
ஆலயங்கள் சமுதாய மையங்கள் குன்றக்குடி அடிகளார்
2. கோயில் வளர்த்த வாழ்வியற் கலைகள்
தமிழ்நாடு வரலாற்றுப் புகழ்மிக்க நாடு. மனிதகுல வரலாறு தொடங்குவதற்கு முன்பே தமிழ் மக்கள், மொழி, கலை, இலக்கியம், சமயம் முதலிய பல்வேறு துறைகளில் வளர்ந்து புகழ் பெற்றிருந்தனர். இவ்வகையில் தமிழ் மக்களின் பழமைக்கும் வளர்ச்சிக்கும் சான்றாக இருப்பவை பல. அவற்றுள், தமிழ்மொழி வாழ்க்கைக்கு இலக்கணம் கண்டிருப்பதும், தமிழ் மக்களின் வழிபடு தெய்வம் ஆடல் வல்லோனாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கவையாகும். தமிழ் கூத்து, இசை, இயல் என மூன்று திறத்ததாக வளர்ந்து முழுமை பெற்றுள்ளது. அதுபோலவே தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் திருக்கோயில்கள் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன. இமயம் முதல் குமரிவரை நமது இந்திய நாட்டு மக்களிடத்தில் திருக்கோயிலைச் சார்ந்து வாழும் நெறி கால் கொண்டு உள்ளது; சிறந்து பரந்துள்ளது.
“திருக்கோயில் இல்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினொடு பலதளிகள் இல்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியும் இல்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.”
என்ற அப்பரடிகளின் திருப்பாடலும்,
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்,” என்ற உலக நீதிப் பாடல் அடியும் திருக்கோயில்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதற்குச் சான்றாக விளங்குவன.
தமிழர்கள் திருவுருவ வழிபாட்டில் அசைவிலா நம்பிக்கையுடையவர்களாய் விளங்கி வருகின்றனர். தமிழர்கள் தீவிரமான பக்திநெறி நிற்பவர்கள், அவர்கள் தாங்கள் விரும்பும் ஒரு பொருளிடத்தில் கடவுளாற்றலை – உருவகப்படுத்திக் கொண்டு பத்திமை செய்பவர்கள்.
திருக்கோயில்கள் பரம்பொருளை உணர்வதற்குக் கருவியாகவும் பக்தி நெறியைப் பரப்புவதற்குச் சாதனமாகவும் விளங்கி வருகின்றன. ஆதலால், நமது இந்திய நாட்டில் இந்துமதக்கோயில்களின் எண்ணிக்கை மிகுதி. இத்திருக்கோயில்களைக் கட்டும் பணி கிறித்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தொடங்கப் பெற்று விட்டது என்பதை வரலாறும் இலக்கியமும் எடுத்துக் காட்டுகின்றன. கடல் கொண்ட தென்குமரிக் கண்டத்திலிருந்த தென்மதுரை என்ற நகரத்தில் நகரமனைய திருக்கோயில் இருந்ததைப் புறநானூறு பேசுகிறது. குமரியாறு கடல் கொள்ளப்படுவதற்கு முன்னும், தென்குமரி நாட்டில் பஃறுளியாறு கடல் கொள்ளுவதற்கு முன்னும் எழுந்த பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி பஃறுளியாறு கடல் கொள்ளப்படுவதற்கு முன் திகழ்ந்தவன். முக்கட் பெருமான் என்னும் முழுமுதற் கடவுளொருவருக்கே இம்மன்னன் வணக்கம் காட்டும் இயல்பினன் என்றும், அக்கடவுள் முனிவர்களால் பரவப் பெறுபவர் என்றும், அப்பெருமானுக்கு ஒரு நகரத்தைப் போல் அகன்று உயர்ந்து அமைந்த திருக்கோயில் அவ்வளவு பழங்காலத்திலேயே இருந்தது என்றும் அறிகின்றோம். முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றி வருகின்ற புறப்பாட்டில்,
“பணியிய ரத்தைநின் குடையே! முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே!” (புறம்-5)
என்று காரிகிழார் என்னும் நல்லிசைப் புலவர் இதனைக் கூறுவர். இத்தகைய திருக்கோயில்கள் சமுதாயத்தின் மையமாக அமைந்து மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யத் தக்கவகையில் இயங்கியும் வந்தன.
தமிழகத்தின் திருக்கோயில்கள் கடவுள் மங்கலமிக்க அருள் நலத்துடன் பொருள் நிறைந்த கலைகளையும் பெற்று விளங்குகின்றன. விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் திருக்கோயில்கள் ஆயிரம் ஆயிரம், தமிழகத்தை அணி செய்கின்றன! கல்லெல்லாம் கலை! பேசும் பொற் சித்திரம்! கடவுள் திருவுரு !
மானுட வாழ்க்கை, வென்று விளங்கவேண்டும். மானுடத்தின் வெற்றியே மண்ணுக்குப் புகழ் சேர்ப்பது! விண்ணுக்கும் சிறப்பாவது! மானுடம் வென்று வீரம் நிகழ்த்துவது வாழ்க்கையின் குறிக்கோளாகும்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.”
என்று திருக்குறள் கூறும். நெறிப்பட நின்று வாழ்தல் ஒரு கலை, வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப் பெற்ற ஒரு மாளிகையன்று, நாழிகைதோறும் உரியோரால் கட்டப் பெற்று வருவது. வாழ்க்கை ஒரு சுமையன்று; துன்பமும் அன்று; வாழ்க்கை குறிக்கோளுடையது. வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வதற்குரியது. அதனால், கால உணர்வோடு கலந்து வளர்ந்த வாழ்வியற் கலைகள் நமது திருக்கோயில் வளர்த்த கலைகள்.
வாழ்க்கைக்குச் சோறு மட்டும் போதாது. வாழ்க்கைக்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. உயிர் தழைத்து வளர்வதற்கு இன்பம் துணை செய்கிறது. ஒருவர் நெறிப்பட வாழ்தல் அவருக்கும் பெருமை; அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் பயன்தரும், ஒரு நல்ல இசைக்கலைஞன் இனிமையாகப் பாடும் பொழுது அவனுக்குப் பெருமை: மகிழ்ச்சி, இன்பம்! அந்த இசையமுதைத் துய்த்து மகிழும் மற்றவர்களுக்கும் களிப்பு; மகிழ்ச்சி, இன்பம்! ஆதலால் வாழ்க்கைக்குக் கலை இன்றியமையாதது. கலைநலம் சான்ற வாழ்க்கையில்தான் அன்பு இருக்கும்; அமைதி இருக்கும்; இன்பம் இருக்கும்.
வாழ்தல்!-இஃது ஒர் அருமைப்பாடான கலை. “பிழைத்தல்” வாழ்க்கையன்று. வாழ்க்கையில் வழங்கப் பெற்றுள்ள வாய்ப்புகள் அனைத்தும் முழுமையாகப் பயன்பட வேண்டும். வாழ்க்கை ஒரு சுமையாக இருத்தல் ஆகாது. எவ்வளவு நெருக்கடியான துன்பச் சூழலிலும் பரித்து மகிழ்ந்து வாழ்தலே வாழ்க்கை அழுது புலம்புவது அவலம்! வாழ்க்கை, கலையாக அமைய வேண்டுமானால் வந்து சூழ்ந்துள்ள துன்பங்களுக்குரிய காரண காரியங்களை ஆராய்ந்தறிய வேண்டும். துன்பங்களுக்கெல்லாம் காரணம், பெரும்பாலும் முறையாக வாழாமையேயாம்! ஒருவரைக் காணல், ஒருவர் சொல்வதைக் கேட்டல், ஒருவரோடு பேசுதல் முதலிய நிகழ்வுகள் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாய் அமைந்துவிடுகின்றன. “முகனமர்ந்து இனிது நோக்குதல்” என்பது திருக்குறள், கண்கள் ஆயிரம் ஆயிரம் கூறும். கண்களால் வளர்ந்த கதைகளும் உண்டு, கண்களால் விளைந்த தீமைகளும் உண்டு. ஆதலால், பரபரப்பின்றி, அமைதியான, மகிழ்ச்சி நிறைந்த குளுகுளுப்பைக் கண்களால் காட்டுதல், காண்பவர்களுடன் நெடிய இனிய உறவை வளர்த்துக் கொள்ளுதல், பார்வைக் கலையின் இலக்கணம்.
மற்றவர்களின் மீது கூறும் குறைகளைக் கேளா திருத்தல், கோள் கேளாதிருத்தல் ஆகியன கேட்டறிதலின்பால் உள்ள கலைத்திறன். இனியனவே பேச வேண்டும்; மற்றவர் குணமே கூறவேண்டும்; முகமன் கலவாத புகழ் கூற வேண்டும். இது பேசும் கலை. பொறிகள் ஐந்தும் பண்பட்ட நிலையில் பழக்கப்படுத்தப் பெற்றால் மனம் தூய்மை ஆகும்; புத்தி புண்ணியச் செயலில் ஈடுபடும்; சித்தம் அழகுடன் விளங்கும். இந்த நிலையில் வாழ்வே கலை, கலையே வாழ்வு; வாழ்வே சமயம், சமயமே, வாழ்வு என்றாகிறது.
சமயம் என்பது ஒரு தத்துவம்; ஒரு கொள்கை, ஒரு கோட்பாடு. அது வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தத்துவமன்று. சான்றோர் வாழ்க்கையினின்றும் பிறந்தது சமயம். வாழ்க்கையை வழி நடத்துவது சமயம், சமயம், ஒரு வாழ்க்கை முறை. அதனால், சமயம் என்பது திருநெறி; தவநெறி; தூநெறி; நன்னெறி, அருள் நெறி; சன்மார்க்கம் என்றெல்லாம் அருளாசிரியப் பெருமக்களால் பாராட்டப் பெற்றுள்ளது. நெறியென்றால் வழி. உயிரும் உணர்வும் செல்லும் ஆறு! ஆதலால் நெறி என்று கூறப் பெறுகிறது! இறையருளை நாடிச் செல்லுவோர் செல்லும் நெறி திருநெறி. புலன்களிலே அழுக்கின்றித் துய்மை வழிச் செல்லும்நெறி தூ நெறி, வஞ்சப் புலனைந்தைப் பக்குவப்படுத்த ஏற்கும் நெறி தவநெறி. எங்கும் எல்லாவற்றிலும் எப்பொழுதும் நன்மையைக் காணவும் நன்மையைச் செய்யவும் விரும்பிச் சென்றிடும் நெறி நன்னெறி, யார் மாட்டும் எவ்வுயிர்க்கும் தடையிலா அன்பைக் காட்டும் ஒழுக்கத்தினை ஏற்கும் நெறி, அருள் நெறி. இதுவென்றும், அதுவென்றும், நன்றென்றும் தீதென்றும் சமய பேதா பேதங்களில் ஈடுபடாது, சமயங்களைக் கடந்த பொதுநிலை நின்று வாழ்வோர் ஏற்பது சன்மார்க்க நெறி. ஆக, வாழ்க்கையில் நாகரிகம், பண்பாடு, சான்றாண்மை ஆகியன பொதுள வேண்டுமானால் சமயம் சார்ந்த வாழ்க்கை தேவை. சமயம் சார்ந்த வாழ்க்கைக்கு எளிதில் இட்டுச் செல்வது கலை, கலை சமயத்திற்கு ஆதாரம். சமயம் கலைக்கு ஆதாரம், இரண்டும் மானுடத்தை வளர்க்கும் தகையன.
கலகப் பூச்சிகளாக வாழ்ந்து, வெற்று வேடிக்கை மனிதராய் மாண்டு போகாமல் தடுக்க, சமயமும் கலையும் துணை செய்வன. கலைகளை அனுபவிக்கும் இதயமுடையோர் குற்றமுடையோராய் இருத்தல் அரிது. சமயம் சார்ந்த வாழ்க்கையுடையோர் யாதோர் உயிருக்கும் தீங்கு செய்யார். கலைகளின் வளர்ச்சி, கறைகளைத் தவிர்க்கும்; குற்றங்களைக் குறைக்கும்; சிறைச்சாலைகளை மூடும். பரஸ்பரம் நல்லெண்ணமும் அமைதியும் தழுவிய சமுதாய வாழ்க்கையை உருவாக்கும். இம்மண்ணுலக வாழ்க்கை அமைதியாக நடைபெறச் சமயமும் தேவை; கலைகளும் தேவை. இனி எதிர்வரும் காலத்திலும் இன்பம் தழுவிய வாழ்க்கையை அமைக்கச் சமயமும் தேவை; கலைகளும் தேவை.
கலைகளில் முதலில் தோன்றியது கூத்து. மொழி தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூத்துத் தோன்றியிருக்க வேண்டும். மக்கள் தம்முடைய உணர்வுகளை, நினைத்திடும் பொருட் குறிப்பை, முதன் முதலில் அங்க அசைவுகளால்தான் புலப்படுத்தினர். அதுவே காலப்போக்கில் கூத்தாயிற்று. இக்கூத்திலிருந்துதான் நாட்டியம், நாடகம், திரைப்படம் முதலிய கலைகள் தோன்றின. தமிழரின் தலைசிறந்த வழிபாட்டுத் திருவுருவம் ஆடல்வல்லான் திருவுருவம்! வழிபாட்டுத் திருவுருவங்களில் பழமை சான்றதும் எழில் வாய்ந்ததும், இன்பம் அளிப்பதும் ஆடல்வல்லான் திருவுருவமே!
“குனித்த புருவமும் கொவ்வைச்செவ்
வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்
மேனியில் பால்வெண் ணிறும்
இனித்த முடைய எடுத்தபொற்
பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநி லத்தே!”
(நான்காம் திருமுறை – 783)
என்று அப்பரடிகள், ஆடல்வல்லானைப் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தது இங்கு நினைவுகூரத் தக்கது. தமிழரின் வழிபடும் தெய்வங்களில் சிறப்புடைய சிவம், சக்தி இருவருமே ஆடற்கலை நிகழ்த்தியிருக்கின்றனர். இன்றும் ஆடிய திருக்கோலத்தில் உள்ள அத்திருமேனிகளுக்கு வழிபாடு செய்யப் பெறுகின்றது. ஆடற்கலையில் நூற்றுக்கணக்கான வண்ணங்கள் உண்டு. பழந்தமிழகத்தில் திருக்கோயில்களில் அன்றாட வாழ்வியலில் நாட்டியமும் இடம் பெற்றிருந்தது. சோழர் காலத்தில் “பதியிலார்” என்று பெருமை பெற்றவர்கள் திருக்கோயில்களில் ஆடற்பணி செய்துகொண்டிருந்தனர். இங்ஙனம் பணி செய்தவர்களில் தலைசிறந்தவர்களுக்குச் சோழ மன்னர்கள் ‘தலைக்கோல்’ என்னும் பட்டம் அளித்துச் சிறப்புச் செய்துள்ளனர். இங்ஙனம் பட்டம் பெற்ற ஆடற்பெண் “தலைக்கோலி” என்றழைக்கப் பெற்றாள். திருக்கோயில்களில் நடனமாடுவதற்கு, மாமன்னன் இராசராசன் 400 பெண்கள் வரை நியமித்திருக்கிறான். நடனமாடும் இவர்களுக்குப் பக்க வாத்தியமாக, பாடவயம், கானபாடி, உடுக்கை வாசிப்போர், கொட்டி மத்தளம் வாசிப்போர், முத்திரைச் சங்கு ஊதுவார், பக்க வாத்தியர், காந்தர்வர், உவைச்சர் என்றெல்லாம் பலர் இசைப் பணி புரிந்தனர் என்று கல்வெட்டுச் செய்திகள் அறிவிக்கின்றன.
“ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் திளைத்தார்”,
(பெரியபுராணம், தடுத். 106)
என்று ஆடற் பெருமானை ஆரூரர் வணங்கி மகிழ்ந்த செய்தியினைச் சேக்கிழார் பெருமான் சிந்தை குளிரப்பாடியுள்ளார். பொறிகள், புலன்கள் ஒன்றிய ஐந்து பேரறிவின் உணர்வுகளும் கண்களிலேயே நின்று ஆடல் வல்லானைக் கண்டு மகிழ்கின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அகக்கருவிகள் – அனுபவக் கருவிகள் நான்கும் சிந்தையை இடமாகக் கொண்டு விட்டன. மானுடத்தின் குணம் மூன்று. தாமதம், இராசதம், சாத்துவிகம், ஆகிய இம்மூன்று குணங்களில் சாத்துவிகமே உயர்ந்தது; சிறந்தது. ஆடல் வல்லானின் ஆனந்தக் கூத்தில் ஈடுபடும் ஆன்மா, இன்ப அனுபவங்களை அடைகின்றது. இதனினும் சிறந்த பேறுண்டோ? திருக்கோயில்கள் வளர்த்த வாழ்வியற் கலைகள், மனித வாழ்வை ஈர்த்துப் பதப்படுத்தி இன்பம் அளித்து வாழ்வளிக்கின்றன.
கலை, நாகரிகம் அடைந்த சமுதாயத்தின் படைப்புக்களுள் ஒன்று. கலைத்துறை ஒன்றல்ல; பலப்பல. அறுபத்து நான்கு கலைகள் என்று கூறுவர். கலை, அனுபவத்தில் பிறந்து, அனுபவத்திற்கு உரியதாகி, அனுபவத்தை வளர்த்துச் செழுமைப்படுத்துவது. இந்தக் கலைத்துறையில் தமிழகம் வரலாற்றுக் காலந்தொட்டுப் புகழ் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது. சங்க காலத்தில் கலை உலகு திறம்பட வளர்ந்திருந்தது. நாளை, பொழுதுகளாகப் பிரித்து, அந்தந்தப் பொழுதுக்குரியவாறு பண்களையும் நிர்ணயித்திருந்தனர். இதுபோலவே வேறுவேறு நிலைகளில் பாடும் பாடல்களும் வழக்கத்திலிருந்தன. விளையாடும் காலத்தில் பாடுகின்ற பாட்டுக்கள் “கந்துகவரி” முதலியன. “மங்கல வாழ்த்துப் பாடல்”, “செருப்பறை”, “வள்ளைப்பாட்டு” முதலிய பாக்களும் சங்ககாலத்தில் பயின்றன. இவையன்றி, ஆறுகள், கடற்கரைகள் முதலியவற்றின் – இயற்கையின் எழிலின்பத்தில் ஈடுபட்டுப் பாடிய பாடல்கள் “ஆற்றுவரி”, “கானல்வரி” முதலியனவாகும். சங்க நூல்களில் “பரிபாடல்” என்பதும் ஒன்று. அது முற்றிலும் இசைப் பாட்டினாலேயே ஆனது.
கலை, கலைக்காகவே என்பது ஒரு கொள்கை இல்லை, கலை வாழ்க்கைக்காகவே என்பது தமிழர் கொள்கை அதிலும் உலகாயத வாழ்க்கைக்கன்றி, அருள் நலம் சார்ந்த சமய வாழ்க்கைக்குக் கலை, தொண்டு செய்ய வேண்டும் என்பது தமிழர் கொள்கை. அதனாலேயே தமிழகத் திருக் கோயில்களெல்லாம் இசைக் கலையைப் போற்றி வளர்த்தன. குரலிசை, வாத்திய இசை முதலியவை திருக்கோயில்களிலேயே வளர்ந்தன. “ஊசற்பாட்டு”, “திரு அம்மானை’ “திருப்பொற்சுண்ணம்” முதலிய இசைப் பாடல்கள்-பக்திப் பாடல்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து இருந்தமையே இதற்கு எடுத்துக்காட்டு.
இசைவிப்பது இசை! ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை இட்டு நிரப்பி இசைவிப்பது இசைதான். இசை, இறைவனை நினைந்து நினைந்து எண்ணுதற்குரிய எளிய சாதனமாகும். இன்னிசையோடு தமிழ்ப் பாடல் பாடியருளி இறைவனைத் தொழுத திருஞான சம்பந்த சுவாமிகளை, “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாராட்டுவார். சேக்கிழார் பெருமான் “கானத்தின் எழுபிறப்பு” என்று வாய் மணக்கச் சிறப்பித்துப் பாடுவார். திருஞான சம்பந்தரும் பண்ணொடு கலந்த தமிழில் யாழிசை கூட்டி வழிபாடு செய்து வந்தார். “தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என்றார் அப்பரடிகள். இறைவன் “பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளி”னான் என்று மாணிக்கவாசகர், கூறினார். இங்ஙனம் சமய உலகில் இசை ஏற்றம் பெற்றிருந்தது. திருமுறைகள் அனைத்தும் பண் சுமந்த பாடல்களே! இசைப் பாடல்களே! தமிழோடு இசை கலந்த இப்பாடல்களைக் கேட்க இறைவன் பெரிதும்விரும்பினான். “தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினான்” இறைவன். இத்தகைய திருமுறை இசைக்கலை, திருக்கோயில்களை மையமாகக் கொண்டே வளர்ந்தது. இறைவன் புகழ்பாடும் பண்ணிறந்த பாடல்களாகத் திருமுறைப் பாடல்கள் விளங்குகின்றன.
இறை நலம் சான்ற இன்பத் தமிழிசைப் பாடல்களாகத் திருமுறைப் பாடல்கள் இருந்தமையால் இறைவனே இத்திருப் பாடல்களுக்குச் சான்று செய்தான். “தனதுரை”யென ஒப்பம் தந்தான். அதனால் இத்திருப்பாடல்கள் ஐந்தொழில்களையும் நிகழ்த்தும் ஆற்றலுடையனவாய் இருந்தன. நீரையும் நெருப்பையும் வென்று விளங்கின.
“பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனை அன் றேவிக் கராங்கொண்ட-பாலன்
மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்
கரணம்போல் அல்லாமை காண்”
என்று திருக்களிற்றுப்படியார் சிறப்பித்துக் கூறும்.
தமிழர் தம் சமய வாழ்க்கையில் பண்ணிசையும் பரதக் கலையும் நிலையான இடம் பெற்றவை; பெருமை சேர்த்தவை. அதனால் பிற்காலத் தமிழரசர்கள் இத்திரு முறைப் பண்ணுக்கு நிறைந்த ஆக்கமளித்தனர். குறிப்பாக மாமன்னன் இராசராச சோழன் தமிழ்ப் பகைவரின் சூதிலிருந்து திருமுறைகளை மீட்டுத் தந்தான். தான் வணங்கிய இறைவனுக்குத் “தேவார தேவர்” என்று பெயர் சூட்டினான்; தமிழகத் திருக்கோயில்களில் திருமுறைப் பதிகம் விண்ணப்பிப்பார் பலரை நியமித்தான். திருமுறைகள் மனித நெஞ்சத்தை உருக்கும் தன்மையன. திருமுறைகள் ஓதப் பெறாத திருக்கோயில்கள் பண்டைய தமிழகத்தில் இருந்ததில்லை. மீண்டும் அதே நிலை உருவாக வேண்டும். தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் எல்லாம் திருமுறை விண்ணப்பிக்கும் பண்ணிசையாளர் நியமிக்கப் பெறுதல் வேண்டும். “அர்ச்சனை பாட்டேயாகும்” என்ற “உண்மை வழிபாட்டு நெறி” உயிர்ப்புப் பெற்றாக வேண்டும்.
இசை, தமிழோடு பிறந்தது. தமிழ், இசையோடு பிறந்தது. தமிழ் மக்கள் வாழ்வில் இசைக்கலை ஒன்றியிருந்தது. பிறந்த நாள்தொட்டு இறக்கும் நாள் வரையில், தமிழர்கள் வாழ்க்கையின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இசை இடம் பெற்றிருந்தது. தமிழிசை நெஞ்சத்தை ஈர்க்கும் ஆற்றலுடையது; இதயத்தைக் குழைக்கும் தன்மையுடையது. கற்றும் கேட்டும் மனம் அடங்காமல் அல்லற்படுவோர் பலர். பேய் மனம் எளிதில் அடங்காது; ஒடுங்காது; திருந்தாது. எண்ணில்லாத காலமாக, அலைந்து திரிந்த “ஊர் நாய்” போல் மனம் பழக்கவாசனையில் அகப்பட்டிருப்பது. ஆனால் அந்த மனத்தைத் தமிழிசை கேட்டுப் பழக்கப் படுத்தினால் எளிதில் கட்டுப்படும். நமது நாட்டு வழி, இசை இனபத்தில் இலயித்து நிற்றலே உய்வுக்கு வழி, உய்திக்கு வழி. இது மட்டுமா? தமிழோடு இசை வளர்ந்தது. திருக்கோயில்களில் தமிழிசை வளர்ந்தது. திருக்கோயில் தமிழிசையை வளர்த்தது. தமிழிசை இறைவன் புகழைப் போற்றி வளர்ந்தது; தமிழ் மக்களின் வாழ்நிலையை உயர்த்தியது. திருக்கோயிலிலேயே தமிழ்ச் சங்கத்தில் இசைபயிலும் இடம் தனியே இருந்தது. இந்த இடத்திற்குப் பெயர் “ஏழிசைச் சூழல்” என்பதாகும்.
“சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்
பலத்தும்,எம் சிந்தை யுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின்
ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ? அன்றி
ஏழிசைச் சூழல்புக்கோ?
இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே.”
என்று வரும் திருக்கோவையார்த் திருப்பாடல் ‘ஏழிசைச் சூழல்’ என்று குறிப்பது அறிக. தமிழிலக்கியங்களிற் பல, இசைக்கலை தழுவியன. இசை, உயிர்! பாடல், உடல்! “பண் என்னாம் பாடற்கு இயை பின்றேல்” என்று திருக்குறள் கூறும். திருக்கோயில் வளாகத்தைச் சுற்றித் தமிழிசை வளர்ந்தது. பண்ணொன்றைப் பாடிப் பரிசில் பெற்றனர் பலர். இறைவனைத் தூதாக நடக்கச் செய்தது, சுந்தரரின் இசைத்தமிழ். எலும்பைப் பெண்ணுருவாகக் கண்டது திருஞானசம்பந்தரின் இசைத்தமிழ். திருமறைக்காட்டுத் திருக்கதவும் திறந்தது அப்பரடிகளின் பண்ணிசைத் தமிழ். இங்ஙனம் தமிழிசை, திருக்கோயில்களைத் தழுவியிருந்த சமுதாயத்தின் துயரங்களைத் துடைத்து வாழ்வித்த வரலாறுகள் இவை.
இசை, மக்களின் வாழ்க்கையில் எழுச்சியும் ஏற்றமும் மிக்க உணர்வுகளைத் தந்து வழிநடத்தியது. திருக்கோயில்களில் வளர்ந்த பண்ணிசையில் கற்பனை வளமும் எடுப்பும் உண்டு. தருமபுரத்தில் பாடிய யாழ்மூரிப்பண் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு! இவ்வாறு தமிழினத்தின் வரலாற்றை உந்திச் செலுத்திய பெருமை திருமுறைப் பண்ணிசைக்கு உண்டு.
“ஏழிசையாய் இசைப் பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான் செய்யும்
துரிசுகளுக்கு உடனாகி
மாழை ஒண்கண் பரவையைத் தந்து
ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆருர் இறைவனையே!”
என்ற திறப்பாடலில் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனே “இசையின் பயன்” என்கிறார். இன்பு அன்பு அடைதலே இசையின் பயன். மாணிக்கவாசகரிடம், அவர்தம் பாட்டுடைப் பொருள் எது? – எனக் கேட்ட பொழுது, அம்பலத்திலாடும் ஆடல் வல்லானை மாணிக்கவாசகர் காட்டியதாக ஒரு வரலாறு உண்டு. ஆதலால் கலையின் பயன் சாதாரணக் களிப்பு மட்டுமன்று; களிப்பினும் உயர்ந்த இன்பமாகும்; திருவருளின்பத்தில் திளைத்தலாகும்; திருவருளின்பத்தில் ஒன்றுவதாகும்.
நமது புலன்கள் அடங்காத் தன்மையன. பொறிகள் மதம்பிடித்த களிறுகள் போல்வன. இவற்றை அடக்கி நெறிப்படுத்தும் ஆற்றல் திருமுறைப் பண்ணிசைக்கு உண்டு. அலையும் ஆன்மாவை, பெருமான் திருவடிப் போதில் கட்டிப்போடும் ஆற்றல் திருமுறை இசைக்கு உண்டு. இறைவனே ஆரூரரின் இசைத் தமிழில் ஒன்றிப்போய் அவன் தன் கடமையைக் கூட மறந்துவிட்டானே!
“…வன்தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி
உரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத்தாழ்த்தோம்
என்றார் அவரை நினைப்பிப்பார்”
என்று சேக்கிழார் பெருமான் இச்செய்தியை எடுத்துரைப்பார். ஆதலால், இசையின் பயன் கட்டறுத்தல்; அன்பில் தோய்தல்; திருவருள் நலத்தினைப் பெறுதல். ஓர் ஆன்மா திருக்கோயிலைத் தழுவியுள்ள கலையால், எப்படி வளர்கிறது, பயன் பெறுகிறது என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு.
கூத்தில் பிறந்து, இசையில் வளர்ந்து நிறைவு பெற்று விளங்குவது இயற்றமிழ். இயற்கை எப்பொழுதும் இன்பமாக இருப்பது. பதிகங்கள், இசைப்பாக்கள், பரிபாடல் முதலியன கூத்தும் இசையும் முதிர்ந்த இயற்றமிழாகும். இயற்றமிழ், கலை நிறைந்த வடிவத்தில் உணர்வைத் தொடுவது; செழுமைப்படுத்துவது. இயற்றமிழ் இதயத்திற்கு இதமளிப்பது களிப்புத் தருவது. இயற்றமிழே முக்கள் முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக விளங்குவது. அதனால் இயற்றமிழ் விரித்துரைக்கும் நிகழ்வுகள் திருக்கோயில்தோறும் நிகழ்ந்துள்ளன; ஆங்கு பட்டிமண்டபங்கள் நடந்துள்ளன. இறைவனும் இறைவியும் இயற்றமிழ் ஆராயும் தமிழ்ச் சங்கங்களில் வந்தமர்ந்தனர்; தமிழை ஆய்ந்தனர்; இறைவன் “நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறினான்” பாடலும் இயற்றினான். இறைவன், நாட்டு மக்களின் வாழ்க்கை நயந்தினிது நடைபெற அகப்பொருள் இலக்கணமும் அருளிச் செய்தனன். எனவே, இயற்கையோடிசைந்தது வாழ்க்கை வாழ்க்கையோடு இசைந்தது சமயம். சமயமும் கலையும் ஒன்றையொன்று தழுவியன. எல்லாம் மானுட குலத்தை வளப்படுத்தவேயாம்.
சமய வாழ்க்கையின் மணிமுடியான நிலை உள்ளக் கிழியில் உருவெழுதுதல்; உற்று நோக்குதல்.
“உயிரா வணமிருந்து உற்றுநோக்கி
உள்ளக் கிழியின் உருவெழுதி
உயிராவணம் செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி
அமரர் நா டாளாதே ஆரு ராண்ட
அயிரா வணமேயென் னம்மா னேநின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே!”
என்றருளிச் செய்வார், அப்பரடிகள். ஞானக் காட்சியில் ஒன்றைக் காணுதல் அரிய தவத்தின் பயன். அங்ஙனம் கண்ட ஒன்றினைத் தொடர்ந்து நினைந்து நினைந்து மகிழ, உள்ளக் கிழியில் உருவெழுதுதல் சமயக் கலையின் – ஓவியக் கலையின் – சிற்பக் கலையின் தாய்மை நிலை. ஓர் உருவமும் ஒரு நாமமும் இல்லாதானை, உணர்வரிய மெய்ஞ்ஞானத்தில் கண்ட காட்சியே முதல்! அக்காட்சியின் அனுபவமே வழிபாடு! வழிபாட்டினை அனைவரும் அனுபவித்து மகிழவே சிற்பம், திருவுருவ வழிபாடு! மலையெல்லாம் குகை குகையெல்லாம் திருக்கோயில்! மனம், வாக்குக் கடந்த பரம்பொருள், பேசும் பொற் சித்திரமாக, அருளும் திருமேனியாக எழுந்தருளியுள்ள காட்சி! தமிழகத்தில் உள்ள கோயில்கள் சிற்பக் களஞ்சியங்கள்! கல்லுக்கு உயிர் கொடுத்துப் பேசவைக்கும் கலையில் தமிழகச் சிற்பக் கலைஞர்கள் விஞ்சிய புகழுடையவர்கள். ஊழி தோறும் சாதாரண மக்கள் கூடக் கடவுளைக் கண்டு மகிழத்தக்க வகையில் சிற்பத்தில் சிந்தைக்கினிய மாட்சிமையைத் தந்தமைக்குக் கைம்மாறு ஏது? தமிழகத் திருக்கோயில்கள் இயல்பான – வாழ்க்கையோடியைந்த அனைத்து உணர்வுகளும் ததும்பும் சிற்பங்களைக் கொண்டு அழகுற விளங்குகின்றன. தமிழகத் திருக்கோயில்களின் சிற்பங்கள் கண்ணுக்கு விருந்து அளிப்பன; சிந்தைக்குக் களிப்பு நல்குவன: எண்ணுதற்குக் கற்பனைக் களஞ்சியமாய் விளங்குவன: இதனினும் உயிர்ப்புள்ள கலை வேறு ஏது?
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 80 காரணங்களைச் சிவன் அபிநயித்துக் காட்டுவதாகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பரதமுனி இயற்றிய நாட்டிய நூலில் கண்டுள்ள காரணங்களோடு இவை ஒத்திருக்கின்றன.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் போலவே – ஆனால், தந்தை, மகன் என்ற மரபுக்கேற்ப, உயரத்திலும் அளவிலும் சற்றுச் சிறியதாகக் கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் கட்டப் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள சிற்பங்களும் உயர்ந்து விளங்குபவை. இங்குள்ள சிற்பங்கள் உயிர்ப்புள்ள உருவங்களாக – நம்முடன் பேசுவன போன்று அமைந்துள்ளவை. கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலில் இறைவன், சண்டேசுவர நாயனாருக்கு சண்டீசபதம் அருளும் காட்சி மிகச் சிறந்த அழகிய சிற்பமாகச் செதுக்கப் பெற்றுள்ளது. அடுத்து நம்முடைய கவனத்தைக் கவரும் சிறந்த சிற்பங்கள் உடைய திருக்கோயில், தாராசுரத்திலுள்ள இராசராசேசுவரம் என்ற திருக்கோயில், இந்தத் திருக்கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு முழுவதும் சிற்பமாகச் செதுக்கப் பெற்றுள்ள காட்சி, காண்பார் உள்ளத்தைக் கவரும் காட்சி. இங்ஙனம் தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் அமைந்துள்ள சிற்பங்கள், கலைகளின் கருவூலமாக மட்டுமல்லாமல், தமிழக வரலாற்றைப் பாதுகாத்து, அந்தப் பழமையான வரலாற்றுச் செய்திகளைப் புத்துணர்வோடு மக்கள் அனுபவிக்கத்தக்க வகையில் படைத்துத் தந்துள்ள பெருமையை என்னென்று புகழ்வது!
தமிழகத் திருக்கோயிற் சிற்பங்கள் பல திறத்தன. இச்சிற்பங்களைச் சாதாரண உருவங்களாகக் கருதுதல் கூடாது. கலையுணர்வில் ஆவேசித்து நின்ற ஒரு கலைஞன், அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்னை மறந்து இந்தச் சிற்பங்களைச் செதுக்குகின்றான். சிற்பக் கலைஞன் வாழும் உலகம் வேறு; அவனுடைய மனோ நிலையும் வேறு. சாதாரணமாக-சராசரி வாழ்க்கைத் தரத்தைக் கூட உயர்த்திக் கொள்ளாதவர்கள் இத்தகைய சிற்பங்களை அனுபவிக்கவும் விமர்சிக்கவும் இயலாது. பொதுவாகச் சமய உலகில் ஆண், பெண் என்ற வேறுபாட்டின் காரணமாக உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை; கவர்ச்சியும் இல்லை. காதல் வாழ்க்கை தவிர்க்க இயலாத ஓர் இயற்கை நியதி. எனவே, இவ்வகையான சிற்பங்களில் பெண்பால் உருவங்களைப் பார்க்கும்பொழுது சிலர் அதனைக் கொச்சையானது என்று நினைக்கின்றனர், பேசுகின்றனர். அந்த உருவத்தைச் செதுக்கிய சிற்பி, கலை உபாசனா முறையில் பால் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நின்றே வடித்துக் கொடுத்துள்ளான். அந்தக் கலைஞனின் உணர்வுப் போக்கிலேயே அவற்றை அனுபவிக்க வேண்டும்.
சிற்பக் கலையில் வளர்ந்து மகிழ்ந்த செந்தமிழ் மக்கள், வானவில்லின் வண்ணங்களில் திளைத்திருப்பர் போலும்! வண்ணப்பூச்சுக் கலையில் தமிழர்கள் வளர்ச்சி பெற்று, ஓவியக் கலையினைக் கண்டனர். “ஓவத்தன்ன வினைபுனை நல்இல்” என்று அகநானூறும், “ஓவுக் கண்டன்ன இல்” என்று நற்றிணையும் கூறும். ஆதலால் சங்க காலத்திலேயே ஓவியக்கலை தமிழகத்தில் சிறந்திருந்தது என்பதை அறியலாம். ஓவியமும் நுண்கலைகள் வரிசையைச் சேர்ந்தது. திருக்கோயில் முழுதும் தூய்மையாகவும் அழகாகவும் எடுப்பாகவும் விளங்க வண்ணப்பூச்சு செய்யப் பெற்றது. தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் உட்புறச் சுவரில் நாயன்மார்கள் வரலாறு, ஓவியமாய் வரையப் பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றை விரிவாகச் சித்திரித்துக் காட்டும் வண்ண ஓவியங்கள் மிகச்சிறப்பாகவும் அழகாகவும் அமைந்துள்ளன. சிவன்-பார்வதி முன்னிலையில் தேவமாதர்கள் நடனமாடு கின்றனர். இரண்டு நாயன்மார்களும் அதைக் கண்டு களித்த வண்ணம் உள்ளனர். இந்தத் திருக்கோயிலில் உள்ள ஓவியங்களிலெல்லாம் சிறந்த ஓவியம் திரிபுராந்தகச் சிவன் கதையைச் சித்திரித்துக் காட்டும் ஓவியமே! திரிபுராந்தகச் சிவனுருவத்தில் ரௌத்திரம், வீரம், கருணை முதலிய மெய்ப்பாடுகள் அற்புதமாகத் திட்டப்பெற்றுள்ளன. இந்த ஓவியங்களுக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கும் வண்ணக்கலவை மிகமிக உயர்ந்தது. இன்றும் இந்த ஓவியங்கள் உயிரும் அழகும் நிரம்பியவையாக விளங்குகின்றன. ஓவியத்திற் சிறந்து விளங்கும் இந்தத் திருவுருவங்கள் பக்தர்களிடத்தில் சிறந்த பத்திமை உணர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்பது வெள்ளிடைமலை. ஓவியத்திற்கும் ஆடற் கலைக்கும் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் கருவறையைச் சார்ந்த அந்த உட்சுவரே தாயேடு! சித்தன்னவாசல் வண்ண ஓவியங்களும் நினைவு கூரத்தக்கவை. தமிழகத்தில் பல்வேறு. திருக்கோயில்களில் அருளார்ந்த நாயன்மார்கள் மற்றும் தல புராண வரலாறுகள் சிறந்த வண்ண ஓவியங்களாகத் தீட்டப் பெற்றுள்ளன. அந்த ஒவியங்களின் வண்ணப் பூச்சுகள் இன்றளவும் மாறாமல் ஒளிமயமாய் விளங்குவன. தமிழகத்தின் திருக்கோயில்களைச் சார்ந்து வளர்ந்த ஓவியக் கலையின் சிறப்புக்குச் சான்று. இந்த ஒவியங்களெல்லாம் நம்மனோர் வாழ்க்கையை ஓவியமாய் விளங்கச் செய்வதற்குத் துணையாய் அமைவன.
உயிர், உடலோடு இயைந்து இயங்குகிறது. உடம்பு உயிர் கூட்டு வாழ்க்கையே வாழ்க்கை இந்த வாழ்க்கை இடையீடின்றி இயங்குவதற்கு உயிர் தேவை. அதனாலேயே “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று கூறினர். திருக்கோயிலைச் சார்ந்து நல்ல சமையற்கலையும் உணவுப் பழக்கமும் வளர்ந்தன. நல்ல வண்ணம் நலமுடன் வாழ்வதற்கு, எவ்வகை உணவு ஏற்றது. என்பதெல்லாம் கூட திருக்கோயில் திருவமுதுப் படையல் மூலம் நாடு கற்றுக் கொள்ள முடிந்தது. இன்னின்ன பொழுதில் இன்னின்ன உணவு என்றெல்லாம்கூட வரையறை செய்தனர். இன்று, புரதச்சத்து அடங்கிய பயறு வகைகளே உணவில் இன்றியமையாதவை, உடல் ஆற்றலுக்குத் துணை செய்பவை என்கின்றனர். நம்முடைய திருக்கோயில்களில் பயறு வகைகளில் ஒன்றான சுண்டல், திருவமுதுப்படையலில் முக்கிய இடம் பெற்றதை எண்ணுக, நலமான வாழ்க்கைக்குப் பழங்கள் உண்ணும் பழக்கம் தேவை. திருக்கோயிற் பூசை பழமின்றி நிகழாது. இங்ஙனம் உடலில் உயிர் பேணும் திறனைப் பெறுதற்குரிய கலையாகிய சமையற் கலைக்கும் சமயமே துணை செய்தது; வழிகாட்டியது. திருக்கோயில் திருவமுதுப் படையல் நெறிமுறைப்படி, ஒருவன் உண்டு வருவானாகில் அவன் நெடிய நாள் வாழ்வான்; நோயின்றி வாழ்வான்!
கூடி வாழ்தல் ஒரு கலை. கூடி வாழ்தலுக்கு ஒரு மையம் வேண்டும். பழந்தமிழர் வாழ்க்கையின் மையமாகத் திருக்கோயிலே விளங்கியது. நடுவூருள் திருக்கோயில்; நான்கு புறமும் மக்கள் சூழ்ந்து வாழும் ஊர் என்று நம்முடைய நாட்டில் ஊர்கள் அமைந்தன. இதுவே திருக்கோயிலைச் சார்ந்து ஊர்கள் இயங்கின என்பதற்குச் சான்று. தமிழ் மக்களின் சமய மரபுப்படி கடவுள், வாழ்த்துப் பொருள் மட்டுமின்றி வாழ்வுப் பொருளாகவும் விளங்குபவர். அன்றைய தமிழ் மக்கள் வாழ்க்கையின் நன்மை, தீமை ஆகிய அனைத்தையும் திருக்கோயிலை மையமாகக் கொண்டே செய்தனர். திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனிடம் விண்ணப்பித்து, அவன் திருவுளம் அறிந்தே செய்தனர். சுந்தரர் திருமணம், திருக்கோயிலின் சூழலில் இறைவனே முன்னின்று செய்துவைக்கப் பெற்றது ஓர்ந்தறிக. ஆலயச் சுற்றிற்குள் அழுத குழந்தைக்குப் பால் கிடைத்தது என்பதைத் திருஞான சம்பந்தர் வரலாற்றால் உயத்துணர்க! அப்பரடிகள் குடரோடு துடக்கி முடக்கியிட்ட சூலை நோயிலிருந்து திருவதிகைத் திருக்கோயிற் சூழலில், திருவதிகைத் தலைவனாலேயே மீட்கப் பெற்றார் என்பதறிக! கொற்றாளின்றித் தவித்த ஏழை, பிட்டு வாணிச்சிக்கு ஆலவாயண்ணல் கொற்றாளாக வந்து ஏவல் செய்த வரலாறு கற்றுத் தரும் பாடம் என்ன? தாயாக வந்து மகப்பேறு பார்த்ததும் தயாபரன் தானே! மாமனாக வந்து வழக்குரைத்த மாட்சிமைமிக்க வரலாறு என்றும் மறத்தற்கியலாதது. இவையெல்லாம் நமது சமுதாய வாழ்க்கை திருக்கோயிலை மையமாகக் கொண்டு நிகழ்ந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள்! இத்தகைய நடைமுறைகளில் திருக்கோயில்கள் இயங்கிய போதும், நமது சமுதாய மக்கள் வளர்ந்த போதும் வாழ்க்கை இன்பமாக இருந்தது. திருக்கோயில்களும் உயிர்ப்புடன் அருள் நிலையங்களாக விளங்கின. இன்று, அவை பண்டைய மாட்சியுடன் விளங்கவில்லை என்பது வெளிப்படையான – கசப்பான உண்மை. இந்த நிலை மாறினால் தமிழகம் புத்துயிர் பெறும்; புதிய வரலாறு படைக்கும்; கலைகளும் செழித்து வளரும்.
தாயாகிக் குழந்தை வளர்த்தல் ஒரு நுண்ணிய கலை. இன்று தாயார் பலர் குழந்தைகளை முறையாக வளர்ப்பதில்லை. ஒரு தாய் எங்ஙனம் பாலூட்டி, எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்குச் சீர்காழியில் எழுந்தருளியுள்ள திருநிலைநாயகி ஓர் எடுத்துக்காட்டாவாள். குழந்தை அழுகிறது. அவள் தாய்! நான்கு சுவர்களுக்கிடையில் இருக்கும் தாயல்லள் ! அண்டத்திற்கு எல்லாம் தாய் ! அதனால் யாருடைய குழந்தை, எந்தக் குழந்தை என்ற வினாவிற்கு இடமில்லை. பிறந்த குழந்தைகளெல்லாம் பாலுண்டு வளர வேண்டுமல்லவா? அவள் அருளின் வடிவு! ஆதலால் பாலூட்டுகிறாள். சாதாரணமாகப் பாலூட்டினால் குழந்தையின் ஊனுடல் வளரும்; உயிர் வளராது. ஆதலால், திருஞானத்தையும் பாலிற் குழைத்தூட்டினாள்! இது தாய்க் குலத்திற்கோர் எடுத்துக்காட்டு அவர்கள் முறையாகக் குழந்தைகளை வளர்க்க வேண்டும்; பாலூட்டி வளர்க்க வேண்டும். உடன் சிறந்த அறிவையும் தந்து வளர்க்க வேண்டும். தாய்மைக் கலைப் பயிற்சிக் கூடம் சீகாழி. அதன் பேராசிரியை திருநிலை நாயகி, முதல்வர் பிரமபுரீச்சுரர்; அங்கு வளர்ந்த குழந்தை திருஞான சம்பந்தர். திருக்கோயில் வழங்கும் உயிர்ப்புள்ள வாழ்வியல் கலைக்கு இதைவிடச் சிறந்த சான்று வேறு வேண்டுமோ?
மானுட வாழ்க்கை அகனமர்ந்த காதலில் மலர்வது மகிழ்வது. இறைவனே உமையோடு காதல்புரிந்து பெண்பால் உகந்து வாழ்கின்றான்.
“தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி
பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பாலி யோகெய்தி விடுவர்காண் சாழலோ”
என்பார் மாணிக்கவாசகர். ஆதலால் காதலின் அருமை திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தனக்குத் தெரிகிறது. ஆதலால், தான் விரும்பிய ஒருவரைச் செட்டிப் பெண் மணந்து கொள்ள, திருமருகலுறை எம் தலைவன், திருஞானசம்பந்தர் வாயிலாகத் துணை செய்த அருமைப்பாடு எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. நற்றமிழ்ச் சுந்தரர் காதல் நிறைவுறுவதற்காகப் பரவையார் பாலும், சங்கிலியார் பாலும் இறைவன் நடந்த தூது மண்ணகம் மணக்கும் வரலாறு அன்றோ! காதல் இயல்பில் அரும்பி மலர்வது. அதையும் யாராவது செயற்கையாக்க விரும்பினால் கண்ணுதற் பெருமானின் நெற்றிக்கண் கனல் கக்கும். இதற்குச் சான்று. காமனை எரித்தது. ஆதலால் ஓரறிவுயிரிலிருந்து ஆறறிவுயிர் வரை கலந்து மகிழும் காதலுக்கும் திருக்கோயிலே மையம்.
வாழ்வு, வாழும் தன்மையுடையது. ஒரோவழி இயற்கையின் காரணமாக வாழ்விக்க நேரிடலாம். உண்ணும் உணவுக்கும் நெருக்கடி ஏற்படலாம். அதைத்தான் பஞ்சம் என்பது. பஞ்சம் என்பது மனித உலகத்திற்குத் தீமை செய்வது; பண்பாட்டைக் கெடுப்பது; வாழ்வை அழிப்பது. ஏழாம் நூற்றாண்டில் திருவிழிமிழலை வட்டத்தில் பஞ்சம் வந்து விட்டது. எங்கும் வறட்சி! வறட்சியினால் ஏற்பட்ட துயர் தணிக்கத் திருவிழிமிழலையில் உறையும் எந்தை ஈசனே முன்வந்தான்! வறட்சித் துயர் தணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருத்தொண்டர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு நாளும் பொற்காசு – வறட்சி யொழிப்புக்கு மான்யம் தந்தருளினன்; திருக்கை வழக்கம் தந்தருளினன். வறட்சித் துன்பம் தெரியாமல் பலர் உண்டு மகிழ்ந்தனர். ஆதலால், துன்பம் வந்துற்ற பொழுதும் தொழுதகைத் துன்பம் துடைக்கும் கலையிலும் திருக்கோயிலே முன்னின்றது. வழக்குகள் வாரா வாழ்க்கையே உத்தமமான வாழ்க்கை. ஆனால், வழக்குகள் வாரா வாழ்க்கை வையகத்தில் அமைவது அரிது. ஒரோவழி வாழ்க்கையில் வழக்குகள் வந்துற்றால் என்ன செய்வது? வழக்கைத் தாமே பேசிப் பேசி வழக்கைக் காழ்ப்பாக மாற்றக்கூடாது. உடனடியாக வழக்கை நடுவர் மன்றத்திற்குக் கொண்டு செல்லவேண்டும். இதுவே வழக்கு வளராமல் தடுக்கும் முறை வழக்கைப் பகையாக வளர்க்காமல் தடுத்து நிறுத்தும் உபாயம்! பண்டைய தமிழ் மக்களுக்கு முறை மன்றம் எங்கிருந்தது: திருக்கோயிலிலிருந்த ஊர்ச்சபைதான் முறை மன்றம். நற்றமிழ்ச் சுந்தரர் வழக்கு திருவெண்ணெய்நல்லூர்த் திருக்கோயிலில் இருந்த ஊர்ச் சபையிலேயே விசாரிக்கப் பெற்றது. ஆதலால், வழக்கை வளராது தடுத்து, உறவை வளர்க்கும் கலையும் திருக்கோயிலைச் சேர்ந்தே வளர்ந்தது.
வாழ்க்கையில் சிறப்புற்று விளங்க அடக்கம் தேவை. அடக்கத்துடன் வாழ்தல் ஒரு நுண்ணிய கலை. முற்றிய கதிர் மணிகள் தலை சாய்ந்து கிடக்கும். தாழ்வெனும் தன்மை பூண்டொழுகல் சைவத்தின் பண்பு. எந்தச் சூழ்நிலையிலும் அடக்கம் தவறுதல் கூடாது. சான்றோர்க்கு வணங்கி வாழ்தலைத் தவிர்க்கலாகாது. நற்றமிழ் நாவலூரர் திருவாரூரில், எந்தை ஈசனை வணங்கும் விரைவுணர்ச்சியில், தேவாசிரிய மண்டபத்தில் தங்கியிருந்த சிவனடியார்களை வணங்காமல் சென்று விடுகிறார். வணங்கக் கூடாது என்பது சுந்தரரின் எண்ணமன்று. பரபரப்பான விரைவு உணர்ச்சி! ஆனால், திருவாரூர்த் தியாகேசன் ஆரூரக்கு இதனை நயம்பட எடுத்து உணர்த்துகின்றார். அதன்பின் ஒரு தடவை வணங்க மறந்த ஆரூரர், பலதடவை “அடியேன், அடியேன்” என்று பன்னிப்பன்னிக் கூறி வணங்குகின்றார். வெற்றி பொருந்திய வாழ்க்கை அடக்கத்தில் பிறக்கிறது. புகழ் பொருந்திய வாழ்க்கை அடக்கத்தினாலேயே கிடைக்கும். அடக்கத்தோடு தொடர்பில்லாத புகழ், வெற்றி ஆகியன வெறும் ஆகாச வாணமேயாம். நிலைத்த பயன் தாரா.
“அருளு பெருஞ் சூலையினால்
ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும் உணர்வில்லாத
சிறுமையேன் யான்”
என்று அப்பரடிகள் கூறிக் கொண்டதே அவரை ஆளுடைய அரசு ஆக்கிற்று.
நட்பு ஒரு கலை! பழகிய நட்பைப் பெருகும் வண்ணம் வளர்த்த்துக் கொள்ளுதலும் ஒரு கலை. இங்ஙனம் நட்பில் பயின்று வளர்தல் ஒரு சிறந்த வாழ்வியல் அறம். ஒருவர் பிறிதொருவர்க்கு நட்பை உருவாக்கித் தருதலும் ஒரு கலை. ஒரோ வழி நட்பிற்பிரிவு வரும்பொழுது, பிரிவினை நீக்கி நட்பை இசைத்து வைத்தல் ஒரு பண்பு. மானிடத்தின் வாழ்வியலோடிசைத்த நம் கடவுள், நற்றமிழ் ஆரூரர்க்குச் சேரமான் பெருமாள் நாயனாரை நட்பாக அறிமுகம் செய்வித்து, நட்பு ஏற்படுத்தித் தந்தது ஓர் உயரிய கலை: பண்பாடு. சுந்தரருக்காகத் திருவாரூர் நெடுவிதியில் பரவையாரிடம் தூதாக நடந்து செல்கிறார் சிவபெருமான். சிவபெருமானிடம் மாறாத பக்தி பூண்ட ஏயர்கோன் கலிக்காமருக்கு இது பிடிக்கவில்லை. அவர் பார்வையில், பெண்களிடம் சமாதானம் செய்வதற்குக் கடவுளைத் தூதராக அனுப்பியது தகாதது என்று நினைக்கிறார். சுந்தரர் மீது ஏயர்கோனுக்குக் கோபம் பிறக்கிறது. சிவபெருமான் செய்யாதன எல்லாம் செய்து, சுந்தரருக்கும் ஏயர்கோன் கலிக்காமருக்கும் இடையே உறவை உண்டாக்குகிறார். இது உயிர்ப்புள்ள வாழ்வுத் தொண்டு.
திருவொற்றியூரில் சுந்தரர் மனம் சங்கிலியார் பால் சார்கிறது. வழக்கம் போல சுந்தரர் இறைவனை அணுகினார். நட்புக் கருதிச் சிவபெருமான் அதனை மறுத்தற்கியலாது, சங்கிலியாரிடம் தூது செல்கிறார். கடனுக்காகவன்றி, உணர்வு பூர்வமாகச் செல்கிறார். சங்கிலிக்கு மணாளனாக வாய்க்கப் போகும் ஆரூரரைப் பற்றி மிக அழகாக-உயர்வாக அறிமுகம் செய்கிறார். மனிதர்கள் தங்களுடைய நண்பர்களை வாய்ப்பேற்படும் பொழுது எவ்வளவு கவனமாகவும், எவ்வளவு உயர்வாகவும் பிறர்க்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டுமென்பதற்கு இந்த அறிமுகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
“சாருந் தவத்துச் சங்கிலிகேள்
சால வென்பா லன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட
தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரு மறிய யானாள
உரியான் உன்னை யெனையிரந்தான்
வார்கொண் முலையாய் நீயவனை
மணத்தா லணைவாய் மகிழ்ந்தென்றார்”
(பெ.பு. ஏயர்கோன் – 2839)
என்பார் சேக்கிழார் பெருமான். இதில் வியப்பு என்னவென்றால், சங்கிலியாரிடத்தில் இறைவன், சுந்தரர் பரவையாரைத் திருமணம் செய்திருப்பதைக் கூறவில்லை. நன்னெறியும் நட்பு நெறியும் ஒரோ ஒழி முரண்படுவதுண்டு. அப்பொழுதெல்லாம் நன்னெறியைவிட நட்பு நெறிக்கே முன்னுரிமை தர வேண்டும். அதனால், நன்னெறியைத் துறத்தல் என்பது பொருளன்று நட்புறவில் உடன்போய் பின் நன்னெறியில் நிறுத்தலே நட்பின் பாங்கு. இக்காரணத்தால் நன்னெறியை முன்னிட்டு நட்புநெறியைப் பாதிக்க விடலாகாது. சுந்தரரை மணக்கச் சங்கிலியார் இசைகின்றார். சங்கிலியார் சுந்தரர் மனையறம் சில ஆண்டுகளேனும் நடைபெற வேண்டுமே என்று கருதித் திருவுளம் கொண்டார். ஆதலால், திருவொற்றியூரிலிருந்து ‘பிரிந்து செல்வதில்லை’ என்று சுந்தரரிடம் உறுதிமொழி கேட்கும்படி சங்கிலியாருக்குச் சொல்லிக் கொடுக்கிறார். இளமை நலம் கொழிக்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் இறைவனுக்குள்ள திருவருள் என்னே! இவையெல்லாம் வாழ்வியலின் நுண்ணிய கலையாகும்.
சுந்தரர் தம்மிடம் பெரிதும் அன்பு பூண்டவராயினும், சுந்தரர்-சங்கிலியார் இருவரது உரிமைகளில் இறைவன் சங்கிலியாரின் உரிமைக்கே பெரிதும் துணையாக நிற்கின்றார். சங்கிலியாரைப் பிரியேன். அதாவது திருவொற்றியூரை விட்டுப்பிரியேன் என்ற உறுதிமொழியைச் சுந்தரர் கொடுக்க முயற்சி எடுக்காமலிருந்தார். சுந்தரரின் அந்த முயற்சியின்மை யெல்லாம் சங்கிலியார்பால் நின்று, பெருமானே முறியடிக்கிறார். மெலியார்க்கு அரண்செய்து நிற்றலே சமுதாய அறம் என்ற வாழ்வியற் கலையை இந்நிகழ்ச்சி தெள்ளிதின் விளக்குகிறது.
நோயின்றி வாழ்தல் ஒரு கலை, உடம்பு ஒப்பற்ற கருவி. “உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே” என்பார் திருமூலர். உடலுக்கு இருவகையான நோய். ஒன்று உடலினைப் பாதுகாக்கும் வகையிலும் வளர்க்கும் வகையிலும் ஏற்படும் பசி என்னும் நோய், பிறிதொன்று உடலை நலிவுறச் செய்யும் நோய். இது உடற்கழிவுகள் நீங்காமையினாலும் சுற்றுப்புறச் சூழ்நிலையின் கேட்டினாலும் பொருந்தாப்பழக்க வழக்கங்களினாலும் வரும் நோய். இந்நோய்க்கு மருந்து வேண்டும். இறைவன் மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி நின்றருள் செய்கின்றான். புள்ளிருக்கு வேளுர் என்ற திருத்தலத்தில் அவன் வைத்திய நாதனாகவே எழுந்தருளியிருக்கின்றான். ஆதலால், வாழ்க்கையில் உடல் நலம் பேனும் வகையிலும் மருத்துவ வகையிலும் திருக்கோயில்களே முன்னிற்கின்றன.
புள்ளிருக்குவேளூர்த் திருத்தலத்தில் திருச்சாந்துருண்டை என ஒன்றிருக்கிறது. இந்த உருண்டையைத் தொடர்ந்து 45 நாட்கள் உண்டு வந்தால் தீராத வயிற்றுவலியும் தீர்கிறது. இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள செல்வமுத்துக் குமரனுக்கு இரவிற் சாத்தும் சந்தனக் காப்பு மருத்துவத் தன்மையுடையது. இச்சந்தனக் குழம்பை நாள்தோறும் பருகி வந்தால் நோய்கள் நீங்கும், ஆற்றல் பெருகும்; அழகு வளரும். திருக்கோயில்கள் என்றாலே திருத்தல மரங்கள் உண்டு. இப்புண்ணியத் தலமரங்கள் மருந்து மரங்களேயாம். வேம்பு, நாவல், வில்வம், திருஆத்தி ஆகியன சிறந்த தலமரங்களாகும். இவைகளின் மருத்துவத் தன்மை அளப்பரியது. நாள்தோறும் ஐந்து வில்வம் தின்று வந்தால் உடல் பொன்னிற மாகும்; இரத்தம் சுத்தியாகும். முன்கூறிய வில்வம், நாவல், வேம்பு ஆகிய தழைகளில் ஐந்தைந்து எடுத்தரைத்து, கெட்டி மோரில் கலக்கி, நாள்தோறும் உண்டு வந்தால் நீரிழிவு நோய் வரவே வராது. வந்திருந்தாலும் போம்.
எல்லாவற்றையும் கடந்து மேவி வாழ்ந்து வரும் பொழுதில் சிலருக்கு நாள், கோள்களில் அச்சம். நாள் கோள்களை நினைந்து அஞ்சுதல் பேதைமை. அறிவறிந்த ஆள்வினையுடையார்க்கு நாளும் கோளும் நன்மையே செய்யும். ஈசன் அடியார்க்கு என்றும் இன்பமே செய்யும். ஆயினும், அஞ்சிச் சாவாரை என்ன செய்ய முடியும்? ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், “வேயுறு தோளிபங்கன்” என்று பதிகம் அருளிச் செய்து, அதில் நாளும் கோளும் நல்லவையே என்றருளிச் செய்துள்ளார். ஆயினும் இன்னமும் அஞ்சுவார் பலருண்டு. அவர்தம் அச்சத்தை நீக்கும் வகையில் திருநள்ளாற்றில் நளனைப் பிடித்திருந்த சனி நீங்கியதாக ஒரு வரலாற்று நிகழ்ச்சி உண்டு. இதுவும் ஒரு கலை.
திருக்கோயில் அமைப்பே ஒரு கலையின் வடிவம். பொறியியற் கலைச் செறிவு நிறைந்த கோயிலின் கட்டுமானக் கலை, ஒரு சிறந்த வாழ்வியலை உணர்த்துவது. ஒருவர் வாழ்க்கையின் இளமைக் காலத்தின் அடிப்படை, கோபுரத்தின் அடித்தளம்போல அகலமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்கால வாழ்க்கை சிறந்து, கோபுரம் என உயரமுடியும். தமிழகத்தின் திருக்கோயில்கள் அடிப்பாகத்தில் அகன்றும், உயர உயர அகலம் குறைந்தும் இருப்பதைக் காண்க. அடிப்படையை அகலமாகப் போடுக! உம் வாழ்க்கை உயரும்!
இங்ஙனம் திருக்கோயிலின் உயரத்தை உயர்த்திக் கட்டும் முயற்சி, திருச்சி மாவட்டம் சீனிவாச நல்லூரிலுள்ள குரங்கநாதர் ஆலயத்தின் கட்டுமானத்திலேயே கால் கொண்டது. பின் முதலாம் இராசராசன் காலத்திலும் அதற்குப் பின்னும் இந்த முயற்சி பரவலாக வளர்ந்தது. முதலாம் இராசராசன் எடுத்த தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் மிகப் பெரிய திருக்கோயில். இத்திருக் கோயிலில்தான் ஒரே கல்லில் செய்யப்பெற்ற மிகப் பெரிய நந்தி இருக்கிறது. இத்திருக்கோயில் தோற்றத்தைத் தொடர்ந்து நான்கு திசைகளிலும் இராசகோபுரங்கள் கட்டும் புதிய முயற்சி மிகுந்தது.
பெரும்பான்மையான திருக்கோயில்கள் மூன்று சுற்றுக்களுடன் அமைந்தவை. இந்த மூன்று சுற்றும் மும்மூன்று முறை வலம் வந்தே வணங்க வேண்டும் என்பது வழிபாட்டு முறை. இங்ஙனம் மும்மூன்று சுற்று வலம் வரும் பொழுது ஏற்படும் உடற்பயிற்சி; மூச்சுப் பயிற்சி முதலியன உடல் நலத்திற்கு உரியன. திருக்கோயிலில் அமைத்து வணங்கும் திருவுருவங்கள் அனைத்தும் வாழ்வியற் கலையைச் சார்ந்த அறிவியலின் வெளிப்பாடேயாம். ஒவ்வொரு திருக்கோயில் கருவறையிலும் எழுந்தருளியிருப்பது சிவலிங்கத் திருமேனி. இதற்குப் பல்வேறு பொருள் காணலாம். விரிவஞ்சி ஒன்றிரண்டு காட்டுகிறோம். உலகே இறைவன்; இறைவனே உலகு. இந்த உலகு உருண்டை என்பது பண்டைத் தமிழரின் தெளிவான முடிவு. “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என்ற அற நூல்கள் கூறும். உலகையே இறைவனாக நினைந்து வழிபடத் தொடங்கிய காலத்தில், உலக வடிவத்தில் பாணமும் அதனைத் தாங்கி நிற்கும் ஆற்றலாக ஆவுடையும் என்று கருதி வழிபாடு செய்யப் பெற்றது. தொன்மைக்கால மக்கள் தீயினையே வழிபட்டு வந்திருக்கின்றனர். “சோதியே, சுடரே! சூழொளி விளக்கே!” என்று திருவாசகம் கூறும். கடவுட் காட்சியில் முதற்காட்சி சோதிதான்! எரிகின்ற எந்தப் பெருஞ்சோதி நெருப்பும் அடிப்பகுதி அகன்றும், நுனிப்பகுதி குறுகியும் இருக்கும். இது இயற்கை நியதி. இங்ஙனம் பாணம் குறுகி எழும் சோதியாகவும் ஆவுடை அச்சோதியின் அடிப்பாகமாகவும் கண்டு வழிபாடு செய்யப் பெற்றது. அறிவியல் உலகில், பொருளையும் ஆற்றலையும் – ஒன்றாகக் கிடந்து பொருளின் ஆற்றலையும் பிரித்துத் தனித்தனியே பெயர் சூட்டி அழைக்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. சிவம் பொருள்; அப்பொருளின் ஆற்றல் சக்தி. சக்தியாய், சிவமாய் ஒருங்கிணைந்து நின்றிடும் திருமேனி சிவலிங்கத் திருமேனி. இங்ஙனம் வாழ்வோடு பொருந்திய கலை ஞானத்தின் மறு பதிப்புக்களே திருக்கோயில் திருவுருவங்கள்.
அடுத்துப் பொருளையும், பொருளின் ஆற்றலையும் பிரித்து வழங்குமாறு போலத் தனித்தனியே பிரித்துச் செய்யும் வழிபாட்டு முறையால்தான் அம்மையப்பன் வழிபாட்டு முறை தனித்தனியே பிரிந்தது. பொருள், பொருளாற்றல் இவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் பயனே இன்பம். அதுவே முருகு எனத் தோன்றி நின்து. திருக்கோயில் திருவுருவங்கள் எல்லாமே வாழ்க்கையின் – அனுபவத்தின் வெளிப்பாடேயாம்.
வாழ்க்கையில் களிப்பும் மகிழ்ச்சியும் சிறக்க, திருவிழாக்கள் துணை செய்யும். திருவிழாக் காலத்தில் மக்கள் ஒன்று திரளுவர்; சமூக உறவுகள் வளரும் பாட்டும் கூத்தும் மேடைகள் தோறும் நிகழும். கடைசியாகத் திருத்தேர்த் திருவிழா நிகழும் பல டன் எடையுள்ள தேரைச் சில நூறு பேர் இழுப்பர். சமூக ஒருமைப்பாட்டுக்கு இஃதோர் அளவுகோல், சமூகம் வலிமையும் வனப்பும் பொருந்தியதாக இருப்பதை உலககோர் முன் எடுத்துக்காட்ட இஃது ஒரு நிகழ்ச்சி. மானிட சாதி ஒருமைப்பாட்டுடனும் வலிமையுடனும் இருப்பின் வையகத்தில் எதையும் நிகழ்த்தலாம். இயலாதது ஏது? இத்திருத்தேர் விழாவும் வாழ்வியற் கலையைச் சார்ந்தது என்று எடுத்துக் கூறவும் வேண்டுமோ?
இங்ஙனம் நம்முடைய வாழ்க்கை முழுவதுக்கும் மையமாக விளங்கும் திருக்கோயில் நமது செல்வமல்லவா? இத்திருக்கோயில்களைச் சற்றும் சிதைவுபடாமல் நாம் பேணல் வேண்டும். மிகப்பெரிய திருக்கோயில்களை எடுத்த மன்னர்கள் கூட எடுத்த பெருமையை விடப் பேணும் பெருமையே சிறந்தது என்று கருதியிருக்கிறார்கள்; தென்காசித் திருக்கோயிலை எடுத்த பாண்டிய மன்னன், திருக்கோயிலை எடுப்பித்து முடித்த பிறகு வெட்டி வைத்த கல்வெட்டில் பின்வருமாறு பொறித்து வைத்துள்ளான்.
“ஆராயிரம் இந்தத் தென்காசி
மேவும் பொன் ஆலயத்து
வாராத தோகுற்றம் வந்தால்
அப்போதங்கு வந்து, அதனை
நேராக வேயொழித் துப்புரப்
பார்களை நீதியுடன்
பாரா ரறியப் பணிந்தேன்
பராக்கிரம பாண்டியனே!”
என்பது அக்கல்வெட்டுப் பாடலாகும்.
ஆதலால் நாமனைவரும் நம்முடைய திருக்கோயில்களைக் கண்ணெனப் பேணுவோமாக! இத்திருக்கோயிலுக்குப் பகை, திருக்கோயில் மதில் கோபுரங்களில் செடி கொடிகள் முளைத்தலாகும். இவற்றை உழவாரம் கொண்டு அவ்வப்போது அகற்றுவோமாக! சிற்பங்களையும் ஓவியங்களையும் பாதுகாப்போமாக! திருக்கோயில் தூய்மை, நமது தூய்மை. திருக்கோயில் பேணல் ஒரு கலைத்தொண்டு. திருக்கோயில் பேணல் ஒரு வரலாற்றை இயக்கும் தொண்டு. திருக்கோயில் நிறுவனம் அன்று: அஃது இயக்கம், அஃது ஒரு கலைச் சூழல், நமது வாழ்வியலோடு கலந்த கலைச் செல்வமாகிய திருக்கோயிலை நாளும் பேணுவோமாக!



