ஆலயங்கள் சமுதாய மையங்கள் குன்றக்குடி அடிகளார்

3. திருக்கோயில் பூசனை எல்லாரும் செய்யலாமா? – ஓர் ஆய்வு

ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள செய்தி மிகவும். கவனத்துடன் சிந்தித்து முடிவு காண வேண்டிய ஒன்று. இன்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சைவத் திருமேனி கொண்டு எழுந்தருளிய குருமூர்த்திகளால் காணப்பெற்று, இன்றளவும் – சிவாகம நெறியையும், செந்தமிழ் நெறியையும் முறையே போற்றிப் பாதுகாத்து வரும் நமது ஆதீனத்தின் வழிவழிப் பொறுப்புகளுக்கு ஏற்பவும், வளர்ந்து வந்துள்ள இன்றைய சமுதாயத் தேவைகளுக்குத் தீர்வு காணத்தக்க வகையிலும், சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.

ஆய்வுக்குரிய அளவைகளை முடிவு செய்து கொண்டால்தான் ஆய்வு செப்பமாகச் செய்ய இயலும், அப்போதுதான் ஆய்வு, சார்பு வழி அமையாது. நடுவு நிலையில் நடைபெறும். எந்த ஒரு கருத்தையும் ஆய்வு செய்ய, வரலாறு முதல் அளவையாக எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். இரண்டாம் இடத்திலேயே நூல்கள் எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். நூல்களுள்ளும் காலத்தால் பிந்தித் தோன்றியவை யாயினும் தகுதியால் சிறந்த நூல்களே அளவை நூல்களாக எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். வரலாற்று வளர்ச்சியின் அடிப்படையிலும் காலத்தின் தேவைகளுக்கு ஈடு தரும் வகையிலும் வேறுபாடுகள் இருத்தல் இயற்கை. ஆதலால் முன் எழுந்த நூல்களினும் பின் எழுந்த நூல்களுக்கு அதிகச் சிறப்புக் கொடுத்து ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுதலே ஆய்வு மரபு.

இந்த அடிப்டையில் விழாத் திருக்கோயில் வழிபாட்டு அமைப்பினை ஆராய்ந்தால் கிறித்து பிறப்பதற்கு முன்பே தமிழர்களிடையில் திருக்கோயில் வழிபாடு இருந்ததாகத் தெரியவருகிறது. கடல் கொண்ட தென்குமரி நாட்டில் திருக் கோயில்கள் இருந்தன. இறைவன் மகேந்திர மலையிலிருநது ஆகமம் அருளிச் செய்ததாகத் திருவாசகமும் போற்றுகிறது. மகேந்திரமலை குமரிக் கண்டத்திலிருந்ததேயாம். இறைவன் மகேந்திர மலையில் அருளிச் செய்த ஆகமம் வழிவழி தமிழ் முனிவர்களால் வழக்கில் கொண்டு வரப்பெற்றிருக்க வேண்டும். காலப்போக்கில் அந்த ஆகமங்கள் சரிவரப் பேணி வைக்கப் பெறாமல் மறைந்து இருக்கின்றன. இன்றுள்ள ஆகமங்களில் சில, தமிழ் முனிவர்கள் செய்தவை என்ற கருத்தும் உண்டு. ஆகமத் தொடர்பான செய்திகள் விருப்பமும் வேட்கையுமுடையவர்க்கே புலப்பட வேண்டும் என்ற குறிப்பில், ஆரிய மொழியில் செய்து வைத்தனர் என்பர். இதற்கு அரண் பொதுவாக வடபுலத்து மக்களுக்கும், சமஸ்கிருதம் தங்களதென்றே போலி உரிமை கொண்டாடும் பார்ப்பனருக்கும் ஆகமங்கள் அறிமுகமும் தொடர்பும் இல்லை; இவர்கள் இன்றளவும் கூட ஆகம வழிபாடுகளுக்கு உடன்படுவதில்லை என்பதே உண்மை. இன்றுள்ள சம்ஸ்கிருத மறைகளில் “சிவமே கடவுள்” என்று தெளிவாக உறுதிப்படுத்தப் பெறவில்லை. மேலும் “சிவபெருமானுக்கு உரிய மொழி சம்ஸ்கிருதம், அதனால் சிவாகமங்கள் சம்ஸ்கிருத மொழியில் அருளிச் செய்யப்பெற்றன” – என்று கூறுவது பொருளற்றது.

