ஆலயங்கள் சமுதாய மையங்கள் குன்றக்குடி அடிகளார்

4. சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்

“சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்” என்பது, இந்தத் தலைமுறையில் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். நமது சைவ சித்தாந்த நூல்கள் பரபக்கத்தில் எடுத்து ஆய்வு செய்து மறுக்கின்ற புறப்புறச் சமயங்களுள் தத்துவங்களுள் மார்க்சியம் இல்லை. ஆனால், மார்க்சியத்திற்கு முன்னோடியாகவுள்ள உலகாயதம் (சார்வாகம்) எடுத்து ஆய்வு செய்யப் பெற்றிருக்கிறது. உலகாயதத்தின் வளர்ச்சியே மார்க்சியம். இங்கு வளர்ச்சி என்பது, ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் உள்ளடக்கியதேயாம்.

சித்தாந்த நூல்களில் உலகாயதம் என்று ஆய்வு செய்யப்பெற்ற கொள்கை, காலந்தோறும் வளர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்சிமாக விஞ்ஞான பூர்வமாக வளர்க்கப் பெற்றுச் செழுமையடைந்து வளர்ந்துள்ளது. மேலும் மார்க்சின் தத்துவங்கள் விரிவான ஆய்வும் விளக்கமும் பெற்று உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் மார்க்சியம் நடைமுறை வாழ்க்கை விஞ்ஞானமாகவும் உருப்பெற்று விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மெய்கண்டார் அருளிச் செய்த சிவஞானபோதத்திற்கு வழி நூல்கள் பல தோன்றினாலும் அவ்வழி நூல்கள் முதல் நூலில் நுண்பொருளாகச் சொல்லப் பெற்ற செய்திகளை எளிமைப்படுத்தும் முயற்சியிலேயே ஈடுபட்டன. மாதவச் சிவஞான முனிவர் உரை விளக்கம் எழுதி, சிவஞான போதத்தை விளக்கமுறப் பயிலத் துணைசெய்தார். எனினும், சித்தாந்தச் சைவத்தைத் தனியொரு நெறியாகப் பேணி வளர்க்கவும் சித்தாந்தச் சைவ நெறியை வாழ்க்கை நெறியாக உருக்கொடுக்கவும் நாம் தவறியது ஒரு குறையேயாம். இன்றாவது, கடவுள் மறுப்பு இயக்கங்கள் எதனால் தோன்றின? கடவுள் மறுப்பு இயக்கங்கள் தோன்றுவதற்குரிய அடிப்படைக் காரணங்களை மாற்ற முடியுமா? அப்படியானால் ஏற்றுக்கொள்ளத்தக்கன எவை? விடத்தக்கன எவை? என்று ஆய்வு செய்வது சித்தாந்தச் செந்நெறிக்கு அரண் செய்ய உதவியாக இருக்கும். பரபக்கத்தில் ஏற்படும் தெளிவுதான் சுபக்கத்தில் துணிவைத் தருகிறது என்பது நமது மரபுவழிக் கருத்து. அதனால், நாம் “சைவசித்தாந்தமும் மார்க்சியமும்” என்ற தலைப்பை எடுத்துக் கொண்டோம். இவ்விரண்டு தத்துவங்களையும் அடக்கத்துடன் கற்கும் மாணவனாக இருந்து வருகின்றோம். இந்த ஆய்வினைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடனேயே மார்க்சியத்தை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டுள்ள சோவியத்துக்கும் சீன நாட்டுக்கும் சென்று வந்தோம்.

மார்க்சியமும் சைவ சித்தாந்தமும் இயல்பாகவே ஒன்றாயிருத்தல் இயலாது. சைவ சித்தாந்தம் கி.பி. 13ஆம் நூற்றாண்டில், முழுமைநிலை யடைந்தது. உலகாயதம் வளர்ந்து கி.பி. 19ஆம் நூற்றாண்டில் மார்க்சியமாக முழுமையடைந்தது. கால வேறுபாடு – இட வேறுபாடு இவைகளுக்கிடையில் வேற்றுமை மிகுதியும் உண்டு. ஆயினும் பெரும்பான்மையான மானிடச் சிக்கல்கள் உலகம் முழுவதற்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. கால்ந்தோறும் கூட மிகச் சாதாரண மாற்றங்கள் தாம் ஏற்படுகின்றனவே தவிர அடிப்படைச் சிக்கல்களுக்குத் தீர்வுகள் கண்ட பாடில்லை. இரண்டு பொதுவுடைமை நாடுகளுக்கிடையே கூடச் சிக்கல்கள் நிலவுகின்றன. ஆதலால் காலத்தில் வளர்ச்சி, பௌதிக வளர்ச்சிகளை மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறதே தவிர, மானிட சாதியின் அகநிலை-புறநிலையில் பெரிய மாற்றங்ளைக் காணோம். இன்றுள்ள சூழ்நிலையில் இவ்விரண்டு தத்துவங்களையும் நன்றாக ஆய்வு செய்து இவைகளுக்கிடையே யிருக்கிற முரண்பாடுகளைத் தவிர்த்துச் சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் நல்லது என்ற கருத்திலேயே இந்தத் தலைப்பு எடுத்துக் கொள்ளப்பெற்றது. இவ்விரு தத்துவங்களுக்கிடையே ஒருமை நிலை தோன்றாது போனாலும், இவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு மதிப்பு உணர்வுடன் ஆய்வு செய்யும் மனப்போக்கு வளர்ந்தால் பகைமையாவது குறையுமல்லவா?

சைவ சித்தாந்தம்

சைவ சிததாந்தம் என்கிற செழுந்தமிழ் வழக்கு நெறி வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழர் வாழ்வில் தோன்றி வளர்ந்து வந்துள்ள நெறியாகும். “சைவத்தின் பழைமை கற்காலத்திற்கும் முற்பட்டது. இப்பொழுது உலகிற் காணப்படும் சமயங்கள் எல்லாவற்றிற்கும் அது முற்பட்டது.” என்று சர். ஜான்மார்ஷல் என்ற அறிஞர் கூறியுள்ளார். சிந்து வெளியில் அகழ்ந்தெடுக்கப் பெற்ற பொருள்களில் சிவலிங்கங்களும் உண்டு. சங்ககாலத் தமிழர்களின் சமயமும் சைவ சித்தாந்தமேயாம். வைணவமும் தமிழர் நெறியே. வைணவமும் சங்க காலத்தில் நிலவிய சமயமே. ஆயினும் சங்க இலக்கியங்களில் சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் பரவலாகப் பேசப் பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களில் பெரும்பான்மை சிவ பரம்பொருளையே வாழ்த்துகின்றன. சிவனே கடவுள்; அவன் பிறப்பு இறப்பு இல்லாத நிலைத் தன்மையுடையவன் என்பதனை ஔவையார்,

….. ……. …….. ………

பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற் றொருவன் போல
மன்னுக”

என்று கூறியுள்ளதால் அறியலாம். இளங்கோவடிகளும்,

விண்ணோ , ரமுதுண்டுஞ்சாவ வொருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்”

என்றும், “பிறவா யாக்கைப் பெரியோன்” என்றும் கூறினார். அதுபோலவே உயிர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதும் “மன்னுயிர்” என்றே சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. மன்னுயிர் என்றால் தோற்றமும் அழிவும் இல்லாத உயிர் என்பது பொருள். சங்க இலக்கியங்கள் மறுபிறப்பை ஒத்துக் கொண்டுள்ளன.

“இம்மைச் செய்தது மறுமைக்காம் எனும்” என்ற அடியில் ‘இம்மை’ ‘மறுமை’ என்று குறிக்கப் பெறுவதறிக. ஆதலால் சங்க இலக்கியங்களில் சைவ சித்தாந்தக் கூறுகள் உள்ளன என்பது உறுதியாகிறது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய மெய்கண்டார் சைவ சித்தாந்தச் சமயத்தை விளக்குவதற்கு அளவை, தருக்க நூல் முறைப்படி சிவஞான போதத்தைச் செய்தருளினார். சிவஞான போதத்திற்குப் பின்பு திருக்களிற்றுப் படியாரும் திருவுந்தியாரும் தோன்றின. சிவஞான போதத்திற்குப் பின் அதன் வழி நூல்களாகப் பதினொரு நூல்கள் தோன்றின. ஆயினும் இவை அனைத்தும் மெய்கண்ட சாத்திரம் என்னும் வரிசையிலேயே வைத்து எண்ணப்படுகின்றன. சைவ சித்தாந்தச் சமயம் அறிவாய்வு கண்டு, வளர்க்கப் பெற்ற சமயம். வழிவழி ஆசிரியன்மார்களால் உபதேசிக்கப் பெற்று வளர்ந்து வந்துள்ள ஒரு சமுதாய நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் நல்வாழ்க்கைக்கும் உரிய சமயமாகவும் விளங்குகிறது. “சித்தாந்தம்” என்கிற சொல்லுக்கு “முடிந்த முடிபு” என்பது பொருள். முடிந்த முடிபு என்று கொள்ளத்தக்கவாறு ஆழமாகவும், அகலமாகவும் பல்வேறு தத்துவங்களையும் இந்திய நாட்டின் பல்வேறு சமயங்களையும் ஆய்வு செய்து அத்தத்துவங்களையும் அச்சமயங்களையும் விட சைவசித்தாந்தச் சமயம்மிக்குயர்ந்து விளங்குகிறது என்பதை விளக்கும் நூல்களே மெய்கண்ட சாத்திரங்கள்.

