்லையென நம்புகிறார். அது மட்டுமா? இறைவன்பாற் கொண்டிருந்த கிழமை மிகுதியால் உயிர் தரியேன் என்று மிரட்டுகிறார். மீண்டும் இறைவன் பரவையார் இல்லம் நோக்கி நடக்கிறார். இத்தகு நிகழ்வுகள் மூலம் நாம் பெறும் படிப்பினை என்ன? காதல் மணம் புரிந்தவர்கள் பிரிதல் கூடாது என்ற உயரிய தத்துவம் திருக்கோயில் தந்த திருமண வாழ்க்கைத் தத்துவம் என்பதே! இந்தத் தத்துவம் மனையற வாழ்க்கைக்கு அரணாகவும் காதலின்பத்திற்கு ஊற்றாகவும் விளங்குவது அறிக.

தோழமை வாழ்க்கை

காதல் வாழ்க்கைக்கு அடுத்தது தோழமை வாழ்க்கை இல்லை! காதல் வாழ்க்கையினும் மிக உயர்ந்தது தோழமை வாழ்க்கை “நட்பிற் சிறந்தது ஒன்றில்லை” என்று வள்ளுவம் கூறும். திருக்கோயில் இயக்கச் சூழ்நிலையில் நட்புக்கு வாயில்கள் அமைந்துள; நட்பும் வளர்ந்தது, திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் நற்றமிழாரூரருக்குத் தன்னைத் தோழமையாகத் தந்தமையை நாடறிவும். தோழமை எதற்காக? ‘மண் மீது விளையாடத் தோழமை துணை செய்ய வேண்டும். சுந்தரர்க்கு இறைவன் தோழனாக நின்று பொன் தந்தான்; பூவையர் தந்தான். வழக்கமாக எழுந்தருளும் திருக்கோயில் திருவுருவத்தினை நீங்கி, மகிழின் கீழ் இருந்தான்! தூது சென்றான்; ஆளாக இருந்தான் ஆட்களும் பிடித்து அமர்த்தினான். சுந்தரர் “பித்தன்” என்றும் “மகத்திற் புக்கதோர் சனி” என்றும் திட்டித் தீர்த்ததை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டான். இவை மட்டுமா? சேரமான் பெருமாளை அறிமுகப்படுத்தி, மற்றொரு தோழனாக்கிக் கொடுத்தான். அதன் வாயிலாக யானை ஏற்றம், குதிரை ஏற்றம் முதலிய விளையாட்டுக்களில் ஈடுபடும் வாய்ப்பினைத் தந்தான். ஆயினும் தமக்கினிய தோழராகிய ஆரூரர்க்கு வேண்டிய பொன்னைத் தாமே கொடுக்க வேண்டும்; மற்றவர்களிடம் வாங்கக் கூடாது என்ற நட்புறவின் முதிர்ச்சியால் – திருமுருகன் பூண்டித்திருக்கோயில் வளாகத்தில் வழிப்பறிவும் செய்து விளையாடுகின்றான். என்னே அற்புதம்! வாக்கு மனத்துக்கு அப்பாற்பட்ட ஆற்றல் மிக்க பொருளாகிய கடவுள், வாழ்க்கையின் முதலாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் இனிய தோழனாகி, உற்றுழி உதவியும் விளையாடியும் வாழ்க்கையை உய்த்துச் செலுத்தத் துணையாக இருந்த திருக்கோயில் தத்துவம் ஈடு இணையற்றது.