இறைவன் ஒரு மொழிக்கேயுரியுவன் என்பது இறைவனுடைய குறைவிலா நிறைவுத் தன்மைக்குக் குறை கற்பிப்பதாகும். இறைவனுக்கு எல்லா மொழிகளும் உரிமையுடையன. இன்னும் சொல்லப் போனால் தத்துவ அடிப்படையில் எல்லா ஓசை ஒலிகளுக்கும் மூலம் – நாத தத்துவம். இந்த நாத தத்துவத்தையும் கடந்த விழுப்பொருள் சிவம். அதனால் சிவத்திற்கு உரிய மொழியென்றும், விருப்பமான மொழி யென்றும் ஒன்றும் இல்லை. ஆதலால் இறைவனுக்கு ஒரு மொழிச் சார்பு கூறுதல் நன்றன்று. இறைவன் திருவருள் நிகழ்ச்சிகள் அனைத்தும் உணர்த்துதலேயாம். அத்திருவருள் உணர்த்திய உணர்வை உய்த்து உணர்ந்த நிறைமொழி மாந்தர்கள், அதனை மொழிகளில் வெளிப்படுத்தித் தந்தருள்வர். இதனையும் விஞ்சி, பரமசிவத்துக்கு மொழி உண்டெனத் துணிந்து ஆராயப்புகின், பரமசிவத்தின் மொழி தமிழேயாம்! இவ்வாறு தமிழே என்று துணிய, சான்றுகள் பல உள்ளன. சீகாழியில் திருஞானசம்பந்தர் அழ, பெருமானின் திருக்குறிப்பின் வழி, பெருமாட்டியார் திருமுலைப்பால் சுரந்து சிவஞானத்தைக் குழைத்து ஊட்டினார்கள். உடன், திருஞான சம்பந்தர் “தோடுடைய செவியன்” என்று எடுத்துத் திருநெறிய தமிழ் பாடியருளினார். அன்னை பராசக்தியின் திருமுலைப்பாலும் சிவஞானமும் திருஞானசம்பந்தருக்குத் தமிழறிவையே தந்தன என்பது தானே உண்மை! அதனால் அம்மையப்பரின் மொழி தமிழ் என்றும், சிவஞானம் தமிழ் தழீஇயது என்றும் கூறுவது மிகையன்றல்லவா?

மேலும் சம்ஸ்கிருத நான்மறையோர்கள், இறைவனின் திருவுளக் குறிப்பறியாமல் அவன் திருமுன்பில் வலுக்கட்டாயமாக மறைகளை ஓதுகின்றனர். அவைகளால் அவனுக்கு இனிய ஓசையும் கிடைக்கவில்லை; பொருளும் கிடைக்கவில்லை; அதோடு இட முரண்பாடும் மலிந்து இருந்தமை உணரலாம். இதனால் சலிப்படந்த இறைவன், திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் காசுகள் தந்து தமிழிற் பாடச் சொல்லிக் கேட்கின்றானோ என்னவோ? இதனைச் சுந்தரர் தேவாரத்தால் அறிய முடிகிறது.

நமது சமய நூல்கள் கூறும் நான்மறைகள், ஆகமங்கள் ஆகியவை தமிழ் வழக்கிற்கு உடன்பட்டனவேயாம். அவைகள் இன்று வழக்கிற்குக் கிடைக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். வடமொழிக்கு ஏற்றம் கொடுத்து நூல் செய்த மாதவச் சிவஞான முனிவரே, தமிழில் மறைகள் உண்டு என்பதனை ஏற்றுக்கொண்டு காஞ்சிப் புராணத்தில் அருளிச் செய்துள்ளார். இக்கருத்தினையே திருமுறை கண்ட புராணமும் வலியுறுத்துகிறது. இதனைத் தொல்காப்பியம், புறநானூறு, திருமுறைகள் முதலியனவும் வற்புறுத்துகின்றன. எனினும் சிவாகமக் கருத்துக்கள் தமிழ் நெறிக்கு முற்றிலும் புறம்பானவையாக இருத்தற்கில்லை. அவைகளை ஏற்புழி எடுத்துக் கொள்வதில் யாதொரு தடையும் இல்லை. சிவாகமங்கள் சிவபெருமானாலேயே அருளிச் செய்யப் பெற்றன என்ற கருத்தில் ஓரளவு உண்மையிருக்கிறது. சதாசிவ மூர்த்தி, கௌசியர், காசிபர், பாரத்வாசர், கௌதமர், அகத்தியர் ஆகியோர் ஐவருக்கும் சிவாகம நெறி உணர்த்தினார். பின் பல நூற்றாண்டுகள் அவை வழிவழி “எழுதாக்கிளவி”யாகவே விளங்கி கி.பி. 5-ஆம் நூற்றாண்டு அளவில்தான் வரிவடிவத்தைப் பெற்றன என்பது மொழி வரலாற்றறிஞர்கள் சொல்லும் கருத்து.

ஆகமங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் எழுதப்பெற்றன என்று கருதுதற்கு இடமில்லை. ஆகமங்களில் முன்னுக்குப் பின் முரணிருக்கிறது. அதனாலேயே, பல்வேறு காலங்களில் ஆகமங்கள் எழுதப் பெற்றிருக்க வேண்டும் என்று கருத வேண்டியிருக்கிறது. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரும் ஆகமங்களில் முரணிருப்பதை எடுத்துக் காட்டுகிறார். ஆதலால் ஆகமங்கள் இன்றுள்ள வடிவத்திலேயே சிவபெருமானால் அருளிச் செய்யப் பெற்றவை யென்பதும், அவை ஒரே காலத்தில் தோன்றியன என்பதும், என்றும் – ஒரே படித்தனவாக இருந்தன என்பதும் ஏற்றுக் கொள்ளப் பெற இயலாதன. திரிலோகசந்த சிவாசாரியார் இயற்றிய “சித்தாந்த சாராவளி”யின் உரையாசிரியர் அநந்த சிவாசாரியார் ஆகமங்கள் பற்றிக் கூறியுள்ள கருத்து கவனத்திற்குரியது. எனினும் சிவாகமங்கள் கொள்ளத்தக்கன அல்ல என்பது நமது முடிவன்று. நாம் சிவாகமங்களை ஏற்புழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நமது கொள்கை சிவாகம வழியில் திருக்கோயில் கால பூசைகள், திருவிழாக்கள், பெருஞ்சாந்தி விழா என்று போற்றப் பெறுகின்ற கும்பாபிடேகங்கள் முதலியன செய்தல் ஏற்புடையனவேயாம். ஆயினும் சதாசிவ மூர்த்தத்தினால் உபதேசிக்கப் பெற்ற சிவாகமங்களைப் போலவே ஸ்ரீ கண்டருத்திர மூர்த்தியால் திருநந்திதேவர் வழியில் உபதேசிக்கப் பெற்று ஒரு ஞானசந்தானம் – ஞான பரம்பரை வந்து கொண்டிருக்கிறது. இந்த ஞானசந்தான வழியினர் மெய்கண்ட சாத்திரங்கள் என்ற ஞானநூல்களையும், பண்டார சாத்திரங்கள் என்ற ஞானப் பனுவல்களையும் செய்தருளியிருக்கின்றனர். அதுபோலவே, அம்மையப்பனாக விளங்கியருளும் பெருமானின் திருவருள் அடியொற்றி நின்று நாட்டில் நடமாடிய-அருள் நிறைந்த சமயாசிரியன்மார்களும், அருளாசிரியன்மார்களும் அருளிய தேவார, திருவாசகமும், இவற்றினைச் சார்ந்து தோன்றிய திருமுறைகளுமான சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் உள்ளன. இவைகள் சிவநெறி சார்ந்த ஞான வழியில் தோன்றிய அருள் நூல்கள். சிவாகமங்களுக்கும் இவைகளுக்குமிடையே மாறுபாடுகள் இருத்தற்கில்லை. திருமுறை நெறிகளுக்கு மாறுபாடாகச் சிவாகமங்களில் ஏதேனும் இருப்பின், அவை இடைச் செருகல் என்று கருதி ஒதுக்கத் தக்கனவே! ‘திருமுறைகளும் பதிவாக்கே’ என்று கொண்டு போற்றுதல் சைவ மரபு.

பரமசிவம் உயிர்களை ஆட்கொண்டருளும் நெறிகள் அவ்வக் காலத்திற்கு இசைந்தவாறும், ஆட்கொள்ளப்படும் உயிர்களின் தகுதி நோக்கியும் மாறுபடும். அதனால் மிகப் பிற்காலத்தே இதுதான் உய்யும் நெறி என்று இறையருளால் உணர்த்திய திருமுறை நெறிதான் வலிமையுடையது, இன்றைக்கு ஏற்புடையது. அது மட்டுமன்று, சைவப் பெருநெறிக்கு இடர்ப்பாடுகள் வந்துற்றபோதெல்லாம் சிவாகமங்கள் யாதொரு அரணும் செய்யவில்லை; கையற்றுப் போயின. ஆனால் திருமுறைகள்தான், சிவ நெறியின் மாண்பை, திருவருள் துணைகொண்டு நிலை நிறுத்தி வெற்றி கொண்டன. அதனால் சிவாகமங்களுக்குக் கொடுக்கும் முதன்மையைவிட, திருமுறைகளுக்கு அதிக முதன்மை கொடுக்க வேண்டுமென்பது நமது கருத்து. சிவாகமங்களை விட ஞானமும் ஞானத் தமிழும் போற்றுதலுக்குரியன என்பதையும் பயன்தரத்தக்கன என்பதையும் சில நிகழ்வுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சிவாகமங்களால் மூர்த்தியைப் பந்தனம் செய்ய முடியாது தவித்தபொழுது, தமது தாம்பலத்தின் வழி, கருவூர்த் தேவர் பந்தனம் செய்து தந்தார். இது ஞானத்தின் வெற்றியல்லவா?

சிதம்பரத்தில் ஆடல்வல்லான் திருக்கோயிலில் சிவகாமவழிக் கிரியைகளைச் செய்து மந்திரங்களை ஓதி, திருவிழாவிற்குக் கொடி ஏற்றினார்கள். ஆனால் கொடி ஏறவில்லை உமாபதிசிவம் செந்தமிழில் கொடிக்கவி பாடி ஏற்றுவித்து அருளியமை நாடறிந்த செய்தி. திருக்கோயில் தேரை ஒட்டி நிலை நிறுத்திய பெருமை, திருப்பல்லாண்டுக்கு உண்டு. ஆதலால் ஆகமங்களினும் திருமுறைகள் அருள்நலஞ் செறிந்தன; வலிமையுடையன; போற்றுதலுக்குரியன; பயன்தரத்தக்கன என்பது பெறப்படும் உண்மையல்லவா? ஆதலால் சிவாகமங்களிலும் போற்றிப் பின்பற்றுதலுக்குரியன திருமுறைகளும் மெய்க்கண்ட சாத்திரங்களும் என்பது விளக்கமுறுகிறது. எனவே மெய்கண்ட சாத்திரங்களுக்கும், திருமுறைகளுக்கும் மாறுபடாத சிவாகமங்களே ஏற்புடையன. மாறுபாடு உளதாயின் திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் இவற்றின் கருத்துக்களே ஏற்று ஒழுகத்தக்கன.

“சிவாகமங்களுக்குச் சிவாசாரியார்கள் மட்டுமே அதிகாரிகள் அல்லர். சிறப்புடைய உத்தமர் அனைவரும் சிவாகமங்களுக்கு உரிமையுடையவரே என்று சமய நெறியும் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின் இரண்டாம் சைவ வினாவிடையும் எடுத்தோதுகின்றன.

சைவ சமயத்தில் சிவாச்சாரியார்களுக்கு இருக்கிற முக்கியமான இடத்தை நாம் அறிந்து பாராட்டி நடைமுறைப் படுத்தவே விரும்புகின்றோம். ஆனாலும் “அவர்கள் சிவாச்சாரியார்களாகவே பிறக்கிறார்கள்” என்பது பொருத்தமன்று. சிவாச்சாரியார்கள் சிவபெருமானால் சிவாச்சாரியார்களாகவே பிறப்பிக்கப்பட்டுள்ள ‘சிவசிருட்டி’ என்பதும் பொருத்தமன்று. இக்கருத்துக்கள் தத்துவ இயலுக்கு முரண்பட்டவை. ‘சிவசிருட்டி’ என்பதற்குப் பொருள் சிவனாலேயே நேரிடையாகப் படைக்கப்பட்டவர் என்பது அன்று. மாயாகாரியப் படைப்பைச் சிவம் நேரிடையாகச் செய்வதில்லை. சிவம் திருவுள்ளம் பற்ற, அக்குறிப்பின்படி பிரம்மா சிருட்டிப்பதென்பதே சிவசிருட்டியின் விளக்கம். சிவத்தின் திருவுள்ளக் குறிப்பின்படி படைக்கப்படும் படைப்பு, தொன்மைக் காலத்தில் சிறந்த முதற்குடிக்கே அந்த இயல்பு பொருந்தும். அடுத்து வரும்பொழுது அசுத்த மாயையில் சேர்ந்த படைப்புக்களேயாம். ஆதலால் இன்றுள்ள சிவாச்சாரியார்களும், சிவாச்சாரியார்களாகவே பிறக்கிறார்கள் என்று கூறுவது தத்துவ இயலுக்கு முரணானது. ஆயினும் வழிவழியாகப் பெருமானுக்குப் பூசை செய்யும் குடி மரபில் வருவதால், அருணந்திசிவம் கூறும் நற்சார்பு இயல்பாகக் கிடைப்பதால், சிவாச்சாரியார் குடியில் தோன்றுபவர்களைச் சிவசிருட்டி என்று கூறுவது உலகியல் வழக்கு. ஆயினும் சிவாகமங்களைக் கற்காமலும், தீக்கை முதலியன செய்து கொள்ளாமலும், தீக்கை செய்து கொண்டு அதற்குரிய அனுட்டானங்களை முறையாகக் கடைப்பிடிக்காமலும் வழி வழியாக இருந்து வருகின்றவர்களும் பிறப்பிலேயே சிவாச்சாரியார்கள் ஆகிறார்கள் என்கிற செய்தி ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.

ஏழு வயதில் சமய தீக்கை பெற்று, சிவாகமங்களை முறையாகக் கற்கத் தொடங்கி, விசேட தீக்கை, நிர்வான தீக்கை, ஆச்சாரியபிடேகம் முதலியவற்றை உரிய-அந்தந்த வயதுகளில் பெற்று, பெற்ற தீக்கைகளுக்கு ஏற்றவாறு, ஒழுகி, முறைப்படி தகுதி பெற்றவர்களே சிவாச்சாரி யார்களாகிறார்கள். சிவாகம முறைப்படி ஒரு தீக்கைக்கும் பிறிதொரு தீக்கைக்குமிடையில் பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிடக் கூடாது என்ற நியதி இருக்கிறது.

திருக்கோயில் வழிபாட்டில் ஆன்மார்த்தம், பரார்த்தம் என்று இரண்டு பூசைகள் உள்ளன. ஆன்மார்த்தம், பரார்த்தம் என்ற பூசைகள் இரண்டும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தியிடத்தில் செய்யப் பெறுவனவேயாம். பூசை செய்யும் இடத்திலும் மூர்த்தியிலும் வேறுபாடில்லை. செய்யும் நோக்கத்தைப் பொருத்தே ஆன்மார்த்தம் பரார்த்தம் என்று வேறுபடுகின்றன. சிவாச்சாரியார்கள் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருக்கும் மூர்த்தியை ஆன்மார்த்தமாகவும் வழிபடலாம். ஆன்மார்த்தமாக வழிபாடு செய்து கொள்ள இயலாதவர்களுக்காகவும் பொதுவாக எல்லா உயிர்களுக்காகவும் வழிபாடு செய்து வைக்கும் உரிமையுடையவர்கள் சிவாச்சாரியார்கள். இதுவே பரார்த்த பூசை எனப் பெறும்.

சைவ முறைப்படி பரார்த்தமாக மூர்த்தியைத் தீண்டுதற்குரிய தகுதி தருவதாகிய தீக்கை முதலியன முறையாகப் பெற்றவர்கள், திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தியை ஆன்மார்த்தமாக வழிபாடு செய்து கொள்ளலாம். இதுதான் தமிழகத்துத் திருக்கோயில் வழிபாட்டுப் பழைய நெறிமுறை. இதனை “தீக்கை பெற்றுக் கொண்டவர்கள் அனைவரும் திருக்கோயில்களில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற வழிபாட்டுக்குரியவர்கள்” என்று யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் சைவ வினா விடையில் கூறியுள்ளமை அறிக.

திருவிழிமிழலைத் திருக்கோயிலில் “செந்தமிழர்கள் மறை நாவர்கள், கலைநலம் தெரிந்தவர்கள், குணத்திற் சிறந்த ஞானிகள் ஆகியோர் ஒருங்குகூடி அர்ச்சனைகள் செய்தனர்” என்று திருஞான சம்பந்தர் தேவாரம் கூறுகிறது. திருப்பழுவூர்த் தேவாரத்தில் மலையாளிகள் கூட வந்து வழிபட்டதாகத் திருஞான சம்பந்தர் அருளிச் செய்துள்ளார்.

அப்பரடிகள் திருவையாற்றுப் பதிகத்தில் “திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட அடியார்கள், புனலும் பூவும் சுமந்துகொண்டு ஒருவர் பின் ஒருவராகச் சென்று புகுந்ததையும் அவர்கள் பின்னே, வந்த ஒழுங்கு வரிசையில் தாமும் செல்வதையும் குறிப்பிட்டு அருளிச் செய்துள்ளார்.

ஆதலால், திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் தகுதியுடைய அடியார்கள் அனைவரும் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து கொண்டமையை அறியலாம்.

அடுத்து, சேக்கிழார் அருளிச்செய்த பெரிய புராணமும் இந்த உண்மையை உணர்த்துகிறது. திருச்சாத்த மங்கையில் வாழ்ந்த திருநீலநக்கநாயனார் என்ற மறையவர் குலத்துப் பெரியவர், நாள்தோறும் தமது மனைவியுடன் திருச்சாத்தமங்கையில் பதிகம் பெற்ற அயவந்தீச்சுர்த்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்குத் திருமுழுக்குச் செய்தும் திருவமுது செய்வித்தும் வழிபாடு செய்து கொண்டமையை பெரிய புராணம் கூறுகிறது.

அடுத்து, வேளாளர் குடியைச் சேர்ந்த அரிவாட்டாய நாயனார் நாள்தோறும் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியுள்ள பெருமானுக்குச் செந்நெல் அரிசித் திருவமுதும், மாவடுவும், செங்கீரையும் எடுத்துச் சென்று திருவமுது செய்விக்கும் கடப்பாட்டினை யுடையராயிருந்தனர் என்றும் பெரியபுராணம் கூறுகிறது.”

அடுத்து, திருஞான சம்பந்தர் தாம் குறிப்பிட்ட பயன் எனக்கண்டு வீழ்ந்து வணங்கிய கண்ணப்பர் வரலாறு, தக்க சான்று. கண்ணப்பர் வரலாற்றை “அதிதீவிரமான வல்வினை யின்பாற்பட்டதென்றும், அதனால் அது பொது விதியன்று” என்றும் சிலர் கூறுவர். அது உண்மையன்று. கண்ணப்பர்க்கு வழிபடுதலுக்குரிய வாய்ப்புக் கிடைத்ததால் பெருமானே திருக்கண் நோக்கால் தீக்கை (நயனதிக்கை) செய்து வைக்கும் பெரும்பேறு பெற்றார். பிறகு வழிபாட்டின் பயனாகப் பெருகிய அன்பில் அவர் அதிதீவிரமானார். நாம் அவருக்குத் தடையின்றி வழிபடக் கிடைத்த வாய்ப்பையே இங்கு எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். கண்ணப்பர் திருக்கோயிலுக்குள் சென்று, திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காளத்தி யப்பரைத் தழுவி உச்சி மோந்தார். இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்காது போயிருக்குமாயின், அவரை “கண்ணப்பராகக்” கண்டிருக்க இயலாது. திருக்காளத்திக் கோயிலில் சிவகோசரியார் என்னும் சிவாச்சாரியார் ஆகம விதிப்படி பூசை செய்தார் என்றும் சேக்கிழார் கூறுகிறார். ஆனாலும், மற்றவர்கள் திருக்கோயிலுக்கு வந்து பூசனை செய்து கொள்வதற்குத் தடையில்லாதிருந்திருக்கிறது. மறுநாள் சிவகோசரியார் வந்து வருந்தும் பொழுது கூட, ‘பூசனை செய்தவர் யார்?’ என்ற கேள்வி எழவில்லை. மற்றவர் பூசை செய்வதற்குரிய உரிமையில்லாதிருக்குமாயின் சிவகோசரியார், பூசை செய்தவர் யார் என்று வினவித் தெரிந்து கொண்டிருப்பார். “இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார்” என்று மட்டும் கேட்டதால் மற்றவர் பூசை செய்வதற்குரிய உரிமை இருந்தது என்பது புலனாகிறது. சிவகோசரியார் தாம் பூசனை செய்வதற்கு முன்பு, இறைவர் திருமுன்பு ஏற்பட்டிருந்த பழுதுக்குத்தான் (புலால், எலும்பு கிடந்தமைக்குத்தான்) பவித்திர பூசை செய்தாரே தவிர, மற்றவர் தீண்டியதற்குரிய பிராயச்சித்தம் செய்ததாகப் பெரிய புராணத்தில் இல்லை. முடிவாக “விதி முறைப்படி செய்யப்பெற்ற சிவகோசரியார் பூசையிவிட, கண்ணப்பர் பூசை சிறப்புடையது, உவப்புடையது, நனிசிறந்தது” என்று காளத்தியப்பர் அருளிச் செய்தமையை எண்ணிப் பார்த்தல் வேண்டும். ஆதலால் சிவாச்சாரியார்கள் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருக்கும் பெருமானை ஆன்மார்த்தமாகவும் வழிபடலாம்; பரார்த்தமாகவும் மற்றவர்களுக்குச் செய்விக்கலாம். திருக்கோயிலில் நாள் பூசையைச் சிவாச்சாரியார்கள் செய்து வைத்து, ஆன்மார்த்தமாக வழிபட வருபவர்களுக்கு வழிபாடு செய்துகொள்ளத் தக்கவாறு வைத்தலே, சிவாச்சாரியார்களுடைய கடமை. இக்கருத்தினைத் திருக்கோயிலுக்கு அமைந்துள்ள தலபுராணங்களும் வலியுறுத்துகின்றன. இராமன் பூசித்த திருத்தலங்கள் “திருஉசாத்தானம்” முதலிய பல; பாண்டவர் ஐவர் பூசித்தவை “திருமண்ணிப் படிக்கரை” முதலிய பல; வாலி பூசித்தது “வாலீச்சுரம்” என்றெல்லாம் திருத்தல புராணங்கள் உள்ளன. இவ்வாறு இவர்கள் பூசித்த செய்திகள் திருமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இவை மட்டுமா? ஓரறிவுயிர்கள் முதல் ஐயறிவுயிர்கள் வரை பூசித்துள்ளன; திருவானைக்காவில் யானையும் சிலந்தியும் பூசித்துள்ளன. எறும்பு பூசித்த திருத்தலம் திருவெறும்பியூர் நண்டு பூசித்தவூர் திருநின்றவூர். பசு பூசித்த தலம் திருவான்மியூர், புள் பூசித்த திருத்தலம் புள்ளிருக்கு வேளுர். இவ்வாறு தல வரலாறுகள் இந்த உண்மையைக் கூறுகின்றன. இச்செய்திகளை வள்ளற்பெருமானும் எடுத்துக் கூறி நடத்துகிறார். எனவே தீக்கை பெற்றவர்கள் – தகுதியுடையவர்கள் – விரும்புகிறவர்கள் ஆன்மார்த்தமாகத் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியுள்ள இறைவனை வழிபாடு செய்து கொண்டனர் என்பதுதான் உண்மை. ஆதலால் நமது கருத்தினை அடியிற்கண்டவாறு தொகுத்துத் தருகின்றோம்.

1. பன்னிரு திருமுறைகளுக்கும், மெய்கண்ட சாத்திரங்களுக்கும் மாறுபாடல்லாத சிவகாமச் செய்திகள் ஏற்புடையன.

2. சைவ நெறியில் விதிக்கப் பெற்றுள்ள தீக்கை முறைகள் எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் உரியன. சைவ தீக்கை பெற்றவர்கள் ஒரு குலமாக – சைவ குலமாக – ஆகின்றனர். இந்த அடிப்படையில் தான் ‘ஒன்றே குலம்’ என்று திருமந்திரம் பேசுகிறது.

3. தீக்கை பெற்றவர்கள் சிவாகமங்கள் ஓதவும், திருக்கோயிலில் அவர்கள் பெற்ற தீக்கைகளுக் கேற்றவாறு சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வகை வழிபாடுகள் செய்வதற்கும் உரிமை பெற்றவர்களாவர்.

4. முறையாகத் திக்கை முதலியன பெற்ற சிவாச்சாரியார்கள் திருக்கோயிலில் ஆன்மார்த்த பூசையும் பரார்த்த பூசையும் செய்வதற்கு உரிமையுடையவர்கள்

5. சைவ சமய தீக்கைகள் பெற்றவர்கள் அனைவரும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிற மூர்த்தியை ஆன்மார்த்தமாக வழிபாடு செய்து கொள்வதற்கு உரிமையுடையவர்கள்.

6. பரார்த்தம் என்பதற்கு “பிறர் பொருட்டு” என்பது பொருளாயினும் பிறருக்காகச் சிவாச்சாரியாரே செய்தல் என்பது ஒரோ வழி ஏற்புடையதே தவிர, முழுமையான தன்று. திருக்கோயிலின் காலப்பூசைகளை முறையாக சிவாச்சாரியார்கள் செய்து, தகுதியுடையவர்கள் வந்தால் ஆன்மார்த்த பூசை செய்வதற்கு உடனாக இருந்து துணை செய்வது என்பதே பொருள். ஒரோவழி அங்ஙனம் ஆன்மார்த்த பூசையாகச் செய்து கொள்ள இயலாதவர்களுக்காகவும் இவர்கள் செய்து வைக்கலாம். வரலாற்றுச் செய்திகளுக்கும் சிவாகமத்திற்கும் திருமுறைகளுக்கும் ஒத்த நடைமுறைக்கிசைந்த உண்மை இதுவே.

7. இம்முறை, நடைமுறைப்படுத்தப் பெறுவதால் பிறப்பினால் சாதி முறை இல்லாமல் போகிறது. தகுதியால், ஆசாரத்தால், சீலத்தால் மட்டுமே வேற்றுமையிருக்கும்.

8. இம்முறையை நடைமுறைப் படுத்துவதன் மூலம், ஒவ்வொரு திருக்கோயிலும் எழுந்தருளியிருக்கும் இறைவனை, ஆன்மார்த்த நாயகனாகக் கொண்டு வழிபடுவோர் பட்டியல் உருவாகும். அது திருக்கோயில் வளர்ச்சிக்கும் துணை செய்யும், தகுதியும் விருப்பமும் உடையவர்கள், வழிபாடு செய்து கொள்வதற்கு வாய்ப்பிருந்தால், அவர்கள் பத்தின்மயிலும் ஞானத்திலும் சிறந்து வளர்வர். இதுவே இன்றைக்குச் சரியான முறை என்று கருதுகின்றோம்.

9. அல்லது அரசு தீவிரமாக மாற்றங்கள் செய்ய விரும்புமாயின் அது பற்றியும் ஆலோசிக்கலாம். ஆனாலும் ஒரு சமயச் சார்பற்ற அரசு, ஒரு சமயத்தில் சேரிடையாகச் சீர்திருத்தம் செய்யப்புகுவது வரவேற்கத் தக்கதன்று. நல்லூழ் இன்மையின் காரணமாக, நம் சமயத் தலைவர்கள் தம்முள் மாறுபாடு கொண்டும் ஒத்துணர்வில்லாமலும் இருப்பதாலும் திருக்கோயில் பேணல், சமய நெறிபேணல், அவற்றை வளர்த்தல், காலத்திற்குத் தேவையான புதுமை நெறி காணல் ஆகியன பற்றி ஒருங்கிணைந்து சிந்திக்காததாலும், சிந்தித்து வழி நடக்காததாலும் காலத்தின் தேவைகள் நெருக்குவதால் முறையான வழி காட்டுதலின்றிச் சமுதாயம் தன் போக்கில் செல்கிறது. அரசு அதற்கேற்றவாறு சமுதாயத் தேவைகளை நிறைவு செய்யவும், சீர்திருத்தங்களைச் செய்யவும் அவாவுகிறது. அரசு நம்முடைய சமயத் தலைவர்களையும் சமய அறிஞர்களையும் கொண்ட தக்க மாநாடுகளைக் கூட்டி, நன்றாகச் சிந்தித்து முறையாகச் சீர்திருத்தம் செய்வது வரவேற்கத்தக்கது; ஏற்புடையதும் ஆகும்.

தமிழகத் திருக்கோயில்களில் காலத்திற்குத் தேவையான மாறுதல் ஏற்பட்டு வந்துள்ளதைத் திருக்கோயில்களின் நடைமுறைகளும் உணர்த்துகின்றன; வரலாறுகளும் உணர்த்துகின்றன. பல சிவாலயங்களில், சிவாச்சாரிய மரபினர் அல்லாதவர்களும், சிவாகம முறைப்படி, தீக்கை முதலியன பெறாதவர்களும் கூட அமர்த்தப்பெற்றுள்ளனர். சான்றாக, திருவானைக்கா, திருப்பெருந்துறை, சிதம்பரம், இராமேச்சுரம், திருச்செந்தூர் ஆகிய திருத்தலங்களைக் குறிப்பிடலாம். ஏன்? ஆகமத்தில் உயிர்ப்பலியிடுதல் சொல்லப் பெறுகிறது. ஆனால், அரசின் உயிர்ப்பலி தடைச் சட்டம் அதனைத் தடுத்து விடவில்லையா? திருக்கோயில்களுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாதென்பது ஆகமத்தின் விதி. ஆனால் மெய்கண்ட சாத்திரங்களும் திருமுறைகளும் இதை மாற்றித் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை வழங்கியுள்ளன. அப்பரடிகள் அருள் வாக்கு நினைக்கத்தக்கது. இக்கருத்தை அரண் செய்யும் வகையில் மாதவச் சிவஞான முனிவர் அருளிய வாக்கும் எண்ணத்த்க்கது. பெற்றான் சாம்பானுக்குத் தீக்கை செய்த உமாபதி சிவத்தின் அருளிப் பாடும் நினைக்கத் தக்கது. ஆயினும் உழுதசால் வழிச் செல்லும் நம்மவர்கள் திருமுறை நெறியையும் மெய்கண்ட நெறியையும் ஏற்று நடைமுறைப் படுத்தவில்லை. ஆதலால் நமது சுதந்திர இந்திய அரசு, ஆலயப் பிரவேசச் சட்டம் செய்தது. இது சிவாகமங்களுக்கு விரோதமானதுதான். இதனை நாம் ஏற்காமல் இல்லை. இங்ஙனம் தாழ்த்தப்பெற்றவர்கள் திருக்கோயிலுக்கு வந்ததால் – “திருவருள் பொலிவு (சாந்நித்யம்) குறைந்து இருக்கிறது” என்று சிலர் கூறுவது சரியன்று. இறைவன் எஞ்சாத பூரணம், குறைவிலா நிறைவு; கோதிலா அமுது. அதற்கு எப்படிக் குறை வரமுடியும்? இது சொல்வாருடைய மனப்போக்கின் கருத்தேயாம். சாதாரணக் காவிரியே, தூய்மையற்றவைகளையும் தூய்மையாக்கிக் கொள்ளும் பொழுது, இறைவனைத் தாழ்த்தப்பட்டவர்கள் தொடுவதால் திருவருட் பொலிவு குறையாது. அப்படிச் சொல்லுபவர்கள் கடவுள் தத்துவத்தை முற்றாக அறிந்தவர்கள் ஆகமாட்டார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் இங்கு நினைவு கூரத்தக்கது எந்த வகையிலும் நமது சமுதாயத்தில் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வுகளைக் கற்பிப்பதும் ஒரு சாராரை இழிவுபடுத்துவதும், மற்ற மதங்களுக்கு அனுப்பிக்கும் கொடுமையும் உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும். “மெய்வைத்த சொல்” என்றும் “மறை” என்றும் பாராட்டப்பெறும் திருக்குறள் கூறும் பொதுநெறி காணல் இந்த நூற்றாண்டின் கடமை.

ஆதலால், இன்றைய நிலையில் அரசு ஒரு தக்க சமய வளர்ச்சிக் கருத்தரங்கு மாநாட்டைக் கூட்டி, மேலும் சரியான முறையில் இச்செய்தியை அணுகி திருமுறைகளுக்கும், மெய்கண்ட சாத்திரங்களுக்கும், சிவாகமங்களுக்கும் முரணில்லாமல் சிந்தித்துக் கருத்தாய்வு செய்து செயற்படுத்துவது தவறாகாது.

அங்ஙனம் செய்ய நினைக்கும் பொழுது வழிவழியாக பூசை செய்துவரும் சிவாச்சாரியார்களைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்குரிய முன்னுரிமையையும் தரும்படி செய்வது சமுதாயப் பாங்கான கடமையாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *