
கப்பலோட்டிய தமிழன்
ம. பொ. சிவஞானம்
காதலும் வீரமும்
காதலும் வீரமும் தமிழினத்தின் இரு கண்கள் போன்றவை. பண்டைத் தமிழ் நூல்களை ஆராய்வோர், அகம் புறம் என்ற இரு சொற்களில் இந்த உண்மை விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தமி ழினத்தின் வீரத்திற்குச் சான்று கூறிய வள்ளுவப் பெரியாரும்,
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா னன்ன
உயிர்நீப்பர் மானம் வரின்
என்றார். ஆம்; மானம் இழந்தபின் உயிர் வாழ்வது தமிழர் மரபன்று.
வீர வழிபாடே இறை வழிபாடாகக் கொண்டவர் தமிழர். இறை வழிபாட்டின் உண்மையும் அதுவேயாம். ‘கடவுள் வழிபாடு’ என்பதன் மூலத்தை ஆராயப் புகுந்தால், அது வீர வழிப்பாட்டில் துவங்கியதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
‘மானங் காத்தான்’, ‘கானாடு காத்தான்’ என்பன போன்ற இன்றையத் தமிழகத்தின் ஊர்ப் பெயர்களும், பண்டைய வீரர்களின் விழுமிய செயல் களை பிற்கால மக்கள் மறவாமல் போற்றின ரென் பதை நினைவூட்டுகின்றன வன்றோ?
சிலப்பதிகாரத்தில், அறக் கற்பினளான பாண்டி மாதேவி இருக்க, மறக் கற்பினளான கண்ணகி தேவிக்குச் சிலை எடுப்பித்ததும், முடிதாங்கிய மன்ன ரெல்லாம் அச்சிலையின் அடிவணங்கிப் போற்றியதும், வீர வணக்கத்தைத் தமிழர் வழி வழி கடைப்பிடிக்க வேண்டுமென்பதை உணர்த்துகிறதன்றோ?
தமிழினத்தில் வாழையடி வாழையாக வீரப் பெருமக்கள் பலர் தோன்றி வந்தனர். ஆனால்,இடைப் பட்ட காலத்தில் தமிழகம் அடிமைப் பிணியால் தாக்குண்ட காரணத்தால் வீரமக்களைப் பெறுவது தடைப்பட்டது. ஆங்கிலக் கொடுங்கோலைச் செங் கோலென்று கும்பிட்டு வாழும் அடிமைகளின் தொகையே மணிக்கணக்கில் பெருகி வந்தது. அந்த அடிமைகளின் மத்தியிலே மரபு வழி மறைந்து விடாது தோன்றினார் ஒரு மறத் தமிழர். அவர்தான் வ.உ.சிதம்பரம்.
ஏகாதிபத்தியத்தின் மீது நமது தாய்ச் சபையாம் காங்கிரஸ் மகாசபை முதன் முதல் நேரடித் தாக்குதலைத் துவக்கியபோது வடக்கே திலகர் பெருமானும், தெற்கே வீரச் சிதம்பரனாரும் தளபதிகளாக இருந்து தளராது போர் புரிந்தனர். வடக்கு முனையைவிடத் தெற்குமுனைப் போர்தான் மிகக் கடுமையாக இருந்தது.
தளபதி சிதம்பரனார், சுதேசிக் கப்பல் கம்பெனியைத் துவக்கி, வெள்ளை வர்த்தகக் கூட்டத்தைத் தாக்கினார்.
தூத்துக்குடி ஹார்வி மில் தொழிலாளருக்குத் தலைமை தாங்கி வெள்ளை முதலாளிகளின் மூலதனக் கோட்டையில் வேலை நிறுத்தம் எனும் ‘வெடி’ வைத்துத் தகர்த்தார்.
தூத்துக்குடியில் வீதிக்கு வீதி கூட்டங்கள் போட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்க்குமாறு மக்கள் உள்ளத்தே வீரக் கனலை மூட்டினார்.
இவ்வளவும் 1907-1908 ஆகிய இரண்டே ஆண்டுகளில் நிகழ்ந்தன. இதன் விளைவென்ன? ஆங்கில ஏகாதிபத்திய – முதலாளித்துவ -வாணிபக் கூட்டத்தார் ஒன்றுதிரண்டு தளபதி சிதம்பரனாரைச் சிறைப்படுத்தி ‘நீதி’ யென்ற பெயரால் இருஜென்ம தண்டனை விதித்தனர். சிறையில் செக்கு வலிக்க வைத்தனர்; கல்லுடைக்கச் செய்தனர்; அறுசுவை யுண்டு அரசர் போல் வாழ்ந்த செல்வச் சிதம்பரனாரை கேழ்வரகுக் கூழ் குடிக்க வைத்துக் கொடுமைப்படுத்தினர். ஆம்,ஏகாதிபத்தியம் சிதம்பரனாரைப் பழிக்குப் பழி வாங்கியது. நாமக்கல் கவிஞர்.
வல்லாளன் சிதம்பரனார் சிறையிற்பட்ட வருத்தமெலாம் விரித்துரைக்கில் வாய்விட்டேங்கி கல்லான மனத்தவரும் கண்ணீர் கொட்டக் கனல்பட்ட வெண்ணெயெனக் கரைவார் இன்றும்
என வருணித்திருப்பது மிகையன்று. சிதம்பரனார் பிறவித் தலைவர். மதி படைத்த தலைவர் பலருண்டு இந்த நாளில். ஆனால், அவரெல்லாம், மற்றவர் இன்னல் கண்டு உருகும் மனம் படைத்தாரில்லை. சிதம்பரனாரோ மதியும் மனமும் ஒருங்கே படைத்த மாபெருந் தலைவர். எனினும் சிதம்பரனார் செய்த புரட்சிச் செயல் நம் நாட்டவரால் நன்கு போற்றப்படவில்லை.
அகில இந்திய காங்கிரஸ் செயற் குழுவின் அனுமதியுடன் டாக்டர் பட்டாபி வெளியிட்டுள்ள காங்கிரஸ் வரலாற்றில், சௌரிசாரா சத்தியாக்கிரகம், நாகபுரிக் கொடிப் போர், பர்டோலி வரி கொடா இயக்கம் ஆகிய சிறு சிறு இயக்கங்களைப் பற்றி யெல்லாம் பக்கம் பக்கமாக வரையப்பட்டுள்ளன ; ஆனால், சிதம்பரனாரின் சீரிய புரட்சியைப் பற்றி ஒரு வரிகூட இல்லை;- ஏன்?-ஒரு வார்த்தை கூட இல்லை.
சிதம்பரனாரின் புகழ் மிக்க வரலாறு முற்றும் மறைந்து விடுமோ என்று யான் அஞ்சிய காலமும் ஒன்றுண்டு. அவர் இறந்த செய்தி கேட்டு, தூத்துக் குடி தவிர வேறு எங்கும் மக்கள் துக்கங் கொண்டாடவில்லை. சிதம்பரனார் மறைந்து நான்கு ஆண்டுகள் வரை நாட்டில் அவருக்கு எத்தகைய ஞாபகார்த்த விழாக்களும் நடைபெறவில்லை. சிதம்பரனாருக்கு சிலை யெடுத்து வணங்குவது பற்றியும் தேசபக்தர்கள் சிந்திக்கவில்லை. காரணம், வஞ்சமல்ல; வ. உ. சி. யின் வரலாற்றை அறியாததே யாகும்.
சிதம்பரனார், 1936-ம் ஆண்டு வரை வாழ்ந்திருந்தார் என்றாலும், அவர் நடத்திய அரசியல் புரட்சி- ஏகாதிபத்தியக் கப்பலுக்கு எதிர்க் கப்பலோட்டிய செயல்-1906-ல் துவங்கி 1908 க்குள் முடிந்து விட் டது. 1908-ல் சிறை புகுந்து 1912-ல் வ.உ.சிதம்பரனார் விடுதலையானார். பின்னர், அவர் தொழிலாள இயக்கங்களில் பங்கு கொள்ளலானார். அதற்குள் காந்தீய சகாப்தம் தோன்றி விட்டது. வ.உ.சி.க்கு காந்தீயத்தில் நம்பிக்கை இல்லை. எனவே, 1920- ம் ஆண்டில் அவ்வீரர்
காங்கிரசிலிருந்து விலகிக் கொண்டு விட்டார். அது முதற் கொண்டு 1936-ல் இறக்கும் வரை அதாவது 17 ஆண்டுகள் அப்பெரி யார் அரசியல் இயக்கங்களில் ஈடுபடாதிருந்தார். ஆகவே, 1920 க்குப் பிறகு அரசியலில் ஈடுபட்ட எவரும் வ.உ.சி.யின் வீரப்புரட்சியை, கப்பலோட்டிய விழுமிய செயலை அறிந்து கொள்ள வழியில்லை.
வ. உ. சி. பல ஆண்டுகள் தொடர்ந்து மேடைகளில் தோன்றாதிருந்த காரணத்தால், அவரது வீரத் திருவுருவத்தைக் கூட மிகப் பெரும்பாலான அரசியல் வாதிகளும் பொது மக்களும் பார்த்து மகிழ வாய்ப்பில்லை. இவைதான் மக்கள் வ. உ. சி. யை மறந்ததற்கான காரணங்கள்.
இந்நிலையில், சிதம்பரனாரின் வீரப்புரட்சியை நாட்டில் பரப்ப வேண்டுமென்று யான் எண்ணினேன். 1937-ம் ஆண்டு நான் சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு செயலாளனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது சிதம்பரனாரைப் பற்றி என் சிந்தையிலிருந்த திட்டத்தை செயலாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் பெயரால் ராயப்பேட்டை காங்கிரஸ் நிலத்தில் 1939-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி சிதம்பரனாருக்கு சிலை நாட்டு விழாவை நடத்தி வைத்தேன்.
சென்னையில் நடந்த சிலை எடுப்பு விழா தேசீய வட்டாரத்தைக் கண்விழிக்கச் செய்தது. விழாவையொட்டி, தேசீயப் பத்திரிகைகள் பலவும் வ.உ. சியின் சேவையைப் பாராட்டி எழுதின. ஆனால், சிதம்பரனாரை மறந்த மக்களுக்கு அவருடைய பெயரை நினைவூட்டு மளவுக்குத்தான் சிலை யெடுப்பு விழா பயன்பட்டது. மற்றபடி, அவரது வரலாற்றை அறியச் செய்ய வசதியில்லை. ஏனெனில், அந்நாள் வரை அவரது வரலாறு நூல் வடிவில் வெளிவரவில்லை. எனவே, சிதம்பரனாருக்குச் சிலை யெடுத்ததோடு நில்லாமல். அவரது புரட்சி வரலாற்றை புத்தகவடிவில் வெளியிடுவதையும் எனது கடமையாகக் கொண்டேன் ஆனால், அப்போதைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தூத்துக்குடிப் புரட்சியைப் பற்றிய விவரங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது.
சிதம்பரனார் இயற்றிய ‘தனிப்பாடற்றிரட்டு’ “எனது அரசியற் பெருஞ்சொல்” முதலிய நூல்களில் பல சுவையான குறிப்புகள் கிடைத்தன. மற்றும், சிதம்பரனார் துவக்கிய கப்பல் கம்பெனியின் அமைப்பு, கப்பல்களின் பெயர், அவற்றை வாங்கிய விதம், வெள்ளைக் கம்பெனியுடன் சுதேசிக் கம்பெனியார் நடத்திய போராட் டம், வ.உ.சி. மீது நடைபெற்ற ராஜநிந்தனை வழக்கு ஆகியவை பற்றிய விவரங்களை 1906 முதல் 1908 வரை வெளிவந்த தினப்பத்திரிகைகளிலிருந்து சேகரித்துக் கொண்டேன். அவையனைத்தையும் தொகுத்து 1944-ல் “கப்பலோட்டிய தமிழன்” என்ற பெயரில் இந்நூலின் முதற் பதிப்பை வெளியிட்டேன். இந்நூல் வெளிவருவதற்கு முன்னர் வ. உ. சி. யை “தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை” என்றே அழைப்பது வழக்கம். இன்றோ “கப்பலோட்டிய தமிழன்” என்பதே அவருக்கு சிறப்புப் பெயராகி விட்டது.
கடந்த நான்கு பதிப்புகளை விட இந்த ஐந்தாம் பதிப்பில் மேலும் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள் ளுகிறேன். பொதுவாக வ.உ.சி.யின் வரலாற்றைக் கூறும் இந்நூலில் தக்க ஆதாரங்களோடு கிடைத்த செய்திகளே இடம் பெற்றுள்ளன. இந்நூல் ஆண்டுக் கொரு பதிப்பாக ஐந்து பதிப்புகள் வெளி வர முடிந்த தற்கு தமிழ் மக்கள் தந்த பேராதரவே காரணமாகும் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
வ.உ.சிதம்பரனாரைப் பின்பற்றி இந்திய விடு தலைப் போரில் பங்கு கொண்ட எல்லா தமிழ் வீரர் களுக்கும் இந்நூலைக் காணிக்கையாக்குகின்றேன். வாழ்க தமிழர் வீரம்!
சென்னை
20-9-49
ம.பொ.சிவஞானம்