அன்பின் இயக்கம்

திருக்கோயில் தத்துவம் ஒரு அன்பின் இயக்கம். திருக்கோயில் அன்பினால் எழுந்தது. திருக்கோயில் அன்பினால் வளர்ந்தது. திருக்கோயில், வாழும் மனித குலத்தை அன்பினால் இணைத்தது; ஒருங்கிணைத்தது. அன்பு ஒரு சொல்லன்று. அஃது ஓர் ஆற்றல்! அன்பு ஒரு நுகர்பொருள்! இறைவன் உயிர்களிடத்திலுள்ள அன்பை நுகர்வதற்காக எழுந்தருளிப் போந்தமையை எண்ணற்ற வரலாறுகளில் காண முடிகிறது. திருப்பனந்தாள் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைத் தாடகை என்ற பிராட்டியார், தாமே மலரெடுத்துத் தொடுத்த மலர்மாலைகளைச் சாத்திப் பூசித்து வருகிறார். தொடக்கக் காலத்தில் திருக்கோயில்களில் இன, குல வேறுபாடின்றி, ஆண்-பெண் வேறுபாடின்றி, அனைவரும் தாமே பூசிக்கலாம் என்ற நெறிமுறை இருந்தது! அந்தக் காலத்தில் அம்மையார் பூசித்தார். ஒருநாள் இறைவனுக்குத் தாடகைப் பிராட்டியாரின் அன்பைத் துய்த்து மகிழவும் மற்றவர்க்குப் புலப்படுத்தவும் வேண்டும் என்ற உணர்வு பிறந்தது. தாடகையார் மலர்மாலை எடுத்து இறைவனுக்குச் சாத்தப் புகும் நேரத்தில், அவர்தம் உடை நெகிழ்கிறது. தாடகையாருக்கு அறச்சங்கடம். தாடகையாரின் அறச்சங்கடத்தை அறிந்த பெருமான் குனிந்து மாலை ஏற்றுக் கொள்கிறார்! அதனால் தாடகையாரின் இரண்டு நோக்கங்களும் நிறைவேறிவிட்டன. பெருமான் திருமேனியை வளைத்தது அன்பின் ஆற்றல் அல்லவா? இங்ஙனம் திருமேனி வளைந்த இறைவன் நிமிராமலேயே இருந்துவிட்டான். இதனைக் கண்ட சோழப் பேரரசு, பெரிய சங்கிலிகளைப் போட்டு யானைகளைக் கட்டியிழுக்கச் செய்தது! இறைவன் திருமேனியோ நிமிர வில்லை! இந்தச் செய்தி திருக்கடவூரில் வாழ்ந்த குங்குலியக்கலயர் என்ற பெருமகனாருக்கு எட்டுகிறது. அவர் திருப்பனந்தாள் வருகிறார். இறைவனைக் கூர்ந்து பார்க்கிறார். குங்குலியக் கலையர் அன்பில் விளைந்த ஆன்மா உடையவர். அவர் இறைவன் திருமேனியை நிமிர்ப்பதற்காகத் தமது கழுத்தில் ஒரு கயிற்றைப் போட்டுக் கொண்டு இழுக்கிறார்! உடன் பெருமான் திருமேனி நிமிர்கிறது. ஏன் நிமிர்கிறது? பெருமானையும் குங்குலியக் கலயரையும் பிணைத்திருந்த கயிறு குங்குலியக் கலயரின் உடலை வருத்துமே என்று கருதிப் பெருமான் தன் திருமேனி நிமிர்ந்தார். தாடகையார் மானம் காப்பாற்ற வளைந்தார்; குங்குலியக் கலயர் உடலைப் பாதுகாக்க நிமிர்ந்தார்.

“…………மாலை சாத்தும்
தாடகைமானம் காப்பான் தாழ்ந்து, பூங்கச்சிட்டு ஈர்க்கும்
பீடுறுகலயன் அன்பின் நிமிர்ந்த எம்பிரான் ஊர்”

என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

திருநீலநக்கநாயனாருடைய மனைவி, சிலம்பி நீங்க, வாயால் ஊதியதை அன்பின் விளைவாக ஏற்றுக்கொண்ட அருமைப்பாட்டையும் பிறிதொரு நிகழ்விற் காண்கிறோம். கண்ணப்பர் அன்பினால் விளைந்து, அன்பே உருவமாக விளங்கியதைத் திருக்காளத்தித் திருக்கோயிற் சூழலில் காண முடிகிறது! திருக்காளத்தித் திருக்கோயிற் சூழ்லில் விளைந்த அற்புதங்கள் எண்ணற்றவை. அவையனைத்தும் ஆன்மாக்களை உயர்நெறியில் உய்த்துச் செலுத்தக் கூடியவை!

திருத்தொண்டுப் பயிற்சி

திருக்கோயில் உயர்ந்து விளங்கியது தொண்டின் அமைப்பால்! திருநெறிய திருத்தொண்டு திருக்கோயிலைக் கண்டது. திருக்கோயில் திருநெறிய திருத்தொண்டை வளர்த்தது. திருக்கோயிலைச் சார்ந்து நடைபெற வேண்டிய தொண்டுகள் செய்வதற்குப் பயிற்சிப் பள்ளி ஒன்றைக் கணநாத நாயனார் நடத்தினார். திருக்கோயிலைச் சார்ந்து திருமாலை தொடுத்தல் முதல், சுவைமிக்க திருவமுது படைத்தல் வரை பல்வேறு தொண்டுகள் நடைபெற்று வந்துள்ளன. இதனை,

ஆய அன்பர்தாம் அணிமதில்
சண்பையில் அமர்பெருந் திருத்தோணி
நாயனார்க்கு நற்றிருப்பணி ஆயின
நாளும் அன்பொடு செய்து
மேய அத்திருத் தொண்டினில்
விளங்குவார் விரும்பிவந் தணைவார்க்குத்
தூய கைத்திருத் தொண்டினில்
அவர்தமைத் துறைதொறும் பயில்விப்பார்.”