மார்க்சியம்

தமிழ்த்தந்தை திரு.வி.க. அவர்களால் “மா முனிவர்” என்று பாராட்டப் பெற்ற கார்ல்மார்க்சு கி.பி.1818-ஆம் ஆண்டில் செருமானிய நாட்டில் பிறந்தவர்; சிறந்த அறிஞர்; மானிடசாதியின் வரலாற்றையும் அவ்வரலாற்று நிகழ்வுகளின் உள்ளீடுகளையும் உலகத்தின் பல்வேறு தத்துவ நூல்களையும் அரிதின் முயன்று கற்று, அவற்றின் பயனாக மூலதனம் (Das Capital) என்கிற மிக உன்னதமான ஒரு தத்துவஇயல் நூலைத் தந்தவர். இத்தத்துவ நூலுக்கு சோவியத் நாட்டில் பிறந்த மாமேதை லெனின் எழுத்தாலும் உரையாலும் விளக்கம் தந்தார்; செயற்பாட்டினாலும் மார்க்சிய அடிப்படையிலான சமுதாய அமைப்பிற்குக் கால்கோள் செய்து வளர்த்தார். இன்று உலகத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் மார்க்சிய தத்துவ நிழலில் சமுதாயம் அமைத்து வாழ்கின்றனர். உலகின் எல்லா நாடுகளிலும் மார்க்சீய தத்துவத்தின் பின்பற்றாளர்கள் வாழ்கின்றனர். அதன் எதிர்காலம் ஒளி மிக்குடையதாக விளங்குகிறது.

சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் தம்முள் முரண்பட்டவையும் அல்ல; உடன்பட்டவையும் அல்ல. சில மாறுபாடுகள் உள்ளன என்பது உண்மை. இந்த மாறுபாடுகள் தத்துவங்கள் தோன்றிய காலம் காரணமாகவும் அமைந்திருக்கலாம். அல்லது உண்மையான மாறுபாடுகளாகவும் இருக்கலாம். சைவ சித்தாந்தம் கடவுளை நம்புகிறது. மார்க்சியம் கடவுளை நம்பவில்லை. இஃது ஒரு முக்கியமான வேறுபாடு. மற்றபடி உலகத்தின் தோற்றம், உயிர்களின் நிலை, இந்த உலக வாழ்க்கை உழைப்பின் சிறப்பு, உழைப்பாளர் தகுதி ஆகியவற்றில் சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் ஒன்றுபடுகின்றன. கார்ல்மார்க்சுக்குச் சைவ சித்தாந்தத்தத்துவத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவருடைய அணுகுமுறைகள் அல்லது தத்துவ இயலின் போக்கு எப்படி இருந்திருக்கும் என்று இன்று உய்த்துணர்ந்து கொள்ள முடியும். அந்த வாய்ப்பைத் தமிழர்கள் வழங்காதது ஒரு குறையேயாம்.

இரு வேறு நிலையில் வளர்ந்த தத்துவங்கள்

சைவ சித்தாந்தம் கடவுளை நம்புவதாலும் கடவுள் வழிபட்ட சமய வாழ்க்கை முறையை எடுத்துக் கூறுவதாலும் இஃது ஒரு சமயம். மாமேதை மார்க்சு கடவுளை நம்பாததாலும், ‘மதம் மக்கட்கு அபின்’ என்று கூறுவதாலும் பொருளையே மையமாகக் கொண்ட வாழ்க்கையை வலியுறுத்துவதாலும் மார்க்சியம் கடவுளை நம்பாத – கடவுள் மறுப்புக் கொள்கையுடைய நாத்திகமாயிற்று. ஆனால், பிரெஞ்சு தேசத்தில், பாரசீகத்தில், இந்திய நாட்டில் தோன்றிய, மனித உணர்வுகளை – ஒழுக்கங்களை – கட்டுப் பாடுகளை ஏற்றுக்கொள்ளாது “கண்டதே காட்சி – கொண்டதே கோலம்” என்ற நாத்திகம் போன்றதன்று மார்க்சியம். மார்க்சியத்திற்கே கூட ஆன்மிகத்தில் நம்பிக்கை யிருக்கிறது. நமது மரபு வழியில் ஆன்மிகம் என்ற சொல்லுக்குப் பொருள் உயிரின் தகுதியை – வளர்ச்சியைக் குறிப்பதாகும். மார்க்சியம் மானிடத்தின் தரத்தை – வளர்ச்சியை விரும்புகின்றது. மார்க்சியத்தில் உயிரின் தன்மை, கல்வி, கேள்வி மற்றும் செயல்முறைகளால் வளர வேண்டும் என்னும் கொள்கை இருக்கிறது. ஆதலால் மார்க்சியத்தை வறட்சித் தன்மையுடைய – அராசகத் தன்மையுடைய – ஆக்கும் தன்மையில்லாத – அழிக்கும் தன்மை மட்டுமேயுடைய நாத்திகக் கொள்கைகளின் வரிசையில் எண்ணுவது கூடாது, கூடவே கூடாது! மார்க்சியம் ஓர் உண்மை. மார்க்சியம் கற்பனையில் பிறந்த தத்துவமன்று. உலக நடைமுறைகளை ஆராய்ந்து கண்ட உண்மை. மார்க்சியம் ஒரு வாழ்க்கை முறை. மார்க்சியம் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய ஒரு தத்துவம். அதாவது, மனித சமுதாயம் வாழும் காலந்தோறும் அவ்வக் காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு கொள்கை கோட்பாடுகளை வகுத்துக் கொள்ளுமாறு மார்க்சியம் கூறுகிறது. மார்க்சியத்தின் ஒரே குறிக்கோள் – மனித குல மேம்பாடேயாம். சிலர் கருதுவதைப்போல மார்க்சியம் பொருளாயத மேம்பாடு மட்டுமே குறிக்கோளாகவுடையதல்ல.

“தத்துவ ஞான இயல், பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பௌதிகப் பொருளாயதப் பேராயுதத்தைக் கண்டதைப் போல, பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞான இயலில் தனது ஆன்மிகப் பேராயுதத்தைக் கண்டது” என்றார் மார்க்சு. பொருளாயத மேம்பாட்டின் மூலம் கலை, கலாசாரம், நாகரிகம் பண்பாடு இவற்றின் தொடர் விளைவாக மனிதகுலத்தில் ஏற்படும் அகநிலை, புறநிலை, அமைதி ஆகியவற்றையும் கண்டு வளர்க்க முடியும் என்பது மார்க்சியத்தின் கொள்கை. ஆக, சைவசித்தாந்தமும் மார்க்சியமும் இருவேறு நிலையில் வளர்ந்த தத்துவங்கள். இவை இரண்டு தத்துவங்களையும் அறிஞர்கள் முயன்று ஒத்திசைவை ஏற்படுத்துவார்களாயின் மண்ணுலகம் விண்ணுலகமாகிவிடும். அல்லது சைவ சித்தாந்தச் சமயம் அயல் வழக்குகளின் கலப்புகளைத் தவிர்த்துத் தனித் தன்மையுடன் இயங்கி வெற்றிபெற்று, மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை வளர்த்து, உலகியல் வாழ்க்கையில் ஒரு துன்பக் கலப்பில்லாத இன்பச் சமுதாயத்தை அமைக்க முடியும். இங்ஙனம் நிகழுமானால் மக்கள் மார்க்சியத்தால் ஈர்க்கப்படுவதைத் தவிர்க்கலாம். அது மட்டுமன்று மார்க்சியத்தால் உருவாகக் கூடிய சமுதாய அமைப்பைக் காட்டிலும் சிறந்த அகநிலை உணர்வுகளைப் படைத்து, மக்கட் சமுதாயத்தை இன்ப அன்பில் நிலை நிறுத்தலாம். இதனால் சாதனையின் வழி சித்தாந்தச் சமயத்தின் நிலை உயர்ந்து விளங்கும். உயிர்கள் படைக்கப்பட்டனவா?

சைவ சித்தாந்தம் உயிர்கள் கடவுளால் படைக்கப் ட்டன அல்ல என்று கூறுகிறது. உயிர்கள் என்றும் இயற்கையில் உள்ளவை என்றும் கூறுகிறது. இதை

எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி
இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை
அண்ணலரு ளால்நண்ணி அவை அவரா யதனால்
அலகில் நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால்
புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப்
புணரும் இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால்
உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
உற்றிடும் நற் பசுவருக்கம் என உரைப்பார் உணர்ந்தோர்”

என்று சிவப்பிரகாசம் கூறுகிறது.

மார்க்சியம் ‘உயிர்கள் இயற்கையில் பரிணமித்தன’ என்ற டார்வின் உயிரியல் பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறது.

“இன்று நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையின் – மனிதன் உள்ளிட்ட – உயிரினங்களின் முழுத் தொகுதியானது, ஆதியில் ஓருயிரணுவாக இருந்த ஒரு சில மூலக் கருக்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற, ஒரு நீண்ட நிகழ்வுப் போக்கின் விளைவுதான் – இவையுங்கூட இராயாசன வழியில் தோன்றிய ஊன்மம் (Protoplasam) அல்லது புரதம் (albumen) என்பதிலிருந்து தோன்றியவை” என்பது டார்வின் கொள்கை.

“புரதப் பொருள்களுடைய இருத்தலின் பாங்கே உயிர்; அதன் சாராம்சமான ஆக்கக்கூறின் உள்ளடக்கம் அவைகளின் புறத்தே உள்ள இயற்கைச் சூழலுடன் தொடர்ந்தாற் போன்ற வளர்ச்சிதை மாற்ற ரீதியான பரிமாற்றம் கொள்வதேயாம்” என்று மார்க்சியம் கூறுகிறது. எனவே சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் உயிர்கள் கடவுளால் படைக்கப் பெற்றவையல்ல என்ற அந்த அளவில், ஒத்த கருத்துடையன.

உயிர்கள் படைக்கப்பட்டன என்றால் உயிர்களின் குறைகளுக்கும் நிறைகளுக்கும் கடவுளே பொறுப்பாளியாகின்றான் என்ற கருத்து உருவாகும். அப்படியானால் இந்த உலகில் இன்று சுயநலக்காரர்களால் ஏற்பட்டுள்ள சாதி வேற்றுமைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கடவுளின் ஏற்பாடுகள் என்றாகிவிடும். கடவுள் குறைவிலா நிறைவு; கோதிலா அமுது; உயர்வற உயர்ந்த உயர்வு. இயற்கை நியதியின் பாற்பட்ட பரிணாம வளர்ச்சியில் குறை, நிறையாக மாறி வளரும். ஆனால் நிறையிலிருந்து குறை தோன்றாது குறைவிலா நிறையாகிய பரம்பொருள் குறையுடைய உயிர்களைப் படைத்தான் என்பது ஏற்புடையதன்று; சைவ சித்தாந்தத்தின் கடவுட் கொள்கைக்கும் உடன்பட்டு வராது. கடவுள் உயிர்களைப் படைத்தான் என்ற கொள்கை பிற்போக்கு வாதிகளுக்கு வெற்றி கிட்டியது போலாகும். ஏழைகள் “கடவுளின் இந்த ஏற்பாட்டை மீறக்கூடாது; மீறினால் பாவம்; நரகம் கிடைக்கும்” என்று அச்சம் கொண்டு மீளாத் துயரத்தில் ஆழ்வர். சைவ சித்தாந்தம், உயிர்கள் படைக்கப்பட்டவையுமல்ல; தோன்றியவையும் அல்ல; அழியக் கூடியவையுமல்ல என்று கூறுகிறது. இக்கருத்து வளரும் அறிவியல் உலகத்திற்கு இசைந்த கருத்து. அதுமட்டுமன்று, முற்போக்குத் தன்மையுடையதுமாகும்.

அறிவும் அறியாமையும்

உயிர் தன்னுடைய வாழ்க்கையில் பரிணமித்து வளர அறிவு தேவை என்கிற கருத்தில் சைவ சித்தாந்தத்திற்கும் மார்க்சியத்திற்கும் உள்ள வேற்றுமையின் அளவு குறைவு. சைவ சித்தாந்தம் இயல்பாகவே உயிர் அறியாமையில் இருப்பதாகவும் இந்த அறியாமையினால்தான் சமுதாயப் பொதுமைக்கு எதிரான “நான்”, “எனது” என்கிற சர்வாதிகாரத் தன்மையுடைய தனித்தன்மை – பொதுமைக்கு எதிரான தனிவுடைமை ஆகிய சொற்களும், சொற்கள் வழிப்பட்ட உணர்வுகளும் முறையே கால் கொள்கின்றன என்கிறது. அறிவியல் உலகம் வளர்ந்து வருவதால் பொருளுற்பத்திக் கருவிகள் எளிமையாக்கப்பெற்று, குறைந்த நேரத்தில், குறைந்த செலவில், குறைந்த சக்தியில் அதிகப் பொருள்கள் உற்பத்தி செய்து குவிக்கக் கூடிய காலமிது. அதோடு நுகரும் பொருள்களை – பணமதிப்புப் பொருள்களாக அல்லது சொத்தாக மாற்றுவதற்குரிய வாய்ப்பும் வளர்ந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் மனிதன் கூடித் தொழில் செய்தல், கூடி உண்டு மகிழ்தல் என்ற மனப்போக்கிலிருந்து விலகி, தனி மனித உருக்கொள்கின்றான்; தனி உடைமை ஆர்வத்திற்கு வித்திடப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் “நான்”, “எனது” என்ற மனிதகுலப் பண்பாட்டுக் கொல்லியான நச்சுணர்வுகள் “நான்”, “எனது” என்ற சொற்கள் மூலம் வெளிப்படுகின்றன.

சித்தாந்தச் சமயச் சாத்திரங்களும் “நான்”, “எனது” என்பன அற்ற நிலையே அறநிலை என்று கூறும். நற்றமிழ்க் குமரகுருபரர்-

…………. நற்கமலை
ஊரில் குறுகினேன் ஓர்மாத் திரையள(வு) என்
பேரில் குறுகினேன் பின்”

என்று இலக்கண வடிவில் நயம்பட இதை எடுத்துரைத்தார். அதாவது “சீவன்”, “சிவன்” ஆயிற்று என்பது கருத்து. சீவன், சிவத்தன்மையடைந்த நிலை “நான்” “எனது” அற்ற நிலை.

மார்க்சியம் தோற்றம் – வளர்ச்சியின்மையின் காரணமாக அறிய வேண்டியவற்றை அறிவதற்குரிய, வாய்ப்பின்மையின் காரணமாகவுள்ளது ‘அறியாமை’ என்று கூறுகிறது. சைவ சித்தாந்தத்தின்படி அறியாமை இயற்கையிலேயே உள்ளது. மார்க்சியத்தின்படி அறியாமை இயற்கையன்று; வாய்ப்பின்மை காரணமாக ஏற்பட்டது அறியாமை. இந்த வேறுபாடு மிகப்பெரிய விளைவுகளை அல்லது எதிர் விளைவுகளை உருவாக்கி விடுவதற்குரியதன்று. அதனால், இந்த வகையில் வேறுபாடு இல்லையென்றே கருதினாலும் தவறன்று. அறியாமை. என்பதற்கு இரண்டு தத்துவங்களிலுமே பெரும்பாலும் ஒரே பொருள்கொள்ளப் பெறுகிறது. அறியாமை என்பது ஒன்றும் தெரியாமையன்று. ஒன்றைப் பிறிதொன்றாக முறை பிறழ அறிதலே அறியாமை என்று கருதப்படுகிறது. உயிர் நல்லறிவு வழிப்படவேண்டும் என்பதில் இரண்டு தத்துவ இயல்களும் ஒத்த நிலையினவேயாம், மார்க்சியத்தின் தோற்றத்திற்குக் காரணம் ஐரோப்பிய நாடுகள், மற்ற நாடுகளின் வரலாற்றுப் போக்குகளேயாம். மார்க்சிய தத்துவ ஞானத்தின் தோற்றத்திற்குக் களம், மனித குல வரலாறேயாம். இந்த மனித குல வரலாற்றில் பண்ணை அடிமைமுறை, முதலாளித்துவம் ஆகியன மனித குலத்தைக் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி, நடைப் பிணங்களாக்கிய கொடிய நிலையை மாற்றும் நோக்கத்தில் மார்க்சிய தத்துவ ஞானம் தோன்றியது.

சைவ சித்தாந்தம், “உயிர்கள் படைக்கப்பட்டனவல்ல; என்றும் உள்ளன; தோற்றமும் அழிவுமில்லாதன; உயிர்கள் பல; அவை கல்வி கேள்வியால் அறிவு பெறுவன; அறிவித்தால் அறியும் தகுதியுடையன, உயிர்கள் மகிழ்ந்து வாழும் இயல்பின” என்றெல்லாம் கூறுகின்றது. மார்க்சியமும் உயிர்க் குரிய இந்த இயல்புகளை உடன்பட்டே நிற்கிறது. ஆனால், சைவசித்தாந்தம் உயிர்களின் அறிவை சிற்றறிவு என்று எல்லை கட்டுகிறது. மார்க்சியம் மனித அறிவின் மாட்சிக்கு எல்லை கட்டவில்லை. 

“மனித சிந்தனை முடிவில்லாமல் சதாகாலமும் தோற்றத்திலிருந்து சாராம்சத்திற்கு முதல்நிலையான சாராம்சத்திலிருந்து அடுத்த உயர்ந்த நிலையிலான சாராம்சத்திற்கு மேலும் மேலும் ஆழமாகச்செல்கிறது; அவ்வாறாக முடிவின்றிச் சென்று கொண்டேயிருக்கிறது” என்று லெனின் கூறுகிறார்.

சைவ சித்தாந்தம் மனித அறிவின் எல்லை மிக வேண்டுமானால் அல்லது சிற்றெல்லையைக் கடந்தாக வேண்டுமானால் எல்லையற்ற கடவுளைத் துணையாகப் பெற்றால் மனிதன் அறிவு சிற்றெல்லையைக் கடந்தும் வளரும் என்று கூறுகிறது. இந்த அடிப்படையில்தான் சிவ ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் முதலிய ஞானாசிரியர்கள் ஐந்தொழிலும் நிகழ்த்தியதாகத் திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. அது மட்டுமல்ல. சிவஞானம் பெற்றவர்களுடைய வாக்குகளும் இறைவன் அருளிச் செய்யும் வாக்குகள் போலவே கருதப்பெறும் என்று திருமுறை கூறுகிறது.

எனதுரை தனது ரையாக
நீறணிந்து ஏறுகந்து ஏறிய நிமலன்”

என்பதறிக. சிவஞானம் பெற்றவர்களுடைய கரணங்கள், சிவத்தன்மையடைந்த கரணங்கள் என்பதைத் திருக்களிற்றுப் படியார்,

பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனைஅன் றேவிக் கராங்கொண்ட – பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங்
கரணம்போல் அல்லாமை காண்”

என்று அருளிச் செய்துள்ளமையும் அறிக.

சித்தாந்தக் கருத்துப்படி உயிர், சிவத்தின் துணையோடு தனது அறிவை வளர்த்து ஞானமாக்கிக் கொள்ளும் பொழுது அத்தகைய ஞானத் தன்மையடைந்த உயிர், ஒரோவழி உலகியல் நன்மைகள் செய்தாலும் பெரும்பான்மையும் இறவாத இன்ப அன்பு நிலையை எய்தி அமைதி பெறுவதிலேயே நிறைவு பெறுகிறது. மார்க்சியம் மனித உயிர், தொழில் செய்வதன் மூலமே தனது அறிவை விரிவுபடுத்திக் கொண்டு பரந்த பூத பௌதிக உலகத்தின் செல்வங்களை யெலலாம் மானிடசாதியின் அனுபவத்திற்குக் கொடுப்பதில் முனைப்புடன் ஈடுபடுகிறது; அது மட்டுமன்று. காலத்தையும் தூரத்தையும் இயற்கையாற்றல்களையும் வென்று விளங்கும். சாதனையைச் செய்வதாகக் கூறுகிறது. இரண்டு தத்துவங்களும் செல்லும் அறிவுவழியின் இலக்குகள் மாறுபட்டிருக்கின்றன. இரண்டும் தேவையே. ஆனால் மார்க்சியம் காட்டும் அறிவுலகம் முதல்நிலையில் வெற்றி பெற்று அவ்வெற்றியின் முடிவில் – சைவ சித்தாந்த ஞானம் காட்டும் இன்ப அன்பில் வந்து தங்குமானால் மானிட – வரலாற்றுக்குப் பெரும் பேறாகும்.

கடவுள் தன்மை

மார்க்சியம், மனிதனை விஞ்சிய ஒரு பொருள் இருப்பதாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

“மக்கள்தான் முக்கியமான முதன்மையான ஆக்க சக்தி;

படைப்பாளி, வரலாற்றின் உண்மையான அகப்பொருள்”

என்பது மார்க்சியம்.

சைவ சித்தாந்தம் கடவுளை, மனிதனைவிடச் சிறந்த பொருளாகக் கொள்கிறது. ஆனால், உயர் பொருளாக இருக்கிற கடவுள் மனிதனைக் கொத்தடிமைப்படுத்துவது அல்லது உயிர்களிடத்தில் தற்குறை மனப்பான்மையைத் தோற்றுவிப்பது உயர் மனப்பான்மையல்ல. இயல்பான வளர்ச்சியில் கூட வேற்றுமைகள் இருப்பது இயற்கை; இதற்கு மார்க்சியம் உடன்படுகிறது. கடவுளை மனிதனுக்கு வழிகாட்டும் ஆசிரியராகவும் தோழனாகவுமே சைவ சித்தாந்தச் சமயம் கருதுகிறது. மனிதருள் சிறந்த மனிதர் இருப்பதில்லையா? இலட்சக்கணக்கான புரட்சித் தொண்டர்களுக்கு லெனின், மாமேதையாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கவில்லையா? மார்க்சு வாழ்ந்த காலத்திலும் இன்றும் எண்ணற்ற தொழிலாளர்களுக்கும் முற்போக்குச் சிந்தனை யாளர்களுக்கும் சிறந்த ஒளி விளக்காகத் திகழவில்லையா? அது போலச் சைவ சித்தாந்தம் காட்டுகிற இறைவன் உயிர்க்கு நல்ல தோழனாய், ஆசிரியனாய் அமைந்து அழைத்து வழிகாட்டிச் செல்கிறான் என்று கருதப்படுகின்றதே தவிர அவன் ஒரு உயர் பொருளாக மட்டும் கருதப் பெறுவதில்லை. சுந்தரர்,

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி
மாழையொன் கண்பரவையைத் தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே”

என்று பாடியிருப்பது அறிக. இறைவனுடைய துணையால் பெறும் அறிவுதான் ஞானம். அதாவது பேரறிவு என்று பாராட்டப்பெறுகிறது. ஆதலால், உயிர்கள் அறிவு பெறுவது முதற்கடமை, உழைக்கும் ஆற்றலும், உழைப்பின் வழித் தொழிலியற்றலும் அவ்வழி அறிவை விரிவு செய்தலும் உயிர்களின் இயல்பாகும். இம்மூன்று நிலையும் சைவ சித்தாந்தத்திற்கும் மார்க்சியத்திற்கும் இசைந்த நிலையாகும்.

ஒருமைப்பாட்டை உணர்த்தும் உயர் தத்துவங்கள்

நாடு, மொழி, இனம், மதம் ஆகியன மனிதனுக்குப் பிறப்பின் காரணமாகத் தற்செயலாக வந்தமைந்தன. இவற்றை எளிதில் மனிதன் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒப்பற்ற மனித குலத்திலிருந்து மனிதன், எந்தக் காரணத்திற்காகவும் தன்னைத் தனி நிலையிலும் சரி, பொது நிலையிலும் சரி, ஒதுக்கியோ ஒதுங்கியோ வாழ்தல் கூடாது. தமிழ்நாட்டிற் பிறந்த ஒருவர், தமிழைக் கற்றறியாமல் சூழ்நிலையின் காரணமாக ஆங்கிலம் கற்க நேரிட்டால் – அவருக்குத் தமிழில் பேசவும் எழுதவும் வராது. ஆங்கிலம் மட்டுமே வரும். ஆதலால், மாற்றிக் கொள்ளக் கூடியனவெல்லாம் உயிரைச் சார்ந்த பந்தங்களல்ல. அது மட்டுமன்றி-ஒரு மனிதன் எல்லா மொழிகளையும் கற்கவும் முடியும்; எல்லா நாட்டு மாந்தனாகவும் முடியும். ஆதலால், நாடு, மொழி, இனம், மதம் ஆகிய வேறுபாடுகளை மையமாகக் கொண்டு மானிட உலகத்தைப் பிரிக்கக்கூடாது என்பது மார்க்சியம். இயற்கையிலமைந்த தொழில் செய்யும் ஆற்றல், செய்யும் தொழில் மூலம் உலகத்தை இயக்குதல், செய்யும் தொழில் மூலம் உலக இயக்கத்துக்கு-வரலாற்றுக்கு உந்து சக்தியாக இருத்தல் ஆகியன அனைத்துலக மானிட சாதிக்கும் பொதுமை. எனவே உயிர்க் குலத்தை ஒருங்கிணைப்பது தொழில். இதுவே மார்க்சியம். சைவ சித்தாந்தத்திலும் உயிர்க்குலம்,

அவன், அவள், அது”

என்றே பேசப்பெறுகிறது. சிவஞான போதத்தில் நாடு, மொழி, சாதி, இனம் பற்றிய சொற்கள் பயிலாமையைக் கூர்ந்தறிக.

ஐம்புல வேடரின் அயர்ந்த்னை”

என்றும்

நண்ணனல் வேவாத நற்றவர் தம்மினும்
மண்ணமர மாச்செலுத்தும் பாகரினும்”

என்றும் ஒரே வழி பயின்றிருப்பினும் தொழிற் குறிப்பின் வழியிலேயாம். பிறப்பின் அடிப்படையிலன்று.

உயிர்களுக்கு முன்னோடியாக – தலைவனாக – விளங்கும் இறைவனும் – தொழிலியற்றும் தலைவனாகவே பேசப்படுகிறான். அதுவும் தற்சார்பு இல்லாத சமூகப் பொது உழைப்பாக உயிர்களின் நலம் கருதியே தொழிலியற்றும் தலைவனாகப் பேசப்பட்டிருத்தல் சிறப்பு. மெய்கண்ட நூல்களுள் ஒன்றாகிய – திருக்களிற்றுப்படியார்,

அம்மையப்பரே, உலகுக்கு அம்மையப்பர்”

என்று உலகம் தழுவிய கருத்தை உணர்த்துகிறது. ஆதலால், சைவ சித்தாந்தச் சமயம் மானிட சாதியில் ஏற்படும் நாடு, இன, மொழிப் பிரிவினைகளைக் கடிந்து ஒதுக்குகிறது என்பது உண்மை. ஏன்? கடவுளையும் கூட உலகிற்கு ஒருவனாகவே உணர்த்துகிறது. உலகோர் எந்தப் பெயரில், எந்தக் கோலத்தில், யார் தொழுதாலும் அவர் ஒருவரே என்கிற ஒருமையில், சைவம் நிலைத்து நிற்கிறது. ஆனால், இன்று சித்தாந்தச் சைவத்தைச் சார்ந்திருப்பவர்கள், சித்தாந்தச் சைவத்தை வாழ்வியலாக்கத் தவறிவிட்டார்கள். மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் அறவே மறுத்த, மனித குலத்தை வேற்றுமைப்படுத்தும் புன்மை நெறிகளை, பொய்ம்மைச் சாத்திரங்களின் பெயரால் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். கோடானு கோடி மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கிக் கொடிய துன்பத்தை இழைத்து வருகின்றனர். மெய்கண்ட சிவம் வழங்கிய புனித நெறி – அப்பரடிகள் வழங்கிய அருள் நெறி – சேக்கிழார் காட்டிய செந்நெறி வழிவந்த தமிழகம், சராசரி மனிதனுக்குத் திருக்கோயில் வழிபாட்டுரிமையைக் கூட வழங்கவில்லை. நாடு விடுதலை பெற்ற பிறகு சட்டசபையில் இயற்றப்பெற்ற ஆலய நுழைவுச் சட்டம்தான் இந்த உரிமையைத் தந்து, மனித குலத்தின் மீது படிந்திருந்த கறையை நீக்கியது. ஆக, மனித குலத்தை வேற்றுமையற்ற ஒருமையுணர்வுடையதாகக் காண்பதில் சைவ சித்தாந்தச் சமயமும் மார்க்சியமும் ஒரே நிலையின.

வறுமை நீக்கத்திற்கு வழிகாட்டாதது ஏன்?

மானிட சாதியில் அடுத்துள்ள பெரிய வேற்றுமை வளம், வறுமை ஆகும். வறுமையை,

வறுமையாம் சிறுமை”

என்று சிவஞான சித்தியாரும்

நல்குரவென்னும் தொல்விடம்”

என்று திருவாசகமும் கடிந்து கூறுகின்றன. வறுமை, வளம் என்கிற வேறுபாடு இயற்கை என்றோ, கடவுளின் படைப்பு என்றோ, மாற்ற முடியாதது என்றோ, மாற்றக்கூடாதது என்றோ சைவ சித்தாந்தம் கூறவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், இத்துறையில் சைவசித்தாந்தச் சமய நெறியாளர்கள் துறைபோக ஆய்வு செய்தார்கள் என்று கூறுவதற்கில்லை. அது மட்டுமன்று, அங்ஙனம் துறைபோக ஆய்வு செய்வதற்குரிய சூழல்கள், மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் தோன்றிய காலத்தில் இல்லை. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் – இந்திய நாட்டில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றவில்லை. பண்ணையடிமைச் சமுதாயம் இருந்தது. பண்ணையடிமைச் சமுதாயத்திலும் கூட, நுகர்வுகளின் எல்லை குறைவாக இருந்தமையினாலும் மூல தனம் தோன்றாமையினாலும் இத்துறையில் அதிகக் கவனம் ஈர்க்கப்படவில்லை. இதனை,

தென்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவு மெல்லாம் ஒரொக் கும்மே
செல்வத்துப் பயனே யீதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே”

என்ற புறநானூற்றுப் பாடலால் அறியலாம். மார்க்சு காலத்தில் உலக நாடுகளுள், பல நாடுகளில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றிவிட்டது; பணப் புழக்கம் தோன்றிவிட்டது; படைப்புக் களங்கள் தோன்றிவிட்டன; நாடு விட்டு நாடு சந்தைக்குச் செல்லும் இயல்புகள் வளர்ந்து விட்டன. இந்தச் சமுதாய அமைப்பில் சுரண்டல்முறை வலிமை பெற்றது. அதனால், மார்க்சு இத்துறையில் நிறைய ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. சைவ சித்தாந்த ஆசிரியன்மார்களுக்கு அத்தகைய நெருக்கடி இல்லை.

ஊழ் என்பது என்ன?

சித்தாந்தச் சமயம் வினைகளில் வழியது உயிர்களின் வாழ்க்கை – ஆக்கம் என்று கூறுகிறது. இது தொடர்பாக நம்முடைய ஆய்விற்குரிய சொற்கள் மூன்று. அவை, முறையே வினை, விதி, ஊழ் என்று அமையும். “வினை” என்பது உயிர்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அகநிலை அறிகருவிகளாலும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற புறநிலைச் செயற்கருவிகளாலும் செய்யப்பெறும் செயல்களைக் குறிக்கும். அகநிலையிலும் புறநிலையிலும் உயிர், செயற்பாடின்றியிருத்தல் இயலாத ஒன்று. ஒரோவழி புற நிலையில் “சும்மா இருத்தல்” இயலுமாயினும் அகநிலையில் “சும்மா இருத்தல்” இயலாது.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந் திவனே”

என்பது அறிக.

இங்ஙனம் இயற்றப்பெறும் செயல்களுக்குரிய பயன்களைச் செய்தோரின் துய்ப்பிற்கு வந்தடைவதற்குரிய நியதியை (Natural Law) “விதி” என்பர். செய்த வினைகளின் பயன்கள், விதிவழியில் செய்தோரின் அனுபவத்திற்கு வந்து சேரும்போது “ஊழ்” என்று பெயர் பெறுகிறது. செய்யும் வினைகளின் பயன்களுள் இம்மையிலேயே துய்ப்பனவும் உண்டு; மறுமையில் தொடர்வனவும் உண்டு. உயிர்ச் சார்பான நுண்ணுடம்போடு தொடர்புபட்ட கல்வி, அறிவு, உணர்வு ஆகியனதாம் உயிரைத் தொடர்ந்து பல பிறப்புகளுக்குச் செல்லும் தன்மையுடையன. உடல் துய்ப்பிற்குரிய உலகியற் செல்வங்கள் உடம்போடு மட்டுமே தொடர்புடையன. அதனாலேயே “உடைமை” என்ற சொல் தமிழில் பிறந்தது. ஒருவர் இறந்துவிடின் உலகியற் சார்புடைய செல்வங்கள் மற்றவர் கட்புலனுக்கும் துய்ப்பிற்கும் உரியனவாகி விடப்பெற்றுவிடுவதை ஓர்க, உடம்பிலிருக்கும் உயிர் நீங்கியவுடனேயே அவ்வுடமைகளுடன் இருக்கும் தொடர்பும் அறவே நீங்குவது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், உயிரோடு தொடர்புடைய அறிவு முதலியவற்றை, உடம்பும் உயிரும் இணைந்திருந்த காலத்திலும், அப்பொழுது செய்யப்பெற்ற செயல்களின் நிலைப்பாடுகள் வழியாகவும் மற்றவர்கள் அனுபவிக்க முடிகிறதே தவிர, இறந்தவரின் உயிரோடு தொடர்புடைய அவற்றை முற்றாக நாம் வாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”

என்றார் திருவள்ளுவர்.

உலகியற் செல்வங்கள் அறிவறிந்த ஆள்வினையால் படைக்கப்படுபவை; அரசியல் நெறிமுறைகளால் முறைப் படுத்தப்படுபவை-ஒரோவழி, புண்ணிய பாவ உணர்வாலும் முறைப்படுத்தப்படும். செல்வ ஏற்றத்தாழ்வில் வழங்கப்பெறும் சொற்கள் ஏழை-பணக்காரன் என்பதுவே. இந்த ஏற்பாட்டுக்கும் ஊழுக்கும் யாதொரு தொடர்புமில்லை; புண்ணிய பாவத்தினை நினையாமையாலும் முறை செய்யும் அரசின்மையாலுமே ஏழை-பணக்காரன் ஏற்பாடு தோன்றுகிறது. இவை அப்பட்டமான சுயநலம் படைத்த மனிதர்களின் ஏற்பாடு. பிற்காலச் சமய நூல்களில் இந்த ஏற்பாட்டுக்கு மறுப்பு இல்லாமல் இருக்கலாம். அதனால் இந்தமுறை புனிதமாகிவிடாது.

“ஊழ்” என்கிற சொல் “ஊழ்த்தல்” என்கிற சொல்லின் அடிப்படையில் பிறந்தது. ஊழ்த்தல் என்றால் விளங்கத் தோன்றுமுதல் என்பது பொருள். உயிர், நேற்று-நேற்று முன் தினம் தொடர்ந்து வாழ்ந்த முறை, இயற்றிய செயல், முயற்றிய வினை ஆகியவற்றின் உணர்வு உயிரிடத்தில் இயல்பாக விளங்கித் தோன்றுவது இயற்கையே. இதனைத்தான் பழக்கம் என்பர். பழக்கத்தின் காரணமாக வேம்பை இனிப்பாகவும், கரும்பைக் கசப்பாகவும் துய்க்கும் புழுவினைக் காண்கிறோம். அதனால்,

பழக்கம் தவிரப் பழகுவ தன்றி உழப்புவ தென்”

என்று திருவந்தியார் அறிவுறுத்திற்று. எனவே முன்னேற்றத்திற்குப் பயன்தராத பழக்கங்களால் வந்தமையும் உணர்வின் வழியதாகவே வாழ்தல், வாழ்க்கைக்குத் துணை செய்யாது; பயன்தராது என்று ஒருவன் தெளிந்து துணிவானானால் அந்த உணர்வை மாற்றமுடியும் என்பதே சித்தாந்தத்தின் முடிவு. மனிதனின் அறிவறிந்த ஆள் வினையை விட ஊழ், வலிமையுடையதன்று. ஆதலால் வினை, விதி, ஊழ் என்கிற சொற்கள் உணர்த்தும் தத்துவத்தின் வழி ஒருவனது உழைப்பின் உபரியை மற்றவன் எடுத்துக்கொள்வதைச் சைவசித்தாந்தம் ஏற்கவும் இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை. மாறாக, வினையின் பயன், செய்வதனையே சாரவேண்டும் என்று ஐயத்திற்கிடமின்றிக் கூறுகிறது. அதாவது வினையின் விளைவு நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அவரவர்களையே சாரும். இதனை, தருமையாதீனக் குருமுதல்வர் குருஞானசம்பந்தர்,

அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
எவரெவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர்
தவரவர் நினைவது தமை உணர்வதுவே”

என்று அருளியுள்ளமையால் அறிக.

மேலும், இப்பிறப்பிலேயே சார்ந்து துய்க்கக் கூடிய வினைகளும் உண்டு. அடுத்த பிறப்புகளுக்குத் தொடர்வனவும் உண்டு. சராசரி அறிவோடு நோக்கினால் கட்புலனுக்கு எளிதாகத் தெரியக்கூடிய பயன்கள் இப்பிறப்பிலேயே துய்க்கக் கூடியனவாக அமையக் கூடும். இப்பொழுது, இந்தத் தலைமுறையில் நம் கண் முன்னே தெரிகிற வெளிச்சமான ஓர் உண்மை உழைப்பாளிகள் உழைக்கிறார்கள்! உலகம் முழுவதும் நுகர்வதற்குரிய பொருள்களைப் படைத்து அளிக்கிறார்கள்! ஆனால், உழுது உலகத்திற்கு உணவளிப்பவன் போதிய உணவில்லாமலும், உலகு உடுத்துமகிழ உடை கொடுப்பவன் போதிய உடையில்லாமலும், மகிழ்ந்து கூடியிருக்க இல்லம் அமைத்துக் கொடுத்தவன் வசதியான இல்லம் இல்லாமலும் வாழும் நிலையினை இன்று காண்கின்றோம். மதிப்புடைய – பயன்பாடுடைய உற்பத்தி செய்தற்குரிய திறனை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதாவது சித்தாந்த மரபின்படி அவர்களுடைய ஊழ் நன்றாகவே அமைந்திருக்கிறது. ஆனால், இப்பிறப்பில் அவர்களுடைய உழைப்புச் செல்வத்தை அவர்களிடமிருந்து தட்டிப் பறிப்பதை எங்ஙனம் ஊழாகக் கருதமுடியும் ? இங்ஙனம் பிறர் பங்கை எடுத்துக் கொள்வது நெறிமுறையன்று என்று கருதிய அரசுகள் இயற்றிய சட்டங்கள் மூலம் உழைப்பாளர்களுக்குரிய பங்குகிடைத்து வருவதைப் பார்க்கிறோம். இதனால் ஏழை – பணக்காரன் வேறுபாடு ஊழின்பாற்பட்டதன்று என்பது உறுதியாயிற்று. கண்முன்னே தெரிகிற இந்த உண்மைக்குக் கட்புலனுக்கு வராத தத்துவத்தைப் போட்டுக் குழப்புவதில் என்ன பயன்?

பிற்போக்கு வாதிகள் வினையின் பயனாகிய செல்வத்தை, வினை இயற்றியோருக்கு உரிமையாக்காமல் அவர்களின் பங்கை எடுத்துக் கொள்வதற்காக, வினைக்கு அர்த்தமற்ற கருத்தைக் கற்பித்துள்ளனர் என்பதை முன்னே கூறியவற்றால் அறியலாம். இதுவே சைவசித்தாந்தத்தின் கொள்கை, மார்க்சியம் சுரண்டலை அறவே கண்டிக்கிறது. எப்படி உழைப்பாளி சுரண்டப்படுகிறான் என்பதையும் அதை மாற்றும் வழியையும் கூலி, விலை, இலாபம் என்ற தத்துவத்தின் வழி தெளிவாக விளக்கிய முதல் மேதை மார்க்சு தான். ஆக, பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்பிற்குரிய அடிப்படைக் கொள்கைகள் சைவ சித்தாந்தச் சமயத்திற்கும் மார்க்சியத்திற்கும் முரண்பாடில்லை.

இறைவன் முதற் பொருளே

உயிர்கள், வாழ்வதற்கென்று அமைந்தது இந்த உலகம். இந்த உலகம் இயற்கை, இது கடவுளால் படைக்கப்பட்டதன்று என்ற கருத்தில் சைவசித்தாந்தமும் மார்க்சியமும் இசைந்த கருத்துடையனவாகவுள்ளன.

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே”

என்பது ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து. இப்பாடலில் குறிக்கும் “முகிழ்த்தன” என்கிற சொல் தன் வினைச் சொல். அதாவது தாமே தோன்றின என்பதே கருத்து. இங்கு மூவகை உலகம் “அவன், அவள், அது” என்று சுட்டப்படும் மூவுலகே தவிர, பௌராணிகத்தில் கூறப்படும் கட்புலனாகாத உலகங்களையல்ல என்பதை அறிக. ஆதலால் உலகம் தோற்றுவிக்கப் பெற்றதன்று திருக்குறளும் கூட, உலகத்திற்கு முதற்பொருளாகக் கடவுள் இருக்கிறான் என்று சொன்னதே தவிர, கடவுள் உலகத்தைப் படைத்தான் என்று சொல்லவில்லை.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”.

சைவ சித்தாந்தத்திலும் கூடக் கடவுளது திருவருட் சத்தியின் இயக்கத்தால் “மாயை” என்னும் அருவப் பொருளிலிருந்து உலகம் தோன்றி விரிவடைகிறது என்பதே கருத்து. என்றும் உளதாய் அருவமாய் ஒரு நிலையதாய் விளங்குவது மாயை என்று சித்தி கூறுகிறது.

நித்தமாய் அருவாய்ஏக நிலையதாய் உலகத்திற்கோர்
வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமலனுக்கோர்
சத்தியாய்ப் புவனபோகம் தனுகர ணமும் உயிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மன்றே”

என்பது காண்க.

ஆதலால் உலகம் இயற்கை. அது உள்பொருள்; உண்மையானது. இந்த உலகிலேயே உயிர்களுக்குத் துய்ப்பனவும் உய்ப்பனவும் கிடைக்கின்றன என்கிற கருத்தில் இரு தத்துவ இயல்களும் ஒத்து நிற்பதை ஓர்ந்தறிக.

வாழ்க்கை வாழ்வதற்கே!

உலகில் சில சமயங்கள் கூறுவதுபோல் சித்தாந்தச் சமயம், வாழ்க்கையை எள்ளுவதுமில்லை; பழிப்பதுமில்லை. இந்த மானிட வாழ்க்கை அரியது; போற்றுதலுக்குரியது; பயன்பாடுடையது என்றே சைவ நூல்கள் கூறுகின்றன.

வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி
மதித்திடு மின்”

என்றார் அப்பரடிகள். மார்க்சியமும் இந்த வாழ்க்கையைப் பாராட்டுகிறது. வாழ்வதற்கே வாழ்க்கை என்பது மாக்சியம். ஆனால் வாழும் நெறிமுறைப்படி வாழ்தல் வேண்டும். அதாவது, வள்ளுவர் கூறியாங்கு “வையத்துள் வாழ்வாங்கு வாழ்” வேண்டும். மானிட வாழ்க்கையின் போக்குகளைப் பற்றி மார்க்சியத்தின் திரண்ட கருத்து இது.

“விலங்குகளும் உண்கின்றன; உறங்குகின்றன; இன விருத்தி செய்கின்றன; உடற் பாதுகாப்பில் முனைப்புடன் நிற்கின்றன. மானிடனும் இவற்றை மட்டுமே இயற்றினால் அது மானிட வாழ்க்கையாகாது. மானிட வாழ்க்கைக்கும் இவை இன்றியமையாதவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இவற்றிலும் மேம்பட்ட சில வாழ்க்கை நோக்கங்கள் மானிடத்திற்கு உள்ளன. அவை என்ன? மானிடத்தின் தரத்தை உயர்த்துதல்; ஆன்மாவைச் செழிப்புறச் செய்தல்; உலகத்தின் எண்ணற்ற வைப்புகளை அனுபவத்திற்குக் கொண்டு வருதல்; காலம் தூரம் ஆகியவற்றை வென்று விளங்கும் ஒருலகம் காணல்; மனித நாகரிகத்தினை அரித்து அழிக்கும் நச்சுத் தீமைகளை அறவே அகற்றுதல்; உலக வரலாற்றுக்கு உந்து சக்தியாக விளங்குதல்-இவை மானிடத்தின் சிறப்புகள். இத்தகைய சிறப்புகளுடன் மனிதன் வாழ்ந்தால்தான் மானிட வாழ்க்கை அஃதில்லையேல் விலங்கியல் வாழ்க்கை”

இக் கருத்து சைவ சித்தாந்தத்திற்கும் ஏற்புடையதேயாம் – ஆதலால் மானிட வாழ்க்கையை அர்த்தமுடைய தாக்குவதில் இவ்விரு தத்துவங்களும் ஒத்துநிற்பது நமது பேறு.

மானிட சமுத்திரம்

மனிதன், தன்னிச்சையாக வாழ ஆசைப்படுகின்றான். இயல்பாக அவன் காட்டுமிராண்டி கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல்களில் அவனுக்கு நாட்டமில்லை. சமுதாயப் பேரமைப்பிலிருந்து மனிதன் தனித்து ஒதுங்குவது பஸ்மாசுரன் கதையை ஒத்ததாக முடியும். எண்ணற்ற கோடிக் கணக்கான நீர்த்திவலைகளின் செறிவில் கடல் கிடக்கும்பொழுது, நீர்ப்பரப்பு மிகுதியாக இருக்கிறது; ஆர்ப்பரிக்கிறது! ஆழ் கடலின் வயிறு, முத்தை ஈன்று தருகிறது! தண்மையான காற்றால் உயிர்க்குலத்தைத் தழைக்க வைக்கிறது! கடல்படு செல்வம் அள்ள அள்ளக் குறையாதது! அந்த ஒப்பற்ற மாபெரும் கடலிலிருந்து ஒரு திவலை நீர் கரையில் விழுமானால் அத்திவலை என்னாகிறது! கரையில் விழுந்த சில நொடிகளிலேயே காய்ந்து போகிறது. அதுபோல, நாம் மானிட சாதியின் ஓர் உறுப்பாக இருக்கிறபோது நமது வாழ்க்கையில் பெருமை ஏற்படுகிறது! பாவேந்தர் பாரதிதாசனும்,

என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்
அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூறு”

என்று பாடினான்.

பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் தத்துவங்கள்

இந்தச் சங்கம வாழ்விற்கு நுழைவாயிலாக அமைவது குடும்பம். பெண் வாழ்க்கைத்துணை வாழ்க்கைத் துணை நலம்! பெண்களைப் பெருமைப்படுத்துவதே சித்தாந்தத்தின் நோக்கம். சிவபரம் பொருளின் அருளே, சக்தி என்பது.

அருளது சக்தியாகும்”

என்பது சிவஞான சித்தியார். மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் யாண்டும் இறைவனை அம்மையப்பராகவே போற்றிப் பரவுவதைக் காணலாம். சித்தாந்தச் செந்நெறியின் தொன்மை வழிபாட்டுத் திருமேனி, அம்மையப்பர் திருமேனியாகவே இருந்திருக்க வேண்டும் என்பது நூலறிந்தோரின் துணிபு. சங்க இலக்கியங்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்களிலும் அம்மையப்பர் திருவுருவமே போற்றிப் பரவப் பெறுகிறது.

….சேர்ந்தோள் உமையே
செவ்வான் அன்னமேணி.”

நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன்…..”

பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று”

என்பன அறிக.

திருக்குறளில் வரும் “ஆதிபகவன்” என்ற சொல்லுக்கும் சக்தியைப் பங்கிலுடையவன் என்பதுதான் பொருள்.

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்துரதாய் கோத்தும்பீ”

என்பது திருவாசகம். அம்மையப்பர் திருக்கோலத்தையே “தொன்மைக்கோலம்” என்று மாணிக்கவாசகர் குறிப்பிடு கின்றார்.

அண்ணலார் அருட் சக்தியும் சிவனும்
ஆய தன்மையின் அன்று தொட்டுலகம்
பெண்மை ஆண்மை என் றிருவகைப் புணர்ப்பாற்
பிறங்கும்…………”

என்னும் காஞ்சிப்புராணத் திருப்பாடலும் காண்க. சைவத்தின் உயிர்நாடியாக விளங்கும் திருக்கோயில் வரலாற்றில், மதுரைத் திருக்கோயில் வரலாறு – சிறப்புடையது. அங்கு, அங்கயற்கண் அம்மைக்குச் சொத்துரிமையும் ஆட்சியுரிமையும் வழங்கிய சைவத்தின் மாண்பினைக் காண்க

திருஞானசம்பந்தர், அயல் வழக்கை மறுத்து வழக்காடியது இயற்கையோடிசைந்த நமது சமய மரபுகள் பாழ்படுமே என்ற கவலையினாலேயாம். எளிதில் ஏற்று வாழ இயலாத அயல் வழக்குகள் தமிழகத்தில் நிலவிய வாழ்க்கையமைப்பை நிலை குலையச் செய்தன. அதனால், திருஞான சம்பந்தர் இயற்கையோடிசைந்த வாழ்க்கையை வலியுறுத்தவே விரும்பினார் என்பதை அவருடைய திருமுறைகளில் இயற்கை வருணனை நிரம்பிக் கிடப்பதாலும், அவை முற்றாக இசைத் தமிழாக விளங்குவதாலும், அம்மையப்பனையே பரவிப் பாராட்டுவதாலும் உறுதிப்படுகிறது. சேக்கிழாரின் பெரியபுராணத்தில், உற்ற அமைச்சராகவும், துணிவுமிக்க செயல்களுக்குத் துணைவராகவும் இழுக்கல் ஏற்படும்போது இடித்துத்திருத்தும் ஆசிரியராகவும் முறையே விளங்கிய பெண்பாலாரைப் பார்க்கிறோம். மார்க்சியமும் மானிட வர்க்கத்தில் ஆண், பெண்ணிடையே ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிப்பதில்லை. இத்துறையில் இவ்விரு தத்துவ இயல்களும் ஒத்தே நிற்கின்றன.

உண்மை நீதியை உணர்த்தும் தத்துவங்கள்

மனித நாகரிகத்தின் மையம் நீதியேயாம். இன்று நம்முடைய சமுதாயத்தில் நீதி என்ற சொல் கொச்சைப்படுத்தப் பட்டிருக்கிறது. அதுவும் சமூக நீதி பற்றி நமக்குக் கவலையே இல்லை. கடவுளின் மறு பெயரே “நீதி” என்கிறார், மாணிக்கவாசகர்,

நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவிய சீர் ஆதியே”

என்பது திருவாசகம்.

கச்சியப்பர் ‘சைவ நீதி’ என்று போற்றுவார்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக
உலகமெல்லாம்”

நீதி என்பது என்ன? சட்டங்கள், சாத்திரங்களின்படி வழங்கப்படுவது நீதியா? அவையிரண்டுமே கூடத் தற்சார்பு காரணமாக நெறிமுறை பிறழ்ந்தவர்களால் இயற்றப்படும் பொழுது, அங்கே எப்படி உண்மையான நீதியைக் காண முடியும்? எனவே,

“உங்களுடைய (பூர்ஷீவா) சட்ட நீதித் தொகுப்பு என்பது உங்களுடைய விருப்பக்கருத்தைத் தவிர வேறில்லை. அவைகளை எல்லாருக்குமான சட்டங்களாக நீங்கள் ஆக்கி வைத்துள்ளீர்கள். உங்களுடைய அந்த விருப்பம் என்பது அவைகளின் சாராம்சமான இயல்பும் திசைவழியும் உங்கள் வர்க்கத்தின் நிலைப்பாட்டின் பொருளாதார நிலைமைகளினால் நிர்ணயிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன.” என்று மார்க்ஸ் கூறுவது அறியத்தக்கது. எனவே எல்லா உயிர்களும், அனைத்துலகத்தின் மானிடவர்க்கமும் மகிழ்ந்து வாழ்வதற்குரியவாறு அமைவினை உண்டாக்கத் துணையாயிருப்பது நீதி. இதனைச் சமூகநீதி (Social Justice) என்பர். இந்த நீதியை ஒருவன் கேட்டுப் பெறுவதில்லை. இயல்பாகவே அவனுக்குக் கிடைப்பதே நீதி. இந்த உயர்ந்த நீதி உலகத்தின் நடைமுறை ஒழுக்கமாகுமானால் கலகம் ஒடுங்கும்; போர் ஒடுங்கும், மண்ணகம் விண்ணகமாகும். இத்தகைய நீதியை நிலை நாட்டுவதில் சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் கைகோத்து நிற்பது களிப்பைத் தருகிறது.

மனித உரிமையை மதிக்கும் தத்துவங்கள்

சைவ சித்தாந்த நூல்களில் முடியுடை மன்னராட்சி பற்றிய விரிவான ஆய்வு இல்லை. அஃது அவர்கள் காலத்துத் தேவையாக அமையவில்லை. காரணம், கிராமங்களும் குடும்பங்களும் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தன; தன்னிறைவுடையனவாயிருந்தன. அன்றாட வாழ்க்கையில் அரசின் குறுக்கீடுகள் இல்லை. அரசுகள் பொது ஒழுங்கு, படைப் பாதுகாப்பு மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. அது மட்டுமின்றித் தமிழ்நாட்டு அரசுகள் முறை செய்து காப்பாற்றும் அரசுகளாக இருந்தமையினால் அரசைப்பற்றி அன்றாடம் எண்ணிப் பேசவேண்டிய சூழ்நிலை அன்று இல்லை. இன்றோ, அரசுகள் வளர்ந்து, அதிகாரத்தைப் பெருக்கிப் பெருக்கித் தனி மனிதனுடைய் வாழ்க்கையில் கூட அரசின் அதிகார வீச்சு தலை காட்டுகிறது. அதுவும் நம்முடைய நாட்டில் உள்ளார்ந்த செழுமை பெறாத மக்களாட்சி முறையும், சீர்மைப்படுத்தப்படாத சமுதாய அமைப்பும் அரசின் அதிகாரப்பிடிப்பையே வலிமைப் படுத்தியுள்ளன. மக்களின் வலிமை முடம்பட்டே போகின்றது. இது வளரும் நாட்டுக்கு நல்லதன்று. தனி மனித வாழ்க்கையில் அரசு குறுக்கிட்டபொழுதெல்லாம் நமது சமய ஆசிரியன்மார்கள் கனன்று எழுந்து கடிந்துள்ளனர். அப்பரடிகள், பல்லவப் பேரரசன் மகேந்திரவர்மனின் ஆட்சியை எதிர்த்துப்பாடிய,

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்,
நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்,
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்,
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே!”

என்கிற பாடல் வரலாற்றுச் சிறப்புடையது. தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தனி மனிதர் வாழ்க்கையில் ஒரு அரசு தலையிட்ட வரலாறே இதுதான். அரசன், மூர்க்கத்தனமாகத் துன்புறுத்துகிறான் ஆயினும் நீதி வெற்றி பெறுகிறது. மார்க்சு, புரட்சியைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு மனிதனின் குணங்கள் மாறும் வரைக்கும் வலிமை சான்ற ஆட்சி வேண்டுமென்கிறார். காலப்போக்கில் அரசே இல்லாத – மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் சமுதாயம் காண வேண்டும் என்பதுதான் மார்க்சியம்.

“உற்பத்தியாளர்கள் சுயேச்சையாகவும் சமத்துவ முறையிலும் பங்கெடுத்துக் கொள்ளும் அடிப்படையில் உற்பத்தியை ஒருங்கமைக்கும் சமுதாயமானது அரசு இயந்திரம் முழுமையையும் அது அப்பொழுது எங்கு போய்ச் சேரவேண்டுமோ அங்கு – அதாவது தொல் பொருள்களின் கண்காட்சியில், நூற்பு, இராட்டை, வெண்கலக் கோடரி ஆகியவற்றின் அருகில் கிடத்தி வைக்கும்” என்பது காண்க.

இந்தக் கருத்திலும் சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் ஒரு திசையிலேயே நம்மை வழி நடத்திச் செல்கின்றன; மாறுபாடு இல்லை. இந்நிலை வரவேற்கத்தக்கது.

பொருள் முதல் வாதமும் சார்ந்ததன் வண்ணமும்

அடுத்து மிக முக்கியமான ஆய்வு மார்க்சின் பொருள் முதல் வாதம். அதாவது ஒரு மனிதனின் சிந்தனை, கருத்து, அறிவு, உணர்வு, ஒழுக்கம் ஆகியன அவனுடைய பொறிகளின் வாயிலாக – புலன்களின் வாயிலாகத் தொடர்பு கொள்ளும் பொருள்களிலிருந்து வந்து அமைகின்றன என்பது பொருள்முதல்வாதத் தத்துவத்தின் அடிப்படைக் கொள்கை.

“ஒரு புறநிலைப் பொருள் தனி மனிதனுடைய மூளையில் புலனுணர்வும், புலனறிவுகள், அறிவிப்பு, தெரிவிப்புகள், கருத்துருவங்களின் வடிவத்தில் உள்ளத்தின் அளவில் மறுபதிப்பு செயப்படுவது என்பதை அடிப் படையாகக் கொண்டதாகும். உணர்வு நிலையின் உள்ளடக்கம் இறுதியில் சுற்றுப்புறமுள்ள உண்மை நிலையால் நிர்ணயிக்கப்படுகிறது.”

சைவசித்தாந்தமும் ஆன்மா அல்லது உயிர், சார்ந்ததன் வண்ணமாகிறது என்று கூறுகிறது. உயிர், உலகத்தைச் சார்ந்திருந்தால் உலகியல் தன்மையும் திருவருளைச் சார்ந்திருந்தால் அத்தன்மையும் பெற்று விளங்குகிறது என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. சேக்கிழார், திருப்புகலூரில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், முருகநாயனார் இம்மூவரும் ஒருங்கிணைந்த காட்சியை எடுத்துக் கூறும் போது,

உடனுறைவின் பயன் பெற்றார்”

என்று கூறுகிறார். இஃது ஓர் அருமையான சமூக விஞ்ஞானச் சொற்றொடராகும். ஒருவர், மற்றொருவரோடு சேர்ந்துவாழ்ந்தால், அங்ஙனம் சேர்ந்துவாழ்ந்ததன் பயனை அடைந்தால் தான் சேர்ந்து வாழ்ந்ததற்குப் பொருள் உண்டு. அதாவது ஒவ்வொருவருடைய தன்மையும் – அறிவு, ஆற்றல், பண்பாடு, பயன்கொள்ளுதல் ஆகியன அனைத்தும் பன்மடங்கு பெருகி வளர்ந்தால்தான் உடனுறைந்தனர் என்பதற்குப் பொருள் உண்டு. ஆதலால், உயிர் எதைச் சார்ந்திருக்கிறதோ அதன் வண்ணமாகவே அமைகிறது என்பதைப் பொருள் முதல்வாதத் தத்துவத்தோடு ஒத்துப் பார்த்தால் பெரிய முரண்பாடு இல்லை என்றே தோன்றுகிறது.

செயற்பாடு வேண்டும்

இங்ஙனம் சைவ சித்தாந்தத்தையும் மார்க்சியத்தையும் ஒத்துப்பார்த்ததில் இவ்விரண்டு தத்துவங்கள் கடவுள் நம்பிக்கையில் முற்றாக மாறுபடுகின்றன; மறுபிறப்புக் கொள்கையில் ஓரளவு வேறுபடுகின்றன; அறிவின் பயன் காண்பதிலும் வேறுபாடு இருக்கிறது; ஆனால் இந்த வேறுபாடுகள் மனித குல மேம்பாட்டுக்குரிய பணிகளைச் செய்வதில் பெரிய தடையாக இல்லை. சித்தாந்தச் சைவ மரபுப்படியான கடவுள் நம்பிக்கையால் உயிர்களின் நிலையான நலனுக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் யாதொரு தடையுமில்லை. சைவசித்தாந்தச் சமயத்தில் உள்ள கடவுள் தத்துவம், உயிர்க்குலத்திற்கு உறுதுணையாய் அமைந்திருக்கிறது. பிரிவினைகள், வேற்றுமைகள், ஏற்றத் தாழ்வுகள் முதலிய சமுதாயத் தீமைகளுக்குச் சித்தாந்தச் சமயம் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ முற்றாக, உடன்படவில்லை. ஆதலால், மானிட சமுதாயத்தை மேம்பாடடையச் செய்யச் சித்தாந்தச் செந்நெறியின் தத்துவங்களுக்குச் செயலுருவம் கொடுத்தாலே போதும். புதுமையும் பொதுமையும் நிறைந்த சமுதாயத்தைக் காணலாம்.

சைவ சித்தாந்தம் புதுமைத் தன்மையுடையது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய் என்று மாணிக்கவாசகர் போற்றிய உரை, இன்றும் என்றும் சைவ சித்தாந்தச் செந்நெறிக்கும் பொருந்தும். இன்று வேண்டியதெல்லாம் செயற்பாடேயாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *