
கப்பலோட்டிய தமிழன்
ம. பொ. சிவஞானம்
கப்பலோட்டிய தமிழன்
தூத்துக்குடியில் வழக்கறிஞர் அரங்கசாமி என்பவர் ஒரு நாள் க்ஷவரஞ் செய் து கொள்ள க்ஷவரத் தொழிலாளி ஒருவரை அழைத்தார். க்ஷவரஞ் செய்து கொண்டிருந்த போது அத்தொழிலாளி, “ஏன் சாமி! கலெக்டர், போலீஸ் பட்டாளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றபோது நீங்கள் ஆதரவு காட்டியதாக ஊரார் சொல்லிக் கொள்ளுகிறார்களே, அது உண்மையா?” என்று கேட்டார்.
“அடே! அதை நீ ஏன் கேட்கிறாய்? அது உன் வேலையல்ல” என்று அதட்டினார் வழக்கறிஞர்.
“அப்படியானால், உமக்கு க்ஷவரஞ் செய்வதும் என் வேலையல்ல!” என்று சொல்லிக் கொண்டே கத்தியை மடக்கிப் பெட்டியில் வைத்துக்கொண்டு கடுகி நடந்தார் தொழிலாளி.
பாவம்! வழக்கறிஞர் அரை க்ஷவரத்தோடு அவமானப் பட நேர்ந்தது. எவ்வளவோ கெஞ்சியும் தொழிலாளி திரும்பவில்லை. வேறு க்ஷவரத் தொழிலாளர்களை அழைத்தார்; ஒருவரும் இணங்கவில்லை. உச்சி நேரமாகியும் உணவருந்தியபாடில்லை. வீட்டிற்குள் சென்றால் வைதீகத்திற்கு விரோதமென மனைவி மறுப்பாள் ஊருக்குள் சென்றால் தேசத் துரோகி என மக்கள் வெறுப்பர். என் செய்வார்! “ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்” என்னும் பழமொழி அந்த வழக்கறிஞர்பால் உண்மையாயிற்று.
இனி வேறு வழி இல்லையென உணர்ந்து, கலெக்டரி டம் நேரில் சென்று, “துரையவர்களே! க்ஷவரத் தொழிலாளர்க ளெல்லாம் என்னைக் கைவிட்டனர். தாங்கள்தான் தயவு செய்ய வேண்டும். போலீசுக்கு உத்தரவு கொடுத்தால் போதும்” என்று புலம்பினார். “ அந்த வழிக்கு நான் வரமாட்டேன்; என்னை நம்பிப் பயனில்லை” என்று கை விரித்தார் கலெக்டர்.
இந்நிலையில், வழக்கறிஞர் திண்டாடித் தெருவில் அலைந்து பின்னர் ரயிலேறித் திருநெல்வேலிக்குச் சென்று மீதியுள்ள சிகையையும் சிரைத்துக் கொண்டு ஊர் திரும்பினார்.
இது கற்பனை அல்ல; உண்மை வரலாறு. இதற்குக் காரணமென்ன?
தூத்துக்குடி கோரல் மில் கோரல் மில் (இப்பொழுது ஹார்வி மில்) தொழிலாளர்கள் தங்கள் கூலி விகிதத்தை உயர்த்த வேண்டுமென்று மில் நிர்வாகிகளிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். நிர்வாகிகள் தொழிலாளர்களின் குறையைத் தீர்க்கச் சம்மதிக்கவில்லை. ஆகவே, தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஒருமனப் பட்டு வேலை நிறுத்தஞ் செய்தனர்.மெய் வருந்த உழைத்துக் கூலி பெறும் நாட்களிலேயே அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழியின்றி அவதிப்படும் ஏழைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த நாட்களில் குடும்பத்தைக் காப்ப தெங்ஙனம்? அந்தத் தொழிலாளர்கள் தங்கள் மனைவி மக்களுடன் பட்டினி கிடக்க நேர்ந்தது. இதை அறிந்த ஒரு வீரர் கருணையுடன் முன்வந்து தமக்குத் தெரிந்த வழக்கறிஞர்களின் துணையுடன் பொது மக்களிடம் பணம் வசூலித்து வேலை நிறுத்தஞ் செய்துள்ள தொழிலாளர்களுக்கு உதவி, அவர்களுடைய மனைவி மக்களைக் காப்பாற்றினார். அந்த வீரரின் வேண்டுகோளுக்கிணங்கி, வேலை நிறுத்தஞ் செய்துள்ள 2000 தொழிலாளர்களில் 1000 பேருக்குத் தூத்துக்குடி நகர மக்கள் தற்காலிகமாக வேறு வேலைகளைக் கொடுத்து ஆதரித்தனர்.வேலை நிறுத்த நாட்களில் நாள்தோறும் பொதுக் கூட்டங்கள் நடை பெறும். அக் கூட்டங்களில் அவ்வீரர் பேசுவார். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மில் முதலாளிகள் இணங்கினாலொழிய பணியக் கூடாதெனப் பறை சாற்றுவார். அவரது உணர்ச்சிமிக்க வீர உரைகளைக் கேட்ட தொழிலாளர்கள் உறுதியும் ஊக்கமுங் கொண்டு வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இதனால் மில் முதலாளிகள் அவர் மீது சீற்றங் கொண்டனர். அவர் முதலாளிகளைக் கெடுக்க வேண்டுமென்ற கெட்ட எண்ணங்கொண்டு தொழிலாளர்களை வேலை நிறுத்தஞ் செய்யத் தூண்டினார் என்றும், அவரது சொற்பொழிவுகளால் ஊரில் கலக மேற்படுமென்றும் முதலாளிகள் மாஜிஸ்திரேட்டுக்கு மனுச் செய்தனர். மாஜிஸ்திரேட், அத்தொழிலாளர் தலைவரை நேரில் வரவழைத்து, அவரது சொற்பொழிவுகளால் ஊரில் அமைதி குலையுமெனத் தாம் நினைப்பதால் இனி எந்தப் பொதுக் கூட்டத்திலும் பேசக் கூடாதென எச்சரிக்கை செய்தார். மாஜிஸ்திரேட் டின் எச்சரிக்கையை அவ்வீரர் சிறிதும் மதியாது, அஞ்சுவது யாதொன்றுமில்லை; இனி அஞ்ச வருவது மில்லை” என்ற நெஞ்சுறுதியுடன் தொழிலாளர் கூட்டங்களில் தொடர்ந்து பேசி வந்தார்.
கோரல் மில் வேலை நிறுத்தச் செய்தி மதுரையிலும் பரவியது. கோரல் மில் நிர்வாகத்திற்குட்பட்ட மதுரைப் பஞ்சாலைத் தொழிலாளர்களும் வேலைக்குச் செல்ல மறுத்து விட்டனர். தூத்துக்குடி வேலை நிறுத்தம் ஒரு வாரம் வரை நீடித்தது. கடைசியாக மில் முதலாளிகள் பணிந்து விட்டனர். தொழிலாளர்களின் கூலியை அரைப் பங்கு உயர்த்துவதாகவும், நோய்ப் பட்ட நாட்களில் விடுமுறை தருவதாகவும் முதலாளிகள் வாக்களித்து தொழிலாளர் தலைவருடன் உடன் படிக்கை செய்து கொண்ட பிறகு தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்குத் திரும்பினர். வேலை நிறுத்த நாட்களில் பொது மக்களின் உணர்ச்சியைக் கண்டு பயந்த தூத்துக்குடி வெள்ளையர்கள் இராக் காலங்களில் நகரிலிருக்க அஞ்சி பெண்டுபிள்ளைகளுடன் துறைமுகஞ் சென்று இராப் பொழுதைக் கப்பலிலேயே கழித்து வந்தார்களாம். இந்த விதமாக தொழிலாளர்களுக்குத் தலைமை வகித்து ஊரெல்லாம் புரட்சிக் கனலைக் கிளப்பியவீரர் யார்? அவர்தான் தேசபக்தர் வ. உ. சிதம்பரம் பிள்ளை.
சிதம்பரம் பிள்ளையின் சொற்பொழிவுகளால் மக்களின் மனதில் நாட்டுப் பற்று பொங்கி யெழுவதைக் கண்டு அதிகாரிகள் அச்சங் கொண்டனர். எனவே, கலெக்டர் ஊரிலுள்ள பிரமுகர்களை ஒன்று கூட்டி கலகம் நிகழாமல் தடுக்கவும், மக்கள் ராஜ விசுவாசிகளாக இருக்கவும் என்ன செய்யலாமென்று கலந்து பேசினார். தூத்துக்குடியில் அதிகமான போலீஸ் படையை வைக்க விரும்புவதாகவும் கூறினார். கூட் டத்தில் பெரும்பாலோர் எதிர்த்தனர். ஆனால், வழக்கறிஞர் திரு. அரங்கசாமி என்ற இராஜ விசுவாசி மட் டும் மனப் பூர்வமாக ஆதரித்தார். விசேஷ போலீஸ் படையைத் தருவிக்காவிடில் சிதம்பரம் பிள்ளையின் வீரமிக்க சொற்பொழிவுகளால் ஊரே அழிந்து விடுமென அலறினார். இவரது செய்கையை ஊரார் வெறுத்தனர். அன்று முதல் அவ்வழக்கறிஞர் தூத்துக்குடி மக்களின் பகைவரானார். அதனால்தான் அவருக்கு மேற்கூறிய க்ஷவர மறுப்பு நடந்தது!
இவ்விதம் நாட்டு மக்களின் உணர்ச்சியைத் தூண்டி விட்டு தமிழ் நாட்டில் தொழிலாளர் இயக்கம் கண்ட சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு தமிழனுக்கு ஒரு மங்காத காவியமாகும்.