(பெரி. கணநாதர் – 2)

என்று பெரியபுராணம் பேசுகிறது.

எனவே திருக்கோயில், தொண்டு இயக்கத்தின் மையம் என்பதறிக. திருகோயிலைச் சார்ந்து வாழ்கிறவர்கள் வளமாக வாழத் துறைதோறும் வாயில் அமைத்து வழி செய்தது திருக்கோயிலேயாம்!

உடல் ஊனமுறுதல் வருந்தத்தக்க ஒன்று! உடல் ஊனமுற்றோர் பக்கம் கனிந்த அன்பைக் காட்ட வேண்டும்! அவர்தம் வாழ்க்கைக்குரியன எல்லாம் செய்யப் பெற வேண்டும். இந்த உணர்வு திருக்கோயில் வளாகத்தில் அரும்பி மலர்ந்திருந்தது. திருவாமாத்தூர்த் திருக்கோயிலில், கண்பார்வையிழந்தோர் 16 பேர் உண்டியும், உறையுளும் பெற்றுத் திருமுறை பயின்றனர்-ஓதினர் என்பதை அறிக. கண்ணிழந்த சுந்தரர்க்கு இடர்ப்பாடின்றி நடக்க ஊன்றுகோல் கொடுத்துதவியது திருவெண்பாக்கத்துத் திருக்கோயில் வட்டம் என்பது ஓர்க. சமுதாயத்தில் பலவீனர்களாகிய உடல் ஊனமுற்றோர்க்குக் காப்பகமாகவும் திருக்கோயில் விளங்கி வந்தது.

முறை மன்றம்

வழக்குகள் வாராமல் வாழ்தல் நன்று. வரவேற்கத் தக்கது. ஆனால் மனித நேயத்தைவிடப் பொருளும் நுகர்வும் முதன்மை பெற்று விடும் பொழுது வழக்குகள் வராமற் போகா. வழக்கிற்குப் போகக் கூடாது; அடாவடித்தனமான வழக்குகள் வந்துவிட்டால் சந்திக்காமலும் இருத்தல் கூடாது. ஆனால் உலகியல் மரபில் வளமுடையோர் வளமில்லா தாரை வழக்கில் மாட்டி வைத்தே அமுக்குகின்றனர்; அழிக்கின்றனர். வசதியும் வாய்ப்புமில்லாதார் வழக்காட முடியாமல் தவிக்கின்றனர். இதனைக் கருதித்தான் இன்று வாய்ப்பற்றவர்களுக்கு வழக்காட “இலவசச் சட்ட உதவி” என்ற இயக்கம் தோன்றியிருக்கிறது. அரசே இந்த இலவசச் சட்ட உதவியை வழங்குகிறது. பழங்காலத்திலேயே நமது திருக்கோயிலைச் சார்ந்த வாழ்க்கை முறையில் இந்தமுறை, கால் ஊன்றியிருக்கிறது. மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன், மாமனாக வந்து வழக்காடி வெற்றி பெற்றுத் தந்துள்ளான். திரும்புறம்பியத்தில் திருமணம் செய்து கொண்ட செட்டிப் பெண்ணுக்கு, மதுரை இறைவன் வந்து சிவலிங்கத்தையும், கிணற்றையும், வன்னி மரத்தையும் சாட்சியமாக்கி அவளது துன்பம் துடைத்தான். திருக்கோயில் சூழலில் வழக்குகள் வரா வாழ்க்கைகள் நடந்தன. ஒரோவழி வழக்குகள் வந்த பொழுது எளிதில் தீர்வு காணப்பெற்ற அருமைப்பாட்டினையும் அறிக.

தொழிலில் சமத்துவம்

திருக்கோயிலைச் சார்ந்து வாழ்ந்த சமுதாய அமைப்பில் பல்வேறு குல அமைப்புகள் இருந்தன. அவற்றுக்கிடையே சிற்சில வேறுபாடுகளும் இருந்தன. குலநெறி முறைகளுக்கேற்பப் பழக்கங்கள் அமைந்திருந்தன; வழக்கங்கள் அமைந்திருந்தன. ஆயினும் அவர்களுக்குள் அற்புதமான பொதுமை நிலவியிருந்தது. அவர்களுக்கிடையில் பிரிவினை இல்லை; பிரிவினை வகைப்பட்ட பகைமை இல்லை. பல்வேறு குலப்பிரிவினரும் தத்தம் குலமரபுகளுக்கேற்ப அவரவர் தத்தம் தொழில்களை இயற்றி வந்தனர். சமுதாயம் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது. நம்பிக்கையும் நல்லெண்ணமும் யாண்டும் நிலவியிருந்தன. குலப்பிரிவினைகள் உறவுக்கும், உடனிருந்து உண்ணுதலுக்கும் தடையாக இருந்ததில்லை. ஆதிசைவ குலத்திற்பிறந்த ஆரூரர், உருத்திரகணிகையர் குலத்தைச் சார்ந்த பரவையாரை மணக்கின்றார்; வேளாளர் குலத்தைச் சார்ந்த சங்கிலியாரை மணக்கின்றார். அந்தண குலத்தைச் சார்ந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை ஞானாசிரியராக ஏற்றுக் கொள்கின்றார், ஆதி திராவிடர் வகுப்பினைச் சார்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருஞான சம்பந்தருக்கு யாழ் வாசிக்கின்றார். அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருநீலநக்க நாயனாரின் வேள்விச் சாலையில் தங்கியிருக்கின்றார்.

நின்ற அன்பரை நீலகண் டப்பெரும் பாணர்க்கு
இன்று தங்கஓர் இடங்கொடுத் தருளுவீர் என்ன
நன்று மின்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச்
சென்று மற்றவர்க்கு இடம்கொடுத்தனர்திரு மறையோர்”

என்பது திருத்தொண்டர் புராணம்.

நற்றமிழ் ஆரூரரும் சேரமான் பெருமான் நாயனாரும் உற்ற தோழராக விளங்குகின்றனர். அப்பரடிகளும் திருஞான சம்பந்தரும் முருக நாயனாரும் உடனிருந்து உண்டு பயின்று வாழ்கின்றனர் திருப்புகலூர்த் திருக்கோயில் வளாகத்திற்குள்! சேக்கிழார் இந்நிகழ்வை “உடனுறைவின் பயன் எய்தினார்!” என்று பாராட்டுவார். திருக்கோயில் தத்துவத்தில் குல வேற்றுமைகள் இருந்தன. ஆனால், அவற்றைக் கடந்து பொது உறவு வளர்ந்தது! வேற்றுமையின்றி அவரவர்தம் தொழில்களை இயற்றினர்! அஃதோர் ஒப்பற்ற சமுதாயம்! ஆம்! திருக்கோயிலை மையமாகக் கொண்டு வாழ்ந்த சமுதாயம், ஒப்பற்ற சமுதாயம்!

நீர்நிலைப் பாதுகாப்பு

மனித வாழ்க்கைக்குத் தண்ணீர் இன்றியமையாதது! “நீரின்றமையாது உலகு” என்று திருக்குறள் கூறும். திருக் கோயிலினின்றும் பிரிக்கப்படாது உடனிருந்து இயங்குவது தீர்த்தம் அதாவது திருக்குளம், தீர்த்தத்தைச் சார்ந்தே திருக்கோயில் விளங்குகிறது. திருக்கோயில்களைச் சார்ந்து மிக அகலமாகவும் ஆழமாகவும் எழிலுற அமைந்துள்ள திருக் குளங்களைக் காணும் பொழுதெல்லாம் நமது சமுதாய முன்னோடிகள், சமுதாய அமைப்பை நிர்மாணித்த திறன் நமக்குப் புலப்படுகிறது. ஆற்றங்கரைகளிலும் பெரிய திருக் குளங்களின் கரைகளிலும் திருக்கோயில்கள் விளக்க முற்றன. இந்தத் திருக்குளங்களைப் பாதுகாத்தல், தூய்மையாகப் பேணுதல் திருக்கோயிலின் கடமையாக இருந்தது. மானிடர் உடல் வெப்பம் தணியத் தீர்த்தத்தில் மூழ்கினர். ஆன்மாவைப் பற்றி நிற்கும் ஆணவ வெப்பம் தணிய இறைவனின் திருவருட் புனலில் மூழ்கினர். இத்தகைய திருக்கோயில்களின் திருக்குளங்களை அவ்வப்பொழுது தூர்வையெடுத்துத் துய்மைப்படுத்திப் பாதுகாத்து வந்துள்ளனர். திருவாரூர்க் கமலாலயம் என்று புகழ்பெற்ற ‘திருக்குளத்தைக் கண்ணிரண்டுமில்லாத குருடராக வாழ்ந்த தண்டியடிகள் துர்வையெடுத்துத் தூய்மை செய்த அரும்பெரும் சாதனையைச் சேக்கிழார் செஞ்சொற் காப்பியமாக வடித்துத் தந்துள்ளார்.

விழவுமலி வாழ்க்கை

தமிழ் மக்கள் விழாக்கள் எடுப்பதில் விருப்பமுடையவர்கள். விழவு நிறைந்த வாழ்க்கை தமிழர் வாழ்க்கை திருக்கோயில் நாகரிகம் மிகவும் சிறப்புற்று விளங்கியது, மருத நிலத்திலேயேயாம். மருத நிலத்து மக்களுக்கு இயல்பாகவுள்ள பழக்கம் விழாவயர்த்தல், திருவாரூர்த் திருக்கோயிலில் விழா நிகழ்ந்ததைத் திருப்பல்லாண்டு எடுத்துக் கூறும்.

குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று விம்மி
மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
மணம்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடும் கூடிஎம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே!”

என்பது திருப்பல்லாண்டு! சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து இருந்த நாளில், திருவாரூர் வசந்த விழாவை நினைந்து திருப்பதிகம் பாடினார் என்பது வரலாறு. திருவாரூர் வசந்த விழா, புகழ்பெற்ற விழா. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் பார்த்துப் பாராட்டிய விழா! விழாக் காலங்களில் விழா நிகழும் ஊர்களில் உள்ள இல்லங்களில் எல்லாம் விருந்தினர் சூழ்ந்து வந்திருப்பர். எங்கும் வெள்ளம் போல் கூடி ஆட வரும் மகளிரும் பெருமானுக்குத் திருவிழா எடுத்து மகிழ்வர். பெருமானின் திருவிதியுலா, நையாத மனத்தினரையும் நைவிக்கும், திருத்தேர் விழா, சமுதாயம் ஒருங்கிணைந்து வலிமையுடனிருப்பதை எடுத்துக் காட்டும் விழா. உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஓரணியில் நின்று தேர் இழுக்கும் காட்சி, சமுதாயம் ஓர் உருப் பெற்றுள்ள காட்சியைப் புலப்படுத்தும். எடையாலும் உயரத்தாலும் உயர்ந்திருக்கும் திருத்தேர், சூழ்ந்திருக்கும் மக்களின் ஆற்றலுக்கு அறைகூவல்! அம்மம்ம! திருத்தேரின் வடம் பிடித்து இழுப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி! வாழ்க்கை எய்த்துக் களைத்துப் போகாமல் தடுக்க விழவு! நல்ல முறையில் விழவெடுக்கும் சமுதாயம் விழா வாழ்க்கை பெறும் !

சுகாதார வாழ்வு

வாழ்க்கை வாழ்வதற்கே! உடம்பிற்கு நோய் இயற்கையன்று! செயற்கையே! உடம்பை “நடமாடும் கோயில்” என்று திருமூலர் பாராட்டுவார். உடம்பை இழிந்ததென்று நினைத்து அலட்சியமாக வாழ்கிறவர்கள் நோயை வரவழைத்துக் கொள்கின்றனர்! அதன் பிறகு வேறு வழியின்றி உடம்புக்கு அடிமையாக வாழ்வர்! ஏன் இந்த அவலம்? தூய்மையான காற்று, தூய்மையான தண்ணிர், துய்மையான உணவு, தூய்மையான சிந்தனை! இவற்றைக் குறித்த காலத்தில் உடம்புக்கு வழங்கினால் உடம்பு இயங்கும்; நம் விருப்பம் போல் ஒத்துழைக்கும்! திருக்கோயில் வளாகத்தில் அகன்ற முச்சுற்றுக்கள், உயர்ந்த மதில்கள் சூழ அமைந்திருப்பதால் தூய்மையான காற்றுண்டு! எல்லாத் திருக்கோயில்களிலும் தூய்மையான தண்ணீருண்டு! இறைவனுக்குப் படைக்கும் காய்களும் கனிகளும் உணவிற் சிறந்தவை! இவற்றை உண்டு வாழ்ந்தால் ஏன் நோய் வருகிறது? திருக்கோயில் தூய்மையாக இருந்தாலும் திருக்கோயிலைச் சார்ந்துள்ள வீதிகள் எப்பொழுதாவது தூய்மை கெட்டுப் போயிருந்தால் திருக்கோயில் வளாகமும் கெடும். அதனால் அப்பரடிகள் திருக்கோயில் வளாகத்தைத் துய்மை செய்ததோடு திருக்கோயிலைச் சார்ந்திருந்த வீதிகளையும் தூய்மை செய்தார்.

மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாரும்
திருவடிவும் மதுர வாக்கில்
சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின்
மாலைகளும் செம்பொற் றாளே
சார்வான திருமனமும் உழவாரத்
தனிப்படையும் தாமும் ஆகிப்
பார்வாழத் திருவிதிப் பணிசெய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்”

என்ற இச்செய்தியினைப் பெரியபுராணம் பாராட்டும். ஆதலால், திருக்கோயிலைச் சார்ந்து ஒரு தூய்மை இயக்கம் வளர்ந்தது! சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப் பெற்றது! தூய்மையே இறைமை என்ற கொள்கை உயர்த்திப் பிடிக்கப்பெற்றது.

தமிழாய்வு

மானிட நாகரிகத்திற்கு ஊற்று தாய்மொழி. தாய் மொழிச் சிந்தனையில் வளர்ந்த சமுதாயம்தான் வளரும், மேம்பாடு அடையும்! தமிழரின் தாய்மொழியாகிய தமிழ், திருக்கோயில் வளாகத்தில் வளர்ந்தது! தமிழ், திருக்கோயில் தத்துவத்திற்கு உருக்கொடுத்தது. சங்கப் புலவர்களின் தலைவனாக இறைவன் அமர்ந்து தமிழை ஆய்வு செய்தனன். அவன் மட்டுமா? உமையம்மையும் உடனிருந்து ஆய்வு செய்தாள்; அறுமுகச் செவ்வேளும் அமர்ந்து ஆய்வு செய்தான். திருக்கோயில் வளாகத்திற்குள் தமிழ்ச் சங்கம் இருந்தது. தமிழறிஞர்கள் கூடினர்; தமிழை ஆய்வு செய்து வளர்த்தனர். புலவர்களுக்கிடையில் புலமைக் காய்ச்சல் வருவதும் உண்டு. சங்க காலத்திலும் புலவர்களுக்கிடையில் யாருடைய கவிதை சிறந்தது என்று கலகம் நடந்தது! பெருமான், புலவர்களுக்கிடையேயிருந்த கலகத்தை அடக்கி நக்கீரர், கபிலர், பரணர் ஆகியோர் பாடல்கள் விழுமியவை என்று ஏற்பளித்தார்.

…….கலை வல்லோர் தமிழ் எல்லாம்
சித்தங்கொடு தெருட்டுஞ்சிறு வணிகன் தெருள்கீரன்
முத்தண்டமிழ் கபிலன்தமிழ் பரணன்தமிழ்மூன்றும்
அத்தன்மையுன் அறியும்தொறும் அறியும்தொறும் எல்லாம்”

பல்காசொடு கடலிற்படு பவளம்சுடர் தரளம்
எல்லாம் நிறுத்து அளப்பான் என இயல்வாணிகன் குமரன்
சொல்லாழமும் பொருளாழமும் துலை நாவெனத் தூக்க
நல்லாறுஅறி புலவோர்களும் நட்டார்; இகல் விட்டார்”

எனும் திருவிளையாடற்புராணப் பாடலில் இஃதறியலாம். திருக்கோயில் வளாகத்தில் தமிழோடு இசைப் பாடல் ஓதப் பெற்றது; தமிழாய்வு செய்யப்பெற்றது. ஆக, மானிட இயக்கத்தின் ஊற்றாக இருக்கிற சிந்தனை, கருத்து, இலக்கியம், தத்துவம் ஆகிய அனைத்தும் திருக்கோயில் சூழலிலேயே காணப்பெற்றன; படைக்கப்பெற்றன.

திருக்கோயிலைச் சார்ந்து மொழி உலகம் இருந்த வரையில் தமிழ் மொழி தூய்மையாக இருந்தது; கலப்பின்றி இருந்தது; தனித்து இயங்கியது. தமிழ்மொழி வழியதாகச் சமுதாயத்தின் சிந்தனைப் போக்கு அமைந்திருந்தவரையில் உயிர்ப்புள்ளதாக இருந்தது. திருக்கோயிலைத் தமிழ் வளர்த்தது; தமிழைத் திருக்கோயில் வளர்த்தது.

எல்லா உயிர்க்கும் இறையருள்!

மனித வாழ்க்கைக்கு விலங்குகள், பறவைகள் துணை செய்யக் கூடியன. ஆதலால், திருக்கோயில் தத்துவத்தில் விலங்குகள், பறவைகள் முதலியனவும் உரியவாறு பாராட்டுப் பெற்றுள்ளன; பேணப் பெற்றுள்ளன! ஏன்? மதுரைத் திருக்கோயில், திருவானைக்காத் திருக்கோயில் முதலியவற்றில் இறைவனை யானைகள் பூசித்துள்ளன. திருவான்மியூர்த் திருக்கோயிலில் பசு பூசித்திருக்கிறது! மற்றும் பிற திருத்தலங்களில் சிலந்தி, குரங்கு, நண்டு ஆகியவைகளும் பூசித்துள்ளன என்ற வரலாறுகள் உண்டு. கரிக்குருவிக்கு மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆலவாயண்ணல் உபதேசித்தார் என்றெல்லாம் திருக்கோயில் வளாகத்திலிருந்து வெளிவரும் செய்திகளை நோக்கும் பொழுது

காக்கை குருவி எங்கள் சாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்”

என்ற பாரதியின் பாடலுக்கு ஊற்றுக் கண்ணாக அமைந்தது, தமிழ்நாட்டின் திருக்கோயில் தத்துவம் என்று எண்ணத் தோன்றுகிறது.

பரிவின் உறைவிடம்

திருக்கோயில் வளாகத்தில் இறைவன், “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து” அருள் செய்யும் காட்சி, மாட்சிமை மிக்குடையது! திருச்சிராப்பள்ளித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன், பேறு காலத்தில் அல்லல்பட்டிருந்த பெண்ணுக்கு, ஈன்ற தாயாக அருகிலிருந்து மகப்பேற்றுக்குத் துணை செய்தான் என்ற வரலாறு, திருக்கோயில் இயற்றிய சமுதாயப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

நிதி

திருக்கோயில் தத்துவத்தில் பொன்னுக்கும் பொருளுக்கும் இடமுண்டு. பொன்னும் பொருளும் வெறுக்கத்தக்கன அல்ல. “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்” என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு. ஆதலால், வாழ்க்கைக்குப் பொருள் இன்றி அமையாதது. திருக்கோயில் மற்றவர்களிடமிருந்து பெறவும் செய்தது. அதுபோலவே நாடி வந்தாருக்குத் தானும் வழங்கியது. இறைவன், திருவாவடு துறையில் திருஞானசம்பந்தருக்குப் பொற்கிழி தந்தருளினன்; திருவீழி மிழலையில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் துயர் நீங்க, திருஞானசம்பந்தரும் அப்பரடிகளும் பணி செய்ய, நாள்தோறும் படிக்காசு தந்தருளினன்.

கால நிலைமை யால்உங்கள்
கருத்தில் வாட்ட முறிர் எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்
களிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்தருளிக்
குலவும் பெருமை இருவருக்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
வைத்தார் மிழலை நாயகனார்”

என்பது பெரியபுராணம். ஆதலால், திருக்கோயில் சூழலில் வாழ்தல், வளமான வாழ்க்கையாகவே அமைந்திருந்தது.

மரணத்தை வெல்லல்

வாழ்க்கை, வாழ்வதற்கே! சாவதற்கல்ல! மரணத்தை வென்று வாழ வேண்டும். .

சுற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவற்கு”

என்ற வள்ளுவம் நோக்குக! திருக்கோயில் தத்துவத்தைச் சார்ந்து, திருக்கோயில் கோட்பாட்டின்படி வாழ்கிறவர்கள், மரணத்தையும் வென்று வாழ்வார்கள்! திருக்கடவூர்த் திருக்கோயில் இறைவனைப் பூசித்து வாழ்ந்தவர் மார்க்கண்டேயர். மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என்று விதி நிர்ணயித்தது. ஆனால் மார்க்கண்டேயர் தம்முடைய வழிபடும் நாயகனை நம்பிக்கையோடு இறுகப் பற்றிக்கொண்டு, தன்னை வௌவ வந்த கூற்றுவனிடமிருந்து தப்பித்து விட்டார். பெருமானும் தமக்கு அன்புபட்ட மார்க்கண்டேயரின் உயிரை வௌவ வந்த காலனைத் தன் காலால் உதைத்து வீழ்த்தினான். “கால காலன்” என்று பெயர் பெற்றான். திருக்கோயில் நாகரிகம் மரணத்தை வென்றது; மரணத்தை வெல்லத் துணை செய்வது என்பதை அறிக.

வரலாற்று ஏடு

மனிதகுலத்தின் நிகழ்வு என்பது வரலாற்றை வளர்க்கும் உந்து சக்தி! இன்றைய நிகழ்வு, நாளைய வரலாறு. தமிழ் நாட்டுத் திருக்கோயில்களின் சுவர்கள் வரலாற்று ஏடுகளாக விளங்கும் மாண்பின! தமிழ்நாட்டில் நிலவிய மொழி, கலை, பண்பாடு, சமூகம், அரசியல், பொருளியல், சமயம் முதலியவற்றின் வரலாற்றுச் செய்திகளைத் திருக்கோயில் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. ஆகத் திருக் கோயில்கள் சென்ற கால வரலாற்றைக் கூறும் ஏடுகளாகவும் எதிர்கால வரலாற்றை இயக்கும் உந்து சக்திகளாகவும் விளங்கி வருகின்றன.

செய்ய வேண்டுவன

தமிழக வரலாற்றைச் செழுமைப்படுத்திய திருக்கோயில் தத்துவத்தைக் கண்டோம்! திருக்கோயில் சமுதாயத்தின் ஆற்றல் மிக்க மையமாக விளங்கியது. “கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்” எனப் பழந்தமிழ்ச் சமுதாய அமைப்பு விளங்கியதை அறிய முடிகிறது. இன்று நமது திருக்கோயில்களுக்கும் நமது சமுதாயத்திற்கும் நெருக்கமான உறவில்லை. திருக்கோயில் வணிகக் கூடாமாக உருமாற்றம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். திருக்கோயில், சமுதாயத்தின் நல்லமைப்புக்கு எதிராக இருக்கிற தீமைகளிலிருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டும். அதாவது சாதி வேற்றுமை, தொழில் வேற்றுமை, தீண்டாமை பாராட்டுதல் முதலிய தீமைகளிலிருந்து மீட்க வேண்டும். திருக்கோயில் ஒரு சுரண்டும் நிறுவனமாக வளர்வது, திருக்கோயில் தத்துவத்திற்கே முரணானது! அதனால், நாடு கெடும். பொதுமை நெறிக்கு மாறான ஒரு மேலாதிக்கக்குடி திருக்கோயிலைச் சார்ந்து தோன்ற அனுமதிக்கக் கூடாது.

திருக்கோயிலைச் சார்ந்தவர்கள் அனைவரும் தொண்டர்கள். திருக்கோயிலைச் சார்ந்து, மீண்டும் திருநெறிய தொண்டு உயிர்ப்புப் பெறுதல் வேண்டும். திருக் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊராட்சி மன்றங்கள், கல்விச்சாலைகள், மருத்துவச் சாலைகள் மீண்டும் திருக்கோயில் வளாகத்துக்குள் வந்தாக வேண்டும். நாம் ஒவ்வொருவரும் திருக்கோயிலுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள்!

திருக்கோயிலின் அசையும் சொத்து, அசையாச் சொத்துக்களின் பட்டியல் மட்டும் இருந்து பயன் என்ன? திருக்கோயிலில் நம்மவர் பதிவேடு இருக்க வேண்டும். நம்மவர் வாழ்க்கை நிகழ்வுகளைத் திருக்கோயிலிலேயே செய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் திருக்கோயிலுக்குரிய கடமைகளை-அவை எத்தகையவாக இருந்தாலும் தவறாது செய்தல் வேண்டும். ஆண்டுதோறும் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியினைத் திருக்கோயிலுக்கு உளமார மனமுவந்து செலுத்த வேண்டும். இங்ஙனம் செலுத்துவதன் மூலம் திருக்கோயில் நிதிநிலை சீராகும். இது நடைமுறைக்கு வந்தவுடன் அருச்சனைச் சீட்டு முறைகளை (வணிக முறைகளை) அறவே நீக்க வேண்டும். சிக்கனமாகச் செலவழிக்கப் பெற வேண்டும். திருத்தொண்டின் மூலமே, ஊதியம் பெறாத உழைப்பின் மூலமே, திருக்கோயில்கள் தூய்மையுடன் பேணப்பட வேண்டும்.

திருக்கோயிலில் ஆரவாரமான செலவுகளைத் தவிர்க்க வேண்டும். திருக்கோயிலில் பொது நிதி ஆதாரத்தை வலிமைப்படுத்தி, வளமாக வாழ வாய்ப்பிழந்தவர்களுக்கு வாய்ப்பை உருவக்கி உதவி செய்து அவர்களை உயர்த்த வேண்டும். மீண்டும் திருக்கோயிலை மையமாகக் கொண்ட சமுதாயத்தை அமைப்பது நமக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது!

திருக்கோயில்கள் சமுதாயத்தின் மையங்களாகவும் சமுதாயத்தின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும். திருக்கோயில்கள் தனியார் உடைமைகளாகவும் மதச்சார்பற்ற அரசாங்கத்தின் உடைமைகளாகவும் இருப்பது விரும்பத்தக்கதல்ல! திருக்கோயில்களை மீண்டும் சமுதாய மையமாக மாற்றுவோம்! நம்முடைய சமுதாய வாழ்வியலைத் திருக்கோயிலைச் சார்ந்ததாக அமைப்போம்! முன்னையது உடனடியாக நிகழக் கூடியதன்று! இது தெரிந்த உண்மையே! ஆயினும் பின்னையது – அதாவது சமுதாய வாழ்வியலைத் திருக்கோயிலைச் சேர்ந்த்தாக அமைப்பது என்ற கோட்பாட்டை, உடனடியாகத் தொடங்க யாதொரு தடையு மில்லை! இந்த முயற்சியை உடனடியாக மேற்கொள்வோ மானால், நம்முடைய தலைமுறையிலேயே திருக்கோயில்கள் மீண்டும் சமுதாய மையங்களாக விளங்கும் பொற்காலம் தோன்றும் ! ‘கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோயில்!’ – இதுவே நெறிமுறை! செயற்பாடு! தவம் ! அனைத்தும் ஆம்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *