ஆலயங்கள் சமுதாய மையங்கள் குன்றக்குடி அடிகளார்

5. வாழ்வும் வளமும்

உலகில் சமா தானம் நிலை பெறவே மாந்தன்
உண்மையில்போ ராடநினைக் கின்றான்’: ஆனால்
கலகவிவ காரத்தில் வாழ்நா ளெல்லாம்
கழிக்கின்றான்; அந்தோ! நன் மகிழ்வைத் தேடி
அலைகின்றான்; ஆனால் பாக் கியமில் லாமை
அலைக்கின்ற துன்பம் இவை கடக்க லானான்!
நிலையான பொருளாக்கம் ஆன்ம மேன்மை
நேசித்தும் அவன்வறுமை தனில்ஆழ் கின்றான்!
இந்தஉல கத்தில் உள்ள பொருள்க ளெல்லாம்
இயற்கையிலே முறையாக வளர்ந்து உயர்ந்து
வந்து, பல மாற்றங்கள் அடையும்! ஆனால்
மனிதன் மட்டும் திறமையொடு பிறக்கின் றான்காண்!
இந்தஉல கப்பொருள்கள் யாவற் றுக்கும்
தலைமையினை ஏற்கின்ற தகுதி பெற்றான்!
அந்தமனி தன்பெருமை ஒருவ ராலும்
அளந்துவிளக் கிடஇயலா அருமைத் தாகும்!
மனிதனது ஞானம் எல்லா ருடனும் எல்லை
வரையறைகள் ஒதுக்கங்கள் யாது மின்றிப்
புனிதமொடு பகிர்ந்துகொள்ளத் தக்க தாகும்;
போந்தமனி தப்பிறவிக் குரிய செய்தி
நனிவிழிப்பாய் எப்போதும் இருப்ப தாகும்;
நாளும் அவன் இலக்கு, மேம்பா டுறுத லாகும்;
எனின் அந்தப் பொழுதில்தான் உண்மை யான
பயன்பாட்டு மனிதனென ஏற்றம் கொள்வான்!

இது மானிட வாழ்க்கையை ஜப்பானிய முறையில் அணுகி எழுதப்பெற்ற “New Concept of Man” என்னும் ஆங்கிலக் கவிதையின் தழுவலாகும்.

வாழ்க்கை உண்மையானது; பொருளுடையது. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது தமிழ்நெறி. வாழ்தல் வேறு; பிழைத்தல் வேறு; ஜீவித்தல் என்பது வேறு. உழைப்பதையே பிழைப்பாகக் கொண்டு வாழ்ந்து இன்பம் காண்பவர்கள் பெரியோர்கள்; சான்றோர்கள். பலர், பிழைப்பு நடத்துவதற்காக உழைக்கிறார்கள். அதாவது ஊதியத்தை எதிர்பார்த்தே வேலை செய்கிறார்கள். அதில் ஏற்படும் கூடுதல் – குறைவுகளுக்காக வேலை செய்வதையே கூட விட்டுவிடுகின்றனர். இஃது இழிசெயல், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்” என்று வள்ளுவம் கூறும் “வாழ்வில் வெகு முக்கியமாய்க் கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி, எங்ஙனம் வாழ்வது என்பதே!” என்றார் ஆல்பரி. தெய்வத்தைப் பரவி நிற்றல் தெய்வத்திற்குப் பெருமை சேர்ப்பதற்கன்று. நாமும் இறைமைக் குணங்களையும், இறைமையின் ஆற்றல்களையும் பெற்று வாழ்ந்திடுதல் வேண்டும் என்பதற்கேயாம். அப்பொழுது மானுட வாழ்க்கையே இறைமைநலம் மிக்க வாழ்க்கையாக உருமாற்றம் பெறுகிறது. எப்பொழுது? வாழ்வாங்கு வாழும் பொழுது!

சொல்லல் எளிது. ஆனால், வாழ்தல் அருமைப்பாடுடையது. வாழ்க்கையென்பது தயக்கங்கள், மயக்கங்கள், போராட்டங்கள் ஆகியவற்றால் ஆகின்ற ஒரு தொடர் வரலாறு. இந்தத் தொடர் வரலாற்றில் நாயகனாக – நாயகியாக இருப்பவர்கள் தொடர்ந்து வாழ்க்கையை முழுமைப்படுத்தும் நோக்கத்தோடு போர்க்குணம் மிக்கவராக வாழ்க்கையை இயக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். தியாக உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செய்யும் பணிகளால்தான் வாழ்க்கை முழுமை பெறுகிறது; ஆன்மா முழுமை பெறுகிறது. மலர்கள் மலர்கின்றன. அர்ப்பணிப்பு உணர்வுடன் மற்றவர்களுக்கு மணம் வழங்குவதே அவற்றின் வாழ்க்கை. மணம் தந்து முடிந்தவுடன் அவற்றின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. மரங்கள் கனிகளைப் பழுக்கச் செய்கின்றன! கனிகளின் நோக்கம் மற்றவர்களை வாழ்விப்பதே. மற்றவர்களுக்கு வாழ்வு தகுதலே வாழ்க்கையின் குறிக்கோள்; முடிவு! வாழ்வாங்கு வாழ்தல் ஓர் அரிய கலை. அறிவார்ந்த சதுரப்பாடு. வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப்பட்ட மாளிகையன்று; நாமே ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்முடைய உணர்வால், எண்ணத்தால், செயற்பட்டால் வாழ்க்கையைக் கட்டுமானம் செய்து கொண்டிருக்கின்றோம். தான் இருந்து வரும் இல்லத்தைத் தானே தூக்கிச் செல்லும் நத்தையினத்தைப் போல நம் வாழ்வை, நம் வாழ்வின் வெற்றி தோல்விகளை – இன்ப துன்பங்களை நாமே சுமந்து செல்லுகின்றோம். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற சங்க நூற்கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கது.

வளமான வாழ்க்கைக்கு ஒவ்வொரு மனிதனும் ஒருங்கிணைந்த அனைத்தும் நலமுடன் இயங்குகின்ற ஒரு முழுமையான நிலையை எய்திடுதல் வேண்டும். அதாவது சிந்தனை நலம், புத்தியில் தூய்மை, மன நலம், புலன்களில் செம்மை, பொறிகளில் தூய்மை, உடல் நலத்திலும் உயிர் நலத்திலும் மிகக்குயர்ந்த மேம்பாட்டு வாழ்க்கை ஆகியன தேவை. அப்பொழுதுதான் வளமான வாழ்க்கையைக் காண முடியும். வாழ்வு முன்னேற வேண்டுமானால் உடலுக்குள்ளே அமைந்த உயிர் அல்லது ஆன்மா, பூரண வளர்ச்சி பெற வேண்டும்.

ஆன்மா, நலம் எய்துவதற்காக எடுத்துக்கொண்ட சிறந்த கருவி உடம்பு. உடல், அகநிலைக் கருவிகளும் புற நிலைப் பொறிகளும் பொருத்தப் பெற்ற ஒரு சிறந்த இயங்கு கருவி. உடல், பேணிக் காக்கப்படவேண்டிய ஒன்று. எல்லா நலத்திற்கும் உடல் நலம் அடிப்படை, அதனால்தான் திருமூலர் “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!” என்று அருளிச் செய்தார். உடம்பை வளர்த்தலாவது உடம்பின் பயன்பாட்டுத் திறனைப் பயன்படுத்துதல் மூலம் பெருக்கி வளர்த்துக் கொள்ளுதல் என்பதாகும். இன்று நம்முடைய மனிதகுலத்தின் மூளையாற்றல், உடலாற்றலில் பதினேழு விழுக்காடு கூடப் பயன்படுத்தப் பெறவில்லை என்று கூறுகின்றனர். வாழ்க்கையை ஓர் உயர் குறிக்கோளை நோக்கி மேலும் மேலும் புதிய புதிய வேலைகளை எடுத்துப் பயிற்று வித்துக் கொண்டு முன்னேறுகிற பழக்கம் அருகியே காணப்படுகிறது. மூலப் பொருள்களுக்கானாலும் சரி, மனிதனுக்கானாலும் சரி, இயல்பில் மதிப்பு குறைவு தான்! மனிதனின் ஆற்றலும் அறிவுத்திறனும் இயற்கை மூலப் பொருள்களோடு கொள்ளும் படைப்பாற்றல் மிக்க உறவின் மூலம் அப்பொருள்களுக்குப் பன்மடங்கு மதிப்பு உயர்கிறது; படைக்கின்ற மனிதனும் மதிப்பில் உயர்கின்றான். மனிதகுல வரலாற்றை உயிர்ப்புடன் இயக்கி வளர்ப்பவன் ஆற்றல் படைத்த மனிதனே என்பதை மறந்துவிடுவதற்கில்லை. இன்று நம்முடைய உடம்பாற்றலை முழுமையாகப் பயன்படுத்தாத நிலையிலேயே நாம் வாழ்கின்றோம். இன்னும் சிலர் சுவைக்கும் கவர்ச்சிக்கும் இரையாகி உடம்பையே பழுது செய்துகொண்டுள்ளனர். நோய்க்கு இரையாகி நொந்து நொந்து அழுகின்றனர். உடலுக்கு நோய் இயற்கையன்று; செயற்கையேயாம். அதாவது நோய் மனிதனின் படைப்பேயாம். நெறிமுறை பிறழ்ந்த வாழ்க்கையின் காரணமாகவே நோய் உடம்பில் இடம் பிடிக்கிறது. உடல் உழைப்புக்குத் தேவையான உணவும் ஓய்வும் கிடைத்தால், உடல் நன்றாக இயங்கும். தூய்மைக்கேடு இல்லாத காற்றும் தண்ணீரும் மானுட வாழ்க்கைக்கு இன்றியமையாதவை – நல்லுடல், நல்வாழ்க்கைக்கு இன்றியையாதவை. இந்த உடம்பைக் கருவியாகக் கொண்டே உலகத்தை இயக்க வேண்டியிருக்கிறது; வையகத்தில் வாழ வேண்டியிருக்கிறது; திருவருளைப் பெறவேண்டி இருக்கிறது. அனைத்துக்கும் இந்த உடற்கருவியின் ஒத்துழைப்புத் தேவை. வளமான வாழ்க்கை காண, வளமான உடல்நலம் தேவை.

உடல் நலத்திற்குத் துணை செய்வது அகநிலை உணர்வுமாகும். மனம், இன்றைக்கு எல்லா மட்டங்களிலும் முதல் நிலைப்படுத்திப் பேசப்பெறுகிறது. வள்ளுவமும் “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” என்கிறது. “மனத்துய்மையாய் இருப்பதனால் பத்து மனிதர்களின் பலத்தை அடையக் கூடும்” என்று டென்னிசன் கூறுகிறார். மனம் மாசுறுவது எங்ஙனம்: மனத்துக்கு இயல்பாக மாசு இல்லை. சார்புகளின் காரணமாக மனம் மாசுறுகிறது. மனத்தின் சார்பை நன்றின்பால் உடையதாக்க வேண்டும்! “நன்மை செய்வதே தூய்மையாய் இருப்பது” என்பது அனுபவ வாக்கு. அது எளிதான காரியமன்று. மிகக் கடுமையாகச் செய்யவேண்டிய முயற்சி. இதனை,

சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு”

என்று வள்ளுவம் கூறும்.

நன்று இது, தீது இது எனப் பகுத்து அறிந்து நன்றின்பால் உய்த்துச் செலுத்துகின்ற அறிவு தேவை. அறிவை எங்ஙனம் பெறுவது? அறிவு, பல திறத்தது. ஒன்று, இயற்கை நடைமுறை; வாழ்க்கையில் படிப்பினைகள் மூலம் பெறும் அறிவு. இதனைப் பட்டறிவு என்பர். “சிந்தித்து உணர்பவருக்கு நேற்றைய அனுபவம் இன்றைய ஆசிரியன்” என்பது பழமொழி. பிறிதொருவகை அறிவு, வாழ்க்கையில் நிறைந்த பட்டறிவினைப் பெற்ற ஆசிரியர்கள் எழுதிய நூல்களைக் கற்பதன்மூலம் பெறும் அறிவு. நூல்கள் வழி ஒரு கருத்து உருக்கொள்வதற்குப் பலநூறு ஆண்டுகள் பிடிக்கும் என்பதை உய்த்துணரும் பொழுதுதான் நூலின் அருமைப்பாடு தெரியும். வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தையும் நாமே பட்டறிவதற்குப் பதில் நமக்கு முந்தி வாழ்ந்தோர் பட்ட அனுபவத்தின் எல்லையில் நம்முடைய வாழ்க்கை தொடங்குகிறது. அதனால் நம்முடைய வாழ்க்கைப் பயணம் எளிதாகும். இத்தகு நூலறிவு பெறுதலுக்கும் செவிவழி அறிவு பெறுதலுக்கும் நாம் எவ்வளவு தொகை செலவழிக்கிறோமோ அதைப் போலப் பலமடங்கு திரும்பப் பயன் கிடைக்கும். இவ்வாறு பல நூல்களைக் கற்கின்ற வாய்ப்பை இயல்பிற் பெறாது போனாலும் கற்றோர் வாயிலாகக் கேட்டு அறிந்து கொள்ளும் அறிவு இன்னொரு வகை அறிவு. “கற்றிலன் ஆயினும் கேட்க!” என்பது வள்ளுவம்! இங்கனம் அறிவினைப் பெறும் வாயில்கள் பலப்பல. அறிவின் துறைகளும் பலப்பல. அறிவின் வழிச் செல்பவன் வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்குவான். அறிவின்றி உணர்ச்சி வசப்பட்ட வாழ்க்கைப் போக்கு துன்பியலாக முடியும். இதனாலேயே “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றார் திருவள்ளுவர். இத்தகைய அறிவு நலன்கள் அனைத்தையும் பெறுவதற்குத் தொடர்ச்சியான முயற்சி தேவை. நல்லறிவானது எங்கே எவ்வளவு தொலைவிலிருந்தாலும் அதைத் தேடிச் சென்று அடைய வேண்டும்.

எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்”

என்பது திருக்குறள். எனவே வளமான வாழ்க்கைக்கு அறிவே முதல்.

“அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று வள்ளுவம் கூறும். எல்லாம் – என்னென்ன? வளமான வாழ்க்கைக்குப் பதினாறு பேறுகள் வேண்டும் என்பது வாழ்வியல் கண்ட முடிவு. அந்தப் பதினாறு பேறுகள் என்னென்ன? புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அழகு, அறிவு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகியனவாம். வளமான வாழ்க்கை அமைய இப்பதினாறும் தேவை. இவை அடையவேண்டிய வரிசை முறைப்படி இங்கே முறைப்படுத்தப்படவில்லை. பயனை முதலிற் சொல்லி பயனடைவதற்குரிய சாதனங்களைப் பின்னே சொல்லும் முறையால் அமைந்துள்ளன.

புகழ்பட வாழ்தல் குறிக்கோளில் ஒன்று. புகழ், எளிதில் கிடைக்காது. இன்று விளம்பரத்தைச் சிலர், புகழ் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் வாழ்க்கையின் மூலம் பயனடைவோர் தம் உள்ளம் மகிழ்ந்து நெகிழ்ந்து கூறுதலே புகழ். பிறிதொரு வகையாகவும் புகழுக்கு அடையாளம் காணலாம். ஒருவர் சமுதாயத்திற்கு இன்றியமையாதவராக அவர் உள்ள பொழுதும் அவர் மறைந்த பொழுதும் உணரப்படும் நிலை; புகழ் வாழ்க்கையின் அளவு கோல்! வாழ்க்கை முழுமையாகப் பயன்பட்டதென்பதற்கும், சமுதாயம் பயன் கொள்ளத் தக்கவாறு அமைந்தது என்பதற்கும் அடையாளம் புகழ்பூத்த வாழ்க்கையே யாம். வளமான வாழ்க்கையின் முடிவு, புகழ்! அந்தப் புகழ்தொடர்ந்து வாழ்வியலில் நடத்தும் போராட்டங்களால் உருவாவது சாதனையால் தோன்றுவது; காலத்தை வென்று விளங்குவதன் மூலம் அடையக் கூடியதே புகழ்.

புகழ்பட வாழ்தலை உயிர்க்கு ஊதியம் என்று வள்ளுவம் போற்றும். புகழ்மிக்க வாழ்க்கையில்தான் நிலை பெற்று வாழ்கின்ற சாக்காடு வந்தமையும். புகழ் பெறுதற்குரிய வாழ்க்கையாவது எல்லாரும் போல இல்லாமல் மற்றவர்கள் எடுக்கத் தயங்குகின்ற, அவர்கள் விரும்பாத, வேறு யாரும் செய்யாத, புதிய துணிவு மிக்க முயற்சிகளை மேற்கொண்டு வரலாற்றைப் புதுக்குவதன் மூலம் அமையும். இத்தகைய புகழ்மிக்க வாழ்க்கை வளமான வாழ்க்கையின் பயன்.

புகழ்மிக்க வாழ்க்கை வாழ்தல் வேண்டுமாயின் செய்யத்தகாதன அறிந்து விட்டொழித்தல் வேண்டும்; செய்யத்தக்கன அறிந்து செய்தல் வேண்டும். மானுடத்தின் சென்றகால வரலாற்றுக்குரியவர்களாக வாழ்ந்தவர்கள் முழுமையாக வாழ்ந்துவிட வில்லை என்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன; இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அதனால், மானுட வாழ்க்கையென்பது, வளமான வாழ்க்கையை நோக்கி, நிறை நலத்தை நோக்கிப் பயணம் செய்து கொண்டேயிருக்கிறது. இன்னும் முடிவடைந்துவிட வில்லை. இதுதான் வளமான வாழ்க்கை – நிறைநலம் சான்ற வாழ்க்கை என்று அறுதியிட்டுக் கூறக்கூடிய நிலை இன்னமும் உருவாகவில்லை. வாழ்க்கையின் சோதனைகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. வளமான வாழ்க்கையைக் காண, திருவள்ளுவர், அப்பரடிகள், காரல் மார்க்ஸ், லியோ டால்ஸ்டாய், அண்ணல் காந்தியடிகள் முதலிய சான்றோர் பலர் முயன்று வந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடத்திய சோதனைகள் முற்றாக வெற்றி பெறவில்லை. அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய சில உண்மைகளை நமக்குக் கூறியிருக்கிறார்கள். அவைகளை முதலாகக் கொண்டு நாம் வளமான வாழ்க்கையை நோக்கித் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும். நல்ல காலமாக மானுட வாழ்க்கை, தொடங்கிய காலந்தொட்டு ஒரு தொடர் கொடியோட்டம் போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட எல்லையை ஒருவரே சென்றடையாமல் பலர் கூடி முயற்சி செய்து அடைகின்ற விளையாட்டுக் கொடியோட்டம் என்று பெயர். அதுபோல, வரலாற்றுப் போக்கில் வாழ்ந்த முதல் மனிதன் தொடங்கி வைத்த மானுட வாழ்க்கையின் ஓட்டம் முறையாக வளர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையின் புறநிலை அமைப்பில் வரலாற்று முந்திய காலச் சுவடுகள் இல்லை; நிலவரம் இல்லை. நாம் வாழ்கிற யுகம் கம்ப்யூட்டர் யுகம். நெடுந்தொலைக்குப் பயணம் செய்து வந்திருக்கிறோம். இது முக்காலும் உண்மை. மானுட வாழ்க்கையின் புறநிலைப்படிகளில் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் புறச்சார்பில் இவ்வளவு வளர்ந்து வந்துள்ள மானுடம், உடன்சார உள்ள வாழ்க்கையையும், ஆன்ம வாழ்க்கையும் வளர்த்துக் கொண்டு வந்திருப்பின் மானுட வாழ்க்கை வெற்றி பெற்றிருக்கும்; முழுமை யடைந்திருக்கும்; நிறைநலம் அடைந்திருக்கும். ஆனால் அந்த ஒன்றுதான் நடந்துவிடவில்லை. மானுடம் கையாளும் கருவிகள் மாறியிருக்கின்றன. கருவிகளைக் கையாளும் மானுடத்தின் சிந்தனையில், அகநிலை நாகரிகத்தில் போதிய வளர்ச்சி இல்லை; போதிய மாற்றமில்லை. அதன் விளைவு, இன்று உலகு போர்ப் பயத்தால் அவலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மானுடத்தின் அகநிலை வாழ்வு வெற்றி பெறுமானால் எளிதில் வளமான வாழ்க்கையைக் கண்டுவிட முடியும்.

இதற்குச் சென்ற கால வரலாற்றையும் சென்றகால வரலாற்றின் நாயகர்களாக இருந்தவர்கள் தமது பட்டறிவினால் எழுதித் தந்த இலக்கியங்களையும் நாம் கற்றறிதல் வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வீழ்ந்த இடத்தில் நாம் எழுந்து நிற்க முடியும். அவர்கள் நின்ற இடத்திலிருந்து நம்முடைய பயணத்தைத் தொடங்கமுடியும். இதற்கு நூல்களைக் கற்றல் தேவை. வளமான வாழ்க்கைக்குத் தடையாக இருக்கின்ற குற்றங்குறைகள் நீங்குவதற்கு நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்பது கடமை. அடுத்து நம்மைச் சுற்றி, இயங்கிக் கொண்டிருக்கின்ற இயற்கை உலகத்தையும் அவற்றின் நிகழ்வுகளையும் கூர்ந்து நோக்கிக் கற்றல் வேண்டும். இதனையே ‘கண்டதைப் படித்தல்’ என்பர் நம்முடைய ஆன்றோர். இயற்கையைக் கூர்ந்து கற்றறிகின்ற அறிவியலும், நன்னூல்களைக் கற்றறிகின்ற நூலறிவும், நாமே நம்முடைய வாழ்க்கையை அன்றாடம் உய்ந்தறிந்து உணர்கின்ற பட்டறிவும் வாழ்க்கையை வளமாக்கத் துணை செய்யும். வாழ்க்கையை வளமாக்குவதற்குரிய நல்ல நூல்களும் திருவள்ளுவர்ர இயற்றிய திருக்குறளும், ஜேம்ஸ் ஆலன் இயற்றிய வாழ்க்கை நூல்களும் குறிப்பிடத்தக்கன.

வாழ்க்கை வளமானதாக அமைய வலிமை வேண்டும். வலிமை இருவகைத்து. ஒன்று உடல் வலிமை, பிறிதொன்று மனவலிமை. உடல் வலிமையாவது எத்தகைய கடுமையான முயற்சிக்கும் பயன் படக்கூடிய நிலையில் உடல் அமைந்திருத்தல். உடலுக்கு வலிமை, அதை முற்றாகப் பயன்படுத்துவதன் மூலமே வந்து சேர்கிறது. பயன்படுத்தப் பெறாத உடலுறுப்புகள் வலிமை இழக்கும். உடலில் அறிவுக் கருவிகள் (புலன்கள்) ஆனாலும் சரி, செயற் கருவிகள் (பொறிகள்) ஆனாலும் சரி, அவற்றைப் பயன்படுத்துவதன் மூலமே அவை வலிமை பெறுகின்றன. ஆதலால் நம்முடைய உடலுறுப்புகள் ஒவ்வொன்றையும் முறையாகச் செயற்பாட்டில் இயக்கி வலிமை சேர்க்க வேண்டும். சிந்திக்கப் பழகினால் மூளை சிறப்படையும். சிந்திப்பது எளிதான காரியமா? கண்ணுக்குத் தெரிகின்றவைகளையே கண்டு தேர்ந்து தெளிந்து வாழ்க்கை நடத்துவதில் பயிற்சி பெறாதவர்கள் கட்புலனுக்கு வராமல் மறைவாகக் கிடக்கும் பொருள்களை – பொருள்களின் ஆற்றல்களை எங்ஙனம் காண்பர்? அவற்றைக் காண்பதற்குச் செய்யும் முயற்சியே சிந்தனை. சிந்தனைக்குத் தடை முளைச் சோம்பல். பழைய நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், சுற்றுச் சூழ்நிலைக்கு அஞ்சுதல் ஆகியன. இவை சிந்தனைக்குப் பகைப்புலங்கள். இவைகளைக் கடந்தும் மனிதன் சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் வளமான வாழ்க்கை வந்தமையும்.

அடுத்து உடலை இயக்கும் தலைமை மனத்தினிடம் இருக்கிறது. மனம் இயல்பாக மிகவும் கெட்டது. அது எளிதில் எல்லாச் செய்திகளையும் சென்று பற்றும்; ஆசைப்படும்; உணர்ச்சிவசப்படும். மனத்தை, புத்தியைக் கொண்டும் சிந்தனையைக் கொண்டும் அடக்கி ஆளவேண்டும். மனம், புத்தி சிந்தனைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்குமானால் அது மிகவும் நன்றாகப் பயன்படும். அதனுடைய அளவற்ற ஆற்றல் எண்ணற்ற சாதனைகளைச் செய்யும். மனம், கட்டுப்பாட்டின் கீழ் வர, அதற்கு நல்ல உணர்வுகளை உணவாகத் தரவேண்டும். அதற்கு ஓயாது நல்ல பணிகளைத் தந்துகொண்டே இருக்கவேண்டும். சோம்பிக் கிடக்கின்ற உடலில் உள்ள சோம்பல், மனத்தையும் பற்றுகிறது. சோம்பல் நன்மை செய்யாதது மட்டுமின்றித் தீமையையும் செய்யும். ஆதலால், வாழ்க்கை வளமாக அமைய மனதுக்கு வலிமை சேர்க்கவேண்டும்.

வாழ்க்கை, வெற்றிகள் பொருந்தியதாக அமைய வேண்டும். வாழ்க்கை ஒரு தொடர்ந்த போர்க்களம். மனிதரோடு மனிதர் பொருதும் போர்க்களத்தை நாம் குறிப்பிடவில்லை. ஆனாலும் அது விலக்கப்பட்டதாகக் கருதக் கூடாது. முதல் நிலைப்போர் தன்னுடைய பொறி புலன்களோடு ஒரு நிறை நலத்தை நோக்கிப் பயணம் செய்யும் ஆன்மா நடத்தும் போராட்டம்.

மெய்யுளே விளக்கை ஏற்றி
வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி
உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்
அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூர னீரே.”

என்று இப்போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார் அப்பரடிகள்.

பொறிகளின் மீது தனி ஆணை செலுத்தி ஆளும் தன்மையுடையவர்கள் முதலில் தங்கள் நிலையில் வெற்றி பெறுகிறார்கள். தன்னளவில் வெற்றி பொருந்திய ஒரு ஆன்மா, தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் போரிடுகிறது. அந்தப் போரின் நோக்கம் சமுதாயத் தீமைகளாகிய அறியாமையை நீக்குதல், வறுமையை நீக்குதல், பிணியை நீக்குதல், பிரிவினையை நீக்குதல், பகையை நீக்குதல் என்பதேயாம். இது நேரடியாகத் தீமையை எதிர்க்கும் போராட்டமன்று. நன்மையைப் படைப்பதன் மூலம் தீமையை அகற்றுதலே இப்போரின் நோக்கம். அதுதான் சிறந்த போர்த் தந்திரம். அதாவது, அறிவை வளர்த்தல், வளம்பல படைத்தல், உடல் நலம் பேணல், அன்பினால் இணைந்து வாழ்தல், ஒப்பரவு நெறி பேணல், ஒருமைப்பாடுடைய சமுதாயம் காணல் ஆகிய நல்லனவற்றைப் படைப்பதில் வெற்றி பெற்றாகவேண்டும். இந்த வெற்றிகள் மண்ணகத்தை விண்ணகமாக்கும். வாழ்க்கை வளமுடன் அமைய இத்தகு வெற்றிகளைப் பெற்றுக் குவித்திடுதல் வேண்டும். இயல்பாக இந்த வெற்றிகளைப் பெற முடியாதபோது தடையாக இருக்கிற தீயசக்திகளோடும் நாம் போராட வேண்டியிருப்பின் அந்தப் போரினை நிகழ்த்தவும் தயங்கக்கூடாது. தீயசக்திகளோடு சமாதானம் செய்து கொள்வது அறமுமன்று; பொறையுடைமையுமன்று கண்ணோட்டமுமன்று. அது கடமை தவறிய மாபாதகச் செயல் என்பது அறிக. இத்தகைய செருக்களங்களில் நமது வழிபடும் கடவுள்களே போரினை நிகழ்த்தித் தீயோரை ஒடுக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால், தீமைகள் மாற்றப்பட்டனவே தவிர, தீயோர் அழிக்கப்படவில்லை; நம்மிடம் பொருதுவோர் அழிக்கப்படுதலை விட அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்து பயன்படுமாறு செய்தலே சிறந்த வெற்றி. இத்தகு வெற்றிகளே வாழ்க்கை வளமாக அமையத் துணை செய்யும்.

மானுடத்தின் வரலாறு தொடர்ந்து நிகழ்வது. நேற்று மானுடம் வாழ்ந்தது உண்மை. அதுபோலவே நாளை மானுடம் வாழப் போவதும் மறுக்க முடியாத உண்மை. இந்த நீண்ட நெடிய மானுடத்தின் வரலாற்றில் நிகழ்காலத்தில் வாழ்பவர்கள், சென்ற கால வரலாற்றின் ஈட்டங்களை இழக்காமல் பாதுகாக்க வேண்டும்; இழப்புகளை ஈடுசெய்ய வேண்டும். தம் வாழ்நாட்கால அளவுக்கு வளர்த்துக் கொண்டு வந்து தந்துள்ள வளத்தை-நாகரிகத்தைப் பாதுகாக்கவேண்டும். அதோடு காலத்தினால் தேவைப்படும் புதியனவற்றைச் சேர்த்து வளப்படுத்தவேண்டும். அடுத்த தலைமுறையைத் தோற்றுவிப்பதன் மூலம் மானுடத்தின் வரலாற்றுக்குத் தொடர்ச்சி தரவேண்டும். இதற்குத் தேவை நன்மக்கள். மனையறம் வாழ்வோர் அனைவருக்கும் மக்கட் பேறு இயற்கை. ஆனால், நன்மக்கட்பேறு, மனை நலத்தில் சிறந்தோர்க்கே உரியது.

மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கள் பேறு”

என்பது திருக்குறள்,

நன்மக்கட்பேறு கிடைத்தாலும் அதனை முழுமை நலம் சான்றதாக வளர்த்துப் புகழ் கொள்ளுதல் வேண்டும். இதனை மக்களின் மேல் வைத்துத் திருவள்ளுவர்,

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்”

என்றார். தலைமுறை வரலாற்று ஆய்வுக்குக், காலத்தால் முந்தியோர் எடுத்துக்கொள்ளப் பெறுவர். குடும்ப வளர்ச்சிக்கு அக்குடும்பத்தின் கடைசித் தோன்றல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவர். முன்னோரை வைத்துக் கொள்ளும் பெருமை, தான் ஈட்டாதது. தன்னுடைய அடுத்த தலைமுறையைக் கொண்டாடும் பெருமை தானே ஈட்டியது என்பதறிக. ஆதலால், வாழ்க்கை வளமாக அமைய நன் மக்கள் தேவை.

வாழ்க்கை வளமாக அமையப் பொருள் தேவை. இது வரையில் சொல்லி வந்தவை அனைத்தையும் அடையவும், இனிச் சொல்ல இருக்கும் பேறுகளை அடையவும், துணை செய்வது பொருளே. வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது. பொருள் இருவகையினது. ஒன்று நேரிடையாக நுகரும் பொருள். பிறிதொன்று அணிகலனாகப் பயன்படுவது; சேம வைப்பில் வைத்திருந்து இயற்புழி எல்லாம் எடுத்துப் பயன்படுத்தக் கூடியது கிய பொன், நாணயம் முதலியன. உடம்போடு கூடிய வாழ்க்கைக்கு நுகர் பொருள் இன்றியையாதது. முறையான பல்வகைச் சத்தும் உடைய நல்லுணவு நோயற்ற வாழ்க்கைக்குத் தேவை. அது மட்டுமன்று; உடல் உழைப்பின் திறனைக் கூட்டுவதற்கும் தேவை. சுவைக்காக உண்பது ஒரோ வழி தான் ஏற்புடையது. உடல் நலத்திற்கும் உடல் உழைப்புத் திறனைப் பெருக்கிக் கொள்வதற்கும் உரியவாறு தேர்ந்து உண்பதே நல்லுணவு. உணவிற் சிறந்தவை காய்கனிகளும் பருப்பு வகைகளுமாம். இவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய வாழ்க்கை வளமானதாகும்.

இக்கருத்தினைக் கொண்டுதான் திருக்குறள் ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று கூறியது. இங்கு கூறிய பொருள்கள் நுகர் பொருள்களேயாம் என்பதை அறிக. ஒரோவழி பொன்; நாணயம் என்று கொண்டாலும் பிழையில்லை. பொருள் முட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை புதிய ஊக்கத்தினையும் திறன்களையும் தரும். பொருள் வளம் பெறாத வறுமை வாழ்க்கை அறிவை இழக்கச் செய்வதுடன் நற்குணங்களையும் இழக்கச் செய்யும். இந்தியா ஒரு வளர்ந்த நாடாக இருந்தாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறவர்கள் எண்ணிக்கையும் மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கிறது.

அதனால், நம்முடைய அறிவியல் திறனும் உழைக்கும் மக்கள் திறனும் வீணாகிப் போகின்றன. நாட்டின் ஒட்டு மொத்தமான பொருளியல் நிலை ஒவ்வொருவரையும் பாதிக்கும் – வாழ்க்கை வளமாக அமைய, நாடு வளமாக அமைய வேண்டும். பொருள்வளம் நிறைந்த வாழ்க்கையே வளம் நிறைந்த வாழ்க்கை. அதனால் ‘செய்க பொருளை’ என்ற திருக்குறளின் ஆணையை ஏற்று, ஊக்கம் உடையோராக ஆக்கத்திறனைத் தேடி அடைவோமாக. பொருள்வரும் வாயில்களைக் கண்டு, இயற்றி, ஈட்டி, காத்து, காத்த பொருளை முறையாக வகுத்துச் செலவிட்டு வாழ்வில் வளம் காண்போமாக.

நம்முடைய நாட்டு வாழ்க்கையில் ஊழ்த் தத்துவத்தைப் பற்றிய நம்பிக்கை நிலை பெற்றிருக்கிறது. ஊழ்த் தத்துவ நம்பிக்கையில் நன்மையும் விளைகிறது, தீமையும் விளைகிறது. ஒரே தத்துவத்தின் அடிப்படையில் நன்மையும் தீமையும் எப்படி விளைய முடியும்? இதற்குத் தத்துவம் காரணமல்ல. தத்துவத்தை நாம் அணுகும் முறையே காரணம். ஊழ், உயிரின் சிந்தனை, செயல்களின் வழிப்பட்ட வழக்கங்களின் வழி வருவது. உயிர் மேற்கொண்டொழுகிய வழக்கங்களின் சுவடுகள் உயிரிடத்தில் தங்கி, வாழ்நிலை தோறும் முகிழ்த்து வெளிப்படுவது ஊழ். ஊழ் மாற்றத் திற்குரியதேயாம். அறிவியல் ஆற்றலில் புத்துணர்வில் புதிய உழைப்பில் வளர்ச்சியடைந்து மாற்றங்களைப் பெற்று வரும் ஆன்மாவின் முன்னே நேற்றையப் பழக்கவழிப்பட்ட ஊழ் நிற்றல் அரிது. ஊழ் உருக்கொண்ட காலத்திலும் இன்று வாழும் காலம் வளர்ச்சித் தன்மையுடையது. நாள்தோறும் தேக்க நிலையில் கிடக்காமல் சிந்தனையில் செயலில் சிறந்து வளர்ந்துவரும் ஆன்மா ஊழினை வெற்றி கொள்ளும். நாள் தோறும் நாம் முயன்று செயற்படுவதன் மூலம் நல்லுழைப் படைக்க வேண்டும். புதிய முயற்சிகளின் மூலம் சென்ற கால இழவூழையும் கூட, ஆகூழாக மாற்ற வேண்டும். இத்தகு நம்பிக்கையும் முயற்சியுமே வளம் சிறந்த வாழ்க்கைக்குத் துணை செய்ய முடியும்.

இங்ஙனமின்றி ஊழ் மாற்ற இயலாதது; நாம் இப்படியேதான் இந்தத் துன்பத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற மாறா விதிகளில் நம்பிக்கையுடையவராக வாழ்தல், ஊழ்த் தத்துவத்தால் விளையும் தீமையாகும். இடைக்காலத்தில் இந்தத் தீமை நம்முடைய சமுதாயத்தினரில் பெரும்பான்மையோரைப் பற்றியிருக்கிறது. அதனாலேயே நம்முடைய சமுதாயம் எழுந்திருக்க முடியாமல் படுத்துக்கிடக்கிறது. இத்தகைய மூட நம்பிக்கைகள் விளைவித்ததே வறுமைக்கோடு, தீண்டாமை முதலிய சாபக்கேடுகள். ஆதலால், சீரோடும் சிறப்போடும் கூடிய வளமான வாழ்வு காண, நல்லனவே எண்ணுவோம். உயிர்த்துடிப்புள்ள செயல்களை மேற்கொள்வோம். ஊழை நல்லூழாக்குவோம். அவ்வழி வளமான வாழ்வு அமையும்.

நுகர்தல், வாழ்க்கையின் இன்றியமையாச் செயற்பாடுகளில் ஒன்று. உடம்பு, நுகர்வுக்குரிய பொறிகளோடும் புலன்களோடும் அமைந்திருக்கிறது. உணர்ச்சி வசப்படாமல் ஆசைகளின் வழிப்பட்டு அலைமோதாமல் நுகர்ந்து வாழ்தல் என்பது ஓர் இனிய கலை; வாழ்க்கைக் கலை.

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்”

என்ற குறள் நுகர்தலின் செவ்விய திறனைப் புலப்படுத்துகிறது. ஐம்பொறிகளும் சுவைத்தற்குரிய பொறிகளேயாம். மனமாறுபாடின்றி, சுவைக்கப்படும் பொருளுக்குச் சேதமில்லாமல், நெறிமுறை பிறழாத நிலையில் சுவைத்தல் அறநெறி சார்ந்த நுகர்தலாகும். முறையான நுகர்வு உடல் நலம் தரும்; மனநலம் சேர்க்கும்; மகிழ்வைத் தரும்; அமைதியை நல்கும்; இன்பம் வந்தமையச் செய்யும். நுகர்வுக்குரிய பொறிகளை முறையாகப் பேணுதலும் நுகரத் தக்கனவற்றை நுகர்தலும் வளமான வாழ்க்கைக்குத் துணை செய்யும். நுகருமாறு நுகர்ந்து வளமான வாழ்வைக் காண்போமாக! அழகு, நல்வாழ்க்கை வாழ்வோர் போற்றுபவைகளுள் தலையாயது. அழகு, ஐம்பொறிகளுக்கும் விருந்தாக அமைவது; குளுமையூட்டுவது; மகிழ்ச்சியைத் தருவது. “கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பு” என்று நக்கீரர் பாராட்டுவார். அழகை ஆராதனை செய்யாதவர் யார்? இயற்கையே அழகு. இயற்கையில் அழகைக் கண்டு அழகுக்கு அழகாக நிற்கும் இறைவனை வணங்கிய ஞானிகள் உண்டு.

பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி; அப்
பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்”

என்றார் தாயுமானவர். உடம்பை அழகாகப் பேணி வைத்துக் கொள்ளவேண்டும். உழைக்கும் உடம்பு இயல்பாகவே அழகு பெறும். அளவான உழைப்பும் மிதமான நுகர்வும் கொள்வோர் உடல், என்றும் அழகாக இருக்கும். நோயின்மை அழகுக்கு அரண். சிரித்து மகிழ்ந்து வாழ்தலும் அழகுக்குத் துணை செய்யும். விருப்பு, வெறுப்புகளிலிருந்தும் காய்தல் உவத்தலிலிருந்தும் விடுபட்டு நடுநிலை நின்று ஒழுகுவார் அழகு பெறுவர். உடல் அழகுக்குச் சித்தமும் அழகாக இருக்கவேண்டும். அதாவது சிந்திக்கும் உறுப்பு நல்ல சிந்தனைகளைச் சிந்திக்க வேண்டும். “சித்தம் அழகியார்” என்று திருவாசகம் ஓதும். அழகு ஆயிரம் காரியத்தைச் சாதிக்கும். ஆதலால், அழகைப் பேணுவோமாக! பூச்சுக்களால் – ஒப்பனைகளால் பெறுவது இயற்கை அழகன்று. இயற்கையழகே அழகு. அழகு, அகநிலையிலும் புறநிலையிலும் வளமான வாழ்க்கையைப் படைக்கும். எண்ணிய எண்ணியாங்கு எய்தத் துணை செய்யும். வீட்டை அழகு படுத்துங்கள்! ஊரை அழகு படுத்துங்கள்! அழகான தோற்றத்தினை அடையுங்கள்! சிந்தையில் அழகு போற்றுங்கள்! வளமான வாழ்வு அமையும்.

வளமான வாழ்க்கைக்குப் பெருமை வேண்டும். பெருமையாவது மற்றவர்கள் புகழ்ந்து போற்றத்தக்க பெருந்தன்மையுடையோராக வாழ்தல். பெருந்தன்மையாவது சிறியன சிந்தியாமை, சின்னத்தனமான காரியங்கள் செய்யாமை, மற்றவர்க்குத் தீங்கு செய்யாமை, புறங்கூறாமை, மற்றவர் பால் குற்றங்காணுதலைத் தொழிலாகக் கொள்ளாமை. இன்னோரன்ன இயல்புகளைக் கொண்ட வாழ்க்கை பெருமை நிறைந்த வாழ்க்கையாகும். அதோடு செயற்கரிய செயல்களைச் செய்யவேண்டும். வாழ்க்கையில் பலர் இயல்பாயமைந்த, எளிதில் செய்யக்கூடிய காரியங்களைக் கூடச் செய்யாமல் அல்லற்படுவர். தாம் அல்லற்படுவதோடு மட்டுமின்றித் தம்மைச் சார்ந்தோரையும் அல்லற்படுத்துவர். தமது வாழ்க்கைக்குரிய உணவைக்கூட உழைத்துப் பெறமுடியாமல் பிச்சை ஏற்றல், களவு செய்தல் முதலிய இழிசெயல்களைச் செய்வர். அதனால், மேலும் மேலும் துன்புறுவர். சிலர் தாம் வாழ்தலோடும் தம்மைச் சார்ந்தோரை வாழ்வித்தலோடு மன்றி எல்லாருக்கும் இன்பம் சேர்க்கும் உயர்குறிக்கோளைக் கொண்டு உழைப்பர்; பெருமைக்குரிய காரியங்களைச் செய்வர். காலத்தை வென்று விளங்கும் சாதனைகளைச் செய்வர். இத்தகையோராலேயே வையகம் புகழ் பெறுகிறது. வரலாற்றுப் புகழ்மிக்க சாதனைகளைச் செய்வோராயினும் எளிமையும் அடக்கமும் பூண்பர்.

இத்தகு பெருமையுடையோராக வாழ்தல் வளமான வாழ்க்கைக்குத் துணை செய்யும். பெருமை, நாமே முயன்று பெறக்கூடியது. பிறர் தரக்கூடிய தன்று; கடையில் வாங்கக் கூடிய சரக்குமன்று. நம்மைச் சுற்றியிருக்கும் சின்னத் தனங்களை மறப்போமாக! யார் மாட்டும் அன்பு செய்வோமாக! எண்ணற்ற சாதிகளாலும் மதங்களாலும் பிரிந்து கிடக்கும் மக்களை ஒருமைப்பாடுடையவராக இணைப்பதை உயர் குறிக்கோளாகக் கொள்வோமாக! இந்திய மக்களை வறுமையிலிருந்து மீட்டு ஒரு புதிய பொன்னுலகைப் படைப்பதை உயர் நோக்கமாகக் கொள்வோமாக! சமநிலைச் சமுதாயம் காண்பதே இந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய பணி! மனிதகுல ஒருமைப்பாட்டைக் காண்பதே இந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய பணி! எனவே, கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்த்து, அமைதியும் சமாதானமும் உடைய பொது உலகைப் படைப்போமாக!

இளமை நலம் போற்றுதல் என்பது பொதுவாக மாந்தர்க்கு இயல்பான குணம். சிலருக்கு வயதைக் கேட்டாலே சினம் பிறக்கும். உடலில் தலையில் வயதாகி விட்டதற்குரிய அடையாளங்கள் தென்பட்டாலும் வயதாகி விட்டது என்று யாராவது கூறினாலும் அவர்களுக்குப் பொல்லாத கோபம் வருகிறது. இதனால், என்ன புரிகிறது! இளமையைப் போற்ற அனைவரும் விரும்புகின்றனர் என்பதே! ஆனால் இளமையென்பது உடலில் மட்டும் இருந்தால் போதாது. சிலர் ஆண்டில் இளையோராக இருக்கின்றனர். ஆனால், உணர்விலும் ஊக்கத்திலும் படுகிழமாகிச் செயலற்று ஏங்கித் திரிகின்றனர். இஃதெப்படி இளமையாகும்? உடலில் இளமை; உணர்வில் இளமை ஊக்கத்தில் இளமை காட்ட வேண்டும். இளமையைப் போற்றுதல் வாழ்க்கைக்குச் சிறப்பைத் தரும். அதனாலன்றோ, இளமையையும் அழகையும் போற்றும் வகையில் நம் ஆன்றோர்கள் உடற்பயிற்சி முறைகளைக் கண்டார்கள். உடற்குப் போதிய பயிற்சி கொடுத்து எஃகு போலாக்கி இளமை நலம் பேணுக! துன்பங்களை வாழ்க்கையைக் கடக்கும் படிகளாக நினைத்து, எய்த்துக் களைத்துப் போகாமல், வெற்றியில் நம்பிக்கை வைத்து, உணர்வில் இளமை காத்து, வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்க! இன்றைய தோல்வி நாளைய வெற்றிக்கு அடிக்கல் என்ற நம்பிக்கையுடன், இளமை நலமிக்க ஊக்கத்துடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருமின்! நில்லன்மின் !

வளமான வாழ்க்கைக்குத் துணிவு தேவை. உடற்சார்பு மிகுதியாக உடையவர்கள் எளிதில் துணிவு கொள்ள மாட்டார்கள்; சலனப்படுவார்கள். உயிர்ச்சார்புடையவர்கள் – ஆன்ம வலிமையுடையவர்கள் எளிதில் துணிவு பெறுவார்கள்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி விடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்க வெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடி இணையே குறுகி னோமே”

என்ற அப்பரடிகளின் திருப்பாட்டு துணிவிற் பிறந்த தூய சிந்தனை நிறைந்த பாட்டு.

துணிவுக்குப் பகை, இன்ப விழைவு, வெற்றிப் போதை; துன்ப அச்சம். ஆனால் வாழ்க்கை இன்பக் குறிக்கோளுடையதே. வெற்றிகளைக் குறிக்கோளாய் உடையதே. வெற்றியும் இன்பமும் எளிதில் கிடைப்பதில்லை. பல துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து சென்ற பிறகுதான் இன்பம் எய்த முடியும், துணிவு என்பது வெற்றி தோல்வி-இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் குறிக்கோள் நோக்கத்தோடு பணிகளை இயற்றுவதற்குப் பயன்படக்கூடிய உள்ளம் உடைமையாகும். அர்ப்பணிப்பு உணர்வோடு உயிரையே இழக்க நேரிடும் என்று தெரிந்தாலும், கொண்ட குறிக்கோள் கருதி, உழைத்தல் உள்ளத் துணிவின்பாற்பட்டது. துணிவு, தெளிவான முடிவுகளை எடுக்கத் துணை செய்யும்; செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தரும். துணிவைத் துணையாகப் பெற்றவர்கள் சாதனைகள் செய்ய முடியும்; பெருமையுடன் வாழ முடியும். துணிவுடையவர்களே காலத்தை வென்று விளங்குகிறவர்கள். துணிவே துணை. வளமான வாழ்க்கை அமையத் துணிவைத் துணையாகக் கொண்டு வளமான வாழ்க்கை காண்போம்!

வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது நோயின்மை. அதாவது பிணியற்ற வாழ்க்கை. நோயென்பது இயற்கையன்று செயற்கை! அதாவது மனிதர்களே வர வழைத்துக் கொள்வது நோய், இயற்கையோடிசைந்து வாழ்ந்தால் நோய் வராது. நமது உடல் எளிதில் நோய் அடைய முடியாத அற்புதப்படைப்பு; ஒரோ வழி நோய் வந்தாலும் தனக்குத்தானே நோய் நீக்கிக் கொள்ளவும், புதுக்கிக் கொள்ளவும் கூடிய ஆற்றலுடையது அமைப்புடையது. ஆயினும் தொடர்ந்து உடலியற்கைக்கு மாறாக அதனை எதிர்த்துத் தகாத வழியில் வாழ்க்கை நடத்துபவர்களே பிணியை வர வேற்றுக் கொள்கிறார்கள். நற்காற்றும் கதிரொளியும் நறுநீரும் உடலுக்கு இன்றியமையாத தேவை. இவற்றை முறையாகத் தூய்மையானதாக உடலுக்குக் கிடைக்கும்படி செய்தால் நோயின்றிப் பல ஆண்டுகள் வாழலாம். ஆதலால், காற்றிலும் கதிரொளியிலும் தோயத் தக்கவாறு உலாவுதல் வேண்டும். உடல் உழைப்புக்குரியது. உழைக்காத உடல் நோய்க்கு இரையாதல் தவிர்க்க முடியாதது. ஆதலால், உடம்பு வருந்தத்தக்க அளவுக்கு அதற்கு உழைப்பு கொடுத்தாக வேண்டும். வீடு – அலுவலகம் அலுவலகம் – வீடு என்றிருப்பவர்கள் நோயின்றி வாழ்தல் எங்ஙனம்? ஒரு நாளைக்குக் குறைந்த அளவு எட்டு கிலோ மீட்டர் தூரமாவது நடக்கவேண்டும். அல்லது வீட்டுத் தோட்டத்தில் தங்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய காய்கறித் தோட்டம் அமைத்தாவது வேலை செய்ய வேண்டும். தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து, முறையாகக் குறித்த காலத்தில் உடலுக்கு நலம் பயக்கும் உணவை உண்ணவேண்டும். உடலுக்கு, இயற்கை அன்னை தரும் உணவு நல்லது. உணவில் அரிசியைக் குறைத்து, காய், கனி, கீரை, பருப்பு வகைகளை மிகுதியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய உணவை, உடலின் தேவை கருதி உண்ண வேண்டும். உடலின் தேவையாவது உயிர் வாழ்தலுக்குரிய அடிப்படைத் தேவை. உழைப்புக்கேற்ற உணவு உண்ண வேண்டும். உடலுக்குத் தீங்கு பயக்கும் குடித்தல், புகைத்தல் போன்றவைகளை அறவே விலக்க வேண்டும். உடல் நிலையைப் பாதிக்கக் கூடிய உணர்ச்சிகளைக் கொள்ளுதல் கூடாது. விருப்புவெறுப்பு, சினம், பதற்ற நிலையடைதல் ஆகியன வாழ்க்கைக்குத் துணை செய்யாதவை. காரிய சாதனைக்கும் கூட ஆகாதவை. நோயின்றி வாழ்தல் வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உடலை அலட்சியப்படுத்தக்கூடாது. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்ற திருமந்திரத்தை அறிக. உடலை வளர்த்து உயிரை வளர்த்திடுக! காற்றும் கதிரொளியும் எளிதில் புகுந்து வெளியேறும் இடத்தில் இருந்து பணி செய்திடுக. நோயின்மைக்கும் இளமைக்கும் முதுகுத் தண்டின் நலம் இன்றியமையாதது. ஆதலால் எப்பொழுதும் நேர் நிற்றல், நிமிர்ந்து நிற்றல், நிமிர்ந்த நிலையில் அமர்ந்து பணி செய்தல் ஆகிய நிலைகளை மேற்கொள்க!

நாள்தோறும் உடலுக்கு உழைப்பினைத் தருக! நன்றாகத் தூங்கக் கற்றுக் கொள்க! நல்ல தூக்கம், உடலியக்கத்தைப் புதுப்பிப்பது; புத்துணர்வுக்கும் புத்துழைப்புக்கும் உடலை ஆயத்தப்படுத்துவது. நல்ல எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் உள்ளத்தை நிரப்பி, நோயற்ற வாழ்வுக்கு வழி காண்க: கூடி வாழப் பிறந்தார்களிடம் நல்லிணக்கத்தையும் உறவையும் பேணுக! வளமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வே முதல் திடமான உடல்கொண்டு வளமான வாழ்க்கை வாழ்வோம்!

வாழ்க்கை ஓர் அருமையான கொடை. இந்த வாழ்க்கை முழுவதும் முறையாக வாழ்ந்து முடிப்பது பயனுடையதாக அமையும். புகழ் நிறைந்த வாழ்க்கை, வாழ்நாள் முழுதும் வாழ்ந்தாக வேண்டும். வாழ்நாள் எவ்வளவு என்பதில் இன்னும் வரையறுக்கப்பட்ட முடிவு காணப்படவில்லை. இன்று உலகில் சிலர் 137 வயது வரையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சோவியத் நாட்டு மக்களின் வாழ்நாள் வளர்ந்து கொண்டே போகிறது. இந்தியாவில் 1935-37இல் சராசரி வயது 17 ஆகத்தான் இருந்தது. இப்பொழுது 58 ஆக உயர்ந்திருக்கிறது. இனிமேலும் உயரும். ஆக, நீண்ட நாட்கள் வாழ ஆசைப்படுதல் வேண்டும். அதற்கேற்றாற்போல வாழும் நெறிமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நோயற்ற நிலையில், வாழ்க்கை முடியும் காலம் வரையில் திடமான உடலுடன் உழைத்து, உண்ணும் முயற்சியுடையராக வாழ்தல் வேண்டும். இதற்கு, உடலுக்கு உழைப்பு, தரமான நல்லுணவு, துய்மையான தண்ணீர், துய்மையான காற்று ஆகியன தேவை. இவற்றுடன் நல்லெண்ணம், நற்சிந்தனை, அன்பினைக் கடமையாகக் கொண்ட வாழ்க்கை தேவை.

நாள்தோறும் நல்ல வண்ணம் ஓய்வெடுத்துக் கொள்ளும் பழக்கமும் தூங்கும் பழக்கமும் தேவை. உணவு மிகினும் குறையினும் நோய் செய்தல் போலவே, தூக்கமும் மிகினும் குறையினும் நோய் செய்யும். எந்தச் சூழ்நிலையிலும் அமைதியும் சாந்தமும் தழுவிய அணுகுமுறை இதயத்தைப் பாதிக்காமல் காப்பாற்றும். வாழ்நாளைச் செயற்கை முறையில் தற்கொலை மூலமோ, கொலை மூலமோ குறைப்பது பாபம். அதுபோலவே வாழ்நாளை அற்பமாகக் கருதுவதும், “நாம் வாழ்ந்து என்ன ஆகப் போகிறது?” என்று எண்ணுவதும் பிழை. அதே போழ்து ஒன்றை நினைவிற் கொள்ளுதல் வேண்டும். மிக அதிகமான நாட்கள் வாழ்ந்தால் மட்டும் போதாது. வாழும் நாள் அளவும், பயன்பாடுடையதாக அமைய வேண்டும். பயன்பாடிலாத ஊன் பொதி சுமக்கும் வாழ்க்கை, ஆண்டுகள் பலவாய் அமைந்து என்ன பயன்? ஆக, வளமான வாழ்க்கை பெற “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்ற திருமுறை வாக்குப்படி வாழ்க்கையை மதித்து வாழ்வாங்கு வாழ்ந்திடக் கற்றுக் கொள்ள வேண்டும்.

முன் கூறிய பதினாறு பேறுகளும் அமைவதற்கு மனித வாழ்வில் சால்பு அடிப்படையாக இருக்கவேண்டும். அதாவது சான்றாண்மை நிறைந்த வாழ்க்கை வேண்டும். சான்றாண்மையாவது, பல நற்குணங்களும் நிறைந்து, அவற்றை வாழ்க்கையின் துறைதோறும் ஆளுமையுடன் செயற்படுத்துதல். இத்தகு சான்றாண்மை வளமான வாழ்க்கைக்குச் சான்றாக அமையும். இத்தகைய சான்றாண்மைக்கு அடித்தளமாக அமைவது அன்பு.

“அன்பின் வழியது உயிர்நிலை” என்றும் “அன்போடியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என் போடியைந்த தொடர்பு” என்றும் வள்ளுவம் கூறும் ஒருவர் உயிருடையவரா என்பதை அறிவதற்கு, அவர் தம் நடமாட்டங்கள் அளவு கோலல்ல. அவர்தம் வாழ்க்கையில் அன்பு நிறைந்த செயல்கள் காணப்படின் அவர் உயிருடையவர் என்று எடுத்துக் கொள்ளப் பெறுவார். உயிருக்கும் உடம்புக்கும் உறவு ஏற்பட்டதனுடைய நோக்கம் அன்பாக இருப்பதுதான். கடவுள், மனிதனுக்கு வழங்கிய ஒரே அரும் பொருள் அன்பே யாம். அன்பு, பொறிகளைக் கடந்தது; புலன்களைக் கடந்தது. பல சமயங்களில் அன்பே மொழியாகி விடுவதுண்டு. ஊமையும் அன்பு மொழி பேச இயலும். செவிடரும் அன்பு மொழி கேட்க இயலும். அன்பு விரிந்தது. அன்பு, உலகம் தழுவியது. அன்புக்கு எல்லைகள் இல்லை; பிரிவினைகள் இல்லை; உயர்ந்தாரில்லை; தாழ்ந்தாரில்லை; வேண்டியவர் இல்லை; வேண்டாதார் இல்லை. அன்பு மிக உயர்ந்தது என்பதைக் காட்டவே திருமூலர் அன்பே சிவம் என்றார். ஆற்றல் பெரிது. “ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். அன்பு இருக்கும் இடத்தில் உறவு இருக்கும். வாழ்வு இருக்கும். வலிமையானவற்றிலெல்லாம் வலிமையானது அன்பேயாம். அன்பு, வற்றக் கூடியதன்று. தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருப்பது அன்பு, பிறை நிலா வளர்வது போல நல்லவர் அன்பு வளரும்.

ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்;
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ”

என்று புறநானூறு பேசும்.

வாழ்க்கையில் போற்ற வேண்டிய தலையாய செல்வம் அன்பு. உலக மொழிகள் அனைத்தும், உலக மதங்கள் அனைத்தும், ஒருசேர மாறுபாடின்றி உரத்த குரலில் கூறுவது ‘அன்பு செய்’ என்பதேயாம்! அன்பின் மூலம் மண்ணகத்தில் விண்ணகத்தையே காண முடியும். பல்வேறு வகைப்பட்ட மனிதகுலத்தை இணைத்தற்குரிய ஒரே கருவி அன்புதான்! அன்பு, மனிதரை ஒழுக்கமுடையவராக ஆக்கும். அன்பிற்கு இணை அன்பே அன்பிற்கு விலை அன்பே இத்தகைய உயர்ந்த அன்பை நிறையப் பெறுவதன் மூலம் வளமான வாழ்க்கையைப் பெறலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிரதமராயிருந்த லார்டு பாமர்க்ஸ்டன் என்பவர், “கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்கிற நேரத்தில், உங்கள் சுற்றுப் புறத்திலுள்ள அழுக்குகளையெல்லாம் அப்புறப்படுத்துங்கள்” என்று கூறினார். கடவுளின் படைப்புகளுக்கு நன்மை செய்யாமல், இவ்வுலகத்தை, இயக்கும் கடவுளின் குறிக்கோளுக்கு அரணாக இல்லாமல் அவரை நோக்கிப் பிரார்த்த்னை செய்வதன் அறியாமையை இந்த உரை புலப்படுத்துகிறது. நமது திருமூலரும்,

நடமாடுங் கோயில் நம்பர்க் கொன்றீயில்
படமாடுங் கோயில் பகவற்கஃதாமே”

என்று கூறியதையும் எண்ணுக. ஆதலால், உள்ளத்தில் அன்பை நிறைத்திடுக! யார் மாட்டும் அன்பு காட்டுக! அன்பெனும் புனலால் வளமான வாழ்க்கையைப் படைத்திடுக!

திருவள்ளுவர், வாழும் நெறிகளைப் பெரும்பாலும் உடன்பாட்டு முறையிலேயே கூறியுள்ளார். மிகச் சிலவற்றையே எதிர்மறையாகக் கூறி விளக்கியுள்ளார். அவற்றுள் நாணுடைமை என்பதும் ஒன்று. நாணுடைமை என்பது பழிக்கு அஞ்சுதல். புகழுக்கு எதிர்மறை பழி.

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்
பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்”

என்பது புறநானூறு. நாணுதலாவது பிறர் பழிக்கத்தக்க செயல்களைச் செய்ய வெட்கப்படுதல். உயிர்த் தொகுதியிலிருந்து மனித இனத்தைப் பிரித்துக் காட்டுவது நாணுடைமை என்ற ஒழுக்கமேயாம். நாணமுடையார் தம்பழி மட்டும் நாணுதல் செய்யார்; பிறர் பழிக்கும் நாணுதல் செய்வார். நாணம் மேற்கொண்டதன் காரணமாகச் செய்யத் தகாதவற்றைச் செய்யாமையும், செய்யத் தக்கனவற்றைச் செய்தலுமாகிய உணர்வுகள் மேலோங்குகின்றன. அழுக்காறு, அவா, வெகுளி முதலியனவும் தன் முனைப்பு, புறம் பேசுதல், பழிக்குப் பழி வாங்குதல் ஆகியனவும் நாணத்தக்கன. இத்தகைய தீய – குணங்களிலிருந்தும், அவ்வழிப்பட்ட தீய செயல்களிலிருந்தும் விடுதலை பெறுதல் வாழ்க்கை என்ற கழனிக்குக் களை எடுத்தது போலாம். நாணுடைமை வளமான வாழ்க்கைக்குத் துணை செய்வது.

அன்பு, செயற்பாட்டுத் தன்மையுடையது. அன்பினால் விளையும் செயற்பாடுகள் ஈதல், ஒப்புரவறிதல் முதலியன. ஈதல் முதல்நிலை, ஒப்புரவறிதல் ஈதலின் முதிர்ச்சி நிலை. வான்மழை வையகத்தை வளப்படுத்துவதுபோல, ஒப்புரவறிதல் மனித குலத்தை தழைத்து வளரச் செய்யும். ஒப்புரவறிதல் போலப் பிறிதொரு கோட்பாட்டை வானவர் உலகத்திலும் காண்பதரிது; இந்த மண்ணிலும் காண்பதரிது. தன்னோடு சார்ந்து வாழ்வாரின் நலமறிந்து அவர்தம் இயல்புகளோடு ஒத்து நின்று ஒழுகுபவரே வாழும் இயல்பினர். ஊருணி நிறைந்த தண்ணீர் போலவும், பழுத்த பயன்மரம் போலவும், நோய் நீக்கும் மருந்து மரம் போலவும் மற்றவர்க்குப் பயன்படுதல் ஒப்புரவறிதலின் சிறந்த செயற்பாடு. மற்றவர்க்கு உளம் நிறைந்த உணர்வில் கைம்மாறு கருதாது உதவி செய்தவனே உண்மையில் வாழ்கின்றான். பிறர்க்கு உதவி செய்யும் நாளே பிறந்த நாளினும் பெருவாழ்வுக்குரிய நாள். ஒப்புரவறிதலில் இன்றைய கூட்டுறவு வாழ்க்கை அமைந்து கிடக்கிறது. ஒப்புரவறிதல் மூலம் ஒருவரின் ஆன்மா வளர்கிறது: உலகம் தழிஇய ஒட்பம் பெறுகிறது. வளமான வாழ்க்கைப் படைப்பிற்கு ஒப்புரவுதான் மிகச் சிறந்த கொள்கை வாழ்க்கை வளமாக அமைய வேண்டுமென்றால் ஒப்புரவு நெறி நின்று ஒழுகுதல் வேண்டும்.

அடுத்து, வளமான வாழ்க்கைக்கு அமையவேண்டிய இன்றியமையாப் பண்பு கண்ணோட்டம். கண்ணோட்டமாவது, தன்னோடு தொடர்புடையார் மாட்டு அன்பு நிகழ்வதை-அவ்வழி நன்மை செயற்படுவதை மறுக்க முடியாதது. இந்த உலகம் அழிந்து போகாமல் இதுவரையில் இயங்கிக் கொண்டிருப்பதற்கே காரணமாக இருப்பது கண்ணோட்டம். கண்ணோட்டமுடையவர்கள் இந்த உலக இயக்கத்திற்கு உயிர்ப்பு நிலையாக இருந்து இயக்குகிறார்கள். கண்ணோட்ட மில்லாதவர்கள் நிலத்திற்கு வீணே சுமையென வாழ்கிறார்கள். பொருளுடைய பாடல் பண்ணோடு பாடப்படும் பொழுது கேட்பதற்கு இன்பமாக இருக்கிறது; மகிழ்ச்சியைத் தருகிறது. அது போலவே கண்ணோட்டம் செய்யக்கூடியவர் களுடைய கண்கள் காண்பதற்கு மகிழ்வைத் தரும், மன நிறைவைத் தரும். கண்ணிற்கு அழகு, கண்ணோட்டமுடையதாக அமைதல் கண்ணோட்டம் செய்வதன் காரணமாகக் காரியங்கள் கெட்டுப் போகாமல் விழிப்பு நிலையிலும் செய்தல் வேண்டும். குற்றங்களைப் பொறுத்து, அன்புகாட்டிக் கண்ணோட்டமுடையவ ராயிருத்தலே வாழ்க்கையின் சிறப்பு. நன்றாக அறிந்தவர்கள்-பழகியவர்கள் நஞ்சையே தந்தாலும் வெறுப்புக் காட்டாது, அந்த நஞ்சினை மலர்ந்த முகத்துடன் வாங்கி அருந்துபவர்கள் வாழ்வர். அங்ஙனம் வாழ்பவர்களே வாழ்பவர்கள். தமக்குத் தீமை செய்வார் மாட்டும் கண்ணோட்டமுடைய வராயிருத்தல் சாவை வெல்லும் மருந்து, அங்ஙனம் வாழ்தலே வரலாற்று ஏடுகளால் புகழத் தக்க நாகரிகம்.

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்,”

என்றார் திருவள்ளுவர்.

கண்ணோட்டத்தை இரக்கம் என்றும் கூறலாம். இரக்கம், நீதி இவற்றைச் சார்ந்த வாழ்க்கையில் அறநெறி அனைத்தும் வந்து அமையும். கண்ணோட்டம் செய்வதற்குப் பெரிய மனம் வேண்டும். பெரிய மனம் மிகச் சிறந்த அணிகலனாகும். தண்டிப்பதற்கு வேண்டிய ஆற்றலை விட, கண்ணோட்டம் செய்வதற்கு மிகுந்த ஆற்றல் வேண்டும். இந்த உலகம் கண்ணோட்டத்தால் இயங்குகிறது. ஆதலால், வளமான வாழ்க்கை அமைய, கண்ணோட்டத்தைக் கைக்கொள்ளுவோமாக!

அடுத்து, வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாத உயர் பண்பு வாய்மையாகும். வாய்மை என்ற சொல்லுக்கு உரிய ஒழுக்கமாகத் தமிழ் வழக்குக் கற்பிப்பது, அயல் வழக்கிலிருந்து மாறுபட்டது. உள்ளதை உள்ளவாறே சொல்லுதல் என்பது அயல் வழக்கு. தமிழ் வழக்கோ எனின்,

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்”

என்பதாகும். இஃது உண்மை, வாய்மை, மெய்ம்மை என்றும் சொல்லப் பெறுதல் உண்டு. இவை முறையே உள்ளம், வாய், உடம்பு ஆகியவற்றோடு தொடர்புடையனவாகச் சொல்லப்பெறும். ஒருவர் அகத்தூய்மை உடையார் என்பதை அவருடைய வாய்மை நிறைந்த ஒழுக்கத்தினாலேயே அறிந்து கொள்ள முடியும், வாய்மை, அகநிலை ஆக்கத்திற்கும் உகந்தது; சமுதாயம் தழுவிய புறத்திண்ண வாழ்க்கைக்கும் அரண் செய்ய வல்லது. அதனால், வாய்மையைவிட வேறொன்றும் உயர்ந்ததில்லை என்று, உயர்ந்த மொழியில் வள்ளுவம் உரைக்கிறது.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற”

என்பது திருவள்ளுவம். வடநூல் வழக்கு, வாய்மையை – உண்மையைச் சத்தியம் என்று கூறும். இன்று கடவுளை – மதத்தை மறுப்பது நாத்திகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஆர்தர் விஞ்ச் என்ற அறிஞன், “உண்மையை மறுத்தல் ஒன்றே நாத்திகம்” என்று கூறுகிறான். எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் உண்மை பொதுவானது; பொருந்துவது. வாய்மை நெறி போற்றி ஒழுகியவர்களின் புகழ், என்றும் நின்று விளங்கும். உலகில் பெற்ற எல்லாவற்றையும் இழந்து விட்டாலும் கூட, நம்மிடத்தில் வாய்மை ஒன்று மட்டும் இருந்தால் போதும்-அதைக்கொண்டு வாழத் தொடங்கலாம்; சாதனைகள் செய்யலாம். வாய்மையென்பது சொல் மட்டுமன்று, வாய்மையே வாழ்வாக மாறவேண்டும். வாய்மையும் அன்பும் வலிமை சான்ற கருவிகள் அல்லது பண்புகள். இவ்விரண்டும் ஒருங்கே அமைந்து விடுமானால் வாழ்க்கையில் வெற்றி உறுதி; வளம் உறுதி.

உண்மை பேசுவது என்பது கூர்ந்து ஆய்வு செய்தால் மிக எளிதான காரியம். பொய் பேசுவதற்கு வேண்டிய திறமை உண்மைக்கு அவசியமில்லை. ஓர் உண்மை அதனளவிலேயே விளங்கும். ஆனால், ஒரு பொய்யோ அடுக்கடுக்காக எட்டுப் பொய்கள் சொன்னாலும் விளங்கவும் செய்யாது; நம்பிக்கையும் தராது. எல்லாவற்றையும் விட உண்மை பேசுவதில் உள்ள ஒரு நன்மை, பேசிய உண்மையை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. காரணம், உண்மையைச் சார்ந்து பின் எதிர்விளைவுகள் வருவதில்லை. ஆதலால், வாய்மை மேற்கொண்டொழுகுதல் எளிது! எளிது!

மூட நம்பிக்கைகளை எல்லாம் அகற்ற வல்லது உண்மையேயாம். நாம் பெற்றுள்ள சுதந்தரத்தை நிலையாக அனுபவிக்க வேண்டுமானால் நம்நாட்டு மக்களிடத்தில் உண்மை பேசுதல், மற்றவர்களுக்கு உண்மையாக இருத்தல் ஆகிய நற்பண்புகள் இருந்தால்தான் முடியும். சுதந்தரத்தின் பயனும் உண்டு. இல்லையெனில், அதிகார வர்க்கத்தின் கெடுபிடிகளுக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்பது என்றும் மாறாதது; எப்பொழுதும் மாறாதது. உண்மைக்கு அதிக ஆற்றல் உண்டு. அண்ணல் காந்தியடிகள், “சத்தியமே கடவுள்” என்றார். நாம் சத்தியத்தில் நின்று ஒழுகுகின்றோம் என்பதற்கு எடுத்துக்காட்டு, சொல்லும் செயலும் ஒன்று போலிருத்தலாகும். சொல்லிற்கும் செயலிற்கும் இடையே வேறுபடுதல் மிகவும் தீயது என்று திருக்குறள் கூறும்.

கனவிலும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு”

என்பது வள்ளுவம். ஆதலால், அகமும் புறமும் ஒத்த நிலையில் ஒழுகியும் பேசியும் வளமான வாழ்க்கையைக் காண்போமாக!

இங்ஙனம் வளர்ந்த வாழ்க்கை, சால்பு நிறைந்த வாழ்க்கை. இத்தகைய சால்பு நிறைந்த வாழ்க்கையே உலக வரலாற்றுக்கு நிலைக்களன். இம்மாபெரும் உலகம் நிலைத்து நின்று இயங்குவதற்குரிய ஆற்றல்.

வாழ்க்கையின் நோக்கம் அல்லது பயன் இன்ப அன்பினை எய்துதல் என்பர். இதனையே ‘முத்தி’ என்றும் ‘வீடுபேறு’ என்றும் கூறுவர். விடுதலை பெறுதல் வீடுபேறு. ஆன்மா, கட்டுக்களிலிருந்து விடுதலை பெறுவதோடன்றி நிறைநலம் பெற்று இன்ப அன்பில் திளைத்தலே வீடுபேறு. இன்பம் என்பதும் அன்பு என்பதும் தனிப்பொருட் சிறப்புடைய சொற்கள். இறைவனை “இன்பன்காண் துன்பங்கள் இல்லாதான்காண்” என்று திருமுறை போற்றும், ‘இன்பன்’ என்று சொன்னால் போதாதா? ‘துன்பங்கள் இல்லாதான்’ என்று மீண்டும் கூறியது ஏன்? இன்று நம்முடைய வாழ்க்கையில் இன்பம் என்று கருதித் துய்த்துக் கொண்டிருப்பவைகளில் துன்பக் கலப்பும் இருக்கிறது.

அது மட்டுமன்று. என்றும் இன்பமாக இருத்தலுமில்லை; எல்லாருக்கும் இன்பமாக இருத்தலுமில்லை. இறையின்பமாவது யாண்டும் இன்பம்; எப்பொழுதும் இன்பம்; எல்லாருக்கும் இன்பம். துன்பத் தொடர்பேயில்லாத இன்பம். இன்ப நுகர்வு நிகழ அன்பு தேவை. ஞானப் பெருவாழ்வில் கடவுள் இன்பப் பொருளாகவும், ஆன்மா இன்பத்தை நுகரும் அன்புப் பொருளாகவும் விளங்குகின்றன. ஆன்மாவினிடத்தில் விளங்கும் தூய அன்பைத் துய்த்தலில் இறைவனுக்கு இன்பம். இன்ப அன்பினை ஆன்மா அடைவதற்கு அறியாமையே தடை. அறியாமை என்பதற்கு, ஒன்றும் தெரியாமை என்பது பொருளன்று. தத்துவ உலகில் அறியாமை அதாவது நன்மையைத் தீமையாகவும், தீமையை நன்மையாகவும் அறிதல் என்பதாகும். இந்த அறியாமை நீங்குதல் வேண்டும். நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் பகுத்து அறிகின்ற அறிவுத்திட்பம் தேவை. தீமையை விட்டொழித்து விலகுவதற்கும் தீமையை எதிர்ப்பதற்கும் துணிவு தேவை. நன்மையைச் சாதிக்கும் திறன் வேண்டும். ஈண்டு நன்மை என்ப்து எங்கும் எல்லோருக்கும் எப்பொழுதும் நன்மையாக இருப்பது. “நன்றுடையான் தீயதில்லான்” என்ற திருமுறை வாக்கை எண்ணி இன்புறுக ஆன்மா, இன்ப அன்பினை அடையப் பத்திமை துணை செய்யும்.

ஆனால், பக்தி முதிர்ந்து ஆன்மா ஞானத்தை அடைதல் வேண்டும். ‘ஞானத்தாலன்றி வீடுபேறு இல்லை’ என்பது மெய்கண்டார் வாக்கு. ஞானம் என்பது உயர்வற உயர்ந்த அறிவு; அறியாமைக் கலப்பில்லாத அறிவு; மயக்கங்கள் கடந்த அறிவு. சிந்தையுள் தெளிவதே தெளிவினுட் சிவமாக இறையாகத் தேர்ந்து தெளிவதே ஞானம். இத்தகு ஞானப் பெருவாழ்வே வளம் நிறைந்த வாழ்வு. இந்த அளப்பரும் ஞானமுடைய வளம் பொருந்திய வாழ்வை மண்ணில் காண்போம்!

வளமான வாழ்வு இன்றியமையாதது, ஒவ்வொருவரும் வளமான வாழ்வு வாழவேண்டும். மக்கட் சமுதாயம் முழுதும் வளமாக வாழும் சூழ்நிலை உருவானால்தான் தனிமனித குடும்ப வாழ்க்கைகள் வளமாக அமையமுடியும். மழை பெய்து மண் குளிர்வதுபோல், மண் குளிர்ந்து செடிகள் தழைப்பது போல், சமுதாயம் தழைத்து வளர்ந்தால்தான் தனி மனிதர் வாழ்வு வளமாக அமைய முடியும். மக்கட் சமுதாயம் வளமுடன் அமைய, நாடு நாடா வளமுடையதாக அமைய வேண்டும். வளமான வாழ்க்கை அமைய நாட்டை வளப்படுத்துவோம்! மக்கட் சமுதாயத்திற்கு நலம் சேர்ப்போம்! வையகம் உண்ண உண்போம்! வையகம் உடுத்த உடுப்போம்! வாழ்வித்து வாழ்வோம்! இதுவே நியதி அறம்! ஒழுக்கம்! வளமான வாழ்க்கை!

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *